அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, October 21, 2006

இருள் பிரியாமல்...

நேற்று இரவிலிருந்தே பட்டாசு சத்தம் ஓய்ந்ததாக நினைவில்லை. மழையும் தன் பங்குக்கு இரவும், காலையும் - மதியம் வரை கொஞ்சம் கொஞ்சமாய் பட்டாசு கொளுத்துபவர்களின் எரிச்சலையும் என் போன்ற மழை ரசிகர்களின் ரசிப்பையும் கொண்டு கொஞ்சமாய் வாழ்ந்து வந்திருந்தது.. சூடாய் தேநீர் கோப்பையுடன் மழை ரசிக்க இருள் பிரியாத அதிகாலை ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்திருந்த போது கடந்து வந்த சில தீபாவளி நினைவுகளை அசை போட சுகமாய் இருந்தது. 1991 - 92 - நான் கல்பாக்கத்தல் இருந்த போது ஒரு தீபாவளி நாளில் தான் சுகமான ஒரு தோழமைக்கு அடித்தளம் இடப்பட்டது. மொழி எங்களிடையே பெரிய தடையாக இருந்த காலம் அது. எனக்கு தமிழ் தவிர ஒன்றும் தெரியாது. என் ஆங்கிலம் கேட்டால் ராபர்ட் கிளைவ் பரம்பரையை சேர்ந்தவர்கள் என் தலைக்கு விலை வைத்து விடுவார்கள் - எனவே என் ஆங்கில புலமையை நான் பொதுவாக வெளிப்படுத்தி கொள்வதில்லை.

தோழமை அற்புதமான நிலையில் இருந்ததற்க்கே மொழி தடைதான் காரணமாகி இருந்தது. இருவரது மழலையும் இருவருக்கும் சுகமானதாக இருந்த காலகட்டம். ஆளில்லாத கடற்கரை எங்கள் தளமாக இருந்தது. முதன் முறை நாங்கள் முத்தமிட்டு கொண்டதும் அங்கேதான். அந்த தோழமையில் நடந்த சம்பவங்களை எப்போதாவது வாழ்வில் ஒரு குறுநாவலாகவாவது எழுதும் எண்ணம் எப்போதும் உண்டு. பின்னர் தோழமையின் வாழ்வில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவம் என் வாழ்விலும் கொஞ்சம் குடும்ப ரீதியான பிரச்சனைகளை கிளப்பியதற்க்கு பின்னர், நாங்கள் பேசிக்கொள்ள ஏன் முயற்சித்து கொள்ளவில்லை என்பதும், நேருக்கு நேர் சந்தித்தபோதும் வலுக்கட்டாயமாக முகம் திருப்பி கொண்டது, மன்னிப்பு கேட்பதற்க்காக சந்தித்து ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருததும், யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் தலையணை நனைத்து இருந்த இரவுகளும் - இன்றும் எந்த காரணத்தையும் எனக்கு புரியவைக்கவில்லை. பிரிவுக்கு பின்னர் முகவரிகளை தொலைக்கும் வினோத பிறவியாக நான் வாழ்ந்திருந்த குழப்பமான காலகட்டங்கள் அவை. ஒழுங்காக சட்டையை -இன் செய்து தலை சீவி மீசை ஒதுக்கும் போதெல்லாம் ஒரு வினாடியாவது இதனை முதன்முறையாக சொல்லி கொடுத்த தோழமையை நினைக்காமல் இருக்க முடிவது இல்லை.

ஊரெல்லாம் சந்தோஷமாக இருக்கும் நாட்களில்தான் யாரோ சிலரின் வாழ்க்கை மீண்டும் எழுதபடுகிறது. பெரும்பால இரவுகளில் பட்டாசு சத்தங்களும், போகி கொழுத்தும் தீயின் வீச்சமும் கடந்து போன இறுக்கமான சில இரவுகளையும் அதன் உறவுகளையும் நினைவுறுத்துவதில் ஆச்சரியமில்லை. கடந்து செல்லும் சாலையில் பிரித்து போட்டிருக்கும் ரோஜா பூக்கள் சில நிமிடங்களுக்கு முன் கடந்து போன மரண ஊர்வலத்தை நினைவுறுத்துவதை காட்டிலும் - நாம் கடந்து வந்த மரணங்களைதான் அதிகம் நினைவுறுத்துகின்றன. பிரிவும் மரணமும் தர்க்கபடி ஒன்றுதான். வீட்டில் இருந்து பிரிந்து வந்து தனியாக வாழ்ந்த கல்லூரி காலங்களில் எல்லாம் வெட்கம் விட்டு தனிமையில் அழுது இருக்கிறேன். காரணங்கள் ஆயிரம் இருந்திருக்கின்றன - எனினும் எல்லாம் என்னை மட்டுமே சார்ந்து இருந்திருந்திருக்கின்றன. சந்தோஷமான தருணங்களை நினைவுறுத்திகொள்ளும் அதே மனதின் திண்மை - கடந்து வந்த இறுக்கமான தருணங்களையும் கொள்ளுமாயின் - வாழ்வியல் சார்ந்த என் நிலையில் முன்னேற்றம் கொண்டுள்ளதென கொள்ளலாம்.

No comments: