அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 14, 2006

பயணங்களை பற்றிய நினைவுகள் ...

பயணங்களை பற்றிய நினைவுகள் எல்லாம் அவற்றோடு சம்பந்தபட்ட மனிதர்களை கொண்டே அமைகிறது என்று எனக்கு ஒரு கருத்து உண்டு. பெரும்பாலான பயணங்களில் நான் சந்தித்த சில மனிதர்கள் ஏதோ ஒரு விதத்தில் அந்த பயணத்தை நெடு நாட்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருப்பார்கள். கோவைக்கு அருகே உள்ளது வெள்ளியங்கிரி மலை. சித்திரை மாதம் அங்கே காலம் காலமாக ஒரு பயணம் உண்டு. ஒருமுறை நானும் போவதற்க்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் பயணப்பட்டோம். மலையடிவாரத்தில் ஒவ்வொரு நாளும் கட்டளைதாரரின் பெயரில் அன்னதானம் உண்டு. அது மொத்தம் 7 மலைகளின் தொடர்ச்சி. சரியான பாதை முதல் 3 அல்லது 4 மலைவரைதான். இரவு நேரம் என்பதால் டார்ச் விளக்குகளின் உதவி மட்டுமே. சிலர் கொண்டு வந்திருந்த ரேடியோ பெட்டிகளில் மெல்லிய சினிமா சங்கீதங்கள் கசிய..வியர்க்க வியர்க்க மலை ஏறினோம். அது ஒரு அற்புதமான அனுபவம். நுரையீரல்கள் சுவாசத்து சுவாசித்து ஓய்வுக்கு தூண்டும்..கால்கள் மெல்ல நடுங்கும்..வியர்வையில் நனைந்த உடல் மெல்ல சித்திரைமாத இரவு பனியில் வெட வெடக்கும். முதலில் கொஞ்சம் ஏதாவது பேசி கொண்டு நடப்பவர்களும் பின்னர் மவுனமாக ஏறுவார்கள். எல்லா மனிதர்களும் சொல்லி வைத்தது போல மலையின் சுபாவம் பற்றியும், மலை வழி பாதையின் சிரமங்கள் பற்றியும், அடுத்த மலை கொஞ்சம் சுலபம் என்றும் பேசி நடப்பார்கள். கொஞ்சமாய் ஓய்வு எடுத்தால் மொத்தமாய் படுத்துவிடுவார்கள் என்பதால்..சில வினாடிகளுக்கு மேல் உட்கார்ந்து ஓய்வு எடுக்க யாரும் விடமாட்டார்கள்.. 5 மலைகளுக்கு பிறகு சுனை ஒன்று உண்டு. அங்கே குளிக்கலாம்..நான் தண்ணீரை தெளித்து கொண்டு வந்துவிட்டேன்.. அப்புறம் ஒரு இடத்தில் அடுப்பு வைத்து சூடான கடுங்காப்பியும், பாலில்லாத தேநீரும், சுண்டலும் தந்தார்கள்.. அந்த நேரத்தில் அது தேவாமிர்ந்தம்.விடியல் 4 மணிக்கு 7அவது மலையில் இரண்டு பாறைகளுக்கு நடுவே இருக்கும் சிவ லிங்கத்தில் சூரியனின் முதல் கதிர்கள் விழும் நேரத்தில் தரிசனம் கிடைத்தது.. அது அந்த பயணத்தின் கடுமையை முற்றிலும் போக்கும் கணம். சில நண்பர்கள் தாமதமாக வந்து சேர்ந்தார்கள்.. திரும்பி வரும்போது வெளிச்சத்தில் மலை இறங்கினோம். அந்த மலையில் வசிக்கும் மக்கள்.. மாதம் ஒருமுறை டவுனுக்கு வந்து சில அத்தியாவசிய சாமானங்களையும் வாங்கி கொண்டு கொஞ்சம் சினிமாவும் பார்த்து கொண்டு மறுபடியும் மலை வாழ்க்கைக்கு வந்து விடுகிறார்கள். மலை அவர்களுக்கு எல்லாம் கொடுக்கிறது. கீழே சிறுவாணி அணை..மூலிகைகளும் காட்டு மரங்களும் கொண்ட அற்புதமான மலை.. சீதை வனம் என்று ஒரு இடம்.. அற்புதமான பூக்கள்.. மக்கள் நடமாட்டம் வருடத்தில் சில மாதங்கள்கள் தான். மற்றபடி அது சொர்க்க பூமி.. கீழே மலை அடிவாரத்தில் கோவில் ஒன்று இருக்கிறது.. வெள்ளியங்கிரி நாதர் கோவில். இந்த பயணம் முழுவதும் அனுபவிக்க துணையிருந்தது கூட இருந்த நண்பர்கள் மட்டுமே.. இவர்களில் யாரை பார்க்கும் போதும் அந்த பயணம் நினைவில் நிற்கிறது. நெடுநாட்களுக்கு நான் 7 மலைகளும் தாண்டி..ஒரு கடுமையான பயணத்தை முடித்து விட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. சென்ற வாரம் மறுபடியும் நண்பர்கள் அழைத்திருந்தார்கள்.. வேலை பளு.. போக முடியவில்லை.. எனினும் அந்த மலைபகுதிக்கு இன்னும் ஒருமுறை நிச்சயம் போகவேண்டும்...அப்படி ஒரு சுத்தமான இயற்கை சூழல் எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை..

No comments: