அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, December 03, 2006

தாண்டி செல்லும் மேகங்கள்

ஓவ்வொரு முறையும் இந்த மாதிரியான அனுபவம் ஏற்படும்போது நான் யோசிப்பதுண்டு - இதற்கு காரணம் நானா, அவர்களா என்று. "அனுபவம்" என்றவுடன் சில தோழமைகள் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம். இது நட்பு என்ற குழப்பம் சார்ந்தது. இதனை பற்றி பெரும்பாலான என் தோழமைகளுடன் பல முறை விவாதித்தாகி விட்டது, சில முறை எழுதியும் ஆகி விட்டது எனினும் இம்முறை அது மறுபடியும் நடக்கிறது. எதிர்பாலினம் சாராத நட்பில் பெரும் பாலும் குழப்பங்கள் இல்லை என கொள்ளலாம். அதன் குழப்பங்கள் பெரும்பாலும் சுய அரசியம், தொழில், பொருளாதார சிக்கல்கள், அடிப்படை கருத்துகளில் வேறுபாடுகள் எனவே அமைகிறது. எதிர்பாலினம் சார்ந்த நட்பின் மிகப்பெரிய சிக்கல் நம்பிக்கை சார்ந்தது. ஆளுமையும் நம்பிக்கை சார்ந்த குழப்பங்களும் பல நட்புகளை கேலிக்குரியதாக்கி விடுகின்றன.

நட்பு துளிர்க்கும் நிமிடம் அறிய முடியாதது. அது முறியும் நிமிடம் மறக்க முடியாதது. யார் வாழ்விலும் உள் நுழையும் நட்பு, வெளியேறும் போதும் எந்த வலியையும் கொடுக்காமல் போகும் எனில் அது அற்புதமானது - எனினும் இது பெரும்பாலும் அமைவதில்லை.

ஒத்த ரசனைகள் நட்பினை தோற்றுவிக்கின்றன, முதலில் கவிதைகள் அல்லது ஓவியங்கள்.
பின்னர் கொஞ்சம் இலக்கியம். பின் வாழ்வின் பக்கங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளபடுகின்றன. என்
பெரும்பாலான எதிர்பாலின நட்புகளுக்கு முன்னமே நான் சொல்லிவிடுவதுண்டு - என் எல்லா
நட்பிலும் மெல்லிய இழை போல ஒரு நூல் காதலும் உண்டு என்று. அது யாரையும் தொந்தரவு
செய்யாது. அது உயரும் நிலையில் சில நிமிட சுய பரிசோதனை எதனையும்
தெளிவாக்கிவிடுகிறது. நட்பு என்ற நிலையில் இருந்து காதல் என்ற நிலைக்கு உயர்ந்த
தோழமைகள் உடனான வாழ்க்கை சுகமானது. இது இருவரின் சுய சம்மதத்துடன்
ஏற்படல் வேண்டும். காதல் பற்றி என் கருத்து சுலபமானது - 'காதல்கள்
திருமணத்தில்தான் முடியவேண்டும் என்பதல்ல - உன் வாழ்வில் நீயும் என் வாழ்வில் நானும்
செளக்கியமாக இருக்க நாம் உறுதுணையாக நின்று நினைப்போம் ஆயின் - பிரியும் காதலே
மேல்.'

ஆனால் இது நம் கலாச்சாரம் ஒத்து கொள்ளாத விஷயம். ஒருவரை காதலித்த பெண்ணை
அடுத்தவர் ஏற்று கொள்ள மாட்டார். ஆண் ஆயிரம் பெண்களை காதலித்தாலும் அது வீரம் என்று
ஆரம்பத்திலேயே சொல்லி வளர்த்தபட்டு இருக்கிறார்கள். கற்பு போன்ற குழப்பங்கள் எல்லாம்
பெண்களுக்கு மட்டும்தானாம். காதல் எந்த நிமிடமும் யாருடனும் வந்து விட்டு போகட்டும்
- முடிவில் உன் வாழ்க்கை யாரையும் தொந்தரவு செய்யாத வகையில் இருக்கட்டும். இந்த கருத்து
பெரும்பாலும் கற்பு சார்ந்த விஷயமாகவே கொள்ளபடுகிறது. ஒருவரை ஒருவர்
காதலித்தல் உண்மையாயின் அடுத்தவர் வாழ்க்கை அவர்களில் சுயம் போல அமைய வழிவிடுவதும்
காதலின் வெற்றியே. உங்கள் காதலில் நீங்களும் அப்படியா..? என்ற கேள்வியை எழுப்பும்
நண்பர்களுக்கு - ஆமாம். நான் காதல் கொண்டவர்களும், என்னை காதலால் கொண்டவர்களும்
கொஞ்சம் தெளிந்தே இருந்தோம் என்று கொள்ளலாம். ஒருவரை ஒருவர் மிரட்டி கொண்டதில்லை. என் வாழ்வில் தென்றல் போல வந்த பெண்கள் எல்லாம் என்னோடு உண்மையாகவே வாழ்ந்தார்கள். எங்கள் காதல் இன்னும் எங்கள் மனதில் உள்ளது - ஆனால் அது எங்கள் வாழ்வில் இடரவில்லை.
என் வாழ்வில் இருந்து வெளியேறும் பெண்கள் யாரும் என்னை சபித்ததில்லை. என் வாழ்வை அவர்கள்
கவனித்து இருக்கிறார்கள். என்னுடன் வாழ்தலில் உள்ள நிறை குறைகளை நாங்கள் பேசி கொண்டு
இருந்திருக்கிறோம். என் தோல்விகளாக நான் ஒப்பு கொள்ளும் என் படிப்பு மற்றும் வாகனம்
ஓட்டும் திறமை இல்லாமை தாண்டி, நான் கவரபட்டு இருக்கிறேன் - என் கவர்தலில் சாகசங்கள்
இருந்ததில்லை. என்னுடன் சேரும்போதும் என்னிடம் இருந்து விலகும் போது சலனங்கள் இல்லாமல்
இருக்கும் வித்தையை சில பெண்கள் கற்று தந்து இருக்கிறார்கள். புரிதலில் இருக்கும்
சூட்சுமங்களை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். குழப்பமான நட்புகள் முறிந்து விலகும்
நிமிடங்களில் என் குழப்பங்களை பேசி தீர்த்து இருக்கிறார்கள். என் வருங்கால மனைவிக்கு
நல்ல கணவனாக இருக்கும் சாஸ்திரங்களை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். என் வருங்கால
மனைவிக்கும் இது போன்ற நண்பர்கள் இருந்தால் அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணங்களை
விதைத்து உரமாக்கியிருக்கிறார்கள்.

எனக்கு இது சுகமானதாக இருக்கிறது. வெகுசில சமயங்களில் சில பெண்கள் தெளிவான
பார்வை இல்லாமல் அல்லாடும்போது அவர்களை அழைத்து பேச தோன்றினாலும் - அது உண்டாக்கும்
பின் விளைவுகளை எண்ணி அமைதியாக இருக்கிறேன்.

காதல் என்பது உடலா உள்ளமா என்ற கேள்வியை எழுப்பும் குமுதம் தொடரை படித்து விட்டு -
என் பதிவையும் இணைத்து என்னுடன் சிலர் இந்த வாரம் விவாதித்தார்கள். நல்ல அனுபவம்.
தாண்டி செல்லும் மேகங்கள் போல வாழ்வில் தோழமைகளும் காதல்களும் அமைகின்றன. சில
மேகங்கள் மழை பொழிவை இனிமையான கணங்கள் ஆக்குகின்றன. சில அடைமழையை. அது
மேகங்களின் தன்மை பொருத்துதது. பூமி எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறது.