என் சில நட்புகளும் காதல்களும் சிலரிடையே கொஞ்சம் சலசலப்புகளை ஏற்படுத்துவதை சில நேரங்களில் காண்கிறேன். இந்த பதிப்பு எந்த வகையிலும் வாக்குமூலம் கிடையாது – எனினும் மனதில் பட்டதை எழுதும் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு இந்த பதிப்பு அமைகிறது. என்னை பொருத்தவரை எல்லா நட்பிலும் மெல்லிய காதல் தேவைபடுகிறது. முகத்தில் புன்னகை – கண்களில் நட்பு – இவை வேண்டுமென்றால் இதயத்தில் காதல் வேண்டும். இரு பால் வகை நட்புகளிலும் காதல் தேவைப்படுகிறது – காதல் என்பது வெறும் ஆண் பெண் உறவுதான் என்று வாதிடுபவர்களுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை – காதல் என்பதை நான் ஆத்மார்த்தமான அன்பு என்றும் – மனம் சார்ந்த நெருக்கமாகவும் கூட எடுத்து கொள்கிறேன். ஒரு ஆணுடன் ஏற்படும் நட்பு உணர்வு சார்ந்ததாக அமையும் சாத்தியத்தில் இயல்பான நெருக்கம் அமைகிறது. இருவருக்குள்ளும் ஒரு புரிதல் சாத்தியமாகிறது – ஒருவரின் எண்ண ஓட்டத்தை புரிந்து அடுத்தவர் நடப்பது சாத்தியமாகிறது – இது உறவை மேம்படுத்துவதோடு – செய்யும் வேலையை அற்புதமாக்குகிறது – பெறும்பாலான குழு மேலாண்மை உக்திகளில் இவற்றை காணலாம். காதல் என்பது பொருட்கள் மேலும், சம்பவங்கள் மேலும் கூட வரலாம். சிலருக்கு மோட்டார் வாகனங்கள், சிலருக்கு கை தொலைபேசிகள், சிலருக்கு கை கடிகாரங்கள்… சிலருக்கு திருமணங்களில் கலந்து கொள்தல் மிகவும் பிடிக்கும் .. எனக்கு பயணங்கள் பிடிப்பதை போல. சம்பவங்களின் மேல் கொள்ளும் காதல் நம் பங்களிப்பை மேம்படுத்துகிறது. பொருட்களின் மேல் கொள்ளும் காதல் நம் கவனிப்பை – மேல்படுத்துகிறது.
காதலுடன்…வாழ்தலில் ஆசையுடன் வாழும் போது வாழ்க்கை வாழதக்கது ஆகிறது…வாழ்தலில் உயிர் முக்கியம். உயிருக்கு காதல் முக்கியம். மனதில் காதல் கொண்டு கண்களில் அன்பு கொண்டு பேசி பாருங்கள்….நடக்காத விஷயமே கிடையாது. இயல்பாகவே ஆண் பெண் உறவில் ஒரு காதல் அமையும் – அது அமையும் போது வெறும் நட்பு என்ற உயரத்தில் இருந்து கொஞ்சம் உறவு உயர்கிறது. அப்படி உயர்ந்த உணர்வு சுலபத்தில் கலையாது. இங்கு சமூகத்தில் காதல் என்பது காமத்தின் முன்னுரையாக மட்டுமே கருதப்படும் பட்சத்தில் – காதல் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமானதும் கூட. காதல் வார்த்தைகளின் மென்மையை கொடுக்கிறது – அடுத்தவரை புரிந்து கொள்ளும் ஆற்றலை கொடுக்கிறது. எந்த ஒரு உணர்வு நெருக்கத்தையும் நட்பையும் மேம்படுத்துகிறதோ அதனை காதல் என்று கொள்கிறேன் நான். கொஞ்சம் கண் பார்வைகள், கொஞ்சம் புன்னகை இவை போதும். மனதில் பிடித்த பாடலை என்றும் மவுனமாய் பாடுங்கள் – அது உங்களை உற்சாக படுத்தியிருக்கும். தினமும் பார்க்கும் நண்பர்களை அவர்களின் செயல்களுக்காக பாராட்டுங்கள் – உங்கள் வார்த்தைகளின் தாக்கம் புரியும். மனதில் ஒரு உணர்வோடு பழக ஆரம்பித்து விட்டீர்களானால், அடுத்தவருக்காக நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் ஒரு உயிர்ப்பு இருக்கும். அது மேலும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும். அலுவகம், குடும்பம் என எல்லா இடங்களிலும் இது தேவைபடுகிறது. இதே கருத்துகளை சில நிறுவனங்கள் பயிற்சியாகவே அளிக்கின்றன - மனோதத்துவ வாழ்க்கை முறை என்ற பெயரில். எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. எனவே…வாழ்ந்து பாருங்கள்… தினமும் கொஞ்ச நேரமாவது… காதலுடன்.
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment