அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, August 27, 2011

மழைக்கால மேகம் ஒன்று...

மழை இப்போது வந்துவிடும் போல மேகம் கட்டி நின்றுகொண்டிருக்கிறது. காற்று நன்றாக இருக்கிறது. எந்த நிமிடமும் மழையின் முதல் துளி விழுந்துவிடலாம். இந்த காற்று தூரத்தில் பெய்யும் மழையின் வாசத்தையும் சுமந்து கொண்டு அலைந்துகொண்டிருக்கிறது. தூரத்து மலை அருகே எல்லாம் மேகம் கருப்புகட்டி மலையை மறைத்து கொண்டு நிற்கிறது. மலை மேல் எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கும் - மெல்லிய ஒரு மழைத்திரை தூரத்தில் தெரிகிறது. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் தேநீர் சுவைக்கு நாக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறதுவானம் இன்னும் சிணுங்கி கொண்டுதான் இருக்கிறது. சிணுங்கும் வானம் குழந்தையை போல. தூக்கி இடுப்பில் வைத்து கொள்ள தூண்டும் அழகு அது..!!

Tuesday, August 23, 2011

வண்ணதாசன் - ஒரு மாயாவி


வண்ணதாசனை படிக்கும் போது மறுபடி ஒருமுறை வாழ்க்கையை முதலில் இருந்து வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. கல்யாண வீடுகளிலும், இழவு வீடுகளிலும் பார்க்கும் வயது மூத்த வயசாளிகளிடம் பத்து நிமிடமாவது அவர்களின் கையை பிடித்து கொண்டு நின்று விட வேண்டும் போல இருக்கிறது. மழை, வெயில், அணில், குருவி எல்லாம் நின்று நிதானமாக ரசிக்க வேண்டும் போல இருக்கிறது. எல்லாருக்குள்ளும் இருக்கும் சொல்லாத கதைகளை சொல்ல சொல்லி ராப்போது முழுக்க ஒரு நீண்ட பயணத்தில் கேட்க வேண்டும் போல இருக்கிறது. நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையாரையும் நாள் முழுக்க பார்த்து கொண்டு இருந்துவிட வேண்டும் போலவும் இருக்கிறது. அந்த மனிதர் அப்படி ஒரு பாடு படுத்திவிடுகிறார். சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வடிகிறது. சில நேரங்களில் நினைத்து நினைத்து வெடித்து சிரிப்பு வருகிறது. - மொத்ததில் எல்லாரையும் எல்லாவற்றையும் ரசிக்க வைத்து விடுகிறார். இப்படி ஒரு மனிதன் வாழும் காலத்தில் பதிவிடும் அனுபவங்கள் காலம் எல்லாம் கடந்து நிற்க்கும்.

Monday, August 22, 2011

மனசின் பயணம் ...

நான் துடியலூரில் இருக்கிறேன். வாரம் ஒருமுறையாவது இங்கே வந்து விடுவது வாடிக்கை. அது திங்கள்கிழமை எனில் ஒரு குதூகலம் உண்டு. காரணம் - துடியலூர் சந்தை. சின்ன சந்தைதான் எனினும் மதியம் 4 மணிக்கு மேல் 8 மணிவரை கூட்டதுக்கு குறைவிருக்காது. எல்லாம் கிடைக்கும் - சல்லீசான விலைதான், அளவும் ரொம்ப சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. சந்தைக்கு என்று ஒரு அலாதி வாசம் உண்டு. அந்த சந்தையின் வாசத்துக்காகவே அந்த வழியாக வர மனது துடிக்கும். மாம்பழமும், கருவாடும், மசாலா பொருட்களும், பலாப்பழமும் .. கலந்து வரும் வாசம் மனசை திங்களூருக்கு - 2 வகுப்பு காலத்துக்கு கூட்டி செல்வதை தடுக்க முடிவதில்லை. மனசின் பயணம் எதைத்தான் விட்டுவைக்கிறது.

Sunday, August 21, 2011

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது...

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறேன். இடையே கணக்கு இல்லாத அளவுக்கு காலம் உருண்டோடிவிட்டது. காலம் என்பது நாட்காட்டி மட்டுமல்லவே, எத்தனையோ வாழ்வனுபவங்களை தந்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல, மவுனமாக அதுவும் நம் கைபிடித்து வந்து கொண்டுதான் இருக்கிறது.


எதனையும் பகிர்ந்து கொள்வதற்க்கு யாரும் இல்லாத தனிமையில் புத்தகங்கள்தான் தோழனாகின்றன. இந்த முறை கோவையில் புத்தக கண்காட்சியில் சில புதிய புத்தக தோழர்களுடன் அறிமுகமானது.


  1. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு - விக்ரமாதித்யன் - கட்டுரைகள், நேர்காணல்கள் - சந்தியா பதிப்பகம்.
  2. அபிதா - லா.ச.ராமாமிருதம் - நாவல் - புதுமைபித்தன் பதிப்பகம்.
  3. பெயர் தெரியாமல் ஒரு பறவை - வண்ணதாசன் - சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம்.
  4. பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் - சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம்.
  5. சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா - சிறுகதைகள் - பாரதி புத்தகாலயம்.
  6. சுண்ணாம்பு கேட்ட இசக்கி - .கா.பெருமாள் - நாட்டுபுற கள ஆய்வு அனுபவங்கள் - யுனைடட் ரைட்டர்ஸ்
  7. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - சிறுகதைகள் - தமிழினி
  8. அனல்காற்று - ஜெயமோகன் - குறுநாவல் - தமிழினி


இந்த புத்தகங்களையும், இவை ஏற்படுத்தும் நினைவுகளையும் தொடர்ச்சியாக பதிவிட விருப்பம்.. காலம் கை பிடித்து காத்திருக்கிறது.

Wednesday, June 02, 2010

எங்கள் இசையின் பிரம்மா...

மீசை முளைக்க தொடங்கிய பதின்வயதுகளில் அறிமுகமானது பண்ணையபுரத்து கலைஞனின் இசை. எல்லோரையும் போல சினிமா பாடல்களில் தன்னையும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணையும் கொண்டு கனவு காணும் வயதுகளில், பிண்ணனி பாடல்கள் இசைஞானிதான். அந்த இசை பித்து இன்றுவரை தொடர்கிறது - இன்னும் மரணம் வரை இருக்கும்.

எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது - இசை பற்றியும், அவர் வாழ்க்கை பற்றியும். என்ன பேசினாலும், அவர் ஒரு மகா கலைஞன் என்பதில் மாற்று கருத்து பலருக்கும் கிடையாது.

ஒரு கட்டுரையில் படித்தது ...

” 900 படங்கள், ,4500 பாடல்கள், மொழிகள் கடந்த இசை என ராஜாவின் ராஜ்ஜியம் கற்பனையிலும் பிரமிக்க வைப்பது. வழக்கமான சினிமா இசையல்லாது, 40 தனி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அவற்றில் பெரும்பாலானவை விற்பனையில் பெரும் சாதனை படைத்தவை. கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவை. 35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந்த தமிழ் சமூகத்தையே கட்டிப்போட்ட ஒப்பற்ற இசைப் படைப்பாளி. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிதாய் பிறந்த உணர்வைத் தரும் இசைக்குச் சொந்தக்காரர். “

இளையராஜாவின் இசை வெறும் இசை மட்டுமல்ல - ஒரு அற்புதமான தியானம். உழைப்பும், கலை மேல் கொண்ட மரியாதையும் தெரியும் அவர் இசையில். பிரமிக்கதக்க இசை நுணுக்கங்கள் மற்றும் வாத்திய தேர்வு ஒரு சுகமான ஆனந்தம்.

வைரமுத்து, வாலி மற்றும் பலரின் அற்புதமான கவிதைகளாகட்டும், எஸ்.பி.பி, யேசுதாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் குரலாகட்டும் - இளையராஜாவின் இசையன்றி இவ்வளவு பெயர் பெற்றிருக்க முடியாது. பலரின் சினிமா உலக வாழ்க்கையின் வெற்றிக்கு பின்னர் அவர் இருந்தார் - பல கதாநாயகர்களின் வெற்றிகள் உட்பட. மறந்து போன திரைப்படங்கள் கூட நினைவில் வருவது அவர் பாடல்களின் வழியாகதான். பாடல் மட்டுமன்றி பிண்ணனி இசையின் நாயகன் அவர்தான் இத்தனை வருடங்களாக.

புல்லாங்குழழும், வயலினும் அவர் பாடல்களில் கொஞ்சி விளையாடும் அழகே அழகு - அதற்க்கு 1000 பாடல்களை உதாரணம் காட்டலாம். எங்கள் யாருக்கும் உலக இசை தெரியாது - ஆனால் எங்கள் உலகத்தின் இசையை அறிமுகபடுத்தியவர் அவர்தான். உலக இசை பற்றிய அதீத ஞானம் உள்ளவர்களுக்கு அவர்மேல் கருத்துகள் இருக்கலாம் - எங்களை பொருத்தவரை இசை என்றால் முதலில் இளையராஜாதான்.

அவர் பிறந்த நாளான இன்று - அவர் இருக்கும் காலங்களில் வாழ்தல் குறித்த மகிழ்ச்சியுடன் ... இந்த பதிவு அவருக்காக.