அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Monday, November 10, 2008
தமிழ் காலை...
திருவள்ளுவரையும், கம்பனையும்,ஆண்டாளையும், பட்டினத்தாரையும், பாரதியையும், தேவாரத்தையும் திருவாசகத்தையும் என்னதான் நாம் ரசித்து படித்தாலும், ஒரு நல்ல தமிழ் வாத்தியார் இயல்பான நகைச்சுவையோடு இவர்களை கையாளும் விதம் மேலும் ரசிக்கதக்கது. தமிழ் வாத்தியார்களுக்கான சுலபமான நகைச்சுவை சிலேடை, போகிற போக்கில் வாழ்வின் தத்துவங்களை சொல்லும் பாங்கு, வேகமான வார்த்தை விளையாட்டு மற்றும் கேட்பவர் மனம் அறிந்து தூண்டும் கருத்துகள் வேறு யாரிடமும் கண்டதில்லை.
காதலையும் காமத்தையும் பள்ளி வயதில் வக்கிரமில்லாமல் சொல்லி கொடுத்தது தமிழ் வாத்தியார்கள். நாங்கள் அய்யா என பொதுவாக அழைப்போம். 10ஆம் வகுப்பில் தமிழ் அம்மாவும் இருந்தார். திருக்குறளின் காமத்து பால் அப்போதெல்லாம் வயது வந்தவர்களுக்கான சமாச்சாரம். ஆண்டாள் பாசுரங்களும், கம்பனும் கூட அப்படித்தான். எனினும் எங்கள் தமிழ் அய்யா சொல்லி கொடுத்தார். வகுப்பில் அல்ல. சும்மா கூட நடக்கும்போது. மரத்தடி ஓய்வின் போது. ஞாயிறு மதிய முந்திரி மர நிழலில். அவர் பேசும் போது நகைச்சுவை விளையாடும். மீசையும் கண்ணும் புருவமும் துடித்து சிரிக்கும். குரல் மாயம் காட்டும். அவர் பேசி கொண்டே இருக்கவேண்டும் போலவும், நாம் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போலவும் இருக்கும். இனிமை தமிழா, அவரா என புரியாத நிலவரம். பெண் பிள்ளைகளும் ரசிக்கும் படி, அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து புரியும் படி சொல்லுவார். குற்றால குறவஞ்சி அவரின் விருப்ப பாடம்.
நெல்லை கண்ணன் அய்யாவின் என் தமிழ் வாத்தியார்களின் முகங்களை மறுபடி பார்க்கிறேன். தெரிந்த கருத்துகளானாலும் அவரின் தமிழ் பேச்சு நடைக்காகவும், விஷயம் சொல்லும் பாங்குக்காகவும், மெல்லிய நகைச்சுவைக்காகவும் விரும்பி பார்க்கிறேன். பொதிகை சொல்லாமல் கொள்ளாமல் நிகழ்ச்சியை இடை நிறுத்தி மாற்றும். அல்லது சட்டென வேறு நிகழ்ச்சிகள் சில நாள் வரும். மறுபடி மறுபடி அதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எல்லாம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் கவர்ச்சி தினமும் பார்க்கவைத்து விடுகிறது.
இப்போதெல்லாம் அவர் சொல்லி முடித்த செய்யுள்களை மறுபடி நானும் படித்து திரும்பவும் புரிந்து கொண்டு ரசித்து கொள்கிறேன். கொஞ்சம் வேறு பரிணாமத்தில் மறுபடி கம்பனும் வள்ளுவனும் அறிமுகமாகிறார்கள். ஆண்டாள் அற்புத காதல் தேவதையாகிறாள். பட்டினத்தார் தத்துவங்கள் கண்ணதாசனோடும் பட்டுகோட்டையாருடனும் ஒப்பு நோக்கபடுகின்றன.
ஆண்டாள் பாசுரங்களை படித்தலில் தமிழ் மட்டுமல்ல - ஒரு பெண் பிள்ளையின் காதலும் காமமும் அற்புதமான விஷயங்கள். வள்ளுவனின் புத்திசாலித்தனம் காமத்துபாலில் மிளிர்வதை கவனியுங்கள் - வாழ்க்கையை சொல்லி கொடுக்கும் அற்புத சுரங்கம் அது. ஆண் பெண் உறவின் அற்புதங்களை தெரிய ஏராளம் சொல்லி கொடுக்கபட்டு இருக்கிறது நம் பழங்கால செய்யுள் கவிதைகளில்.
பொதிகை இந்த நிகழ்ச்சியை எப்போது நிறுத்தும் என்று தெரியாது. ஒரு நல்ல தமிழ் நிகழ்ச்சி பார்க்கும் ஆர்வம் இருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் பரிந்துரைக்கிறேன்.
உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
Wednesday, November 05, 2008
கொஞ்சம் இடைவெளி...கொஞ்சம் சங்கதி...
நிறைய படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதாமல் இருந்ததாலேயே எழுதவேண்டும் என்ற எண்ணம் நிறைந்து இருந்தது. குறிப்புகளில் இருக்கும் கருத்துகள் எல்லாம் மெல்ல மெல்ல எழுத வேண்டும். அலுவலக வேலை அமைப்பு மாறி இருக்கிறது - உருப்படியாக ஏதேனும் செய்யும் திருப்தி இருக்கிறது. வெகுதூர பயணங்கள் தினம் இருந்ததெல்லாம் இப்போது இல்லை - நேரம் கிடைக்கிறது. திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. பெண் நிச்சயம் கணிப்பொறி சார்ந்த துறை கிடையாது - இதனை பற்றிய விவாதம் அவசியமாகிறது - பின்னர் கவனிப்போம். இயல்பியல் வல்லுனர். கோபிசெட்டிபாளயம் அடுத்த நம்பியூர். பெண்ணை விட மாமனார் வெகு சுவரஸ்யமானவர். கலகலப்பான குடும்ப அமைப்பு. டிசம்பர் 8ல் திருமணம் - அனைவரும் வருக... :-) ...
வெகுநாளைக்கு பிறகு மறுபடி எழுத நவம்பர் 6 - எந்த காரணமும் இல்லை. 32 வயது ஆரம்பிக்கும் ஒரு முதிர் இளைஞனின் (விட்டு கொடுப்பமா என்னா..!!!) கருத்துகளின் என்ன வகையான தொனி இருக்கும் என அறிந்து கொள்வதில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். புதிய டிஜிட்டல் கேமிரா 8.1 மெகா பிக்ஸல் - புகைப்பட ஆர்வத்தை அதிகமாக்கி உள்ளது. ஒரு அனுபவம் முதிர்த்த நண்பரிடம் தொழில்நுட்பம் கற்று வருகிறேன். சென்னை கொஞ்சமாக பழகி விட்டது. இலக்கிய வட்டம் விரிவாகி உள்ளது. படிப்பது அதிகமாகி பகிர்ந்து கொள்வது குறைந்து விட்டது. நல்ல சினிமா, நல்ல புத்தகம் பற்றிய நம் கருத்துகள் எல்லாம் வெற்று புலம்பல்களை போல தொனியில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் சில தோழமைகள் பொருத்துகொண்டு இன்னும் பேசிவருவது ஒரு மகிழ்ச்சி.
மற்றபடி சமூகமும் வாழ்வும் நலமே.. இனி கொஞ்சம் தொடர்ச்சியான பதிவுகள் செய்ய வேண்டும் (குறிப்பு புத்தகம் நிறம்பி விட்டது). வலைப்பூக்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் எதிரொலிகளையும் பதிவு செய்யவேண்டும்.
அப்புறம் என்ன.. மறுபடி உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி (யாருமே இல்லாத இடத்துல இப்படி ஒரு டயலாக்...;-) .
Wednesday, April 30, 2008
வேறு ஒருவரின் கவிதை...
சமீபத்தில் வேறு ஒரு பதிவில் படித்தது. ஏனோ பதிக்க வேண்டும் என தோன்றியதால் இங்கு பதிக்கிறேன்.. இதனை எழுதிய நண்பருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டினால் - இங்கு [http://kundavai.wordpress.com/] பயணம் செய்யவும்.
அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்
மிதந்தபடி சொல்லிச் செல்கிறது
முன்னம் சாத்தப்பட்ட தருணங்களை
வார்த்தைகளின் தேவையில்லை உனக்கு
எனக்கும் கூடத்தான்
உன் நிராகரிப்பின் என் வெறுமை
வார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லை
காலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்து
வரைந்து செல்லும் ஓவியத்தினுள்
தூக்கத்தை தொலைத்தபடிநம் பிம்பங்களுக்குள்
கரைந்து போகிறேன்
உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்
மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும் ஒன்றாய்ப் புறக்கணித்தபடி
இன்னொரு நாளுக்கான தேவையில்லை
உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்டிக் கவிழ்க்கப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்
ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்
உன் பிரிவின் சோகம் வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டி
புனைவின் நீளமாய் நம்மிடையே சுவர்
விளிம்பளவு ஏறியபின்னும்
தோல்வியின் சுவடறிந்து தவிர்த்துவிடுகிறேன்
நாம் பிரியும் சாத்தியக்கூறுகளை முன்பொருமுறை
மறுத்தளித்ததைப் போல்
உபயோகமில்லாத உன் முகவரியைப் போல...
Monday, April 28, 2008
இன்னும் உண்டு வேலைகள்
பாலியல் மாநாடு
நாய்களின் அரசியல்
புகைபிடித்தலில் அரசியலும் பொருளாதாரமும்
நினைவு மறந்த மனிதர்கள்
இயற்கை விவசாயம்
5 வருட திட்டம்
ஆணுறையும் ஜெயில் கைதிகளும்
கலர் பனியன் நினைவுகள்
கூட வரும் தோழர்கள்
Tuesday, April 01, 2008
நம்மை சுற்றிய உலகம்...
சில செய்திகள் சென்ற வார பத்திரிக்கைகளில் இருந்து. இவற்றை பற்றி பின்னர் விவாதிப்போம். அடிப்படை - உறவுகளும், உணர்வுகளும், வாழ்க்கை முறை, சமூக அரசியல் மற்றும் உளவியல் வன்முறை.
செய்தி 1 - கேரளாவின் ஒரு கிராமத்தில் இருந்து அரபு நாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளபடுகிறார். அவருடைய கணவர் செய்தி அறிந்து தன் மனைவியை அனுப்பிய அதே ஏஜண்ட் மூலமாக அரபு நாடு சென்று போலீஸ் மற்றும் தூதரக உதவியுடன் தன் மனைவியை மீட்டிருக்கிறார்.
செய்தி 2 - திருமணம் நிச்சயமான பிறகு கை தொலைபேசியில் காதல் உரையாடும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் இளமைக்கால - பள்ளி அல்லது கல்லூரி காலங்களின் நட்புகள் மற்றும் உறவுகள் பற்றிய - அந்தரங்க செய்திகள் பின்னாளின் திருமண முறிவுக்கு காரணமாகிறது என்கிறது சமீபத்திய கோர்ட் ஆதாரம் ஒன்று.
செய்தி 3: 2004 ஆம் வருடம் முதல் வகுப்பில் தேறிய - இன்னும் வேலை கிடைக்காத ஒரு இளைஞர் தன்னையும் விட சுமாராக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்து இருப்பதை கண்ட விரக்தியில் குடித்துவிட்டு போதையில் ஒரு கடற்கரையோட கல்லூரியின் ஆய்வு கூடத்தை வெடிகுண்டு தயாரிக்க முற்றுகையிட அவரை போலீஸ் கைது செய்தது
செய்தி4: சென்னையில் "சேர்ந்து வாழ்தல்" கலாச்சாரம் அதிகமாகிறது - பெறும்பாலும் இளம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான தொலைபேசி உதவி நிறுவன ஊழியர்களே என்கிறது ஆய்வு. திருமணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை என்பதால் ஜோடி போல காண்பித்து கொள்ளுதல், உயர்ந்து வரும் தனி மனிதர் வீட்டு வாடகை, குடும்ப உறவுகளிடம் இருந்து தனிமை, பொருளாதார சுதந்திரம், காலதாமதமாகும் திருமணம், நெடு நேர அலுவலக வாழ்க்கை, விளையாட்டான காமம் அறியும் போக்கு, நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு, உலகமயமாக்கலின் விளைவு, கார்பரேட் உலகின் உளவியல் வன்முறைக்கான வடிகால் என காரணங்கள் அடுக்கபடுகின்றன.
Sunday, March 23, 2008
திருநங்கை கல்வியாண்டு
ஆட்டமும் பின்புலமும்..
உடை மட்டுமா கலாச்சாரம்..
காகித பூக்களின் காலம்...
அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.
வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.
யாவரும் கேளிர்...
வார்த்தைகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறது. சில நேரங்களில் வார்த்தைகள் எண்ணங்களை தாண்டி வெறும் ஒற்றை அகராதி அர்த்தத்தை மட்டுமே தொனிக்கின்றன. அது பேசுபவர் அல்லது கேட்பவரின் மனோநிலையும் சூழ்நிலையும் பொருத்து மாறுபடலாம். எனினும் பெரும் சந்தோஷத்தை போலவே மிக துல்லியமான வலியையும் அது உருவாக்கிவிடுகிறது. மனோரீதியாக உணர்வுகளால் கட்டபட்ட உறவுகளின் மத்தியில் இப்படி வலி உண்டாகும் தருணங்கள் மரணத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. ஒரு கடினமான இருட்டின் வெளியில் இருப்பதை போல.
ஒரு நிமிடத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. சில நேரங்களில் பார்க்கும் சாலையோர விபத்து மரணங்களை போல. நெருக்கமான மரணத்துக்கு பிறகு ஒரு வினாடியில் காதலும் உணர்வுகளும் கோபமும் மனவருத்தமும் கருத்து வேறுபாடுகளும் கொண்ட மனம் மன்னித்து இருக்கலாமோ என்ற உணர்வுடன் அழுகிறது.
சிலரை நாம் காரணமில்லாமல் விலக்குகிறோம். விலகி இருக்கவும் விரும்புகிறோம். அவர்களோ நெருங்கிவருகிறார்கள். அன்புடன் பேச விழைகிறார்கள். நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் - சிலர் மன்னிக்கபடவும் கூட. அவர்கள் பிறந்த நாட்களில் ஆச்சரியமாக அழைப்பதுண்டு. வாழ்த்துகள் தவிர வேறு என்ன பேசுவது என்ற நீண்ட மவுனத்தில் சிலரின் மனம் புரிந்து கொள்ளபடுவதுண்டு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நம்முடன் பிணக்கு கொண்டவர்களில் சிலரையாவது மன்னிக்கலாம். மனமிருந்தால் எல்லாரையும் கூட. சிறிய வாழ்க்கை. மிக சிறிய வட்டங்கள்... காண்பதும் அறிவதும் மிக குறைவு - இதிலும் கதவுகளை மூடிய வாழ்க்கை யாருக்காக..
நிஜமும் நிழலும்..
Friday, March 21, 2008
காலம் கொள்ளும் வாழ்க்கை
குழந்தைகளை எங்கே தொலைக்கிறோம்
குறியின் அளவு
Wednesday, March 19, 2008
நடிகனின் மரணம்.
இயல்பான நடிப்பு என்பதனை ரகுவரனை தவிர வேறு யாரிடமும் கண்கூடாக கண்டதில்லை. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும் - ஒரு சில திரைப்படங்கள் அவரின் வெகு அற்புத நடிப்பு திறமையை வெளிக்காட்டின. உதாரணம்: அஞ்சலி. பெரும்பாலும் வில்லன் வேடங்கள் என்றாலும் குணசித்திர வேடங்களில் மிக அற்புதமான நடிப்பை அவர் வழங்கியது உண்மை. யாருடனும் ஒப்பிட முடியாத அற்புத கலைஉலக பங்கீடு கொண்டவர். பலருக்கும் நல்ல நண்பர். தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். மொழி வேறுபாடு இன்றி பாராட்டபட்டு இருக்கிறார்.
காதல், மனைவி, குழந்தை, ஆன்மீகம், புத்தகங்கள் என வாழ்க்கை சுகமானதாக இருந்திருக்கலாம். குடிப்பழக்கம் உடல்நிலையை கெடுக்க, மணவாழ்க்கையின் கசப்பு மனநிலையை கெடுக்க.. ஒரு நல்ல கலைஞன் ..இன்று மரணமடைந்து விட்டான்.
அவர் நடித்த திரைப்பட வரிசை மற்றும் சிறு தகவல்கள் இங்கே: http://en.wikipedia.org/wiki/Raghuvaran
Monday, March 17, 2008
வீடுகளும் நினைவுகளும்..
சமீப காலங்களில் அலுவகம் செல்வதே ஒரு பயணம் போலதான் இருக்கிறது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. கூட அரைமணியும் ஆகும் - அது போக்குவரத்து நிலவரம் பொருத்து. இந்த பயணம் நிறைய படிக்கவும் பார்க்கவும் நேரம் கொடுக்கிறது. அப்படி ஒரு விஷயம்தான் இன்று பகிர்ந்து கொள்ள தோன்றியது.
நாம் வாழ்ந்த வீடுகளை பற்றிய நினைவுகள் ஏறத்தாழ எல்லாருக்கும் இருக்கும். அந்த வீடு தந்த பாதுகாப்புணர்வும், பால்ய சந்தோஷங்களும் இன்னும் பல ரகசியங்களும்.. மேலும் கொஞ்சம் வலிகளும்.. அப்படிதான் எல்லாருக்கும் வீடுகள் இருக்கின்றன.
திரிசூலம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பழைய வீடு இருக்கிறது. அந்த இடத்தை தாண்டும் போதெல்லாம் மனசு வலிக்கும். பிரமாண்டமான வீடு. யாரோ ஒரு குடும்பம் அங்கு வாழ்ந்திருக்கலாம். இன்று மிகவும் பாழடைந்து இருக்கிறது. இது போல நிறைய வீடுகளை பார்த்திருப்போம். அங்கு வாழ்ந்த குடும்பங்களை பற்றி எவ்வளவு யோசித்திருப்போம் என தெரியவில்லை. அங்கு வாழ்ந்த சிலர் இன்னும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் இந்த வீட்டை பற்றிய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த வீடு எத்தனையோ பிறப்புகளையும் இறப்புகளையும் நினைவுகளாக கொண்டிருக்கலாம். கிராமங்களில் சில பழைய வீடுகள் உண்டு, தாழ்வாரமும் தோட்டத்து துளசி செடியுமாய்.. ஆனால் யாராலும் கவனிக்கபடாமல். திருமணங்களும், காதலும் ஏன் மரணமும் கூட அந்த வீடு சுவர்கள் கண்டிருக்கும். பழைய வீடுகள் ஒரு வகையில் வயசாளி உறவினர்களை போல - அவர்களை பார்க்கும் போதெல்லாம் நிறைய நினைவுகள் வரும்.. சில சந்தோஷமானவை - சில துக்கமானவை. எனினும் அவர்களின் நிலைக்கும் இன்றைய நிமிடத்தில் ஏதும் செய்ய முடியாது.. பழைய வீடுகளும் அது போலவே. சில வீடுகளை நான் உள் சென்றும் பார்த்திருக்கிறேன். இருண்ட கரி பிடித்த சமையல் அறைகள், நீளமான தாழ்வாரங்கள், சுவர்களில் கிறுக்கல்கள் கொண்ட படுக்கை அறைகள்.. பழைய காலண்டர்கள் இருக்கும் பரண்கள்.. பொம்மைகள் கிடக்கும் தோட்டம்.. யாரோ வைத்த பூச்செடிகள்.. ஒரு வாழ்வு அங்கு நிகழ்ந்த சுவடுகள் இருக்கும். கூர்ந்து கேளுங்கள்.. குழந்தைகளின் ஓசை, வாழ்ந்த பெண்களின் சிரிப்பு, ஆண்களின் சந்தோஷம்.. சொல்லபட்ட கதைகள்.. கொடுக்கபட்ட சுகங்கள் என .. வாழ்வு சுவடுகளை பதித்திருக்கும்.. ஏதோ ஒரு கவிதையில் படித்ததை போல - பாழடைந்த ஒவ்வொரு வீடும் ஒரு விசும்பலை கொண்டிருக்கிறது. அது அழுகையாக மாறும் வினாடி - ஒரு மரணம் போன்றது.