அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, October 29, 2006

இந்த மாத புத்தகங்கள்...

காலச்சுவடு சுந்திர ராமசாமியின் நினைவுகளை இந்த முறை பதிப்பித்து இருக்கிறது. சுகன்,வனம், கி.ராஜநாராயணனின் அவர்களின் கதைசொல்லி ஆகிய சிறு பத்திரிக்கைகள் நல்ல கவிதைகளை, சொல்பாணி கதைகளையும் வெளியிட்டு இருக்கின்றன.. வாய்ப்பு இருந்தால் படித்து பாருங்கள்..

கதைசொல்லி என் கிராமத்து கதை கேட்ட நாட்களை நினைவுருத்துகிறது.

சுஜாதாவின் கனவு தொழ்ற்சாலை படித்தேன். ஒரு கேள்வி அதன் பின்னர். பாலகுமாரன்,
சுஜாதா, சிவக்குமார்...எல்லாருமே சினிமாவின் நிதர்ச்சனம் என்ற பெயரில் பிரச்சனைகளை மட்டுமே எழுதுகிறார்கள்.. அதே சினிமா வெற்றிகளையும் சந்தோஷங்களையும் கொண்டதுதான்.. அதனை எழுத யாரும் தலைபடுவதில்லையே ஏன்....?

காந்தி - கொள்கைகளில் குழப்பங்கள்...

காந்தியின் கருத்துகளை சினிமாவில் சொன்னதற்கு வெகு விவாதங்கள் நடந்து கொண்டு
இருக்கின்றன. 50 ரூபாய்க்கு சத்திய சோதனை புத்தகம் கிடைக்கிறது. எத்துனை பேர் படித்திருப்பார்கள் அதனை..? அகிம்சை, நேர்மை பற்றி பெரும்பாலும் புத்தக அறிவாகவே நிறைய பேர் அறிகிறார்கள். பெரும்பாலும் மத்திய மற்றும் இளைய சமுதாயம் சார்ந்தவர்கள். "லகே ரகோ முன்னா பாய்" வாழ்வில் இந்த கொள்கைகளை பயன்படுத்தும் மனிதர்களை, பயன்படுத்த கதாநாயகன் மேற்கொள்ளும் வழிமுறைகளை கமர்ஷியலாக சொல்கிறது. புரிந்துகொண்டவர்கள் உண்டு. எனினும் நம் நிகழ்கால வாழ்வில் இவைகளை எல்லாம் உபயோகபடுத்த முடியுமா..? வேகமான பணத்தையும் முன்னேற்றத்தையும் மட்டுமே கொள்கைகளாக கொண்ட சமுதாயத்தில் காந்தியின் கொள்கைகள் எடுபடுமா..?

ஒன்று மட்டும் புரிவதில்லை. காந்தியின் கருத்துகளும் இந்த சூழ்நிலைக்கு
ஏற்றுகொள்ளபடுவதில்லை... காந்தியை பற்றிய விமர்ச்சனங்களும் எற்றுகொள்ளபடுவதில்லை... மொத்தத்தில் குழப்பமான வியாபார சமுதாயம்....

மழை - யாரும் ரசிக்காத நிகழ்வு

மழை - ஒரு அற்புதமான நிகழ்வு. பால்யத்தில் இருந்தே மழை ரசித்தல் பெரும்பாலும் எல்லாருக்கும் பிடித்திருந்து இருக்கிறது. ஈரமான மழைக்காலங்களில் சின்ன சின்ன சந்தோஷங்கள், சில் குளிரும் சிலுசிலுக்கும் காற்றும் தரும் சுகம் வேறு எந்த கால நிலையிலும் வரும் என்ற நினைவில்லை எனக்கு. வருங்காலங்களில் மழை ரசித்தல் இல்லாமலேயே போய்விடும் என்ற நிலையை இன்றைய சூழ்நிலைகள் உருவாக்குகின்றன என்பது என் கருத்து.

சரியான சாக்கடை வசதிகள் இல்லாமை, தேங்கி நிற்க்கும் தண்ணீரில் உண்டாகும் கொசுக்களும், நோய்களும், சிறு தூறல் விழுந்தாலே 40 ரூபாய்க்கு 80 ரூபாய் கேட்க்கும் இரட்டை வாடகை ஆட்டோகாரர்கள், தண்ணீரில் நிற்க்கும் வாகனத்தை தள்ள கூட காசு கேட்கும் மக்கள், எல்லா ஏரிகளும் குளங்களும் வீடுகளாகிவிட்ட நிலையில் இடுப்பு அளவு தண்ணீரில் வாழும் தாழ்ந்த நில மக்கள், இத்தனை கண்டும் ஒன்றும் செய்யாத அரசாங்கம், ஏதாவது செய்ய முயற்சிப்பவர்களையும் புரிந்து கொள்ளாமல் புறம் தள்ளும் மக்கள் சமுதாயம்...

மழை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெறுக்கதக்க நிகழ்வாகி கொண்டு வருகிறது. உழவனை பற்றியும், காய்ந்து கிடக்கும் தாவரங்களை பற்றியும், வற்றி கொண்டு இருக்கும் நிலத்தடி நீர் பற்றியும், தாகத்தில் தவிக்கும் பறவைகளையும் மிருகங்களையும் பற்றி யாரும் கவலை படுவதில்லை.
எல்லாருக்கும் தங்கள் அலுவகநேரங்கள் தவறுவதிலேயே கவனம் இருக்கிறது. இயந்தரதனமான வாழ்வில் மழை ரசித்தல் முட்டாள்தனமானது என்ற கருத்து பெரும்பாலும் இருக்கிறது. வீட்டில் இருந்தாலும் தொலைகாட்சியில் மூழ்ங்கி இருக்கிறார்கள்.

யாரையும் எதுவும் சொல்ல முடியாது. இது இன்றைய வாழ்விற்க்கு நாம் கொடுக்கும் விலை. எனினும் ஒருமுறையாவது மழை ரசித்து பாருங்கள். ஏதும் விலை கிடையாது அதற்க்கு.

Saturday, October 21, 2006

இருள் பிரியாமல்...

நேற்று இரவிலிருந்தே பட்டாசு சத்தம் ஓய்ந்ததாக நினைவில்லை. மழையும் தன் பங்குக்கு இரவும், காலையும் - மதியம் வரை கொஞ்சம் கொஞ்சமாய் பட்டாசு கொளுத்துபவர்களின் எரிச்சலையும் என் போன்ற மழை ரசிகர்களின் ரசிப்பையும் கொண்டு கொஞ்சமாய் வாழ்ந்து வந்திருந்தது.. சூடாய் தேநீர் கோப்பையுடன் மழை ரசிக்க இருள் பிரியாத அதிகாலை ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்திருந்த போது கடந்து வந்த சில தீபாவளி நினைவுகளை அசை போட சுகமாய் இருந்தது. 1991 - 92 - நான் கல்பாக்கத்தல் இருந்த போது ஒரு தீபாவளி நாளில் தான் சுகமான ஒரு தோழமைக்கு அடித்தளம் இடப்பட்டது. மொழி எங்களிடையே பெரிய தடையாக இருந்த காலம் அது. எனக்கு தமிழ் தவிர ஒன்றும் தெரியாது. என் ஆங்கிலம் கேட்டால் ராபர்ட் கிளைவ் பரம்பரையை சேர்ந்தவர்கள் என் தலைக்கு விலை வைத்து விடுவார்கள் - எனவே என் ஆங்கில புலமையை நான் பொதுவாக வெளிப்படுத்தி கொள்வதில்லை.

தோழமை அற்புதமான நிலையில் இருந்ததற்க்கே மொழி தடைதான் காரணமாகி இருந்தது. இருவரது மழலையும் இருவருக்கும் சுகமானதாக இருந்த காலகட்டம். ஆளில்லாத கடற்கரை எங்கள் தளமாக இருந்தது. முதன் முறை நாங்கள் முத்தமிட்டு கொண்டதும் அங்கேதான். அந்த தோழமையில் நடந்த சம்பவங்களை எப்போதாவது வாழ்வில் ஒரு குறுநாவலாகவாவது எழுதும் எண்ணம் எப்போதும் உண்டு. பின்னர் தோழமையின் வாழ்வில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவம் என் வாழ்விலும் கொஞ்சம் குடும்ப ரீதியான பிரச்சனைகளை கிளப்பியதற்க்கு பின்னர், நாங்கள் பேசிக்கொள்ள ஏன் முயற்சித்து கொள்ளவில்லை என்பதும், நேருக்கு நேர் சந்தித்தபோதும் வலுக்கட்டாயமாக முகம் திருப்பி கொண்டது, மன்னிப்பு கேட்பதற்க்காக சந்தித்து ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருததும், யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் தலையணை நனைத்து இருந்த இரவுகளும் - இன்றும் எந்த காரணத்தையும் எனக்கு புரியவைக்கவில்லை. பிரிவுக்கு பின்னர் முகவரிகளை தொலைக்கும் வினோத பிறவியாக நான் வாழ்ந்திருந்த குழப்பமான காலகட்டங்கள் அவை. ஒழுங்காக சட்டையை -இன் செய்து தலை சீவி மீசை ஒதுக்கும் போதெல்லாம் ஒரு வினாடியாவது இதனை முதன்முறையாக சொல்லி கொடுத்த தோழமையை நினைக்காமல் இருக்க முடிவது இல்லை.

ஊரெல்லாம் சந்தோஷமாக இருக்கும் நாட்களில்தான் யாரோ சிலரின் வாழ்க்கை மீண்டும் எழுதபடுகிறது. பெரும்பால இரவுகளில் பட்டாசு சத்தங்களும், போகி கொழுத்தும் தீயின் வீச்சமும் கடந்து போன இறுக்கமான சில இரவுகளையும் அதன் உறவுகளையும் நினைவுறுத்துவதில் ஆச்சரியமில்லை. கடந்து செல்லும் சாலையில் பிரித்து போட்டிருக்கும் ரோஜா பூக்கள் சில நிமிடங்களுக்கு முன் கடந்து போன மரண ஊர்வலத்தை நினைவுறுத்துவதை காட்டிலும் - நாம் கடந்து வந்த மரணங்களைதான் அதிகம் நினைவுறுத்துகின்றன. பிரிவும் மரணமும் தர்க்கபடி ஒன்றுதான். வீட்டில் இருந்து பிரிந்து வந்து தனியாக வாழ்ந்த கல்லூரி காலங்களில் எல்லாம் வெட்கம் விட்டு தனிமையில் அழுது இருக்கிறேன். காரணங்கள் ஆயிரம் இருந்திருக்கின்றன - எனினும் எல்லாம் என்னை மட்டுமே சார்ந்து இருந்திருந்திருக்கின்றன. சந்தோஷமான தருணங்களை நினைவுறுத்திகொள்ளும் அதே மனதின் திண்மை - கடந்து வந்த இறுக்கமான தருணங்களையும் கொள்ளுமாயின் - வாழ்வியல் சார்ந்த என் நிலையில் முன்னேற்றம் கொண்டுள்ளதென கொள்ளலாம்.

Sunday, October 08, 2006

நினைவுகளில் பெயர்கள்..

ரேடியோ... பொதுவாக பயணங்களில் ரேடியோ.. பிராந்திய விஷயங்களை சொல்லும் போதும்.. மெல்லிய மதிய நேர மற்றும் முன் இரவு பாடல்களிலும்..முத்திரை கொண்ட விஷயம்... ரேடியோ சொல்லும் நேயர்களின் பெயர்கள் பெரும்பாலும் அதிகம் கேட்டிராதவை. தங்களுக்கு விரும்ப்பமான பாடல்களை கேட்கும் அவர்களின் ஆர்வத்தை விட...அவர்களின் பெயர்களை கவனிக்கும் என் ஆர்வம் அதிகம் என்பேன் நான். சில
பெயர்கள் விசித்திரமானவை... சில பெயர்கள் சட்டென பழைய நண்பர்களை நினைவுறுத்தும்... சில பெயர்களை கேட்கும் போது அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை வரும். சில பெயர்கள் பழைய சம்பவங்களை நினைவூட்டும்...அவை மறக்கமுடியாத மழைக்காலமாகவும் இருக்கும்...சிலரின் மரணமாகவும் இருக்கும்...

சினிமா - பார்வை கோளாறுகள்.

நல்ல இசை, திறமையான சண்டை காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு, சொல்லி கொடுத்தால் திறமை காட்டும் நடிகர்களும் நடிகைகளும்... இருந்தும் இந்திய சினிமாவில் வருடத்துக்கு மிக சில நல்ல திரைப்படங்களே வெளிவருகின்றன. இந்தியாவின் அனைத்து பகுதி திரைப்படங்களையும் குறிப்பிட்டாலும் வெறும் 20 சதவீதம் மட்டுமே அகில உலக சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் தகுதியை பெறுகின்றன. அதுவும்
பாடல்களையும் சண்டை காட்சிகளையும் நீக்கிய பிறகு (பெறும்பாலும் இவை நிஜம் சார்ந்து இருக்காததால்). திரைப்பட விழா படங்களிலும் குறும்படங்களிலும் பெறும்பாலும் தெளிவான திரைக்கதையும் பாத்திர அமைப்புமே முன்னுறிமை பெறுகின்றன என்றாலும் இசை, ஒளிப்பதிவு, நடிப்பு ஆகியவனவும் கருத்தில் கொள்ள படுகின்றன. இன்றைய நிறைய தமிழ் படங்களை பார்க்கும் போது 3 நாள் பாம்குரோவில் ரூம் போட்டு, 4 புல்
பாட்டில் ரம்மும், மூன்று நேரமும் கோழி பிரியாணியும், பர்மா பஜார் டிவிடிகளும் இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் வந்த ஒரு இயக்குனர் நடிகராக நடித்த வழக்கமான ரவுடியிஸ திரைப்படம் ராம் கோபால் வர்மாவின் திரைப்படத்தின் அப்பட்டமான காட்சி தழுவல். கதை கொஞ்சம் மாற்றபட்டு காட்சிகள் (கோணம், ஒளி உட்பட) அனைத்தும் அப்பட்டமான தழுவல். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யபடும் தமிழ் படங்கள்
இன்னொரு வகை கொடுமை.. லாஜிக் என்ற வார்த்தையை குழி தோண்டு நிறைய உப்பு போட்டு உயிரோடு புதைத்து விடுகிறார்கள்.. திரைக்கதையும் பாத்திர அமைப்பும் நிறைய கதைகளில் இருப்பதில்லை. நல்ல திரைப்படங்கள் நாவல்களில் இருந்து உருவாக்க படுகின்றன. அவை மனித வாழ்க்கையை, வாழ்வின் பிரதிபலிப்புகளை, மனித உறவுகளின் வலிமையை சொல்கின்றன. உலகின் எந்த போற்றபடும் திரைப்படத்தையும் எடுத்து
பாருங்கள். அவற்றில் இவை இருக்கும். சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் சித்தார்த்தா... அமைதி தேடும் துறவியையும் அவன் வாழ்க்கையும் சொல்லும் சுலபமாக புரிய கூட ஆங்கில படம். இன்னொரு திரைப்படம் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு மாற்றமடையும் மனித வாழ்க்கை பற்றி பேசும் ஒரு திரைப்படம்... ஒருவன் தொழில் அதிபர், ஒரு பெண் - கலெக்டர் மனைவி - இன்னொருவன் நக்ஸலைட்...இவர்களின் உறவு சிக்கல்கள்.. அரசியலும் நிஜமும் கலந்த பின்னனியுல். மற்றுமோர் திரைப்படம் - அகதியாக வந்து மக்கள் தலைவனாக உயரும் ஒரு கருப்பின சமூக கதை... இந்த திரைப்படங்கள் எந்த வித கதாநாயகதனமோ கிடையாது... பாடல்கள் பிண்ணனியில் மட்டும்.. தெளிவான அதிக புத்திசாலிதனம் காட்டாத வசனங்கள். நல்ல ஒளி ஒலி அமைப்பு... ஆரவாரமில்லாத நடிப்பு.. ஒரு திபேத்திய திரைப்படம் சென்னையில் திரையிடபட்ட போது அதில் வரும் 15 நிமிட உடலுறவு காட்சி மட்டுமே பெரும்பாலும் பேசப்பட்டது உச்சகட்ட முட்டாள்தனம். பெரும்பாலும் இந்த திரைப்படங்களை திரையிடும் அரங்குகளில் கூட்டம் இருப்பதில்லை. யாராவது சில காதல் ஜோடி (காந்தி மண்டபத்திலோ வள்ளுவர் கோட்டத்திலோ இடம் கிடைக்காதவர்கள்)அல்லது கொஞ்சம் தாடி வைத்த திரைப்பட ஆர்வலர்கள், அபூர்வமாக சில வெளிநாட்டினர்...மற்றபடி யாரும் ஓடி விளையாடும் அளவுக்கு இடம் கிடக்கிறது. செலவுக்கு பயந்து என் போன்ற ஆசாமிகள் டிவிடியில் திரைப்படங்களை பார்ப்பதும் காரணமாக இருக்கலாம்... நல்ல சினிமா நல்ல நாவலில் இருந்து கிடைக்கிறது. நல்ல நாவல் விற்பது இல்லை.

தெருவிழாக்கள்...

சில வாரங்களுக்கு முன்பு நான் தங்கியுள்ள பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா. சென்னையில் கோவில் திருவிழா பாடல்கள் கூட கொஞ்சம் முரட்டுதனமாகவும் மரியாதையில்லாமலும்தான் இருக்கின்றன.. வருவியா..வரமாட்டியா என சாமியையே கொஞ்சம் மிரட்டுகிறார்கள். அப்புறம் மேடை போட்டு ஆட்டம். சினிமா பாடல்களுக்கு விடலை பசங்களின் குத்தாட்டம்.. கூட்டத்தில் நிற்க்கும் இளம்பெண்களை குறிவைத்த
சினிமாத்தனமான ஆட்டம். 50 ரூபாய் டிசர்ட்டும் 100 ரூபாய் ஜீன்ஸும் போட்ட சூர்யாக்களும், விக்ரம்களும், விஜய்களும்...கூட ஆடும் ஜோதிகாக்களும், சினேகாக்களும்.. இன்னும் பிற கதாநாயகிகளும். ஒரு குறிப்பிட்ட வயதில் தன்னை ஒரு பிரபலமான நடிகராகவோ, நடிகையாகவோ.. கொஞ்சம் அவர்களின் சாயலாகவோ நினைத்து கொள்ளும் போதையின் விளைவு இது... கோவில் திருவிழாக்கள் இதற்க்கு நிறைய வழிவகை
செய்கின்றன. முன்னரெல்லாம் ஆர்கெஸ்டிரா வைப்பார்கள்...எ.ஆர் ஈஸ்வரியின் போதை பாடல்கள் நிச்சயம் இருக்கும். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்.. கூத்து.. காணாமல் போய்விட்ட விஷயங்கள் நிறைய உண்டு திருவிழாக்களில். எங்கள் ஊரில் தேர் திருவிழா நேரத்தில் நாடகம் போடுவார்கள். கோழி சண்டை உண்டு... வழக்கமான கரகாட்டம் உண்டு. கரகாட்டம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் சிரிப்பை அடக்கி கொண்டு
ரகசியமாய் ரசிக்கும் காம வேடிக்கைகள்...பாட்டுகள்.. அதன் அர்த்தங்கள் சிலருக்கே புரியும்.. புரியாதவர்கள் விடலைகள்.. பல அர்த்தங்களை கொண்டு சிரித்து கொள்ள வேண்டியதுதான்.. சில வீடுகளில் வி.சி.ஆர் வைத்து படம் போடுவார்கள். ஊர் ஊராய் வரும் சினிமா வண்டி (கடலை காட்டுக்குள் திரை கட்டி படம் போடும் குழு) வந்தால் கூட்டம் அங்குதான் இருக்கும். பெறும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்... கொஞ்சம் வசதிபடைத்த விடலைகளுக்காக (மீசை நரைத்த பெரிசுகளுக்கும்தான்) ரெக்கார்டு டான்ஸ்... பெறும்பாலும் ஊருக்கு வெளியே... சில சமயம் அது வெட்டு குத்து அளவுக்கு போவதுண்டு.. ரெக்கார்டு டேன்ஸ் பெண்கள் ஆண்களுக்கு பெண் வேடம் போட்டது போல இருப்பார்கள். வெகு அரிதாக அழகான பெண்களும் வருவதுண்டு... ஆனாலும் மொத்த ஆட்டத்தில் சில நிமிடங்களே வரும் சுத்தி சுத்தி ஆடும் அழகுக்காக சாராயமும், வருத்த கறியும் காசும் கொண்டு பார்த்து விட்டு.. "போன தடவ மாதிரி இல்ல மாப்ள.. " என்று வருத்தபட்டு கொண்டு வரும் சமுதாயம்.. சில சமயங்களில் சைக்கிள் கட்டி கொண்டு திருட்டிதனமாக ரெக்கார்ட் டேன்ஸ் பார்த்ததுண்டு... கரகாட்ட தேவதைகளை தொடர்ந்து கொண்டு அடுத்த ஊர் வரைக்கும் போனதுண்டு... இன்றும் ஊர் பக்கம் போகும்போது அந்த கடலை காடும், காட்டு தேவதை கோவில் மண்டபங்களும் அன்று நடந்த ஜால்ரா சலங்கை சத்தங்களை நினைவூட்டுவதுண்டு...

கலாச்சார பாதுகாப்பும் பெண்ணும்

கலாச்சார பாதுகாப்பு பற்றி மறுபடியும் ஒரு பதிப்பு... யாராவது கொடும்பாவி கொழுத்துவதாக இருந்தால் பாண்டிபஜாரில் டிராபிக் இல்லாத நேரத்தில் கொழுத்தலாம்... போன் செய்து திட்டுபவர்கள் அலுவக நேரம் தவிர மற்ற நேரங்களில் தொடர்ப்பு கொள்ளவும். சமீபகால (திடீர்) கலாச்சார பாதுகாப்பு நிகழ்வுகளை பார்க்கும் போது பெரும்பாலும் அவை பெண்கள் தொடர்ப்பாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது (அது உள் மன பிராந்தி என்பவர்கள் கொஞ்சம் விளக்கவும்...). சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம். மனைவி கணவனின் காதலை போற்றி, அவனின் பழைய காதலியை கூட்டி வந்து அவனுடன் ஒரு நாள் தங்க வைக்கும் காதல் கதை... வசனங்கள் காதலையும் புரிதலையும் அதன் உள்ளார்ந்த மன முதிர்ச்சியையும் சொல்லும் போதிலும்... கதையின் ஒரு வரி தெளிவாக சொல்வது - "மனைவி தன் கணவனின் காதலை மதித்து அவன் காதலியை மீண்டும் அவனுடன் ஒரு நாளாவது சேர்ந்திருக்க வைப்பது". என் கருத்து இந்த ஒரு வரியில் தான். எந்த கணவனாவது தன் மனைவியின் காதலை மதித்து, அவளுடைய பழைய காதலனை ஒரு நாளாவது (பகலிலாவது) தனிமையில் - தன் வீட்டில் தனித்திருக்க அனுமதிப்பானா... இந்த கருத்துடன் தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா..!!! எல்லா கலாச்சாரம் சார்ந்த விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணை (உடல் ரீதியாக பெண்ணை - இதனை கற்பு என்றும் சொல்லி கொள்கிறார்கள்.. ) சார்ந்தே அமைந்திருக்கின்றன என்பது என் கருத்து. ஆணுக்கு தன் ஆளுமை (பச்சையாக சொல்வதென்றால் - மனம் மற்றும் உடல் சார்ந்த ஆளுமை) மேல் கொண்ட அதிருப்தியும் சந்தேகமுமே ஆண் வலியுருத்தும் பல கலாச்சாரம் சார்ந்த அமைப்புகளுக்கு கரு. உயிர், பயர், கபி அல்விதா நா கெஹனா ஆகிய திரைப்படங்கள் சொல்லும் உணர்வு சார்ந்த உறவுகள் மிக சுலபமாக கொச்சைபடுத்தபடுவதற்க்கும் இதே அதிருப்தி + சந்தேக உணர்வுதான் காரணம். தான் தனிமைபடுத்தபட்டு விடுவோம் என்ற பயம் இதன்
அடிநாதம். பெண்களின் சமுதாய உயர்வு மற்றும் குடும்ப அமைப்பில் உயர்வு ஆகியவை காலம் காலமாக தடுக்கபட்டு வந்த காரணமும் இதுதான் என்பது கொஞ்சம் வரலாறு படித்த நண்பர்களுக்கு புரியும். படித்த பெண் யோசிப்பாளாகவும், யோசிக்கும் பெண் மிக சுலபமாக தன் வாழ்க்கையை அமைத்து கொள்வாளாகவும் ஆண்கள் புரிந்து வைத்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு திரைப்பட வசனம் உண்டு.. "காதல் என்பது.. சம்பந்தபட்டவர்கள்
பேசி கொள்வது... அடுத்தவரை முன்னேற்றுவது... உணர்வு அடிப்படையில் முதிர்ச்சி அடைய வைப்பது... " எத்துனை ஆண்கள் காதலை அப்படி புரிந்து கொள்கிறார்கள்.. பெரும்பாலும் பெண்களே அத்தகைய மன முதிர்ச்சியுடன் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்...

வியாபார மேடைகள்...

வியாழக்கிழமைகளில் எங்கள் ஊரில் சந்தை இருக்கும். கொஞ்சமேனும் பணத்தை பற்றி அறிந்து கொண்டது அங்கேதான். பாட்டிதான் எல்லா பெருமைகளுக்கும் சொந்தகாரர். சந்தைக்குள் நுழையும்போதே இனிப்பு பாகில் செய்யபட்ட தேர் பொம்மைகள் இருக்கும் - மஞ்சள் மற்றும் சிவப்பில். அப்புறம் ஜவ்வு மிட்டாய் - வாட்ச் கட்டி விடுவார்கள். மளிகை பொருள்களின் வாசனை கவிய குறுக்கும் நெடுக்குமாக சின்ன சின்ன கடைகள்.
சல்லிசான காய்கனி வகைகள்.. கூறு கட்டி விற்பார்கள். பலாப்பழம்..வாழை.. மற்றும் மாம்பழம். சந்தைக்கு கொஞ்சம் வெளியே கருவாடும், உப்பு கண்டமும், கறியும். சந்தைக்கு போய்வருவது ஒரு வகையில் வாரத்திருவிழா. அடுத்த நாள் இதே கூட்டம் சினிமா கொட்டகையில் விசிலடித்து கொண்டு இருக்கும். இரண்டாவது ஆட்டம் முடிந்து வரும்போது சந்தை மேடையில் ஊர் காவல் படை இளைஞர்கள் இருப்பார்கள்...சில முறை
சந்தையில் அபூர்வமாக பொம்மலாட்டம் பார்த்ததுண்டு. பெரும்பாலும் மகாபாரத கதைகள். பேருந்துகள் இருந்தாலும் வண்டி கட்டி கொண்டு பக்கத்து கிராமங்கலில் இருந்து வியாபாரிகளும் மக்களும் வருவதுண்டு.. யாரும் இல்லாத மற்ற நாட்களில் மதிய நேரங்களில் சந்தை ஒரு புழுதி படர்ந்த மைதானம்.. கொஞ்சம் மேடைகளும்.. கொஞ்சம் ஆடுகளும்... நிழலில் தூங்கும் கிழவர்களையும் தவிர... அங்கே யாரும் இருந்ததில்லை...

மொழி காவலர்கள்

மொழிக்காவலர்களாக தங்களை காட்டி கொள்ளும் மொழி ஆர்வலர்களை நான் கேட்க நினைக்கும் கேள்வி. இன்றைய இந்தியாவின் தொழில் புரட்சி முக்கியமாக கணிப்பொறி மற்றும் தொலைதொடர்ப்பு. இவற்றில் வேலை செய்ய ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். சுந்திர இந்தியாவில் தொழில் ரீதியாக முன்னேறிய அனேகம் பேர் தாய்மொழி தவிரவும் மற்ற மொழிகளிலும் கொஞ்சம் புலமை பெற்றிருந்தது உண்மை. இந்த
அடிப்படையில்லாத மொழி காவலர்களால் படித்த இளைய சமுதாயத்துக்கு எந்த பயனும் இல்லை(நம் கல்வி முறையே இன்றைய வாழ்க்கை முறைக்கு பொருத்தம் கிடையாது என்பதும் என் வாதம்). எங்கு எந்த மொழி உபயோகபடுத்த பட வேண்டிய தேவை உள்ளதோ - அங்கே அந்த மொழி உபயோகம் செய்வதில் தவறேதும் இல்லை. பிடிவாதமாக தாய்மொழிதான் எல்லா இடங்களிலும் வேண்டும் என்றால் - மொழி காவலர் நண்பர்களே -
உங்கள் வாழ்க்கையில் ஒரு மாதம் முழுக்க முழுக்க தாய்மொழி மட்டுமே புழங்கி - அதே தாய்மொழியால் ஒரு 100 பேருக்காவது நல்ல பொருளாதார அமைப்பில் வேலை வாங்கி கொடுத்து பிழைக்க வையுங்கள் - அதனை முன்னுதாரணமாக காட்டுங்கள். பின்னர் - உங்கள் தாய் மொழிக்கான போராட்டங்களை தொடருங்கள்.. உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

பெளர்ணமி பூஜை

இந்த முறை கோவை வரும்போதே வீட்டில் ஏற்பாடு செய்துவிட்டார்கள். அதனால் குலதெய்வம் கோவில் பிரயாணம் வழக்கத்தை விட திருப்தியாக இருந்தது. பெளர்ணமியும் வெள்ளிகிழமையில் அமைத்து விட்டது. இரவு பெளர்ணமி பூஜை விசேஷம். அபிஷேகம், ஆராதனை, படையல், பொங்கல், பஞ்சாமிர்த்தம், அவல் என திருப்தியான பூஜை. பல்லடத்தில் இருந்து உள்ளே உள்ள கிராமம் அது. எங்கள் குலதெய்வம் - அங்காளம்மன். காட்டு பெண் தெய்வம். கிராமத்தில் மொபைல் போன் டவர் எல்லாம் எடுக்காது (நிம்மதி). நல்ல காற்று. திருப்பூரில் பணம் படைத்தவர்கள் இங்கே காற்றாலையில் முதலீடு செய்திருக்கிறார்களாம். அரச மரத்தடி பிள்ளையார் அருகில் உட்கார்ந்து காற்றை அனுபவிக்கும் சுகம் அலாதி. கோவில் கிணற்றில் கல்கண்டு தண்ணீர். நல்ல ஓடு வேய்ந்த மண்டபம். 250 பேர் நிற்க்க கூடிய கோவில் வளாகம். ஒற்றை கோபுரமும்..ஒரு காவல்
தெய்வமும் கொண்ட பெண் தெய்வம். ஒரு இனம் புரியாத திருப்தி இந்த கோவிலுக்கு வரும்போது எனக்கு ஏற்படுவதை உணர்கிறேன். என் திருமணத்தை இந்த கோவிலில்தான் வைத்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அம்மா மகிழ்ச்சியோடு சம்மத்தித்து இருக்கிறார். பெண்தான் யார் என்று தெரியவேண்டும்... நமக்கு செவ்வாய் தோஷம் உண்டென்பது ஜாதக கருத்து... அதுவும் தவிர வீட்டில் போய் பெண்பார்பதற்க்கு நான் அனுமதிப்பதில்லை. பெண் பார்த்தல் ஏதாவது கோவிலில் நடப்பது நல்லது - அதற்க்கு நிறைய தார்மீக காரணங்கள் உண்டு - எந்த விதத்திலும் மூட நம்பிக்கைகள் காரணம் கிடையாது. இன்னும் ஒரு வருடம் - அதற்க்கும் நானே பெண்ணை சொல்லிவிட வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் பெண்னை ஒத்து கொள்ள வேண்டும்... எப்படி இருப்பினும் எனக்கு சம்மதமே... திருமணம் மட்டும் கிராம கோவிலில் சொந்த பந்தம் எல்லாம் அழைத்து பந்தி போட்டு பரிமாறி கொண்டாட்டமாக நடக்க வேண்டும்... கிராமத்து கிழவிகளின் ஆசீர்வாதமும், குறும்பு பேச்சோடு கூடிய சொந்தங்களும், விடலைகளும் கூடி வாழ்த்திதான் திருமணம் என்பது என் கனவு...பார்க்கலாம்..

கொஞ்சமாய் வாழ்க்கை...

வேகமான வாழ்க்கை நகரத்தின் உயிர். வியாபாரமும், பணமும் நொடிக்கணக்கில் இயங்கும் சென்னையில் நான் வியக்கும் பகுதி இந்த வீதி. எலக்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி சார்ந்த கடைகளையும் சமீபகாலங்களில் மொபைல் தொலைபேசி விற்க்கும் கடைகளையும் அடைத்துள்ள பகுதி... என் வியப்பு இங்குள்ள வியாபாரமும் பணமும் அல்ல. வேலை செய்யும் மனிதர்கள். சின்ன அறை - அதற்க்குள் ஒரு கணிப்பொறியை முழுமையாக
செம்மைபடுத்த உதவும் உபகரணங்கள் - எங்கோ தென் தமிழகத்தில் டிப்ளமா படித்த வல்லுனர்கள்..அவர்களின் மறக்காத ஊர் பாஷை...மதிய நேர ரோட்டோர பிரியாணி...எல்லா சந்துகளிலும் சின்ன சின்ன அறைகளில் அவர்களின் மதிய தூக்கமும் இரவு உழைப்பும்.. வார இறுதி சினிமா.. கூட்டமாக மெரீனாவில் அரட்டை... பின் இரவுகளில் மதுபானத்தோடு தூக்கம்... வீட்டுக்கு பணம் அனுப்பும் பெருமை... மூன்று மாதம் ஒருமுறையாவது ஊருக்கு போகும் உற்சாகம்... எனக்கு இவர்களில் வெகு சிலர் நண்பர்களாக உண்டு. புத்தம் புதியதாய் சந்தைக்கும் வந்திருக்கும் அதி நவீன கணிப்பொறி சாதனம் பற்றி விலாவரியாக பேசும் திறமைசாலிகள்... எனினும் அடுத்து என்ன செய்யலாம் என பெரிய அளவில் திட்டமிடாதவர்கள்... தெரிந்த நண்பர்கள் மூலமாக இவர்களிலில் சிலருக்கு வேலை வாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்ட போதும், அவர்களின்
ஆங்கில திறமை மேம்பட சிறிய அளவில் முயற்சிகள் செய்த போதும் இவர்கள் காட்டிய ஈடுபாடு மிகவும் அற்புதமானது - அவர்களின் ஆர்வம் வெளிப்பட்ட முக்கியமான தருணங்கள் அவை... வாழ்க்கை எல்லாருக்கும் போல அவர்களுக்கும் கொஞ்சமாய் தன் தயவை வழங்கி கொண்டுதான் இருக்கிறது.