அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, March 25, 2009

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை...

இரண்டு நாட்கள் வார இறுதி சுற்றுலா - இனிதே கழிந்தது. அனுவின் பிறந்த நாள் 21 மார்ச் - அந்த நாளில் வெகுநாள் கனவான கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்று அவள் விருப்பம் தெரிவிக்க - உடனடியாக உருவானது இந்த திட்டம். கிட்டதட்ட ஒரு மாதம் முன்பே பயண திட்டத்தில் உள்வரும் கோவில்கள் மற்றும் இடங்கள் பற்றி திட்டம் இருந்ததால் இணையத்தில் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது - எனினும், சென்று வந்த இடங்கள் மிக நிறைய விஷயங்களை சேகரிக்க உதவியிருக்கின்றன. ரேவதியும் நானும் ரயிலில் திருச்சி சென்று விட்டோம். வெள்ளி இரவு ரயில் 3 மணி நேரம் தாமதம் - அது அவுராவில் இருந்து வரும் ரயில் - எனவே தாமதம் புது விஷயமில்லை. 3 மணி நேரம் எழும்பூர் ரயில் நிலையத்திலேயே கழிந்தது. சும்மா கொஞ்சம் நேரம் நடந்து, தேநீர் அருந்தி, கதை பேசியே நேரம் தள்ளினோம். ரயில் 11 மணிக்கு கிளம்பி திருச்சியை சனி காலை 6 மணிக்கு அடைந்தது. ஒரு காப்பி குடித்து விட்டு (பில்டர் காப்பி பற்றிய சிலாகிப்போடு) நடந்து மதுரா என்ற விடுதியில் தங்கினோம். பேருந்து நிலையத்துக்கு எதிரே இருப்பதால் சாப்பாடு, போக்குவரத்து பிரச்சனை கிடையாது. அனுவும், சுரேஷும் வந்து எங்கள் அறைக்கு வந்த போது - நாங்களும் கிளம்பியிருக்க - முன்பே செய்திருந்த ஏற்பாட்டின்படி கார் காத்திருந்தது. முதலில் தஞ்சை பெரிய கோவில், பின்னர் கங்கை கொண்ட சோழபுரம் - திரும்பி திருச்சி வரும் வழியில் திருவையாறு. அடுத்த நாள் அதிகாலை கிளம்பி திருச்சியில் உள்ள ஒரு அய்யப்பன் கோவில், வயலூர், வெக்காளியம்மன் கோவில், உறையூரில் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயம், பிரம்மா கோவில், உத்தமர்கோவில்,திருவாசி அப்புறம் குணசீலம். பின்னர் மதியம் புதுக்கோட்டையில் குடிமியான்மலை மற்றும் சித்தன்னவாசல். அன்று இரவு மறுபடி சென்னை பயணம்... ஒவ்வொரு கோவில் பற்றியும், பார்த்த விஷயங்கள் பற்றியும் பின்னர் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். நிறைய புகைப்படங்கள் எடுத்தோம் - இந்த முறை என் புகைப்பட அறிவு கொஞ்சம் தெளிவாக இருந்தது போல இருக்கிறது. சில படங்கள் லேப்டாபில் பார்க்கும்போதும் நன்றாகவே இருக்கிறது. வழியெங்கும் நன்னாரி சர்பத், பன்னீர் சோடா, தண்ணீர் பாட்டில்கள் என உள்வாங்கும் அளவுக்கு வெயில் கொளுத்தினாலும் பயணம் மிக அருமை. எங்களுக்கு வாய்த்த ஓட்டுனர் (சிவா) மிகவும் ஒத்துழைத்தார் - எங்கள் கூத்துகளையும் தாண்டி. நிறைய பேசவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வார இறுதியை உருப்படியாக கழிக்கவும் இந்த பயணம் நிறைய உதவியது. பயணம் சார்ந்த மற்ற நினைவுகளை பற்றி ஒரு 10 பதிவாவது எழுதலாம்.. :-)

No comments: