நிறைய பேருக்கு இருப்பதை போல எனக்கு விளையாட்டுகளில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆறாம் வகுப்பிலேயே கண்-கண்ணாடி அணிந்ததால் கூட இருக்கலாம். பள்ளி காலங்களிலும் எந்த விளையாட்டுகளிலும் நான் கலந்து கொண்டதில்லை - கோ-கோ மற்றும் கிரிகெட், பேஸ்பால் ஆகியவை மணி உயர்நிலை பள்ளி கோவையிலும், பொதுவான கபடி போன்ற விளையாட்டுகள் கல்பாக்கத்திலும் இருந்த போதிலும், என் பங்கேற்பு மிக சொற்பம்தான் - அதுவும் நிர்பந்த அடிப்படையில். கூடை பந்து விளையாட்டு காலங்களின் காரணங்கள் வேறு...
ஆர்வம் குறைவாக இருந்தபடியினால், பத்திரிக்கைகளிலும் விளையாட்டு செய்திகளில் மனம் லயித்ததில்லை. எனினும் ஒரு திரைப்படம் என் கருத்துகளை கொஞ்சம் மாற்றியுள்ளது. அது பெண்களின் ஹாக்கி விளையாட்டு பற்றிய ஒரு திரைப்படம். கொஞ்சமும் வியாபாரதனம் கலக்காத ஒரு ஹிந்தி திரைப்படம் - இத்தனைக்கும் மொழியின் உச்ச கதாநாயகனை கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம். யாரும் யூகிக்கும் 15 நிமிட உச்ச கட்ட காட்சியை கூட மிக திறமையான முறையில் அமைத்திருக்கும் பாங்கு அருமை. சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் - ஒரு உதாரணம் - தேர்ந்தெடுத்த குழு பெண்களின் கண்களில் தெரியும் வேகமும் உணர்வும். ஆட்டமும் பாட்டும் இல்லை - ஒரு பாடல், நிச்சயம் கொஞ்சம் உணர்வுகளில் தங்கும் இசையும் தாளமும் கொண்டது... வெற்றி என்பது குழு முயற்சி என்பதை அழகாக உணர்த்தும் மேலாண்மை விஷயங்களை சொல்லும் முறையில் சொல்லியிருக்கிறார்கள்.
ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் இத்தகைய திரைப்படங்கள் பார்க்கும் போது.. - தமிழில் இப்படி படங்கள் வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம் - நான் சொல்வது வியாபாரதனம் இல்லாத, விளையாட்டு, குழு முயற்சி, உணர்வு ரீதியான உறவுகள்... என பேசும் திரைப்படங்கள். திரைப்படம் எடுக்க சிலர் தயார் எனினும், வெற்றி தோல்வி பற்றிய கவலை தடுக்கிறது...
வெற்றி தோல்வி - இரண்டுக்கு பின்னாலும் முயற்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது மதிக்கபடும் விதத்தை வெற்றியோ தோல்வியோதான் நிர்ணயம் செய்கிறது... வெற்றி என்றால் தலையில் தூக்கி ஆடுவதும், தோல்வி என்றால் மண்ணில் மிதிப்பதும் காலங்காலமான முட்டாள்தனங்கள்.. எதற்கும் பின்னால் உள்ள முயற்சி என்பது மதிக்கபடும்மாயின், அங்கு மலர்கிறது மனித மனங்களின் புத்திசாலிதனமான உணர்வுகள்...
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment