அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Friday, March 21, 2008
குழந்தைகளை எங்கே தொலைக்கிறோம்
நம் குழந்தைதனமான மனது எங்கே தொலைக்கபடுகிறது. என் கருத்துபடி - போட்டி உருவாகும் மனோபாவ கல்வி தொடங்குவதிலிருந்து. பள்ளி கூடங்களும், மரங்களும், தோழமைகளும் நிறைய இளம்பிராய கதைகளை நம்முள் பதித்து இருக்கின்றன. அவற்றை பற்றிய கவனமே நம்மை மறுபடி குழந்தை பருவ மனதுக்கு செலுத்துகிறது. பள்ளிக்கு வெளியே கற்று கொண்டவை பள்ளிக்கு உள்ளே கற்று கொண்டதை விட அதிகம் - ஏனெனில் அது வாழ்க்கை கல்வி. நீ முதலா நான் முதலா என்ற இலக்கு நிர்ணயிக்கபட்ட இடத்தை மட்டுமே சென்றடைய வைக்கும் கல்வி அடிமைகளை உருவாக்குகிறது. கல்வி பற்றியும் பள்ளிகூடங்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் மிக அற்புதமான நினைவுகளை கொண்ட புத்தகமாக "இரகசைத்த காலம்" என்ற புத்தகத்தை கருதுகிறேன். பெரும்பாலும் 40 வயது கடந்த சில பிரபலங்கள் - கிராமமும் நகரமும் கொண்ட வாழ்க்கைமுறையில் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கல்வி என்பது அடிப்படையான ஒரு தகுதி எனினும் அதில் கற்று கொள்ளும் விஷயங்களை விட - பெற்று கொண்ட பட்டமும் மதிப்பெண்களும் ஒரு மனிதனை முடிவு செய்வது தவறென கருதுகிறேன். இன்றைய குழந்தைகள் நிறைய கற்று கொள்கிறார்கள் - பள்ளி மட்டுமல்ல, மற்ற ஊடகங்களும் நிறைய கற்று கொடுக்கின்றன. விளையாட்டோ, கலையோ, ஒருங்கிணைக்கபட்ட வாழ்க்கைமுறையோ இந்த கல்வியில் குறைவாக இருக்கிறது. ஒரு புள்ளியில் விளையாட்டு என்பது உடல்சார்ந்த விஷயமாக இல்லாமல் மூளை சார்ந்த விஷயமாகவும் போகிறது. 25-30 வயதில் கார்பரேட் யுக ஆரோக்கிய குறைவு என்பது சராசரியாகிவிட்ட காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகளை பெரியவர்கள் போல சிந்திக்க வைக்கிறோம். அப்படி பேசுவது ரசிக்கபடுகிறது - அப்படி ரசிக்கபடுவதனாலேயே அவர்கள் மேலும் பெரியவர்கள் போல நினைத்து கொள்கிறார்கள். அவர்களின் கேள்விகளில் குழந்தைதனத்துக்கு பதிலாக அறிவுஜீவிதனம் வெளிப்படுகிறது என்பது பெற்றோரின் பெருமையாக போகிறது. இதற்க்கு மருந்து மாத்திரை எல்லாம் வந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை ஆண்களாகவும் பெண்களாகவும் வளர்க்கிறோம் - குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்கும் எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. குழந்தைகள் இல்லாத ஒரு வெற்றிட உலகம் மிக அருகில்தான் இருக்கிறது. அங்கே பூக்களை பறிக்கவும், பட்டாம்பூச்சி பிடிக்கவும், பந்து விளையாடவும், கதை சொல்லவும் யாரும் இருக்கமாட்டார்கள் - ஒரு பெரிய கல்லறை இருக்கும் - இங்கே குழந்தைபருவம் புதைக்கபட்டுள்ளது என்ற வாசகத்துடன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment