அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Saturday, November 12, 2005
சைக்கிள் ...
சைக்கிள் என் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. முதல் காதலை சொல்லி கொடுத்தது சைக்கிள்தான். அப்போதெல்லாம் சைக்கிள் வாடகைக்கு மட்டுமே கிடைக்கும். 1 ரூபாய் க்கு ஒரு மணி நேரம். ஆனால் 1 ரூபாய் பெரிய பணமானதால் எனக்கு கிடைப்பது நாலணாவும், எட்டணாவுமே. அப்போது எனக்கு சரியாக சைக்கிள் ஓட்ட வராது. என் வயது பயலெல்லாம் சைக்கிளில் வித்தை காண்பிக்க எனக்கு குரங்கு பெடல் கூட வராது. (இன்றைக்கும் அது எனக்கு பெரிய ஆச்சரியம் - எப்படி பேலண்ஸ் பண்ணுகிறார்கள்.) எனக்கு அப்போது ஒரு தோழி இருந்தாள். சங்கீதா. அது எங்கள் இருவருக்குமே காதல் செய்யும் வயது கிடையாது எனினும், ஒரு ஜெனிடிக் ஈர்ப்பு இருவருகுள்ளும் இருந்தது. கொஞ்சம் நெருக்கமான நட்பு. ஒரு வகையான பொஸிசிவ்னெஸ். ஊரெல்லாம் சேர்ந்து சுத்துவோம். இதனால் பசங்களுக்கு என்மேல் காண்டு இருந்தது வேறு விஷயம். அவளிடம் நான் நிறைய ரீல் விட்டிருந்தேன். அதில் ஒன்று எனக்கு பிரமாதமாக சைக்கிள் ஓட்ட தெரியும் என்பது. அவளும் ரொம்ப நாளாக அதனை நம்பியிருந்தாள். ஒருதடவை அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுதரும்படி என்னிடம் அவள் கேட்கும் வரைக்கும் எல்லாம் நன்றாகவே போனது. அவள் கேட்டதும் உலகமே நின்றது போல இருந்தது. எனக்கு தெரியாது என ஒத்து கொள்ள ஆம்பளை மனது கேட்கவில்லை. பசங்களிடம் போய் உதவி கேட்கவும் மனதில்லை (சுலபமாக டீல் விட்டுவிடுவார்களோ என்ற பயம்தான்.) எவ்வளவு தவிர்க்க பார்த்தும் ஒரு ஞாயிற்று கிழமை ஊருக்கெல்லாம் சுகமாகவும் , எனக்கு மட்டும் விவகாரமாகவும் விடிந்தது. ஒரு பெண்கள் சைக்கிள் போன்ற அமைப்புடைய சைக்கிளை அவளும் நானும் தள்ளி கொண்டே குளத்தோர மைதானத்துக்கு போனோம். அவளை ஏறி உட்கார சொன்னேன். இருவருக்குமே நடுக்கம். சைக்கிளில் சீட்டின் நேராக உட்காருவதே ஒரு கலை. அதற்க்குள் கிழே விழுந்து இருவருக்கும் சிராய்ப்பு. அப்புறம் பின்னால் பிடித்து கொண்டு, நேரா பாரு நேரா பாரு என்று கத்தி கொண்டே நாக்கு தள்ள ஓடி, ஒரு வழியாக நிறைய சிராய்ப்புகளுடனும், ஏகப்பட்ட வியர்வைகளுமாக அவள் சைக்கிளை ஓட்டினாள். நான் பின்னாலேயே ஓடினேன் - வேறு என்ன செய்ய முடியும். அப்போதுதான் கற்று கொண்டேன். சைக்கிள் ஓட்ட தெரியாவிட்டாலும் சைக்கிள் சொல்லி கொடுக்க முடியும் என்பதை. ஆனால் விதி வேறு விதமான சதி செய்திருந்தது. வீடு திரும்பும் போது அவளுக்கு காலில் ஏற்பட்டிருந்து சிராய்ப்புகளால் நடக்க முடியவில்லை. காலையில் வரும்போது தூரம் தெரியவில்லை - இப்போது களைத்திருந்ததால் தூரம் அதிகம் போல தெரிந்தது. அந்த கேள்வியை அவள் கடைசியில் கேட்டே விட்டாள் "என்னை வச்சு டபுல்ஸ் கூட்டிட்டு போடா.." - பெண் பிள்ளை கேட்டு மறுக்க முடியுமா..? எல்லாம் ஒரு நம்பிக்கைதான். அவளை கேரியரில் உட்காரவைத்து ஊரில் உள்ள சாமியெல்லாம் மனசில் நினைத்து கொண்டு ரெண்டு அழுத்து அழுத்துவதற்க்குள் பேலன்ஸ் தவறி, சைக்கிளோடு இருவருமே குளத்து சேத்தில் அமிழ்ந்திருந்தோம். எனக்கு நல்ல அடி. அழக்கூட முடியாது - பெண் பிள்ளை முன்னால் அழுவதா..? ஆனால் அவளுக்கு அந்த லஜ்ஜை எல்லாம் கிடையாது. ஓவென கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதனபடுத்துவதா, என் காயத்துக்கு எச்சில் தடவுவதா, பெண்டான சைக்கிள் வீலுக்காக பயப்படுவதா என தெரியாமல் கொஞ்சம் நேரம் பிரமை பிடித்து உட்கார்ந்து இருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழித்து கொண்டு, அவளையும் அழைத்து கொண்டு வீடு சேர்ந்தோம். சரியான திட்டு. எல்லாரிடமும். அவங்க வீடு, என் வீடு போதாகுறைக்கு சைக்கிள் கடைகாரன். கொஞ்ச நாள் அவள் என்னிடம் பேசவே இல்லை. அப்புறம் ஒரு நாள் டூரிங்டாக்கிஸில் இருந்து திரும்பும்போது அவள் ஏதோ பேச, நான் ஏதோ பேச கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு என சீக்கிரம் பழைய நட்பு பற்றி கொண்டது. இன்றும் அந்த பொய்யும், அதற்கு அவளால் கிடைத்த தண்டனையும் மறக்க முடிவதில்லை. பேசாமல் இருப்பது பெரிய தண்டனை - அதுவும் மனதுக்கு இனிய தோழி என்றால்... அப்புறம் பள்ளி இறுதியில் சைக்கிள் நன்றாக ஓட்ட தெரிந்த காலகட்டம் - சாயந்திரம் டைப்பிங் இன்ஸ்டியூட் வழியாக வேகமாக சைக்கிளில் போவது, வளைவில் ஸ்டெயிலாக திரும்புவது, கையை விட்டு விட்டு ஓட்டுவது, வேகமாக திரும்பும்போது தவறுதல் போல பேப்பர்களை தவறவிடுவது.. அதை எடுத்து தரவே அங்கே ஒரு பெண் இருந்தாள். அய்யர் பெண் - பெயர் கூட தெரியாது. ஒரு ரோஜா மட்டுமே அடையாளம். எனினும் இன்னும் யாராவது அய்யர் பெண் தாவணிகட்டி தாண்டி போனால் அவள் அடையாளத்தை மனது தேடுகிறது. வயதுகால பெண் நட்புகளை நெருக்கமாக்கி தந்தது எல்லாமே சைக்கிள்தான். சைக்கிள் பாரில் பெண் உட்கார்ந்து இருக்க அழுத்தி மேடு மிதிக்கும் போது, அவள் கூந்தல் முகத்தில் பரவ, பெயர் தெரியாத பூக்களின் வாசமெல்லாம் நெஞ்சில் நிறையும். திருவிளையாடல் பாண்டியனுக்கு வராத சந்தேகமெல்லாம் வரும். அதனால் தானோ என்னவோ இன்றும் சைக்கிள், சைக்கிளில் செல்லும் பெண்கள் எல்லாம் ஏதோ நினைவுகளை விதைத்தபடியே செல்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment