அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, April 30, 2008

வேறு ஒருவரின் கவிதை...


சமீபத்தில் வேறு ஒரு பதிவில் படித்தது. ஏனோ பதிக்க வேண்டும் என தோன்றியதால் இங்கு பதிக்கிறேன்.. இதனை எழுதிய நண்பருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டினால் - இங்கு [http://kundavai.wordpress.com/] பயணம் செய்யவும்.

அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்
மிதந்தபடி சொல்லிச் செல்கிறது
முன்னம் சாத்தப்பட்ட தருணங்களை
வார்த்தைகளின் தேவையில்லை உனக்கு
எனக்கும் கூடத்தான்
உன் நிராகரிப்பின் என் வெறுமை
வார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லை


காலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்து
வரைந்து செல்லும் ஓவியத்தினுள்
தூக்கத்தை தொலைத்தபடிநம் பிம்பங்களுக்குள்
கரைந்து போகிறேன்
உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்
மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும் ஒன்றாய்ப் புறக்கணித்தபடி

இன்னொரு நாளுக்கான தேவையில்லை
உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்டிக் கவிழ்க்கப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்
ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்
உன் பிரிவின் சோகம் வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டி


புனைவின் நீளமாய் நம்மிடையே சுவர்
விளிம்பளவு ஏறியபின்னும்
தோல்வியின் சுவடறிந்து தவிர்த்துவிடுகிறேன்
நாம் பிரியும் சாத்தியக்கூறுகளை முன்பொருமுறை
மறுத்தளித்ததைப் போல்
உபயோகமில்லாத உன் முகவரியைப் போல...

Monday, April 28, 2008

இன்னும் உண்டு வேலைகள்

கோவையில் ஆறுமுக்கு என ஒரு இடம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நானும் நண்பர்களும் முன்னிரவு நேரங்களில் அலுவலகம் முடிந்து வரும்போது அந்த இடத்தை தாண்டி வருவோம். அங்கு ஒரு சிறிய தள்ளுவண்டி வடை போண்டா கடை இருந்தது. நாங்கள் அங்கு பெரும்பாலும் சாப்பிடுவது வழக்கம். அங்கு ஒரு சிறு பையன் இருந்தான். வயது 10 இருக்கும் - மணிகண்டன் - பெயர் என்று நினைவு. சரியாக கணக்கு பார்பான் - மிக சரியான உபசரிப்பு உண்டு. தொந்தரவு தரும் குடித்திருக்கும் பெரியவர்கள் அல்லது சண்டியர் பெண்களை அவன் கவனிக்கும் விதம் தனி விதம். கிட்டதட்ட 4 வருடங்கள் கழித்து இந்த முறை அவனை பார்த்த போது நல்ல மாற்றம் - முன்னேற்றம் எனவும் சொல்லலாம். சிறிய க்டை போட்டாகிவிட்டது. வடை போண்டா போட இன்னுமொரு ஆள். கல்லா பார்த்து கொள்ள மணிகண்டன் - 2 பிலாஸ்டிக் டேபிள் 8 சேர் வீதம் ஒரு சிறிய அறை.. சைக்கிள் நிறுத்த சின்ன இடம்.. ஒரு மாதிரி செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் பழைய மணிகண்டன் மாறவில்லை - பேசும்விதமும், கஸ்டமர்களை கவனிக்கும் விதமும் மாறவில்லை - கல்லாவில் பணம் எண்ணிபோடும் விதம் மாறினாலும் சாப்பிடுபவர்கள் மேல் கண்வைத்து கணக்கு பார்க்கும் குணம் மாறவில்லை. "அண்ணே செளக்கியமா... !!" என்ற பால்யம் மாறாத - குரல் மாறிய குணம் அவனை இன்னும் அவனாகவே காட்டி கொண்டிருந்தது. உண்மையை சொன்னால் மணிகண்டன் போல உழைக்க ஆயிரம் உண்டு வழிகள். அடிப்படை நேர்மையும் அளவான சேமிப்பும் சரியான உழைப்புமே நல்ல முன்னேற்றத்தின் வழிகள் - கார்பரேட் கம்பெனியில் 5 இலக்க சம்பளம்தான் வாழ்க்கை என கொள்ளும் எத்தனை லட்சம் மனிதர்களிடையே இந்த மாதிரி மணிகண்டனும் வாழ்வில் இருக்கிறான். இன்னும் நிறைய மணிகண்டன்கள் பேக்கரி வைத்திருக்கிறார்கள், ஆட்டோமொலைல் வொர்க்சாப் வைத்திருக்கிறார்கள், காப்பி கடை வைக்கிறார்கள் முடி வெட்டுகிறார்கள் இன்னும் என்னவோ செய்கிறார்கள். மொத்ததில் வாழ்க்கை நடத்துகிறார்கள் - கார்பரேட் ஊழியர்களை விட சந்தோஷமாக. இதில் சில மணிகண்டன்களின் எண்ணம் எதிர்காலத்தில் நிறைய பணமாக இருக்கலாம் - ஆனால் அந்த காகிதங்கள் வாழ்க்கையை பறித்துவிடும் என தெரிந்திருந்தால் ஆசைப்பட மாட்டார்கள்.

பாலியல் மாநாடு

சென்னையில் நடந்த பாலியல் மாநாடு ஒரு நல்ல ஆரம்பம் - டிவியில் சொல்லபடும் குழப்பமான பாலியல் மருத்துவ விஷயங்களைவிட - ஒரு தைரியமான (அதுவும் ஒரு மருத்துவம் தானே.. ) மாநாடு நடத்தி - சமுதாயத்தின் நிறைய குழப்பங்களை தெளிவாக விளக்கிய கருத்து அரங்கங்கள் மற்றும் உரையாடல்கள் நன்றாக இருந்தன. லேகியம் விற்பவர்கள் இதனை எதிர்த்து கொண்டுதான் இருப்பார்கள். இன்றைய சூழலின் மிக முக்கியமான மருத்துவபகுதியாக பாலியல் இருக்கிறது. சரியான கருத்தறிவும் இன்றைய ஊடகங்களும் இதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். மக்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு என நிறவாரியாகவே பாலியலை அறிந்து கொள்ளும் காலம் மாறி - சரியான முறையில் ஒரு கல்வி அமைய - அதன் காரணமான குற்றங்கள் குறைய - பாலியல் மாநாடு வரும்காலத்தில் ஒரு கருத்துள்ள ஆரம்பமாக இருக்ககூடும்...

நாய்களின் அரசியல்

நான் வசிக்கும் தெருவில் 4 நாய்கள் இருக்கின்றன. முதலில் 3தான் இருந்தது - புதியது வந்து 1 மாதம் ஆகிறது. அவற்றுக்குள் பொதுவான அரசியல் என சில உண்டு. ஒரு நாயின் வரம்புக்குள் இன்னொரு நாய் வராது. ஒரு நாள் குரைத்தால் மட்டுமே மற்ற நாய்கள் குரைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் பிச்சைகாரர்களை பார்த்து குரைக்கும் - அல்லது போலீஸ்காரர்களை. இரவில் ஒவ்வொரு நாய்க்கும் ஒரு இடம் உண்டு. வெகு அரிதாக புணர்ச்சியில் இருக்கும் போது மற்ற நாய்கள் விலகி நிற்கும். யாரும் அவைகளுக்கு உணவிடுவதில்லை. கிடைத்தை - குப்பை தொட்டியிலும் அருகில் உள்ள கடைகளின் கழிவுகளில் இருந்து உண்டு வாழ்கின்றன. தெருவில் யாராவது பணக்கார நாய்களை கையில் பிடித்து கொண்டு நடப்பார்கள். அந்த நாய்கள் இவைகளை பார்த்து குரைக்கும். இவை பதிலுக்கு குரைக்காமல் விலகி போய்விடும். ரொம்ப வரம்பு மீறினால் - 2 அல்லது 3 நாய்கள் சேர்ந்து பணக்கார நாயை பார்த்து குரைத்து ஒரு வழி செய்துவிடும் - நாயை கூட்டி கொண்டு செல்பவர் பாடுதான் - சண்டையை தவிர்க்க போராட வேண்டி இருக்கும். அடிப்படையில் அவைகளுக்கு கூட யாரிடம் மோதலாம் - எப்போது மோதலாம் என தெரிகிறது. எல்லை கோடுகள் தெரிகிறது. தேவைபடும்போது தன் எல்லைக்குள் வந்து குரைப்பவர்களை கூட்டு சேர்ந்து மோதி துரத்த தெரிகிறது.

புகைபிடித்தலில் அரசியலும் பொருளாதாரமும்

புகைபிடித்தலை சினிமாவில் கட்டுபடுத்துவதன் மூலம் நாட்டுமக்களை திருத்தலாம் என நினைக்கும் புத்திசாலிதனம் சரி - அப்புறம் எதற்க்கு புகையிலை பொருள்கள் விற்பனை. அரசாங்கம் விற்பனையை நிறுத்தலாமே. அது இன்னும் வேகமாக திருத்துமே...அந்த விவசாயிகளை என்ன பண்ணலாம்...?? புகையிலை பொருட்கள் நிறுத்துவதால் வரும் பொருளாதார தேக்கத்தை என்ன செய்யலாம்... வேறு ஏதாவது சரிசமமான பயிரிடுதலை சொல்லிதரலாம் - யார் வேலை அது..? இன்னும் மலைகாடுகளில் பெரிய தலைகள் கஞ்சா பயிரிடுகிறார்களே அது யார் பார்ப்பது..? மது அருந்துவது தவறு - நல்ல விஷயம்தான். மதுகடைகளை முழுவதுமாக நிறுத்தலாமே. மாத மாதம் இலக்கு வைத்து மதுக்கடை வசூலை அதிகரிப்பது யார்..! அதனை நிறுத்தினால் மதுக்கடைகளில் வேலை செய்பவர்கள் வேலை இழப்பார்களே - அவர்களுக்கு யார் வேலை தருவது...! அந்த 5 வருட கிராம தன்னிறைவு பணியில் ஈடுபடுத்தினால் செய்வார்களா..!! இதில் புள்ளிவிவர விஷயம் வேறு - போன பொங்கலுக்கு 6 கோடி ரூபாய் விற்பனை.. புதுவருட விற்பனையை விட அதிகம்.. அட அட.. என்ன ஒரு சந்தோஷம்...! சினிமாவில் மது அருந்துதலும் புகைபிடித்தலும்தான் மக்களை கெடுக்கிறது என யோசிக்கும் புத்திசாலிகள் - கொஞ்சமாவது தரையில் நின்று யோச்சித்தல் நலம். அரசின் பொருளாதாரத்தில் ஒரு பங்கு மையமாக கொண்ட புகையிலை மற்றும் மதுவை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க முற்படுவது - நல்ல விஷயமானாலும் அதற்கான வழிமுறைகள் கண்துடைப்பாகவே இருக்கின்றன.

நினைவு மறந்த மனிதர்கள்

நினைவு மறந்த மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா.. பெரும்பாலும் கோவில்கலிலும் சில சாலைஓரங்களிலும் மற்றும் பெறும்பாலான நகர பேருந்து நிலையங்களிலும் கவனிக்கலாம். காலத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு புலப்படாமலேயே இருக்கிறது - மறந்து இருக்கலாம் அல்லது மறக்கவைக்கபட்டு இருக்கலாம். குடும்பத்தால் விரட்டபட்ட ஜுவன்கள்தான் பெரும்பாலும். பெண்களின் நிலை இன்னும் கொடுமை - அவர்களையும் கர்பமாக்கும் வக்கிரகாரர்களை என்ன சொல்ல... சிலரை நான் ஓரளவு கவனித்து இருக்கிறேன். வயதானவர்கள் பெரும்பாலும் ஏதேனும் முனுமுனுத்து கொண்டே இருப்பார்கள் - சில ஓயாமல் பேசுவார்கள். சிலர் அமைதியாக உட்கார்ந்து வெறித்து பார்த்து கொண்டு இருப்பார்கள். ஏதேனும் பொருக்கி கையில் உள்ள பையில் சேமித்து கொண்டே இருப்பார்கள் சிலர். சிலருக்கு காசு கொடுத்தால் புரியாது - பசி மட்டும்தான் பிரதானம். எது சாப்பிட கொடுத்தாலும் கூட உள்ள ஒரு நாய்க்கும் பங்கு கொடுக்கும் பெரிவர் ஒருவர் இருந்தார் - கோவை 10ஆம் நம்பர் வீதியில் - அவரையும் மனநலம் இல்லாதவர் என்றுதான் சொல்வார்கள். நிர்வாணம் கூட சிலருக்கு சகஜமாக இருக்கும். இவர்கள் நிச்சயம் ஆரம்ப காலத்தில் நன்றாக இருந்திருப்பார்கள். நல்ல வாழ்க்கையில் கூட இருந்திருக்கலாம். எந்த புள்ளில் வாழ்க்கை திசை மாறுகிறது என்பது கேள்வி. தனிமைபடுத்தபடுதல் என்பது பெரும் கொடுமை. சக மனிதர்களிடமிருந்து மட்டுமில்லாமல் - தன் வாழ்க்கையில் இருந்தே தனிமைபடுத்தபடுவது நினைக்கவும் முடியாதது. நினைவு மறந்தவர் எல்லாரும் மனநலம் இல்லாதவர் கிடையாது - சிலர் அப்படி மாறுவதுண்டு. நினைவுகள் மறந்து போனாலும் - புதிய வாழ்வின் விஷயங்களை ஆரோக்கியமாக கிரகிக்க முடிந்தவர் - பெரும் நலம் கொண்டவர். நினைவு மறந்த ஒருவருக்கு மறுபடி நினைவு திரும்பினால் அவரை குடும்பம் ஏற்று கொள்கிறது. ஒரு மனநலம் குன்றியவரை அப்படி ஏற்று கொள்ள தயங்குகிறது - ஒரு வகையாக பயம் காரணமாக இருக்கிறது. நினைவுகள் இல்லாத மனிதர்களை நம்மை சுற்றி கொண்டுள்ளோம்.. ஏதேனும் ஒரு நிலையில்லாத புள்ளியில் அவர்களின் வாழ்க்கை மையம் கொண்டலைகிறது. கடந்து போகும் எல்லா மனிதர்களிடமும் மனபிழறு உண்டு - அதன் சராசரி நிலைமட்டுமே நம்மை கோட்டின் இப்பகுதியில் வைத்திருக்கிறது.

இயற்கை விவசாயம்

பாலேக்கரின் இயற்கை விவசாயம் பற்றி கோவையில் கருத்தரங்கு மற்றும் பயிற்சி என்பது நிச்சயம் நல்ல விஷயம். நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயிகளின் கருத்துகள் நெடுங்காலமாக கவனிக்கபடாமல் இருக்கின்றன. உணவு முறை பற்றிய ஆரோக்கிய சிந்தனைகளில் எல்லாம் இயற்கை விவசாயமும் கலந்து கொள்வது நல்லது. விவசாயம் அது சார்ந்த மற்ற துறைகளையும் மேம்படுத்தும். வேலை வாய்ப்பும் நல்ல சந்தையும் பெருகும். இன்னும் இதனை பற்றிய சிந்தனைகளை பொதுமக்களிடையே தர வேண்டும். அரசாங்கம் கருத்துகளுக்கும் சாதனைகளுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சினிமாவுக்கும் கிரிகெட்டுக்கும் செலவு செய்வதை விட ஆரோக்கியமான உணவை பயிரிட என்ன செய்யலாம் என யோசிக்கலாம். தனி மனித சிந்தனையும் முயற்சியும் என்றும் வரவேற்புடையவை. ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் - ஒரு முதல் தர உலக தேவையாக மாறும் நாள் தொலைவில் இல்லை. முயற்சி எடுக்கும் சிறுதுளி அமைப்பிற்க்கும் - உபயோகபடுத்தபோகும் விவசாய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

5 வருட திட்டம்

5 வருடங்களில் கிட்டதட்ட எல்லா கிராமங்களும் தன்னிறைவு பெற்றுவிடும் என தமிழக உள்துறை சொல்கிறது. இதன் திட்டத்தை பற்றி அடிப்படை அறிவுடன் யோசித்தால் - முதலில் எல்லா கிராமங்களும் அருகில் உள்ள சிறு நகரங்களுடன் பாதைவழி இணைக்கபட வேண்டும். இன்னும் சாலை விஷயமே தெரியாத கிராமங்கள் சில நூறு உண்டு. சாலை போக்குவரத்து வசதிகள் வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் - விளை பொருட்களை விற்க சந்தைகள் அதிகமாக வேண்டும் - மருத்துவ வசதிகள் வேண்டும். ஆரம்ப கல்வி மற்றும் வாழ்க்கை கல்வி கிடைக்க செய்ய வேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிகள் வேண்டும். இதற்கெல்லாம் தெளிவான திட்டம் வேண்டும் - செயல்படுத்த ஊழல் இல்லாத அதிகாரிகளும் ஆட்களும் வேண்டும் - ஓவ்வொரு 6 மாதமும் திட்ட மறு-மதிப்பீடு மற்றும் பணிகள் எத்துனை சதவீதம் நிறைவேறி உள்ளது எனவும் பார்க்கவேண்டும். அவற்றை பொது மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் - நாளிதழ்களும் இணையமும் இருக்கிறதே. இயற்கை விவசாயம் மற்றும் வல்லுனர்களின் யோசனைகளை கேட்கலாம். திட்டமிடபட்ட செலவு, ஆன செலவு, மிச்ச தொகை, மனித முயற்சி திட்டம் மற்றும் விவரங்கள் திட்டத்தின் நிலையை பற்றிய தகவல்கள் கொடுக்கும். இன்னும் நிறைய இருக்கிறது - இது ஏதும் செய்யாமல் கலர் டீவி இருக்கும் ஓட்டு வங்கி எல்லாம் தன்னிறைவு பெற்றவை என்ற கருத்தோடு தமிழக உள்துறை இருக்குமாயின் - முன்னேற்றம் என்பது வெறும் கனவுதான்.

ஆணுறையும் ஜெயில் கைதிகளும்

அரசாங்கம் ஜெயில் கைதிகளுக்கு ஆணுறை வழங்க இருப்பதாகவும் அது நிச்சயம் ஓரின சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக இல்லை எனவும் அது எயிட்ஸ் பாதுகாப்புக்குதான் எனவும் - சுத்தமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஒரு வகையில் இது நிச்சயம் பாராட்டபட வேண்டிய விஷயம். உடலுறவு நிச்சயம் இருக்கும் எனவும் - அது ஓரின சேர்க்கையாக தான் இருக்கும் எனவும் (அல்லது இதற்க்காவும் அரசாங்கம் ஏதாவது செய்யுமா..) அரசாங்கம் ஒத்து கொள்கிறது - ஆனாலும் ஆவணமாக இல்லை. சுகாதாரமில்லாத உறவு நோய்பரப்பும் அதனை தடுக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம். மற்றபடி ஆண்கள் சிறை மட்டுமல்லாது பெண்கள் சிறையும் உண்டு. அங்கும் மனிதர்கள் உண்டு. அங்கும் உணர்வுகள் உண்டு - என்ன செய்யலாம் என பேச யாரும் கிடையாது (பெண் ஓரின சேர்க்கைக்கு காப்பு உறை தேவையில்லை என்பது உண்மை எனினும்)- (இன்னும் சில பேரின் கருத்து - சிறையில் கிடைக்காத வசதிகள் கிடையாது - அரசாங்கம் கோழிகறி கூட கொடுகிறது - இருக்கலாம் - தண்டனை என்பது எல்லா மனித உரிமைகளையும் பறிப்பது அல்ல - தனிமைபடுத்தி குற்றத்தை புரிந்து கொண்டு மனதை திருத்துவது). பொதுவாக ஜெயிலில் ஆண் ஓரின சேர்க்கை பற்றி (அரை மனதாக) மனித உரிமை பேசப்படுகிறது - இந்த வகையில் ஓரின சேர்க்கை குற்றம் அல்ல எனவும் - சுகாதாரமாக இருப்பது நல்லது எனவும் அரசாங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. எனினும் பெண் ஓரின சேர்க்கை இன்னமும் ஒரு கவர்ச்சி விஷயமாக இருக்கிறது - அதன் உணர்வுகள் அல்லது தேவைகள் புரிய எந்த அமைப்பும் முழுமையாக கிடையாது - எல்லாரும் முனுமுனுக்கிறார்கள் தவிர செயல்பட யாரும் இல்லை - தனிமனிதர்கள் ஏதும் செய்ய முடியாது. சிறை பெண்களுக்கு உணர்வுகளே இருக்காது என நினைக்கிறார்களா, அல்லது சுகாதாரம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா - அல்லது இந்தியாவில் பெண் ஓரின சேர்க்கையே எல்லாம் கிடையாது என்ற கலாச்சார குழப்பமா..!!! பெண்களுக்கான அடிப்படை பாலியல் சுகாதாரம் பற்றி சொல்லிதர யார் உண்டு. யார் கேட்பார்கள்..!!!

கலர் பனியன் நினைவுகள்

சமீபத்தில் ஒருமுறை ஒரு சாலை சந்திப்பில் சில மாணவர்கள் பள்ளி பெயர் கொண்ட கலர் பனியன்களோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் என் பள்ளி நாட்களை நினைத்து பார்த்தேன். கலர் பனியன் கொடுத்து அணி பிரிக்கபட்டது மணி மேல்நிலைபள்ளியில் மட்டும்தான். அதற்க்கு முன்னெல்லாம் வெள்ளை சட்டை காக்கி டவுசரோடு புளுதி பறக்க விளையாட்டும் கொஞ்சம் மீறி போனால் சண்டையும் இருக்கும். ஆறாம் வகுப்பில் மணி மேல்நிலைபள்ளி. நான் கண்ணாடி அணிய ஆரம்பித்திருந்த காலம். சேர, சோழ, பாண்டிய, பல்லவ என 4 அணிகள் உண்டு - முறையே சிவப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை பனியன்கள் (போன முறை வீடு மாற்றும்போது ஒரு பனியன் திரும்ப கிடைத்தது). கொஞ்சம் நோஞ்சானாகவும் உயரமாகவும் கண்ணாடி அணிந்தவனாகவும் இருப்பதால் பல்லவா டீமில் ஒப்புக்கு சப்பாணியாக மட்டுமே வாழ்க்கை நகர்ந்தது. விளையாட போகாமல் இருந்ததால் மரத்தடியில் நின்று விளையாட்டு ஆசிரியர்கள் சொல்வதை கவனிக்கவும் நேரம் கிடைக்கும். கபடி, கோ-கோ, வாலிபால் மற்றும் பேஸ்பால் இருந்தது - சில விளையாட்டு நுணுக்கங்களை அவர்கள் சொல்வதில் இருந்து கவனித்து கொண்டு - ஏகலைவன் பாணியில் கற்று கொண்டது போல வட்டாரங்களில் எடுத்து விட உபயோகமாக இருந்தது. குறிப்பாக எதிர்பால் அணியிடம் இருந்து. அதிலும் சில கண்ணாடி தேவதைகள் உண்டு. முதலில் அதிகம் கவனிப்பு இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து நட்பு கொண்டு விட முடிந்தது. அப்புறம் அதன் கலர் விளைவுகள் எல்லாம் இருந்தன... எல்லாம் 2 வருஷம்தான். மறுபடி வேறு பள்ளி - வெள்ளை சட்டை (அழுக்காகும் என கருதினால் உள் பனியனோடு போராடலாம்) - காக்கிடிராயர் என வாழ்க்கை மாறிவிட்டது. அது எல்லாம் விளையாடுபவர்களுக்குதானே. நாம் தான் மரத்தடி சக்கரவர்த்தியாயிற்றே. ஆனால் என்ன - அது வெறும் ஆண்கள் பள்ளி. பின்னர் கல்பாக்கம் வந்த பிறகு - அது வேறுகதை. வேறு தோழர்கள், வேறு மரத்தடிகள் - வேறு வேறு அனுபவங்கள். இன்னும் கலர்பனியன்கள் எல்லாம் நினைவுகளையும் கொடுத்து கொண்டே இருக்கின்றன. நான் என் சிறு வயது பொம்மைகளுக்கு கூட பெயர் வைக்கும் பழக்கம் உள்ளவன். அவைகளுடன் எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு - அவைகளை வைத்து நான் நிறைய கதைகளை டைரக்ட் செய்து இருக்கிறேன். அந்த பொம்மைகள், இந்த கலர் பனியன்கள், வாழ்க்கை கல்வி வகுப்பறையில் செய்த ஜிகினா பந்து, பிலாஸ்டிக் சட்டத்தில் நெய்யபட்ட புறாக்கள் (முழுக்க முடிக்கவில்லை) - இவை எல்லாவற்றுடன் சில நோட்டு புத்தக காதிதங்கள் - சிலரின் கை எழுத்துகள் அதில் இருக்கும் (எல்லாம் அவள்கள்தான்..)... இன்று பார்க்கும் போது கொஞ்சம் நமுட்டு சிரிப்பு வந்தாலும் அவை எல்லாம் நந்தவனத்து நினைவுகள் இல்லையா.. பள்ளிகூட நினைவுகள் என்பது ஒரு சில மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ நினைத்து கொள்வது அல்ல - அது ஒரு காலத்தை நினைத்து பார்ப்பது...

கூட வரும் தோழர்கள்

நான் வசிக்கும் பகுதிக்கும் என் அலுவலகத்துக்கும் இருக்கும் தொலைவுக்கு கிட்டதட்ட 1 மணி நேரத்துக்கும் மேல் பயண நேரம். ஒரு முறை நண்பர் ஒருவர் கேட்டார் - யாரெல்லாம் கூட பயணம் செய்கிறார்கள் என - அசோகமித்திரனும், ஞானியும், சாருவும் மற்றும் பலரும் என நான் சொன்னதும் சிரித்துவிட்டார். வேறு என்ன செய்வது. தினமும் ஜன்னல் வழியாக உலகம் ரசிக்கலாம்தான் - அதுவும் ஒரே வழியாக போவதால் அலுத்து விடுகிறது. பேசி கொண்டு இருக்கலாம் - நாம் பேசுவது எல்லாம் மற்றவர்களுக்கு வெட்டி வேலையாக தோன்றுகிறது. ஹெட்போன் இசை - ஒரு அளவுக்கு மேல் காது வலிக்க ஆரம்பித்து விடுகிறது. புத்தகம் தான் - நல்ல தோழன். பயணத்தில் படிக்க கூடாது என கண் டாக்டர்கள் அறிவுறுத்தினாலும் - அளவாக படிப்பது தவறில்லை என்பேன். தினமும் 30 நிமிடங்களாவது படிக்கலாம் - மிச்ச நேரம் கண் மூடி படித்ததை கொஞ்சம் யோசிக்கலாம். பெரும்பாலும் நிறைய புத்தகங்களை வாங்கி அலமாரியில் அடுக்கி வைக்கும் பழக்கம் இன்றெல்லாம் நிறைய பேருக்கு இருக்கிறது. எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்கள் என கேட்க வேண்டும் சில பேரையாவது. உறவுகளை பலப்படுத்தும் புத்தகங்கள் இன்று பெருகி விட்டன. சில புத்தகங்கள் சின்ன சின்ன விஷயங்களை சுவரஸ்யமாக சொல்லி கொடுக்கின்றன. தத்துவங்களும் வாழ்க்கை முறையும் வேறு வகையான வடிவில் அறிமுகபடுத்தபட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றன. இயல்பாக வாழ்வதற்க்கு கற்று கொள்ள கூட புத்தகங்கள் வருகின்றன. அதுவும் நல்லதுதான் - இல்லாவிட்டால் இருப்பவனெல்லாம் ஒரு புள்ளியில் மரத்தில் ஏறிவிடுவான்.

Tuesday, April 01, 2008

நம்மை சுற்றிய உலகம்...

சில செய்திகள் சென்ற வார பத்திரிக்கைகளில் இருந்து. இவற்றை பற்றி பின்னர் விவாதிப்போம். அடிப்படை - உறவுகளும், உணர்வுகளும், வாழ்க்கை முறை, சமூக அரசியல் மற்றும் உளவியல் வன்முறை.

செய்தி 1 - கேரளாவின் ஒரு கிராமத்தில் இருந்து அரபு நாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளபடுகிறார். அவருடைய கணவர் செய்தி அறிந்து தன் மனைவியை அனுப்பிய அதே ஏஜண்ட் மூலமாக அரபு நாடு சென்று போலீஸ் மற்றும் தூதரக உதவியுடன் தன் மனைவியை மீட்டிருக்கிறார்.


செய்தி 2 - திருமணம் நிச்சயமான பிறகு கை தொலைபேசியில் காதல் உரையாடும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் இளமைக்கால - பள்ளி அல்லது கல்லூரி காலங்களின் நட்புகள் மற்றும் உறவுகள் பற்றிய - அந்தரங்க செய்திகள் பின்னாளின் திருமண முறிவுக்கு காரணமாகிறது என்கிறது சமீபத்திய கோர்ட் ஆதாரம் ஒன்று.


செய்தி 3: 2004 ஆம் வருடம் முதல் வகுப்பில் தேறிய - இன்னும் வேலை கிடைக்காத ஒரு இளைஞர் தன்னையும் விட சுமாராக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்து இருப்பதை கண்ட விரக்தியில் குடித்துவிட்டு போதையில் ஒரு கடற்கரையோட கல்லூரியின் ஆய்வு கூடத்தை வெடிகுண்டு தயாரிக்க முற்றுகையிட அவரை போலீஸ் கைது செய்தது


செய்தி4: சென்னையில் "சேர்ந்து வாழ்தல்" கலாச்சாரம் அதிகமாகிறது - பெறும்பாலும் இளம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான தொலைபேசி உதவி நிறுவன ஊழியர்களே என்கிறது ஆய்வு. திருமணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை என்பதால் ஜோடி போல காண்பித்து கொள்ளுதல், உயர்ந்து வரும் தனி மனிதர் வீட்டு வாடகை, குடும்ப உறவுகளிடம் இருந்து தனிமை, பொருளாதார சுதந்திரம், காலதாமதமாகும் திருமணம், நெடு நேர அலுவலக வாழ்க்கை, விளையாட்டான காமம் அறியும் போக்கு, நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு, உலகமயமாக்கலின் விளைவு, கார்பரேட் உலகின் உளவியல் வன்முறைக்கான வடிகால் என காரணங்கள் அடுக்கபடுகின்றன.