அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 30, 2006

பயணங்களில் தோழமை...

என் தோழமைகள் எல்லாம் நேரில் மட்டுமே சந்தித்து தோழமை கொண்டவர்கள் கிடையாது... நிறைய மின் அஞ்சலிலும், இணைய பேச்சு மூலமாகவும், சமீப காலமாக கை தொலை பேசியிலும் அறிமுகம் ஆனவர்கள்... இவர்களை நேரில் சந்திப்பது ஒரு அற்புதமான விஷயம்... முகம் பார்க்காமல் பேசியும் பழகியும் ஒருவருக்கு ஒருவர் அடுத்தவரை பற்றி ஒரு பிம்பம் வைத்திருப்போம்...அவற்றை ஒப்பிட்டு பார்க்கும்... எங்கனம் இருப்பினும் அதனை ஏற்று கொள்ளும் ஒரு அற்புதம். பெரும்பாலும் ஓவியங்களாலும், சில கவிதைகளாலும், சில கட்டுரைகளாலும்தான் எங்கள் தொடர்ப்பு ஏற்படுகின்றது..சில விதி விலக்குகளும் உண்டு. ஒரு இணைய பேச்சு மூலமாக அறிமுகமான ஒரு தோழியை சந்திக்க சில வருடங்களுக்கு முன்பு தென் தமிழ்நாட்டுக்கு பயணபட்டு இருந்தேன். என்னுடம் இன்னொரு தோழியும் இருந்தாள். பெண்களை சந்திக்க நான் எப்போதும் தனியாக போவது கிடையாது. சில சங்கடங்களை தவிர்க்கதான். எங்கள் பயணம் இனிமையாக இருந்தது. சொல்லபோனால் அந்த பயணத்தின் என் உடன் வந்த தோழியும் நானும் நன்றாக நெருங்கிவிட்டோம். புதிய தோழியின் வீட்டுக்கு சென்ற போது அற்புதமான வரவேற்பு..நல்ல உணவு..நல்ல கவனிப்பு.. ஒரு சிறு நெருடல் என்னவென்றால் எங்களை கணவன் மனைவியாக அவர்கள் எண்ணி கொண்டதுதான்...அவர்களின் கலாச்சாரத்தில் திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண் ஒரு ஆணுடன் வெளிவருவது இல்லை என்பது புரிந்தது...நாங்களும் நன்றாகவே நடித்தோம்... அது ஒரு இனிய அனுபவம்...தங்கியிந்த இரண்டு நாட்களும் அற்புதமாக போனது. புதிய தோழி நல்ல ரசிகை..நல்ல ஓவியர்... இருவரும் வரைந்து தள்ளினோம்...
நடந்தே சில கோவில்களையும் வயல் பகுதிகளையும் சுற்றினோம்...அவளுக்கு எங்கள் நிலை பார்த்து நல்ல களிப்பு.. சரியான கிண்டல்... எங்களுக்கும் புதிய அனுபவம்... போட்டோக்கள் எடுத்தோம்... கோவில்களில் அர்ச்சனை...சேர்த்து எங்களுக்கு மாலை... வெளியில் சொல்ல முடியாத தர்மசங்கடம் ஒரு பக்கம் இருந்தாலும் இருவருமே அதனை ரசித்து இருந்தோம்... பின்னர் ஊர்வந்த சேர்ந்த பிறகும் சில மாலை வேலைகளில் எங்களை கிண்டல் செய்ய இந்த சம்பவம் ஒரு காரணமாக இருந்தது... சென்ற வருடம் என் உடன் வந்திருந்த தோழிக்கு திருமணம் ஆகிவிட்டது.. திருமணத்துக்கு தென்
தமிழ்நாட்டு தோழி மட்டுமே வந்திருந்தாள்... யாருக்கும் சொல்லாத ஒரு இனிய அனுபவத்தை எங்களுக்கு கொடுத்தமைக்காக அவளுக்கு நாங்கள் நன்றி சொன்னோம்... திருமணம் முடிந்து அவள் வெளிநாடு கிளம்பி சென்ற இரவில் நானும் என் தென் தமிழ்நாட்டு தோழியும் பேருந்து நிலையத்தில் இரவு காத்திருந்தோம். மனம் கனத்து இருந்தது... ஏதோ ஒன்றை இழந்த நினைவு... தொடர்ந்த மாதத்தில் வந்து சேர்ந்த ஒரு தோழியின் கடிதமும் அதனை சொல்லியிருந்தது.

க.சீ. சிவக்குமார்..ஒரு கவிதை

வேப்பம் பூக்கள்
பூக்கின்ற காலத்தில்தான்
பூக்கும்...
வேறுவழியின்றி
பழங்காலத்தில்
அவற்றின் வாசத்தின்
ஞாபகத்தைச்
சேமித்தேன்...

காத்திருத்தலில்...

சென்ற வாரம் ஒரு தோழி என்னை அழைத்திருந்தாள். அவளுக்கு அடுத்தநாள் காலை சண்டிகர் செல்லும் ரயில். இரவு முழுவதும் தன்னுடன் ரயில் நிலையத்தில் இருக்கமுடியுமா என கேட்டிருந்தாள்...தவிர்க்க முடியாத காரணங்களால் முந்தயநாள் இரவே நான் கோவை புறப்பட வேண்டி இருந்ததால் அவள் அழைப்பை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது. ரயிலில் நிராகரித்தலின் வலி எனக்கும் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் கோவை ரயில் நிலையத்தில் அப்படி ஓர் இரவு முழுக்க ஒரு புதிய தோழியுடன் கழித்தது நினைவு வந்தது...அலுவகத்தில் மேலதிகாரிக்கு உறவு அந்த பெண் - ஒரு புரோஜக்ட் விஷயமாக சில நாட்கள் - ஏறக்குறைய ஒரு மாதம் நாங்கள் பழகியிருந்தோம். நிறைய பேச்சு...கொஞ்ச நேரம் என் மடியில் தூக்கம்...யாரும் இல்லாத பிளாட்பாரங்களில் நடை, சின்ன குறும்புகள், ஒருவருக்கொருவர் இதுவரை இல்லாத அறிமுகங்கள்...கொஞ்சமே கொஞ்சம் ரகசிய பரிசுகளும் பரிமாற்றங்களும்... என அந்த இரவு வாழ்வில் சில இரவுகள் போல மறக்க முடியாதது. அந்த இரவு அதன் நிறத்தை எங்கள் நினைவுகளில் தீற்றிவிட்டு இருந்தது... நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்பது கூட வாதத்துக்கு அப்பாற்பட்டது...காலை 5 மணிக்கு ரயில்... அதற்கு பிறகு நாங்கள் சந்திக்கவில்லை ...முயற்சிகளும் எடுக்கவில்லை... நினைவுகள் மட்டுமே... சில நேரங்களில் அருகில் இருக்கும் தோழமையை விட... தொலைந்து போன தோழமைகள் மனதின் அருகில் இருக்கிறார்கள்.

வெண்ணிலாவின் ஒரு கவிதை...

எதைப் பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா..?
மழை பற்றி எழுதுவது சுகமா..?

நம்பிக்கைகள்...

பெரும்பாலும் நான் கோவில்களுக்கு போவதை விரும்புவதுண்டு. காரணங்கள் பக்தியை தவிர வேறு சிலவும் உண்டு. அங்கு உள்ள அமைதி,விலாசமான கலை, பார்க்க நேரிடும் மனிதர்கள், செய்யபடும் பிராத்தனைகள், விளையாடும் குழந்தைகள், அடிப்படையாக நம்பிக்கையும் கூட..பெரிய கோவில்களின் பால் உள்ள ஈர்ப்பு ஒரு வகை என்றால் சிறிய கிராமிய கோவில்கள் பால் கொண்ட ஈர்ப்பு மற்றோர் வகை. ஸ்ரீரங்கமும், சிதம்பரமும், திருஅண்ணாமலையும் ஒரு வகையான உணர்வுகளை கொண்டு வந்தது...அதே நேரம் கும்பகோணம் பயணத்தில் பார்த்த திருவழஞ்சுழி, திருபுவனம், திருவையாறு, மயிலாடுதுறை, பழையாறை, பட்டீஸ்வரம், தாராசுரம், திருவிடைமருதூர் மற்றும் சமீபத்தில் வியந்த உத்திரமேரூர் ஆகிய கோவில்கள்
மற்றோர் வகையான உணர்வுகளை கொண்டு வருகின்றன...பிந்தைய கோவில்கள் மிகவும் என்னை கவர்ந்தன காரணம் அங்கு காணப்படும் கூட்டமின்மையும் அமைதியும்தான்...எங்கள் கிராமத்தில் ஒரு கோவில் இருக்கிறது...பெரும்பாலும் கோவில் விழாக்களில்தான் மக்கள் கூட்டம் வரும்...மற்ற நாட்களில் விச்சிராந்தமான அமைதி... முதலில் ஒரு வேம்பு மரம்..கீழே மேடையில் பிள்ளையார்... காற்று அவ்வளவு அற்புதமாக வரும் அந்த மேடையில் அமர்ந்திருந்தால்.. உள்ளே சிறு மண்டபம்..கர்ப்பகிரகம்..அருகில் சுற்றி வரும்போது சில காவல்தெய்வங்கள்..சிறு கிணறு..அற்புதமான கற்கண்டு போன்ற தண்ணீர்...சுற்றிலும் நிறைய மரங்கள்...ஆங்காங்கே பொங்கல் வைக்கபட்ட கல் அடுப்புகள்... நல்ல காற்றும் அமைதியான சூழலுமே
கோவிலை அற்புதமாக்கி விடுகின்றன... தாராபுரம் அருகே இருக்கும் அமராவதி ஆற்று கரையில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலும் அப்படித்தான்... ஆற்றில் வழிந்தோடும் தண்ணீரும் அரச மரத்தடி பிள்ளையாரும்...மண்ணில் புதைந்து இருந்து இன்னும் பூஜை வாங்கிகொள்ளும் சிவலிங்கமும்.. அந்த ஏகாந்த சூழலை விவரிக்க வார்த்தைகள் போதுமானதில்லை... பெரிய சுலோகங்கள்...பெரிய மந்திரங்கள் கிடையாது...சமஸ்கிரதம் கிடையாது..தமிழில் கிராமிய வார்த்தைகளில் அர்சனைகள்... சாதாரண வஸ்திரங்களும், சூடங்களும், விளக்கும் இன்னும் மனிதர்கள் வாசிக்கும் கிராமிய இசையும் கொண்ட...கிராம மக்களின் நம்பிக்கையை மட்டுமே சுமந்த தெய்வங்கள்... மழையும் வெயிலும் பூமியும் காற்றும் ஆகாயமுமே கடவுளாக
கொண்ட...அவற்றுக்கு உருவம் தந்த மக்களின் நம்பிக்கையை பொய்க்காத தெய்வங்கள்.. அருள் வருவது, கிடா வெட்டுவது என்று சில விஷயங்கள் இருந்தாலும் அவை அனைத்திலும் நம்பிக்கை பார்க்கும் ஜனங்கள்... கோவில்களில் பிராத்தனைகள் என்பது அவரவர் எண்ணமும் விருப்பமும்... என் முதன்மை...கோவில்களில்... அமைதியான ரசித்தலும்.. மனசு நிறைய சுலோகங்களும்...அமைதியான ஏகாந்த சூழலில் மென்மையாக கடவுளுடன் பேசும் தியானமும்தான்... பொதுவில் நம்பிக்கைதான் கடவுள்...அதனை மேம்படுத்தும் இடமே கோவில்...

மாசிலா விநாயகமூர்த்தியின் ஒரு கவிதை...

நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொள்கிறது மனசு.
எதை வேண்டி
எதைப் பெறுவது...?

காலம் தாண்டும் கவிதைகள்...

சில கவிதை தொகுப்புகள் கிடைத்து இருக்கிறது...அவை சில வருடங்களுக்கு முந்தயது.. கவிதைகளுக்கு காலவெளி கிடையாது... சில கவிதைகள் என் சில அனுபவங்களை ஒத்து போவதால்..அவற்றையும் அவற்றை சார்ந்த என் நினைவுகளையும் இங்கு பதிவு செய்கிறேன்...

வெங்கடேஷ் வரதராஜனின் ஒரு கவிதை...

காத்திருத்தல்

நீ வரும் பாதையில்
காத்திருந்த காலங்கள்
நீ கடந்து சென்ற பின்னர்
நகரவிடாத பொழுதுகளாய்
மாறி இம்சைதரும் கணங்கள்.

இப்போதெல்லாம் அப்பாதையில்
நீ வருவதில்லை.
நானும் காத்திருப்பதில்லை..

எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை.
யாரோ யாருக்காகவோ
காத்திருக்கத்தான் செய்கிறார்கள்
பாதை நெடுகிலும்.

இப்படியாய் கழியும் பொழுதுகள்
-- தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி

நேருக்கு நேராய்
நினைப் பார்க்க விழைகிறேன்
பின் ஏனோ
விழிகளைத் தழைக்கிறேன்

உன்னிடம் ஏதோ
சொல்ல நினைக்கிறேன்
ஆனால் இதழ் புதைத்து
மெளனம் காக்கிறேன்

வளைக்கரத்தை மெல்ல
வருட நினைக்கிறேன்
இருந்தும் இன்னும்
வாளாதிருக்கிறேன்

என் விந்தையான போக்குக்கு
பிறர் காரணம் அறியார்

அறிந்த நீயோ
இங்கே இல்லை

Friday, April 21, 2006

வலிமை கொண்ட பாரதம்...

மூன்று வருடங்களுக்கு முன்னர் கோவையில் ஒரு புத்தக காட்சிசாலையில் அவரை பார்த்தேன். நல்ல உயரம், நரைத்த தாடி, தோளை தொடும் நீண்ட முடி, தீட்சண்யமான கண்கள்..அவருடன் ஒரு பெண் இருந்தாள். ஜீன்ஸும் சுடிதாரின் டாப்ஸும் (அதுக்கு என்ன பெயர் என்று இன்னும் தெரியவில்லை...) அணிந்திருந்த அந்த பெண்தான் முதலில் கவர்ந்தாள், அவளை கண்கள் தொடரவே இந்த பெரியவரை பார்த்தேன். பார்த்ததும் பிடித்தது அவரது தோற்றம்தான். புத்தகங்களை வாங்கி கொண்டு எதிரே இருந்த அன்னபூர்ணா கெளரிசங்கரில் காப்பி குடிக்க உட்கார்ந்து இருந்தேன். அவர்கள் என் எதிரில் இருந்த டேபிளில் உட்கார்ந்து இருந்தார்கள். டேபிளில் என் புத்தகங்கள் இருந்தன. அவர் பார்வை என் புத்தகங்களில் பதிவதை கவனித்தேன். மெல்ல புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்...தெளிவான ஆங்கிலத்தில் "நீங்கள் விலைக்கு வாங்கிய புத்தகங்கள் அருமையானவை...இது போன்ற புத்தகங்களில் உங்களுக்கு ஆர்வம் உண்டா..?" என்றார். "எனக்கு ஆர்வம் நிறைய உண்டு...அதுவும் தவிர இத்தகைய சித்தாந்தங்களில் பிடிப்பும் உண்டும்" என்றேன். "இந்த சித்தாந்தங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?" என்றார்.."என் நம்பிக்கை எல்லாம் நடைமுறை படுத்தி வெற்றி பெற்றவைகளில் மட்டும்தான்... தியரிகளை நான் அதிகம் நம்புவதில்லை..அவை சிலரின் கருத்துகள் மட்டுமே..ஒரு சமூகம் அந்த தியரியை ஒத்துகொண்டு வழிநடக்குமாயின் அது செழுமைபடுத்தபட்ட நடைமுறை விதியாகிறது..." என்றேன்.. அமோதிப்பது போல புன்னகைத்தார்.அந்த பெண் என்னை விரோதி போல பார்த்து கொண்டு இருந்தது. ஒரு சிறு காகிதத்தில் அவர் பெயரும் தொலைபேசி எண்ணும் கொடுத்து தொடர்ப்பில் இருக்க சொன்னார்.பின்னர் அவரை பார்க்க 5 மாதம் ஆகிவிட்டது...

5 மாதங்களுக்கு பிறகு சேலம் பஸ் நிலையத்தில் மறுமுறை அவரை பார்த்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டார். அவர் தருமபுரிக்கு அருகே ஒரு கிராமத்துக்கு போக போவதாகவும் நான் ஓய்வாக இருந்தால் தன்னுடன் வரும்படியும் அழைத்தார்..சொல்லி கொள்ளும் படி எந்த வேலையும் இல்லாததால் அவருடன் போக இசைந்தேன். பயணம் முழுவதும் புத்தகங்கள் பற்றியும்...கருத்துகள் பற்றியும் அரசியல் பற்றியும் போராளிகளின் வாழ்க்கை முறை பற்றியும் நிறைய பேசி கொண்டே வந்தார். தேசத்தின் மோசமான நிலை பற்றி அவர் பேசும் போது அவரது வார்த்தைகளில் ஆவேசம்.. நான் அதிகம் பேசவில்லை...கவனித்தலில் நேரம் கழிந்தது..இரவு 8 மணி சுமாருக்கு அந்த கிராமத்து சாலையில் இறங்கி நடக்க தொடங்கினோம். சில நிமிடங்களில் பாதை என்பதே இல்லை. முள் செடிகள் சூழ்ந்த அந்த பாதையில் நடந்து கொண்டே இருந்தோம்.. யாரை பார்க்க...எங்கே போகிறோம் என்ற கேள்விகளை நான் கேட்க விரும்பவில்லை எனினும் கேள்விகள் இருந்தது...கிட்டதட்ட 5 மணி நேர நடை பயணத்துக்கு பிறகு காடா விளக்குகள் பொருத்தபட்ட சில வீடுகள் கொண்ட ஒரு இடத்தை அடைந்தோம். பெரும்பாலும் அங்கிருந்தவர்கள் இளைஞர்கள்..பெண்களும் இருந்தார்கள்..ஒரு விதமான முரட்டுதனமான அமைதி இருந்தது...பெரியவரை ரொமப விசேஷமாக வரவேற்றார்கள்.
அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்கள்..வாங்கி பத்திரபடுத்தபட்டன.. சூடான டீ எங்களுக்கு கொடுக்கப்பட்டது. நான் ஒரு தெரிந்த நண்பர் என்று அவர்களிடம் அறிமுகபடுத்தபட்டேன்.. அங்கிருந்தவர்களில் சில முரட்டுதனமாக இல்லை..மாறாக தெளிவான ஆங்கிலமும், நகர் புறங்களில் வாழுபவர்கள் போல இருந்தார்கள்....மறைந்து வாழும் போராளிகள் என்பதை உணர்ந்து கொள்ள ரொம்ப நேரம் ஆகவில்லை...எந்த பயமும் வரவில்லை..மாறாக அவர்களின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆசை மட்டுமே இருந்தது. என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கபட்டவர்கள் தவிர யாரும் என்னிடம் பேசவே இல்லை...அவர்கள் அந்த பகுதி மக்களிடம் கல்வியறிவை மேம்படுத்துவதாகவும், விவசாய கருவிகளுக்கு உதவுவதாகவும், கடின நில விவசாயம் பற்றி சொல்லி கொடுப்பதாகவும் சொன்னர்கள். தன்னை மருத்துவர் என்று அறிமுகபடுத்தி கொண்ட ஒருவர் ஜனநாயக அமைப்பு என்ற போர்வையில் நடக்கும் அரசியல் கேவலங்ளை பற்றி ஆவேசப்பட்டார். கல்வியும், சுய தொழிலும், முரண்பாடில்லாத பொருளாதார சூழ்நிலைகள் மட்டுமே கீழ்மட்ட மக்களை மேம்படுத்தும் என்பது அவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருந்தது.

அவர்களில் பெரும்பாலோர் படித்தவர்களாக இருப்பதை உணர்ந்தேன்.. அரசியல் மேலும் சமுதாயம் மேலும் அவர்களில் பெரும்பாலோருக்கு நம்பிக்கை இல்லை...அவர்கள் ஒரு தீவிரமான புரட்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்...சமுதாய அமைப்பில் ஒரு புதிய உத்வேகத்தை கொண்டு வருவது அவர்களின் நோக்கமாக இருந்தது. அடுத்த நாள் அங்கிருந்து கிளம்பிவரும் வரை அந்த சூழல் ஒரு நல்ல உணர்வை கொடுத்தது. வெளிஉலகில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்...சம்பாதிக்கும் சொந்த காசில் இந்த புரட்சியை நடத்துகிறார்கள்..கிராமங்களில்..சின்ன ஊர்களில் சத்தம் இல்லாமல் இந்த புரட்சி நடக்கிறது.. அந்த அனுபவத்துக்கு பிறகு அவர்களில் யாரையும் நான் மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் நகஸல்பாரி இயக்கம் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்துவைப்பதின் மூலம் அவர்களை புரட்சியில் இருந்து தடுத்து நிறுத்துவதாக செய்தி வந்து இருந்தது. அவர்கள் இந்த சின்ன தடைகளில் தங்கள் இயக்க செயல்பாடுகளை தடுத்து கொள்வதில்லை...அரசாங்கத்தின் கணிப்பு போராளிகள் விஷயத்தில் என்றும் சரியாக இருப்பதில்லை..விலைக்கு வாங்க நினைக்கும் அரசாங்கத்தின் போக்குக்கு மிக சிலரே பலியாகிறார்கள்...இன்னும் எத்தனையோ சத்தமில்லாத புரட்சிகள் தேசத்தின் கண்ணுக்கு தெரியாத எல்லைகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...

படித்ததில் பிடித்தது..

சமீபத்தில் படித்ததில் பிடித்தது.. கொஞ்சம் விசிலடிக்கவும் வைத்தது..

ஆரியபட்டா
வானத்தை கிழித்தது,
அணுகுண்டு சோதனை
பூமியை கிழித்தது,
அரைக்கைச் சட்டை
கிழிந்தது மட்டுமே
நெஞ்சில் நிற்கிறது

பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக் கிழித்தார்கள்
உணவும் எதற்கென்று,
இனிவயிற்றை கிழிப்பார்கள்.

எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய் கிழிவது மட்டும்
வகைவகையாக இருக்கும்...

நன்றி: கந்தர்வன் கவிதைகள்

Tuesday, April 18, 2006

ஒரு சந்தேகமும் நிறைய குழப்பமும்...

தமிழ் கலாச்சாரம் என்று ஒரு குழப்பம் இருக்கிறது.. இது பற்றி வாய் கிழிய பேசும் சிலரை கவனித்து இருக்கிறேன். தமிழ் கலாச்சாரம் திருக்குறளை அடிப்படையாக கொண்டது என்று ஒருவர் என்னிடம் சொல்லி ஒத்து கொண்டால்தான் ஆயிற்று என்று பிடித்து நிறுத்தி துளைக்க ஆரம்பித்து விட்டார். வாய்மை, நேர்மை, புறம் கூறாமை, பிறன் மனை நோக்காமை, அன்பு, அறம், தூய்மை, கொள்கையோடு கூடிய வாழ்க்கை, நல்லதே பேசுதல், கற்பு என்று கருத்துகளை அடுக்க ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் கடைபிடிப்பவர் மட்டும்தான் இதனை பற்றி பேசவேண்டுமா இல்லை யாரும் பேசலாமா என்று தூண்டில் போட்டேன்...தமிழர் எல்லாரும் பேசலாம் என்று வாய்விட்டார். எனக்கு ஒரு கேள்வி...இன்றைய அரசியல்வாதிகளும் சமூக பாதுகாவலர்களும் மேலே சொன்ன கருத்து புதையல்களில் எதனையும் கடைபிடிப்பதாக தெரியவில்லை...வாய் கிழிய பேசுவதை தவிர... 6 மாசத்துக்கு ஒருமுறை கற்பு பற்றி பேசுவது ஒரு எடுத்துக்காட்டு... (அதுவும் பெண் கற்பு மட்டும்தான்...கற்பு என்பது உடலா மனமா என்று கூட யாருக்கும் தெரியாது.. )... ஆனால் எல்லாரும் - தமிழர்கள் என்று சொல்லி கலாச்சாரத்தை வேட்டியை விட இறுக்கமாக கட்டி பாதுகாத்து கொள்கிறார்கள்.. உங்களில் யாராவது விஷயம் புரிந்தால்.. சொல்லி கொடுங்கள்....தமிழ் கலாச்சாரம் என்றால் என்ன என்று...!!!

வரிகளை தொலைக்கும் புலிகள்...

பொதுவாக எனக்கு திருமணம் என்ற சடங்கில் கொஞ்சமும் சமூக நம்பிக்கையில்லை...நேரடியாக சொல்லபோனால் ஒரு பெண்ணை ஒரு ஆண் புணர்வதற்கான ஒரு உரிமம் போல திருமணம் என்ற சடங்கு நம் சமுதாயத்தில் உள்ளது. அடிப்படைவாத சமூக அமைப்பில் பெண் ஒரு ஆணின் படுக்கை அறைக்காகவே வளர்க்க படுகிறாள். படிப்பு, வேலை, தகுதி, சுதந்திரம் மற்ற எல்லா ஈர வெங்காயங்களும் வெறும் நிற பூச்சுகள். உடல்தேவைக்காவே திருமணம் அடிப்படையில் நடத்தபட்டு, பின்னர் அவர்களுக்குள் ஒரு ஒருமித்த உணர்வு உணரபட்டு, ஒரு காதலாகவும் பாசமாகவும் சித்தரிக்கபட்டு...ஒரு வழியாக தமிழ் கூறும் நல்லுலகில் வாழ்க்கை பயணத்தை நடத்துவது கலாச்சாரம் ஆகிவிட்டது.. இதில் யாரும் தப்பி பிழைக்க போவதில்லை.. நான் உட்பட.

காதல் ஒன்று மட்டும்தான் உடல் தேவையும் சார்ந்த அதே நேரம் சுய மரியாதை உணர்வாக கருதிகொண்டு இருந்தேன்..அதுவும் சமீபகாலங்களில் கரையான் அரிக்க தொடங்கிவிட்டது. காதலில், உறவில், உணர்வில் விட்டு கொடுத்தல் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. சுய அடையாளங்களை விட்டு கொடு என்று யாரும் சொல்லி தரவில்லை. இதில் வேடிக்கை - பாரதியும் பாலச்சந்தரும் சொல்லும் புதுமை பெண்கள் நிலைதான்...சமுதாய சுய தேவைகளை பூர்த்தி செய்யும் கட்டாயங்கள் ஒருபுறம், புதுமை பெண்ணாக உருவகம் செய்யபட்டு உள்ள நிலையை காப்பாற்ற வேண்டிய கடமைகள் ஒருபுறம் என தவிக்கிறார்கள்.

சாதாரண பெண்களில் இருந்து சுய மரியாதை கவிஞர்களாகவும் திறமையான அரசியல் வல்லுனர்களாகவும் உணரபட்ட பல பெண்களுக்கும் இதே நிலைதான். தன் சுய அடையாளங்களை காதலுக்காக ஒரு ஆணும் பெண்ணும் தியாகம் செய்வதாக இருந்தால் - இருவருக்கு இடையே உள்ள காதல் எதனை அடிப்படையாக கொண்டது? தியாகம்? அல்லது சுய அடையாளங்கள்..? எதனை அடிப்படையாக கொண்டு (உடல் தவிர) காதல் வந்ததோ, காதலின் வெற்றி அதனை பலி வாங்கும் என்றால் சுய அடையாளங்கள் எதற்கு - யாருக்காவது பலி கொடுப்பதற்கா..? என்னை பொருத்தவரை சுய அடையாளங்களே ஒரு மனித உயிரின் முகவரி. அதனை பலி கொடுப்பது என்பது தன்னையே பலி கொடுப்பதற்க்கு சமம். புலிகளின் அடையாளம் அதன் உடலில் உள்ள வரிகள்தான். வரிகளை தொலைக்கும் மொட்டை புலிகள் வெண்மையை சமாதானத்தின் அடையாளமாக - விட்டு கொடுத்தலின் அடையாளமாக - காதலின் அடையாளமாக சொல்லி கொள்ளட்டும். ஆனால் இன்னமும் புலிகள் என்று சொல்லி கொள்ள வேண்டாம்.

Monday, April 17, 2006

காதலும் குழப்பங்களும்...

கடந்த 4 மாதத்தில் சட்டென நிறைய காதல் கதைகளை கேள்விபட்டு கொண்டு இருக்கிறேன்... நேற்றுவரை நன்றாக இருந்துவிட்டு சட்டென இன்று காதல் வந்துவிட்டது என்று சொல்லி நிலாவை பார்த்து தென்னை மரத்தை பார்த்து கவிதை எழுத தொடங்கிவிடுகிறார்கள்...ரொம்ப பெரிய மனிதர்கள் போல வாழ்க்கையை பற்றிய கணக்கு...எதிர்காலம் பற்றிய கணிப்பு...தாங்க முடியவில்லை...முதல் வசந்தம் திரைப்படத்தில் சத்தியராஜ் சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.. "மொதல்ல வேட்டிய ஒழுங்கா கட்டுங்கடா டேய்...அப்புறம் பண்ணலாம்..காதலும் கத்திரிக்காயும்... " பசங்களுக்கு காதல் மிக சுலபமாக வந்து விடுகிறது..பெண் கொஞ்சம் பார்க்கும்படி அழகாக இருந்தாலே போதும்...பசங்கள் பாயை பிறண்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.. கூட இருப்பவர்கள் நிலைதான் பரிதாபமாகிறது... பெண் பிள்ளைகள் நிலை இன்னும் பிரச்சனை..யாராவது கொஞ்சம் ஆறுதலாக பேசி பழகி, கொஞ்சம் உதவிகள் செய்து, லேசான கதாநாயகதனத்துடன் (ஓரளவுக்கு பார்க்க லட்சணமாக இருந்து...பைக் ஓட்டுதல், ஜெல்போட்டு தலை வாருதல், கொஞ்சம் விலை உயர்ந்த கலர்கலரான சட்டைகள், காபிடேயில் டின்னர்...மற்றும் பல).. இருந்து, பிடித்த விஷயங்களை பேசி..பழகினால்..அப்புறம் அவர்களுக்குள்ளும் காதல் விதைபோட்டு மரமாகிவிடுகிறது..தவிர்க்கமுடிவதில்லை...எல்லா பசங்கள், பெண் பிள்ளைகள் அப்படி இல்லை என்றாலும்... 70% இந்த குழப்பத்தில்தான் இருக்கிறது..இதில் இன்னொரு குழப்ப சமுதாயமும் இருக்கிறது...எல்லா பெண்களுக்கும் அஜீத், விஜய் போல பசங்கள் தேவைப்படுகிறார்கள் (கிடைக்காவிட்டால் கிடைத்தவரை சரி..) எல்லா ஆண்களுக்கும் திரிஷாவும் அஸினும் தேவைப்படுகிறார்கள் (கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிடைத்த பெண்களுடன் பழகுவது ஒரு உதாரணம்...) இதில் உதார் வேறு.. நாங்கள் எல்லாம்.. உதாரண காதலர்கள் என்று.. அதாவது தெய்வீக காதலாம்... உடல் ஈர்ப்பு கிடையாதாம்.. அப்புறம் எதுக்கு நண்பர்களே அழகான (அல்லது அழகு என்று நினைத்து கொண்டு இருக்கும்..) பெண்களும் ஆண்களும் தேடி நட்பு கொண்டு காதல் என்ற நிலைக்கு முன்னேறுகிறீர்கள்.. லட்சணமில்லாத துணையை தேட வேண்டியதுதானே... தொடாமல் பழக வேண்டியதுதானே...கல்யாணம் செய்து கொண்டு பிரம்மசரியத்தை பூண வேண்டியதுதானே.. அது எல்லாம் கூடாது.. எல்லாம் வாய்பந்தல்.. செக்ஸ் இல்லாத காதல் என்று ஒன்றும் இல்லை.. எல்லாம் ஆர்மோன் கோளாறு என்றால்.. உன் பார்வை சரியில்ல்லை என்று நமக்கு அறிவுரை... அன்பு நண்பர்களே.. உங்கள் எல்லாருக்கும் என் பதில்கள் இது..

என்னை பொருத்தவரை..காதல் உடல்சாராமல் வராது.. அப்படி வரும்காதல் நிலைத்து நிற்க்கும்.. அப்படி நிற்க வயது 40க்கு மேல் காதல் வரவேண்டும்.. காதல் வெறும் ஆர்மோன் கோளாறு... உடம்பில வளைவுகளும், பர்ஸில் கனமும் இல்லாத ஆணும் பெண்ணும் காதல் செய்தால் எனக்கு கடிதம் எழுதுங்கள்.. நீ கவிதை எழுதுகிறாயே அந்த தேவதை யார் என்று கேட்க்கும் புத்திசாலிகளுக்கு.. அது தேவதைதான்.. ஆனால் நான் தெய்வீக காதலன் இல்லை... உடல் இச்சைகளுக்கு அப்பாற்படாத காதல் என்று பொய் சொல்லி திரிவதில்லை.. இது என் வாக்குமூலமாகவும் வைத்து கொள்ளலாம்.... குழப்பி கொண்டு என்னையும் குழப்பி விட்டு திரியாதீர்கள்.. (நான் குழப்பினால் நீ ஏன் குழம்புகிறாய் என்று கேள்வி வேறு...) ஆதலினால் நண்பர்களே காதல் செய்யுங்கள்.. ஆனால் தெய்வீக காதல் என்று சொல்லி திரியாதீர்கள்.. அப்படி யாராவது உண்மையாகவே தெய்வீக காதலர்கள் இருந்தால்.. கோடி நமஸ்காரம்... என்னை சந்திப்பதை தவிர்த்து விடுங்கள்...வீண் வாக்குவாதங்களால் தீமை என்று ராசிபலன் எழுதியிருக்கிறது..

Sunday, April 16, 2006

பாட்டு கதை கணிதங்கள்...

சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது சட்டென ஜாதகத்தை எடுத்துகொண்டு ஒரு ஜோசியரை பார்க்கும் நெருக்கடி ஏற்பட்டு விட்டது. சந்தோஷமான விஷயம் கால்கட்டு 31 வயதில் வைத்து கொள்ளலாம் என்று அவர் சொல்லிவிட்டதுதான். ஜோசியகாரர்கள் சில நேரம் நல்ல பொழுதுபோக வைத்துவிடுவதுண்டு - ஒரு பணிக்கர் ஒருவர்.. பாட்டு கதை எல்லாம் சொல்லி என்னை உற்சாகபடுத்திவிட்டார். சில விஷயங்களை பற்றி நிஜமாகவே ஆச்சரியபட்டதுண்டு. அந்த கட்டங்களுக்குள் வாழ்வின் சில நுட்பமான விஷயங்கள் துல்லியமாக கணிப்படுகிறது. சில புத்தகங்கள் படித்து பார்த்ததுண்டு. சில கணிதங்கள் புரிந்ததில்லை. எனினும் அந்த துறை மனிதர்களிடம் ஒரு பிரமிப்பு உண்டு. 70 சதவீதம் ஜோசியர்கள் போலித்தனமான கதைகளை சொன்னாலும் 30 சதவீத நபர்கள் சுத்தமாக சொல்வதுண்டு. இன்றைக்கு எல்லாம் நிறைய ஜோசிய புத்தகங்கள் வந்து எல்லாருக்கும் ஜோசியம் பற்றி தெரிந்து வந்து இருந்தாலும் சில ஜோசியர்களுக்கு இன்னும் வாழ்க்கை நடந்து கொண்டேதான் இருக்கிறது. எனினும் பல ஜோசியர்கள் இன்னும் நல்ல வசதியில் வாழ்வதில்லை...

சே குவாரா...

சே குவாரா பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் சமீபத்தில் படிக்க ஆரம்பித்து இருக்கும் பொலிவிய நாட்குறிப்பு என்ற புத்தகம் அற்புதமாக தெரிகிறது. ஒரு டைரியை போல தொகுக்கபட்டு இருக்கும் இந்த புத்தகம் மெல்ல மெல்ல ஒரு போராளியின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களை சொல்கிறது. வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வரும் போராளியின் வாழ்க்கை சூழல் இந்த புத்தகத்தை படிக்கும்போது புரிகிறது. நிறைய ஆயுதங்களும், தொலைதொடர்பு சாதனங்களும் இல்லாத அந்த நாட்களின் யுத்தபூமியும் முகமறியாத தோழர்களும் புத்தகத்தை வாசிக்கும்போது மனதில் பதிந்து விடுகிறார்கள். நேரம் கிடைக்கும்போது படித்துபாருங்கள்.. புத்தகத்தை வாசித்து முடித்ததும் மேலும் பகிர்ந்து கொள்ளலாம்.

இரவுகளில்...

ராமகிருஷ்ணனின் வார இதழ் தொடர் ஒன்றில் இரவுகளில் நகரங்களில் வாழ்க்கை பற்றி சமீபத்தில் படித்ததேன். இரவுகளில் நகரங்கள் புதிய அவதாரங்களை எடுக்கின்றன.. சில இரவு பயணங்களில் தாண்டி செல்லும் ஊர்களின் அடங்கும் வாழ்க்கை பற்றியும், பின்னர் மெல்ல விழிக்கும் வாழ்க்கை பற்றியும் நினைத்ததுண்டு.. ராமகிஷ்ணன் அற்புதமான பயணி. தன் பயணத்தில் அனுபவங்களை அவர் சொல்லும் பாங்கு அற்புதமாக உள்ளது. தொகுப்பு வெளியிடப்படும்போது மறக்காமல் வாங்க வேண்டும். சங்க சித்திரங்களில் ஜெயமோகன் இயல்பான வாழ்க்கையின் இலக்கியம் பற்றி பேசும் போது இருந்த லயம், ராமகிருஷ்ணனின் எழுத்திலும் இருக்கிறது. இரவு ஊர்கள் பற்றியும், அதிகாலை ஊர்கள் பற்றியும் எழுத நிறைய உள்ளது. சில ஊர்கள் ஓவியங்களை போல மனதில் பதிந்து இருக்கின்றன. ஊர்களின் பெயர்கள் விசித்திரமான காரணங்களை சொல்லி மனதில் பதிந்து உள்ளன. சில ஆறுகள், பெரும்பாலும் கோவில்கள், சில ஊர்களில் மனிதர்கள், சில ஊர்களில் உணவு என ஒவ்வொரு ஊரும் ஏதோ ஒரு அடையாளத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் கிராமம் கிராமமாக சென்று பார்க்கும் ஆர்வம் இன்னும் இருக்கிறது. நேரம் கிடைப்பதில்லை - வருடத்தில் ஒருமுறையாவது அப்படி பயணம் செய்யவேண்டும். ஒருமுறை கும்பகோணமும் அதனை சுற்றியுள்ள இடங்களும் சென்றிருந்தேன். அற்புதமான அனுபவம். பயணம் தனிமையின் அரூபமாக தன்னையும் இணைத்து கொள்கிறது. கொஞ்சம் காகிதங்கள். கொஞ்சம் பென்சில்கள்,கொஞ்சம் பணம் அவ்வளவுதான். வரைவதை அங்கேயே யாரிடமாவது கொடுத்து விட்டு வந்து விடுவதுண்டு. பெரும்பாலும் சிறுவர்கள் சிறுமியர். சில நேரம் வயசாளிகள். முகமறியாத மனிதர்களுக்கும், தண்ணீர் கேட்டால் மோர் கொடுக்கும் குணம் இன்னும் அங்கே இருக்கிறது.

தனிமை - ஒரு சமூக பார்வை...

ஒருமுறை பேரூரில் சுற்றி கொண்டு இருக்கும் போது ஒரு பெண் போலீஸை பார்த்தேன். முகத்தில் போலீஸ் தொழிலுக்கான கடுமை இல்லை. ரொம்பவும் சாத்வீகமாக மக்களை வரிசைபடுத்தி கொண்டு இருந்தார். பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள ஒரு தேனீர் விடுதியில் உட்கார்ந்து இருந்தபோது என் எதிரே வந்து அமர்ந்தார்...சில நிமிட தயக்கத்துக்கு பிறகு என்னை அறிமுகபடுத்திகொண்டேன். பொதுவாக போலீஸ் நபர்களிடம் யாரும் அறிமுகபடுத்திகொள்வதில்லை.. யாரும் தள்ளி போய் விடுவார்கள்.காரணமும் தெரியவில்லை.. என் அறிமுகம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனினும் மிக சகஜமாக பேசினார்...பிறகு ஒருமுறை பூண்டி கோவில் விழாவில் பார்த்தேன்...புடவை கட்டி பாந்தமாக கோவில் வந்து இருந்தார்...மெல்ல மெல்ல நட்பு பூக்க ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்து கொண்டோம். திருமணம் செய்யாமல் 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்..அதிர்ஷ்டவசமாக புத்தகங்கள் கவிதைகள் ரசிக்கும் பழக்கம் இருந்தது....தற்போது அதிகம் தொடர்பு இல்லை. சில நேரம் தொலைபேசியில் பேசுவதுண்டு... போலிஸ் துறையில் நடக்கும் கூத்துகள் பற்றி பேசுவோம்.. அரசியல் எப்படி போலிஸ் துறையில் விளையாடுகிறது என்றும் யார் யார் எப்படி பலியாகிறார்கள் என்றும் அவர் சொன்னது எல்லாம் நேரடியாக பதிக்க முடியாதவை. இந்த பதிவு அதனை பற்றி அல்ல. சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் பேசும் போது சட்டென அழுது விட்டார்.. காரணம்..இன்றைய சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது.. திருமணம் ஆகாத கொஞ்சம் பார்க்க லட்சணமாக இருக்கும் சகஜமாக பேசக்கூடிய எந்த பெண்ணுக்கும் சமுதாயம் வைக்கும் பெயர் அவருக்கும் வைக்கபட்டு இருந்தது. இது பற்றிய சுய அறிவு இருந்தாலும் பெண்ணின் மனமாக சட்டென உணர்ச்சிவசபட்டு விட்டார்.. தனிமையாக வாழும் பெண்களின் ஒழுக்கத்தை சந்தேகப்படும் சமுதாயம் பற்றி நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தோம்.. இது மாற்ற முடியாதது என்பது தெரிந்த விஷயம்... தங்களின் கற்பனையில் உள்ள எல்லா விகாரங்களையும் சமூகம் சுற்றியுள்ள நபர்களின் மேல் பூசி தன்னை சந்தோஷத்தில் வைத்து கொள்கிறது.. என்றும் போலவே..

கண்ணதாசனும் மதுவும்...

மது அருந்தும் கலாச்சாரம் பற்றிய சிறு விவாதத்தில் ஒரு நண்பர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" புத்தகத்தில் எழுதியுள்ளதை படிக்கசொன்னார். முதலிலேயே படித்து இருந்தாலும் மறுபடி தேடி படித்தேன்... படித்ததில் இருந்து சில வார்த்தைகள்...

"எனக்கு இருபது ஆண்டுகளாக மதுப்பழக்கம் உண்டு - நான் தார்மீக ஒழுக்க கேட்டுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது என கருதுகிறேன்.. சட்டம் போட்டு ஒன்றை மறைக்க மறைக்க அது பற்றிய ஆசைகள் கிளர்ந்து கொண்டு இருக்கும். ஆகவே தான் மதுப்பழக்கம், பெண் உறவு ஆகிய இரண்டையும் சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியாது என வாதிடுகிறேன். அடுத்தவனுக்கு தீமை பயக்ககூடிய சமுதாய ஒழுக்க கேட்டைமட்டுமே சட்டம் தடுக்க முடியும். தனிமனித ஒழுக்கத்துக்கு அது உத்திரவாதம் தேட முடியாது..."

