அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

தமிழா..! தமிழா..?

"கற்றது தமிழ்" - முதலில் என் மனதில்பட்ட ஒரு விஷயம் - அழகான திரைப்படம். நல்ல இசை அமைப்பு, நல்ல வசனங்களும் பாடல்களும், நல்ல ஒளிப்பதிவு - எல்லாம் கொண்டு நல்ல ஒருங்கிணைப்பு. திரைப்படம் பற்றிய விமர்ச்சனங்களை பல இணைய தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் எல்லாரும் படித்திருக்கலாம் - பல பரிமாணக்களை கொண்ட கருத்துகளை கூட நான் கவனித்தேன். என்னை பொருத்தவரை ஒரு பின்நவீனத்துவ அடிப்படை உணர்வை நான் கதை சொல்லும் பாணியில் கவனித்தேன். மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் பயணம் செய்கின்றன - காதல், தேடல், தன்னுள் தொலைந்து போதல் என்னும் வேறு வேறு பரிமாணம் கொண்ட உணர்வுகள் பதிவு செய்யபட்டுள்ளன. ஒரு மனநோயாளின் பயணங்களை, நான் பார்த்த எந்த திரைப்படத்தையும் விட இக்கதை அருமையாக பின் தொடர்ந்து உள்ளது. தமிழ் சார்ந்த படிப்பு மட்டுமே கதாபாத்திரத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று வலியுறுத்தபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை - அவன் பொருளாதாரம் மற்றும் சுய ஒழுக்க குழப்பங்கள் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறது. காசு இருந்து தனிமையும் இருந்தால் - எந்த சாமியும் கொஞ்சம் சாராயமும் கறியும் பெண்ணும் கேட்கும்.
தமிழ் வாத்தியார் வேலையும் அதன் குறைந்த பொருளாதாரமும் ஒரு பின்புலமாகவே நான் கொள்கிறேன். போலீஸ் பிரச்சனையில்தான் அவன் ஓட்டம் ஆரம்பிக்கிறது - அதற்கு காரணம் ஒரு போலிஸ் அதிகாரியின் பெண் வேட்கை - அந்த பிரச்சனையில் இருந்து அவன் வெளிவர முடியாமைக்கு அவன் பொருளாதாரம் என்ற லேசான பின்புலம் - அதற்கு பிறகு வருவதெல்லாம் நாடகம். மற்றொரு பரிணாமமாகிய - அவனுக்கும் அவளுக்கு உள்ள காதலும், அவனுக்கும் அவன் தமிழ் வாத்தியாருக்கும் உள்ள நட்பும், அவன் பயணங்களும் - மிக அற்புதமாக கவிதைகள். காதலை உள்கொண்ட ஆணும் பெண்ணுமாய் உயிர் அலைகிறது. கதை அமைப்பின் உறுத்தல்களாய் கொஞ்சம் ஒப்பனையும் உடையலங்காரங்களும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மரணங்களால் அறிமுகபடுத்தி கொள்ளும் பாத்திர நேர்த்தியும், குழந்தை வாழ்க்கைக்குள் தொலைந்து போகும் குணமும், சின்ன சின்ன சிறுகதை அமைப்புகளை போன்ற கதை அமைப்பும் - ஒரு நாவலை உணரும் அனுபவம் எழுகிறது. ஒரு நிமிடம் இந்த திரைப்படம் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து பதிவு செய்யபடும் அனுபத்தை யோசிக்கும் போது - மிக அற்புதமான கதை களம் விரிகிறது. தமிழ் ஆசிரியரின் பார்வையில் வேறு ஒரு கோணம். என் மற்ற பதிவுகளிலும் இந்த திரைப்படம் பற்றிய சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன். மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக ராமை நான் சிந்திக்கிறேன். இந்த திரைப்படம் நிறைய யோசிக்கவும் நிறைய பேசவும் வைக்கிறது - அது நிச்சயம் தமிழ் படித்த அவலம் பற்றி அல்ல. மனித வாழ்க்கை பற்றி - எதிர் கோண சிந்தனைகள் பற்றி, உறவுகள் பற்றி, உணர்வுகள் பற்றி - இன்னும் நிறைய. என்னை பொருத்தவரை - இன்னும் செய்திருக்கபட வேண்டிய நிறைவான திரைப்படம்.

No comments: