அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 10, 2008

தமிழ் காலை...

"T A M I L" என்று தூய டாமிலில் எல்லா தொலைக்காட்சி தேவதைகளும் 24 மணி நேரமும் கொஞ்சி கொண்டிருக்க... பொதிகை தொலைக்காட்சி காலை மணி 8:20க்கு ஒரு நிகழ்ச்சியை வழங்கி கொண்டிருக்கிறது. "எம்மொழி செம்மொழி" என்பது நிகழ்ச்சியின் பெயர் -வழங்குபவர் திரு. நெல்லை கண்ணன் அய்யா அவர்கள்.

திருவள்ளுவரையும், கம்பனையும்,ஆண்டாளையும், பட்டினத்தாரையும், பாரதியையும், தேவாரத்தையும் திருவாசகத்தையும் என்னதான் நாம் ரசித்து படித்தாலும், ஒரு நல்ல தமிழ் வாத்தியார் இயல்பான நகைச்சுவையோடு இவர்களை கையாளும் விதம் மேலும் ரசிக்கதக்கது. தமிழ் வாத்தியார்களுக்கான சுலபமான நகைச்சுவை சிலேடை, போகிற போக்கில் வாழ்வின் தத்துவங்களை சொல்லும் பாங்கு, வேகமான வார்த்தை விளையாட்டு மற்றும் கேட்பவர் மனம் அறிந்து தூண்டும் கருத்துகள் வேறு யாரிடமும் கண்டதில்லை.

காதலையும் காமத்தையும் பள்ளி வயதில் வக்கிரமில்லாமல் சொல்லி கொடுத்தது தமிழ் வாத்தியார்கள். நாங்கள் அய்யா என பொதுவாக அழைப்போம். 10ஆம் வகுப்பில் தமிழ் அம்மாவும் இருந்தார். திருக்குறளின் காமத்து பால் அப்போதெல்லாம் வயது வந்தவர்களுக்கான சமாச்சாரம். ஆண்டாள் பாசுரங்களும், கம்பனும் கூட அப்படித்தான். எனினும் எங்கள் தமிழ் அய்யா சொல்லி கொடுத்தார். வகுப்பில் அல்ல. சும்மா கூட நடக்கும்போது. மரத்தடி ஓய்வின் போது. ஞாயிறு மதிய முந்திரி மர நிழலில். அவர் பேசும் போது நகைச்சுவை விளையாடும். மீசையும் கண்ணும் புருவமும் துடித்து சிரிக்கும். குரல் மாயம் காட்டும். அவர் பேசி கொண்டே இருக்கவேண்டும் போலவும், நாம் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போலவும் இருக்கும். இனிமை தமிழா, அவரா என புரியாத நிலவரம். பெண் பிள்ளைகளும் ரசிக்கும் படி, அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து புரியும் படி சொல்லுவார். குற்றால குறவஞ்சி அவரின் விருப்ப பாடம்.

நெல்லை கண்ணன் அய்யாவின் என் தமிழ் வாத்தியார்களின் முகங்களை மறுபடி பார்க்கிறேன். தெரிந்த கருத்துகளானாலும் அவரின் தமிழ் பேச்சு நடைக்காகவும், விஷயம் சொல்லும் பாங்குக்காகவும், மெல்லிய நகைச்சுவைக்காகவும் விரும்பி பார்க்கிறேன். பொதிகை சொல்லாமல் கொள்ளாமல் நிகழ்ச்சியை இடை நிறுத்தி மாற்றும். அல்லது சட்டென வேறு நிகழ்ச்சிகள் சில நாள் வரும். மறுபடி மறுபடி அதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எல்லாம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் கவர்ச்சி தினமும் பார்க்கவைத்து விடுகிறது.

இப்போதெல்லாம் அவர் சொல்லி முடித்த செய்யுள்களை மறுபடி நானும் படித்து திரும்பவும் புரிந்து கொண்டு ரசித்து கொள்கிறேன். கொஞ்சம் வேறு பரிணாமத்தில் மறுபடி கம்பனும் வள்ளுவனும் அறிமுகமாகிறார்கள். ஆண்டாள் அற்புத காதல் தேவதையாகிறாள். பட்டினத்தார் தத்துவங்கள் கண்ணதாசனோடும் பட்டுகோட்டையாருடனும் ஒப்பு நோக்கபடுகின்றன.

ஆண்டாள் பாசுரங்களை படித்தலில் தமிழ் மட்டுமல்ல - ஒரு பெண் பிள்ளையின் காதலும் காமமும் அற்புதமான விஷயங்கள். வள்ளுவனின் புத்திசாலித்தனம் காமத்துபாலில் மிளிர்வதை கவனியுங்கள் - வாழ்க்கையை சொல்லி கொடுக்கும் அற்புத சுரங்கம் அது. ஆண் பெண் உறவின் அற்புதங்களை தெரிய ஏராளம் சொல்லி கொடுக்கபட்டு இருக்கிறது நம் பழங்கால செய்யுள் கவிதைகளில்.

பொதிகை இந்த நிகழ்ச்சியை எப்போது நிறுத்தும் என்று தெரியாது. ஒரு நல்ல தமிழ் நிகழ்ச்சி பார்க்கும் ஆர்வம் இருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் பரிந்துரைக்கிறேன்.

உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...

Wednesday, November 05, 2008

கொஞ்சம் இடைவெளி...கொஞ்சம் சங்கதி...

ஒரு நீண்ட இடைவெளி.. கிட்டதட்ட முழுமையான 6 மாதங்கள். நிறைய மாற்றங்கள் - சில புது வரவுகள், சில கருத்து வேறுபாடுகள், சில சங்கடங்கள், சில இழப்புகள், சில சந்தோஷங்கள் என முற்றிலும் அனுபவங்கள் நிறைந்ததாகவே எல்லா நாட்களும் அமைகின்றன. ஒவ்வொரு நாளிலும் ஒரு முழு திரைப்படம் அல்லது நாவலுக்குரிய சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நம்மை சுற்றி - எவ்வளவு கவனிக்கிறோம் என்பது மட்டுமே சங்கதி.

நிறைய படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதாமல் இருந்ததாலேயே எழுதவேண்டும் என்ற எண்ணம் நிறைந்து இருந்தது. குறிப்புகளில் இருக்கும் கருத்துகள் எல்லாம் மெல்ல மெல்ல எழுத வேண்டும். அலுவலக வேலை அமைப்பு மாறி இருக்கிறது - உருப்படியாக ஏதேனும் செய்யும் திருப்தி இருக்கிறது. வெகுதூர பயணங்கள் தினம் இருந்ததெல்லாம் இப்போது இல்லை - நேரம் கிடைக்கிறது. திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. பெண் நிச்சயம் கணிப்பொறி சார்ந்த துறை கிடையாது - இதனை பற்றிய விவாதம் அவசியமாகிறது - பின்னர் கவனிப்போம். இயல்பியல் வல்லுனர். கோபிசெட்டிபாளயம் அடுத்த நம்பியூர். பெண்ணை விட மாமனார் வெகு சுவரஸ்யமானவர். கலகலப்பான குடும்ப அமைப்பு. டிசம்பர் 8ல் திருமணம் - அனைவரும் வருக... :-) ...

வெகுநாளைக்கு பிறகு மறுபடி எழுத நவம்பர் 6 - எந்த காரணமும் இல்லை. 32 வயது ஆரம்பிக்கும் ஒரு முதிர் இளைஞனின் (விட்டு கொடுப்பமா என்னா..!!!) கருத்துகளின் என்ன வகையான தொனி இருக்கும் என அறிந்து கொள்வதில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். புதிய டிஜிட்டல் கேமிரா 8.1 மெகா பிக்ஸல் - புகைப்பட ஆர்வத்தை அதிகமாக்கி உள்ளது. ஒரு அனுபவம் முதிர்த்த நண்பரிடம் தொழில்நுட்பம் கற்று வருகிறேன். சென்னை கொஞ்சமாக பழகி விட்டது. இலக்கிய வட்டம் விரிவாகி உள்ளது. படிப்பது அதிகமாகி பகிர்ந்து கொள்வது குறைந்து விட்டது. நல்ல சினிமா, நல்ல புத்தகம் பற்றிய நம் கருத்துகள் எல்லாம் வெற்று புலம்பல்களை போல தொனியில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் சில தோழமைகள் பொருத்துகொண்டு இன்னும் பேசிவருவது ஒரு மகிழ்ச்சி.

மற்றபடி சமூகமும் வாழ்வும் நலமே.. இனி கொஞ்சம் தொடர்ச்சியான பதிவுகள் செய்ய வேண்டும் (குறிப்பு புத்தகம் நிறம்பி விட்டது). வலைப்பூக்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் எதிரொலிகளையும் பதிவு செய்யவேண்டும்.

அப்புறம் என்ன.. மறுபடி உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி (யாருமே இல்லாத இடத்துல இப்படி ஒரு டயலாக்...;-) .