சத்தியமான வார்த்தைகள்.. அனுபவஸ்தர் பேசுகிறார்... கண்ணதாசனின் பாடல்களை போலவே சில எழுத்துகளும் அற்புதமானவை...

கோணல் பக்கங்கள்...

ரொம்ப நாட்களுக்கு பிறகு சாருவின் கோணல் பக்கங்களை படித்தேன் - என்னுடைய "சுட்டிகள்" பகுதியில் சேர்த்திருக்கிறேன் - நேரம் இருக்கும் போது படித்து பாருங்கள். சாருவின் எழுத்துகளில் கொஞ்சம் சங்கடபடுத்தகூடிய உண்மைகள் இருக்கும் - அது அவரின் பலம். பலவீனமும் கூட. செக்ஸ் பற்றிய மிக நேரடியான எண்ணங்களை சாருவின் எழுத்துகளில் நான் பார்க்கிறேன். அதில் எந்த பூச்சும் இருந்ததில்லை - இது நிஜமாக இருக்குமா என்ற சந்தேகம் மட்டுமே சில நிமிடங்கள் வரும். ஒரு விஷயத்தில் நான் சாருவின் கருத்துகளோடு மிகவும் ஒத்து போவதாக உணர்க்கிறேன். அது என் தோழிகள் விஷயம். உடல் சார்ந்த உறவு என்பது கலாச்சாரம் கெட்ட வாழ்க்கை என்ற குழப்பத்தை நாங்கள் இருவருமே மறுக்கிறோம். அதே நேரம் உடல் மட்டுமே உறவின் கோட்பாடு என்பதையும் மறுக்கிறோம். கவரபட்டு வரும் உறவுகளுடன் மட்டுமே பகிர்தல் நிகழ்கிறது. சில நேரங்களில் உடலாலும். யாரையும் சுண்டி இழுப்பதில்லை, கை வைத்து அழைப்பதில்லை - அது ஒரு தென்றல் போல இயல்பாக அமையவேண்டும். மனதிலும் ஒரு ஈர்ப்பு இருக்கவேண்டும். கையை பிடித்து கண் அடித்து கூப்பிட்டால்தான் பெண் வருவாள் என்ற மனோபாவம் இருக்கும் வரைக்கும் சாருவின் எழுத்துகளும் என் எழுத்துகளும் புரிந்து கொள்ளபடுவது திண்ணம்.

கவிதையும் குழப்பமும்...

சென்றவாரம் எழுதிய கவிதை என் நண்பர்கள் வட்டத்தை கொஞ்சம் குழப்பிவிட்டதுபோலும். பொதுவில் என் கவிதைகளை நான் யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. வெகுசிலரே அதனை சரியான முறையில் புரிந்து கொண்டார்கள். அதைவிட ஆச்சரியம் அவர்களில் சிலர் முற்றிலும் புதிய நண்பர்கள். உரைநடை வட்டம் கவிதையை கொஞ்சம் குழப்பிகொண்டதில் ஆச்சரியம் இல்லை - சிலர் மொழிபெயர்ப்பு கவிதை என்று வேறு சொன்னது எனக்கு கொஞ்சத்தில் அதிர்ச்சி. சிலர் கவிதையில் இருந்த காமத்தை மட்டும் படித்துவிட்டு அற்புதமான விமர்ச்சனம் செய்தார்கள். சிலருக்கு அதின் வார்த்தைகள் மட்டுமே குழப்பியிருந்தன. எது எப்படி இருப்பினும் சிலர் கூப்பிட்டு காட்டமான விமர்ச்சனங்கள் செய்த்தார்கள் - பொதுவான குற்றச்சாட்டு பெண்களை காமத்துபாலின் உருவகங்கள் ஆக்கியிருப்பது. இதனை சொன்னவர்கள் எல்லாரும் ஆண்கள் -நன்றி நண்பர்களே. பெண் தோழிகள் இதனை எடுத்து கொண்ட விதம் பற்றி எனக்கு பூரண திருப்தி. மெல்லிய புன்னகை. அர்த்தமுள்ள பார்வைகள். செல்லமாக கொஞ்சம் விமர்ச்சனம். அப்புறம் இன்னும் எழுதுடா என்று அன்புகட்டளை.காமம் சொல்லவும் கொஞ்சம் தினவு வேண்டும் என்று புன்சிரிப்புடன் கூடிய பாராட்டு. கவிதையில் நான் சொல்லியிருந்த சில பெண்களும் கவிதையை படித்து இருந்தார்கள். நானும் ரொம்ப போய் விமர்ச்சனம் கேட்கவில்லை - வந்த வரையில் கவிதை சுமார் என்று புரிகிறது - எனினும் - " ரொம்ப உண்மையெல்லாம் எழுதாதே.." என்ற அன்பு எச்சரிக்கையும் வந்தது. சில புது நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். எனவே எது எப்படி இருந்தாலும் இனிமேல் கொஞ்சம் கவிதையும் எழுதவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டேன் - உங்கள் விமர்ச்சனமழையில் நனைய இதோ இன்னும் ஒரு புது கவிஞன்.

மரணங்களை சொல்கிறதாக...

பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போக துடைக்கிறது
எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையை துடைக்கிறது
பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது
டி.வி, டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது
எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது
இப்படிவீடு முழுக்க வேலைகளை
செய்து கொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை.

இந்த கவிதை மிக சுலபமாக நாம் மறந்துபோகும் சில மரணங்களை சொல்கிறதாக நான் கருதுகிறேன். மரணம் மற்றவருக்கு நடக்கும்போது மிக எளிதாக எடுத்துகொள்ளப்பட்டு மிக விரைவில் மறக்கப்படுகிறது.எனினும் யாரும் மரணத்தை தொட்டு பார்க்க துணிவதில்லை. மரணத்துக்கு பின்னால் இன்றெல்லாம் மிக விரைவாகவே சகஜவாழ்விற்க்கு யாரும் வந்துவிடுகிறார்கள். சின்ன வயதில் சில மரணங்களை பார்த்திருக்கிறேன். அவை மறக்க நெடுநாட்கள் ஆகின. சமீபகால மரணங்கள் சில நாட்களிலேயே மறந்துவிடுகின்றன.காலமும், நம் வாழ்க்கைமுறையும் கொஞ்சம் காரணங்கள் ஆகினாலும், நாம் எல்லாரும் முன்புபோலவே பிணைப்பான பந்தங்களில் இருக்கிறோமா என்ற கேள்வியும் எழுகிறது.