சமீப காலங்களில் அலுவகம் செல்வதே ஒரு பயணம் போலதான் இருக்கிறது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. கூட அரைமணியும் ஆகும் - அது போக்குவரத்து நிலவரம் பொருத்து. இந்த பயணம் நிறைய படிக்கவும் பார்க்கவும் நேரம் கொடுக்கிறது. அப்படி ஒரு விஷயம்தான் இன்று பகிர்ந்து கொள்ள தோன்றியது.
நாம் வாழ்ந்த வீடுகளை பற்றிய நினைவுகள் ஏறத்தாழ எல்லாருக்கும் இருக்கும். அந்த வீடு தந்த பாதுகாப்புணர்வும், பால்ய சந்தோஷங்களும் இன்னும் பல ரகசியங்களும்.. மேலும் கொஞ்சம் வலிகளும்.. அப்படிதான் எல்லாருக்கும் வீடுகள் இருக்கின்றன.
திரிசூலம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பழைய வீடு இருக்கிறது. அந்த இடத்தை தாண்டும் போதெல்லாம் மனசு வலிக்கும். பிரமாண்டமான வீடு. யாரோ ஒரு குடும்பம் அங்கு வாழ்ந்திருக்கலாம். இன்று மிகவும் பாழடைந்து இருக்கிறது. இது போல நிறைய வீடுகளை பார்த்திருப்போம். அங்கு வாழ்ந்த குடும்பங்களை பற்றி எவ்வளவு யோசித்திருப்போம் என தெரியவில்லை. அங்கு வாழ்ந்த சிலர் இன்னும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் இந்த வீட்டை பற்றிய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த வீடு எத்தனையோ பிறப்புகளையும் இறப்புகளையும் நினைவுகளாக கொண்டிருக்கலாம். கிராமங்களில் சில பழைய வீடுகள் உண்டு, தாழ்வாரமும் தோட்டத்து துளசி செடியுமாய்.. ஆனால் யாராலும் கவனிக்கபடாமல். திருமணங்களும், காதலும் ஏன் மரணமும் கூட அந்த வீடு சுவர்கள் கண்டிருக்கும். பழைய வீடுகள் ஒரு வகையில் வயசாளி உறவினர்களை போல - அவர்களை பார்க்கும் போதெல்லாம் நிறைய நினைவுகள் வரும்.. சில சந்தோஷமானவை - சில துக்கமானவை. எனினும் அவர்களின் நிலைக்கும் இன்றைய நிமிடத்தில் ஏதும் செய்ய முடியாது.. பழைய வீடுகளும் அது போலவே. சில வீடுகளை நான் உள் சென்றும் பார்த்திருக்கிறேன். இருண்ட கரி பிடித்த சமையல் அறைகள், நீளமான தாழ்வாரங்கள், சுவர்களில் கிறுக்கல்கள் கொண்ட படுக்கை அறைகள்.. பழைய காலண்டர்கள் இருக்கும் பரண்கள்.. பொம்மைகள் கிடக்கும் தோட்டம்.. யாரோ வைத்த பூச்செடிகள்.. ஒரு வாழ்வு அங்கு நிகழ்ந்த சுவடுகள் இருக்கும். கூர்ந்து கேளுங்கள்.. குழந்தைகளின் ஓசை, வாழ்ந்த பெண்களின் சிரிப்பு, ஆண்களின் சந்தோஷம்.. சொல்லபட்ட கதைகள்.. கொடுக்கபட்ட சுகங்கள் என .. வாழ்வு சுவடுகளை பதித்திருக்கும்.. ஏதோ ஒரு கவிதையில் படித்ததை போல - பாழடைந்த ஒவ்வொரு வீடும் ஒரு விசும்பலை கொண்டிருக்கிறது. அது அழுகையாக மாறும் வினாடி - ஒரு மரணம் போன்றது.
2 comments:
நல்லதொரு பதிவு :)
நல்லாருக்கு
Post a Comment