அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 28, 2006

கோடை மழை..

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை. வானம் கருப்பு கட்டி கொண்டு, காலை நேரத்தில் மெல்லிய ஊதல் காற்றோடு, இரவுகளில் மெல்லிய சில் துளிகள்...இது எல்லாம் எனக்கு சென்னையில் புதுசு. கோவையில் மிக பழக்கமாக சூழ்நிலை இது. கோவையில் பொதுவான காலநிலை இதுவாக இருப்பதால் சென்னையில் சமீபத்திய இரண்டு நாட்கள் கோவையில் இருக்கும் உணர்வை தூண்டிவிட்டு இருக்கிறது.

கோடை மழை அற்புதமானது. வெயிலின் வெக்கையை சட்டென அணைத்து சீதோஷணநிலையை குளுமையாக்கும் காலதேவனின் தூதுவன் இந்த கோடை மழை. ஒரு உருது கவிதை இந்த மழையை உறவுக்கு பின்னால் உறங்கும் காதலர்களின் உடல் சூட்டோடு ஒப்பிட்டு பாடுகிறது. காமம் மெல்லிய வெயில் போல துவங்கி பின்னர் வெப்பமும் வெட்கையும் வேட்கையும் கொண்டு... பின்னர் மெல்ல குளிர்ந்து அடங்கி ஒரு நீரோடை போல உறவு நிகழ்வதாக அந்த உருது கவிதை பேசும்.

கிராமத்தில் கோடை மழை ரசிக்க படவேண்டிய ஒரு விஷயம். பொதுவாக கோடை காலத்தில் பருத்தியோ அல்லது வேர்கடலையோ பயிரிட்டு இருப்பார்கள் (என் நினைவுக்கு தெரிந்து).. அப்புறம் அம்மன் கோவிலில் விழா உண்டு. கோடை மழையை பெருசுகள் வானம் பார்த்தே சொல்லி விடுவார்கள்.. அம்மன் விழா முடியவும் மழை வரவும் சரியாக இருக்கும். கொஞ்சமாய் வானம் கறுத்தவுடன் எங்கோ தூரத்தில் இருந்து மண் வாசம் அடிக்கும். சில வீடுகளில் பொரியும் கடலையும் வருக்க ஆரம்பித்து விடுவார்கள்.. மெல்ல மேல் மண் தெருவில் பறக்கும். வயலோரல் நண்டும் எலியும் வலையை விட்டு வெளியே
வந்து மெல்ல எட்டி பார்க்கும். கொம்பு சுற்றி காற்றடிக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறீர்களா..அங்கே நேரில் பார்க்கலாம். மெல்ல மழை பெய்ய துவங்கிய உடனே தெருவில் ஜனம் கூடி மழையில் கொஞ்சம் நனையும்..அது மழைக்கு கொடுக்கும் மரியாதை..கோடை மழை அத்தகைய மரியாதைக்கு உரியது. ஓட்டு வீடுகளில் பதிக்கபட்டு இருக்கும் தகரங்களில் தண்ணீர் வழிந்தோடும். மண் வாசம் மூக்கை துளைக்கும்.. செடிகளும் வயலும் மரங்களும் மழையில் நனைவதை ஒரு கவிஞன் காதலில்
மூழ்ங்கும் காதலிக்கு ஒப்பிடுவான்.. மெல்ல இலைகளிலும் கிளைகளில் தண்ணீர் வாங்கி...தன்னுள் இறக்கி.. வேர்வரைக்கும் மழையை வரவேற்பதில் புல்லினங்கள் தவிர நிகர் ஏது. சில வீடுகளில் அதிரசம் சுடுவார்கள்.விஷ்ணுவுக்கு பூஜைகள் உண்டு. மழை முடிந்த பிறகு மழை இருக்கும் எல்லார் வீடுகளிலும்..கோவிலிலும். மதிய மழை மாலை நேரத்தை ரம்மியமாக்கி விடுவதுண்டு.. சில் காற்று.. தண்ணீர் சொட்டும் இலைகளும் கொடிகளும்...அதிரசமும் பொரியும் பகிர்ந்து கொள்ள வரும் ஊர்காரர்கள்.. மழை இந்த மனிதர்களை ஒருங்கிணைப்பதில் அற்புதமானது.. காதலை .. காமத்தை தோற்றுவிக்கும் குணம் கொண்டது மழை.. குறிப்பாக கோடை மழை.. அது தரும் சுகம் எதனோடும் ஒப்பிட முடியாதது.. என் நினைவுகளில் உள்ள எல்லா ஊர்களிலும் நான் நினைவு கூறும் காலங்கள் .. என் மழைகாலங்கள்.. என் காதல் காலங்களை போலவே.. என்றும் ஈரமானது .. அந்த மழை கால நினைவுகள்..

நட்போ காதலோ...

சென்ற வாரம் ஒரு நாள்.. தூக்கம் வராத ஒரு பின்னிரவு பொழுது.. ரேடியோ மிர்ச்சி எப்.எம் மில் ஏதோ ஒரு நிகழ்ச்சி.. ஒரு பெண் எல்லாரையும் கேள்வி கேட்டு, பதில் வாங்கி, பாட்டு போட்டு உற்சாகமிழந்து கொண்டு இருந்த நேரம்..பொதுவாக நான் பாடல்களை மட்டும் கேட்பதுண்டு.. நிகழ்ச்சியின் இடையே பேசுபவர்கள் இரவின் ரம்மியத்தை கெடுத்துவிடுவாதக நான் கருதுவதால்.. அன்று அந்த பெண் ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பினாள்.. ஒரு ஆணும் பெண்ணும் வெறும் நட்பாக மட்டுமே பழக முடியுமா.. நெருங்கிய நட்பாக.. அல்லது ஒரு மெல்லிய காதல் அவர்களிடையே இருக்குமா.. என்பது அந்த கேள்வி.. இது கொஞ்சமாய் என் நினைவுகளை தூண்டிவிட்டது என்று சொல்லலாம். மெல்ல நிதானமாக யோசித்து பார்க்கையில் என் வாழ்வில்
இதுவரை நான் கடந்து வந்த எல்லா பெண்களிடமும் வெறும் நட்பாக மட்டும் இருந்திருக்கிறேனா.. அல்லது வெகு சில பெண்களிடம் மட்டுமே இருந்ததாக நான் கருதிய மெல்லிய காதலும் அதனும் மெல்லிய காமமும் எல்லா பெண்களிடமும் இருந்ததா.. இது விஷயமாய விவாதிக்கவும் முடியாது.. நம் சமுதாயத்தில் மிக முக்கியமாக எல்லாரிடமும் முகமூடி அணியும் கட்டாயம் எல்லாருக்கும் இருக்கிறது.. எனக்கு நட்பை தவிர வேறு உணர்வுகளும் இருப்பதாக சொன்னால்...எந்த பெண்ணும் பழக யோசிப்பார்கள்.. (காரணம் தெரியாது.. ). வெறும் நட்புதான் என்றால் அது அடிமுட்டாள்தனமான வாதம் என்று நமக்கே தெரியும்..(இதுக்கும் காரணம் தெரியாது).. உடலும் உள்ளமும் ஒரு நேசித்தலில் இல்லாமல் இருக்குமானால் எதிர்பாலினம் சார்ந்த நட்பு சரிவர அமையாது என்பது என் கருத்து. இல்லாவிட்டால்..வெறும் தாண்டி போகும் போது வாழ்த்து சொல்லும் நட்பாக இருக்க வேண்டும்.. அது நட்பு அல்ல என்றும் சொல்வேன். நட்பு என்பதில் .. பக்கத்தில் உட்கார்ந்து பேச வேண்டும்...பேசுவதை கேட்க வேண்டும்.. கிண்டல் வேண்டும்..கேலி வேண்டும்.. அரவணைப்பு வேண்டும்.. அன்பு வேண்டும்.. கேள்விகள் வேண்டும்.. சில பதில்களும் வேண்டும்.. எச்சரிக்கைகள் வேண்டும்.. தூண்டுதல்கள் வேண்டும். .. நம்பிக்கைகள் வேண்டு..செல்ல பார்வைகள் வேண்டும்.. சட்டென கோபங்கள் வேண்டும் ..குளிர்ந்த குறும்புகள் வேண்டும்..விமர்ச்சனங்கள் வேண்டும்.. அமோதிப்புகள் வேண்டும் ... இது எல்லாம் இருக்க முதலில் ஒரு ஈடுபாடு வேண்டும்.. அது உடலும் உள்ளமும் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.. இது என் கருத்து.. உங்களுக்கு மாற்று கருத்துகள் இருந்தால்.. என்னுடன் விவாதியுங்கள்..

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் பிடித்தது..

ரெயின் கோட்
சோக்கர் பாலி
பனாரஸ்
வாட்டர்

நான்கும் இந்தி திரைப்படங்கள்.. DVD புண்ணியத்தில் சென்ற வாரம்
பார்த்தேன்.. அதில் முக்கியமாக ரெயின் கோட் என்ற திரைப்படம் ஒரு இரவு
தூக்கத்தை முழுக்க கெடுத்து விட்டது... உங்கள் காதலியை அவள்
திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் கழித்து பார்த்தால் நீங்கள்
எப்படி நடந்து கொள்வீர்கள்.. அவள் எப்படி நடந்து கொள்வாள்.நீங்கள்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்படி உங்கள் சூழ்நிலைகளை மறைத்து
நடிப்பீர்கள்.. பொய் சொல்வீர்கள்.. ஒருவருக்கு ஒருவர் எப்படி உதவுவீர்கள்.. உங்கள்
சூழ்நிலைகளை தாண்டு அடுத்தவரை எப்படி கவனிப்பீர்கள்..
அடுத்தவரது உறவுகளை எப்படி விசாரிப்பீர்கள்.. உங்கள் பொறாமைகள்
வெளிப்படுமா...? உங்கள் இயலாமைகள் வெளிப்படுமா..? பழிவாங்கும்
மெல்லிய நடவடிக்கைகள் இருக்குமா..? போலி பந்தாக்கள் இருக்குமா...? இந்த
திரைப்படம் சொல்லும் நிகழ்ச்சிகள் நிச்சயம் என் வாழ்விலும் ஒருநாள் நடக்கும்..
மனது கொஞ்சம் கனத்து விட்டது இந்த திரைப்படம் பார்த்த பிறகு.

மரணமும் உறவுகளும்

மனித உறவுகளை .. வாழ்வின் நியதிகளை, நெறிமுறைகளை, வாழ்க்கையின்
உறவுகளை மேம்படுத்துபவை எவை என்று எண்ணும் போது என் நினைவுகளில்
வருவது மரணங்களும் விபத்துகளும். விபத்தில் இருந்து மீண்டு
வருபவர்கள், மரணத்தின் கதவுகளில் விரல்களின் ரேகைகளை
பதித்தவர்கள் மற்ற எல்லாரையும் விட பிற மனிதர்களையும், தன்
வாழ்க்கையையும் அதிகம் நேசிக்கிறார்கள்..வாழ்வின் அர்த்தமற்ற தன்மை
அவர்களுக்கு தெரிந்து விடுகிறது..நட்பு, அன்பு, காமம் , பசி, ருசி, பயணம்
எல்லாவற்றையும் மிக அதிகமாக உணர்வுடன் நேசிக்க தொடங்கி
விடுகிறார்கள். அவர்களின் பார்வை, உலகத்தை பார்க்கும் நோக்கு எல்லாம் மாறி
விடுகிறது..சிலர் சன்னியாசமும் பூணுவதுண்டு எனினும் அதுவும் உலகத்தை
பார்க்கும் முறையை மாற்றும் கோணம்தான். விபத்துகளும் இப்படிதான். ஒரு
முறை விபத்தில் சிக்கி..மரணத்தின் கோரத்தை..இழப்பை பார்க்க
நேரிடுபவர்கள்..பிழைத்து வந்ததும் வாழ்க்கையை நேசித்து வாழ
தொடங்கி விடுவதுண்டு. பழைய கோபங்கள்.. குரோதங்கள் இன்றி..
வாழ்க்கையை நேசிப்பதற்ற்கு தக்கதாக மாற்றிவிடுவது எது...?
பயம்..!!! சில நேரங்களில் ஆம்.. பயம்.. வாழ்வை நேசிக்க கற்று கொடுத்து
விடுகிறது. உறவுகளை நேசிக்கவும் மதிக்கவும் பயம் கற்று
கொடுக்கிறது.. அது மரணம் பற்றிய பயமாக இருந்தால் மட்டுமே..சில
வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு கதை.. தன் தந்தையுடன் நிறைய
கருத்து வேறுபாடுகளில் இருக்கும் மகன், தன் நண்பனின் தந்தை இறந்த
துக்க காரியத்துக்கு போய்வந்ததும்,...முற்றிலும் மாறி..தன் தந்தையை
நேசிக்க தொடங்குகிறான்..அவர் வாதங்களின் கோணத்தை உணர்கிறான்.
மரணம் எது வழியாகவும் வரலாம்..விபத்தோ.. அல்லது
இயற்க்கையாகவோ.. ஆனால் எந்த மரணமும் .. சார்ந்தவர்களின் உள்ளங்களில்
மாற்றங்களை உருவாக்குகிறது என்பது நிஜம். மரணபயம்.. ஒரு தனி
மனிதனின் வாழ்வின் போக்கையே மாற்றகூடியது. இதில் தத்துவங்களுக்கு
இடமில்லை.. பகவத்கீதையும் மற்றும் பல புத்தகங்களும் மரணம்
பற்றி சொல்லியிருந்தாலும்.. யாராலும் மாற்ற முடியாத மனித
மனங்களை..அவற்றின் மன அடைப்புகளை நீக்கும் சக்தி மரணத்துக்கு
உள்ளதாக கருதுகிறேன்.

இரவு பயணங்கள்..

இரவில் பயணங்கள் ரம்மியமானவை. அதுவும் இரவு பேருந்து பயணங்கள்..தொடர்ச்சியான பயணமாக இல்லாமல் சிறு இடைவெளிகளை கொண்ட பயணங்களை நான் அதிகம் விரும்புவதுண்டு. பின் இரவின் மடியில் மெல்லிய ரேடியோ இசையோடு, மங்கிய குழல் விளக்குகள் கவிய, புகை படிந்து காய்ந்து கொண்டு இருக்கும் உணவு விடுதிகள்..தூக்க கலக்கத்தோடு வியாபாரத்தில் இருக்கும் மனிதர்கள்..அது ஒரு வேறு வகையான உலகம். பயணிகளை விட நான் ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் அவர்களோடு பயணத்தில் உள்ள மனிதர்களிடன் உள்ள உறவுகளை கவனிப்பதில் ஆர்வம் கொண்டதுண்டு. பல ஓட்டுனர்களுக்கு நடத்துனர்களுக்கு உணவு விடுதி வேலையாட்களுக்கும் விசித்திரமான நட்பு இருப்பதுண்டு. நீங்கள் ஓட்டுனருடனோ, நடத்டுனருடனோ நெருக்கமாக இருந்தால் உங்களுக்கும் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும். இரவு பேருந்துகளின் பாடல்கள் சுகமானவை.. அப்படிபட்ட தொகுப்புகளை அவர்களே பெரும்பாலும் உருவாக்குகிறார்கள். இரவு கவிந்தபிறகு பயணம் சார்ந்த உலகம் அலாதியானது. அது பகல் பயணத்தில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இரவு உணவு விடுதிகள்..இரவு தங்கும் விடுதிகள்..பேருந்து நிலையங்கள்.. மனிதர்கள்.. நடு இரவில் தேநீர்.. பாடல்கள்... நெடுந்தொலைவு பேருந்துகளை போலவே, குறைந்த தூர பயணங்களும் இரவில் மேற்கொண்டு உள்ளேன். சில பயணங்களில் இயற்கையும் சேர்ந்து கொள்ளும்.. முக்கியமாக மழை. மழை நேர இரவு பயணங்கள் பயணங்களின் போக்கையே மாற்றி விடுவதுண்டு. என் பயணங்களில் சில வித்தியாசமான பயணிகளை பார்த்திருக்கிறேன்..ஆண்கள் பெரும்பாலும் நிறைய பேசும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்..அரசியல் பொருளாதாரம் உறவுகள்..எல்லாம் பேசுவார்கள்.. நான் ரசித்து வந்து இருக்கிறேன்.. குறிப்பாக பெண்கள்.. அந்த பயணத்துக்கு பிறகு அவர்களை மறுபடி சந்தித்து இருப்பது அபூர்வம்..எனினும் சில பெண்கள் மனதை விட்டு அகலாதவர்கள்.. அந்த கண்கள்.. அந்த புன்னகை.. சில பார்வைகள்.. என்றும் மறக்க முடியாதவை.. இன்றும் என் பயணத்தில் இடம் கொண்ட எந்த ஊரை தாண்டி போனாலும்.. என் கண்கள் என்னையும் அறியாமல் தேடுகின்றன..மனம் கொண்ட இடங்களை போலவே.. மனம் கொண்ட மனிதர்களையும்.. இன்னும் சொல்ல நிறைய உண்டு.. வரும் காலங்களில் பகிர்ந்து கொள்வோம்..

Sunday, May 14, 2006

தோற்றமும் மறைவும்

தினத்தாள்களில் ஒவ்வொரு நாளும் மரண அறிவிப்புகள் வெளியாகின்றன..எல்லா மருத்துவங்களுக்கும் எல்லா நம்பிக்கைகளுக்கும் தாண்டி மரணம் தன் எல்லையை விஸ்தரித்து கொண்டே இருக்கிறது...எல்லா வீடுகளிலும் மரணம் தன் ரணங்களை பதித்து இருக்கிறது. வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளை போல மரணத்தையும் எதிர்நோக்க எல்லா வீடுகளிலும் மனிதர்கள் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.. பெரும்பாலான பத்திரிக்கை விளம்பரங்கள் கடமைக்காக கொடுக்க படுகின்றன.. குடும்பத்தார்களை விட மேனேஜர்கள்தான் விளம்பரங்களை கொடுக்கிறார்கள். விளம்பரத்தில் யார் பெயரெல்லாம் வரவேண்டும் என்பது பற்றி சில நேரம் வாக்குவாதம் கூட வருவதுண்டு. மரணமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர் மட்டுமே மவுனம் காப்பதுண்டு.. மற்றவர்கள் பிறரை ஜெயிக்க முயற்சித்து கொண்டு இருப்பார்கள். மரணமடைந்தவர் வயது கூடியவரானால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆழ்ந்த மவுனத்தில் இருப்பதை கவனித்து இருக்கிறேன். அது மரணத்தின் வலி மட்டும் அல்ல.. நாளை தன்னையும் அங்கே அந்த சூழலில் பொருத்தி பார்க்கும் மன உளைச்சல்... பத்திரிக்கை விளம்பரங்களில் உள்ள மனிதர்களின் முகங்களை உற்று பார்த்திருக்கிறேன்...இவர்கள் எங்கே எப்படி பிறந்திருப்பார்கள்..? எங்கே படித்து வளர்ந்து வாழ்க்கையின் அனுபவங்களை பெற்றிருப்பார்கள்..? இவர்களின் காதல்கள், தொழில், வெற்றிகள் தோல்விகள், நட்பு, பயணங்கள்...யாரும் இவர்களை, இவர்களின் வாழ்க்கையை பதிவு செய்வார்களோ.. தோற்றமும் மறைவும் ஒன்றை ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கின்ற வாழ்க்கை சூழலில்...யாரை பற்றியும் எந்த பதிவும் இல்லாத வாழ்க்கை முறையில்..எத்தனை கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் கூத்துகளும்.. என் வாழ்வில் சில மனிதர்களையாவது அவர்களின் வாழ்க்கையை முடிந்தவரை பதிவு செய்ய சில நேரம் நான் எண்ணுவதுண்டு. முடிந்த வரை நெருங்கிய உறவுகளையாவது... இன்றெல்லாம் யாரை பற்றியும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பேசவும் நேரமின்று அலைகிறோம்.எல்லா மனித வாழ்க்கையும் ஏதோ ஒரு வகையில் நமக்கு கிடைக்கும் பாடங்கள்தான்.. இந்த பதிவுகள் இலக்கியமாகாவிட்டாலும் யாரோ சிலருக்கு உலகம் பற்றி சொல்லும்.. இல்லாவிட்டால் தோற்றமும் மறைவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்... குழந்தைகள் இல்லாத கிராமங்களை கடக்கும் கூட்ஸ் ரயில் வண்டிகளை போல..

குழந்தையும் கொஞ்சம் தெய்வமும்...

என் அலுவகத்துக்கு அருகில் இருக்கும் தேநீர்கடையில் சில மாலை நேரங்களில் நின்று கொண்டு இருக்கும் போது வயதான பெண்மணிகள் சிலரை காண்பதுண்டு... பெரும்பாலும் உயர் மத்தியதர வகுப்பை சார்ந்தவர்கள்.. மெதுவாக தங்களுக்கு பேசி கொண்டு நடந்து செல்லும் சுய பயணிகள்.. சில நேரங்களில் 2 அல்லது 3 பெண்கள் குழுவாக பேசிகொண்டு நடந்து செல்வதுண்டு. தோளில் தொங்கும் பையுடன் பள்ளிகூட ரகசியங்களை பேசி சிரித்து கொண்டு ஓடும் சின்ன குழந்தைகளில் குதூகலங்களை அந்த குழு அரட்டையில் கவனித்து இருக்கிறேன். சில நேரங்களில் ஒரு பெண்ணை மற்றவர்கள் ஏதோ சமாதானம் செய்து கொண்டு இருப்பார்கள். சில பெண்கள் கையில் குழந்தையுடன் வருவதுண்டு... மற்ற வயதான பெண்களுக்கு அந்த குழந்தையுடன் இருக்கும் வினாடிகள் சுக காலங்கள்.. குழந்தைக்கு பேசதெரியாது.. சைகையும் சத்தமுமாய் அது பேரிளம் குழந்தைகளுடன் கதை பேசி கொண்டு இருக்கும்... சில பெண்கள் கையில் இருக்கும் குழந்தையுடன் வெகு சுவரஸ்யமாக பேசி கொண்டு நடப்பதையும் பார்க்கிறேன்.. குழந்தை வாயில் விரலும் பொருந்தாத அமைதியுடன் பெண்ணின் பேச்சை கவனித்து கொண்டு இருக்கும்... பொதுவில் பெண்கள் அவர்களில் பேச்சை யாராவது கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வயதான பெண்களுக்கு அது நிறைய உண்டு. பேச்சை கவனித்தல் ஒரு வகை அங்கீகாரம்..ஒரு வகை விருந்தோம்பல்..ஒரு வகை நெருக்கத்தை அது உண்டு செய்கிறது. பிராத்தனைகளும் அது போலவே.. ஆண்களின் பிராத்தனைகளை விட பெண்களின் பிராத்தனைகளுக்கு வலுவுண்டு.. அது மனோரீதியான எண்ண அலைகளை பெரும்பான்மைபடுத்துகிறது. கடவுளும் குழந்தையும் சில நேரங்களில் இந்த பெண்களுக்கு ஒரே அலைவரியில் ஒன்று படுகிறார்கள். காற்றில் இலைகள் உதிர்ந்து கொண்டு இருந்தாலும் ... புதிய இலைகள் சுவாசிக்க மறப்பதில்லை..

பயணங்களை பற்றிய நினைவுகள் ...

பயணங்களை பற்றிய நினைவுகள் எல்லாம் அவற்றோடு சம்பந்தபட்ட மனிதர்களை கொண்டே அமைகிறது என்று எனக்கு ஒரு கருத்து உண்டு. பெரும்பாலான பயணங்களில் நான் சந்தித்த சில மனிதர்கள் ஏதோ ஒரு விதத்தில் அந்த பயணத்தை நெடு நாட்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருப்பார்கள். கோவைக்கு அருகே உள்ளது வெள்ளியங்கிரி மலை. சித்திரை மாதம் அங்கே காலம் காலமாக ஒரு பயணம் உண்டு. ஒருமுறை நானும் போவதற்க்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் பயணப்பட்டோம். மலையடிவாரத்தில் ஒவ்வொரு நாளும் கட்டளைதாரரின் பெயரில் அன்னதானம் உண்டு. அது மொத்தம் 7 மலைகளின் தொடர்ச்சி. சரியான பாதை முதல் 3 அல்லது 4 மலைவரைதான். இரவு நேரம் என்பதால் டார்ச் விளக்குகளின் உதவி மட்டுமே. சிலர் கொண்டு வந்திருந்த ரேடியோ பெட்டிகளில் மெல்லிய சினிமா சங்கீதங்கள் கசிய..வியர்க்க வியர்க்க மலை ஏறினோம். அது ஒரு அற்புதமான அனுபவம். நுரையீரல்கள் சுவாசத்து சுவாசித்து ஓய்வுக்கு தூண்டும்..கால்கள் மெல்ல நடுங்கும்..வியர்வையில் நனைந்த உடல் மெல்ல சித்திரைமாத இரவு பனியில் வெட வெடக்கும். முதலில் கொஞ்சம் ஏதாவது பேசி கொண்டு நடப்பவர்களும் பின்னர் மவுனமாக ஏறுவார்கள். எல்லா மனிதர்களும் சொல்லி வைத்தது போல மலையின் சுபாவம் பற்றியும், மலை வழி பாதையின் சிரமங்கள் பற்றியும், அடுத்த மலை கொஞ்சம் சுலபம் என்றும் பேசி நடப்பார்கள். கொஞ்சமாய் ஓய்வு எடுத்தால் மொத்தமாய் படுத்துவிடுவார்கள் என்பதால்..சில வினாடிகளுக்கு மேல் உட்கார்ந்து ஓய்வு எடுக்க யாரும் விடமாட்டார்கள்.. 5 மலைகளுக்கு பிறகு சுனை ஒன்று உண்டு. அங்கே குளிக்கலாம்..நான் தண்ணீரை தெளித்து கொண்டு வந்துவிட்டேன்.. அப்புறம் ஒரு இடத்தில் அடுப்பு வைத்து சூடான கடுங்காப்பியும், பாலில்லாத தேநீரும், சுண்டலும் தந்தார்கள்.. அந்த நேரத்தில் அது தேவாமிர்ந்தம்.விடியல் 4 மணிக்கு 7அவது மலையில் இரண்டு பாறைகளுக்கு நடுவே இருக்கும் சிவ லிங்கத்தில் சூரியனின் முதல் கதிர்கள் விழும் நேரத்தில் தரிசனம் கிடைத்தது.. அது அந்த பயணத்தின் கடுமையை முற்றிலும் போக்கும் கணம். சில நண்பர்கள் தாமதமாக வந்து சேர்ந்தார்கள்.. திரும்பி வரும்போது வெளிச்சத்தில் மலை இறங்கினோம். அந்த மலையில் வசிக்கும் மக்கள்.. மாதம் ஒருமுறை டவுனுக்கு வந்து சில அத்தியாவசிய சாமானங்களையும் வாங்கி கொண்டு கொஞ்சம் சினிமாவும் பார்த்து கொண்டு மறுபடியும் மலை வாழ்க்கைக்கு வந்து விடுகிறார்கள். மலை அவர்களுக்கு எல்லாம் கொடுக்கிறது. கீழே சிறுவாணி அணை..மூலிகைகளும் காட்டு மரங்களும் கொண்ட அற்புதமான மலை.. சீதை வனம் என்று ஒரு இடம்.. அற்புதமான பூக்கள்.. மக்கள் நடமாட்டம் வருடத்தில் சில மாதங்கள்கள் தான். மற்றபடி அது சொர்க்க பூமி.. கீழே மலை அடிவாரத்தில் கோவில் ஒன்று இருக்கிறது.. வெள்ளியங்கிரி நாதர் கோவில். இந்த பயணம் முழுவதும் அனுபவிக்க துணையிருந்தது கூட இருந்த நண்பர்கள் மட்டுமே.. இவர்களில் யாரை பார்க்கும் போதும் அந்த பயணம் நினைவில் நிற்கிறது. நெடுநாட்களுக்கு நான் 7 மலைகளும் தாண்டி..ஒரு கடுமையான பயணத்தை முடித்து விட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. சென்ற வாரம் மறுபடியும் நண்பர்கள் அழைத்திருந்தார்கள்.. வேலை பளு.. போக முடியவில்லை.. எனினும் அந்த மலைபகுதிக்கு இன்னும் ஒருமுறை நிச்சயம் போகவேண்டும்...அப்படி ஒரு சுத்தமான இயற்கை சூழல் எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை..

நர்த்தகி....

எனக்கு அந்த பெண் அறிமுகமானது ஒரு திரைப்பட விழாவின் புத்தக பகுதியில். ஒரு நர்த்தகி என்று அறிமுகபடுத்தபட்டாள். மிக இயல்பாக நட்பு உருவானது. மிக அழகான நேர்த்தியான உடலமைப்பு..நளினம்....இருவருக்கும் பொதுவான பிடித்த நிறைய விஷயங்கள் இருந்தன.. பின்னர் இரவு கிளம்பும் போது தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிடும்படி கேட்டாள். என்னிடம் எந்த ஊர்தியும் கிடையாது..சரியாக எந்த ஊர்தியும் ஓட்டவும் தெரியாது.. பின்னர் ஆட்டோவில் வந்தோம்.. இருவருக்கும் பொதுவான தோழியும் உடன் இருந்ததால் பேச்சும் கருத்தும் சகஜமாகவே இருந்தது. பிரியும் போது கை கொடுத்து பிரிந்தோம்.. பின்னர் சில நாட்கள் தொடர்ப்பு இல்லை. பின்னர் ஒருமுறை பொதுவான தோழியை பார்க்க நேர்ந்தது..பேச்சினூடே அவள் சொன்ன ஒரு விஷயம் கொஞ்சம் வியப்பையும் நிறையவே பெருமையையும் கொடுத்தது.. எங்கள் நர்த்தகி ஒரு மூன்றாம் பாலினம் என்ற செய்திதான் அது. தன்னை பெண்ணாக உருவகபடுத்தி கொண்டுள்ளதாக சொன்னாள்..உடலாலும் மனதாலும்.. பின்னர் ஒருமுறை அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.. தன்னை ஒரு பெண்ணாகவே அறிமுகபடுத்திகொண்டு அவளும் எங்கள் பொது தோழியும் தங்கியுள்ள இடத்தை சொன்னார்கள்...சில நாட்கள் கடற்கரையில் சந்திப்பதுண்டு.. நல்ல உறவும் நட்பு எங்களிடையே உள்ளதை நாங்கள் இயல்பாகவே உணர்கிறோம்.. நான் என் குறும்பட ஆர்வங்கள் பற்றி பேசினேன்.. அவள் சார்ந்துள்ள வருமானம்சாராத ஒரு அமைப்பை அறிமுக படுத்தினாள்.. சில நாட்கள் பல விஷயங்களை நெடுநேரம் பேசுவோம்.. இசை..நாடகம்...சினிமா..புத்தகங்கள்.. பயணங்கள்.. அவளை அவளாகவே நாங்கள் ஏற்று கொண்டு உள்ளோம்.. என்னையும் என் தோழியையும் அவள் ஏற்று கொண்டதை போலவே.. இந்த நட்பும் அது சார்ந்த விஷயங்களும் மிக அற்புதமாக உள்ளன.. இது போன்ற ஒரு தோழமையின் கால கட்டங்கள் இன்னும் எத்தனை காலம் வரை என்று சொல்ல முடியாது.. எனினும் இது ஒரு அற்புதமான தோழமையாக கருதுகிறேன்..

Sunday, May 07, 2006

தீராநதி கவர்ந்தவை

ரமேஷ் - பிரேமின் 'கூத்தாண்டவன்' சிறுகதை... - தற்கொலைக்கு முயலும் ஒரு ஆணின் வாழ்க்கையும், அவன் நண்பனுடன் அவன் கொள்ளும் உறவுகளும், அவன் தாயின் கற்பினை கொள்ளை கொள்ளும் சந்தர்ப்பவாத சூழல்களும், கூத்தாண்டவர் கோவிலுக்கு வேஷம் கட்டி கொண்டு போகும் அவன் தந்தையின் கதையும்.. தன்னை ஒரு இருபாலின உறவு சேர்க்கையாளனாக அவன் உணர்வதும், சமூகத்துக்கு அவன் பார்வையும்...மெல்லிய தான் சார்ந்த உறவுகளின் மேல் கொள்ளும் பொறாமையும் என கதை ஒரு தற்கொலைக்கு உண்டான சூழல்களை சொல்லி போகிறது... தமிழில் இது போன்ற கதைகள் அதிகம் கிடையாது என்று நினைக்கிறேன்.. ரமேஷ் - பிரேமின் சில கதைகளை படித்து இருக்கிறேன்... அதீதமான கற்பனை சவாரிகளும் காமமும் கலந்தவை அவர்...மனித மனங்களின் இருளில் படிந்து உள்ள உதிர்ந்த சுவர்களை போல...

சுகிர்தராணியின் செந்நிறம், மீட்சி மற்றும் ஆயுதம் கவிதைகள்...

கூகை என்ற புத்தக விமர்ச்சனம்... - தலித் இலக்கியத்தில் ஒரு வித்தியாசமான கதை என்று சொல்லபடுகிறது...

எஸ். ராமகிருஷ்ணன் - எழுதியிருக்கும் தென் அமெரிக்க திரைப்படங்களை பற்றிய பார்வைகள்... க்ளோபர் ரோச்சா, வால்டர் செலஸ், கார்லோ கமுராட்டி ஆகியோரின் திரைப்படங்கள் அலசபட்டு உள்ளன.. முக்கியமாக சே-குவாராவின் மறுபக்கத்தை காட்டும் 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்'.

லீனா மணிமேகலையின் ரகசிய உறவுகள் பற்றி ஒரு கவிதை..மெல்லிய காமம் சொன்னாலும் கவிதையின் அர்த்தம் உள் இறங்குகிறது.

சந்தைக்கு வந்த கிளி...

ஒரு முறை துடியலூர் சந்தைவழியாக பெரியநாயக்கன் பாளையம் செல்ல வேண்டியிருந்தது.. நண்பர் வீட்டில் மனைவி ஊருக்கு போயிருந்ததால்...சொந்த சமையல்...துணைக்கு நாங்களும்..போகும் வழியில் சந்தையில் காய்கறி வாங்கிகொள்ள திட்டம்.. நல்ல கூட்டம் அன்று. காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு.. உள்ளே நுழைந்தோம்... அற்புதமான சந்தை...கொஞ்சமே விலையில் நல்ல காய்கறிகள் மற்றும் பலசரக்கு பொருள்கள்.. இப்படி எல்லா கிராம விளைச்சலும் சரியான முறையில் இடை தரகர்கள் இல்லாமல் வியாபரம் ஆனால்...இலவச பொருள்களில் அரசியல் நடத்தும் முதலைகளை துரத்திவிடலாம்..

சந்தையில் ஓரம் ஒருவர் கிளி கூண்டு வைத்து உட்கார்ந்து இருந்தார்...வயதானவர்...வெள்ளை வேட்டி சட்டையில்...தலையில் முண்டாசு...அடர்த்தியான வெள்ளை மீசை..பட்டை சந்தனம் என்று நல்ல விளம்பரம்... ஒரு சிறிய அட்டையில்... "கிளி ஜோஸ்யம்... 2 ரூபாய்... " என்று இருந்தது.. கூட வந்த நண்பர் அங்கேயே நின்று விட்டார்.. சரி அவருக்காக பார்க்கலாம் என்று போனால்...கிழவர் பேச்சு பிரமாதம்.. பயங்கர வரவேற்ப்பு... எங்களை காட்டி கூட்டம் வேறு சேர்த்துவிட்டார்.. எங்களை சுற்றி 10 - 15 பேர் கூடிவிட்டார்கள்..கிளிக்கு பேர் ஐஸ்வர்யா...!!! அது வெளியே வந்து ஒரு வித வன்மத்துடன் எங்களை பார்த்தது.. 4- 5 சீட்டுகளை கலைத்தது.. பிறகு ரொம்ப பெருமையாக ஒரு சீட்டைஎடுத்து கொடுத்துவிட்டு.. கிழவர் கையில் இருந்து 2 நெல்லு மணிகளை கொத்தி கொண்டு அசுவரஸ்யமாக நடந்து கூண்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது.. நண்பருக்கு வந்திருந்தது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் படம்... கிழவர் பாட்டெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டார்.. "தம்பி உனக்கு ரெண்டு மனைவி.. " என்று வேறு பாட்டெல்லாம் பாடம் கூட்டம் மெல்ல சிரிக்க ஆரம்பித்து விட்டது.. எங்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடம்.. அவசர அவசரமாக கையில் கிடைத்த சில்லரையை அவருக்கு கொடுத்துவிட்டு.. காருக்கு ஓடி வந்தோம்..

சில நேரங்களில் இந்தகைய ஜோசியர்களிடன் ஏற்படும் அனுபவம் நல்ல ரசனைக்குரிய விஷயமாக இருக்கும்...சில நேரங்களில் எரிச்சலும் வருவதுண்டு.. எனினும் அந்த கிழவரின் விஷயங்களை சொல்லும் முறையிம், வார்த்தை பிரயோகங்களும் அற்புதமாக இருந்ததை மறுக்க முடியாது...

சில வருடங்களுக்கு பின்னர் அந்த நண்பரை பார்த்த போது... பம்பாயில் இன்னொரு பெண்ணுடன் சமீபகாலத்தில் தொடர்பு ஏற்பட்டு தற்போது இரு மனைவியருடன் வாழ்வதாக சொன்னார்... அது அவருக்காக சொல்லபட்ட ஜோஸ்யமா...இல்லை ஜோஸ்யர் சொன்னதுக்காக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறாரா...புரியவில்லை..

தண்டு மாரியம்மன் திருவிழா

இந்த முறை கோவைக்கு சென்றிருந்த போது தண்டு மாரியம்மன் திருவிழா நடந்து கொண்டிருந்தது...மாலை மெல்ல ஒரு நடை சென்றோம்.. நல்ல அலங்காரம்..நல்ல கூட்டம்.. கோவை பெண்களின் உடையலங்கார மாறுதல்களை ரசித்து கொண்டே ( சைட் அடிப்பதற்க்கு இன்னோரு பெயர்...) கோவில் சுத்தி வந்தோம்.. ரோட்டை மறித்து பந்தல் போட்டிருந்தார்கள்... ஆர்கெஸ்டிரா என்று ஒரு சமாச்சாரம்.. கொஞ்சம் நின்று பார்ப்போம் என்று ஒரு பழரசம் வாங்கி கொண்டு கவனித்தோம்...அருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர்...முதலில் புன்னகைத்தார்...பதிலுக்கு புன்னகைத்தது தப்பாக போனது... மனிதர் ஆரம்பித்து விட்டார்..."தம்பி ... நான் இந்த கோவிலுக்கு எத்தனை செய்ஞ்சுருகேன்...அந்த காலத்திலே..." என்று.. "இந்த காலத்து பொண்ணுகளுக்கு துணி போடவே கஷ்டமா இருக்கு போல தம்பி.. என்ன துணி இது...சகிக்கில " புலம்பல் வேறு.. பிடிச்சா பாரு.. பிடிக்கலேனா மறைக்காம நகர்ந்து போலாம்ல.. என்று சொல்ல முடியவில்லை.. முந்தய ஆச்சார உடை அலங்காரங்கள் மறைந்து கொஞ்சம் கவர்ச்சி இருந்தது மறுக்க முடியாது எனினும்..இன்றைய காலங்களில் இது எல்லாம் பேச முடியாது.. எனினும் அவர் புலம்பலையும் பேச்சையும் ஒரு கூட்டம் நின்று ஆமோதித்து கொண்டு இருந்தது... எல்லாரும் 40 வயதை தாண்டியவர்கள்... கடவுள்,பக்தி, கற்பு...என்றெல்லாம் பேச்சு வளர...என் கையில் இருந்த பழரசமும் தீர்ந்து போகும் நேரத்தில் நல்ல நேரம்...கச்சேரி ஆரம்பமானது.. ஆரம்பத்தில் ஒரு கடவுள் பாட்டு.. அப்புறம் ஒரு கடவுள் பாட்டு... அப்புறம்.. " தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா... " என்று ஒரு பெண் அபஸ்வரமாய் பாட ஆரம்பிக்க... இந்த பாட்டுக்கு அர்த்தம் என்ன..? கோவில் திருவிழாவில் இது சரியா என்ற உள் கேள்விகளோடு திரும்பி பார்த்தால்.. அந்த மானஸ்தர்கள் யாரையும் காணோம்...எல்லாம் ஆர்கஸ்டிரவின் முதன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்...

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்.

சென்ற திங்கள் கிழமை காலை 6 மணி. மொபைல் போனில் அலாரம் அடித்ததும் திடுக்கிட்டு கண் விழித்து சைட்பர்த்திலிருந்து குதித்து இறங்கி கண்ணை கசக்கி கொண்டு ரயிலின் கதவுக்கு வந்தால்...ரயில் நகரவே இல்லை. இன்னும் சிலர் கதவோரம் நின்று கொண்டு இருந்தார்கள்.. "எங்க சார் இருக்கோம்..."என் கேள்விக்கு நக்கலாக பதில் வந்தது... "அத கண்டுபிடிக்கத்தான் நாங்களும் பார்க்கறோம்.." கொஞ்சம் தெலுங்கு வாசம்..பதில் சொன்ன ஆசாமி கொஞ்சம் ஆஜானுபாவமாக இருந்ததால் மேற்கொண்டு பேசும் எண்ணத்தை கைவிட்டேன். பின்னர் மெல்ல ரயில் நகர்ந்து ஒரு ரயில்வே கேட் முன்னால் நின்றது.. வெளியே இருந்த பெயர் பலகை 'சாம்பல்பட்டி' என்றது. இந்த ஊர் எங்கே இருக்கிறது...??? பக்கத்தில் ஒரு பெரியவர் சொன்னார்.. ஜோலார் பேட்டைக்கு முன்னால்... ரயில் ஏன் நகரவில்லை.. பதில் இல்லை.. டி.டி.ஆர்.. ஆளே காணவில்லை.. மணி 8 ஆகும் வரைக்கு அங்கேயே இருந்த ரயில் மெல்ல மெல்ல நகர... பசி வயிற்றை பிறண்ட ஆரம்பித்துவிட்டது.. 1:25ரூபாய்க்கு கூட விலை பெறாத 4 இட்டிலிகள் 20 ரூபாய்க்கு வாங்கினோம்...எல்லாம் ரோட்டோர திடீர் வியாபார்கள் கைவண்ணம்..ரயில் நிற்பதையும், மக்கள் பசி முகங்களையும் பார்த்தவர்களின் வியாபார நோக்கம்...20 ரூபாய் அதிகம் என்று யாரும் பேரம் பேசவில்லை.. மாறாக ரயிலில் அதிகம் பேர் வாங்கினார்கள்..கை கழுவும் போது என்னுடன் நின்ற ஒருவர் சொன்னார்..."விலை அதிகம் என்றாலும் நாம் வாங்குவோம் என்று அவர்களுக்கு தெரியும்...நாம் நிறைய சம்பாரிப்பவர்கள் என்பது அவர்களின் கருத்து..தவறில்லை...ஆனால் இந்த சம்பாதனைக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே படிப்பு, லஞ்சம், சுய தேவைகளின் பலி என நாம் இழந்திருப்பதையும் அவர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்..." ரயில் அன்று முழுவதும் மெல்ல மெல்ல நகர்ந்து ஜோலார்பேட்டைக்கும் அரக்கோணத்துக்கும் இடையே உள்ள தூரத்தை 12 மணி நேரத்தில் கடந்தது.

நல்ல வெயில். சரியான உணவு வசதிகள் கிடையாது. இரவு ரயில் ஆகையால் உணவு சமைக்கும் பெட்டியும் ரயிலில் இல்லை. யாரும் உணவு பொருள்களும் கொண்டு வரவில்லை. தண்ணீரும் கிடையாது.. எல்லா ரயில் நிலையங்களிலும் மே முதல் தேதிக்காக "உழைப்பாளர் தின" விடுமுறை.. சுகாதாரமில்லாத கிராம ரயில்நிலைய தண்ணீரை குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து சிப் சிப்பாக தண்ணீர் குடித்து கொண்டு இருந்தார்கள்..10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் 25 ரூபாய்.. பழங்கள் கிடையாது. ஏ.சி. பெட்டியில் காற்று வசதியும் இல்லாததால் எல்லாரும் வெளியேதான் நின்று கொண்டு இருந்தோம்.. என்னுடன் ஒரு ஆங்கிலேய பெண் பயணம் செய்தால்..கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து கொண்டு இருக்கிறாள். அரைமணிக்கு ஒரு சிகரெட்..கொஞ்சம் தண்ணீர்..வேறு எதுவும் சாப்பிடவில்லை...முதலில் புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல பேச்சில் நின்றது. ஒரு அந்துவான காட்டில் ரயில் நின்ற போது நானும் அவளும் அருகில் தெரிந்த நீர் தேங்கியுந்த நீர் நிலைக்கு நடந்தோம். வெயிலில் தண்ணீரின் மேல் பகுதி சூடாக இருந்தாலும் கலைத்து விட்ட பின்னர் தண்ணீர் குளுமையாக இருந்தது.. குடிக்க முடியாது எனினும் முகம் கழுவ முடியும்...நிறைய பேசினாள்...கொஞ்சம் கோவமும் அவள் பேச்சில் இருந்தது..இத்தகைய சூழலில் தண்ணீரும் உணவும் கூட ஏற்பாடு செய்ய முடியாத ரயில்வே டிபார்மெண்டை அவள் திட்டிய போது எனக்கும் பதில் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக என் பகுதியில் இந்த சிலர் நட்பாகிவிட்டோம்...சுருதி என்று ஒரு குட்டி பெண்..பயங்கர குறும்பு... பயங்கர சத்தம்... வயதான சிலர்...பழங்கால கதைகள்...பசி மறக்க வேண்டுமே.. !! அரக்கோணத்தில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டதால் கால தாமதம் ஆகிறது என்றார்கள்..ஒரு வழியாக ரயில் ஊர்ந்து சென்னை சென்ரலில் நுழைய எல்லாரும் அவரவர் பெட்டிகளை தயார் செய்தோம்.. அந்த ஆங்கிலேயெ பெண் ரயில் கொடுக்கபட்டிருந்த போர்வைகளையும் தலையணைகளையும் ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தாள்...