அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 14, 2006

தோற்றமும் மறைவும்

தினத்தாள்களில் ஒவ்வொரு நாளும் மரண அறிவிப்புகள் வெளியாகின்றன..எல்லா மருத்துவங்களுக்கும் எல்லா நம்பிக்கைகளுக்கும் தாண்டி மரணம் தன் எல்லையை விஸ்தரித்து கொண்டே இருக்கிறது...எல்லா வீடுகளிலும் மரணம் தன் ரணங்களை பதித்து இருக்கிறது. வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளை போல மரணத்தையும் எதிர்நோக்க எல்லா வீடுகளிலும் மனிதர்கள் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.. பெரும்பாலான பத்திரிக்கை விளம்பரங்கள் கடமைக்காக கொடுக்க படுகின்றன.. குடும்பத்தார்களை விட மேனேஜர்கள்தான் விளம்பரங்களை கொடுக்கிறார்கள். விளம்பரத்தில் யார் பெயரெல்லாம் வரவேண்டும் என்பது பற்றி சில நேரம் வாக்குவாதம் கூட வருவதுண்டு. மரணமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர் மட்டுமே மவுனம் காப்பதுண்டு.. மற்றவர்கள் பிறரை ஜெயிக்க முயற்சித்து கொண்டு இருப்பார்கள். மரணமடைந்தவர் வயது கூடியவரானால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆழ்ந்த மவுனத்தில் இருப்பதை கவனித்து இருக்கிறேன். அது மரணத்தின் வலி மட்டும் அல்ல.. நாளை தன்னையும் அங்கே அந்த சூழலில் பொருத்தி பார்க்கும் மன உளைச்சல்... பத்திரிக்கை விளம்பரங்களில் உள்ள மனிதர்களின் முகங்களை உற்று பார்த்திருக்கிறேன்...இவர்கள் எங்கே எப்படி பிறந்திருப்பார்கள்..? எங்கே படித்து வளர்ந்து வாழ்க்கையின் அனுபவங்களை பெற்றிருப்பார்கள்..? இவர்களின் காதல்கள், தொழில், வெற்றிகள் தோல்விகள், நட்பு, பயணங்கள்...யாரும் இவர்களை, இவர்களின் வாழ்க்கையை பதிவு செய்வார்களோ.. தோற்றமும் மறைவும் ஒன்றை ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கின்ற வாழ்க்கை சூழலில்...யாரை பற்றியும் எந்த பதிவும் இல்லாத வாழ்க்கை முறையில்..எத்தனை கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் கூத்துகளும்.. என் வாழ்வில் சில மனிதர்களையாவது அவர்களின் வாழ்க்கையை முடிந்தவரை பதிவு செய்ய சில நேரம் நான் எண்ணுவதுண்டு. முடிந்த வரை நெருங்கிய உறவுகளையாவது... இன்றெல்லாம் யாரை பற்றியும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பேசவும் நேரமின்று அலைகிறோம்.எல்லா மனித வாழ்க்கையும் ஏதோ ஒரு வகையில் நமக்கு கிடைக்கும் பாடங்கள்தான்.. இந்த பதிவுகள் இலக்கியமாகாவிட்டாலும் யாரோ சிலருக்கு உலகம் பற்றி சொல்லும்.. இல்லாவிட்டால் தோற்றமும் மறைவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்... குழந்தைகள் இல்லாத கிராமங்களை கடக்கும் கூட்ஸ் ரயில் வண்டிகளை போல..

No comments: