அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 28, 2005

திரை

சமீபத்தில் படித்த மாத இதழ்.புது பத்திரிக்கை என்று நினைக்கிறேன். சினிமா பற்றிய வெகு இயல்பான விழிப்பான ஒரு பத்திரிக்கையாக நான் இதனை கருதுகிறேன். பொதுவில்

பிலிமாலையாவும், ஜெமினி சினிமாவும், சினிமா எக்ஸ்பிரஸும் போதாக்குறைக்கு விகடனும் குமுதமும் போட்டிபோட்டு கிசுகிசுக்கைளையும், தொப்புள் நடிகைகளையும், களியாட்டங்களையும்,

"இது வித்தியாசமான கதை சார்" போன்ற தலையணை பேட்டிகளையும் மக்களுக்கு சேவையாக கொடுத்துகொண்டிருக்கும் வேளையில் உலக சினிமா பற்றிய ஒரு மாத இதழ் வருவது

வரவேற்புக்கு உரியது. இதுமாதிரியான இதழ்களை முன்னமே கவனித்து இருக்கிறேன். அவற்றின் ஆயுள் சொர்ப்பகாலம்தான். ஒன்று பத்திரிக்கையை நிறுத்திவிடுவார்கள், அல்லது வெகுஜன

பத்திரிக்கைகளின் வழக்கமான அம்சங்கள் சேர்ந்துவிடும். "திரை" எப்படி போகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம். பிரபஞ்சன், ஜெயமோகன், யுகபாரதி, டாக்டர் ஷாலினி,

அருண்மொழி, பாலுமகேந்திரா, லோகிதாஸ், சேரன், டிராஸ்கி மருது, செழியன், சமிரா, வசந்தகுமார் போன்றோர்களின் பங்களிப்புகளில் பத்திரிக்கை கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது.

உலக சினிமாக்கள் பற்றிய விவாதங்கள், அவற்றின் டெக்னிகல் மற்றும் கதை சொல்லும் பாணி பற்றிய பகிர்வுகளும் கட்டுரைகளும் மேலும் பத்திரிக்கையை அற்புதமாக்கும். தமிழ் சினிமாவின்

மறக்கபட்ட மறுக்கபட்ட இயக்குனர்களும், கதை சொல்லிகளும் இந்த பத்திரிக்கை வாயிலாக தொடர்ப்பு கொள்ளலாம். நல்ல சினிமா பற்றிய தெளிவு வருமென்ற நம்பிக்கை தெரிகிறது. பத்திரிக்கை பேட்டிகளின் கருத்துகளில் தைரியம் தெரிகின்றது. கவர்ச்சிபடங்கள் இல்லாத சினிமா பத்திரிக்கை...

கற்பு...

கற்பு... கடந்த சில வாரங்களாக ஜோதிட சிகாமணி, ஆவிகள் உலகம், சிறுவர் மலர் தவிர ஏறக்குறைய எல்லா நாள் வார மாத பத்திரிக்கைகளும் விவாதித்து வரும் விஷயமாகிவிட்டிருக்கிறது. கொஞ்சம் கவனித்து பார்த்தால் பொதுவில் எல்லோரும் தங்களுடைய கருத்துகளை, தங்களின் சுயம் சார்ந்த கருத்துகளை சொல்வது பிடிபடுகிறது. இதில் பொது கருத்து எதுவும் இல்லை. நான் தான் சமூகம் என்ற உணர்வு அவர்களில் கருத்து வெளிப்படும் பாங்கில் தெரிகிறது. மெல்ல மெல்ல பூனைகள் சாக்கில் இருந்து வெளிவருகின்றன. நிஜமான சமூகத்தில் முகம் முகமூடிகளின் அலங்காரமின்றி மெல்ல தெரிகின்றது. "நாங்கெல்லாம் ஒழுக்கசீலர்கள்..." என்ற அரிதாரபூச்சு மெல்ல கலைகிறது. ஒழுக்கம் என்பதின் தெளிவு பற்றிய அறிவு சமுதாயத்தின் பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெளிப்படுகிறது. இதுதான் உண்மை என்பதை மனமார்ந்து ஒத்து கொள்வதில் என்ன தயக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையை பற்றிய ஒரு சர்ச்சையில் எல்லாரும் கொஞ்சம் குளிர்காய்ந்து கொள்கிறார்கள். சல்மா சொல்லியிருந்தது போல " பிரச்சனை கற்பு அல்ல.. சொன்னது யார் என்பது தான்". சர்ச்சைக்குரிய விஷயங்களை சொல்லும் ஆண்கள் போல சர்ச்சைகுரிய விஷயங்களை பேசும் பெண்களை சமூகம் கவனிப்பதில்லை. நிறம் என்றும் வேறுபட்டே இருக்கிறது. கருத்துக்களை விட சொன்னது யார் எந்த சாதி, எந்த மதம் ஆணா பெண்ணா என்ற கவனிப்பில் கருத்தின் உணர்வு மட்டுபடுகிறது. திரைப்படம், மருத்துவம், சட்டம், மற்றும் பெண் இயக்கங்கள் மெல்ல மெல்ல சுயம் பற்றிய புரிதலை, வெளிபடையாக சொல்கின்றன. ஞானி, பாரதிராஜா, டாக்டர் ஷாலினி மற்றும் பலர் பாராட்டுக்கு உரியவர்கள். இவர்களின் கருத்துகளை விட கருத்து சொல்லபட்ட விதமும், என் கருத்து என்ற கர்வமும், தைரியமும் பாராட்டுக்கு உரியவை. சானியா மிர்சாவின் பின்வாங்கலில் மதம் சார்ந்த பயம் தெரிகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பாலுறவு தெளிவு போன்றவை சமுதாயம் வளர வளர சொல்லி கொடுக்கபட வேண்டியவை என்பதில் ஒரு பொதுவான கருத்து இருப்பது நல்லது.

Monday, November 21, 2005

உணவு அதன் ...

பெறும்பாலான ஞாயிற்றுகிழமை காலைகள், சிற்றுண்டி இல்லாமலேயே போய்விடுகின்றன சென்னையில். கோவையில் இருந்தால் சூடாய் இட்லியும் காரமாய் தக்காளி வெங்காய சட்னியும் ஞாயிறு காலையை உன்னதமாகிவிடும். கிராமத்தில் இருந்தபோது, இட்லியும் கறிகுழம்பும் நாக்கில் விளையாடும். சென்னைவாழ்க்கையில், காலை உணவு தவிர்க்கபடுவதால் மதிய உணவு கொஞ்சம் கனமாகவே அமைவதுண்டு. இந்த முறை நண்பர்களுடன் பாண்டிபஜார் அஞ்சப்பர் போக எண்ணித்து நடந்தோம்-அங்கே சாப்பிட வரிசையில் ஏற்கனவே நின்றிருந்ததால், கொஞ்சம் தள்ளி இதுவரை போக்குவரத்தில் மட்டுமே கவனித்திருந்த நெல்லையப்பர் உணவகம் சென்றோம். நண்பர் லோகுவின் கூற்றுபடி அது இயல்பான திருநெல்வேலி பிரியாணி கடை. சிக்கன் பிரியாணியின் சுவையும், சிக்கன் துண்டுகளின் மசாலாவும் வேகவைக்கபட்டிருந்த பதமும் நண்பருக்கு கிராம நாட்களை ஞாபகபடுத்தின. நானும் கொஞ்சம் சுவைத்து பார்த்தேன். திங்களூர் சுவை. அப்புறம் மண்சட்டி மீன்குழம்பு. உறைப்பும், புளிப்பும், பூண்டும் மசாலாவும் சேர்தரைத்த சுகானுபவம். ஊர்புரத்து மீன்குழம்பை நினைவுறுத்தும் சுவை. வெந்த மீன் துண்டு முட்கள் பிரிந்து நாக்கில் கரைகிறது. மொத்தத்தில் அற்புதமான சாப்பாடு. ரசமும் அமிர்தம் ஆனால் தயிர் மட்டும் சென்னை பாலில்... இனி மாதம் இருமுறையாவது ஞாயிறு மதியங்களில் என்னை அங்கு பார்க்கலாம்.

மீன் சாப்பிடுவது ஒரு கலையாக பயிற்றுவிக்க பட்டது என் பாட்டியாலும் அப்பாவாலும். பாட்டி காரமும் உப்பும் கலந்த கலவையை மீன் துண்டுகள் மேல்தடவி மெல்ல குத்திவிட்டு மசாலா இறங்கியதும் பொறித்து எடுத்த மீனில் முள் பிரித்து சதைமட்டும் சேர்த்து உறைக்கும் மசாலாவோடு தருவார். இந்த மசாலா விஷயத்தில் எங்கள் வீட்டில் பணி புரிந்த ஒரு முஸல்மானிய அம்மா வித்தியாசமான சுவையை தருபவர். எனினும் பாட்டி மசாலா எனக்கு பிடித்தமானது. மீனின் சதையை மெல்ல விண்டி, நாக்கின் நுனியில் வைத்தி மெல்ல உறிஞ்சி, பின்னர் நாக்கால் சதையை நிரவி மேலன்னத்தில் மீன் முள்ளை தரம் பிரித்து அதுக்குள் சேர்ந்திருக்கும் மசாலா சுவை உமிழ்நீரை சட்டென விழுங்கி, பின்னர் மீன் முள்ளை உதடு ஓரத்தில் ஒதுக்கி, சதையை சுவைக்கும் கலை அப்பா சொல்லி தந்தது. வேர்கடலை உரிக்கும் வேகமாக கலையும், ஆட்டிறைச்சியின் எலும்பு கடிக்கும் உக்தியும் அப்பாவிடம் கற்ற வித்தைகள்.

உணவு அதன் சுவையை கொண்டும், சமைக்கும் பாகத்தை கொண்டும், பரிமாறும் பரிவை கொண்டும் உறவுகளை நெருக்கமாக்கி கொடுக்கிறது என்பது என் கருத்து. முகம் அறியாத நிறைய உறவுகளை எனக்கு கொடுத்து உணவினால் வந்த உறவுதான். பெரும்பாலான உறவினர் நண்பர் திருமணங்களில் சமையல் அறையில் உள்ள வித்தகர்களிடம் பழக்கம் கொண்டவன் நான். அவர்களின் வாழ்க்கையில் உணவளித்தல் என்பது ஒரு சுவாசம் போல நிறைந்திருந்தது. இன்றெல்லாம் ஓட்டல்களில் வைக்கபடும் திருமணங்களில் உணவு என்பது சம்பிர்தாயமான ஒன்றாகிவிட்டது. ஆனாலும் நம்மை சுற்றி முகம் தெரியாத எத்தனையோ சமையல் வித்தகர்கள் உலகின் பசியை சுவையாயும் பரிவாலும் தீர்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Creative Writing

அமெரிக்க பள்ளிகளில் ஒரு பாடம் "Creative Writing". கற்பனைதிறனை வளர்க்கும் இந்த பாடத்தை போதிக்கும் ஒரு ஆசிரியை இணையத்தில் பழக்கமாகியுள்ளார். அவர் சில கேள்விதாள்களை கொடுத்தார். சில கேள்விகளை அவ்வப்போது கேட்கிறேன்... பதில் சொல்லி பாருங்கள்...சுவரஸ்யமாக இருக்கிறது...

கேள்வி 1: நீங்கள் ஒரு பறவையாக இருக்கவேண்டியிருந்தால் எந்த பறவையாக இருக்க விருப்பம். ஒரு சிறு கவிதை எழுதுக.

கேள்வி 2: உங்கள் வயற்றில் பட்டாம்பூச்சிகளை உணர்ந்த மூன்று சம்பவங்களை சொல்லுக...

எழுதி பாருங்களேன்...இஷ்டமிருப்பின் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...

திருட்டுமாங்காய் சுகம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நண்பனின் வீட்டில் குரூப்ஸ்டடி என்ற பெயரில் குழுமியிருந்தோம். வீட்டில் யாரும் இல்லை. தெரிந்துதான் கூடியிருந்தோம். காரணத்தோடுதான். எல்லாருக்கும் அதுதான் முதல்முறை. ஊர் அடங்கி, மணி இரண்டான பிறகு, சர்வ ஜாக்கிரதையாக "அது" பிரிக்கபட்டு வீடியோ டெக்கில் போடப்பட... சில நிமிஷங்களில் காதுமடல்கள் சூடாகி, என் இதயம் துடிக்கும் ஒலி எனக்கே கேட்கபட, கை காலெல்லாம் ரோமம் சிலிர்த்துகொள்ள, நாக்கு வற்றி மூச்சா வரும் உணர்வு ஏற்பட்டு விட்டது... அது ஒரு குழப்பமான வயது சார்ந்த காலகட்டம். ரொம்ப நாட்களுக்கு அதனை பேசி கொண்டிருந்தோம். இன்றெல்லாம் கிட்டதட்ட 75 வகையான கலைகளுடன் ஆங்கில விளக்கங்களுடன் சர்ரவுண்ட் சவுண்டில் டிவிடியிலேயே வருகிறதாம்... என்ன இருந்தாலும் திருட்டுமாங்காய் சுகம் கிடைக்குமா..

மூன்று நாட்கள்

மூன்று நாட்கள் கோவையில் சந்தோஷம். செல்லமான மழைகாற்றுடன் கூடிய சீதோஷனமும், அம்மாவின் மோர்குழம்பும், மத்தியான தூக்கமும், சூடான காப்பியுடன் சுவையான நண்பர்கள் வட்டமும் மூன்று நாட்களை சில வினாடிகளில் முடிந்த உணர்வுடன் முடித்துவிட்டது. அம்மா ரொம்பவுமே பொறுமைசாலி . என் வெட்டிகதைகளைகளையும் புலம்பல்களையும் ஆர்வத்தோடு கேட்பது கொஞ்சம் கஷ்டம்தான். சின்ன ஊரில் இருக்கும் சுகம் பெரும்நகரங்களில் கிடைப்பதில்லை என்பது என் கருத்து. சொந்த கிராமங்களின் வாழ்க்கையை யாராவது பெருநகரவாழ்க்கையோடு ஒப்பிட முடியுமா..?

என்னை பொறுத்தவரை, பெருநகரங்கள் ஆள்விழுங்கும் வட்டங்களாகவே இருக்கின்றன. மனிதர்களை விட்டில்பூச்சிகளை போல் பணமும், கவர்ச்சியும், ஆடம்பரமும், புகழும் காட்டி ஈர்கின்றன.

கலை, சமுதாய உணர்வு, மனிதாபிமானம், அடிப்படை பண்பு, ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறை இவை எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குழிக்குள் புதைக்கபடுகின்றன.

பயமும், பிரமிப்பும் கலந்த நிச்சயமற்ற, தொழில்நேர்மையற்ற, கலர்கனவுகள் மட்டுமே நகர வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.

பணம் இருந்தால்

பணம் இருந்தால் எல்லாம் முடியும் என்பதற்கு சமீபத்தில் நான் கோவை சென்றிருந்தபோது ஏற்பட்ட ரயில் அனுபவத்தை ஒரு சாட்சியாக கொள்கிறேன். போகும்போது குளிர்சாதனம் செய்யபட்ட அற்புதமான ரயில் பெட்டி, வரும்போது ஒரு டப்பா பெட்டியுல் கழிவறைக்கு அடுத்த கேபினில் படுக்கை. வசதிபடைத்தவர்கள் ரயில் பெட்டியில் எல்லா வசதிகளையும் பெறுகிறார்கள், மேல் பர்த்தில் ஏறும் ஏணி கூட ரப்பர் காப்பணிந்து மெத்துமெத்தென. வசதியில்லதவர்கள் இரும்பு கம்பியில் வழுக்கி கொண்டு இருக்கிறார்கள். தலையனை, போர்வை, விரிப்பு என வசதிபடைத்தவர்களை பார்க்கும் தென்னிந்திய ரயில்வே, வசதியில்லாதவர்களை வெறும் மனிதர்களாக கூட பார்பதில்லை. அடிப்படை சுத்தமும் வசதியும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக வேண்டும்.

இன்னொரு சுவரஸ்யம் எனக்கு. இதுவரை எந்த சாதாரண மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளின் கழிவறைகளிலும் ஆபாசமான படங்களையோ, எழுத்துகளையோ பார்த்ததில்லை, பொதுவான சுத்தம் பேணப்படுகிறது. வசதிபடைத்தவர்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் கழிவறைகளில் எல்லா வகையான ஆபாச படங்கள், வசனங்கள், சமீபத்தில் சில செல்போன் நம்பர்களும் கூட அழைப்புகளோடு எழுதபட்டிருந்தது. மன வக்கிரம் பணம் பார்த்து வருவதில்லையோ... ?

செய்திகளும் சில கருத்துகளும்

நவம்பர் 17 தினமலர் நாளிதழை புரட்டிகொண்டிருக்கும்போது சில செய்திகளை பற்றி தோன்றிய கருத்துகள் இவை.. இதற்க்காக யாரும் திருநெல்வேலிதாண்டி குக்கிராமத்தில் என் மேல் வழக்கு பதிவு செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்..

குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சானியா, நடாலியா கிளினோபோவா, மற்றும் நரேன் கார்த்திகேயன்.
-- எனக்கு தெரிந்து இன்றைய சம்பாரிக்கும் இளைய சமுதாயம் மொத்தமுமே ஆதரவு தெரிவித்துகொண்டுதான் இருக்கிறது ஆனால் வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியம் இல்லாமல். நடுத்தர வயது, வாலிப வயோதிக அன்பர்களுக்கும் ஆதரவு தெரிவிக்க ஆசைதான், ஆனால் இதுவரை என்வென்றே தெரியாத கலாச்சாரமும், மனைவி பயமும், ஆதரவுக்கு முட்டுகட்டைபோடுகின்றன. கிட்டதட்ட 10 ஆண்டுகளில் செக்ஸ் சமுதாயத்தில் குறிப்பாக சம்பாரிக்கும் சமுதாயத்தில் மிக சகஜமான அங்கமாகிவிட்டது. பாதுகாப்பான உடலுறவு என்பதில் ஒரு நடிகை தெரிவித்த கருத்து சரிதான் என்பதில் பலருக்கும் கருத்து இருந்தாலும், தமிழ் கலாச்சாரம் என்ற ஒரு தடையை தாண்டுவதில் திணறல் இருக்கிறது. இதில் 90 சதவீதம் பேருக்கு தமிழ் கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது. இதே சமுதாயம் சினிமாவில் உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாவிட்டால் சினிமா பார்க்காது, முறையற்ற உறவுகளை சொல்லாத நாடகம் பார்க்காது. இன்டெர்நெட்டில் செக்ஸ் தேடாது, குமுதத்திலும் விகடனிலும் தொப்புள் தேடாது, இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் நடக்கும் காம கூத்துகளை தேடிபடிக்காது, நாலு சுவற்றுக்குள் மனதில் விகாரம் காட்டாது ஏனென்றால் நாம் தமிழ் சமூகம்...தமிழ்நாட்டில் முறையற்ற உறவுகளும், செக்ஸ் தேடல்களும், பாதுகாபற்ற உடலுறவும், போதையும் இல்லை என்று யாராவது உத்தமர் சொல்ல முடியுமா..? லஞ்சம் போலவே இதுவும் சமுதாயத்தில் கலந்துவிட்ட வஸ்து. அன்னிய சந்தையை அனுபவிக்க நாம் கொடுக்கும் விலை இது எனினும் ஆதிமுதல் இது இல்லை என்ற முட்டாள்தனமான வாதம் வேண்டாம்.

மேலும் சில செய்திகள்...

11 வயது சிறுவனிடம் 29800 பணம் பறித்த பெண் எஸ்.ஐ கைது.
-- இனிமேல் பணத்துக்கு பாதுகாப்பக யாராவது அன்னிய நாட்டு கம்பெனி தொழில்முறை பாதுகாவலர்களை அமர்த்திகொள்ளவேண்டும். இல்லையேல் பணம் கொண்டு போவதற்கு முன்பு பக்கத்து போலிஸ் ஸ்டேசனில் கணிசமாக லஞ்சம் கொடுத்து யாராவது ரவுடியை பாதுகாப்புக்கு வைத்து கொள்ள வேண்டும்...

"படிக்கவே விருப்பம் எனக்கு. திருமணத்துக்கு நச்சரித்தால் காதலியை கொன்றேன்" எம்பிஏ காதலன் வாக்குமூலம்.
-- இது பற்றி இனி மேலும் செய்திகள், கருத்துகணிப்புகள், கட்டுரைகள் எல்லா பத்திரிக்கைகளும் எழுதும். ஆனால் படிப்பு பற்றி முன்னிருத்திய காதலனை வில்லனாக்கிவிடும் பெண் அமைப்புகள்.

Saturday, November 12, 2005

காதல்

காதல் எப்போதெல்லாம் வருகிறது. பொதுவாக ஆண் பெண் நட்பில் எந்த நிமிடமும் காதல் உருவாகிறது. அது பெரும்பாலும் வெளிப்படுத்தபடுவதில்லை. சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் காரணமாகிறது. காதல் உருவாவதின் காரணங்களை போலவே, வெளிப்படுத்தபடாமல் இருப்பதற்கும் காரணம் பட்டம் கொள்கின்றன. என் அளவில், என் வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் காதல் இங்கனம் உள்நிலையில் தேங்கியிருக்கிறது. சில பெண்களிடம் நான் சொன்னதில்லை எனினும் என் நடவடிக்கைகளை கொண்டு அவள் புரிந்து கொண்டிருக்கலாம். முதல்காதல் போலல்ல தற்போதைய காதல் எல்லாம். முதல் காதலில் முழு ஈடுபாடு இருந்தாலும் காரண அடிப்படையில் இனகவர்ச்சி முன் நின்றது. அழகு என்பது முதன்மைபடுத்தபட்டது. வளர்தலின் சாட்சியாக, காதலில் மெல்ல மெல்ல அழகு தனிமைபட்டும், மனது முதன்மைபட்டும் நின்கிறது. எனினும் உடல்கவர்ச்சி இல்லாத காதல் விவாதம் கொள்ளப்படும் கருத்து. நட்பு காதலாய் உடையும் கணம் அற்புதமானது. ஒரு புன்னகையில், ஒரு தொலைபேசி விவாதத்தில், ஒரு மழைக்கால காலையில், ஒரு மாலைநேர நடத்தலில், ஒரு திரைப்பட காட்சியில், ஒரு சம்மதித்தலில், ஒரு பரிசில், ஒரு முத்ததிலும் கூட... சில நேரங்களில் பிரிவிலும். ஆண்கள் பெண்களாலும் பெண்கள் ஆண்களாலும் வையம் முழுவதும் ஈர்க்கபட்டுகொண்டே இருக்கிறார்கள். இதில் கணக்கு வைப்பது அநாகரீகம். காதல் இல்லாத ஒரு மையபுள்ளியில் வைக்கபடும் உறவுகளுக்குள் பெரும்பாலும் பிணைப்பு இருப்பதில்லை என்பது என் கருத்து. எனக்கு பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்குமாயின், அவளின் ஈர்ப்புகளின் என் கவனமும் இருக்குமாயின் நெருக்கத்தில் விளையும் நட்பு மெல்ல காதலாகி பின்னர் யாரும் சொல்லாமலேயே நினைவுகளாக வாழ்வின் எல்லாம் பக்கங்களிலும் எழுதபடுகிறது.

பிக் பிஷ் ...

பிக் பிஷ் என்று ஒரு திரைப்படம். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் ஆழம் சொல்லும் திரைப்படம். தந்தை மகனுக்கு குழந்தைபருவத்தில் இருந்தே தன்னை பற்றி கற்பனைக்கு தாண்டிய கதைகளோடு வளர்க்கிறார். வாலிபத்தில் மகன் தந்தையின் கதைகளில் உள்ள கற்பனைகளை பற்றி தெரிந்து கொள்கிறான். தந்தையின் எல்லா அனுபவங்களுமே கற்பனைகதைகள் தான் என்ற மனோபாவம் உருவாகிறது. தந்தையின் இறுதிகாலத்தில் அவரின் கற்பனைகளுக்கு உண்மைசம்பவங்களுக்கும் உள்ள பிணைப்பு, மற்றும் அதன் உண்மைகளை உணர்கிறான். சம்பவங்களும் மனிதர்களும் மனதின் ஆழத்தில், கதைகளை மெல்ல மெல்ல உருவாக்குவதை கதை தெளிவுபடுத்துகிறது. இசையும் வசனங்களும் குறிப்பிட வேண்டியவை. திரைக்கதை தேவதை கதைகளின் சாராம்சத்தை கொண்டு இருந்தாலும் காட்சி வரிசை, அமைப்பு மிக இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதாபாத்திரங்கள் இன்னும் ரொம்ப நாளுக்கு மனதில் இருப்பார்கள். கொஞ்சம் யோசிப்பதில் இந்த கதை சொல்லும் மனிதர்கள் நமக்கும் பல சமயங்களில் அறிமுகமாகி இருக்கிறார்கள். பெரும்பாலும் பயணங்களில் - கிராமங்களில் கதைகள் எல்லோருடனும் தோழமையும் உலவுகின்றன. பெரும்பாலும் கதைகளில் கதை சொல்லி ஏதோ ஒருவிதத்தில் பார்வையாளனாக இருக்கிறார் - சில நேரங்களில் கதையின் மையமாக கூட. மனோதத்துவரீதியான விவாதத்தில் பொருந்தும் கருத்து இது. எல்லாருக்கும் கதைகள் இருக்கின்றன. அதில் உணர்வுகள், சம்பவங்கள், சில சமயங்களில் அற்புதமான பொய்கள் எல்லாம் இடம்பெறுகின்றன. மனிதர்களின் மறுபக்கங்கள் சொல்லபடுகின்றன. முற்றிலும் புதிய கதாபாத்திரங்கள் உருவாக்கபடுகிறார்கள் - அவர்கள் கதைசொல்லியின் எண்ண எதிர்பார்ப்புக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். இன்று கதை சொல்ல இயந்திரங்கள் இருக்கின்றன. மனிதமனதின் கதைகள் யாருக்கும் கிடைப்பதில்லை - கேட்பதற்க்கும் இன்னும் சில காலங்களில் யாரும் இருக்கமாட்டார்கள். கதைகள் நம்மை வேறோர் உலகத்துக்கு கொண்டு செல்லும் அற்புதம் பல நேரங்களில் யாராலும் உணர்ந்துகொள்ளபடுவதில்லை. கவிதைகள் வேறோர் உலகம் - கதைகள் வேறோர் உலகம் ஆயினும் மெல்ல விரியும் மனதின் பரிமாணங்களை உணர்தல் சுகம் - வாழும் கணிப்பொறி நரகம் தாண்டிய ஒரு தேவதை உலகம்... என்னை போலவே யாரும் இருந்தால் - பகிர்தலில் சுகம் உணரலாம்...

ஆதிமனிதனின் ...

செய்தி ஊடகங்களை பற்றி ஒரு விவாதம் எழுந்தது இன்று. பொதுவாக செய்தி ஊடகங்களில் நல்ல மங்களகரமான செய்திகளில் சதவிகிதம் 30%க்கும் குறைவாகவே இருக்கிறது. 70% அசந்தர்ப்பமான, வாழ்வின் நிகழ்வுகலில் குலைவுகள் நிகழ்ந்தாலே செய்தியாக்க படுகின்றன. மனிதர்களுக்கு இது மாதிரி ஒரு சுவை ஏதோ ஒரு மீடியத்தின் வழியாக தேவைபடுகிறது என்கிறார் சுஜாதா (கற்றதும் பெற்றதும்). எழுதுவதற்கு ஏதும் இல்லாமல் போகும் ஒரு நேரத்தில் சினிமா நடிகைகளில் வாழ்க்கை, பெண்களின் கற்பு,பெருநகரங்களின் முறையற்ற தனிமனித வாழ்க்கை,அரசியல் பேரங்கள், செக்ஸ் போன்றவை செய்திகளாக்கபடுகின்றன. இது ஜூனியர் விகடன், ரிப்போர்டர் மற்றும் இந்தியாடுடே மற்றும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வெகுஜன பத்திரிக்கைகளுக்கு பரவி வருகிறது. சுஜாதா சொல்வது போல, ஆதிமனிதனின் மன அடிஆழ எண்ணங்களில் சுவைபட இது தீவிரமாக வியாபாரமாக்கபடுகிறது.

கஜினி

சமீபத்தில் கஜினி திரைப்படம் பார்த்தேன். கமர்சியல் திரைப்படம். லாஜிக் எல்லாம் பேசினால் படம் பார்க்க முடியாது. நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் இல்லை - பத்திரிக்கைகள் இதனையே அற்புதமான நடிப்பு என புகழ்கின்றன. நடிப்பின் இலக்கணம் இப்போதெல்லாம் மாறிவருகிறது. உண்மையாக நடித்தெல்லாம் இப்போதைய பார்வையில் ஓவர் ஆக்டிங். இயல்பாக இருப்பது என்ற போர்வையில் நடிக்காமலேயே இருப்பதுதான் நடிப்பு. இயல்பு நடிப்பு பற்றி எல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. வங்கமும், கேரளமும் கமர்சியல் திரைப்படங்களில் கை நனைத்திருந்தாலும் நம்மைபோல முங்கி குளிப்பதில்லை. சொல்ல வருவதை தெளிவாக சொல்லும் பாங்கு இருக்கிறது. இப்போதெல்லாம், சண்டைகாட்சிகள், தெளிவான காமிரா, கொஞ்சம் பதைபதைக்கும் இசை, உள் ஆர்ந்த கவர்ச்சி, ஆணுக்கு நிகரான பெண்கள் (எதில் என்றெல்லாம் கேட்க கூடாது - சில நேரங்களில் ஆணைவிட அதிகமாக)காமெடி என்ற பெயரில் கூச்சலும் கும்மாளமும் என்பதெல்லாம் திரைப்படமாகிவிட்டது. பாலுமகேந்திராவும் விதிவிலக்கு அல்ல போல - புகைபடங்கள் வேறு மாதிரி பேசுகின்றன. கதை என்பது ஒரு வரி விஷயம். வசனம் என்பது அதிபுத்திசாலிதனமாக இருக்க வேண்டும் என்பதாலேயே குழப்பங்கள் கூடியது. எடிட்டிங் என்ற பெயரில் வேகமான புரிதலுக்கு முந்தய பட ஓட்டம். யாருக்காக திரைப்படம் என்பதே புரியவில்லை - எல்லாம் படித்த, உலக படங்கள் பார்க்கும், மேல்தட்டு சமூகத்துக்கு மட்டும் திரைப்படம் என்றால் அவர்கள் உலகபடங்களே பார்கலாமே- தமிழ் படங்களில் என்ன உண்டு விஷேசமாக - உச்சரிப்பு தங்கிலிசை தவிர...

பெசன்ட் நகர் கடற்கரைக்கு

சென்ற முறை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றிருந்த போது, ஒரு சிறுமியை பார்த்தேன். கையில் பட்டங்கள் - நிஜ பறக்கும் பட்டங்கள். வாயில் ஏதோ சினிமா பாடல். எல்லாரிடமும் பட்டம் வாங்க சொல்லி கெஞ்சி கொண்டு இருந்தாள். யாரும் அவளை பொருட்படுத்தவில்லை சிலரை தவிர. குழந்தைகளுக்காக பட்டம் வாங்கினார்கள், சில இளைஞ்சர்களும் வாங்கினார்கள்... அப்புறம் நான் மணலில் உட்கார்ந்து கொண்டேன். நண்பர்களில் கடலில் விளையாடிகொண்டு இருந்தார்கள். சில நிமிடங்களில் அந்த சிறுமி பட்டங்களை ஒரு கையிலும் இன்னொரு கையில் ஏதோ ஒரு பொருளுடனும் கடலில் விளையாடி கொண்டிருந்த இளைஞ்சர்களை கெஞ்சி கொண்டு இருந்ததை கவனித்தேன். அவள் கையில் ஏதோ கடல் விலங்கு - அரைகுரை உயிருடன். நீர்வேகத்தில் கரை ஒதுங்கிவிட்டது போலும்,. அதனை மீண்டும் கடலில் விட சொல்லி எல்லாரிடமும் கெஞ்சி கொண்டு இருந்தாள். இம்முறை சுத்தமாக யாரும் அவளை பொருட்படுத்தவில்லை. அப்புறம் பட்டங்களை மணலில் செருகினாள். உடையை மேலிழுத்து செருகி கொண்டு ஒரு கையில் அந்த மீனுடன் கடலில் இறங்கினாள். மார்பளவு தண்ணீரில் நின்று வேகமாக அதனை கடலினுள் வீசினாள். பட்டங்களை எடுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் - மீண்டும் அதே பாட்டை முனுமுனுத்து கொண்டு. என் வயதில் நான் இப்படி இருந்திருக்கிறேனா..? நிச்சயம் கிடையாது. ஒரு மீனுக்காக கவலைபடும் சிறுமி நிச்சயம் என்னிலும் உயர்ந்தவள். சொல்லபோனால் நம் படிப்பு, சமுதாய பழக்கங்கள் எல்லாம் நம் இயல்பு வாழ்க்கையை மெல்ல நம்மிடம் இருந்து எடுத்து கொண்டன. மிஞ்சி நிற்பது சொஞ்சம் சுயநலமும், நிறைய ஆசைகளும் கவலைகளுமே... மனிதாபிமானம், அன்பு, காதல், பரிதாப உணர்ச்சி, உதவி செய்யும் மனோபாவம் மற்றும் மனித உணர்வுகள் எல்லாம் இருந்தால் அற்புதமான ஒரு பெயர் உங்களுக்கு உண்டு நம் சமூகத்தில் -- இளிச்சவாயன்...

சைக்கிள் ...

சைக்கிள் என் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. முதல் காதலை சொல்லி கொடுத்தது சைக்கிள்தான். அப்போதெல்லாம் சைக்கிள் வாடகைக்கு மட்டுமே கிடைக்கும். 1 ரூபாய் க்கு ஒரு மணி நேரம். ஆனால் 1 ரூபாய் பெரிய பணமானதால் எனக்கு கிடைப்பது நாலணாவும், எட்டணாவுமே. அப்போது எனக்கு சரியாக சைக்கிள் ஓட்ட வராது. என் வயது பயலெல்லாம் சைக்கிளில் வித்தை காண்பிக்க எனக்கு குரங்கு பெடல் கூட வராது. (இன்றைக்கும் அது எனக்கு பெரிய ஆச்சரியம் - எப்படி பேலண்ஸ் பண்ணுகிறார்கள்.) எனக்கு அப்போது ஒரு தோழி இருந்தாள். சங்கீதா. அது எங்கள் இருவருக்குமே காதல் செய்யும் வயது கிடையாது எனினும், ஒரு ஜெனிடிக் ஈர்ப்பு இருவருகுள்ளும் இருந்தது. கொஞ்சம் நெருக்கமான நட்பு. ஒரு வகையான பொஸிசிவ்னெஸ். ஊரெல்லாம் சேர்ந்து சுத்துவோம். இதனால் பசங்களுக்கு என்மேல் காண்டு இருந்தது வேறு விஷயம். அவளிடம் நான் நிறைய ரீல் விட்டிருந்தேன். அதில் ஒன்று எனக்கு பிரமாதமாக சைக்கிள் ஓட்ட தெரியும் என்பது. அவளும் ரொம்ப நாளாக அதனை நம்பியிருந்தாள். ஒருதடவை அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுதரும்படி என்னிடம் அவள் கேட்கும் வரைக்கும் எல்லாம் நன்றாகவே போனது. அவள் கேட்டதும் உலகமே நின்றது போல இருந்தது. எனக்கு தெரியாது என ஒத்து கொள்ள ஆம்பளை மனது கேட்கவில்லை. பசங்களிடம் போய் உதவி கேட்கவும் மனதில்லை (சுலபமாக டீல் விட்டுவிடுவார்களோ என்ற பயம்தான்.) எவ்வளவு தவிர்க்க பார்த்தும் ஒரு ஞாயிற்று கிழமை ஊருக்கெல்லாம் சுகமாகவும் , எனக்கு மட்டும் விவகாரமாகவும் விடிந்தது. ஒரு பெண்கள் சைக்கிள் போன்ற அமைப்புடைய சைக்கிளை அவளும் நானும் தள்ளி கொண்டே குளத்தோர மைதானத்துக்கு போனோம். அவளை ஏறி உட்கார சொன்னேன். இருவருக்குமே நடுக்கம். சைக்கிளில் சீட்டின் நேராக உட்காருவதே ஒரு கலை. அதற்க்குள் கிழே விழுந்து இருவருக்கும் சிராய்ப்பு. அப்புறம் பின்னால் பிடித்து கொண்டு, நேரா பாரு நேரா பாரு என்று கத்தி கொண்டே நாக்கு தள்ள ஓடி, ஒரு வழியாக நிறைய சிராய்ப்புகளுடனும், ஏகப்பட்ட வியர்வைகளுமாக அவள் சைக்கிளை ஓட்டினாள். நான் பின்னாலேயே ஓடினேன் - வேறு என்ன செய்ய முடியும். அப்போதுதான் கற்று கொண்டேன். சைக்கிள் ஓட்ட தெரியாவிட்டாலும் சைக்கிள் சொல்லி கொடுக்க முடியும் என்பதை. ஆனால் விதி வேறு விதமான சதி செய்திருந்தது. வீடு திரும்பும் போது அவளுக்கு காலில் ஏற்பட்டிருந்து சிராய்ப்புகளால் நடக்க முடியவில்லை. காலையில் வரும்போது தூரம் தெரியவில்லை - இப்போது களைத்திருந்ததால் தூரம் அதிகம் போல தெரிந்தது. அந்த கேள்வியை அவள் கடைசியில் கேட்டே விட்டாள் "என்னை வச்சு டபுல்ஸ் கூட்டிட்டு போடா.." - பெண் பிள்ளை கேட்டு மறுக்க முடியுமா..? எல்லாம் ஒரு நம்பிக்கைதான். அவளை கேரியரில் உட்காரவைத்து ஊரில் உள்ள சாமியெல்லாம் மனசில் நினைத்து கொண்டு ரெண்டு அழுத்து அழுத்துவதற்க்குள் பேலன்ஸ் தவறி, சைக்கிளோடு இருவருமே குளத்து சேத்தில் அமிழ்ந்திருந்தோம். எனக்கு நல்ல அடி. அழக்கூட முடியாது - பெண் பிள்ளை முன்னால் அழுவதா..? ஆனால் அவளுக்கு அந்த லஜ்ஜை எல்லாம் கிடையாது. ஓவென கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதனபடுத்துவதா, என் காயத்துக்கு எச்சில் தடவுவதா, பெண்டான சைக்கிள் வீலுக்காக பயப்படுவதா என தெரியாமல் கொஞ்சம் நேரம் பிரமை பிடித்து உட்கார்ந்து இருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழித்து கொண்டு, அவளையும் அழைத்து கொண்டு வீடு சேர்ந்தோம். சரியான திட்டு. எல்லாரிடமும். அவங்க வீடு, என் வீடு போதாகுறைக்கு சைக்கிள் கடைகாரன். கொஞ்ச நாள் அவள் என்னிடம் பேசவே இல்லை. அப்புறம் ஒரு நாள் டூரிங்டாக்கிஸில் இருந்து திரும்பும்போது அவள் ஏதோ பேச, நான் ஏதோ பேச கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு என சீக்கிரம் பழைய நட்பு பற்றி கொண்டது. இன்றும் அந்த பொய்யும், அதற்கு அவளால் கிடைத்த தண்டனையும் மறக்க முடிவதில்லை. பேசாமல் இருப்பது பெரிய தண்டனை - அதுவும் மனதுக்கு இனிய தோழி என்றால்... அப்புறம் பள்ளி இறுதியில் சைக்கிள் நன்றாக ஓட்ட தெரிந்த காலகட்டம் - சாயந்திரம் டைப்பிங் இன்ஸ்டியூட் வழியாக வேகமாக சைக்கிளில் போவது, வளைவில் ஸ்டெயிலாக திரும்புவது, கையை விட்டு விட்டு ஓட்டுவது, வேகமாக திரும்பும்போது தவறுதல் போல பேப்பர்களை தவறவிடுவது.. அதை எடுத்து தரவே அங்கே ஒரு பெண் இருந்தாள். அய்யர் பெண் - பெயர் கூட தெரியாது. ஒரு ரோஜா மட்டுமே அடையாளம். எனினும் இன்னும் யாராவது அய்யர் பெண் தாவணிகட்டி தாண்டி போனால் அவள் அடையாளத்தை மனது தேடுகிறது. வயதுகால பெண் நட்புகளை நெருக்கமாக்கி தந்தது எல்லாமே சைக்கிள்தான். சைக்கிள் பாரில் பெண் உட்கார்ந்து இருக்க அழுத்தி மேடு மிதிக்கும் போது, அவள் கூந்தல் முகத்தில் பரவ, பெயர் தெரியாத பூக்களின் வாசமெல்லாம் நெஞ்சில் நிறையும். திருவிளையாடல் பாண்டியனுக்கு வராத சந்தேகமெல்லாம் வரும். அதனால் தானோ என்னவோ இன்றும் சைக்கிள், சைக்கிளில் செல்லும் பெண்கள் எல்லாம் ஏதோ நினைவுகளை விதைத்தபடியே செல்கிறார்கள்.

தீபாவளி...

தீபாவளி விவகாரமாக விடிந்தது இந்த முறை. அலுவலகத்தில் மூன்று மாதத்துக்கு முன்பு ( நான் வேலைக்கு சேரும் முன்னர்) ஆரம்பித்த ஒரு தொல்லைக்கு யாரும் இல்லாத காரணத்தால் நான் பதில் சொல்ல ஆரம்பிக்க அது முடிவில் காலை சுற்றிய பாம்பாகிவிட்டது. நேரம் 12:40 மேல் ஆகிவிட்டதால் உணவு இல்லை - கிடைத்த ஆப்பத்தை சாப்பிட்டு விட்டு, வீடு தேடி வந்தால், வேலைக்கார அம்மாளின் கைங்கரியத்தில் கதவில் ஆட்டோலாக் சிக்கி கொண்டிருக்க நண்பர்கள் தெருவில் நின்றிருந்தார்கள். தெரிந்த நண்பர்கள் எல்லாரும் தீபாவளிக்கு ஊருக்கு போயிருந்ததால் உதவிக்கு ஆளில்லை. பாண்டிபசார் வரை நடந்தோம். ஓட்டல்களில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் - வெளியூர்காரகளுக்கு ஓட்டல் அறை இரவில் கிடைக்காதாம் - அப்புறம் எதற்கு ஓட்டல் என்று தெரியவில்லை. நேரம் ரொம்ப ஆகிவிட்டதும் ஒரு காரணம் என்றார்கள். அப்புறம் ஒரு சின்ன அறை கிடைத்தது. அத்தகைய அறையை நான் பார்த்தே இல்லை. 'ஏதேதோ' நடக்கும் இடம் போல. அதுக்கு ஆயிரம் கேள்விகள். அலுவக ஐடி கார்டு வாங்கி வைத்து கொண்டார்கள். மூன்று பேர். குப்பையான மெத்தைகள், அழுக்கான அறை. சத்தம் போடும் மின்விசிறி. கைகுட்டையை கண்ணில் கட்டிகொண்டு வலுகட்டாயமாக கண்களை மூடி கொண்டு தூங்க முயற்சி செய்ததிலேயே விடிந்து விட்டது. 8:45 க்கு ஒரு பூட்டு ரிப்பேர்காரனை அள்ளி கொண்டு வந்தால் அவன் ஒரு கம்பியில் 10 தேய்ப்பும், 4 தீக்குச்சிகளும் செலவு செய்து 20 நிமிடத்தில் கதையை முடித்து விட்டான். ஒரு தேனீர் குடித்து விட்டு, 9:30க்கு தலைக்கு எண்ணைவைத்து குளித்து, சென்ற முறை கோவை சென்றிருந்த போது எடுத்த புது துணியை அணிந்து கொண்டு நட்பு வட்டம் எல்லாம் கூப்பிட்டு, வாழ்த்து சொன்னேன். உணவு விடுதிகள் இல்லாததால் மதிய உணவும் சேர்த்து 1 - 1/2 நான் - காளான் மசாலாவில். இரவு - இருக்கவே இருக்கிறது மாகி நூடுல்ஸ். கொஞ்சம் டிவிடி திரைப்படங்கள், கொஞ்சம் தூக்கம், முடிந்தே விட்டது தீபாவளி. நாளைக்கு மறுபடியும் அலுவலகம்... இயந்திர வாழ்க்கை... தீபாவளி சாக்கிலாவது நட்பு வட்டங்களில் ஆழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. என்னதான் மின் அஞ்சலும், இணைய வழி வாழ்த்துக்களும் இருந்தாலும், நேரில் வாழ்த்து சொல்லும் சுகம் அலாதி.

பள்ளியின் கதவுகளில்...

கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் பழைய மாணவர் பேரவை 25 ஆண்டுகளுக்கு முந்திய மாணவர்களை மீண்டும் கலந்துரையாட செய்து அற்புதமான ஒரு முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இப்போதெல்லாம் மாதம் இருமுறை வைக்கிறார்கள் என நினைக்கிறேன். பழைய நண்பகளை அதுவும் நெடுநாட்களுக்கு பிறகு சந்திப்பது அற்புதமான விஷயம். நானும் என் பள்ளி நண்பர்களை அப்படி சந்தித்து இருக்கிறேன். 8ஆம் வகுப்பில் இருந்து ஒரு பழக்கமாக பள்ளி குழு புகைபடங்களின் பின்புறம் வரிசைவாரியாக பெயர்களை எழுதிவைப்பதை பழக்கமாக கொண்டதினால் இன்னும் புகைபடங்கள் பார்க்கையின் பெயர்கள் நினைவிருக்கிறது. இந்த பழக்கத்தை சொல்லிகொடுத்த தமிழ்அய்யாவுக்கு என்றும் நன்றி சொல்வேன். ஆயினும் சிலரை எங்காவது எத்தோசையாக பார்க்க நேரிடும் போது பெயர் தொண்டையில் சிக்கி கொள்கிறது. ஆரம்ப பள்ளி தோழர்களை சில முறை கிராமத்துக்கு போகும்போது சந்திப்பதுண்டு. முருகன் என்றொரு நண்பர் - அருணாச்சலம் மளிகை கடை வைத்திருக்கிறார். திங்களூர் - பெருந்துறை பகுதியில் ஒரு சின்ன ஊர் (இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது - கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருவதற்கு சான்றாக). எனக்கு வீடு தாண்டிய உலகத்தை அறிமுகம் செய்த ஊர். சோளக்காட்டுக்குள் பயமுறுத்தும் அய்யனார் கோவில், ஆரம்ப பள்ளி கூடத்தின் திண்ணைகள் கட்டிய வகுப்பறைகள், யாரோ ஒரு மாணவன் எழுதிய இன்றைய மாணவர் பதிவு மற்றும் யாரோ ஒரு ஆசிரியர் சொல்லி கொடுத்த பாடத்தின் அழிக்கபட்டாத மிச்சங்களுடன் கூடிய கரும்பலகை, கொடி ஏற்றும் மைதானம், சந்தை பகுதி, ஊருக்கு வெளியே வருடம் ஒரு முறைமட்டுமே கதவு திறக்கபடும் இருண்ட கோவிலுன் கல் மண்டபங்கள் எல்லாம் என்னுடன் வரும்போது அவர் ஆச்சரியமாக பார்ப்பார். இதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை என்பார். அவர் மனைவி அற்புதமான சமைப்பவர். ஊர் திரும்பும் வரை நாக்கினடியில் சுவைக்கும் கோழி குழம்பு. இரண்டு அற்புதமான குழந்தைகள் - அதே ஓட்டு பள்ளியில் படிக்கின்றன (அடுத்த வருஷம் பெருந்துறைல படிக்க வைக்கணும்...என்பார் அடிக்கடி). என்னோடு நான் பொருத்தி பார்க்கும் நண்பர்கள் குழாமில் முருகனின் வாழ்க்கை என்னை பொருத்தவரை அற்புதமான உலகம். அவனுக்கு என் உலகம்தான் அற்புதம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற சொல்வழக்கு போல. சில நண்பர்களை மறுபடியும் பார்க்கவே முடியவில்லை. ஆறுமுகம் என்றொரு நண்பன் - 3ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தோம். பள்ளி சுற்றுலாவில் மைசூர் போனோம். 3 நாட்களும் கைகளை கோர்த்து கொண்டே(தொலைந்து போகாமல் இருக்க...) சாப்பாடு, தூக்கம், பெரிய சர்ச், பிருந்தாவனம், ஏதேதோ இடங்கள்... இன்று நினைக்கையில் வாழ்க்கையின் முடிந்த பகுதியின் சந்தோஷங்கள் இனிக்கின்றன. வருத்தங்கள் ? - வழக்கம் போலவே....

ஆட்சி மாற்றம்...

NDTVல் நம் ராணுவவீரர்களோடு நட்புமுறை பயணமாக பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் வந்து உறவாடுவதை சென்ற முறை கோவை சென்றிருந்த போது காண முடிந்தது. நிறைய ராணுவவீரர்கள் நன்றாக பாடுகிறார்கள். தாய்பாஷையில் பற்றோடு இருக்கிறார்கள். பிடிவாதமாக அதிலேயே பேசுகிறார்கள். ஆட்டமும் உண்டு. தன் இனத்தின் பாரம்பரிய நடனத்தை அற்புதமாக (கொஞ்சம் வெட்கத்தோடு) ஆடுகிறார்கள். குடும்பம் என்ற ஏக்கம் பலருக்கும் இருப்பதை காண முடிகிறது. அவர்களின் வாழ்க்கை முறையோடு பொருத்தி பார்க்கையில் ஏதோ நாம் மாதம் ஒருமுறையாவது குடும்பத்தோடு உறவாடுகிறோம். பேசுகிறோம். உத்திரவாதமில்லாத வாழ்க்கையில் அவர்கள்... உத்திரவாதம் தரமுடியாத வலுக்காட்டாயமான வாழ்க்கைமுறையில் நாட்டுமக்கள்... ஒரு இந்திய ராணுவ கணக்கெடுப்பில் 68% வீரர்கள், ராணுவம் நாட்டை ஆளவேண்டும் என சொல்லியிருப்பதாக படித்தேன். கலாம் போன்ற குடியரசுதலைவரின் ஆட்சியில் ராணுவம் ஆட்சி பொறுப்பேற்குமாயின் ... மாற்றம் நிச்சயம் வரலாம்.

சென்னையில்...

சென்னைக்கு வந்து சென்ற Oct 21ஆம் தேதியோடு 1 மாதம் முடிந்துவிட்டது. இந்த ஒரு மாதம் ஓரளவில் சென்னையின் வாழ்க்கைமுறைக்கு என்னை பழக்கபடுத்தியுள்ளது. அலுவகம் ஆழ்வார்பேட்டையிலும், தங்கியுள்ள இடம் வடக்கு உஸ்மான் ரோட்டிலும் இருக்க பஸ்ஸும் ஆட்டோவும் கொஞ்சமாய் பழக்கமாகியுள்ளது. உணவு கடைகள், பத்திரிக்கைகள் கிடைக்கும் இடங்கள், Browsing Center, மருந்து கடைகள், ஞாயிறு பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவையும் கொஞ்சமாய் தெரிந்துள்ளன. எனினும் பெருநகரங்களின் வாழ்க்கைவேகம் இன்னும் பிடிபடவில்லை. கோவை மேலும் நெடுநாட்களுக்கு சொர்க்கமாகவே தோன்றும். நிறைய கூட்டம், நிறைய வெயில், மழை வந்தால் தெருவெல்லாம் மூழ்ங்கி போகும் அவலம், கொஞ்சமும் மரியாதை இல்லாமல் தெனாவெட்டாகவே பேசும் மக்கள் சமூகம், அர்த்தமில்லாத வண்டி ஓட்டும் லாவகம், பேஷன் என்ற சொல்லின் தப்பார்த்தமான உடையலங்காரங்கள், எங்கு போவதாக இருந்தாலும் ஆர்காடு நவாப் அளவுக்கு சொத்து இருந்தால்தான் போகமுடியும் என்பது போல சார்ஜ் கேட்கும் ஆட்டோகாரர்கள் என சென்னை இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதி மக்களும், பெருநகரத்தின் வாழ்க்கைமுறையில் தீப்பெட்டிகுள் அடைபட்ட பொன்வண்டு போல இருந்து கொண்டே இருக்கிறார்கள். சொந்த ஊரின் ஞாபங்களை, என்றேனும் ஒரு நாள் என் ஊருக்கே போய்விட போகிறேன் என்ற எண்ணங்களை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இனி தொடர்ச்சியாக எழுத முடியும் என நினைக்கிறேன். மத்திய அரசின் சுலபவிலை கணிப்பொறி திட்டம் மூலமாக 1 மாதத்தில் கணிப்பொறிக்கு குறிவைத்துள்ளேன். இணைய இணைப்பும் கிடைக்கும். Browsing Centerல் unicode அமைத்துள்ளேன். அது Windows 98. எனினும் சில இணைய நண்பர்களின் உதவியால் unicode அமைக்க முடிந்துள்ளது. எழுத நிறைய உள்ளது - காலை நேரங்களை உபயோகபடுத்தலாம். அலுவத்தில் நெருக்கல்கள் ஏற்படாதவரை.