அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, February 26, 2006

மாறி வரும் வாழ்க்கை முறையும்...

இன்றைய வாழ்க்கை முறை அவசர யுகம். காலையில் எழுவது முதல், மறுபடி இரவு படுக்கும் வரை எங்கும் எல்லாவற்றிலும் மனம் ஒன்றிபோகாத அவசரம். விளைவு..30 வயதுக்குள் 60 வயது முதுமையும், 80 வயது வியாதிகளும். நான் சொல்வது குறிப்பாக கணிப்பொறி வல்லுனர்களை. மற்ற தொழில்களிலும் இத்தகைய வேலை பளு உண்டு எனினும் கணிப்பொறி போல 24X7 பளு கிடையாது. எல்லா உடல் நோய்களுக்கும் அடிப்படியில் மனம் மட்டுமே காரணமாகிறது. அடிப்படை ஜீரண சக்தி முதல், காம உணர்வுகள் வரை எல்லாம் மூளையால் கட்டுபாடு செய்யபடும் வேளையில், மூளைக்கு ஓய்வில்லாத அழுத்தம் இருப்பின் என்னவாகும். மிக சுலபம். மருத்துவர்கள் பிழைப்பார்கள். டென்ஷன், இதய நோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, உடலுறவு பிரச்சனைகள், மன அழுத்தம், மன நோய், சோர்வு...எல்லாவற்றிக்கும் மருத்துவர்கள் காரணமாக சொல்வது இன்றைய வாழ்க்கைமுறையின் வடிவமைப்பு. உணவு, உறக்கம், உடல் பயிற்றி, மன அமைதி இவை சரியாக அமைந்தால் இன்றுள்ள 80சதவீத நோய்களை துரத்திஅடிக்கலாம். எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் வரும் வாய்ஜால மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பலாம். ஓவியமும், இசையும் மெல்ல மெல்ல வாழ்வில் இருந்து மறைந்து இன்டெர்நெட்டும், ஷாப்பிங் மால்களும், பப்பும், டிவி-டிவிடியும் ஆக்கிரமித்து வருகின்றன. நானும் இந்த அமைப்பில் தான் இருக்கிறேன். இதில் இருந்து வெளிவர சில முயற்சிகள் எடுத்து வெற்றியும் பெற்று இருக்கிறேன் - எல்லாம் ஒத்த மனமுடைய நண்பர்களின் உதவியால். எனவே நண்பர்களே - அடிப்படி உடல்பயிற்சிகளையாவது தினசரி செய்யுங்கள் (உதா: நடை பயிற்சி, படிகளில் ஏறுதல் இறங்குதல்), உணவு சரியான நேரத்தில் கார்போகைட்ரேட் கலோரிகளை கணக்கெடுத்து உண்ணுங்கள், தயவு செய்து 7 மணி நேரமாவது தூங்குங்கள், மனதுக்கு பிடித்த தோழரோடோ , தோழியோடோ, குடும்பத்தோடோ மனம் விட்டு (வேலை விஷயங்களை தவிர்த்து) ஏதாவது பேசுங்கள். வாரம் ஒருமுறையாவது கொஞ்ச நேரமாவது இசையும் ஓவியமும் கொண்டு இருங்கள்.ஞாயிற்று கிழமைகளில் சும்மாவாது கடைவீதிகளில் நடங்கள், மனிதர்களையும் கணிப்பொறி சட்டங்களுக்கு உட்படாத வாழ்க்கையின் மறுபக்கங்களையும் கவனியுங்கள். அனாவசியமாக மருத்துவத்துக்கு செலவு செய்வதை அவசியமாக இன்று உங்களை கவனித்து கொள்ள செலவு செய்யுங்கள். நல்ல வாழ்க்கை நம்முடனே இருக்கிறது...சம்பாரிப்பதை கவனித்தல் போலவே அதனை கவனியுங்கள்

மனதோரம் ஒரு ரோஜா

மதனின் "நான் ஒரு ரசிகன்" இந்த வாரம் படித்தவுடன் எனக்கும் பழைய நினைப்பெல்லாம் வந்து விட்டது. பள்ளிகூட காலத்தில் ஒரு பெண் இருந்தாள். பர்த்தா அணியாத முஸல்மானிய பெண். இன்றும் யாராவது காதோரமாக ஒற்றை ரோஜா செருகியிருந்தால் அனிச்சையாக முகம் பார்க்க முயற்சி செய்வதுண்டு. அவளிடம் நான் பேசியதே இல்லை. இருவரும் பார்த்து கொண்டதுண்டு. அவளை பார்பதற்காகவே பிடிக்காத வாத்தியாரம்மாவிடம் கணக்கு டியூசன், டைப்ரெட்டிங் எல்லாம் போனதுண்டு. எத்தனை பெண்களிலும் ஒரு தாவணி பூவாக அவளை கண்டுபிடித்து விடுவோம். நண்பர்கள் உண்டல்லவா இது போன்ற விஷயங்களில் உதவ. மசூதிக்கு அருகில் உள்ள கோவில், கடற்கரை, நெஸ்கொ, புதுப்பட்டினம் மார்கட், சதுரங்கபூம்பட்டின ஆயுர்வேத மருத்துவர் வீடு, கணேஸ் தியேட்டர் எல்லா இடங்களில் அவள் என்னை பார்ப்பாள்... இன்று நினைத்தால் கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சம் பெருமூச்சும். அவளை தேவதையாகவே மனசு நினைத்திருக்கிறது. செக்ஸ் அப்பீல் என்ற அளவில் இதுவரை அவளை கற்பனை செய்யமுடியவில்லை என்பது ஏன் என்ற குழப்பம் இன்றும் உண்டு. வாழ்வில் அப்படி ஒன்றும் நான் ஒழுக்கசீலன் கிடையாது - வாய்ப்புகளில் சில சில்மிஷங்கள் அரங்கேறியதுண்டு எனினும் ஒரு வார்த்தை கூட பேசாத அவளிடம் ஒரு மரியாதை கலந்த அன்பு நின்றிருக்கிறது. அவள் சிரித்து பார்த்ததுண்டு, அழுது பார்த்ததுண்டு, கோகோ விளையாட்டில் அவள் ஓட தொடங்கி என் முகத்தில் இருந்த புன்னகை கவனித்து சட்டென நின்று தோற்று பின்னர் என் கண்களை தவிர்த்து இருந்ததுண்டு. அவளை பார்த்து கொண்டே சைக்கிளை பஸ்ஸுக்கு நின்றிருந்த மக்கள் மேல் கொண்டு இடித்து நான் அடி வாங்கியதுண்டு.. எனினும் இருவரும் பேசியதில்லை...பேச முயற்சித்ததும் இல்லை - காரணம்... தெரியவில்லை. காதல் என்று வகைப்படுத்தவும் தெரியவில்லை. பள்ளிகூட நாட்களுக்கு பிறகு தொடர்புகள் இல்லை...யாருக்கும் அவள் பற்றி தெரியவில்லை...யாரிடமும் கேட்க தைரியமும் இல்லை... ஆனால்... எப்போதாவது எங்காவது "அந்தியில வானம்..தந்தனத்தோம் போடும்...", "பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க..." மற்றும் "நிலா காயும் நேரம்...சரணம்" ஆகிய பாடல்களை கேட்கும் போது அவள் நினைவுகள் நெஞ்சில் பூக்கும்.

Saturday, February 25, 2006

உணர்வும் உருவமும்

ரேவதி - "உணர்வும் உருவமும்" என்ற நூலின் எழுத்தாளர். "தூக்கம்" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவர் ஒரு மூன்றாம் பாலின போராளி. ஆணாய் பிறந்து தற்போது தன் பாலின அடையாளத்தை பெண்ணாக நிரூபித்து பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார். இவர் பற்றிய கட்டுரை ஒன்றை ஆனந்த விகடனின் படித்தேன். மூன்றாம் பாலின நண்பர்களின் பாலியல் உரிமைகளை சட்ட ரீதியாக பெற முயல்கிறார். முந்தய பதிவுகளின் நான் எழுதியிந்த இந்திய தண்டனை சட்டம் இ.பி.கோ 377ஐ மாற்ற சொல்லி போராடி வருகிறார். புறக்கணிப்பட்ட மூன்று மகள்களை தத்தெடுத்து இருக்கிறார் - பெற்று துரத்திய சொந்த தாயையும் தத்தெடுத்து இருக்கிறார். தன் காதல்கள் பற்றியும் தன் கனவுகள் பற்றியும் தெளிவாக பேசுகிறார் - இவரிடம் நான் வியப்பது இயல்பின் மூன்றாம் பாலின நண்பர்களிடன் இல்லாத நேரடி தைரியத்தை. "நசுக்கப்படும் வர்க்கம், ஒரு நாள் முளைத்து எழும் என்கிறது சித்தாந்தம் - நாங்கள் இன்று நசுக்கபடுகிறோம் நண்பர்களே...." - இவர் குரலும், சார்ந்த சமூகத்தின் குரலும் ஓங்கி ஒலிக்க வாழ்த்துவோம்.இன்றைய அளவில் மூன்றாம் பாலின நண்பர்களின் வாழ்க்கை குறித்து நிறைய எழுதலாம் - கொஞ்சம் செய்திகளை திரட்டி கொண்டு பின்னர் எழுதிகிறேன்.

PAGE 3

சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் "PAGE 3". திரைக்கதை சொல்லபட்டிருந்த விதம் எந்த ஒரு வித்தியாசத்தையும் சொல்லவில்லை எனினும், கதையின் "One Line" பிரமாதமானது. நாம் தினசரி பத்திரிகைகளிலும், வார மாத இதழ்களிலும் பார்க்கும் பார்ட்டி கலாச்சாரத்தையும், அதன் முகமூடிக்கு பின்னால் இருக்கும் வக்கிரங்களையும் தோலுரிக்கும் கதை. கொங்கனாசென், பொமன் இரானி, அதுல் குல்கர்னி மற்றும் பலரின் பண்பட்ட நடிப்பு, மதுக்கர் பண்டார்கரின் இயல்பான இயக்கம், சமீரின் பார்ட்டி இசை திரைப்படத்துக்கு வலுவூட்டும் விஷயங்கள். கலர் கலரான பல்புகளின் அடுக்குகளுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான, குழப்பமான வயர்கள் போல, நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்க்கும் பகட்டான நாகரீகமான "Rich and Famous" சமூகத்தின் வக்கிரங்கள் திரைப்படத்தில் ஒரு பத்திரிக்கையாளரான பெண்ணின் கோணத்தில் சொல்லபடுகின்றன. நேர்மையான போலிஸ் அதிகாரி, துணிச்சலான கிரைம் ரிப்போர்ட்டர், பார்ட்டிகளில் பங்கேற்க்கும் சமூகத்தை பற்றி எழுதும் ஒரு பெண் பத்திரிக்கையாளர், இவர்களுடைய உறவு முறை சொல்லபட்டிருக்கும் விதம் அருமை. சிக்மண்ட் பிராய்ட் சொல்வது போல நாகரீகத்தின் உள்ளர்த்தம் காமம் - அதுவும் வரைமுறை தாண்டும் காமம் என்பதை திரைப்படம் மறுபடியும் சொல்கிறது. இந்தி மொழியும் ஆங்கில மொழியும் கலந்த வசனங்கள் எளிதில் புரிகின்றன. திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள், பிஸினஸ் காந்தங்கள், சமூக சேவகிகள், உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகள் இவர்கள் அனைவரது வாழ்க்கை வக்கிரங்களும் கொஞ்சம் யோசித்தால் யார் யார் குறிப்பிடுகின்றன என புரிகிறது. தமிழில் எல்லாம் இப்படி திரைப்படம் எடுத்தால் திரையரங்கை கொழுத்தி விட்டு கூடவே கொடும்பாவியும் எரிப்பார்கள். செக்ஸ் சமூகத்தில் ரத்த நாளங்களில் எப்படி பரவியுள்ளது, வாழ்வின் எல்லா முன்னேற்றங்களுக்கும் விலையாக உள்ளது - இந்த விஷயத்தில் இரு பாலரும் சமம் என்பதை திரைப்படம் சொல்லும் வேகம் அற்புதம் - நிஜம் சுடும். பத்திரிக்கையார்களின் உள்ளத்தில் இருக்கும் சமூக நேர்மையின் வேட்கையை - அதை வெளிப்படுத்த முடியாதது போல கைகள் கட்டபட்டிருப்பதை பேசுகிறது இந்த திரைப்படம். இன்று காலை பேப்பரை பிரித்தது கண்ணில் பட்ட பார்ட்டி கொண்டாட்ட புகைபடங்களை பார்த்ததும் தோன்றியது - யார் சொன்னது இந்தியா ஏழை தேசம் என்று. மேலும் இது போன்ற திரைப்படங்கள் இருப்பின் எனக்கு அறிமுகபடுத்தவும், மேலும் விவாதிக்கவும் விருப்பமிருந்தால் தொடர்ப்பு கொள்ளுங்கள்.