அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

செக்ஸ் கல்வி

பெரும்பாலருக்கு செக்ஸ் கல்வி பற்றிய அறிவு என்பது புஜியம் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பேசும் பெற்றோரை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது. செக்ஸ் கல்வி என்பது எப்படி செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல - அதல்லாம் சொல்லி கொடுத்து வருவது இல்லை. முறையான செக்ஸ் என்ன, பாதுகாப்பு என்ன, சுயம் அறிதல் என்ன, சுகாதாரம் என்ன, உடல் உறுப்புகள் என்ன என்பதனையும் ஆணுக்கு பெண் பற்றியும், பெண் ஆண் பற்றியும் ஒரு அறிவும் கொடுப்பதுதான் செக்ஸ் கல்வி. கேட்டால் அதுதான் டிவியும் சினிமாவும் சொல்லி கொடுக்கிறதே என்கிறார்கள் - மார்பும் இடுப்பும் குலுக்கி ஆடும் ஆட்டமும், கட்டி பிடித்து உரசி கொள்வதும்தான் செக்ஸ் என்றால் - குழந்தை பிறப்பு என்பது கொக்கு கொண்டு வந்து போடும் விஷயம் என்ற அளவில்தான் செக்ஸ் அறிவு மக்களுக்கு இருக்கிறது என்று பொருள். 8ஆம் வகுப்பில் உடல்கூறு கல்வி என்று ஒரு விஷயம் அறிவியலில் இருக்கிறது - பல வாத்தியார்கள் அதனை கற்பிப்பதில்லை. செக்ஸ் பெரும்பாலருக்கு முறையற்ற வழியில்தான் அறிமுகம் ஆகிறது - தெளிவனா அறிவு இல்லாமலேயே , பல பெண்கள் ஆர்கஸம் என்றால் என்ன என்று தெரியாமலேயே, பெறும் பாலான ஆண்கள் தங்கள் திருப்தி அடைந்தவுடனே தூங்கி... குழந்தை பெற்றும் கொள்கிறார்கள் - அட ஏதாவது படித்தால்தானா ஏதாவது முழுசாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் - காம சூத்திரா புத்தகம் வாங்க வெட்கபடுகிறவர்கள், முக்குகடையில் சிவப்பு நாடாவும் மஞ்சள் நிலவும் வாங்குகிறார்கள். எது செக்ஸ் என்பதிலேயே குழப்பம் இருப்பதாக படுகிறது எனக்கு. செக்ஸ் உடம்பு கிடையாது - ஆரோக்கியமான மனதுதான் என்றால் யாருக்கும் புரிவதில்லை. உடல் உறுப்புகள் வெறும் எலும்பும் சதையும்தான் - மனசு ஆரோக்கியமான செக்ஸால் சூழப்படும்போதுதான் அது முழுமையான செக்ஸை கொண்டுவருகிறது. மனசு இல்லாத வெறும் கிளர்ச்சி என்பது ஒரு வகை வன்முறை. இந்த லட்சணத்தில் முறையான ஒரு அறிவு கொடுக்க தடை விதித்து சங்கம் வைக்கிறார்கள் - எதை அல்லது யாரை பாதுக்காகிறார்கள் என்றே தெரியவில்லை. கலாச்சார பாதுகாப்பு கடை விரித்து தெருவில் போகும் பெண் புடவை விலகினால் கூட வெறித்து பார்க்கும் அறிவு இல்லாத எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள். பெண்ணின் மாத பிரச்சனையை கூட செக்ஸாக கருதும் அளவுக்கு - ஒரு நாப்கின் வாங்க கூட ஆண்கள் அதிகம் இல்லாத மருந்து கடையை நாடும் அளவுக்கு குழப்பம் இருக்கிறது. வாய் கிழிய பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை - முதலில் செக்ஸ் கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் அதை பற்றிய கருத்துகள் வரட்டும். ஆரோக்கியமான உடல் நலமும் மன நலமும் வேண்டும் என்றால் எதுவும் முறையாக தெரிந்து கொள்ளட்டும். பத்திரிக்கைகளும் பிற ஊடகங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் - வெறும் வியாபாரத்துக்காக மோதவிடுதலில் யாருக்கும் நல்லது இல்லை.

உறவுகளின் மதிப்பு

ஒரு ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னவாக இருக்க முடியும். இந்த கேள்வியும் பதிலும் பல முறை நான் பலரிடம் விவாதித்த விஷயங்கள்தான். என் வாழ்விலும் முழுக்க தெரியாமலேயே கொஞ்சம் கடைபிடித்தும் கொண்டிருக்கிறேன்.. எனினும் இதே கருத்தை வாழ்க்கை பற்றிய பல்நோக்கு அனுபவம் கொண்டவரிடத்திலும் இருந்து படிக்க நேர்வது ஒரு நல்ல அனுபவம்...

கேள்வி: பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்.

பதில்: மதிக்கபடுவதை; தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கபடுவதை; நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கபடுவதை; தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை; தன் பலத்தை கொண்டாடும் குணத்தை; ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும்தான் என்னும் உயிரழுத்தும் ஸ்பரிசத்தை; சபையில் கொடுக்கும் கெளரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை; தாம்பத்யம் முடிந்த தருணங்களில் "குளியல் அறைக்கு முதலில் நீ போ" என்று வழங்கப்படும் முன்னுரிமையை;

அடிப்படையில் இது பெண் விரும்பும் விஷயங்கள் மட்டும் கிடையாது - ஆணும் கிட்டதட்ட இதே விஷயங்களை பெண்ணிடமிருந்து விரும்புகிறான் - ஒருவருக்கு ஒருவர் இதனை பரிமாறி கொண்டால் மட்டுமே உறவு சாத்தியபடுகிறது. இது வெறும் வார்த்தை கோர்வைகள் அல்ல - வாழ்க்கை. மனிதரை மனிதர் மதிக்கும் பாங்கு. உறவு பலப்பட உதவும் மந்திரம் - எனினும் இதனை புரிந்து கொள்ளும் மனங்களுடன் மட்டுமே எதுவும் சாத்தியபடுகிறது.

மனசு இழுத்து செல்லும் பாதைகள்

ஜெயமோகன் தனது ஒரு பேட்டியில் 'ஒரு திரைப்படத்தின் ஏதேனும் ஒரு காட்சியில் மனசு எங்கியோ போய்விடுகிறது' என்கிறார். படித்து கொண்டிருக்கும் போதே, இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டதை யோசித்து பார்த்தேன். பல திரைப்படங்கள் மட்டுமல்ல, நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வாழ்வியல் அனுபவங்கள், விவாதங்கள் ஏன் மவுனங்களில் கூட மனது ஏதோ ஒரு புள்ளியில் லயித்து போகிறது. நமக்கும் அந்த புள்ளிக்குமான உறவு சட்டென வெளிச்சமாகிவிடுகிறது. அதன் மேல் ஒரு மையல் கொள்கிறது - ஆழ்ந்த காதல் அனுபவம் என்று கூட சொல்லலாம். என்னை பொருத்தவரை மிக அற்புதமான ஒரு உணர்வு அது. அந்த கனவு பாதைகளை தொடர்ந்து புள்ளி தொடும் தூரத்தில் ஒரு எண்ணம் கலத்தல் உண்டாகிறது. சொல்ல போனால் நிறைய சொல்லலாம் - எல்லாம் சொல்லிவிட்டால் மனசு என்ன தீர்ந்தா போய்விடுகிறது - நிரம்பி தழும்பும் தாமரை குளம் போல அது.

தமிழா..! தமிழா..?

"கற்றது தமிழ்" - முதலில் என் மனதில்பட்ட ஒரு விஷயம் - அழகான திரைப்படம். நல்ல இசை அமைப்பு, நல்ல வசனங்களும் பாடல்களும், நல்ல ஒளிப்பதிவு - எல்லாம் கொண்டு நல்ல ஒருங்கிணைப்பு. திரைப்படம் பற்றிய விமர்ச்சனங்களை பல இணைய தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் எல்லாரும் படித்திருக்கலாம் - பல பரிமாணக்களை கொண்ட கருத்துகளை கூட நான் கவனித்தேன். என்னை பொருத்தவரை ஒரு பின்நவீனத்துவ அடிப்படை உணர்வை நான் கதை சொல்லும் பாணியில் கவனித்தேன். மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் பயணம் செய்கின்றன - காதல், தேடல், தன்னுள் தொலைந்து போதல் என்னும் வேறு வேறு பரிமாணம் கொண்ட உணர்வுகள் பதிவு செய்யபட்டுள்ளன. ஒரு மனநோயாளின் பயணங்களை, நான் பார்த்த எந்த திரைப்படத்தையும் விட இக்கதை அருமையாக பின் தொடர்ந்து உள்ளது. தமிழ் சார்ந்த படிப்பு மட்டுமே கதாபாத்திரத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று வலியுறுத்தபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை - அவன் பொருளாதாரம் மற்றும் சுய ஒழுக்க குழப்பங்கள் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறது. காசு இருந்து தனிமையும் இருந்தால் - எந்த சாமியும் கொஞ்சம் சாராயமும் கறியும் பெண்ணும் கேட்கும்.
தமிழ் வாத்தியார் வேலையும் அதன் குறைந்த பொருளாதாரமும் ஒரு பின்புலமாகவே நான் கொள்கிறேன். போலீஸ் பிரச்சனையில்தான் அவன் ஓட்டம் ஆரம்பிக்கிறது - அதற்கு காரணம் ஒரு போலிஸ் அதிகாரியின் பெண் வேட்கை - அந்த பிரச்சனையில் இருந்து அவன் வெளிவர முடியாமைக்கு அவன் பொருளாதாரம் என்ற லேசான பின்புலம் - அதற்கு பிறகு வருவதெல்லாம் நாடகம். மற்றொரு பரிணாமமாகிய - அவனுக்கும் அவளுக்கு உள்ள காதலும், அவனுக்கும் அவன் தமிழ் வாத்தியாருக்கும் உள்ள நட்பும், அவன் பயணங்களும் - மிக அற்புதமாக கவிதைகள். காதலை உள்கொண்ட ஆணும் பெண்ணுமாய் உயிர் அலைகிறது. கதை அமைப்பின் உறுத்தல்களாய் கொஞ்சம் ஒப்பனையும் உடையலங்காரங்களும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மரணங்களால் அறிமுகபடுத்தி கொள்ளும் பாத்திர நேர்த்தியும், குழந்தை வாழ்க்கைக்குள் தொலைந்து போகும் குணமும், சின்ன சின்ன சிறுகதை அமைப்புகளை போன்ற கதை அமைப்பும் - ஒரு நாவலை உணரும் அனுபவம் எழுகிறது. ஒரு நிமிடம் இந்த திரைப்படம் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து பதிவு செய்யபடும் அனுபத்தை யோசிக்கும் போது - மிக அற்புதமான கதை களம் விரிகிறது. தமிழ் ஆசிரியரின் பார்வையில் வேறு ஒரு கோணம். என் மற்ற பதிவுகளிலும் இந்த திரைப்படம் பற்றிய சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன். மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக ராமை நான் சிந்திக்கிறேன். இந்த திரைப்படம் நிறைய யோசிக்கவும் நிறைய பேசவும் வைக்கிறது - அது நிச்சயம் தமிழ் படித்த அவலம் பற்றி அல்ல. மனித வாழ்க்கை பற்றி - எதிர் கோண சிந்தனைகள் பற்றி, உறவுகள் பற்றி, உணர்வுகள் பற்றி - இன்னும் நிறைய. என்னை பொருத்தவரை - இன்னும் செய்திருக்கபட வேண்டிய நிறைவான திரைப்படம்.

காமம் என்பது பொதுவானது...

ஒரு சமீபத்திய பத்திரிக்கையில் அரவாணிகளின் வாழ்க்கை பற்றிய கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. மூன்றாம் பாலினமாகிய அவர்களை சினிமாவும் மற்ற ஊடகங்களும் எங்கனம் பதிவு செய்கின்றன என்பதை பற்றிய மாறுபட்ட சிந்தனைகளுக்கு நடுவே அவர்களின் காமம் சார்ந்த வாழ்வு பற்றி சில ஆங்கில இணையதளங்களில் படிக்க நேர்ந்தது. ஒரு மிக இயல்பான உடல் உணர்வை - அரவாணிகளை கொண்டு பெரும்பாலும் ஒரு அவமானத்துக்கு உரிய விஷயமாகவே உலகம் எங்கும் வெளிப்படுத்தபடுகிறது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனக்கு உள்ள உடல் வேட்கையை தீர்க்கும் வழிகள் ஆயிரம் புத்தகங்களிலும் ஆயிரம் விவாதங்களும் சொல்லி கொடுக்கபடுகிறது. அரவாணிகளின் உணர்வுகளை - உயிர் கொள்ளும் வலியை சொல்ல யாரும் கிடையாது. அரவாணிகளுடனான உடலுறவு ஒரு மிக அவமானத்துக்கு உரிய விஷயமாகவே உள்ளது. கேலிக்குரிய விஷயமாகவே ஊடகங்களில் வெளிப்படுகிறது. சக மனிதராக கூட அவர்களை மதிக்க முடியாத சமூகம் - "அது" என்ற அKறிணையில் விளிக்கும் போதும், கேலி பேசும் போதும் - நான் கூட மவுனியாகதான் இருக்கிறேன் - என்னை சுற்றிய சமூகத்தின் பார்வையில் நான் யார் என்ற கேள்வியும் கேலியும் எழும் என்பது அறியும்போது.

புளியமரத்தின் கதை

நான் முதல் முதலில் சு.ரா பற்றிய குறிப்புகளை மட்டுமே படித்திருந்தேன். அதுவும் அவர் மரணத்துக்கு பிறகுதான். அப்புறம் ஒரு நண்பர் மூலமாக "ஜெ.ஜெ. சில குறிப்புகளை" படித்தேன்.. ஒரு விதமான புது அனுபவமாகவே இருந்தது.. ஒரு மனிதரை - உணர்வு ரீதியாக விரும்பி கொஞ்சம் வெறுத்து, நிறைய கவனித்து நிறைய சுய ஆலோசனை செய்து, அவரை தொடர்ந்து சென்று ஆதர்சனம் செய்யும் ஒரு அனுபவம். இன்னும் சில முறையாவது படிக்க வேண்டிய நாவல் அது. சிறுகதைகளையும் மற்ற நாவல்களையும், சில கவிதைகளையும் இன்னும் முறையாக படித்ததில்லை. "புளிய மரத்தின் கதை" நாவல் வாங்கி கிட்டதட்ட 3 மாதங்கள் படிக்கவே இல்லை. பின்னர் ஒரு நான்கு நாட்கள் சேர்ந்தால் போல விடுமுறை (காந்தி ஜெயந்தி, ஆளும் கட்சி பந்த் மற்றும் வார விடுமுறை) வந்ததும் ஒரே மூச்சில் நாவலை இரண்டு முறை படித்து விட்டேன். நாவல் பற்றிய மாற்று விமர்ச்சனங்கள் முன்னமே படித்து இருந்ததால், நாவலின் நடை பற்றிய முன்னறிவு இருந்தது -எனினும் அது நாவலின் சுவையை குறைக்கவில்லை. ஒரு மரம் - ஒரு ஊரின் அடையாளம் - அது சார்ந்த மனிதர்கள் - அவர்களின் வாழ்க்கை - கொஞ்சம் அரசியல், கொஞ்சம் கால மாற்றங்கள் என நாவல் ஒரு ஒற்றையடிபாதையின் நடை சுமை தீர்க்கும் அனுபவம் போல இருந்தது. இந்நாவலின் தாக்கம் இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் - இதன் சுலபமான நடை ஒரு காரணம். ஒரு பூங்கா உருவாகும் விதமும், அதனை சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நல்ல சுவையான பார்வை - இனி ஒவ்வொரு பூங்காக்களையும் பார்க்கும்போதும் பார்வை முறை கொஞ்சம் இந்த நாவல் சார்ந்தே இருக்கும். மனிதர்களின் வாழ்க்கை எப்படி அடுத்தவர்களின் கவனத்துக்கு உட்பட்டே அமைகிறது என்பதை நாவல் அடிப்படையாக கொண்டுள்ளது - அப்படி கவனம் ஈர்க்கும் முயற்சிகளும் முறைகளும் ஓவ்வொருவரின் சுயலாப அடிப்படையிலேயே அமைகிறது. நாவல் பற்றியும் சு.ரா பற்றியும் இன்னும் அவரின் மற்ற சிறுகதை, கவிதை மற்றும் நாவல்கள் பற்றியும் மேலும் எழுதலாம் - அதனூடே சு.ரா / அவரின் படைப்புகள் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் ( ம.க.இ.க வின் படைப்புகள்) மிகவும் அருமையானவை - பகிர்தலுக்கும் விவாதங்களுக்கும் சுவையானவை... எதிர்கால பதிவுகளில் மேலும் பகிர்ந்து கொள்ளலாம்...

புது வீடு...

தி.நகரின் வெங்கட நாராயணா சாலை அருகே புதிய வீட்டில் குடியேறி இருக்கிறோம் நானும் என் நண்பரும். இரண்டாவது மாடியில் மூன்று அறைகள் கொண்ட சிறிய வீடு. குடி புகுந்து, பொருட்கள் பார்த்து வாங்கி அமைத்து ஒரு முழுமைக்கு கொண்டு வருவதற்க்குள் 20 நாட்கள் முடிந்து விட்டது. கேபிள் தொலைகாட்சியும், தமிழ் செய்திதாளும், காலை நேர நடை பயிற்சியும், 20 நிமிட உடல் பயிற்சியும், குளிக்கும் போது அருகே உள்ள பள்ளியில் இருந்து கேட்கும் நீராடும் கடலுடுத்த பாடலும், அலுவக காரில் பயணங்களும், வழக்கமான அலுவக வேலைகளும், வார இறுதி தூக்கமும், கொஞ்சம் கதையும் கவிதை வாசிப்பும், சில சுவரஸ்யமான சந்திப்புகளும் (பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்), கைதொலைபேசி நண்பர்களும், இரவு 2 மணி வரை உரையாடல்களும், வார இறுதி மாலை நேர கடை பாதை நேரத்தொலைப்பும், இரவு நேர கையேந்திபவன் உணவுகளும், காபி டே மாலை நேரமும், மழை கால பகல் தூக்கமுமாக கழிந்து கொண்டே இருக்கிறது இரவும் பகலும் நாட்களும் வாரங்களும்...

ஆலந்துறை நினைவுகள்

பேரூர் போகும் வழியில் ஆலந்துறை பேருந்து கொஞ்சம் பழைய நினைவுகளை கொண்டு வந்தது. என் கல்லூரி காலங்களில் கோவைபுதூர் முருகன் காம்லெக்ஸில் தங்கியிருந்தேன். என்னுடன் ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்த இருவர் தங்கியிருந்தனர். ஒருவர் தூத்துகுடிகாரர் - சங்கர் கனேஸ் - மற்றொருவர் ஈரோடு அருகே - காசிராஜன் அவர் பெயர். எனக்கும் காசிக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் நல்ல புரிதல் இருந்தது, எனவே எல்லா இடமும் சேர்ந்து சுத்துவோம். வார இறுதிகள் பெரும்பாலும் குனியமுத்தூர் அல்லது சுண்டக்காமுத்தூர் சாராயகடைகளில்தான் இருக்கும். கொஞ்சம் செட் சேர்ந்துவிட்டால் அப்புறம் கூத்தும் கும்மாளமும்தான் - அவரை மறுபடி ரூம் கூட்டிவர நிதானத்தில் இருக்கும் நான் ரொம்ப அவசியம் என்பதால் எல்லா கும்மாளங்களிலும் எனக்கும் இடம் உண்டு. ஒரு முறை ஆலந்துறையில் இருக்கும் அவரின் நண்பரை பார்க்க சென்றோம். அவர் ஸ்பிக் நிறுவனத்தின் சமையல் பகுதியில் வேலை செய்பவர். வயசாளி. அடிப்படையில் விவசாயி. நாங்கள் சென்ற நேரம் ஊரின் ஏதோ கோவிலில் கடா வெட்டு. ஒரே ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தது. வாய்கால் பாலம் அருகில் அவர் வீடு. அது கரும்பு சக்கையும் முட்டையும் போட்டு கட்டிய பாலமாம்.. மாலை மங்கும் நேரம் எல்லாம் கட்டெரும்புகள் நிறைந்து இருக்கும். வாய்க்கால் கரை ஓரமாய் ஜமுக்காளம் போட்டு 3 பாட்டில் நாட்டு சரக்கும் கோழியும் ஆடும் சப்பாத்தியும் சோறும் வைத்து ஒரே படையல்தான். 5 ரவுண்ட் முடிந்தவுடன் காசி பாட ஆரம்பித்து விடுவார் - பொதுவாக பழைய சிவாஜி பாடல்கள்தான். ராகமும், தட்டில் தாளமுமாய் பாட்டும் ஜீவன் அவர் - நம் ஆலந்துறை தோழர் எம்.ஜி.ஆர் ரசிகர் - மொத்தத்தில் அன்று ஒரே போட்டி பாடல்கள்தான்... அவர் பாட, அப்புறம் இவர் பாட... சண்டையில்லாமல் இருவரும் தூங்கும் வரை ஒரே இசை கச்சேரி... என் கவனம் சாப்பாட்டில் மட்டுமே இருந்தாலும், பாட்டின் சுவரஸ்யத்தில் சரக்கு அவர்களுக்கு அதிகமாகி இருந்தாலும் மற்றும் திரும்பி செல்ல பேருந்து வசதி இல்லாததாலும் - பாதை ஓரத்திலேயே படுத்து தூங்கும்படி ஆனது அன்று - அடுத்த நாள் விடுமுறை என்பதால் பிரச்சனை இல்லை. மறுநாள் விடிகாலை மறுபடி அரைதூக்க நிலையிலேயே அறை வந்து சேர்ந்தோம். இன்று நினைப்பினும் நல்ல சந்தோஷம் - எங்கு இருக்கிறார்களோ அந்த அறை நண்பர்கள் - சில காலங்களுக்கு பிறகு முற்றிலும் தொடர்பு இல்லை.

வாழ்க்கை ஒரு புள்ளியில் இல்லை.

நம் வாழ்வில் பெரும்பாலரை - நல்லவர்கள் கெட்டவர்கள் அப்பாவிகள் மோசமானவர்கள் இன்னும் என்ன என்னவோ சொல்லி ஒரு அடைமொழியோடே மனதில் வைத்திருக்கிறோம். அடிப்படையில் பெரும்பாலரின் செயல்களே அவர்களை பற்றிய ஒரு மனத்தோற்றத்தை நம்முள் உருவாக்குகின்றன. அந்த செயல்களிக்கான அடிப்படைகள் யாராலும் கவனிக்கபடுவதில்லை. ஒருவரின் நடத்தை அல்லது ஒழுக்கம் முழுமையாக அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் - சில கற்பனை கோடுகளாலேயே நிர்ணயம் செய்யபடுகிறது. யாரும் அடிப்படையில் எந்த குணாதிசியமும் கொண்டவர்கள் இல்லை - ஒரே குணாதிசியம் கொண்டவர்களாக சமுதாயத்தில் எல்லாருடனும் இருந்து கொள்ள யாராலும் முடியாது - ஒழுக்கமும் அது போலதான். மாற வேண்டிய நேரத்தில் முகங்கள் மாறியே ஆகவேண்டும். யாரை பற்றியும் பொதுவான கருத்துகளை தவிர்க்கலாம் - எல்லாரையும் நேசிக்க முடியும். செயல்களை வைத்து ஆட்களை எடைபோடாமல் - செயலுக்கு பின்னால் உள்ள காரணிகளை கவனித்து பார்த்தால் நம் பார்வையின் பண்பாடு நமக்கே தெரியும். - நம்மை நாமே சுயநிர்ணயம் செய்து கொள்ளவும் முடியும். வாழ்க்கை ஒரு புள்ளியின் பார்வை அல்ல - புள்ளி ஒரு வடிவத்தின் காரணி. வடிவம் அறியாமல் அதை பற்றி சொல்லும் கருத்துகள் பயன் இல்லாதவை.

கல்யாணமாம் கல்யாணம்..

இன்றைக்கு எல்லாம் எதிர்பார்ப்புகள் நிறைய வளர்ந்து இருக்கிறது - 40% ஆண்களும் பெண்களும் நிறைய எதிர்பார்ப்புகளுடனே திருமண வாழ்வில் நுழைகிறார்கள். பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் போதே இதன் பிரச்சனைகளை பார்க்கிறார்கள். குறைந்தது 50 ஆயிரம் சம்பளமும், 2 முறையாவது வெளிநாட்டு அனுபவமும், இந்தியாவின் முதல்தர கம்பெனிகளில் வேலையும் கொண்டவர்களை மட்டுமே - அது பெண் வீடு ஆகட்டும், பிள்ளை வீடு ஆகட்டும் - விரும்புவதில் உள்ள லாஜிக் புரிவதில்லை எனக்கு. மனசு ஒத்துபோன திருமணம் என்பது கணிபொறி சார்ந்த தொழில் நுட்ப மனிதர்களின் (20 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் பெரும்பாலர் - எந்த தொழில் செய்தாலும்) வாழ்வில் பெரும்பாலருக்கு இருப்பதில்லை. ஏதோ ஒத்து போவதற்காக வாழ்கிறார்கள் - அல்லது சீக்கிரம் மண முறிவுக்கு வருகிறார்கள். குழப்பமான வாழ்வில் பணமும் அமெரிக்க அனுபவங்களும் எந்த மாற்றத்தையும் தருவதில்லை. அதிகபடியான வேலை நேரத்தில் குடும்பத்தில் இழக்கிறார்கள். உடல் நலமும் மன நலமும் இல்லாமல் குழந்தை வளர்ப்பும், செக்ஸ் வாழ்க்கையும், அமைதியான ஒரு நேர கூட்டு குடும்ப இரவு உணவும் கூட - அடிப்படை நலன்கூட இல்லாமல் - நிரம்பி வழியும் வங்கி கணக்கும், ஷெர் மார்கெட்டும், பாரின் டூர்களும், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையும் என்ன தர முடியும். பெரும்பாலான வீடுகளில் யாராவது ஒரு பையன் பார்க்க லட்சணமாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை கொஞ்சம் பணம் காண்பித்து நம்புவது போல பேசி அமெரிக்க மொழி பேசினால் - கூசாமல் பெண்ணை கூட்டி கொடுக்கிறார்கள் - லியாகத் அலிகான் வழக்கு ஒரு எடுத்துகாட்டு. லியாகத் முயற்சி மட்டும்தான் செய்தான் - முடித்து கொடுத்தது பெண் வீட்டிகாரர்கள்தான் - முடித்து கொடுக்க வைத்தது - இவர்கள் எதிர்பார்த்த அவன் காட்டிய தகுதிகள் - பணமும், அமெரிக்காவும் முதல்தர தொழில்படிப்பும். ஒரு வகையில் இது விபச்சாரம்தான். அதிகம் படிக்காதவர்கள், குறைந்த சம்பளம் உள்ளவர்கள், சிறிய அளவில் தொழில் வாழ்க்கை உள்ளவர்கள் - எனக்கு தெரிந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் - தகவல் தொழில் நுட்ப வாழ்வில் உள்ளவர்களை விட 100% மடங்கு மேல். திருமண வாழ்வுக்கு அடிப்படை தேவை என்ன என்பதை யாராவது பிள்ளை பெற்ற பெண் பெற்ற பெற்றோர்களுக்கு எடுத்து சொன்னால் பல தற்கால தலைமுறை வாழ்க்கை உருப்படும்.

Wednesday, September 05, 2007

இனி ஒரு விதி...


இன்று காலை அலுவகம் வரும் வழியில் சுவற்றில் அச்சிடபட்டிருந்த ஒரு விளம்பரம் "திருக்குறளை சட்டமாக்கு" என யாரையோ மிரட்டியது. அட... இதுவும் நல்லதுதான். சட்டம் போலவே திருக்குறள் பற்றிய அனுமானங்கள்தான் நிறைய பேருக்கு உண்டு - யாரும் முழுதாக படித்ததில்லை. ஆனாலும் சட்டமாக்க பட கூடிய விஷயங்கள் எல்லாம் திருக்குறளில் உண்டு - அரசியல் பொருளாதாரம் வாழ்க்கை தொழில் காமம் என கற்று கொள்ள ஆயிரம் உண்டு...

என்ன...! பலருக்கும் பிரச்சனை வரும்... வாழ்க்கைமுறையை மாற்ற வேண்டி இருக்கும் - நிறைய விஷயங்களை மறுபடியும் வேறு மொழியில் புரிந்து கொள்ளவேண்டி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஒழுக்கமான நல்ல வாழ்க்கை புளித்து போகும் - அப்புறம் திடீரென பழைய சட்டங்களே பரவாயில்லை என தோன்றும்.

திருக்குறள் வேண்டாம் என போராட்டம் நடத்துவார்கள் - அது தமிழே கிடையாது என்பார்கள்... திருக்குறளை குற்றம் சொல்லியும் - வள்ளுவரின் வாழ்க்கை பற்றிய விமர்சனங்களும் கூட தெருவுக்கு வரும். மறுபடியும் சக்கரம் சுற்றி எல்லாரும் அவரவர்களுக்கு வசதியான சட்டங்களை படைத்து கொள்வார்கள் - அதில்தான் நாம் மேதாவிகள் ஆயிற்றே...

திருக்குறள் நல்ல விஷயம்தான்... பாரதி சொன்னது போல - இனி ஒரு விதி செய்யும் பணி. ஆனால் யாருக்கு புரியும்... அரசியல் தெருவில் விளையாடும் நம் தேசத்தில்...??

Tuesday, August 21, 2007

வெற்றியும் தோல்வியும்...

நிறைய பேருக்கு இருப்பதை போல எனக்கு விளையாட்டுகளில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆறாம் வகுப்பிலேயே கண்-கண்ணாடி அணிந்ததால் கூட இருக்கலாம். பள்ளி காலங்களிலும் எந்த விளையாட்டுகளிலும் நான் கலந்து கொண்டதில்லை - கோ-கோ மற்றும் கிரிகெட், பேஸ்பால் ஆகியவை மணி உயர்நிலை பள்ளி கோவையிலும், பொதுவான கபடி போன்ற விளையாட்டுகள் கல்பாக்கத்திலும் இருந்த போதிலும், என் பங்கேற்பு மிக சொற்பம்தான் - அதுவும் நிர்பந்த அடிப்படையில். கூடை பந்து விளையாட்டு காலங்களின் காரணங்கள் வேறு...

ஆர்வம் குறைவாக இருந்தபடியினால், பத்திரிக்கைகளிலும் விளையாட்டு செய்திகளில் மனம் லயித்ததில்லை. எனினும் ஒரு திரைப்படம் என் கருத்துகளை கொஞ்சம் மாற்றியுள்ளது. அது பெண்களின் ஹாக்கி விளையாட்டு பற்றிய ஒரு திரைப்படம். கொஞ்சமும் வியாபாரதனம் கலக்காத ஒரு ஹிந்தி திரைப்படம் - இத்தனைக்கும் மொழியின் உச்ச கதாநாயகனை கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம். யாரும் யூகிக்கும் 15 நிமிட உச்ச கட்ட காட்சியை கூட மிக திறமையான முறையில் அமைத்திருக்கும் பாங்கு அருமை. சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் - ஒரு உதாரணம் - தேர்ந்தெடுத்த குழு பெண்களின் கண்களில் தெரியும் வேகமும் உணர்வும். ஆட்டமும் பாட்டும் இல்லை - ஒரு பாடல், நிச்சயம் கொஞ்சம் உணர்வுகளில் தங்கும் இசையும் தாளமும் கொண்டது... வெற்றி என்பது குழு முயற்சி என்பதை அழகாக உணர்த்தும் மேலாண்மை விஷயங்களை சொல்லும் முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் இத்தகைய திரைப்படங்கள் பார்க்கும் போது.. - தமிழில் இப்படி படங்கள் வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம் - நான் சொல்வது வியாபாரதனம் இல்லாத, விளையாட்டு, குழு முயற்சி, உணர்வு ரீதியான உறவுகள்... என பேசும் திரைப்படங்கள். திரைப்படம் எடுக்க சிலர் தயார் எனினும், வெற்றி தோல்வி பற்றிய கவலை தடுக்கிறது...

வெற்றி தோல்வி - இரண்டுக்கு பின்னாலும் முயற்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது மதிக்கபடும் விதத்தை வெற்றியோ தோல்வியோதான் நிர்ணயம் செய்கிறது... வெற்றி என்றால் தலையில் தூக்கி ஆடுவதும், தோல்வி என்றால் மண்ணில் மிதிப்பதும் காலங்காலமான முட்டாள்தனங்கள்.. எதற்கும் பின்னால் உள்ள முயற்சி என்பது மதிக்கபடும்மாயின், அங்கு மலர்கிறது மனித மனங்களின் புத்திசாலிதனமான உணர்வுகள்...

Friday, August 17, 2007

கனவும் உழைப்பும்...

ஒரு திரைப்படம்... அது வெகுஜன இயல்பு சார்ந்த திரைப்படம். பொதுவில் அத்தகைய திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பினை மறுத்துவிடுவதுண்டு. இந்த முறை மறுக்க முடியாத அளவு எல்லா பத்திரிக்கைகளும் நண்பர்களும் தூண்டியதால் பார்க்க நேர்ந்தது...திட்டியோ பாராட்டியோ எல்லா மீடியாக்களும் அந்த திரைப்படத்தை பற்றி ஒரு மாதம் எழுதி தீர்த்தன... திரைப்படம் என்னை பொருத்தவரை குழந்தைகளுக்கானது... சில காட்சிகள் பெரிவர்களுக்கானது.. எதுவும் வளர்ந்தவர்களுக்கானது இல்லை. நான் சொல்வது பொது அறிவு அல்லது பொதுவான அறிவு பற்றி மட்டுமே. எனினும் ஒரு மஜாவுக்காக மட்டும் பார்க்க கூடிய திரைப்படமாக இருந்தது..

நான் இந்த பதிவில் சொல்ல வருவது மற்றுமொரு சிந்தனை - இந்த திரைப்படத்தில் வேலை செய்தவர்கள் எல்லாருமே நல்ல சினிமா ஞானம் உள்ளவர்கள்.. நிறைய உலக திரைப்படங்களுடன் பரிச்சயம் உள்ளவர்கள்.. சிந்தனையாளர்கள் - இவை அவர்களின் மற்ற படைப்புகளில் இருந்தே நான் சொல்கிறேன்... எனினும் - இந்த திரைப்படத்தை பற்றி அவர்கள் யோசிக்கும் போது, படமாக்கும் போது, கதை அமைக்கும் போது இதில் உள்ள அபத்தங்களை அவர்கள் கவனித்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் இருந்தும் ஒரு வியாபாரம் என்று வரும்போது சிந்தனை ஆற்றலை கொஞ்சம் தள்ளி வைத்து கொண்டு, முட்டாள்தனமான கனவை திறமையாக படைக்க தங்கள் அறிவை உபயோகபடுத்தியுள்ள பாங்கு சிந்திக்க வைக்கிறது..

சில காட்சிகளுக்கு கதாநாயகியின் அரை நிர்வாணம் தேவைபடும் போது - புத்திசாலி கதையாசிரியர் அதற்க்கு இடம் கொடுத்து தள்ளி உட்காருகிறார். தன் மகளை விட வயது குறைந்த கதாநாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாநாயகனை எந்த வித விகல்பமும் இன்றி சமுதாயத்தை ஏற்க வைக்க எல்லாரும் பாடுபட்டு செலவழித்து இருக்கிறார்கள் - இவர்கள் அனைவரும் பத்திரிக்கை செய்திகளில் வயது குறைந்த பெண்ணை பெண்டாளும் வயதான ஆண்கள் பற்றிய செய்திகளை படித்து காரசாரமாக விமர்ச்சனம் செய்பவர்கள்தான்... எனினும் எல்லாம்.. எல்லாம்.. ஒரு வியாபாரத்துக்காக.. அறிவும் திறமையும்.. கைகட்டி நிற்க்க .. அபத்தமும், ஆபாசமும்.. முன்வைத்து சினிமா வியாபாரம்.. - ஒரு வேலை இப்படி இருப்பதுதான் பிழைக்க தெரிந்து வாழ்வதோ....

Tuesday, August 14, 2007

முகம்...

முகம் என்பது என்ன.. ஒரு அடையாளம்... அடையாளம் மாறி முகம் மாறினால் - உறவுகளின் மேல் கொண்ட அர்த்தங்களும் மாறிவிடுமோ. அடையாளம் மாறிய முகத்திடம், மாற்றதுக்கு முந்தய பாசமும் நேசமும் இருக்குமா.. எனக்கு இந்த குழப்பம் இன்னும் இருக்கிறது. பற்கள் எடுப்பபட்ட பின்னர் என் அம்மாவின் முக அடையாளம் மாறிவிட்டது. என்னால் முந்தைய சகஜத்துடன் பழக முடியவில்லை... பின்னர் மறுபடி அந்த சகஜம் வர சில நாட்கள் ஆகியது...

ஓர் இரவு...

சென்னையின் உணவு முறை விசித்திரமாக இருப்பதாக உணர்கிறேன் - பெரும்பாலும் அவை சுவை சார்ந்ததாக இல்லாமல் பசிக்கு உண்பதாகவே இருக்கிறது. மனசு சுவை தேடும் நேரங்களில் சிறிய மிக சிறிய உணவங்களிலும் உண்பதுண்டு. நான் இருக்கும் பகுதியிலேயே ஒரு மிக சிறிய கடை உண்டு - இட்லி, ஆப்பம் கிடைக்கும். தேங்காய் சட்னி என்ற பெயரில் தேங்காய் சாறுடன், நிறைய பச்சை மிளகாய் அரைத்து ஒரு திரவம் கிடைக்கும். அரசானிக்காய், வெண்டை, முருங்கை மற்றும் வாழைக்காய் வைத்து சாம்பார் என்ற திரவமும் உண்டு. ஒரு கேரள தம்பதியினர் கடை நடத்துகிறார்கள். ஒரு முறை அவர்கள் இல்லாத ஒரு முன்னிரவு நேரத்தில் குழந்தைகள் சமைத்தார்கள் - கூச்சலும் கிண்டலுமான சமையல் அது. பெண் குழந்தைக்கு 8 அல்லது 10 வயது இருக்கும்... ரொம்ப பொறுப்புடன் முட்டை உடைத்து ஆம்லெட் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். பையன் 16 வயது இருக்கும் - அதட்டலும் மிரட்டலுமாக ஆயினும் தங்கையுடன் சுமுக உறவும் கொண்டவனாக சமைத்தார்கள்... உணவும் கூட.. கொஞ்சம் சுகமாக அனுபவம் அது.

மற்றவர்கள் மறுக்க சில கருத்துகள் ...

முன்னேற்றம் என்பது - பொருளாதாரம் மட்டும் கொண்டதல்ல. வாழ்க்கை முறை சார்ந்தது.

பெரும்பாலருடைய வாழ்க்கை கோட்பாடுகளினால் சூழப்படும் இருத்தலாகவே இருக்கிறது ... ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலும் புத்தனும் சித்தார்த்தனும் இருக்கிறார்கள். சித்தார்த்தனாக இல்லாதவனால் புத்தனாக முடிவதில்லை. புத்தனை அறிய சித்தார்த்தன் தேவை - இல்லாவிட்டால் புத்தன் வெறும் துறவி. அவன் அடையாளம் போதி மரம் - புத்தனின் கோட்பாடுகள் இல்லை.

பெரும்பாலரின் வாழ்க்கை வட்டங்களுக்குள் உள்ளது - அது ஒரு சிறிய வட்டம் - அந்த வட்டத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை போல. மற்றவர்கள் வட்டத்துக்கு வெளியே இருப்பதாலேயே வட்டத்துக்கு அப்பால் சிந்திக்க முடிகிறது. வட்டத்துக்குள் உள்ளவர்களோடான விவாதங்கள் பொதுவின் விதண்டாவாதங்களே. எவர் வட்டத்துக்கு வெளியே இருப்பினும் - அடிப்படையில் அவர்கள் அவரவர் வட்டங்களுக்கு உள்ளேயே இருக்கிறார்கள்.

எல்லாருக்கும் அடுத்தவர் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழவேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனின் சுயஒழுக்கம் அதனை கொண்டே அளவிடபடுகிறது.

இக்கருத்துகளை பகிர்ந்து கொள்ள இன்னும் சரியான துணை கிடைக்கவில்லை - இவைக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். கருத்துகளே பின்னர் கருத்துகளை மாற்றி கொள்ளலாம்... எனினும் தற்போதைக்கு காலம் மட்டுமே துணையாக இருக்கிறது.

தனிமையும் இலக்கியமும்...

காலம் இயங்கி கொண்டு இருக்கிறது. பின்னிரவுகளில் தூக்கம் தொலைந்து விட... ஜன்னலுக்கு வெளியே யாருமற்ற வெளியை காரணமின்றி பார்த்தபடி அமர்ந்திருக்கும் தருணங்கள் அதிகமாகி விடுகின்றன. சில இரவுகளில் வாழ்தல் பற்றிய ஒரு கேள்வி ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட இருள் போல என்னுள் கவிகிறது. சில புத்தங்களை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவை கவிதைகளும் இலக்கியங்களும் இல்லை - அவைகளை நீங்கள் சுயமுன்னேற்ற புத்தகங்கள் எனவோ, கற்பனை கதைகள் எனவோ சொல்லலாம். ரசவாதி மற்றும் தன் பொக்கிஷத்தை விற்ற துறவி என்பவை அந்த புத்தகங்கள். இப்புத்தங்களும் மேலும் சில கவிதை மற்றும் இலக்கிய புத்தகங்களும் படித்து பின்னர் தனிமையில் அவற்றின் கருத்துகளை எனக்குள்ளெ பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம் எனக்கு சில கருத்துகள் தோன்றுவதுண்டு... என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும், பிறர் வாழ்வுகளை கவனித்த பின்னரும் - எல்லோர் வாழ்விலும் இலக்கியமும் கவிதையும் இருப்பதாகவே தோன்றுகிறது. இலக்கியமும் கவிதையும் வாழ்வை சொல்லும் மொழி எனப்படும் போது... எனக்கு தோன்றுகிறது... வாழ்தல் - இன்னும் சரியாக புரிந்து கொள்ளபடாத ஒரு கலை - நிறைய பேருக்கு அது புரியும் போது வாழ்வு முடிந்து விடுகிறது.

தொலையும் வாழ்க்கை...

நகரம்... தன்னுள் புதைந்த எல்லோரையும் தன்னுள்ளே கரைத்து கொண்டு ஓடும் திரவ வாழ்க்கையை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நானும் விதிவிலக்காக இல்லை. நான் என்னை தொலைத்து விட்டதை உணர்கிறேன். சிரிப்பும், பேச்சும், இலக்கியமும், கவிதையும், தோழமையும் இன்னும் பிற வாழ்க்கை சார்ந்த விஷயங்களும் நீங்கி... என்னை தொடரும் காகிதங்களை நானும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் - அதுவே வாழ்க்கை என எல்லாரும் சொல்லும் வழியில். தொழில் என்பது வாழ்வை வளமாக்கவே - வாழ்வை பறித்து கொண்டு ஓடும் தொழில் என்றும் இருக்கிறது... எனக்கு பிடித்த நான் வெளிப்படும் தொழிலுக்கு தைரியமில்லாமல், என்னை தொலைக்கும் தொழிலில் இயந்திரத்தனமாக இயங்கும் இந்த வாழ்க்கை ஒரு நாள் என்னை என்னிடமிருந்து கொள்ளை கொண்டு போக போகிறது. எல்லாம் பேசலாம் - காகிதங்களுக்காக வாழாமல் இருந்தால். ஒரு ஓவிய ஆசிரியராக ஏதோ ஒரு பள்ளியில் வேலை செய்ய பிரியபட்ட காலம் உண்டு. பின்னர், காகிதங்களின் தாக்கமும் தேவையும் எழ, இப்போது கொண்ட தொழில். இது மரம் அறுக்கும் தொழில். தொழிற்சாலையில் நிறைய மரங்கள் உள்ளன... எல்லாம் வெட்டபட்டவை. இவைகள் கதவாகலாம், கட்டிலாகலாம், மேசையும் நாற்காலியும் ஆகலாம். ஆயிரம் ஆண்டு வாழும் மலை மரங்களை இனி வாழ்வில் பார்ப்பது அரிது. எல்லா மரங்களும் போன பிறகு தொழிற்சாலைகள் தன்னை தானே அறுத்து கொள்ளும்... காலம் வழி சொன்னால் .. என் கவிதைகளும் ஓவியங்களும் கொண்ட உலகோடு மரணமாகிவிட வேண்டும். ரெளத்திரம் கொண்ட மனதோடு அலையுதல் ஒரு வகையான வேதனை... அதுவும் இல்லாவிட்டால் வாழ்க்கை வெறிச்சோடி போய்விடுமோ என்ற பயமும் உண்டு...

மீண்டும் ஒரு முறை...

நெடுநாட்களுக்கு பிறகு மறுபடியும் பதிவுகளை கொண்டுவந்திருக்கிறேன். இடைப்பட்ட காலங்களில் நிறைய அனுபவங்கள், சில தவறுகள், சில திருத்தங்கள், சில இழப்புகள், சில சேர்க்கைகள், பார்த்தவை, படித்தவை, உணர்ந்தவை என நிறைய உண்டு... தற்போது புதிய நிறுவனத்தில் இருக்கிறேன்...புதிய குழு... புதிய யுக்திகள் கொண்ட வேலை என மாறுபட்ட சூழ்நிலை.

பகிர்ந்து கொள்ள நிறைய இருந்தாலும் நேரம் இல்லாமை காரணமாக இழந்த விஷயங்களில் பட்டியலில் வாழ்க்கையும் சேர்ந்து கொண்டது எனலாம். பகிர்தல் இழக்கும் போதே வாழ்க்கையும் கொஞ்சம் செத்து போகிறது. புதிய எண்ணங்கள்.. புதிய அனுபவங்களுடன் உங்களை எல்லாம் மறுபடியும் சந்திக்கிறேன். இடைபட்ட காலங்களில் என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி.

இது தவிரவும் மேலும் சில குழுக்களில் எழுதலாம் என்று எண்ணம் உண்டு.. மேலும் நண்பர்கள் தேடும் காரணம் தான். வாழ்க்கை சில புள்ளிகளின் வழியே கிறுக்கி போல கோலம் போல இருந்தாலும்... அதனை வண்ணம் கொண்டு மெருகேற்றுவது நட்பு வட்டம் தானே...

Thursday, March 22, 2007

மொழி - ஒரு அடையாளம்


என் மொழி எது என்ற அடையாள குழப்பம் இன்னும் இருப்பதாகவே உணர்கிறேன். எழுத்தா ஓவியமா என்ற குழப்பம் இன்னும் என்னுள் இருக்கிறது. கவிதைகளோ கட்டுரைகளோ இன்னும் எந்த ஒரு வடிவையும் கொண்டவையாக மாறவில்லை - அவை இன்னும் என் முதல்வடிவ முறையிலேதான் இருக்கின்றது. ஓவியமும் எந்த குறிப்பிட்ட முறையையும் கொண்டிருக்கவில்லை. என் ஓவியங்கள் பெரும்பாலும் என் வழிமுறையிலேயே இருந்தாலும், அவை நான் பார்த்த ஓவியங்களின் முறைகளையும், எண்ணங்களையும் அடிப்படையாக கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. தேர்ந்த வடிவங்கள் சார்ந்த ஓவியங்களை படைக்கும் அளவுக்கும் எனக்கு அது கைவரவில்லை. என் ஓவியங்கள் விஷயம்
சொல்கிறது - ஆனால் மிக தெளிவாக சொன்னதில்லை - என் கவிதைகளை போலவே அது மிக சிலருக்கு மட்டும் அனுபவங்களால் உணரபடுகிறது.

கவிதைகளிலும் எழுத்துகளில் இதே அனுபவம் சார்த்த தாக்கம் இருக்கிறது. என்னுள் இறக்கும் அனுபவங்கள் மட்டுமே என்னில் இருந்து வெளிப்படுகின்றன. இந்த கருத்தை ஏன் என் கவிதைகள் சொல்வதில்லை, ஏன் என் ஓவியங்கள் சொல்லவில்லை என்ற கேள்விகள் என் பதில்களுக்கு அப்பாற்பட்டவை. பொதுவில் இத்தகைய பொது முறையற்ற - அல்லது என் முறைகொண்ட எழுத்துகளும் ஓவியங்களும் என் மொழியாக கொள்கிறேன். இசை என்னும் பொது மொழி எனக்கு புரிகிறது. இசையும் கவிதைகளும் ஓவியமும் கொண்ட என் மொழி - என் அனுபவ கலாச்சாரத்தில் இருந்து வெளிப்படும்போது - அதனை எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறதா என தெரியவில்லை. புரியாத மொழி உதவாது என கொண்டால் - புரிந்த மொழிகள் என்ன உதவியிருக்கிறன...?


மனிதர்களும் உணர்வுகளும்

நான் பொதுவாக இரவு உணவுக்கு ஒரு சிறிய உணவகம் செல்வதுண்டு. பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் இடம் அது. தினமும் முட்டை பரோட்டா சாப்பிடும் பழ வண்டிகாரர், எல்லா அரசையும் விமர்ச்சிக்கும் வயதான பெரியவர், சத்தமான எல்லா நேரமும் செல்போனில் பேசி கொண்டே சாப்பிடும் ஒருவர், கலாட்டா மாணவர்கள் என கலவையான இடம் அது. கடை வைத்திருப்பவர்கள் புதுக்கோட்டையில் இருந்து வந்தவர்கள். உணவின் ருசியும் தரமும் குற்றம் சொல்ல முடியாதவை. ஒரு பெரியவர் அங்கே வேலை செய்கிறார். எல்லாருக்கும் நல்ல கவனிப்பு. ஒரு சனிக்கிழமை மதிய நேரம் அவர் என்னிடம் பேசி கொண்டிருந்த போது அவர் மகன் ஒரு மனஸ்தாபம் காரணமாக விலகி சென்றுவிட்டதாகவும், தான் இங்கே வேலை செய்து ஊருக்கு பணம் அனுப்பி கொண்டிருப்பதாகவும் சொன்னார். சென்னையில் இப்படி நிறைய மனிதர்களை பார்க்கிறேன். பெருமாலும் உறவுசார்ந்த பிரச்சனைகள் எல்லாருக்கும் இருக்கிறது. சந்தோஷமான குடும்ப அமைப்பின் வாழ்க்கை நிறைய பேருக்கு வாய்ப்பதில்லை - காரணங்கள் எல்லாம் திசையுலும் இருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கு இயல்பிலேயே சில கருத்துகள் இருக்கின்றன - அவைகளை தோண்டி தனக்காக மாற்ற முயலும் போது எல்லா பிரச்சனைகளும் ஆரம்பிக்கின்றன. உணர்வுகளின் குவியலாகவே பெரும்பாலும் மனிதர்கள் இருக்கின்றனர். அவர்களை அவர்களாக வாழ விடுதல் என்பது மனித சுதந்திரத்தின் வெளிப்பாடு.
வழிமுறைப்படுத்தும் முயற்சிகள் கருத்துகளை காயமாக்காமல் இருந்தால் சந்தோஷமான குடும்பங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உண்டு. எல்லாம் பேசும் முறையிலும் பழகும் முறையிலும்தான் இருக்கிறது. அடிப்படை மனோதத்துவ அறிவு எல்லா இடங்களிலும் தேவைபடுகிறது.

வரலாறுகள் விற்பனைக்கு

காந்தியும் இன்னும் பிறரும் கிட்டதட்ட எல்லாருக்கும் மறந்து போனபிறகும் - புத்தகங்கள் அவர்களை பற்றி வெளிவந்து வியாபாரமாகின்றன. பெறும்பாலும் பொதுவாழ்வை விட தனிப்பட்ட வாழ்வும் அதன் நிகழ்வுகளும் எல்லாருக்கும் ஒருவகையான தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வத்தை அதிகமாக்குகிறது. "அவரே அப்படி.. " என்ற எண்ணம் எல்லாருக்கும் அவரவர் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த உதவுகிறது... எதற்கு எதனை
படிக்கவேண்டும், எதனை பற்றி விவாதிக்க தேவையிருக்கிறது என்ற நிலைதாண்டி - மற்றவரின் அந்தரங்க நிகழ்வுகளை படித்து (வாய்ப்பு கிடைக்காத) தன்னை உயர்வாக நினைத்து கொண்டு - அலட்ட வைக்கிறது. இது எல்லாம் இருக்கும் வரைக்கும் யார் வரலாறுக்கும் விற்பனை இருக்கும் - அது எப்படி இருப்பினும்.

திரைப்படமும் வாழ்வும்...

பாபெல் என்ற திரைப்படமும், புரூப் என்ற திரைப்படமும் - பாபெல் திரைக்கதை மூலமாக கொண்டது. உலகில் வேறு வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்கள் - ஒரு அடிப்படை சம்பவத்தால் இணைக்கபடும் விதம். இம்மாதிரி திரைப்படங்களை கதைகளாக படித்த அனுபவம் இருக்கிறது. ராஜேஸ்குமார் கூட மாத நாவல்களில் கையாளும் விஷயம் இது. சொல்லும் படியான விஷயங்கள் - உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் குழப்பாத
திரைக்கதை. படம் முழுவதும் பார்த்தால்தான் புரியும். ஜப்பானிய பெண்ணின் மனோதத்துவம் தொடர்ப்பான நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நிறைய விமர்ச்சனங்களை கொண்டுவரலாம். புரூப் - சிறிய ஆனால் சொல்ல தகுந்த கதை. ஒரு வகை மனோ வியாதியால் பாதிக்கபடும் தந்தையும், அவர் மகளுக்கும் கணிதம் சார்ந்த விஷயங்களில் இருக்கும் அதீத ஆர்வம் - அவர்கள் / அவள் எழுதும் கணித முறை - அது சார்ந்த - அவளுக்கும் அவள் சகோதரி மற்றும் காதலனுக்குள்ளான மனோரீதியான இடைவெளிகள் என கதை அமைகிறது. திரைப்படத்தின் வசனங்கள் ஒரு நல்ல விஷயம். திரைக்கதை அமைப்பு திரைப்படத்தின் சில காட்சிகளுக்கு பின்னரே புரியும்படி இருக்கிறது. இரண்டு படங்கள் இந்த வாரம் - டிவிடி புண்ணியத்தில்.

எந்த ஒரு சம்பவமும் - அது சார்ந்த கருத்துகளும் ஒவ்வொருவரின் சுய அனுபவங்களின் அடிப்படையிலேயே எடுத்துகொள்ளபடுகிறது என்பதற்க்கு சமீபத்திய ஒரு திரைப்படத்தின் இறுதிகாட்சியாக வரும் கற்பழிப்பு காட்சி உதாரணம். அந்த சம்பவம் - அந்த மண்ணில் நடந்திருக்கிறது - இன்னும் நடப்பதற்க்கான சாத்தியம் இருக்கிறது. தென் தமிழ் கிராமங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த சம்பவத்திற்க்கான சாத்தியமும்
இருக்கிறது - சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். சம்பவம் திரைப்படத்தில் காண்பிக்கபட்ட முறை பற்றிய கருத்துகளும் - அதற்க்கான இயக்குனரின் கருத்துகளும் பத்திரிக்கை செய்திகளாகிவிட்டாலும், திரைப்படம் மக்களிடையே சென்று சேர்ந்துவிட்டது. இதனை பற்றி பேசுபவர்களுக்கு நிறைய தீனியும் கிடைத்துவிட்டது.

வாகன யோகம்

என்னுடைய எந்த வாகனமும் ஓட்ட தெரியாத குணம் பெரிய நமுட்டு சிரிப்புகளையும் - எனக்கு பின்னால் நிறைய கேலிகளையும் உண்டாக்கிவருகிறது. வருத்தமில்லை எனினும் - என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளாதவரையில் ஒரு திருப்தி இருக்காது. அது என்னவோ ஆரம்ப காலத்தில் இருந்தே நமக்கும் வாகனங்களுக்கும் ஒத்து போகவில்லை. வெகு பாதுகாப்பாக வளர்க்கபட்ட ஆரம்பகால வாழ்க்கைமுறையோ, அல்லது என் அப்பாவுக்கும் எந்த வாகனமும் ஓட்ட தெரியாது என்ற நிலையோ - என்னை எந்த வாகனம் பக்கமும் ஒதுங்க முடியாமல் செய்து விட்டது.

அப்பா சைக்கிள் மட்டுமே ஓட்டுவார். அலுவகத்தில் ஜீப், கார் என்று கொடுத்துவிட்டதால் அவருக்கு எதுவும் தேவையே இல்லாமல் போய்விட்டது. நமக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சாலை போக்குவரத்து மேல் ஒரு பயம் உண்டு. ஒரு வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்று கொண்ட காலங்களிலும், சொந்தமாக சாலையில் ஓட்ட தைரியம் வரவில்லை. பெரும்பாலும் அதற்க்கான தேவை இல்லாமல் போய்விட்டதும் ஒரு காரணம்.
பெரும்பாலும் பஸ் அல்லது நடராஜா சர்வீஸ். ஏதாவது "பிக்கப்" விஷயங்கள் கூட இதனால் இல்லாமல் போய்விட்டது - அதற்க்காக ஒன்றுமே இல்லாமல் இல்லை. வண்டி வைத்திருப்பவர்களை விட அதெல்லாம் சந்தோஷமாகதான் இருக்கிறது. ஒரு வகையில் பஸ் ஆட்டோ பயணங்கள் வாழ்வில் நிறைய சொல்லி கொடுக்கின்றன. எனக்கு மனிதர்களை பார்க்க பிடிக்கும் - அது பெரும்பாலும் சாத்தியபடுகிறது. இது ஒரு அடிப்படை கலை என்று பலராலும் சொல்லப்பட்டாலும் எனக்கு அப்படி தோன்றவில்லை. என்னால் சாத்தியபடும் விஷயங்களில் மட்டுமே கவனம் இருக்கிறது.

நான் கற்று கொள்ள முயற்சிக்காமல் இல்லை - கார் கூட ஓட்ட கற்று கொண்டேன். ஏதோ மனம் ஒட்டவில்லை. இன்றெல்லாம் குழந்தைகளை சின்ன வயதிலேயே இருசக்கரவாகனங்களில் முன்னால் உட்காரவைத்து மனதளவில் சாலைக்கு பழக்கபடுத்தி விடுகிறார்கள். நான் சைக்கிளே ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் ஓட்ட கற்று கொண்டேன். நமக்கு வாகன யோகம் இல்லை என்பது அடிப்படையிலே தெரிந்து விட்ட சங்கதி - இதற்கு வருத்தபட்டு என்ன ஆக போகிறது. பிற்காலத்தில் தேவையிருந்தால் கற்று கொள்ளலாம். அதுவரைக்கும் வாகன யோகம் பற்றி ராசிபலனில் மட்டுமே பார்த்து கொண்டால் ஆயிற்று.

நினைவுகளில்...

மைதானங்களை பற்றி மற்றுமொரு வலை பூவில் படிக்க நேர்ந்தது. தனக்கும் பரந்த மைதானங்களுக்குமான உறவை ஒருவர் விவரித்திருந்தார். படித்து கொண்டிருந்தபோது, எனக்கும் மைதானங்களுக்குமான உறவை பற்றி சில நினைவுகள் எழுந்தன. சொல்லபோனால் எல்லார் வாழ்விலும் சில மறக்கமுடியாத மைதானங்கள் பற்றிய நினைவுகள் இருக்கின்றன. பரபரப்பான கான்கிரீட் கட்டிட குவியல்களில் பரந்த மைதானங்களை நகர வாழ்வில் இழந்து வருகிறோம். நகரில் இருக்கும் மைதானங்கள் நவீனபடுத்தபட்டு அவற்றின் நினைவுகள் மறக்கவைக்கபடுகின்றன. எனக்கு நினைவு தெரிந்த மைதானங்களில் தருமபுரியில் என் பள்ளிக்கும் செல்லும் வழியில் இருந்தது ஒன்று. எப்போதும் நிறைய பேர் விளையாடி கொண்டு இருப்பார்கள். பின்னர் கர்நாடகாவில் வீட்டுக்கு எதிரே இருந்த பெரிய மணல் பரப்பு. மாலை நேரங்களில் நடக்கும் முதியவர்களும், பூப்பந்து விளையாடும் குழந்தைகளும் கொண்டது. நினைவில் நிற்கும் மற்றோர் மைதானம் திங்களூர் கிராமத்தில் என் வீட்டுக்கு பின்னால் இருந்தது. அங்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை பட்டிணத்தில் இருந்து வந்து காசு வசூல் செய்து, திரை கட்டி திரைப்படம் போடுவார்கள். பெறும்பாலும் எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி திரைப்படங்கள். என் பாட்டி எல்லா படமும் பார்த்து விடுவார்கள். எங்களுக்குதான் ஜன்னல் வழியாகவே தெரியுமே.

அப்புறம் சந்தை மைதானம். கிராம வியாபாரம் வெறும் பணத்தை மட்டும் முக்கியமாக கொண்டது அல்ல... காசு கொடுத்து வாங்கியபிறகும் கை நிறைய அள்ளி பை நிறைக்கும் மனசு கொண்ட வியாபாரம். தெரியாத ஆளுக்கும் அன்பு காட்டும் மக்கள். அதுவே மூலதனம்.
கழைகூத்தாடிகளையும், மாடுவிற்பவர்களையும், சர்க்கரை மிட்டாய்காரயும், பலசரக்கு கடை பெரியவர்களையும், இறைச்சியும் கருவாடும் விற்பவர்களையும், பழங்களை கூறுகட்டி விற்ப்பவர்களையும் மதிக்க சொல்லி கொடுத்த இடம். அவர்களின் மதிப்பு தெரிய என் பாட்டி அடிப்படை காரணம். கல்பாக்கத்தில் உள்ள ஆங்கில பள்ளி மைதானம் - வயதுகால புது பெண் உறவுகளுடன் மகிழ்ந்திருந்த இடம். பள்ளி காலங்களில் தேசிய கொடி பறக்கவைத்து மிட்டாய் கொடுத்த மைதானங்களயே பார்த்த எனக்கு மிகவும் புதிய இடம். கொஞ்சம் கூட பழக்கம் இல்லாத கூடை பந்து விளையாட்டு கற்று கொடுக்கபட்டு, அது உறவுகளுக்கு வழி சொல்லி கொடுத்த இடம். ஆறாம் வகுப்பிலேயே கண்ணாடி அணிந்து விட்டதால் எந்த
விளையாட்டிலும் கலந்து கொண்டதில்லை. ஓடும் விளையாட்டுகளில் எல்லாம் நான் பார்வையாளன்தான். எனவே என் கூடை பந்து விளையாட்டு வெறும் பம்மாத்து. அது என் உடன் பழகிவந்த பெண் பிள்ளைகளுக்கும் தெரியும். எனினும் அவர்களை கவர நான் ஓவியத்தை உபயோகபடுத்தி வந்தேன். நெஸ்கோ என்று ஒரு இடமும் மைதானமும் கல்பாக்கத்தில் உண்டு. வாரம் தவறாமல் சினிமா போடுவார்கள் - வருடம் 60 ரூபாய்தான்.
மண்ணில் உட்கார்ந்து படமும் பார்க்கலாம் - பக்கத்து உணவகத்தில் மசால் தோசையும் சாப்பிடலாம். சில முக்கியமான திரைப்படங்களை அங்குதான் பார்த்திருக்கிறேன். அதுவும் தவிர வருடம் தவறாமல் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். பள்ளி காலங்கள் அவை. கூத்தும்
கொண்டாட்டமுமான வாழ்க்கை. தள்ளி உட்கார்ந்து பார்வைகளாலேயே பேசி கொண்டு, வாய்ப்பு ஏற்படுத்தி கொண்டு கையை மட்டுமாவது தொட்டு பேசி, ஒரு உணர்ச்சிமயமான கட்டத்தில் இருட்டு மேடைக்கு பின்னால் அவசர முத்தங்களை பரிமாறி கொண்ட பொழுதுகள். கல்லூரி கால மைதானங்கள் பெரும்பாலும் பொருட்காட்சி பகுதிகளாகவே இருந்திருக்கின்றன. பெரிய மாற்றங்கள் இருந்தது இல்லை - ஒரு முறை நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான வன்முறை தவிர. கோவையில் என் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய மைதானத்தை கடக்க வேண்டும் - அது காவல்துறை பயிற்சி மைதானம்...பள்ளி காலங்களில் நாங்கள் மைதானத்தை சமன்படுத்துவோம். கற்களை பொறுக்கி, மணல் தட்டி
சமன்படுத்தபட்ட மைதானங்களில் விளையாட்டோ கேளிக்கையோ நடக்கும் நேரத்தில் மனதில் ஒரு சந்தோஷம் பரவும். பின்னர் மைதானங்கள் வாழ்வில் இருந்து பெரும்பாலும் மறைந்து விட்டன. பரந்த மணற்பரப்புகளும் அவை ஏற்படுத்திய நினைவுகளும் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன...

Thursday, February 01, 2007

புத்துணர்வோடு இந்த நிமிடம்...

நெடுநாட்களாக பதிவுகள் ஏதும் இல்லை. வேலை பளு மட்டுமே காரணம் இல்லை எனினும் இடையில் சில நாட்கள் உடல்நலம் சரியில்லாததும் காரணமாகி விட்டது. இடைபட்ட நாட்களில் எழுதுவதற்க்கு சில குறிப்புகள் மட்டுமே இருக்கின்றன. புத்தக கண்காட்சி, புதிய நண்பர்கள், கொஞ்சம் கவிதை, சில ஓவியங்கள், சில அனுபவங்கள் அது சார்ந்த சிந்தனைகள் என எழுத கைவசம் கொஞ்சம் விஷயம் உண்டு.. இந்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக எழுத நிலையான எண்ணமும் உண்டு. அப்புறம் ... என்ன சொல்வது.. சென்னை குளிர்கிறது இந்த நாட்களில்... பனியும் குளிரும் கோவையை நினைவுபடுத்தினாலும், சென்னை கோவையை போல மனதோடு ஒன்றவில்லை.
சமீப காலங்களில் கொஞ்சம் கவிதைகளை சார்ந்து விமர்ச்சனங்களும் கருத்துகளும் வரப்பெற்றேன். இது இன்னும் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது... மீண்டும் புத்துணர்வோடு சந்திக்கும் இந்த நிமிடம்... மகிழ்ச்சியை உணர்கிறேன்...