அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

நடைபாதை மேதைகள்..

உங்களில் பெரும்பாலோர் சில கலைஞர்களை நடைபாதைகளில் பார்த்திருப்பீர்கள். சித்திர கலைஞர்கள், இசை கலைஞர்கள் பெறும்பாலும். என் பயணங்களில் அங்கனம் சிலரை சந்தித்து இருக்கிறேன். சிலருடன் சில மணி நேரங்கள் பேசியும் பழகிகியும் இருக்கிறேன். ஒரு முறை திருவண்ணாமலை பயணத்தில் ஒருவரை சந்தித்தேன். காவி உடையும் சிறிய ஜோல்னா பையும் மூக்கு கண்ணாடியும் அவரை எனக்கு அடையாளம் காட்டியதை விட, அவர் கையில் இருந்த மேல்நாட்டு காகிதத்திலான படம் வரையும் நோட்டு அவர்மேலான என் ஆர்வத்தை அதிகமாக்கியது. அவர் வெகுவேகமாகவும் லாவகமாகவும் படங்களை வரைந்துகொண்டு இருந்தார். நாங்கள் ஒரு சிறு பேருந்து நிலையத்தில் இருந்தோம்.அவர் வரைவதை யாரும் கவனிக்கவில்லை. நான் கொஞ்ச நேரம் பார்த்துகொண்டிருந்ததும் சட்டென நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார். பதிலுக்கு புன்னகைத்தேன். "ஒரு டீ வாங்கி தாங்களேன்.." என்றார். ஒரு நிமிட மெல்லிய அதிர்ச்சி...அவர் கேள்வி, கேட்கபட்ட விதம். பின்னர் ஒரு தெருக்கடையில் இரண்டு தேனிரும், இரண்டும் பன்னும் வாங்கிகொண்டு அவர் சாப்பிட்டு கொண்டிருக்க, நான் அவரை பார்த்து கொண்டிருந்தேன். "எங்க போறீங்க..."... "திருவண்ணாமலை..."... என்னை நான் பொதுவாக அறிமுகம் செய்து கொண்டேன். அவர் தன்னை ஒரு ஓவிய ஆசிரியர் என அறிமுகம் செய்து கொண்டார். நாங்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு பயணம் கொண்டோம். பிறகு இருவரும் பேருந்து நிலையத்தில் மெல்லிய புன்னகையுடன் பிரிந்து கொண்டோம்.

அன்று மாலை கோவிலில் இருந்து திரும்பும் போது சாலையோரம் சிலருக்கு நடுவெ அவர் மண்ணில் உட்கார்ந்து தார் ரோட்டில் அண்ணாமலையாரை வரைந்து கொண்டிருந்தார். என்னை பார்த்து புன்னகைத்தார். கொஞ்சம் காத்திருக்குமாரும், தானும் என்னோடு வருவதாகவும் சைகை காட்டினார். பின்னர் நாங்கள் விழுந்து இருந்து காசுகளை பொறுக்கி கொண்டு அருகில் உள்ள ஒரு தேனீர் விடுதியில் அமர்ந்து இருந்த போது அவர் பேசினார்...என் முகத்தில் இருந்தே என் கேள்வி அவருக்கு புரிந்து இருக்கவேண்டும். கலைஞர்கள் சபிக்கபட்டவர்கள்...பொருளாதார ரீதியாக..என்பது அவர் கருத்தாக இருந்தது. வெகுசிலரே கலைஞ்சராக இருந்து வாழ்வில் மேம்படுகிறார்கள் எனவும், பெரும்பாலானவர்கள் பொருளாதார தடைகளால் கலையை வாழ்வில் பின்னுக்கு தள்ளுகிறார்கள் என்றும் சொன்னார். நான் முயற்சி பற்றியும் சரியான ஊடகங்களில் தேர்வு பற்றியும் வாதிட அவர் விதி என்பது எதையும் தீர்மானிக்கின்றது என்றார். பின்னர் கோவில்லில் ஒரு சிறுவனை சந்தித்தோம்.வெகு அழகாக சிற்பங்களை சித்திரமாக தீட்டியிருந்தான். அவன் பள்ளியின் விலாசமும் அவன் விலாசமும் வாங்கி கொண்டு, அவனை பள்ளியில் வந்து சந்திப்பதாக சொல்லி, தெருவில் திரட்டிய பணத்தை அவனுக்கு கொடுத்துவிட்டார் அவர்.

பின்னர், அவ்வையாரின் கோவில் உள்ள உத்தமசோழபுரத்துக்கு கூட்டி சென்றார். நிறைய இடங்களில் அவர் தெருவில் படம் வரைந்து காசு திரட்டினார். பிறகு அந்த காசை பிச்சைகாரர்களுக்கும், அவர் போலவே தெருவில் படம் வரையும் பாட்டுபாடும் சிலருக்கும் பிரித்து கொடுத்தார். எனக்கு நீங்கள் நண்பரானதால் நீங்கள்தான் எனக்கு செலவு செய்யவேண்டும் என்று புன்னகைத்தார்.நான் மறுக்கவில்லை. பதிலாக அவர் வரைந்து முடித்திருந்த சில படங்களை கேட்டேன். நானும் சில கோட்டோவியங்களை வரைந்தேன். தேர்ந்த ஒரு வல்லுனர் போல சில யோசனைகளை சொன்னார்.

பின்னர் ஒரு இரவில் நாங்கள் பேருந்துகளில் எதிர் எதிர் திசையில் பிரிந்தோம். பின்னர் அவரை பார்பதற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் கொடுத்த விலாசத்துக்கு எழுதிய கடிததுக்கும் பதில் இல்லை. அவர் வரைந்த சில படங்கள் மட்டுமே என்னிடம் உள்ளது. பின்னர் ஒரு முறை சேலத்தில் ஒரு நல்ல இசைகலைஞ்சரை சந்தித்தேன். அவரும் அவர் குழுவினரும் உடல் ஊனமுற்றவர்கள். அற்புதமான குரல் வளம். சில பாடல்களை சிறு கேசட்ரெக்காடரில் பதிவு செய்து என் நண்பர் வைத்திருந்தார். அவர் பற்றியும் எழுத வேண்டும். அடுத்தமுறை எழுதுகிறேன்.இவர்களின் வாழ்க்கை எப்படிபட்டது. என்ன எதிர்பார்ப்பு...என்ன கனவு. வாழ்வின் அடிநாதமான நம்பிக்கையும் சில வாழ்வியல் அனுபவங்களை மட்டுமே அவர்கள் கொண்டுள்ளார்கள். என் தோழன் சீனிவாசனின் தந்தை ஒரு முறை திருவரங்கம் சென்றிருந்த போது சொன்னார்... தெருவில் வரைபவர்களும், தெருவில் பாடுபவர்களும் தேவ கலைஞ்சர்களால் சபிக்கபட்டப்ட்டவர்கள் என.. அற்புதமான கலை.. ஆனால் அதனை வெல்லும் வறுமை...சில சாபங்கள் நிஜம்தான் போலும்.

இந்தியாவின் வியாபார சந்தையும்...அழகு பெண்களும்.

கடந்த சில வருடங்களாக விளம்பர உலகை கவனித்து வரும் யாரும் மறுக்கமுடியாத ஒரு சங்கதி இன்றைய விளம்பரங்களில் தேவையில்லாமல் வலம் வரும் பெண்களின் அவலம். எந்த பொருளுக்கும் விளம்பரம் தேவை..எல்லா விளம்பரங்களுக்கும் பெண்கள் தேவையா..? அயல்நாட்டி வாகனத்தில் இருந்து ஆணின் உள்ளாடை விளம்பரம் வரை பெண்களை கொண்டே விளம்பரங்கள் வடிவமைக்கபடுகின்றன. அடிப்படை சங்கதி ஒன்றுதான் இந்த பொருளை உபயோகித்தால் இப்படி ஒரு பெண்ணின் உறவு கிடைக்கும் என்பது மட்டுமே உட்கருத்து. கவனிக்க...மிக சில விளம்பரங்களே பெண்களின் நட்பு கிடைக்கும் என்று சொல்கிறது... பெறும்பாலும் பெண்ணின் உறவு, உடல் இச்சை குறிக்கோளை மையம் கொண்டே சித்தரிக்கபடுகிறது. குறைந்த உடைகளும், கவர்ச்சி பார்வையும், கிளர்ச்சியான அசைவுகளுமே அடிப்படை பெண்களின் மனோபாவமாக சில விளம்பரங்கள் சொல்ல...சில விளம்பரங்கள் அபூர்வமாக பெண்களை புத்திசாலிகளாகவும் சொல்வது பாராட்டதக்கது.

இதன் மறுபக்கத்தில் வேலைவாய்ப்பு காரணமாக்கபடுகிறது. படிக்கும்போதே மாடலிங். கை நிறைய சம்பளம். சுயமனித மேம்பாடு.பெண்ணுரிமை.இது தன்னை, தன் இனத்தை மெல்ல மெல்ல உலகமயமாக்குவதை உணர்வதற்க்குள் நிமிடங்கள் கழிந்து விடுகின்றன.

முன்னைவிட வெகுஜனபத்திரிக்கைகள் காகிதவிளம்பரங்களை அதிகமாக பிரசுரிக்கதொடங்கியுள்ள வேலையில் நான் என் இளம்வயதில் சில அட்டைகிழிக்கபட்ட பத்திரிக்கைகளில் பார்த்தது போன்ற விளம்பரபடங்கள் வெகுசுலபமாக பிரசுரிக்கபடுகின்றன இன்றெல்லாம்..உள்ளாடைகளில் இருந்து அந்தரங்க விஷயங்கள் வரை கருத்து சுதந்திரம் கொடிகட்டி பறக்கிறது. பெண்களை சித்தரிப்பதில் ஒரு தெளிவான நிலைப்பாடு வேண்டும் என்ற கருத்து உண்டு எனக்கு. எத்தனை பெண்கள் நல்ல கலைஞர்களாக, தெளிவான சமூக பார்வையும், குடும்ப அமைப்பில் வெற்றி கண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களையும் விளம்பர உலகம் கவனிக்கலாமே. விளம்பரம் என்பது வாங்க தூண்டும் கவர்ச்சி மட்டுமல்ல...சில வினாடி நேர கருத்து செயல்பாடுள்ள ஊடகம் என்பதையும் மனதில் கொள்ளலாமே...

ரஜினியும் கமலஹாசனும்...மற்றும் பலரும்

சமீபகால திரைப்படங்களில் (இளம்??)கதாநாயகர்கள் தங்களை ரஜினி போலவும் கமல் போலவும் உருவகபடுத்திகொண்டு இருக்கிறார்கள். கதாசிரியர்களும் கதைகளை அவ்வாறே எழுதுகிறார்கள். பாடலாசிரியர்களும் தூக்கிவிடுகிறார்கள். ஒரு விஷயத்தை பொதுவில் இவர்கள் யோசிக்க மறக்கிறார்கள். ரஜினியும் கமலும் ஒரு இரவில் ஹீரோ ஆகவில்லை. வில்லனாகவும், சிறு கதாநாயகர்களாகவும் மெல்ல மெல்ல கனமான திரைக்கதைகளையும் தாண்டி இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். சிறந்த கதைகளாலும், இயக்குனர்களாலும் செதுக்கபட்டு இருக்கிறார்கள். மாஸ் ஹீரோ என்ற நிலைக்கு முன்னர் நல்ல நடிகர் என்ற நிலையும் தொட்டு நடித்திருக்கிறார்கள். அவர்களை சுற்றி நல்ல நண்பர்கள் உண்டு. பாலகுமாரன், சுஜாதா, மணிரத்தினம், ஏ.வி.எம்.சரவணன், ராபர்ட் ராஜசேகர், பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்தரய்யா, இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், நகேஷ், சோ, சிங்கீதம் சீனிவாசராவ் மேலும் பலரும் பலரும்.. இந்த இருவரின் பரிணாமங்களுக்கு உணவளித்து இருக்கிறார்கள். அடிப்படையான வாழ்க்கைமுறை அடிப்படையில் இருவருக்கும் வேறுபாடுகள் இருந்தாலும் உள்ளார்ந்த நட்பு இருவருக்குள்ளும் உண்டு. கருத்துகளை சுதந்திரமாகவும் தோழமை உணர்வோடும் பரிமாறி கொள்கிறார்கள். அடுத்தவர் திறமை மேல் இருவருக்கும் நம்பிக்கை உண்டு...இதனை இவர்கள் இருவரது பேட்டிகளிலும் காணலாம். ரஜினி கமல் போல ஆவதற்க்கு மாஸ் ஹீரோ இமேஜ் மட்டும் போதுமானதல்ல. அடிப்படையான குழு மனப்பான்மையுடனான தொழில் உணர்வு, திறமையான கதைகளில் நடிக்ககூடிய தைரியம், வேறுபட்ட இயக்குனர்களினால் இயக்கபடுதல் இவைகளும் தேவை. சமீபத்தில சில திரைப்பட துணுக்குகளே எரிச்சலையும் தலைவலியையும் கொடுத்துவிட்டது. இவ்வாறு இருப்பின் நல்ல திறைப்படங்கள் என்பது கண்காட்சி பொருளாகிவிடும். சில விதிவிலக்குகளும் உண்டு... அவை பெரும்பான்மை சமூகத்தில் எடுபடுவதில்லை. வெகுசிலரால் மட்டுமே பார்க்கபட்டு சீக்கிரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டுவிடுகின்றன.

மாணவர்களது எதிர்கால எண்ணங்களில்...

என்ன படிக்கிறீங்க...? எஞ்சினீரிங்... கம்யூட்டர்...ஜாவா...மைக்ரோசாப்ட் .நெட்... பொதுவில் எல்லா மாணவர்களுக்கும் ஒரே எண்ணம் சமூகத்தாலும் குடும்பத்தாலும் வளர்க்கபடுகிறது. அது பணம் சம்பாரித்தல். இது படித்தால் பணம் அதிகம் கிடைக்குமா...அது படித்தால் நிறைய பணம் கிடைக்கும் வேலை கிடைக்குமா.. இது எல்லாம் படித்தால் வெளிநாடு போகலாமா.. அது எல்லாம் படித்தால் பெரிய சம்பள பெண் கிடக்குமா..கேள்விகள்...கேள்விகள்...

அப்துல்கலாம் ஒரு முறை சொன்னார்... நிறைய விஞ்யானிகளை தேசம் எதிர்பார்க்கிறது என்று... ஒட்டுமொத்த பூமியின் தேவைப்படுகின்ற பொறியியலாலர்கள் ஒரு பக்கம் இருக்க... நம் நாடு மும்மடங்கு பொறியியலாலர்களை ஒவ்வொரு வருடமும் உருவாக்கி கொண்டிருக்குறது. அறிவியல் சார்ந்த படிப்பை முடித்தவர்களும் டெக்னிகல் பக்கம் சாய்வதற்கு சம்பளபணம் ஒரு காரணமாகிறது. கணிதமும், வேதியலும், மற்றும் அறிவியலும் படித்தவர்கள் இந்தியாவில் டெக்னிக்கல் வேலை செய்து கொண்டிருக்க, வெளிநாடுகளில் டெக்னிகல் வேலைகள் குறைத்து அறிவியலை வளர்க்கிறார்கள். மேலும் 250 வகையான டெக்னிகல் அல்லாத வேலைகள் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் அறிமுகபடுத்தபட்டு இருக்கின்றன. அவற்றில் மன அழுத்தம் கிடையாது. போதுமான சம்பளம் உண்டு (அளவுக்கு மீறி கிடையாது... நிறைய பேர் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதை பெருநகரங்களில் காண்கிறேன்). நல்ல வாழ்க்கை முறை உண்டு. குடும்பத்துடன் செலவிட நேரம் உண்டு. நல்ல உணவும் உடல் உழைப்பும் ஆரோக்கியமும் இருக்கிறது. வாழ்க்கையின் உண்மையை அனுபவிக்கிறார்கள். அங்கேயும் இங்கேயும் இது எல்லாம் இல்லாமல் இருப்பவர்கள் நம் இந்திய தேச உழைப்பாளிகள்தான். மூளையை மட்டுமே முதலீடாக்கும் அறிவாளிகள்தான்... கல்விசார்ந்த நண்பர்கள் இருந்தால் இது பற்றி மேலும் விவாதிக்க விரும்புகிறேன். நம் தேசத்தில் மேலும் டெக்னிகல் சாராத வேலை வாய்ப்புகளைபற்றி சில கல்லூரிகளில் பேசிய போது நல்ல வரவேற்ப்பு இருந்தது. வெகு அரிதாக சில மாணவர்கள் இத்தகைய வேலை வாய்ப்புகளை விரும்புகிறார்கள்... மதிப்புகளை தெரிய வைப்பது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது.

எண்ணங்களின் சிறகுகள் ...

கடிதங்கள் மெல்ல மெல்ல நம் வாழ்வில் இருந்து விடைபெற்று கொண்டு இருக்கின்றன. இளம் மஞ்சள் நிற அட்டைகள், இளம் ஊதா நிற காகிதங்கள் நம் வாழ்வின் கதைகளை உறவுகளுக்கு சொன்ன காலங்கள் மெல்ல மெல்ல கருப்பு வெள்ளையில் குறுகி கொண்டு இருக்கின்றன. கடிதங்கள் எழுதுவது ஒரு இனிய அனுபவமாக இருந்த காலம் ஒன்று உண்டு. என் இளம் வயதில் - 3ஆம் வகுப்பு படிக்கும்போது நான் பாட்டியுடன் கிராமத்தில் வாழ்ந்து இருந்தேன். அப்போது அம்மா அப்பாவிடம் இருந்து வாரம் ஒரு கடிதம் வரும். தம்பியும் தன் மழலை கிறுக்கல் கையெழுத்தில் கடிதத்தின் கடைசிப்பகுதியில் எழுதுவதுண்டு. பாட்டிக்கு படிக்க தெரியாது. நான் தான் படித்து சொல்வேன். அதுவும் தவிர அக்கம் பக்க வீட்டு கடிதங்களுக்கும் படிப்பாளி நாந்தான். அப்பா அம்மா கடிதத்துக்கு காத்து கொண்டிருந்த காலம் உண்டு. ஊதா இங்கில் எழுதப்பட்ட நலம் விசாரிப்புகளும், அறிவுரைகளும், சின்ன கதைகளும், சில ஸ்லோகங்களுமாக அம்மாவின் கடிதம் அம்மாவின் வாசம் சுமந்து கொண்டிருக்கும். பாட்டிக்கு நலம் விசாரிப்புகளும், ஊர் தகவல்களும் மற்றும் பணம் அனுப்பும் விஷயங்களும் உண்டு. பாட்டி சொல்ல சொல்ல கடிதங்கள் எழுதுவண்டு நான். பெறும் பாலும் என் குறும்புகள் பாட்டியினால் பாராட்டிகளாகவே கடிதத்தில் சொல்லபடும். கடிதங்களின் மடிப்புகளில் கூட பாட்டி எழுத சொல்வதுண்டு. நான் படங்கள் வரைந்திருப்பேன். என் கேள்விகள் பெரும்பாலும் அம்மா அப்பாவின் கிராம வருகை தொடர்பானதாகவே அமைந்திருக்கும். தபால்காரம் ஒரு அற்புதமான தாத்தா. நரைத்த மீசையுடன் உறவுகளை இணைக்கும் நண்பர். எல்லா வீட்டிலும் மோரும் தண்ணீரும் குடிப்பார். சில வருடங்களுக்கு பின்னர் என் பாலிடெக்னிக் காலத்தில் கடித போக்குவரத்துதான் ஒரே பொழுது போக்கு. கொஞ்சம் இலக்கியமும் சினிமாவும் அறிமுகமாகியிருந்தால் கடித போக்குவரத்து அம்மா அப்பா தாண்டிய உலகத்துக்குள் பிரெவேசித்து இருந்தது. சின்ன மருத்துவ குறிப்புகள், மேலும் ஸ்லோகங்கள், பண விஷயங்கள், நல விசாரிப்புகள் என கடிதங்களும் நிலையில் உயர தொடங்கியிருந்தன. அப்புறம் குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு என் பக்கமிருந்த கடிதங்கள் குறைந்துவிட்டன. அப்பா அம்மா மட்டும் உறவுகளுக்கு கடிதம் எழுதுவார்கள்... அப்புறம் மெல்ல மெல்ல தொலைபேசியில் கடிதங்கள் நிறம் மங்கிவிட்டன. பின்னர் கணிப்பொறியும் இணையமும் கடிதங்களை மேலும் ஊனமாக்கிவிட்டன். இன்றெல்லாம் கடிதங்கள் தொலைபேசி பில்களையும், பல்கலைகழக பரீட்சை அழைப்புகளையும் சில வங்கி விஷயங்களையும் மட்டுமே கருத்தாக கொண்டு என் வீட்டு வாசல்களில் இறைந்து கிடக்கின்றன. தபால்காரருடனனான உறவுகள் இன்று ஏதுமில்லை. கடிதங்கள் என் வாழ்வில் இருந்து மெல்ல மெல்ல விடை பெற்று கொண்டு இருக்கின்றன. என்னதான் தொலைபேசியில் பேசினாலும், இனிமேல் வாரம் ஒரு கடிதம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எழுத வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன். கடிதம் எழுத தொடங்கும் போது இருக்கும் வார்த்தைகளும் கருத்துகளும், எழுத தொடங்கியதும் மேலும் மேலும் பொங்கிவரும்...அது ஒரு சுகானுபவம். வார்தைகளை விட எழுத்துகள் பலமும் உணர்வும் பெறும் இடங்கள் கடிதங்கள்தான்.

தமிழில் Erotica...

தமிழ்ல் Erotica நான் தேடியலைந்த விஷயங்களின் ஒன்று. இதுவும் ஒரு வகை இலக்கியம் என்பதை புரிந்துகொண்டவர்கள் மிக சிலரே. பொதுவில் Erotica என்பது இரண்டு பக்கமும் பின் அடிக்கபட்ட இங்க் உறிஞ்சும் மஞ்சள் காகிதங்களில் எழுதபட்ட 40 பக்க புத்தகமாகவே புரிந்து கொள்ளபட்டு இருக்கிறது. கி.ராஜநாராயணன் அவர்களின் பாலியல் கதைகள் வேறுபட்ட தொகுப்பு. கிராமத்து மக்களின் வாழ்க்கைமுறையும் உறவு முறைகளும் அவர்களின் உறவுசார் கற்பனைகளையும் வசவுகளின் உட்கருத்துகளையும் மேலும் சின்ன வயதில் சிரிப்பை அடக்கி கொண்டு கிராமத்து பெரிசு பெண்டுகளிடம் அரைகுறையாக கேட்ட கதைகளையும் அற்புதமாக தொகுத்து இருக்கிறார். பெறும்பாலான இலக்கிய உணர்வுசார் கதைகளிலும் கட்டுரைகளிலும் (எ.கா: ஜெயமோகன், கு.பா.ரா, ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், புதுமைபித்தன், பாரதி, ஆண்டாள், திருவள்ளுவர், நா.பார்த்தசாரதி...மேலும் பலர்) ஆண் பெண் கவிஞர்களின் கவிதைகளிலும், வெகு அரிதாக சில சினிமா பாடல்களிலும் Erotica மென்மையாக வாழ்கிறது. 1970களில் சுஜாதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான கணையாழியின் கடைசிபக்கங்களில் கூட கமலஹாசனும் சுஜாதாவும் தமிழில் Erotica தேடியிருக்கிறார்கள். இதுபற்றி பொதுப்படையாக பேசமுடியாத சூழ்நிலை இன்னும் உள்ளது. சென்னை லேண்ட் மார்க்கில் ஒரு தனி பகுதி உள்ளது. அங்கே நின்றாலே வில்லங்கமாக பாப்பார்கள். ஆனால் யாரும் இல்லாதபோது ரகசியமாக நின்று பொம்மை பார்ப்பார்கள். இவர்களை பற்றி கவலைபடாமல் ஒரு தனி தொகுதி அமைத்து விவாதம் செய்ய இணையமும் மின்-அஞ்சலும் வழிசெய்கிறது. விவாத தொடர்ப்புகள் வரவேற்க்கபடுகின்றன.

எழுதபடாத கதைகள்...

கதைகள் படிப்பவர்களுக்கு இயல்பாகவே எழுதவேண்டும் என்ற ஆர்வமும் வருவதுண்டு. எழுத கருத்துக்கள் வேண்டும். கல்லூரிகாலங்களில் மாணவ அமைப்பின் புரட்சிகருத்துகளும் காதலும் மட்டுமே எழுத தொடங்கிய விஷயங்களாக இருந்தன. சினிமா கதைகள் படிக்கவும் எழுதவும் தொடங்கிய போதும் காதல் மட்டுமே பிரதானமாக சொல்லிகொடுக்கபட்டது. ரொம்பவும் விதிவிலக்காக சில திரைப்படங்கள் இருந்ததை மறுக்கமுடியாது. கதாநாயகர்களும் கதாநாயகிகளும் எல்லா கதைகளிலும் உண்டு. சாகசங்கள் செய்வார்கள், காதல் செய்வார்கள், வாழ்வில் ஏற்ற இறக்கங்களில் பயணிப்பார்கள், உலகம் புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள். நான் படித்த அதிக பட்ச கதைகளில் இவை எல்லாம் உண்டு. நானும் கொஞ்சம் எழுத தீர்மானித்து இருக்கிறேன். என்னை சுற்றியுள்ள உண்மையான கதாநாயகன் கதாநாயகி பற்றி. என் அப்பாவும் அம்மாவும் தவிர என் கதாநாயகனும் கதாநாயகியும் யார். அவர்கள் வாழ்க்கையில் வாழ்ந்து வந்ததை யார் பதிவு செய்வது. சொல்லபோனால் இது மகன் அல்லது மகளின் கடமை. நமக்காகவே வாழ்ந்து அம்மா அப்பா பற்றி நம்மில் எத்துனை பேருக்கு எல்லாம் தெரியும்? அவர்களின் இளம்வயது, பள்ளி கூடம், வாத்தியார்கள், ஆர்வங்கள், நட்புகள், வாழ்க்கை, சுகங்கள், துக்கங்கள், சொந்தங்கள், சிந்தனைகள், பார்வைகள், கருத்துகள் எல்லாம் எங்கே பதிவு செய்யபடுகின்றன..? ஒரு முழுமையான நாவலுக்கு ஏற்ற வாழ்க்கையை அல்லவா அவர்கள் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள்... அடுத்த தலைமுறைக்கு இவர்களின் வாழ்க்கை பாடங்கள். தலைமுறை படிக்குமோ இல்லையோ... ஒருவகையில் நம்பிக்கைதரும் நிஜங்களை கொண்ட வாழ்க்கையை படிக்கும்போது அது தரும் தைரியம் தனி. கிராமத்து கோவில் தேவதைகள் பார்த்ததுண்டோ..? எல்லா கோவில் தெய்வங்களும் ஒரு வகையில் அங்கே அந்த பகுதியில் வாழ்ந்து மறைந்த மனிதர்கள்தான்... அவர்களின் நினைவாகவே அவர்கள் தெய்வங்களாக அங்கே பிரதாபிக்கபட்டு இருக்கிறார்கள். ஆன்மீகங்கள் மாதாவையும் பிதாவையும் தெய்வமாக கொள்கின்றன. அவர்களை பற்றிய பதிவுகள் மிக அவசியம் என்றே நினைக்கிறேன்.

மாறுபடும் பாலுணர்வில்...

சமீபகால சில குறிப்பிட்ட பாலுணர்வு கருத்துகணிப்புகளில், ஆர்வங்கள் பற்றிய பகுயில் ஒரு வேறுபாட்டை கவனிக்கின்றேன். முன்றைய கால ஆண்கள், கட்டுமஸ்தானமாக மீசையும் உடல் ரோமமுமாக இருந்ததை படித்திருக்கிறேன். பெண்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. தஞ்சையிலும், கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும், மேலும்பல கோவில் சிற்பங்களிலும் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என கண்டதுண்டு. இன்று கொஞ்சம் நிலவரம் மாறி வருகிறது. சமுதாய வாழ்க்கைமுறை இந்த மாற்றத்துக்கு காரணமாக இருக்கிறது. என் கருத்து தவறில்லை என்றால் கொஞ்சம் பெண் தன்மையுள்ள ஆண்களும், ஆண்தன்மையுள்ள பெண்களும் எதிர்பாலினரால் ஈர்க்கபடுவதாக கருத்துகளில் அறிகிறேன். மீசை இல்லாத, உடல் ரோமம் முற்றிலும் மழிக்கபட்ட, கொஞ்சமும் தலைசீவாத பெண்கள் போல அலையாயும் தலைமுடியும் கொண்ட ஆண்களை பெருநகரங்களில் காண்கிறேன். நளினமில்லாத, ஆண்பிள்ளைகளின் தன்மையான உடையலங்காரமும், ஆண்போல பேச்சும் ஒரு தலையான கருத்தும் கொண்ட பெண்களையும் காண்கிறேன். இதற்கு காரணங்கள் பல உண்டு எனினும் இவர்களில் பெண்களின் ஈர்ப்புகள் குறைந்த ஆதிக்கமனப்பான்மை உடைய எதிர்பாலினர்மேலும், ஆண்களின் ஈர்ப்புகள் அதிக ஆதிக்கமனப்பான்மை உடைய எதிர்பாலினர்மேலும் கொள்வதாக கருத்துகள் சொல்கின்றன. மருத்துவ ரீதியாகவும் இன்றைய தலைமுறையின் உடலமைப்பு உடல் அங்கங்களை கொண்டு கொஞ்சம் மாறுபட்டு வருவதாகவும் சில மருத்துவம் சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்காலத்தில் ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்பு அவன் வாகனத்திலும் பண வசதியிலும் சொல்லப்பட்டு, பெண் பற்றிய கணிப்பு உடல் அங்கங்களின் வனப்பிலுமே சொல்லபட்டு இருப்பதாக ஒரு மனோதத்துவ மருத்துவர் அஜ்தக் தொலைகாட்சி பேட்டியில் சொல்லிகொண்டிருந்தார். ஆண் போல பெண்ணும், பெண்போல ஆணும் கருதி கொள்ளும் வேறு ஒரு உலகத்துக்குள் இது மெல்ல மெல்ல நாசுக்கான நாகரீகமாக கருதபட்டு சமுதாய வட்டதுக்குள் உள்ளீடு செய்யபட்டு வருகிறது. மேலும் விவாதங்கள் வரவேற்க்கபடுகின்றன.

வாசல்படிகள்...

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு கட்டுரையில் வாசல்படிகள் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அவை வெளிஉலகத்துக்கு முதல் படிகள் என்று அவர் கட்டுரை சொல்லியது. ஆம்.. எல்லா வீட்டு வாசல்படிகளும் நிறைய கதைகளை கொண்டு இருக்கின்றன. உலகம் மற்றும் மனிதர் அறிமுகங்களின் அரங்கேற்றும் தளமாக பெறும்பாலும் வாசலபடிகள் விளங்குகின்றன. இளம் வயதில் வாசம்படிகள் கதை சொல்லும் படிகளாக இருந்திருக்கின்றன. பாட்டி வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு எனக்கும் தெருபிள்ளைகளுக்கும் கதை சொல்லியிருக்கிறார்கள். நடைவண்டி தையல்காரன், காய்கறிக்கார அம்மாள், வயதான முடமான பிச்சைகாரர்கள், வயதானாளும் பெனாயில் பாட்டில் விற்கும் முதியவர்கள், வளையல்காரர்கள், துணியும் ஜமுக்காளமும் கொண்டுவரும் வியாபாரிகள், மீன்காரர், ஐஸ்வண்டிகாரர் மற்றும் பலர் என பலதரபட்ட மக்களையும் அறிமுகம் செய்து வைப்பது வாசல்படிகள்தான். நாங்கள் வசித்த வீட்டின் வாசல்படிகள் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அவற்றின் சம்பவங்கள் ஞாபகம் இருக்கின்றன. சறுக்கு மரமோடு கூடிய வாசல்படிகள், செங்கல் மட்டுமே கொண்ட படிகள், சிமெண்ட் படிகள், யானை இரண்டு பக்கமும் கொண்ட படிகள் என பலவகையான படிகள் கோலங்களால் பொதுவாக அலங்காரம் செய்யபடுவதுண்டு. சில வீட்டு வாசல்களின் பூந்தொட்டிகள் உண்டு. மர இலைகளால் வாசல்படிகள் நனைந்திருக்கும் காலங்களை நினைக்கிறேன். வாசல் படிகள் சில மரணங்களையும் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன. அவற்றின் பிறகு தனியாக வாசல்படிகளில் அமர்வதை தவிர்த்திருக்கிறேன். சில வீடுகளில் வாசல்படிகள் வெறும் செருப்பு அடுக்கும் படிகளாகவே இருக்கின்றன... வீட்டின் வாழ்க்கை படிகளில் தொடங்குகிறது...மனிதர்கள் போலவே ஞாபகங்கள் வாசல்களுக்கும் உண்டு. வாசல்களின் ஞாபகம் மனிதர்களுக்கும் வேண்டும்.

செக்ஸ் - சட்டத்துக்குள் வட்டங்கள்...

எல்டன் ஜான் - சர்ச்சைக்குள்ளான ஒரு இசைகலைஞன். என்ன சர்ச்சை... என்று கேட்பவர்களுக்காக... இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்... அதிலென்ன சர்ச்சை..? அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு ஆணை. ஆம். அது ஒரு ஓரின சேர்க்கை திருமணம். இந்த வார The Week - Jan 22 2006" இதழை பாருங்கள். அதில் ஷோபாடே யின் கட்டுரை ஒன்று இந்த திருமணம் பற்றி பேசியுள்ளது. திருமணம் என்பது ஒரு வகையான பந்தம் என்ற நிலை மாறி ஒரு சொத்து சேர்க்கும் வழிமுறையாகவே உள்ளதாக கருதபடுகிறது. உணர்வுகளுக்கு ஆதரவு தரும் சில அமைப்புகள் இந்தியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கின்றன. லெஸ்பியன் மற்றும் கே உறவுகளுக்கு ஆதரவுதரும், அந்த உணர்வுள்ளவர்களுடைய சமூக பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் இந்தியாவில் சில அமைப்புகள் கடந்த 3 வருடங்களில் தொடங்க்கபட்டுள்ளன. இந்தியாடுடே, காமசூத்திரா ஆகிய அமைப்புகளின் கருத்துகணிப்புகளிலும் ஓரினசேர்க்கையாளர்கள் மெதுவாக தங்களை இருத்தலை காண்பிக்க தொடங்கியுள்ளார்கள். மூன்றாம் பாலின நண்பர்களும் மெல்ல தங்கள் சமூக இருத்தலை காண்பிக்கின்றார்கள். இந்திய அரசியலைமைப்பு மற்றும் சட்டம் தன் ஸரத்துகளில் உடலுறவு என்பது யோனியும் லிங்கமும் இணைவதே என்பதை திட்டவட்டமாகவும், மற்ற உறவுமுறைகள் இயற்க்கைக்கு ஒவ்வாததாகவுமே கருதுகிறது(எதிரொலிக்கும் கரவொலிகள் / அரவாணிகளும் மனிதர்களே எனும் புத்தகம்). பல மேலை நாடுகளுமே இவ்வாறு கருதுகின்றன. காமசூத்திரா நூல் தற்காலங்களில் கொஞ்சம் மாற்றபட்டு உள்ளதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள். காமசூத்திரா புத்தகம் இந்திய சட்டங்களுக்கு ஏற்ப வெட்டி மாற்றபட்டு உள்ளது. இதனை ஒரு நூலகர் என்னிடம் சொன்னார். அதுவும் தவிர கஜுராகோ சிற்பங்களில் சட்டம் சொல்லும் ஒவ்வாத உடலுறவுகள் புணையபட்டிருப்பதை உதாரணமாக்கினார். இந்தியாவின் கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் காமம் என்பதை பல்வேறு அர்த்தங்களில் பார்க்க முடிகிறது. ஓஷோ சொல்வது போல ஆன்மீகமாகவும், மெல்லிய இசை போன்ற உணர்வாகவும், மேலும் மேலோட்டமான உறவு சார் வழிமுறைகளாகவும் பார்க்க முடிகிறது. இதுதான் முறைபடுத்தபட்ட காமம் என்று எங்கனம் சொல்வார்கள்...? எதிரொலிக்கும் கரவொலிகள் / அரவாணிகளும் மனிதர்களே எனும் புத்தகம் கேட்கும் கேள்விகளில் மூன்றாம் பாலின மக்களின் செக்ஸ் உணர்வுகள் கேலிக்குறியதாக சமூகத்தில் சொல்லபடுவதை எடுத்துகாட்டுகின்றன. இங்கே இந்தியாவில் எல்லாம் உண்டு... எல்லா வகை ஆசாபாசங்களும் மக்களிடையே கையாளப்டுகின்றன. எனினும் தன்னைமட்டும் செக்ஸ் ஆசையில்லாத புனிதர்களாக வட்டங்களில் அமைத்து கொள்வதை எல்லாரும் விரும்புகிறார்கள். அடுத்தவரது வாழ்க்கை மட்டுமே விவாதிக்கபடுகிறது. சமீபத்தில் "Fire" என்னும் திரைப்படம் பற்றிய ஒரு சிறு விவாதத்தில் ஒரு நண்பர் சொன்னார்... "நான் இந்த உறவு முறையை ஏற்று கொள்ள போவதில்லை... இப்படி பெண்கள் பெண்களிடன் சுகம் காண தொடங்கிவிட்டால்.. அப்புறம்... ஆண்கள் எங்கே போவது... " ஆக... அடிப்படையில் உனக்கு உறவு கொள்ள பெண் இல்லாமல் போய்விடுவாள் என்ற பயமும், அது தொடர்பான கவலையுமே இத்தகைய எதிர்ப்பை கிளப்பிகிறது. இந்த கருத்து "Fire" திரைப்ப்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரும்பாலரிடம் இருந்ததான் இந்தியாடுடேயின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் சொன்னார். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு வெறும் உடல் இச்சை... ஓரின சேர்க்கையாளர்கள் உணர்வுகளின் ஒன்றுபடுதல் மூலமாகவே சேர்கிறார்கள்... மூன்றாம் பாலின மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளும் அப்படித்தான் என்று மின்னஞ்சல் மூலமான ஒரு இணைய குழுமத்தில் ஒருவர் எழுதியிருக்கிறார். ஆயினும் நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கிறது. இதனை பயன்படுத்தி "Black Mail" செய்வது... போலியான முகவரிகளில் ஆட்களை வரவைத்து கேவலப்படுத்துவது... போன்ற வேலைகளினால் யாருக்கும் எதிர்பாலினர்மேல் மேலும் வெறுப்பு வருமேயன்றி... நீங்கள் எதிர்பார்க்கும் சட்டத்துக்கு உட்பட்ட ஆர்வம் வராது.

கலாச்சாரம் - ஒரு குறைப்பார்வை

சென்ற மாதங்களில் சில தோழிகளின் அறிமுகங்கள் கிடைத்தன. நிச்சயம் இனிய சந்திப்புகள் இல்லை. கலாச்சாரம் பற்றிய என் கருத்துகளை பற்றிய கண்டனங்களுடன் என்னை தொடர்ப்பு கொண்டார்கள். அடிப்படையின் அவர்களுக்கு நன்றி. உங்களுடன் பேசிய பிறகு நாம் இருவருமே நம் இருவரது கருத்துகளை முழுமையாக ஒத்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொண்டோம். எனினும் இருவருக்குமே அடுத்தவரது எண்ணங்களில் அர்த்தம் புரிந்தது. தெளிவான கண்டனங்களும் விவாதங்களும் நம்மை, நம் கருத்துகளை முழுமையாக்குகின்றன. மேலும் சில என் கருத்துகளை இம்முறை எழுதுகிறேன்.

நான் கலாச்சாரம் என்று சொல்வது உடையலங்காரங்கள் அல்ல. பாலுணர்வு அல்ல, கற்பு அல்ல. நான் சொல்லும் கலாச்சாரம் தனி மனித மனம் சம்பந்தபட்டது. வாழ்வியல் பற்றியது. உயிர்களிடத்தில் பழகும் மனிதத்துவம் பற்றியது. அடிப்படை ஒழுக்கம் பற்றியது. சமுதாயத்தில் அல்லது சமுதாயம் என்று சொல்லபடும் அமைப்பில் உங்களின் இருத்தல் பற்றியது. காதலும் ஆன்மீகமும் போல ஒரு உணர்வு சாந்தது.

பெண்கவிஞர்கள் ஒரு கலாச்சார அல்லது சமூக மற்றும் தார்மீக அதிர்வுக்காக பாலுணர்வு விஷயங்களை கதைகளிலும் கவிதைகளிலும் கையாள்கிறார்கள். பொதுவாக இந்த விஷயங்கள் சுலபமாக கவனிக்கபடுபவை. அதிலும் பெண்கள் இதுகுறித்து பேசும் போது கவனித்தலின் கூர்மை அதிகமாகிறது. இது தவறு என்று வாதிடபோவதில்லை நான். ஆண்டாள் சொல்லாததை யாரும் சொல்ல போவதில்லை. மகடுஉ முன்னிலை / பெண்புலவர் களஞ்சியம் - புத்தகமும் நிறைய சொல்லியிருக்கிறது. பெண்கள் தங்கள் பார்வையில் அணுகும் விஷயங்களில் ஆண்களை விட உள்நோக்கு பார்வையும் வலியும் சுகமும் கலந்து இருக்கின்றன. வரவேற்றபட வேண்டிய விஷயம்...எனினும் சமுதாயம் எனப்படும் அமைப்பு தனது பார்வையை தெளிவுபடுத்தி கொள்ளவில்லை. "இவளுக்கு ரொம்பத்தான்...." எனப்படும் வசனங்களை சுலபமாக சொல்கிறது. இது மாறவேண்டும் என்றால் உங்கள் குரலில் மேலும் அதிர்வும், வேகமும் வேண்டும். அடிப்படையான ஒற்றுமை உணர்வு வெறும் சிறு போராட்டங்களுக்கு மட்டுமே பயன்படாமல் மேலும் சிறு கூட்டங்களையும், வாசிப்பு முயற்சிகளையும் மேம்படுத்த பயன்படவேண்டும். கருத்துகளை கொண்ட ஆனால் எழுத்துகளில் வெளிப்படுத்தாத பெண்கள் சமூகத்தில் இன்னும் நிறைய உண்டு. அவர்களை சந்தியுங்கள். அவர்களின் பார்வையில் உலகத்தை காணுங்கள். அவர்களை உங்கள் கூட்டங்களில் பங்கேற்ற வையுங்கள். இலக்கியம் என்பது வெறும் எழுத்து மாயாஜாலம் அல்ல... அது மனதில் குரல், மக்களின் குரல், சமூகத்தின் குரல், உணர்வுகள் குரல் என்பதை மற்ற அமைப்புகளுக்கு எடுத்துகாட்டுங்கள். குறுகிய வட்டத்துக்குள் நிற்க்காமல், மேலும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. உங்கள் பார்வைகள் அவற்றையும் கவனிக்கட்டும்.

பாரதி சொல்வது போல் - கற்பு என்பது இருப்பின் அதை ஆணுக்கும் பெண்ணும் பொதுவில் வைப்போம். கற்பு என்பது மனம் சார்ந்த உணர்வு என்பது என் கருத்து. உடல் சார்ந்த உறவில் கற்பு என்பது முன்னிலை படுத்தபடவில்லை. அதில் உணர்வு சார்ந்த ஒரு பந்தம் முன்னிலைபடுத்தபடுகிறது. இது நம் இருவருமே ஒத்து கொண்ட ஒரு கருத்து. எனினும் இது பற்றிய ஆண்களின் விவாதங்கள் பலவற்றிலும் பெண்களின் ஒழுக்கம் சார்ந்த விஷயமாக உடல் சார்ந்த விஷயமாக கற்பு கருதபடுகிறது. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் உறவு சாகசமாகவும், பெண் கொள்ளும் உறவு வேசித்தனமாகவும் சித்தரிக்கபடுகிறது. பெண் பற்றிய ஆணின் ரசனை உடல் அங்கங்களை கொண்டே அளவிடபடுகிறது. செக்ஸ் என்பது பொதுவில் பேசதகாத ஆனால், அனைவருக்கும் அடுத்தவரது படுக்கையறையில் எட்டிபார்க்கும் சுகம்தரும் விஷயமாகவே கருதப்படுகிறது. சமீபத்தில்படித்த சிக்மண்ட் பிராய்ட் கட்டுரைகளை தமிழ்படுத்தி பதிவு செய்ய உத்தேசித்து இருக்கிறேன்..

மேலும் இது பற்றி விவாதிக்கலாம்... உங்களின் கருத்துகளுடன்...

சென்னையின் புத்தக கண்காட்சி

சென்ற ஞாயிற்று கிழமையின் மாலை புத்தக கண்காட்சியில். நானும் நண்பர் லோகுவும். டைடல் பார்க்கில் ஒரு கணிப்பொறி தொடர்ப்பான குழும அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாலை 7:15க்கு புத்தக கண்காட்சியில் நுழைந்தோம். 8:30 வரைதான் கண்காட்சி என்று தோழி ஒருவர் SMS மூலமாக செய்தி சொல்லியிருந்ததால் கொஞ்சம் அவசரமாகவே பார்வையிடுதல் இருந்தது. எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரனும், அம்மா தாயாம்மாள் அறவாணனும் இந்த முறை சந்திக்க முடிந்த எழுத்தாளர்கள். வழக்கம் போலவே நிறைய கூட்டம். மக்களின் புத்தகம் வாங்கும் ஆர்வம் கணிப்பொறியும், இணையமும், தொலைகாட்சியும் தாண்டி பெருகியிருப்பதை காண முடிந்தது. தமிழ் புத்தங்கள் இந்தமுறை அதிகம். நிறைய பதிப்பகங்கள் கடைவிரித்து இருந்தன...ஆச்சரியமாக கொள்வாரும் இருந்தனர். பெண்ணியமும், இளைய எழுத்தாளர்களின் படைப்புகளும், சிறு கதைகளும், கவிதைகளும், பைண்ட் செய்யபட்ட சரித்திர காவியங்களும் அதிகம் இருந்தாலும் குமுதம் இதழ் தன் கணக்கெடுப்பில் சமையலும், சுய முன்னேற்ற புத்தகங்களும் அதிகம் விற்பனையானதாக சொல்லியிருந்தது. நான் இந்த முறை கலாச்சாரமும், வாழ்க்கைமுறையும், அரசியலும் கொண்ட புத்தகங்களை தேர்வு செய்து இருந்தேன்.

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்...
1. இஸ்லாமும் ஜிகாத்தும் - ஏ.ஜி.நூரனி
2. தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் - க.முத்தய்யா
3. ரிக் வேதகால ஆரியர்கள் - ராகுல சங்கிருத்தியாயன்.
4. தமிழில் தலித் இலக்கியம் - முகில்
5. நாட்டுபுற சொல் கதைகள் - பாரததேவி
6. குடும்பமும் அரசியலும் - சுப.வீரபாண்டியன்
7. நாட்டுபுற பாலியல் கதைகள் - கி.ராஜநாராயணன். கழனியூரன்
8. கண்ணீரும் சிரிப்பும் - கலீல் ஜிப்ரான்
9. கடவுளுக்கு உண்மைகள் தெரியும் - லியோ டால்ஸ்டாய்
10. பொலிவிய நாட்குறிப்பு - சே குவாரா
11. காரல் மார்க்ஸ், புதுயுகத்தின் வழிகாட்டி - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
12. மார்க்சியத்தின் எதிர்காலம் - பிரபாத் பட்நாயக்
13. எனது போராட்டம்.மெயின்காம்ப் - ஹிட்லர்
14. லியோ டால்ஸ்டாய் கதைகள் - சுரா
15. நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்
16. அர்த்த சாஸ்திரம் - சாணக்கியர்
17. வயது வந்தவர்களுக்கு மட்டும் - ரா.கி.ரங்கராஜன்
18. மகடுஉ முன்னிலை / பெண்புலவர் களஞ்சியம் - தாயம்மாள் அறவாணன்
19. தந்திரா/ஆன்மீகமும் பாலுணர்வும் - ஓஷோ
20. திருவாசகம் - காந்தளகம்
21. எதிரொலிக்கும் கரவொலிகள் / அரவாணிகளும் மனிதர்களே - அ.மங்கை
22. கம்யூனிசம் - கற்க கசடற - வி.மீனாட்சி சுந்தரம்
23. அரசியல் எனக்கு பிடிக்கும் - ச.தமிழ்செல்வன்.

மேலும் புத்தகங்கள் வாங்கவேண்டிய பட்டியலில் இருந்தன... ஒட்டுமொத்தமாக வாங்குவதில் பயனில்லை. வாங்கிய புத்தகங்களை படித்தபின், அவற்றை பற்றி கொஞ்சம் விவாதித்த பின்னர் புதிய புத்தகங்களுக்கு செல்லலாம் என்ற முடிவில் வீட்டுக்கு வந்துவிட்டோம். படித்தலும், அவற்றை பற்றி விவாதித்தலும் இனிய செயல்கள்... தோழமைகள் தேடுகிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

புத்தாண்டுக்கு பிறகு முதன்முறையாக பதிவுகளுக்கு வந்துள்ளேன். சென்ற ஆண்டின் இறுதியில் எழுதிய பதிவுகள் எனக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. கைதொலைபேசியிலும், மின் அஞ்சலிலும் நட்பு முறையில் தொடர்பு கொண்டு எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல. மேலும் நண்பர்களை ஏற்படுத்திகொள்ளும் ஆர்வம் இதனால் அதிகமாகியுள்ளது. எனவே இன்னும் நிறைய எழுததலைப்படுகிறேன். நிறைய எழுத நிறைய படிக்கவேண்டும். பார்வையும் கவனித்தலும் கேட்தலும் புத்தியும் கூர்மையாக இருத்தல்வேண்டும். என் ஓவியங்கள் போலவே தன்னிச்சையாக ஆரம்பித்து பின்னர் வாழ்க்கையில் அங்கமாக என் எழுத்துகள் ஆகிவருகின்றன. என்னை தூண்டிய மனிதர்களுக்கும் சம்பவங்களுக்கும் நன்றி.