அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Thursday, March 22, 2007

நினைவுகளில்...

மைதானங்களை பற்றி மற்றுமொரு வலை பூவில் படிக்க நேர்ந்தது. தனக்கும் பரந்த மைதானங்களுக்குமான உறவை ஒருவர் விவரித்திருந்தார். படித்து கொண்டிருந்தபோது, எனக்கும் மைதானங்களுக்குமான உறவை பற்றி சில நினைவுகள் எழுந்தன. சொல்லபோனால் எல்லார் வாழ்விலும் சில மறக்கமுடியாத மைதானங்கள் பற்றிய நினைவுகள் இருக்கின்றன. பரபரப்பான கான்கிரீட் கட்டிட குவியல்களில் பரந்த மைதானங்களை நகர வாழ்வில் இழந்து வருகிறோம். நகரில் இருக்கும் மைதானங்கள் நவீனபடுத்தபட்டு அவற்றின் நினைவுகள் மறக்கவைக்கபடுகின்றன. எனக்கு நினைவு தெரிந்த மைதானங்களில் தருமபுரியில் என் பள்ளிக்கும் செல்லும் வழியில் இருந்தது ஒன்று. எப்போதும் நிறைய பேர் விளையாடி கொண்டு இருப்பார்கள். பின்னர் கர்நாடகாவில் வீட்டுக்கு எதிரே இருந்த பெரிய மணல் பரப்பு. மாலை நேரங்களில் நடக்கும் முதியவர்களும், பூப்பந்து விளையாடும் குழந்தைகளும் கொண்டது. நினைவில் நிற்கும் மற்றோர் மைதானம் திங்களூர் கிராமத்தில் என் வீட்டுக்கு பின்னால் இருந்தது. அங்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை பட்டிணத்தில் இருந்து வந்து காசு வசூல் செய்து, திரை கட்டி திரைப்படம் போடுவார்கள். பெறும்பாலும் எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி திரைப்படங்கள். என் பாட்டி எல்லா படமும் பார்த்து விடுவார்கள். எங்களுக்குதான் ஜன்னல் வழியாகவே தெரியுமே.

அப்புறம் சந்தை மைதானம். கிராம வியாபாரம் வெறும் பணத்தை மட்டும் முக்கியமாக கொண்டது அல்ல... காசு கொடுத்து வாங்கியபிறகும் கை நிறைய அள்ளி பை நிறைக்கும் மனசு கொண்ட வியாபாரம். தெரியாத ஆளுக்கும் அன்பு காட்டும் மக்கள். அதுவே மூலதனம்.
கழைகூத்தாடிகளையும், மாடுவிற்பவர்களையும், சர்க்கரை மிட்டாய்காரயும், பலசரக்கு கடை பெரியவர்களையும், இறைச்சியும் கருவாடும் விற்பவர்களையும், பழங்களை கூறுகட்டி விற்ப்பவர்களையும் மதிக்க சொல்லி கொடுத்த இடம். அவர்களின் மதிப்பு தெரிய என் பாட்டி அடிப்படை காரணம். கல்பாக்கத்தில் உள்ள ஆங்கில பள்ளி மைதானம் - வயதுகால புது பெண் உறவுகளுடன் மகிழ்ந்திருந்த இடம். பள்ளி காலங்களில் தேசிய கொடி பறக்கவைத்து மிட்டாய் கொடுத்த மைதானங்களயே பார்த்த எனக்கு மிகவும் புதிய இடம். கொஞ்சம் கூட பழக்கம் இல்லாத கூடை பந்து விளையாட்டு கற்று கொடுக்கபட்டு, அது உறவுகளுக்கு வழி சொல்லி கொடுத்த இடம். ஆறாம் வகுப்பிலேயே கண்ணாடி அணிந்து விட்டதால் எந்த
விளையாட்டிலும் கலந்து கொண்டதில்லை. ஓடும் விளையாட்டுகளில் எல்லாம் நான் பார்வையாளன்தான். எனவே என் கூடை பந்து விளையாட்டு வெறும் பம்மாத்து. அது என் உடன் பழகிவந்த பெண் பிள்ளைகளுக்கும் தெரியும். எனினும் அவர்களை கவர நான் ஓவியத்தை உபயோகபடுத்தி வந்தேன். நெஸ்கோ என்று ஒரு இடமும் மைதானமும் கல்பாக்கத்தில் உண்டு. வாரம் தவறாமல் சினிமா போடுவார்கள் - வருடம் 60 ரூபாய்தான்.
மண்ணில் உட்கார்ந்து படமும் பார்க்கலாம் - பக்கத்து உணவகத்தில் மசால் தோசையும் சாப்பிடலாம். சில முக்கியமான திரைப்படங்களை அங்குதான் பார்த்திருக்கிறேன். அதுவும் தவிர வருடம் தவறாமல் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். பள்ளி காலங்கள் அவை. கூத்தும்
கொண்டாட்டமுமான வாழ்க்கை. தள்ளி உட்கார்ந்து பார்வைகளாலேயே பேசி கொண்டு, வாய்ப்பு ஏற்படுத்தி கொண்டு கையை மட்டுமாவது தொட்டு பேசி, ஒரு உணர்ச்சிமயமான கட்டத்தில் இருட்டு மேடைக்கு பின்னால் அவசர முத்தங்களை பரிமாறி கொண்ட பொழுதுகள். கல்லூரி கால மைதானங்கள் பெரும்பாலும் பொருட்காட்சி பகுதிகளாகவே இருந்திருக்கின்றன. பெரிய மாற்றங்கள் இருந்தது இல்லை - ஒரு முறை நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான வன்முறை தவிர. கோவையில் என் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய மைதானத்தை கடக்க வேண்டும் - அது காவல்துறை பயிற்சி மைதானம்...பள்ளி காலங்களில் நாங்கள் மைதானத்தை சமன்படுத்துவோம். கற்களை பொறுக்கி, மணல் தட்டி
சமன்படுத்தபட்ட மைதானங்களில் விளையாட்டோ கேளிக்கையோ நடக்கும் நேரத்தில் மனதில் ஒரு சந்தோஷம் பரவும். பின்னர் மைதானங்கள் வாழ்வில் இருந்து பெரும்பாலும் மறைந்து விட்டன. பரந்த மணற்பரப்புகளும் அவை ஏற்படுத்திய நினைவுகளும் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன...

No comments: