சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை. வானம் கருப்பு கட்டி கொண்டு, காலை நேரத்தில் மெல்லிய ஊதல் காற்றோடு, இரவுகளில் மெல்லிய சில் துளிகள்...இது எல்லாம் எனக்கு சென்னையில் புதுசு. கோவையில் மிக பழக்கமாக சூழ்நிலை இது. கோவையில் பொதுவான காலநிலை இதுவாக இருப்பதால் சென்னையில் சமீபத்திய இரண்டு நாட்கள் கோவையில் இருக்கும் உணர்வை தூண்டிவிட்டு இருக்கிறது.
கோடை மழை அற்புதமானது. வெயிலின் வெக்கையை சட்டென அணைத்து சீதோஷணநிலையை குளுமையாக்கும் காலதேவனின் தூதுவன் இந்த கோடை மழை. ஒரு உருது கவிதை இந்த மழையை உறவுக்கு பின்னால் உறங்கும் காதலர்களின் உடல் சூட்டோடு ஒப்பிட்டு பாடுகிறது. காமம் மெல்லிய வெயில் போல துவங்கி பின்னர் வெப்பமும் வெட்கையும் வேட்கையும் கொண்டு... பின்னர் மெல்ல குளிர்ந்து அடங்கி ஒரு நீரோடை போல உறவு நிகழ்வதாக அந்த உருது கவிதை பேசும்.
கிராமத்தில் கோடை மழை ரசிக்க படவேண்டிய ஒரு விஷயம். பொதுவாக கோடை காலத்தில் பருத்தியோ அல்லது வேர்கடலையோ பயிரிட்டு இருப்பார்கள் (என் நினைவுக்கு தெரிந்து).. அப்புறம் அம்மன் கோவிலில் விழா உண்டு. கோடை மழையை பெருசுகள் வானம் பார்த்தே சொல்லி விடுவார்கள்.. அம்மன் விழா முடியவும் மழை வரவும் சரியாக இருக்கும். கொஞ்சமாய் வானம் கறுத்தவுடன் எங்கோ தூரத்தில் இருந்து மண் வாசம் அடிக்கும். சில வீடுகளில் பொரியும் கடலையும் வருக்க ஆரம்பித்து விடுவார்கள்.. மெல்ல மேல் மண் தெருவில் பறக்கும். வயலோரல் நண்டும் எலியும் வலையை விட்டு வெளியே
வந்து மெல்ல எட்டி பார்க்கும். கொம்பு சுற்றி காற்றடிக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறீர்களா..அங்கே நேரில் பார்க்கலாம். மெல்ல மழை பெய்ய துவங்கிய உடனே தெருவில் ஜனம் கூடி மழையில் கொஞ்சம் நனையும்..அது மழைக்கு கொடுக்கும் மரியாதை..கோடை மழை அத்தகைய மரியாதைக்கு உரியது. ஓட்டு வீடுகளில் பதிக்கபட்டு இருக்கும் தகரங்களில் தண்ணீர் வழிந்தோடும். மண் வாசம் மூக்கை துளைக்கும்.. செடிகளும் வயலும் மரங்களும் மழையில் நனைவதை ஒரு கவிஞன் காதலில்
மூழ்ங்கும் காதலிக்கு ஒப்பிடுவான்.. மெல்ல இலைகளிலும் கிளைகளில் தண்ணீர் வாங்கி...தன்னுள் இறக்கி.. வேர்வரைக்கும் மழையை வரவேற்பதில் புல்லினங்கள் தவிர நிகர் ஏது. சில வீடுகளில் அதிரசம் சுடுவார்கள்.விஷ்ணுவுக்கு பூஜைகள் உண்டு. மழை முடிந்த பிறகு மழை இருக்கும் எல்லார் வீடுகளிலும்..கோவிலிலும். மதிய மழை மாலை நேரத்தை ரம்மியமாக்கி விடுவதுண்டு.. சில் காற்று.. தண்ணீர் சொட்டும் இலைகளும் கொடிகளும்...அதிரசமும் பொரியும் பகிர்ந்து கொள்ள வரும் ஊர்காரர்கள்.. மழை இந்த மனிதர்களை ஒருங்கிணைப்பதில் அற்புதமானது.. காதலை .. காமத்தை தோற்றுவிக்கும் குணம் கொண்டது மழை.. குறிப்பாக கோடை மழை.. அது தரும் சுகம் எதனோடும் ஒப்பிட முடியாதது.. என் நினைவுகளில் உள்ள எல்லா ஊர்களிலும் நான் நினைவு கூறும் காலங்கள் .. என் மழைகாலங்கள்.. என் காதல் காலங்களை போலவே.. என்றும் ஈரமானது .. அந்த மழை கால நினைவுகள்..
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment