அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Thursday, March 22, 2007

மொழி - ஒரு அடையாளம்


என் மொழி எது என்ற அடையாள குழப்பம் இன்னும் இருப்பதாகவே உணர்கிறேன். எழுத்தா ஓவியமா என்ற குழப்பம் இன்னும் என்னுள் இருக்கிறது. கவிதைகளோ கட்டுரைகளோ இன்னும் எந்த ஒரு வடிவையும் கொண்டவையாக மாறவில்லை - அவை இன்னும் என் முதல்வடிவ முறையிலேதான் இருக்கின்றது. ஓவியமும் எந்த குறிப்பிட்ட முறையையும் கொண்டிருக்கவில்லை. என் ஓவியங்கள் பெரும்பாலும் என் வழிமுறையிலேயே இருந்தாலும், அவை நான் பார்த்த ஓவியங்களின் முறைகளையும், எண்ணங்களையும் அடிப்படையாக கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. தேர்ந்த வடிவங்கள் சார்ந்த ஓவியங்களை படைக்கும் அளவுக்கும் எனக்கு அது கைவரவில்லை. என் ஓவியங்கள் விஷயம்
சொல்கிறது - ஆனால் மிக தெளிவாக சொன்னதில்லை - என் கவிதைகளை போலவே அது மிக சிலருக்கு மட்டும் அனுபவங்களால் உணரபடுகிறது.

கவிதைகளிலும் எழுத்துகளில் இதே அனுபவம் சார்த்த தாக்கம் இருக்கிறது. என்னுள் இறக்கும் அனுபவங்கள் மட்டுமே என்னில் இருந்து வெளிப்படுகின்றன. இந்த கருத்தை ஏன் என் கவிதைகள் சொல்வதில்லை, ஏன் என் ஓவியங்கள் சொல்லவில்லை என்ற கேள்விகள் என் பதில்களுக்கு அப்பாற்பட்டவை. பொதுவில் இத்தகைய பொது முறையற்ற - அல்லது என் முறைகொண்ட எழுத்துகளும் ஓவியங்களும் என் மொழியாக கொள்கிறேன். இசை என்னும் பொது மொழி எனக்கு புரிகிறது. இசையும் கவிதைகளும் ஓவியமும் கொண்ட என் மொழி - என் அனுபவ கலாச்சாரத்தில் இருந்து வெளிப்படும்போது - அதனை எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறதா என தெரியவில்லை. புரியாத மொழி உதவாது என கொண்டால் - புரிந்த மொழிகள் என்ன உதவியிருக்கிறன...?


மனிதர்களும் உணர்வுகளும்

நான் பொதுவாக இரவு உணவுக்கு ஒரு சிறிய உணவகம் செல்வதுண்டு. பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் இடம் அது. தினமும் முட்டை பரோட்டா சாப்பிடும் பழ வண்டிகாரர், எல்லா அரசையும் விமர்ச்சிக்கும் வயதான பெரியவர், சத்தமான எல்லா நேரமும் செல்போனில் பேசி கொண்டே சாப்பிடும் ஒருவர், கலாட்டா மாணவர்கள் என கலவையான இடம் அது. கடை வைத்திருப்பவர்கள் புதுக்கோட்டையில் இருந்து வந்தவர்கள். உணவின் ருசியும் தரமும் குற்றம் சொல்ல முடியாதவை. ஒரு பெரியவர் அங்கே வேலை செய்கிறார். எல்லாருக்கும் நல்ல கவனிப்பு. ஒரு சனிக்கிழமை மதிய நேரம் அவர் என்னிடம் பேசி கொண்டிருந்த போது அவர் மகன் ஒரு மனஸ்தாபம் காரணமாக விலகி சென்றுவிட்டதாகவும், தான் இங்கே வேலை செய்து ஊருக்கு பணம் அனுப்பி கொண்டிருப்பதாகவும் சொன்னார். சென்னையில் இப்படி நிறைய மனிதர்களை பார்க்கிறேன். பெருமாலும் உறவுசார்ந்த பிரச்சனைகள் எல்லாருக்கும் இருக்கிறது. சந்தோஷமான குடும்ப அமைப்பின் வாழ்க்கை நிறைய பேருக்கு வாய்ப்பதில்லை - காரணங்கள் எல்லாம் திசையுலும் இருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கு இயல்பிலேயே சில கருத்துகள் இருக்கின்றன - அவைகளை தோண்டி தனக்காக மாற்ற முயலும் போது எல்லா பிரச்சனைகளும் ஆரம்பிக்கின்றன. உணர்வுகளின் குவியலாகவே பெரும்பாலும் மனிதர்கள் இருக்கின்றனர். அவர்களை அவர்களாக வாழ விடுதல் என்பது மனித சுதந்திரத்தின் வெளிப்பாடு.
வழிமுறைப்படுத்தும் முயற்சிகள் கருத்துகளை காயமாக்காமல் இருந்தால் சந்தோஷமான குடும்பங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உண்டு. எல்லாம் பேசும் முறையிலும் பழகும் முறையிலும்தான் இருக்கிறது. அடிப்படை மனோதத்துவ அறிவு எல்லா இடங்களிலும் தேவைபடுகிறது.

வரலாறுகள் விற்பனைக்கு

காந்தியும் இன்னும் பிறரும் கிட்டதட்ட எல்லாருக்கும் மறந்து போனபிறகும் - புத்தகங்கள் அவர்களை பற்றி வெளிவந்து வியாபாரமாகின்றன. பெறும்பாலும் பொதுவாழ்வை விட தனிப்பட்ட வாழ்வும் அதன் நிகழ்வுகளும் எல்லாருக்கும் ஒருவகையான தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வத்தை அதிகமாக்குகிறது. "அவரே அப்படி.. " என்ற எண்ணம் எல்லாருக்கும் அவரவர் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த உதவுகிறது... எதற்கு எதனை
படிக்கவேண்டும், எதனை பற்றி விவாதிக்க தேவையிருக்கிறது என்ற நிலைதாண்டி - மற்றவரின் அந்தரங்க நிகழ்வுகளை படித்து (வாய்ப்பு கிடைக்காத) தன்னை உயர்வாக நினைத்து கொண்டு - அலட்ட வைக்கிறது. இது எல்லாம் இருக்கும் வரைக்கும் யார் வரலாறுக்கும் விற்பனை இருக்கும் - அது எப்படி இருப்பினும்.

திரைப்படமும் வாழ்வும்...

பாபெல் என்ற திரைப்படமும், புரூப் என்ற திரைப்படமும் - பாபெல் திரைக்கதை மூலமாக கொண்டது. உலகில் வேறு வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்கள் - ஒரு அடிப்படை சம்பவத்தால் இணைக்கபடும் விதம். இம்மாதிரி திரைப்படங்களை கதைகளாக படித்த அனுபவம் இருக்கிறது. ராஜேஸ்குமார் கூட மாத நாவல்களில் கையாளும் விஷயம் இது. சொல்லும் படியான விஷயங்கள் - உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் குழப்பாத
திரைக்கதை. படம் முழுவதும் பார்த்தால்தான் புரியும். ஜப்பானிய பெண்ணின் மனோதத்துவம் தொடர்ப்பான நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நிறைய விமர்ச்சனங்களை கொண்டுவரலாம். புரூப் - சிறிய ஆனால் சொல்ல தகுந்த கதை. ஒரு வகை மனோ வியாதியால் பாதிக்கபடும் தந்தையும், அவர் மகளுக்கும் கணிதம் சார்ந்த விஷயங்களில் இருக்கும் அதீத ஆர்வம் - அவர்கள் / அவள் எழுதும் கணித முறை - அது சார்ந்த - அவளுக்கும் அவள் சகோதரி மற்றும் காதலனுக்குள்ளான மனோரீதியான இடைவெளிகள் என கதை அமைகிறது. திரைப்படத்தின் வசனங்கள் ஒரு நல்ல விஷயம். திரைக்கதை அமைப்பு திரைப்படத்தின் சில காட்சிகளுக்கு பின்னரே புரியும்படி இருக்கிறது. இரண்டு படங்கள் இந்த வாரம் - டிவிடி புண்ணியத்தில்.

எந்த ஒரு சம்பவமும் - அது சார்ந்த கருத்துகளும் ஒவ்வொருவரின் சுய அனுபவங்களின் அடிப்படையிலேயே எடுத்துகொள்ளபடுகிறது என்பதற்க்கு சமீபத்திய ஒரு திரைப்படத்தின் இறுதிகாட்சியாக வரும் கற்பழிப்பு காட்சி உதாரணம். அந்த சம்பவம் - அந்த மண்ணில் நடந்திருக்கிறது - இன்னும் நடப்பதற்க்கான சாத்தியம் இருக்கிறது. தென் தமிழ் கிராமங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த சம்பவத்திற்க்கான சாத்தியமும்
இருக்கிறது - சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். சம்பவம் திரைப்படத்தில் காண்பிக்கபட்ட முறை பற்றிய கருத்துகளும் - அதற்க்கான இயக்குனரின் கருத்துகளும் பத்திரிக்கை செய்திகளாகிவிட்டாலும், திரைப்படம் மக்களிடையே சென்று சேர்ந்துவிட்டது. இதனை பற்றி பேசுபவர்களுக்கு நிறைய தீனியும் கிடைத்துவிட்டது.

வாகன யோகம்

என்னுடைய எந்த வாகனமும் ஓட்ட தெரியாத குணம் பெரிய நமுட்டு சிரிப்புகளையும் - எனக்கு பின்னால் நிறைய கேலிகளையும் உண்டாக்கிவருகிறது. வருத்தமில்லை எனினும் - என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளாதவரையில் ஒரு திருப்தி இருக்காது. அது என்னவோ ஆரம்ப காலத்தில் இருந்தே நமக்கும் வாகனங்களுக்கும் ஒத்து போகவில்லை. வெகு பாதுகாப்பாக வளர்க்கபட்ட ஆரம்பகால வாழ்க்கைமுறையோ, அல்லது என் அப்பாவுக்கும் எந்த வாகனமும் ஓட்ட தெரியாது என்ற நிலையோ - என்னை எந்த வாகனம் பக்கமும் ஒதுங்க முடியாமல் செய்து விட்டது.

அப்பா சைக்கிள் மட்டுமே ஓட்டுவார். அலுவகத்தில் ஜீப், கார் என்று கொடுத்துவிட்டதால் அவருக்கு எதுவும் தேவையே இல்லாமல் போய்விட்டது. நமக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சாலை போக்குவரத்து மேல் ஒரு பயம் உண்டு. ஒரு வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்று கொண்ட காலங்களிலும், சொந்தமாக சாலையில் ஓட்ட தைரியம் வரவில்லை. பெரும்பாலும் அதற்க்கான தேவை இல்லாமல் போய்விட்டதும் ஒரு காரணம்.
பெரும்பாலும் பஸ் அல்லது நடராஜா சர்வீஸ். ஏதாவது "பிக்கப்" விஷயங்கள் கூட இதனால் இல்லாமல் போய்விட்டது - அதற்க்காக ஒன்றுமே இல்லாமல் இல்லை. வண்டி வைத்திருப்பவர்களை விட அதெல்லாம் சந்தோஷமாகதான் இருக்கிறது. ஒரு வகையில் பஸ் ஆட்டோ பயணங்கள் வாழ்வில் நிறைய சொல்லி கொடுக்கின்றன. எனக்கு மனிதர்களை பார்க்க பிடிக்கும் - அது பெரும்பாலும் சாத்தியபடுகிறது. இது ஒரு அடிப்படை கலை என்று பலராலும் சொல்லப்பட்டாலும் எனக்கு அப்படி தோன்றவில்லை. என்னால் சாத்தியபடும் விஷயங்களில் மட்டுமே கவனம் இருக்கிறது.

நான் கற்று கொள்ள முயற்சிக்காமல் இல்லை - கார் கூட ஓட்ட கற்று கொண்டேன். ஏதோ மனம் ஒட்டவில்லை. இன்றெல்லாம் குழந்தைகளை சின்ன வயதிலேயே இருசக்கரவாகனங்களில் முன்னால் உட்காரவைத்து மனதளவில் சாலைக்கு பழக்கபடுத்தி விடுகிறார்கள். நான் சைக்கிளே ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் ஓட்ட கற்று கொண்டேன். நமக்கு வாகன யோகம் இல்லை என்பது அடிப்படையிலே தெரிந்து விட்ட சங்கதி - இதற்கு வருத்தபட்டு என்ன ஆக போகிறது. பிற்காலத்தில் தேவையிருந்தால் கற்று கொள்ளலாம். அதுவரைக்கும் வாகன யோகம் பற்றி ராசிபலனில் மட்டுமே பார்த்து கொண்டால் ஆயிற்று.

நினைவுகளில்...

மைதானங்களை பற்றி மற்றுமொரு வலை பூவில் படிக்க நேர்ந்தது. தனக்கும் பரந்த மைதானங்களுக்குமான உறவை ஒருவர் விவரித்திருந்தார். படித்து கொண்டிருந்தபோது, எனக்கும் மைதானங்களுக்குமான உறவை பற்றி சில நினைவுகள் எழுந்தன. சொல்லபோனால் எல்லார் வாழ்விலும் சில மறக்கமுடியாத மைதானங்கள் பற்றிய நினைவுகள் இருக்கின்றன. பரபரப்பான கான்கிரீட் கட்டிட குவியல்களில் பரந்த மைதானங்களை நகர வாழ்வில் இழந்து வருகிறோம். நகரில் இருக்கும் மைதானங்கள் நவீனபடுத்தபட்டு அவற்றின் நினைவுகள் மறக்கவைக்கபடுகின்றன. எனக்கு நினைவு தெரிந்த மைதானங்களில் தருமபுரியில் என் பள்ளிக்கும் செல்லும் வழியில் இருந்தது ஒன்று. எப்போதும் நிறைய பேர் விளையாடி கொண்டு இருப்பார்கள். பின்னர் கர்நாடகாவில் வீட்டுக்கு எதிரே இருந்த பெரிய மணல் பரப்பு. மாலை நேரங்களில் நடக்கும் முதியவர்களும், பூப்பந்து விளையாடும் குழந்தைகளும் கொண்டது. நினைவில் நிற்கும் மற்றோர் மைதானம் திங்களூர் கிராமத்தில் என் வீட்டுக்கு பின்னால் இருந்தது. அங்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை பட்டிணத்தில் இருந்து வந்து காசு வசூல் செய்து, திரை கட்டி திரைப்படம் போடுவார்கள். பெறும்பாலும் எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி திரைப்படங்கள். என் பாட்டி எல்லா படமும் பார்த்து விடுவார்கள். எங்களுக்குதான் ஜன்னல் வழியாகவே தெரியுமே.

அப்புறம் சந்தை மைதானம். கிராம வியாபாரம் வெறும் பணத்தை மட்டும் முக்கியமாக கொண்டது அல்ல... காசு கொடுத்து வாங்கியபிறகும் கை நிறைய அள்ளி பை நிறைக்கும் மனசு கொண்ட வியாபாரம். தெரியாத ஆளுக்கும் அன்பு காட்டும் மக்கள். அதுவே மூலதனம்.
கழைகூத்தாடிகளையும், மாடுவிற்பவர்களையும், சர்க்கரை மிட்டாய்காரயும், பலசரக்கு கடை பெரியவர்களையும், இறைச்சியும் கருவாடும் விற்பவர்களையும், பழங்களை கூறுகட்டி விற்ப்பவர்களையும் மதிக்க சொல்லி கொடுத்த இடம். அவர்களின் மதிப்பு தெரிய என் பாட்டி அடிப்படை காரணம். கல்பாக்கத்தில் உள்ள ஆங்கில பள்ளி மைதானம் - வயதுகால புது பெண் உறவுகளுடன் மகிழ்ந்திருந்த இடம். பள்ளி காலங்களில் தேசிய கொடி பறக்கவைத்து மிட்டாய் கொடுத்த மைதானங்களயே பார்த்த எனக்கு மிகவும் புதிய இடம். கொஞ்சம் கூட பழக்கம் இல்லாத கூடை பந்து விளையாட்டு கற்று கொடுக்கபட்டு, அது உறவுகளுக்கு வழி சொல்லி கொடுத்த இடம். ஆறாம் வகுப்பிலேயே கண்ணாடி அணிந்து விட்டதால் எந்த
விளையாட்டிலும் கலந்து கொண்டதில்லை. ஓடும் விளையாட்டுகளில் எல்லாம் நான் பார்வையாளன்தான். எனவே என் கூடை பந்து விளையாட்டு வெறும் பம்மாத்து. அது என் உடன் பழகிவந்த பெண் பிள்ளைகளுக்கும் தெரியும். எனினும் அவர்களை கவர நான் ஓவியத்தை உபயோகபடுத்தி வந்தேன். நெஸ்கோ என்று ஒரு இடமும் மைதானமும் கல்பாக்கத்தில் உண்டு. வாரம் தவறாமல் சினிமா போடுவார்கள் - வருடம் 60 ரூபாய்தான்.
மண்ணில் உட்கார்ந்து படமும் பார்க்கலாம் - பக்கத்து உணவகத்தில் மசால் தோசையும் சாப்பிடலாம். சில முக்கியமான திரைப்படங்களை அங்குதான் பார்த்திருக்கிறேன். அதுவும் தவிர வருடம் தவறாமல் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். பள்ளி காலங்கள் அவை. கூத்தும்
கொண்டாட்டமுமான வாழ்க்கை. தள்ளி உட்கார்ந்து பார்வைகளாலேயே பேசி கொண்டு, வாய்ப்பு ஏற்படுத்தி கொண்டு கையை மட்டுமாவது தொட்டு பேசி, ஒரு உணர்ச்சிமயமான கட்டத்தில் இருட்டு மேடைக்கு பின்னால் அவசர முத்தங்களை பரிமாறி கொண்ட பொழுதுகள். கல்லூரி கால மைதானங்கள் பெரும்பாலும் பொருட்காட்சி பகுதிகளாகவே இருந்திருக்கின்றன. பெரிய மாற்றங்கள் இருந்தது இல்லை - ஒரு முறை நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான வன்முறை தவிர. கோவையில் என் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய மைதானத்தை கடக்க வேண்டும் - அது காவல்துறை பயிற்சி மைதானம்...பள்ளி காலங்களில் நாங்கள் மைதானத்தை சமன்படுத்துவோம். கற்களை பொறுக்கி, மணல் தட்டி
சமன்படுத்தபட்ட மைதானங்களில் விளையாட்டோ கேளிக்கையோ நடக்கும் நேரத்தில் மனதில் ஒரு சந்தோஷம் பரவும். பின்னர் மைதானங்கள் வாழ்வில் இருந்து பெரும்பாலும் மறைந்து விட்டன. பரந்த மணற்பரப்புகளும் அவை ஏற்படுத்திய நினைவுகளும் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன...