பருவ பெண்ணின் அலட்சியமான தாவணி கட்டு போன்ற பைக்காரா மலைச்சாலை... கொஞ்சமாய் உயிரை தொடும் பனி…ஈரமான காற்று… முற்றிலும் புதிதானதல்ல எனினும்…ஒவ்வொரு முறையும் மனசு நிறையும் பயணம் அது. இந்த முறை அலுவக நண்பர்களுடன். பயணம் சுகமானது…அதுவும் அற்புதமான கூட்டணி அமையும் போது மேலும் உற்சாகமடைந்து விடுகிறது. புதிய நண்பர்கள்…புதிய அனுபவங்கள்…கேலி..சிரிப்பு…கவிதையான நினைவுகள்.. இவைதான் பயணத்தை நினைவுகளில் சேமிக்கும்.
வாகன வசதிகளும், தங்குமிடமும் சரியான முறையில் அமையவில்லை – முதல் நாள் உணவு தேவாமிர்தம் – தேவர்கள் மட்டும்தான் சாப்பிட முடியும்…இரண்டாவது நாள் அற்புதமாக கழிந்தது. முதல் நாள் இரவில் தீ மூட்டி…ஆட்டம் ஆடி… கொஞ்சம் தள்ளி இருந்து பார்த்த போது ஆதி மனிதனின் மிச்சங்களை பார்க்க முடிந்தது. கொஞ்சம் மதுவும், கொஞ்சம் உற்சாகமும், குளிருக்கு இதமான தீயும்…சரியான கூட்டணியும் அமைந்ததும் நாகரீக மனிதனுக்கு உள்ளே இருக்கும் ஆதி மனிதன் வெளியே வருகிறான் – அவனுக்கு எந்த விதிகளும் கிடையாது – அவன் சுயமாய் இருக்கிறான். மூளைக்குள் ஓங்காரமிடும் கட்டளைகள் தவிர அவனுக்கு கடவுள்கள் கிடையாது.
இரண்டாம் நாள் – என்னுடன் வந்த முதன் முறை பயணிகளுக்கு சுகமான நாளானது. 2600 அடி உயரத்தின் குளிர்ச்சியை சென்னைவாசிகளும் மலைவசஸ்தலமில்லாத வாசிகளும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். உதகை கொஞ்சமாய் வெகுஜன நகரமாகி வருகிறது. முன்னர் இவ்வளவு கூட்டம் கிடையாது. மெல்லிய பனியில் சுட்ட மக்காசோளமும், மிளகாய் பொடி போட்ட பொரியும் கொரித்து கொண்டு கை கோர்ந்து நடந்த காலம் எல்லாம் உண்டு. அதீதமில்லா இருட்டில் தோள் சாய்ந்த துணையோடு தொட்டபெட்டாவின் மலை பாதைகளில் சுற்றியதுண்டு. இப்போது எங்கு திரும்பினாலும் மக்கள் மக்கள் மக்கள் – இவ்வளவு கூட்டம் இந்த இடத்தின் தனிமையின் அழகை கொஞ்சம் கொஞ்சமாய் தின்று விடுகிறது. இந்த முறை பழங்குடி மக்களை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை. என் தோழர்களில் சிலர் அங்கு உண்டு. இவ்வளவு கூட்டமாய் அவர்களை சந்திப்பது உசித்தமான விஷயமில்லை என்பதால் இந்தமுறை சந்திப்பை தவிர்க்க வேண்டியதாயிற்று.
புதிய நட்புகளும் இந்த பயணத்தில் உண்டு – சிலரை புதியதாய் அறிந்தும் கொண்டோம். சில தோழர்கள் இந்த அளவுக்கு மற்றவரை கிண்டல் செய்வார்கள் – நடனம் ஆடுவார்கள் – பாடுவார்கள் என்று தெரியாது. முதல் நாளின் இரவு பயணத்தில் கொஞ்சம் கவிதைகள் பரிமாறி கொண்டோம். ஒரே அலைவரிசை கொண்ட தோழி அமைவது – அதுவும் இரண்டு நாள் அலுவக பயணத்தில் அமைவது இதுதான் முதன் முறை – என் மற்ற இலக்கில்லாத பயணங்களில் இத்தகைய தோழிகளை கண்டு கொண்டதுண்டு.
மிக சில இடங்களே பயணம் கொண்டோம் – தோட்டவியல் பூங்கா – தொட்டபெட்டா – பைக்காரா அருவி – ஏரியில் படகு பயணம் – கொஞ்சம் வழித்தடங்களில் இயற்கை என்று சுலபமாய் முடிந்து விட்டது பயணம். மிலாஞ், அவலாஞ், கிலன்மார்கன், பைக்காரா என அடர்ந்த பகுதிகளுக்குள் செல்ல நேரமில்லை. அடுத்த பயணத்தில் திட்டமிட வேண்டும். மலைகளின் அரசி என்றும் காத்திருக்கிறாள்.
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment