வார்த்தைகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறது. சில நேரங்களில் வார்த்தைகள் எண்ணங்களை தாண்டி வெறும் ஒற்றை அகராதி அர்த்தத்தை மட்டுமே தொனிக்கின்றன. அது பேசுபவர் அல்லது கேட்பவரின் மனோநிலையும் சூழ்நிலையும் பொருத்து மாறுபடலாம். எனினும் பெரும் சந்தோஷத்தை போலவே மிக துல்லியமான வலியையும் அது உருவாக்கிவிடுகிறது. மனோரீதியாக உணர்வுகளால் கட்டபட்ட உறவுகளின் மத்தியில் இப்படி வலி உண்டாகும் தருணங்கள் மரணத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. ஒரு கடினமான இருட்டின் வெளியில் இருப்பதை போல.
ஒரு நிமிடத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. சில நேரங்களில் பார்க்கும் சாலையோர விபத்து மரணங்களை போல. நெருக்கமான மரணத்துக்கு பிறகு ஒரு வினாடியில் காதலும் உணர்வுகளும் கோபமும் மனவருத்தமும் கருத்து வேறுபாடுகளும் கொண்ட மனம் மன்னித்து இருக்கலாமோ என்ற உணர்வுடன் அழுகிறது.
சிலரை நாம் காரணமில்லாமல் விலக்குகிறோம். விலகி இருக்கவும் விரும்புகிறோம். அவர்களோ நெருங்கிவருகிறார்கள். அன்புடன் பேச விழைகிறார்கள். நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் - சிலர் மன்னிக்கபடவும் கூட. அவர்கள் பிறந்த நாட்களில் ஆச்சரியமாக அழைப்பதுண்டு. வாழ்த்துகள் தவிர வேறு என்ன பேசுவது என்ற நீண்ட மவுனத்தில் சிலரின் மனம் புரிந்து கொள்ளபடுவதுண்டு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நம்முடன் பிணக்கு கொண்டவர்களில் சிலரையாவது மன்னிக்கலாம். மனமிருந்தால் எல்லாரையும் கூட. சிறிய வாழ்க்கை. மிக சிறிய வட்டங்கள்... காண்பதும் அறிவதும் மிக குறைவு - இதிலும் கதவுகளை மூடிய வாழ்க்கை யாருக்காக..
No comments:
Post a Comment