அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

எண்ணங்களின் சிறகுகள் ...

கடிதங்கள் மெல்ல மெல்ல நம் வாழ்வில் இருந்து விடைபெற்று கொண்டு இருக்கின்றன. இளம் மஞ்சள் நிற அட்டைகள், இளம் ஊதா நிற காகிதங்கள் நம் வாழ்வின் கதைகளை உறவுகளுக்கு சொன்ன காலங்கள் மெல்ல மெல்ல கருப்பு வெள்ளையில் குறுகி கொண்டு இருக்கின்றன. கடிதங்கள் எழுதுவது ஒரு இனிய அனுபவமாக இருந்த காலம் ஒன்று உண்டு. என் இளம் வயதில் - 3ஆம் வகுப்பு படிக்கும்போது நான் பாட்டியுடன் கிராமத்தில் வாழ்ந்து இருந்தேன். அப்போது அம்மா அப்பாவிடம் இருந்து வாரம் ஒரு கடிதம் வரும். தம்பியும் தன் மழலை கிறுக்கல் கையெழுத்தில் கடிதத்தின் கடைசிப்பகுதியில் எழுதுவதுண்டு. பாட்டிக்கு படிக்க தெரியாது. நான் தான் படித்து சொல்வேன். அதுவும் தவிர அக்கம் பக்க வீட்டு கடிதங்களுக்கும் படிப்பாளி நாந்தான். அப்பா அம்மா கடிதத்துக்கு காத்து கொண்டிருந்த காலம் உண்டு. ஊதா இங்கில் எழுதப்பட்ட நலம் விசாரிப்புகளும், அறிவுரைகளும், சின்ன கதைகளும், சில ஸ்லோகங்களுமாக அம்மாவின் கடிதம் அம்மாவின் வாசம் சுமந்து கொண்டிருக்கும். பாட்டிக்கு நலம் விசாரிப்புகளும், ஊர் தகவல்களும் மற்றும் பணம் அனுப்பும் விஷயங்களும் உண்டு. பாட்டி சொல்ல சொல்ல கடிதங்கள் எழுதுவண்டு நான். பெறும் பாலும் என் குறும்புகள் பாட்டியினால் பாராட்டிகளாகவே கடிதத்தில் சொல்லபடும். கடிதங்களின் மடிப்புகளில் கூட பாட்டி எழுத சொல்வதுண்டு. நான் படங்கள் வரைந்திருப்பேன். என் கேள்விகள் பெரும்பாலும் அம்மா அப்பாவின் கிராம வருகை தொடர்பானதாகவே அமைந்திருக்கும். தபால்காரம் ஒரு அற்புதமான தாத்தா. நரைத்த மீசையுடன் உறவுகளை இணைக்கும் நண்பர். எல்லா வீட்டிலும் மோரும் தண்ணீரும் குடிப்பார். சில வருடங்களுக்கு பின்னர் என் பாலிடெக்னிக் காலத்தில் கடித போக்குவரத்துதான் ஒரே பொழுது போக்கு. கொஞ்சம் இலக்கியமும் சினிமாவும் அறிமுகமாகியிருந்தால் கடித போக்குவரத்து அம்மா அப்பா தாண்டிய உலகத்துக்குள் பிரெவேசித்து இருந்தது. சின்ன மருத்துவ குறிப்புகள், மேலும் ஸ்லோகங்கள், பண விஷயங்கள், நல விசாரிப்புகள் என கடிதங்களும் நிலையில் உயர தொடங்கியிருந்தன. அப்புறம் குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு என் பக்கமிருந்த கடிதங்கள் குறைந்துவிட்டன. அப்பா அம்மா மட்டும் உறவுகளுக்கு கடிதம் எழுதுவார்கள்... அப்புறம் மெல்ல மெல்ல தொலைபேசியில் கடிதங்கள் நிறம் மங்கிவிட்டன. பின்னர் கணிப்பொறியும் இணையமும் கடிதங்களை மேலும் ஊனமாக்கிவிட்டன். இன்றெல்லாம் கடிதங்கள் தொலைபேசி பில்களையும், பல்கலைகழக பரீட்சை அழைப்புகளையும் சில வங்கி விஷயங்களையும் மட்டுமே கருத்தாக கொண்டு என் வீட்டு வாசல்களில் இறைந்து கிடக்கின்றன. தபால்காரருடனனான உறவுகள் இன்று ஏதுமில்லை. கடிதங்கள் என் வாழ்வில் இருந்து மெல்ல மெல்ல விடை பெற்று கொண்டு இருக்கின்றன. என்னதான் தொலைபேசியில் பேசினாலும், இனிமேல் வாரம் ஒரு கடிதம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எழுத வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன். கடிதம் எழுத தொடங்கும் போது இருக்கும் வார்த்தைகளும் கருத்துகளும், எழுத தொடங்கியதும் மேலும் மேலும் பொங்கிவரும்...அது ஒரு சுகானுபவம். வார்தைகளை விட எழுத்துகள் பலமும் உணர்வும் பெறும் இடங்கள் கடிதங்கள்தான்.

No comments: