அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, July 30, 2006

சுகிர்தராணியின் சில கவிதைகள்

மனதை தொட்ட சில கவிதைகள்.. இரவு மிருகம் என்ற தொகுப்பில் இருந்து…

எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்து கொண்டிருக்கிறோம்

உலகத்து மொழிகளின்
அத்தனை அகராதிகளிலும்
தேடித்தேடி
கடைசியில்
தெரிந்து கொண்டேன்
உன் பெயரில்
காதலுக்கு நிகரான
இன்னொரு சொல்லை.

கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கை நழுவி போகின்றன.

போபால் எக்ஸ்பிரஸ்..

வாய்ப்பு கிடைத்தால் இந்த திரைபடத்தை பாருங்கள். மிக அற்புதமாக படமாக்கபட்டுள்ளது. போபால் விஷவாயு கசிவை மையபடுத்தி திரைபடமாக்கபட்டுள்ள கதை – நஸ்ருதீன்ஷ போன்ற அற்புதமான நடிகர்களால் மேலும் திரைப்படம் பண்பட்டு இருக்கிறது. பிதா என்று ஒரு திரைப்படம் – இன்று பார்க்க திட்டமிட்டு உள்ளேன். நிறைய கேள்விபட்டு உள்ளே இந்த திரைப்படம் பற்றி. மேலும் சில ஆங்கில திரைப்படங்கள் இருக்கின்றன (உதா: ). அடுத்த முறை ஒரு சிறிய திரைபட வரிசை கொடுக்கிறேன் – நமக்குள் நல்ல திரைப்பட ஆர்வமுள்ளவர்களுக்காக.

கும்பகோணம்..

சென்ற வாரம் கும்பகோணம் / திருநாகேஸ்வரம் – ராகு ஸ்தலத்தில் கொஞ்சம் பூஜை மற்றும் விஷேசங்கள். நல்ல கோவில் அது – தவிலுக்கும் நாதஸ்வரத்துக்கும் பயிற்சி பள்ளி இருக்கிறது. அற்புதமான இசை கோவிலுக்கு நல்ல உணர்வை கொடுக்கிறது. குளத்தை சுத்தமாக பராமரிக்கிறார்கள். சின்ன கோவில் எனினும் நல்ல பராமரிப்பு இருப்பதால் நல்ல அனுபவம். கும்பகோணம் டிகிரி காப்பியும், திருநாகேஸ்வரத்தில் பவண்டோவும் என் விருப்பங்கள் – இந்த முறையும் குறைவின்றி நிறைவேறியது. சென்னையில் அடாவடி பெண்களை பார்த்து பார்த்து… கும்பகோணத்திலும் திருநாகேஸ்வரத்திலும் அழகான தலை நிமிராத பெண்களை பார்த்ததும்… மனசு பிடித்து போயிற்று. அந்த ஏரியாவில் எனக்கு பெண் எடுப்பார்களா என்று தெரியவில்லை.

மின்னஞ்சலில் சாணக்கியர்.

சமீபத்தில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. சாணக்கியரின் சித்தாந்தங்களை விவரித்து எழுதியிருந்தார்கள். இன்றைய அலுவக சூழலில் அவரின் கருத்துகள் மிகவும் தேவைபடுகின்றன என்பது என் கருத்து. வாழ்வியல் ரீதியான அரசியலில் அவர் கருத்துகளை நான் என்றும் பயன்படுத்துகிறேன். சாணக்கியரின் கருத்துகள் வெறும் அரசியல் சார்ந்தவை அல்ல – நல்ல மனிதனின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் – இடர்பாடுகள் என்ன – எப்படி கவனித்து – புரிந்து அவற்றை முறியடித்து வாழ்வது என்றும் உண்டு. அர்த்த சாஸ்திரம் பாதி படித்து வைக்க பட்டு இருக்கிறது. அடுத்த முறை பதிவுகளில் கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தார்தர்களும் புத்தர்களும்…

ஒரு பொதுவான நண்பருடன் கலந்துரையாடலின் போது பற்றற்று வாழும் வாழ்க்கை பற்றி பேசினோம்… சித்தார்த்தர்கள் தான் நல்ல புத்தர்கள் ஆக முடியும் என்ற என் கருத்து பெரும் விவாதத்துக்கு உள்ளானது. ஆசைகள் இல்லாமல் வாழ்வது தியானம் என்றால் – ஆசைகளை கொண்டு வாழும் அற்புதமான வாழ்க்கை தியானத்துக்கு மேலானது என்பது என் கோட்பாடு. காதலும் ஆசையும் கொண்ட வாழ்க்கை வேண்டும் – ஆனால் இழப்புகளுக்கு வருந்த கூடாது. வருவது போலவே போவதும் இயல்பானது என்று கண்ணதாசன் சொல்வாராம். முற்றிலும் துறந்த துறவியாகி தான் மட்டும் சொர்கம் போவதைவிட, இருக்கும் வரைக்கும் சுக வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து பூலோக சொர்க்கம் காண்பதில் தவறில்லையே. இன்னொன்றும் கவனியுங்கள் – அது அருணகிரிநாதராகட்டும், பகவான் கிருஷணராகட்டும் அல்லது கண்ணதாசன் ஆகட்டும் – எல்லா விளையாட்டுகளும் விளையாடி முடித்தபின்னரே அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். 20 வயதிலேயே தலையணை புத்தகங்களை படித்துவிட்டு வேதாந்தமும் சித்தாந்தமும் பேசும் நண்பர்களே மன்னியுங்கள்.. ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்வதை கவனியுங்கள்.. “இளைஞர்களே.. இளைஞிகளே… இது உங்கள் பருவம்…பூக்களை பாருங்கள்…பட்டாம்பூச்சிகளை பாருங்கள்…வாழ்க்கை ஒரு அழகான தோட்டம் போன்றது…ரசியுங்கள்..” – கலந்துரையாடலின் போது ஒரு தோழி சொன்னார் – சித்தார்தரை விட யசோதா உயர்ந்தவர் என்று… நான் முற்றிலும் ஏற்றுகொண்ட விஷயம் அது.

காதலுடன்…

என் சில நட்புகளும் காதல்களும் சிலரிடையே கொஞ்சம் சலசலப்புகளை ஏற்படுத்துவதை சில நேரங்களில் காண்கிறேன். இந்த பதிப்பு எந்த வகையிலும் வாக்குமூலம் கிடையாது – எனினும் மனதில் பட்டதை எழுதும் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு இந்த பதிப்பு அமைகிறது. என்னை பொருத்தவரை எல்லா நட்பிலும் மெல்லிய காதல் தேவைபடுகிறது. முகத்தில் புன்னகை – கண்களில் நட்பு – இவை வேண்டுமென்றால் இதயத்தில் காதல் வேண்டும். இரு பால் வகை நட்புகளிலும் காதல் தேவைப்படுகிறது – காதல் என்பது வெறும் ஆண் பெண் உறவுதான் என்று வாதிடுபவர்களுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை – காதல் என்பதை நான் ஆத்மார்த்தமான அன்பு என்றும் – மனம் சார்ந்த நெருக்கமாகவும் கூட எடுத்து கொள்கிறேன். ஒரு ஆணுடன் ஏற்படும் நட்பு உணர்வு சார்ந்ததாக அமையும் சாத்தியத்தில் இயல்பான நெருக்கம் அமைகிறது. இருவருக்குள்ளும் ஒரு புரிதல் சாத்தியமாகிறது – ஒருவரின் எண்ண ஓட்டத்தை புரிந்து அடுத்தவர் நடப்பது சாத்தியமாகிறது – இது உறவை மேம்படுத்துவதோடு – செய்யும் வேலையை அற்புதமாக்குகிறது – பெறும்பாலான குழு மேலாண்மை உக்திகளில் இவற்றை காணலாம். காதல் என்பது பொருட்கள் மேலும், சம்பவங்கள் மேலும் கூட வரலாம். சிலருக்கு மோட்டார் வாகனங்கள், சிலருக்கு கை தொலைபேசிகள், சிலருக்கு கை கடிகாரங்கள்… சிலருக்கு திருமணங்களில் கலந்து கொள்தல் மிகவும் பிடிக்கும் .. எனக்கு பயணங்கள் பிடிப்பதை போல. சம்பவங்களின் மேல் கொள்ளும் காதல் நம் பங்களிப்பை மேம்படுத்துகிறது. பொருட்களின் மேல் கொள்ளும் காதல் நம் கவனிப்பை – மேல்படுத்துகிறது.

காதலுடன்…வாழ்தலில் ஆசையுடன் வாழும் போது வாழ்க்கை வாழதக்கது ஆகிறது…வாழ்தலில் உயிர் முக்கியம். உயிருக்கு காதல் முக்கியம். மனதில் காதல் கொண்டு கண்களில் அன்பு கொண்டு பேசி பாருங்கள்….நடக்காத விஷயமே கிடையாது. இயல்பாகவே ஆண் பெண் உறவில் ஒரு காதல் அமையும் – அது அமையும் போது வெறும் நட்பு என்ற உயரத்தில் இருந்து கொஞ்சம் உறவு உயர்கிறது. அப்படி உயர்ந்த உணர்வு சுலபத்தில் கலையாது. இங்கு சமூகத்தில் காதல் என்பது காமத்தின் முன்னுரையாக மட்டுமே கருதப்படும் பட்சத்தில் – காதல் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமானதும் கூட. காதல் வார்த்தைகளின் மென்மையை கொடுக்கிறது – அடுத்தவரை புரிந்து கொள்ளும் ஆற்றலை கொடுக்கிறது. எந்த ஒரு உணர்வு நெருக்கத்தையும் நட்பையும் மேம்படுத்துகிறதோ அதனை காதல் என்று கொள்கிறேன் நான். கொஞ்சம் கண் பார்வைகள், கொஞ்சம் புன்னகை இவை போதும். மனதில் பிடித்த பாடலை என்றும் மவுனமாய் பாடுங்கள் – அது உங்களை உற்சாக படுத்தியிருக்கும். தினமும் பார்க்கும் நண்பர்களை அவர்களின் செயல்களுக்காக பாராட்டுங்கள் – உங்கள் வார்த்தைகளின் தாக்கம் புரியும். மனதில் ஒரு உணர்வோடு பழக ஆரம்பித்து விட்டீர்களானால், அடுத்தவருக்காக நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் ஒரு உயிர்ப்பு இருக்கும். அது மேலும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும். அலுவகம், குடும்பம் என எல்லா இடங்களிலும் இது தேவைபடுகிறது. இதே கருத்துகளை சில நிறுவனங்கள் பயிற்சியாகவே அளிக்கின்றன - மனோதத்துவ வாழ்க்கை முறை என்ற பெயரில். எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. எனவே…வாழ்ந்து பாருங்கள்… தினமும் கொஞ்ச நேரமாவது… காதலுடன்.

ரயில் பயணங்களில்

ரயில் பயணங்கள் இப்போதெல்லாம் ரொம்ப சுவரஸ்யமாக ஆகிவிட்டது. பொதுவின் என் கோவை பயணங்கள் இரவில் அமையும் – இந்தமுறை கோவையில் இருந்து சென்னை பயணம் காலையில் அமைந்து விட்டது. நிறைய விதமான மனிதர்கள் – நிறைய விதமான காட்சிகள். ரயிலில் புத்தகங்கள் மட்டுமல்ல இப்போதெல்லாம் டிவிடி – விசிடி – எம்பி3 சிடிகள் எல்லாம் கிடைக்கிறது. ரயில் மசால் தோசையும் காப்பியும் குடித்து விட்டு நிமிர்ந்த போது அவர் அறிமுகமானார். தன்னை ஒரு அரசாங்க அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார் – நான் வழக்கம் போல (எல்.எம்.டபில்யுல… மெக்கானிக்கல் என்ஜினியர்) அறிமுகம் செய்து கொண்டேன். என்னிடம் இருந்த பத்திரிக்கைகளின் எல்லா பக்க செய்திகளையும் விமர்ச்சனம் செய்தார். எந்த அரசாங்கமும் சரியில்லை என்று மொத்தமாய் குற்றம் சாட்டினார் – அவர் சேலத்தில் இறங்கும் வரைக்கும் அவர் மட்டும்தான் பேசிகொண்டு இருந்தார் – நாங்கள் எல்லாரும் அவரை பார்த்து கொண்டு மட்டுமே இருந்தோம் – சிலர் தூங்கி போய் இருந்தார்கள்.

ரயிலில் சில சுவரஸ்யமான புத்தகங்கள் கிடைப்பது உண்டு – இந்த முறை 5 மொழிகளை தமிழ் மூலமாக கற்று கொள்ள சொல்லி தரும் புத்தகம் ஒன்று கிடைத்தது – 10 ரூபாய்தான் விலை. முதல் பக்கத்திலேயே சொல்லிவிட்டார்கள் – “எல்லா மொழிகளின் பெயர்ப்புகளும் எங்கள் அறிவுக்கு எட்டிய வரைதான்” என்று – யாராவது மொழி தெரிந்தவர்களுடன் புத்தகத்தை வைத்து சரிபார்த்த பிறகுதான் கற்று கொள்ளவேண்டும் – இல்லாவிட்டால் குத்து வெட்டு நடந்து விடும் போல. ரயிலில் பிச்சை எடுக்காமல் ஏமாற்றாமல் கவுரவமாக புத்தகம் விற்று பிழைப்பு நடத்தும் நபர்களிடம் எனக்கு என்றுமே நல்ல மரியாதை உண்டு – அதனால் ரயிலில் புத்தகம் வாங்குவது பழகிவிட்டது – நான் வாங்கிய இன்னொரு புத்தகம் “சாமுத்திரிகா லட்சணம்” – (இடது முதுகில் மச்சம் இருக்கும் பெண் நல்ல குடும்பஸ்திரி…யார் இதையெல்லாம் பார்த்து உதை வாங்க போகிறார்களோ தெரியவில்லை…) – ஒரு எம்பி3 சிடியும் ஒரு டிவிடியும் வாங்கினேன் – பரவாயில்லை – காசுக்கு மோசமில்லை.

மருத்துவ உடனடி விளம்பரங்கள் போலவே – உல்லாசத்துக்கு அழைக்கும் கை தொலைபேசி எண்களும் நிறைந்து காணப்படுகிறது ரயில் பெட்டியின் கழிவறைகள். தேசத்தின் மிக அதிகம் பேர் வேலை செய்யும் அரசாங்க யந்திரம் – நாட்டின் பகுதிகளை இணைக்கும் சந்தோஷமான வாகன சேவை – மனிதர்கள் மாறி கொண்டே இருக்கிறார்கள் – கிராமத்து வயலோர சிறுவர்களின் உற்சாக கை அசைப்புகளுக்கு புன்னகைத்தபடியே – இயங்கி கொண்டு இருக்கிறது – ரயில் – ஒரு வாழ்க்கை போல.

மீண்டும் கொஞ்சம் காலை…

பருவ பெண்ணின் அலட்சியமான தாவணி கட்டு போன்ற பைக்காரா மலைச்சாலை... கொஞ்சமாய் உயிரை தொடும் பனி…ஈரமான காற்று… முற்றிலும் புதிதானதல்ல எனினும்…ஒவ்வொரு முறையும் மனசு நிறையும் பயணம் அது. இந்த முறை அலுவக நண்பர்களுடன். பயணம் சுகமானது…அதுவும் அற்புதமான கூட்டணி அமையும் போது மேலும் உற்சாகமடைந்து விடுகிறது. புதிய நண்பர்கள்…புதிய அனுபவங்கள்…கேலி..சிரிப்பு…கவிதையான நினைவுகள்.. இவைதான் பயணத்தை நினைவுகளில் சேமிக்கும்.

வாகன வசதிகளும், தங்குமிடமும் சரியான முறையில் அமையவில்லை – முதல் நாள் உணவு தேவாமிர்தம் – தேவர்கள் மட்டும்தான் சாப்பிட முடியும்…இரண்டாவது நாள் அற்புதமாக கழிந்தது. முதல் நாள் இரவில் தீ மூட்டி…ஆட்டம் ஆடி… கொஞ்சம் தள்ளி இருந்து பார்த்த போது ஆதி மனிதனின் மிச்சங்களை பார்க்க முடிந்தது. கொஞ்சம் மதுவும், கொஞ்சம் உற்சாகமும், குளிருக்கு இதமான தீயும்…சரியான கூட்டணியும் அமைந்ததும் நாகரீக மனிதனுக்கு உள்ளே இருக்கும் ஆதி மனிதன் வெளியே வருகிறான் – அவனுக்கு எந்த விதிகளும் கிடையாது – அவன் சுயமாய் இருக்கிறான். மூளைக்குள் ஓங்காரமிடும் கட்டளைகள் தவிர அவனுக்கு கடவுள்கள் கிடையாது.

இரண்டாம் நாள் – என்னுடன் வந்த முதன் முறை பயணிகளுக்கு சுகமான நாளானது. 2600 அடி உயரத்தின் குளிர்ச்சியை சென்னைவாசிகளும் மலைவசஸ்தலமில்லாத வாசிகளும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். உதகை கொஞ்சமாய் வெகுஜன நகரமாகி வருகிறது. முன்னர் இவ்வளவு கூட்டம் கிடையாது. மெல்லிய பனியில் சுட்ட மக்காசோளமும், மிளகாய் பொடி போட்ட பொரியும் கொரித்து கொண்டு கை கோர்ந்து நடந்த காலம் எல்லாம் உண்டு. அதீதமில்லா இருட்டில் தோள் சாய்ந்த துணையோடு தொட்டபெட்டாவின் மலை பாதைகளில் சுற்றியதுண்டு. இப்போது எங்கு திரும்பினாலும் மக்கள் மக்கள் மக்கள் – இவ்வளவு கூட்டம் இந்த இடத்தின் தனிமையின் அழகை கொஞ்சம் கொஞ்சமாய் தின்று விடுகிறது. இந்த முறை பழங்குடி மக்களை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை. என் தோழர்களில் சிலர் அங்கு உண்டு. இவ்வளவு கூட்டமாய் அவர்களை சந்திப்பது உசித்தமான விஷயமில்லை என்பதால் இந்தமுறை சந்திப்பை தவிர்க்க வேண்டியதாயிற்று.

புதிய நட்புகளும் இந்த பயணத்தில் உண்டு – சிலரை புதியதாய் அறிந்தும் கொண்டோம். சில தோழர்கள் இந்த அளவுக்கு மற்றவரை கிண்டல் செய்வார்கள் – நடனம் ஆடுவார்கள் – பாடுவார்கள் என்று தெரியாது. முதல் நாளின் இரவு பயணத்தில் கொஞ்சம் கவிதைகள் பரிமாறி கொண்டோம். ஒரே அலைவரிசை கொண்ட தோழி அமைவது – அதுவும் இரண்டு நாள் அலுவக பயணத்தில் அமைவது இதுதான் முதன் முறை – என் மற்ற இலக்கில்லாத பயணங்களில் இத்தகைய தோழிகளை கண்டு கொண்டதுண்டு.
மிக சில இடங்களே பயணம் கொண்டோம் – தோட்டவியல் பூங்கா – தொட்டபெட்டா – பைக்காரா அருவி – ஏரியில் படகு பயணம் – கொஞ்சம் வழித்தடங்களில் இயற்கை என்று சுலபமாய் முடிந்து விட்டது பயணம். மிலாஞ், அவலாஞ், கிலன்மார்கன், பைக்காரா என அடர்ந்த பகுதிகளுக்குள் செல்ல நேரமில்லை. அடுத்த பயணத்தில் திட்டமிட வேண்டும். மலைகளின் அரசி என்றும் காத்திருக்கிறாள்.