அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 23, 2008

திருநங்கை கல்வியாண்டு

ஒரு வழியாக வரும் கல்வியாண்டு முதல் திருநங்கைகளுக்கான பாலின பிரிவு கல்லூரிகளில் ஏற்படுத்தபடும் என அரசு அறிவித்து உள்ளது. வாழ்த்துகள். எதிர்கொள்ள கூடிய சமூக பிரச்சனைகள் இருந்தாலும் - இனி அவர்களின் வாழ்வு கொஞ்சமேனும் மாறுபடும். ரோஸ் போன்ற திருநங்கைகள் தங்களை ஒரு வாழ்வு உதாரணமாக இன்னும் வெளிப்படுத்தி கொள்ள வேண்டும். சக உயிராக மதிக்கபடும் விதத்தில் - அவர்களுக்கு தனி கழிப்பறை என்பது கல்வியை விட மிக முக்கியமான வாழ்வு நிலை முன்னேற்றமாக கொள்கிறேன்.

ஆட்டமும் பின்புலமும்..

சாருவின் ஒரு சமீபத்திய உரையாடலில் - தற்போதைய டெலிவிஷன் நடன நிகழ்ச்சிகளை பற்றி - ஒரு சமுதாய மட்டதுக்கான செக்ஸுவல் பேண்டஸி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பற்றி கொஞ்சம் இணையத்திலும் ஆராய்ந்தபோது ஒரு சுவரஸ்யமான மனோதத்துவ விஷயம் கிடைத்தது. பொதுவில் விசுவல் மீடியா என சொல்லபடும் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட வகை பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் போய் சேருகிறது - அதிலும் பெரும்பாலும் ஆண்கள் - அதன் சதவீதத்தில் 60% பெண்கள். சாதாரணமாக நாம் பார்க்கும் பெண்கள் அல்லது கதாபாத்திரங்களை - கொஞ்சம் உடல் ரீதியாக கற்பனை செய்து - அதன் மூலம் ஒரு விதமான சுகம் அடைதல் ஒரு மனோவியாதி - ஆனால் கொஞ்சம் சாத்வீகமாக மனோவியாதி. இது நிறைய பேருக்கு இருந்தாலும் சமுதாய கட்டுபாடுகள் அவற்றை கொஞ்சம் மட்டுபடுத்துகிறது. கவனித்துபார்த்தால் இந்த நடன நிகழ்ச்சிகளில் வருபவர்கள் எல்லாம் - சின்னதிரை நாடக அல்லது சிறு நடிகர்கள். சினிமா நடிகர்கள் அல்லது நடிகைகள் - சினிமாவின் நடனங்கள் பாடல்கள் மூலம் சாதாரண ரசிகனின் உள் எண்ணங்களை தூண்டுகிறார்கள். அவர்களின் மேல் வருவதை விட இழுத்து போர்த்தி நடிக்கும் சிறு நடிகர் நடிகைகள் மற்றும் சின்னதிரை நடிகைகள் மேல் சாதாரண ரசிகனுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அந்த உடல் ரீதியான ஈர்ப்பை இத்தகைய நடன நிகழ்ச்சிகள் தீர்த்து வைக்கின்றன. உடைகள், மேடை அமைப்பு, பாடல் விதம், ஆடும் விதம், இசை அதிர்வுகள் ஆகியவை ஒரு வகையான ரெக்கார்டு டான்ஸ் அனுபவத்தை சாதாரண ரசிகனுக்கு கொடுக்கின்றன. ஒருவித ரகசிய கவனிப்பு நிகழ்கிறது என தெரிந்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பெண்ணுடை அணியும் ஆண்கள் ஒரு விதமான கவர்ச்சி பார்வையுடன் கவனிக்கபடுகிறார்கள் (உதா: சில உடனடி மேடை சிரிப்பு நிகழ்ச்சிகள்) - அவர்களை கமெண்ட் செய்வது நடுவராக உட்கார்ந்திருப்பவர்களே.. ஒருவகையான கிராஸ் டிரெஸிங் கவர்ச்சி என இதனை கொள்ளலாம் (இதிலும் பெண் மட்டம்தட்டபடுவதுதான் பின்புலத்தில் இருக்கிறது).. அட சிரிப்பு நிகழ்ச்சிதானே - விட்டுவிடலாம் என சிலர் சொல்கிறார்கள். நடன நிகழ்ச்சிகள் சினிமா பாடல்களை முன்னிலையாக கொள்வதில் - உண்மை சினிமா காட்சியில் உள்ள காமிரா, ஒளி மற்றும் இதர விஷயங்களை ஈடு செய்ய மேலும் உடல்ரீதீயான அசைவுகள் புகுத்தபடுகின்றன. எல்லா இந்திய சினிமா பாடல் காட்சியின் அசைவுகளும் காமத்தை அடிப்படையாக கொண்டவை - அதிலும் இந்த புகுத்தபட்ட அசைவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது உண்மை. எதுவும் தவறில்லை. ஆனால் புரிந்து கொள்ளுங்கள் - இது ஒருவகையான செக்ஸுவல் பேண்டஸி என்பதை.

உடை மட்டுமா கலாச்சாரம்..

சினிமா நடிகைகளின் மேடை உடை பற்றிய கருத்துகளுக்கு கனிமொழி தெரிவித்து உள்ள மறு-கருத்து உண்மையில் யோசிக்க கூடியது - லட்சம் பேர் பார்க்கும் திரைப்படத்தின் உடை பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் - (கவர்ச்சி ஆபாசம் என எல்லா எல்லைகளையும் தாண்டும் உடைகள் இருந்தாலும்) - மேடையில் அணியும் உடை பற்றி கருத்து சொல்வது சரியானதில்லை என்றிருக்கிறார். இந்தியாவுக்காக விளையாடலாம் - ஆனால் இந்தியாவில் விளையாட முடியாது என சொல்லும் அளவுக்கு ஒரு விளையாட்டு வீராங்கனையை மனகசப்பு கொள்ள செய்யும் நாடு இது - உடை என்பது அவரவர் விருப்பம் - உன் உடை என்னை தூண்டுகிறது என்றால் பிரச்சனை எனக்குள் இருக்கின்றது என பொருள். 1000 பேர் பார்க்கிறார்கள் - 1000 பேருக்குமா உடனே காம எண்ணங்கள் தோன்றி - ஏதோ ஒரு பெண்ணையாவது புணர வேண்டும் என்ற வெறி வருகிறது...? கலாச்சார காவலர்களின் உடனடி பிரச்சனை அவர்கள் உடல்சார்ந்த மனோ பலவீனங்களே என கொள்ளலாமா..!! புண்ணியவான்களே.. நான் துணியில்லாமல் எல்லாரும் இருங்கள் என சொல்லவில்லை - நீங்கள் போற்றி வணங்கும் சங்க இலக்கிய மாதர்களின் உடையலங்காரங்களை கொஞ்சம் கருத்தில் கொண்டு பின்னர் உங்கள் விமர்ச்சனங்களை வெளிப்படுத்துங்கள் என்கிறேன். நடிகைகளின் துணிபற்றி பேசும் நேரத்தில் கொஞ்சம் உண்மையான சமூக பிரச்சனைகளையும் கவனிக்கலாம் - உதாரணம்:- எல்லா கிராமங்களுக்கும் முழுமையான மருத்துவ வசதி மற்றும் ஆரம்ப கல்வி.

காகித பூக்களின் காலம்...

வசந்த காலத்தை வரவேற்க்கும் வண்ணங்களின் பண்டிகை கொண்டாடபட்டு கொண்டிருக்கிறது. நான் வசிக்கும் பகுதியில் வட இந்திய குடும்பங்கள் உண்டு. 2 நாட்களாக அவர்களின் கொண்டாட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோம். பொதுவாக வட இந்தியர்கள் இத்தகைய பண்டிகைகளை விமர்ச்சையாக கொண்டாடுகிறார்கள். பிள்ளையார் சதுர்த்தியும் தீபாவளியும் போல. தென் இந்தியாவில் மட்டும்தான் இவை அரசியலாக்க படுகின்றன.

அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.

வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.

யாவரும் கேளிர்...

வார்த்தைகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறது. சில நேரங்களில் வார்த்தைகள் எண்ணங்களை தாண்டி வெறும் ஒற்றை அகராதி அர்த்தத்தை மட்டுமே தொனிக்கின்றன. அது பேசுபவர் அல்லது கேட்பவரின் மனோநிலையும் சூழ்நிலையும் பொருத்து மாறுபடலாம். எனினும் பெரும் சந்தோஷத்தை போலவே மிக துல்லியமான வலியையும் அது உருவாக்கிவிடுகிறது. மனோரீதியாக உணர்வுகளால் கட்டபட்ட உறவுகளின் மத்தியில் இப்படி வலி உண்டாகும் தருணங்கள் மரணத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. ஒரு கடினமான இருட்டின் வெளியில் இருப்பதை போல.


ஒரு நிமிடத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. சில நேரங்களில் பார்க்கும் சாலையோர விபத்து மரணங்களை போல. நெருக்கமான மரணத்துக்கு பிறகு ஒரு வினாடியில் காதலும் உணர்வுகளும் கோபமும் மனவருத்தமும் கருத்து வேறுபாடுகளும் கொண்ட மனம் மன்னித்து இருக்கலாமோ என்ற உணர்வுடன் அழுகிறது.

சிலரை நாம் காரணமில்லாமல் விலக்குகிறோம். விலகி இருக்கவும் விரும்புகிறோம். அவர்களோ நெருங்கிவருகிறார்கள். அன்புடன் பேச விழைகிறார்கள். நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் - சிலர் மன்னிக்கபடவும் கூட. அவர்கள் பிறந்த நாட்களில் ஆச்சரியமாக அழைப்பதுண்டு. வாழ்த்துகள் தவிர வேறு என்ன பேசுவது என்ற நீண்ட மவுனத்தில் சிலரின் மனம் புரிந்து கொள்ளபடுவதுண்டு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நம்முடன் பிணக்கு கொண்டவர்களில் சிலரையாவது மன்னிக்கலாம். மனமிருந்தால் எல்லாரையும் கூட. சிறிய வாழ்க்கை. மிக சிறிய வட்டங்கள்... காண்பதும் அறிவதும் மிக குறைவு - இதிலும் கதவுகளை மூடிய வாழ்க்கை யாருக்காக..

நிஜமும் நிழலும்..

வட இந்தியாவின் ஒரு சிறைசாலை. சிறை கைதி மிகவும் வயதானவர். ஆயுள் தண்டனை பெற்றவர். அவருக்கு மணமாகாத ஒரு பெண். தன் பெண்ணின் திருமணவாழ்க்கை பற்றிய கவலையுடன் இருந்த அவர், சிறைசாலை அதிகாரிகளிடம் தன் மனதை பகிர்ந்து கொள்ள, அவர்கள் மற்ற சிறைக்சாலை பணியாளர்களுடன் சேர்ந்து பணம் வசூலித்து கைதியின் மத முறைப்படி மிக நல்ல முறையில் திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்கள். திருமண தம்பதி சிறைசாலைக்குள் வந்து ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்கள். சட்ட விதிமுறைகளின் படி இது தவறு எனினும், மறுபக்கத்தில் இது ஒரு நல்ல மனிதநேய எடுத்துகாட்டு. சிறைகைதியின் அடிப்படை உணர்வுகள் மதிக்கபட்டு, பொருளாதார சூழல் கருத்தில் கொள்ளபட்டு செய்யபட்ட ஒரு நல்ல உதவி. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளால் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட மனதளவில் நல்லது செய்த ஒரு திருப்தி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இருக்கும். நடவடிக்கை எடுக்க அரசாங்கம் சொல்லும் காரணம் சிறைசாலைக்குள் சம்பந்தம் இல்லாத வேறு மனிதர்கள் வரக்கூடாது என்பதுதான். அப்புறம் ஒரு நாள் தொலைக்காட்சி பார்க்கும்போது ஒரு குழப்பம் வந்தது. வட இந்திய அல்லது தென் இந்திய திரைப்படங்கள் என்ற எல்லை இல்லாமல், பெறும்பாலும் சிறைச்சாலைகளுக்குள் குத்தாட்ட பாடல்கள் இருக்கின்றன - சம்பந்தமே இல்லாமல் அரைகுறை உடையில் ஒரு அழகி(?) வேறு. இது எல்லாராலும் ரசிக்க படுகிறது. அடிப்படை கேள்விகள் கூட எழுவதாக தெரியவில்லை. நிழலின் அபத்தமும், நிஜத்தின் நெகிழ்ச்சியும் இரு வேறு துருவங்களாகவே இருக்கின்றன.

Friday, March 21, 2008

காலம் கொள்ளும் வாழ்க்கை

அடிப்படையில் வளையல் கடை நடத்தி வந்த ஒரு இளைஞர். 1981-ல் ஒரு திரைப்படம் அவரை நடிகராக்கியது. 82 திரைப்படங்கள் நடித்துள்ளார். அரசியல், சினிமா என வாழ்க்கை வேறு மாதிரி வட்டமடைய, வாழ்க்கை முறை மாற்றம் அடைந்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. கொஞ்சம் யோசிப்போம். ஒரு வேலை அவர் வளையல் கடை மட்டுமே நடத்தியிருந்து - திரைபடமும் அரசியலும் அவர் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் - அவர் எப்படி இருந்திருப்பார். வேறு ஒரு வாழ்க்கை பாதையில் இருந்திருக்கலாம் - இன்னும் கொஞ்சம் குடும்பத்துடன் நேரம் செலவளித்து இருக்கலாம் - இன்னும் உறவினர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் - இன்னும் ஆரோக்கியமாக இருந்திருக்கலாம் - ஏன் இன்னும் உயிரோடு கூட இருந்திருக்கலாம். நான் வாழ்க்கை முன்னேற்றத்தை குறை கூறவில்லை. வளையல் கடையும் ஒரு வாழ்க்கைதானே என்கிறேன். பொருளாதார முன்னேற்றம் வாழ்க்கையின் அடிப்படைகளை பணயம் வைத்துதான் நடக்கும் எனில் - ஒரு நிமிடம் யோசிக்கலாமே. பெசன்ட் நகரில் வாழ்வதும் சைதாப்பேட்டை குடிசைபகுதியில் வாழ்வது அடிப்படையில் வாழ்க்கைதான். நடைமுறை வாழ்க்கையில் இது பலிக்காது என விமர்ச்சனம் வருகிறது. இருக்கலாம் - இல்லாமலும் இருக்கலாம்.

குழந்தைகளை எங்கே தொலைக்கிறோம்

நம் குழந்தைதனமான மனது எங்கே தொலைக்கபடுகிறது. என் கருத்துபடி - போட்டி உருவாகும் மனோபாவ கல்வி தொடங்குவதிலிருந்து. பள்ளி கூடங்களும், மரங்களும், தோழமைகளும் நிறைய இளம்பிராய கதைகளை நம்முள் பதித்து இருக்கின்றன. அவற்றை பற்றிய கவனமே நம்மை மறுபடி குழந்தை பருவ மனதுக்கு செலுத்துகிறது. பள்ளிக்கு வெளியே கற்று கொண்டவை பள்ளிக்கு உள்ளே கற்று கொண்டதை விட அதிகம் - ஏனெனில் அது வாழ்க்கை கல்வி. நீ முதலா நான் முதலா என்ற இலக்கு நிர்ணயிக்கபட்ட இடத்தை மட்டுமே சென்றடைய வைக்கும் கல்வி அடிமைகளை உருவாக்குகிறது. கல்வி பற்றியும் பள்ளிகூடங்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் மிக அற்புதமான நினைவுகளை கொண்ட புத்தகமாக "இரகசைத்த காலம்" என்ற புத்தகத்தை கருதுகிறேன். பெரும்பாலும் 40 வயது கடந்த சில பிரபலங்கள் - கிராமமும் நகரமும் கொண்ட வாழ்க்கைமுறையில் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கல்வி என்பது அடிப்படையான ஒரு தகுதி எனினும் அதில் கற்று கொள்ளும் விஷயங்களை விட - பெற்று கொண்ட பட்டமும் மதிப்பெண்களும் ஒரு மனிதனை முடிவு செய்வது தவறென கருதுகிறேன். இன்றைய குழந்தைகள் நிறைய கற்று கொள்கிறார்கள் - பள்ளி மட்டுமல்ல, மற்ற ஊடகங்களும் நிறைய கற்று கொடுக்கின்றன. விளையாட்டோ, கலையோ, ஒருங்கிணைக்கபட்ட வாழ்க்கைமுறையோ இந்த கல்வியில் குறைவாக இருக்கிறது. ஒரு புள்ளியில் விளையாட்டு என்பது உடல்சார்ந்த விஷயமாக இல்லாமல் மூளை சார்ந்த விஷயமாகவும் போகிறது. 25-30 வயதில் கார்பரேட் யுக ஆரோக்கிய குறைவு என்பது சராசரியாகிவிட்ட காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகளை பெரியவர்கள் போல சிந்திக்க வைக்கிறோம். அப்படி பேசுவது ரசிக்கபடுகிறது - அப்படி ரசிக்கபடுவதனாலேயே அவர்கள் மேலும் பெரியவர்கள் போல நினைத்து கொள்கிறார்கள். அவர்களின் கேள்விகளில் குழந்தைதனத்துக்கு பதிலாக அறிவுஜீவிதனம் வெளிப்படுகிறது என்பது பெற்றோரின் பெருமையாக போகிறது. இதற்க்கு மருந்து மாத்திரை எல்லாம் வந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை ஆண்களாகவும் பெண்களாகவும் வளர்க்கிறோம் - குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்கும் எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. குழந்தைகள் இல்லாத ஒரு வெற்றிட உலகம் மிக அருகில்தான் இருக்கிறது. அங்கே பூக்களை பறிக்கவும், பட்டாம்பூச்சி பிடிக்கவும், பந்து விளையாடவும், கதை சொல்லவும் யாரும் இருக்கமாட்டார்கள் - ஒரு பெரிய கல்லறை இருக்கும் - இங்கே குழந்தைபருவம் புதைக்கபட்டுள்ளது என்ற வாசகத்துடன்.

குறியின் அளவு

எங்கள் அலுவத்தின் ஒரு பிரிவு (துரதஷ்டவசமாக நான் இருக்கும் பிரிவு) சென்னைக்கு அப்பால் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமத்துக்கு குடி மாற்றபட்டு உள்ளது. தனியாருக்கு சொந்தமானதால் அருகில் எந்த சாப்பாடு கடைகளும் கூட கிடையாது. டீ குடிக்க கூட 15 நிமிடம் நடக்க வேண்டும். சென்ற வாரத்தில் ஒரு நாள் சூடு தாங்காமல் இளநீர் குடிக்க ரோட்டு பக்கம் வந்து நின்று கொண்டிருந்தபோது இளநீர் கடை பையனுக்கும் ஒரு (படித்தவர் போல தோன்றிய) வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது. இளநீர் விலை பற்றிய விவாதமாக தொடங்கியது - ஒரு கட்டத்தில் அவர் - 'இப்படி அதிக விலை சொன்னால் கல்யாணத்துக்கு பிறகு உன் குறி சிறுத்து விடும்' என சொல்ல - பின் என்ன நினைத்தானோ அந்த பையன் அவர் கேட்ட விலைகே கொடுத்துவிட்டான். சில நாட்களுக்கு முன்பு நான் படித்த நளினி ஜமீலாவின் மற்றும் சாருவின் உரையாடல் தொகுப்பான பாலியல் என்ற நூலின் சில பாகங்களை நான் நினைவு கூர்ந்தேன். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு பற்றிய குழப்பங்களை கொண்டிருக்கிறார்கள் - மருத்துவ ரீதியான சில மனோதத்துவ ஆய்வுகளும் அதனை உறுதி செய்கின்றன. போதாகுறைக்கு டிவி டாக்டர்கள். நல்ல செக்ஸ் என்பது உடல் உறுப்புகளின் அளவுகளை அடிப்படையாக கொண்டது என்பது ஒரு மூட நம்பிக்கை. படித்தவர் படிக்காதவர் என எல்லாரிடமும் இந்த குழப்பம் இருக்கிறது. செக்ஸ் என்பது வெறும் உடல் உறவு கிடையாது என்கிறார் ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளி என்ற நினைப்பில் இருந்து விலகி, செக்ஸ் என்பதை தொழில் முறை அனுபவமாக உணர்ந்தவர் என்ற நிலையில் அவர் கருத்து மிகவும் ஏற்று கொள்ளதக்க ஒன்று. உள்ளம் பகிர்தலின் அடுத்தநிலை உடல் பகிர்வு. உள்ளம் பகிர்தலே முழுமையாக இல்லாத சமுதாய அமைப்பில் - திரும்பிய இடம் எல்லாம் அவசர கோல கல்யாணங்களும் மாதா மாதம் நீளும் விவாகரத்து விவகாரங்களும். இந்த லட்சணத்தில் செக்ஸ் கல்வி வேண்டாம் என்ற கோஷம் வேறு. இதற்கு பதில் எல்லாரும் காட்டு மிராண்டிகளாகவே இருந்திருக்கலாம்.

Wednesday, March 19, 2008

நடிகனின் மரணம்.

இயல்பான நடிப்பு என்பதனை ரகுவரனை தவிர வேறு யாரிடமும் கண்கூடாக கண்டதில்லை. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும் - ஒரு சில திரைப்படங்கள் அவரின் வெகு அற்புத நடிப்பு திறமையை வெளிக்காட்டின. உதாரணம்: அஞ்சலி. பெரும்பாலும் வில்லன் வேடங்கள் என்றாலும் குணசித்திர வேடங்களில் மிக அற்புதமான நடிப்பை அவர் வழங்கியது உண்மை. யாருடனும் ஒப்பிட முடியாத அற்புத கலைஉலக பங்கீடு கொண்டவர். பலருக்கும் நல்ல நண்பர். தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். மொழி வேறுபாடு இன்றி பாராட்டபட்டு இருக்கிறார்.

காதல், மனைவி, குழந்தை, ஆன்மீகம், புத்தகங்கள் என வாழ்க்கை சுகமானதாக இருந்திருக்கலாம். குடிப்பழக்கம் உடல்நிலையை கெடுக்க, மணவாழ்க்கையின் கசப்பு மனநிலையை கெடுக்க.. ஒரு நல்ல கலைஞன் ..இன்று மரணமடைந்து விட்டான்.

அவர் நடித்த திரைப்பட வரிசை மற்றும் சிறு தகவல்கள் இங்கே: http://en.wikipedia.org/wiki/Raghuvaran

Monday, March 17, 2008

வீடுகளும் நினைவுகளும்..

சமீப காலங்களில் அலுவகம் செல்வதே ஒரு பயணம் போலதான் இருக்கிறது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. கூட அரைமணியும் ஆகும் - அது போக்குவரத்து நிலவரம் பொருத்து. இந்த பயணம் நிறைய படிக்கவும் பார்க்கவும் நேரம் கொடுக்கிறது. அப்படி ஒரு விஷயம்தான் இன்று பகிர்ந்து கொள்ள தோன்றியது.

நாம் வாழ்ந்த வீடுகளை பற்றிய நினைவுகள் ஏறத்தாழ எல்லாருக்கும் இருக்கும். அந்த வீடு தந்த பாதுகாப்புணர்வும், பால்ய சந்தோஷங்களும் இன்னும் பல ரகசியங்களும்.. மேலும் கொஞ்சம் வலிகளும்.. அப்படிதான் எல்லாருக்கும் வீடுகள் இருக்கின்றன.

திரிசூலம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பழைய வீடு இருக்கிறது. அந்த இடத்தை தாண்டும் போதெல்லாம் மனசு வலிக்கும். பிரமாண்டமான வீடு. யாரோ ஒரு குடும்பம் அங்கு வாழ்ந்திருக்கலாம். இன்று மிகவும் பாழடைந்து இருக்கிறது. இது போல நிறைய வீடுகளை பார்த்திருப்போம். அங்கு வாழ்ந்த குடும்பங்களை பற்றி எவ்வளவு யோசித்திருப்போம் என தெரியவில்லை. அங்கு வாழ்ந்த சிலர் இன்னும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் இந்த வீட்டை பற்றிய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த வீடு எத்தனையோ பிறப்புகளையும் இறப்புகளையும் நினைவுகளாக கொண்டிருக்கலாம். கிராமங்களில் சில பழைய வீடுகள் உண்டு, தாழ்வாரமும் தோட்டத்து துளசி செடியுமாய்.. ஆனால் யாராலும் கவனிக்கபடாமல். திருமணங்களும், காதலும் ஏன் மரணமும் கூட அந்த வீடு சுவர்கள் கண்டிருக்கும். பழைய வீடுகள் ஒரு வகையில் வயசாளி உறவினர்களை போல - அவர்களை பார்க்கும் போதெல்லாம் நிறைய நினைவுகள் வரும்.. சில சந்தோஷமானவை - சில துக்கமானவை. எனினும் அவர்களின் நிலைக்கும் இன்றைய நிமிடத்தில் ஏதும் செய்ய முடியாது.. பழைய வீடுகளும் அது போலவே. சில வீடுகளை நான் உள் சென்றும் பார்த்திருக்கிறேன். இருண்ட கரி பிடித்த சமையல் அறைகள், நீளமான தாழ்வாரங்கள், சுவர்களில் கிறுக்கல்கள் கொண்ட படுக்கை அறைகள்.. பழைய காலண்டர்கள் இருக்கும் பரண்கள்.. பொம்மைகள் கிடக்கும் தோட்டம்.. யாரோ வைத்த பூச்செடிகள்.. ஒரு வாழ்வு அங்கு நிகழ்ந்த சுவடுகள் இருக்கும். கூர்ந்து கேளுங்கள்.. குழந்தைகளின் ஓசை, வாழ்ந்த பெண்களின் சிரிப்பு, ஆண்களின் சந்தோஷம்.. சொல்லபட்ட கதைகள்.. கொடுக்கபட்ட சுகங்கள் என .. வாழ்வு சுவடுகளை பதித்திருக்கும்.. ஏதோ ஒரு கவிதையில் படித்ததை போல - பாழடைந்த ஒவ்வொரு வீடும் ஒரு விசும்பலை கொண்டிருக்கிறது. அது அழுகையாக மாறும் வினாடி - ஒரு மரணம் போன்றது.

Wednesday, March 12, 2008

முருகன் என்றொரு ஓவியர்

முருகனை பாண்டிசேரியின் கடற்கரை சாலையில் நானும் தோழியும் சந்தித்தோம். அப்போது அவர் ஒரு சிவன் உருவத்தை தரையில் வரைந்து கொண்டிருந்தார். கொஞ்சமாய் குடித்திருந்தார் - எனினும் தெளிவாக பேசினார். அவர் பேச்சின் ஆதங்கம் தான் மதிக்கபடவில்லை என்பது மட்டும்தான். குடும்பம் உள்ளவர் - குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கபட்டு இருப்பவர். சினிமா, பேனர் துறை என தொழில் செய்து இருக்கிறார் - தொழிளாலர் சங்கத்தில் பதிவு செய்ய பணபலம் இல்லாமல் தெருவில் வரைகிறார். சுயமரியாதையும் கலை ஆர்வமும் அவருடன் பேசும் போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா முழுவதும் பயணம் செய்திருப்பதாக சொல்கிறார். ஏதோ ஒரு புள்ளியில் என் வாழ்வும் அவர் வாழ்வும் ஒன்றுபட்டு இருப்பதாக தோழியிடம் சொன்னேன். அவரை சந்திக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் - என் வாழ்வின் இழந்த சந்தோஷங்களை பற்றி நான் அவளுடன் பேசி கொண்டிருதேன். ஒரு வகை புலம்பலாக கூட இருந்தது அது. ஒருவகையான துறவற-வாழ்வுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் பற்றி நான் பேசிய கருத்துகள் - முருகனை பார்த்தவுடன் கொஞ்சம் அந்த வாழ்வை பற்றிய ஒரு பயத்தை தோற்றுவித்தது உண்மை.

ஸ்டெல்லா புரூஸ் மரணம்

6 மாதங்களுக்கு முன்னர் சிறுநீரக கோளாறு காரணமாக மனைவின் இழப்புக்கு பிறகு தனிமையில் வாழ்ந்த ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 67 வயதான அவர் தன் மனைவின் மரணத்துக்கு பிறகு ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் பேசும்போது தனிமை எனும் மிகப்பெரிய வாழ்வின் துயரம் பற்றி பேசியிருந்தார். அந்த தனிமை இன்று அவர் மரணத்துக்கு காரணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லாத இந்த தம்பதியின் வாழ்க்கை - மனைவி எனும் துணைக்கு பின்னான தனிமை என நிறைய இருக்கிறது. ஆண் தன் வாழ்வின் ஒரு புள்ளிக்கு பிறகு தன் துணை மேல் ஆத்மரீதியான உணர்வு கொள்கிறான் - பெண்களும் அப்படியே - பிள்ளைகள் இல்லாத அல்லது பிள்ளைகளுடன் இல்லாத வயதான தம்பதியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை நகரங்கள் இன்று அதிகம் சந்திக்கின்றன. ஆன்மீக பத்திரிக்கைகளும், நியூஸ்பேப்பரும், டெலிவிஷனும் கொடுக்கும் ஒரு கடினமாக உலகத்திலேயே பெரும்பாலான முதியவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடன் பேசவும் எதுவும் பகிர்ந்து கொள்ளவும் யாரும் இருப்பதில்லை. சில முதியோர் இல்லங்களிலும், திருச்செந்தூர் போன்ற இடங்களில் சந்தித்த தெருவில் வாழும் வயதானவர்களும் - இன்னும் ஏதோ ஒரு பிடிப்பில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மரணம் மட்டுமே அவர்களுக்கான விடிவாக இருப்பதாக எண்ணி - அதனை எதிர்நோக்கி ஓவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். எத்துனை மன அழுத்தமும் தனிமையும் இருந்திருந்தால் 67 வயதான முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார்...! சமுதாயத்தின் ஒரு பங்கான முதியவர்கள் பற்றி யோசிக்க நேரம் மட்டுமல்ல கொஞ்சம் மனமும் வேண்டும்.

சட்டபடி விபச்சார விடுதிகள்

விபசாரத்தில் கைதாகும் ஆண்களுக்கும் தண்டனை வேண்டும் (கிட்டதட்ட 7 ஆண்டுகள்) என்ற வரைவு அறிக்கைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல், சுகாதார துறை அமைச்சர் அன்புமணி, விளையாட்டு துறை அமைச்சர் (என்ன விளையாட்டு இது...?) மணிசங்கர ஐயர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதற்க்கு பதிலாக வெளிநாடுகளை போல சட்டபடி விபச்சாரம் செயல்பட அனுமதி அளித்து, லைசன்ஸ் வழங்கி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் - வரிகூட வசூலிக்கலாமாம் (அது ஒன்னுதான் இன்னும் பாக்கி).. புரோக்கர் மற்றும் போலீசார் கெடுபிடியில் (அட கடவுளே.. ) இருந்து தப்பிக்கலாம் என யோசனை சொல்கிறார்கள். அட இது கேட்க மறந்து விட்டேனே - இந்த கற்பு கற்பு என ஒரு விஷயம் இருந்ததே..!! அதுதான் அய்யா.. நம் தேசத்தின் அடிப்படை ஒழுக்கம்..!! அது பற்றி ஏதாவது தெரிந்தால் கொஞ்சம் மத்திய அமைச்சர்களுக்கும் சொல்லி கொடுங்கள்..

எல்லாரும் மன்னரே..

150 திரைப்படம் நடித்த விஜயகாந்த் முதல்வராக ஆசைப்படுவதால், 1000 திரைப்படம் நடித்த மனோரமாவும் பிரதமர் ஆக ஆசைபடலாமா என கேட்டிருக்கும் அற்புத சிந்தனைசாலியான ராமராஜன் இன்னும் 1000 ஆண்டுகள் வாழ எல்லாரும் கோவில்களில் யாகம் பூஜை எல்லாம் செய்யலாம் - அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமை இதற்க்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். அரசியல் பதவிகள் என்பது ஒரு உழைப்பு என்பதும், பொருளாதார மற்றும் சமூக இடர்பாடுகளை கடக்க வேண்டும் என்பதும், மக்களை சென்றடைய கருத்துகளும் முயற்சியும் தேவை என்பதும் புரியாமல் வெறும் திரைப்பட அனுபவ அடிப்படையிலேயே பதவிகள் அமைவது போல மக்களிடையே பேசும் அதி புத்திசாலிகளை என்ன செய்யலாம்.. எல்லா கட்சியிலும் இப்படி சில சிந்தனாசாலிகள் இருக்கதான் செய்கிறார்கள். நம் மக்களை ஒன்றும் செய்ய முடியாது - இதே ராமராஜன் ஓரிரண்டு போராட்டங்கள் நடத்தி இரண்டு முறை சிறை சென்று விட்டால் (அதற்கெல்லாம் அவருக்கு தைரியம் கிடையாது என்பது வேறு விஷயம்) - மக்கள் அவரையும் போராளி ஆக்கிவிடுவார்கள் - அதுவும் வெறும் போராளி அல்ல.. கழக போராளி.. !

Monday, March 10, 2008

அப்பா எனும் நண்பர்.

பெறும்பாலானவர்களின் இன்றைய வாழ்க்கையில் அப்பா எனும் நண்பரை இழந்து வருகிறோம். அப்பா என ஒரு மனிதர் இருக்கிறார். அவர் நம் சேமிப்பு மற்றும் கணக்கு வழக்குகளுக்கு உதவுகிறார். கல்யாணம் செய்து வைக்கிறார். அப்புறம் அவருக்கு வாழ்க்கை என்று ஒன்று இருப்பதையோ அதில் அவர் என்ன செய்கிறார் என்பதையோ கவனிக்க நிறைய பேருக்கு நேரம் இருப்பதில்லை. நாமெல்லாம் வேலைக்கு வரும்போது அவர் தன் உத்தியோகத்தின் இறுதி பகுதியில் இருப்பார். அதுவரை அவர் சம்பாரிக்கின்றார் - இந்த வேலை செய்கிறார் என்பதை தவிர கவனித்து இருக்க மாட்டோம். நாம் வேலைக்கு போக துவங்கிய பிறகு அவர் மீது உள்ள கவனம் இன்னும் குறைந்து விடுகிறது. உடம்பு சரியில்லை - அல்லது ஏதாவது குடும்ப விவகாரம் எனும்போது மட்டும்தான் அப்பா என்பவர் கருத்துகளை கேட்கிறோம். எல்லா இடங்களிலும் அப்பா எனும் முதியவர் இருக்கிறார் - ஆனால் அப்பா என்றொரு நண்பர் இருப்பதில்லை. அப்பா எனும் மனிதரை நண்பராக கொண்டு பாருங்கள் - உங்கள் அனுபவங்கள் வேறு மாதிரியாக இருக்கும். ஒரு தெளிந்த நம்பிக்கை கிடைக்கும் - எதையும் அணுகும் பார்வையில் மாற்றம் இருக்கும் - உங்கள் நட்பில் அவரும் புதியதாக நிறைய கற்று கொள்வார் - அடிப்படையில் சக மனித சிநேகம் கிடைக்கும். என் நிறைய நண்பர்களுக்கும் அவர்களின் தந்தைகளுக்கும் இருந்ததை விட கொஞ்சம் குறைவாகவே - எனக்கும் என் அப்பாவுக்கும் ஒரு நட்பு உண்டு - நாங்கள் பகிர்ந்து கொள்ள நிறைய செய்திகள் இருந்தன - அவை பொருளாதார விஷயங்களை கொண்டவை எனினும் சில மாற்றமும் கொண்டவை. தத்துவம் வாழ்க்கை முறை அனுபவங்கள், கவிதைகள், இலக்கியம், வானம், பயணங்கள் என நாங்கள் நிறைய பேசுவோம் - கலீல் ஜிப்ரானும் ஷெல்லியும் பைரனும் அவர்தான் அறிமுகபடுத்தினார் - செக்ஸ் பற்றிய சந்தேகங்கள் தீர்த்து வைத்தார் - எப்படி வாழ வேண்டும் என்றும் - அவர் வாழ்க்கையில் இருந்தே எப்படி வாழக்கூடாது எனவும் நான் கற்று கொண்டேன். இப்போது எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டது. சென்ற முறை திருச்செந்த்தூர் பயணத்தின் போதும் இந்த முறை கோவை வந்த போதும் நிறைய பேசினோம். அவர் வாழ்க்கையின் கடந்து வந்த பகுதிகளை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறார் - நிறைய செய்திகளும் வாழ்க்கை கருத்துகளும் அதில் இருக்கின்றன - அந்த புத்தகத்தின் ஒரே வாசகன் நான் மட்டுமே. எனக்கு அவர் வாழ்க்கை பற்றி நாங்கள் பேசியதை விட நிறைய தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டு. கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அது. ஒவ்வொரு மனிதனின் கதையும் ஒரு காவியம்தான் - அதில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும். முதலில் நெருங்கிய உறவுகளிடம் இருந்து ஆரம்பிப்போம் என்ற எண்ணம்தான் இது. அம்மாவையும் கொஞ்சமாக எழுத சொல்லி இருக்கிறேன். இப்படி எழுதுவதில் அவர்கள் கடந்து போன காலங்களையும் மனிதர்களையும் நினைக்கிறார்கள். இழப்புகளும் சேமிப்புகளும் கனவுகளும் வாழ்ந்த நனவுகளும் ஆரோக்கியமாக அசைபோட படுகின்றன. நிறைய அனுபவங்களை பேசுகிறார்கள் - கற்று கொண்டதை சொல்லி கொடுக்கிறார்கள். என் தந்தையும் தாயும் அவர்களின் வாழ்க்கை பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த விதம் - என் வாழ்க்கை பற்றிய எண்ணங்களுக்கு ஒரு நல்ல உள்ளீடாக கொள்கிறேன்.

இசை பாடல்கள்

போட்டி போட்டு கொண்டு இசை சேனல்கள் பெருகி வருகின்றன. சினிமா பாடல்கள் தினவாழ்வில் வலுக்கட்டாயமாக நுழைகின்றன. கிட்டதட்ட 6 தமிழ் சினிமா இசை சேனல்கள் எங்களுக்கு கிடைக்கிறது. தூர்தர்ஷன் மட்டுமே இன்னும் நாட்டுபுற பாடல்களையும் தேசிய பாடல்களையும் கொஞ்சம் கர்நாடக சங்கீதத்தையும் வழங்கி கொண்டு இருக்க மற்ற சேனல்கள் சினிமாவில் மட்டுமே குறியாக இருக்கின்றன. ஒரு நல்ல விஷயம் - தேடி தேடி பழைய கருப்பு வெள்ளை பாடல்களையும், இளையராஜாவின் அபூர்வமான பாடல்களையும் ஒளிபரப்புகிறார்கள். சில படங்களை கேள்விபட்டிருக்கவே மாட்டோம் - பாடல்கள் தித்திக்கும். நல்ல இசை, மெல்லினமான பாடல் வரிகள் என மனதை கரைக்கின்றன. முன்னிரவு நேரங்களின் பாடல்கள் பெரும்பாலும் அருமை - ஆனால் இவற்றை யார் பார்க்கிறார்கள் - எல்லாரும் ரசிப்பது குத்து பாடல்கள்தான் - தவிர ரியாலிடி ஷோ டான்ஸ் நிகழ்ச்சிகள் - சில சேனல்களில் இரவு மசாலாவும் உண்டு. சரி - கார்பரேட் உலகின் அடிமைகளை உலுக்கி உறவுக்கு தயார்படுத்த அதுவும் தேவைதானே - இப்படி எல்லாம் செய்தால்தான் சந்ததி விருத்தியாகி.. இன்னும் பேப்பர்களை திண்ணலாம்.

Wednesday, March 05, 2008

கோடுகளின் ஆதி

ஆதிமூலம் அய்யாவின் ஓவியங்கள் எனக்கு அறிமுகமாகும் முன்னர் டிராஸ்கி மருதுவின் ஓவியங்கள் மட்டுமே கோட்டோவியங்கள் என அறிமுகம் ஆகியிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அய்யாவின் ஓவியங்களில் தீவிரமானேன். அது மருது அய்யாவின் மரியாதையை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. நவீன ஓவியங்களின் அறிமுகமாகவே இருவரது ஓவியங்களும் இருந்தது. இயல்பான விஷயங்களை அழுத்தமான கோடுகள் வேறு ஒரு புலனுடன் என்னுள் பதிக்க தொடங்கின. என் ஓவியங்கள் பெரும்பாலும் அப்ஸ்டிராக்ட் மற்றும் சர்ரியலிச சார்புடையவை - நான் திட்டம் போட்டு வரைவதில்லை - இஸங்கள் சூழ்நிலைக்கேற்ப்ப கடைபிடிக்கபடும். அய்யாவின் ஓவியங்களின் பாதிப்பு மெல்ல என்னுள் எழ ஆரம்பித்தது அவருடைய ஓவியங்களின் முகங்களை பார்த்துதான். திட பொருட்கள் பற்றிய ஓவியங்களும் ஒரு காரணமான போதிலும் - முகங்கள் காரணமானது அவை திறந்து விட்டு கொண்டிருந்த நினைவு ஜன்னல்கள்தான். எல்லா முகங்களும் எங்கோ எப்போதோ காலத்தின் அடுக்குகளில் பார்த்த முகங்களாகவே இருந்தது - இது ஒருவித அடையாள குழப்பமாகவும் இருக்கும் என நினைக்கிறேன் - எனினும் - பெயர் தெரியாத ஆனால் வாழ்வின் ஏதேனும் ஒரு புள்ளில் இவர்களை சந்தித்திருந்தோம் என்ற நினைவு மிகவும் ஆழமாகயிருக்கும். இதனை விந்தை எனவும் சொல்லலாம் - ஆனால் நான் அய்யாவின் ஓவியங்களில் உள்ள மனித முக உணர்வு வெளிப்பாடு எனவே கொள்கிறேன். ஆழமான கருப்பு வெள்ளை கோடுகள் மற்றும் அழுத்தமான கோடுகள் அவற்றை சார்ந்து மனம் போனபடி வரைந்ததோ என நினைக்கவைக்கும் சார்ப்பு கோடுகள் - வேறு ஒரு கோட்டோவிய காலத்தை எனக்குள் பதித்ததால் - கொஞ்சமாய் அவரை பின்பற்றவும் தொடங்கியிருக்கிறேன். அவருடைய மரணம் ஓவிய காலத்தின் ஒரு மாபெரும் இழப்பு.

அழகும் அறிவும்

குமுதம் பத்திரிக்கையின் ஒரு செய்தி தலைப்பு இந்த பதிவுக்கு ஒரு முக்கிய காரணம் - அழகான மனைவி இருக்கும் கணவர்கள் ஏன் அடுத்த பெண்களை தேடுகிறார்கள் என்றது பத்திரிக்கை செய்தி தலைப்பு. பொதுவில் அழகு என்பதனை வெறும் உடல் ரீதியான விஷயமாகவே சமுதாயம் கருதுகிறது - பத்திரிக்கைகள் சமுதாய கருத்துகளை பிரதிபலிக்கின்றன. அழகான (உடல் ரீதியாக) பெண்கள் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என கருதமுடியாது - என் பழைய கம்பெனி சி.இ.ஒ சொல்வார் - பார்க்க ஐஸ்வரியா ராய் போலவும் புத்திசாலிதனத்தில் இந்திரா காந்தியும் கிடைக்கமாட்டார்கள் என்று. அது சில நேரங்களில் உண்மைதான். பெரும்பாலான இன்றைய ஆண்களுக்கு நிறைய அலுவக சமுதாய பிரச்சனைகள் இருக்கின்றன - அவை பெரும்பாலும் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் கருத்தாக கொண்டவை. சிலருக்கு அது தொழில்முறை இல்லாத - கலை, இலக்கியம், ஓவியம், இசை, சினிமா, புத்தகங்கள் எனவும் இருக்கலாம் - இந்த கருத்துகளை பேசும் பெண்கள் மேல் பொதுவாகவே ஆண்களுக்கு ஒரு ஆளுமை ரீதியாக ஈர்ப்பு உண்டு. இன்றைய பெரும்பாலான பெண்கள் இன்னும் அந்த அளவு வளரவில்லை எனலாம் - அவர்கள் சம்பாதிக்கிறார்கள், செலவும் சேமிப்பும் செய்கிறார்கள் - ஓரளவு எல்லா உலகவிஷயங்களிலும் ஈடுபடுகிறார்கள் - ஆனால் பேச விரும்புவதில்லை. அவர்களின் உலகம் வேறாக இருக்கிறது - அது அவர்களின் தவறும் இல்லை, மிகவும் இயல்பான விஷயம் அது. எனவேதான் ஆளுமை ரீதியாகவோ நட்பு ரீதியாகவோ மற்றும் ஆறுதல் அல்லது யோசனைகளை கொடுக்கும் பெண்கள் ஆண்களை மிகவும் ஈர்க்கிறார்கள். அந்த பத்திரிக்கை செய்தி நடிகை ஷோபனா சம்பந்தபட்டது - அவரின் வயது, அனுபவம், பழகும் விதம் மற்றும் சமுதாய பொருதார சிந்தனைகள் (அவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நாட்டிய நாடகத்திலும் சினிமாவிலும் அனுபவம் கொண்டவர்) ஆகியவை ஒரு குறிபிட்ட ஆணை ஈர்த்து இருக்கலாம் - இந்த குணாதிசியங்கள் அவருடைய மனைவிடம் இல்லாமல் இருந்திருக்கலாம் - அது ஒரு நட்பு அல்லது உறவுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம். ஆனால் பத்திரிக்கை செய்தி "செக்ஸ்" என்ற ஒரு கோணத்திலேயே அமைந்து இருக்கிறது. என் தோழன் ஒருவன் உண்டு - அவனுக்கு ஒரு இளவயது காதலியும் உண்டு. எப்போதெல்லாம் அவன் தன் அலுவக மற்றும் வாழ்க்கை பற்றிய விஷயங்களை பற்றி பேசுகிறானோ அப்போதெல்லாம் அந்த பெண் அவன் ரொம்பவும் போர் அடிப்பதாக கோபித்து கொள்வதுண்டு - ஒரு ஆண் எல்லா நேரங்களிலும் பெண்ணுக்கு விருப்பமான விஷயங்களையே பேச முடியாது - அந்த பெண்ணை அடிப்படையாக கொண்டே அவன் உலகத்தை இயக்கி கொள்ள முடியாது - அவளுக்கு வேண்டும் போதெல்லாம் அருகில் நிற்க முடியாது - அவனுக்கும் வாழ்க்கை உண்டு - அவனுக்கும் அதே தேவைகள் உண்டு - பெண்களை போலவே ஆண்களுக்கும் அந்தரங்கக தனிமை தேவைபடுகிறது அல்லது அந்தரங்க விருப்பு வெறுப்புகள் உண்டு. இதனை பெரும்பாலான பெண்கள் புரிந்து கொள்வதில்லை - புரிந்து கொள்ளும் பெண்களை ஆண்களுக்கு பிடித்து போகிறது - அவன் இயல்பாக அப்படிபட்ட பெண்கள் மேல் ஈர்ப்பு கொள்கிறான் - இந்த விதி பெண்களுக்கும் பொருத்தமானது - இது திருமணம் அல்லது விதிக்கபட்ட காதலுக்கு பின் ஏற்படுமாயின் அதன் காரண வேரை முழுமையாக அறியாமல் வெறும் உடல் ஈர்ப்பென பார்ப்பது அநாகரீகம்.

Monday, March 03, 2008

குருவின் இழப்பு

எழுத்தாளர் சுஜாதா - இன்றைய எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மானசீகமான குரு. பெரும்பாலான வலைபூ எழுத்தாளர்களுக்கு ஒரு முழுமையான ஆசான். உரைநடை, எழுத்து அமைப்பு, கருத்து வெளிப்பாடு, மென்மையான நகைச்சுவை, எந்த துறையிலும் துல்லியமான விவரங்கள், படிக்கும்போதே விரியும் காட்சி அமைப்பு மற்றும் புத்திசாலிதனமான உரையாடல் என அவரின் ஆளுமை செல்லாத இடமே இல்லை. எல்லா துறைகளை பற்றி படிக்கும் பழக்கத்தையும், இன்றைய படிக்கும் மனிதர்களிடையே இருக்கும் மனோபாவத்துக்குரிய எழுத்து முறை மாற்றத்தையும் அவரை தவிர வேறு யாரும் அறிமுகபடுத்தவில்லை. பார்பன எண்ணங்களை விதிக்கிறார் என்ற குற்றசாட்டுகளையும் தாண்டி வெகுஜன மற்றும் குறும்பத்திரிக்கை, சினிமா, ஆன்மீகம், அறிவியல், மெல்லிய நகைச்சுவை, வாழ்க்கை பற்றிய நிதர்ச்சனங்கள் என எல்லா பிரிவுகளிலும் ஒரு சகஜமான நட்புணர்வு அவர் எழுத்துகளில் இருந்தது. அவர் மறைவு - தமிழ் எழுத்து உலகத்துக்கு ஒரு பெறும் இழப்பு - ஒரு குருவின் இழப்பு போல.

முயற்சி திருவினையாக்கும்

அம்மாவுக்கு வயது 56 ஆகிறது. என் இளம்பிராயத்தில் இருந்தே நிறைய சுலோகங்களை சொல்லி கொடுத்தது அம்மாதான். சமஸ்கிரதமாகினும் தமிழானாலும் ஸ்லோகங்கள் சாதாரண வார்த்தைகளை கூட சுத்தமாக உச்சரிக்க உதவுகின்றன என்பது என் அனுபவபூர்வமான எண்ணம். நான்கு மாதங்களுக்கு முன்னால் சிறு உடல்நல விஷயம் காரணமாக அம்மாவுக்கு ஒரு விசித்திரமான விளைவு ஏற்பட்டுவிட்டது. அவர்களால் சிந்திக்க முடிகிறது - வார்த்தைகளை கோர்வையாக சிந்திக்கவும் அவற்றை உச்சரிக்கவும் மிகவும் பிரயத்தனபட வேண்டியதாயிற்று. ஒரு வார இறுதியில் நான் அவர்களுடன் மருத்துவமனையில் இருந்தேன். எனக்கு நினைவு தெரிந்த சில சுலபமான சுலோகங்களை கூட நான் சொல்ல சொல்ல அவர்களால் திருப்பி சொல்ல முடியவில்லை. மெல்ல மெல்ல ஒரு ஸ்லோகம் மட்டுமே சொன்னார்கள் - நான் இன்னும் சில ஸ்லோகங்களை தினமும் உச்சரிக்க சொன்னேன். மெல்ல மெல்ல நினைவுகளில் இருந்து வார்த்தைகளை தேடி, தொடர்புபடுத்தி, உச்சரிக்க ஆரம்பித்தார்கள் - அதில் ஒரு குழந்தையின் பிராயத்தனம் தெரிந்தது. என்னுடனான தொலைபேசி அழைப்புகளில் எல்லாம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இந்த முறை வீட்டுக்கு வந்தபோது அந்த முயற்சியின் விளைவுகள் கண்கூடாக தெரிகிறது - அவர்களால் தெளிவாக பேச முடிகிறது - சிந்திக்க முடிகிறது - கொஞ்சம் தடுமாற்றங்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி - சில வினாடிகள் சிந்தித்து வார்த்தைகளை கோர்வைபடுத்தி - தன்னால் முடிகிறது எனும் குழந்தையின் வெற்றி புன்னகையோடு அவர்கள் பேச பேச - நிஜமாகவே நான் உணர்ச்சிவசப்படுகிறேன். முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும் எனும் சொல்லாக்கம் நிஜமாவதை காண்கிறேன். மேலும் சில மாதங்களுக்கு முன்னால் காது தெளிவாக கேட்கும் கருவி பொருத்திய பிறகு - கிட்டதட்ட 40 வருடங்களாக மெல்ல மெல்ல இழந்த கேட்கும் சக்தி திரும்பி - சைக்கிள் மணி, குழந்தை, வானொலி, பறவைகள் மற்றும் இசை என எல்லாவற்றையும் கிரகித்து கொள்கிறார்கள். அம்மாவின் பழக்கம் தனக்கு தெரிந்தவற்றை புரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுதல் - பொதுவாக என்னுடன் நிறைய பேசுவார்கள் - இப்போது எல்லாம் இன்னும் நிறைய பேசுகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் படிக்கிறார்கள் - தொலைகாட்சி பார்க்கிறார்கள் - என்னுடன் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன. வெகுநாள் காணாத தோழமையிடம் வருடத்து கதைகளை பகிர்ந்து கொள்ளும் பள்ளி குழந்தை மனதை காண்கிறேன். இயற்கை எனும் கடவுளை நான் நம்புகிறேன் - காலம் காயங்களை தோற்றுவிக்கும் வேகத்தோடு அவற்றை மறையவைக்கும் மருத்துகளையும் சம்பவங்களாக கொடுத்துகொண்டுதான் இருக்கிறது.