அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, March 10, 2008

அப்பா எனும் நண்பர்.

பெறும்பாலானவர்களின் இன்றைய வாழ்க்கையில் அப்பா எனும் நண்பரை இழந்து வருகிறோம். அப்பா என ஒரு மனிதர் இருக்கிறார். அவர் நம் சேமிப்பு மற்றும் கணக்கு வழக்குகளுக்கு உதவுகிறார். கல்யாணம் செய்து வைக்கிறார். அப்புறம் அவருக்கு வாழ்க்கை என்று ஒன்று இருப்பதையோ அதில் அவர் என்ன செய்கிறார் என்பதையோ கவனிக்க நிறைய பேருக்கு நேரம் இருப்பதில்லை. நாமெல்லாம் வேலைக்கு வரும்போது அவர் தன் உத்தியோகத்தின் இறுதி பகுதியில் இருப்பார். அதுவரை அவர் சம்பாரிக்கின்றார் - இந்த வேலை செய்கிறார் என்பதை தவிர கவனித்து இருக்க மாட்டோம். நாம் வேலைக்கு போக துவங்கிய பிறகு அவர் மீது உள்ள கவனம் இன்னும் குறைந்து விடுகிறது. உடம்பு சரியில்லை - அல்லது ஏதாவது குடும்ப விவகாரம் எனும்போது மட்டும்தான் அப்பா என்பவர் கருத்துகளை கேட்கிறோம். எல்லா இடங்களிலும் அப்பா எனும் முதியவர் இருக்கிறார் - ஆனால் அப்பா என்றொரு நண்பர் இருப்பதில்லை. அப்பா எனும் மனிதரை நண்பராக கொண்டு பாருங்கள் - உங்கள் அனுபவங்கள் வேறு மாதிரியாக இருக்கும். ஒரு தெளிந்த நம்பிக்கை கிடைக்கும் - எதையும் அணுகும் பார்வையில் மாற்றம் இருக்கும் - உங்கள் நட்பில் அவரும் புதியதாக நிறைய கற்று கொள்வார் - அடிப்படையில் சக மனித சிநேகம் கிடைக்கும். என் நிறைய நண்பர்களுக்கும் அவர்களின் தந்தைகளுக்கும் இருந்ததை விட கொஞ்சம் குறைவாகவே - எனக்கும் என் அப்பாவுக்கும் ஒரு நட்பு உண்டு - நாங்கள் பகிர்ந்து கொள்ள நிறைய செய்திகள் இருந்தன - அவை பொருளாதார விஷயங்களை கொண்டவை எனினும் சில மாற்றமும் கொண்டவை. தத்துவம் வாழ்க்கை முறை அனுபவங்கள், கவிதைகள், இலக்கியம், வானம், பயணங்கள் என நாங்கள் நிறைய பேசுவோம் - கலீல் ஜிப்ரானும் ஷெல்லியும் பைரனும் அவர்தான் அறிமுகபடுத்தினார் - செக்ஸ் பற்றிய சந்தேகங்கள் தீர்த்து வைத்தார் - எப்படி வாழ வேண்டும் என்றும் - அவர் வாழ்க்கையில் இருந்தே எப்படி வாழக்கூடாது எனவும் நான் கற்று கொண்டேன். இப்போது எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டது. சென்ற முறை திருச்செந்த்தூர் பயணத்தின் போதும் இந்த முறை கோவை வந்த போதும் நிறைய பேசினோம். அவர் வாழ்க்கையின் கடந்து வந்த பகுதிகளை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறார் - நிறைய செய்திகளும் வாழ்க்கை கருத்துகளும் அதில் இருக்கின்றன - அந்த புத்தகத்தின் ஒரே வாசகன் நான் மட்டுமே. எனக்கு அவர் வாழ்க்கை பற்றி நாங்கள் பேசியதை விட நிறைய தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டு. கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அது. ஒவ்வொரு மனிதனின் கதையும் ஒரு காவியம்தான் - அதில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும். முதலில் நெருங்கிய உறவுகளிடம் இருந்து ஆரம்பிப்போம் என்ற எண்ணம்தான் இது. அம்மாவையும் கொஞ்சமாக எழுத சொல்லி இருக்கிறேன். இப்படி எழுதுவதில் அவர்கள் கடந்து போன காலங்களையும் மனிதர்களையும் நினைக்கிறார்கள். இழப்புகளும் சேமிப்புகளும் கனவுகளும் வாழ்ந்த நனவுகளும் ஆரோக்கியமாக அசைபோட படுகின்றன. நிறைய அனுபவங்களை பேசுகிறார்கள் - கற்று கொண்டதை சொல்லி கொடுக்கிறார்கள். என் தந்தையும் தாயும் அவர்களின் வாழ்க்கை பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த விதம் - என் வாழ்க்கை பற்றிய எண்ணங்களுக்கு ஒரு நல்ல உள்ளீடாக கொள்கிறேன்.

No comments: