பெங்களூர் பயணமும் அலுவக வேலைகளும் கைகளை கட்டி போட்டு விட்டன. பயணத்தில் சொல்ல நிறைய இருக்கிறது. நீண்ட ரயில் பயணம். ரிசர்வேஷன் செய்திருந்ததால் இம்முறை உட்கார சிரமம் இல்லை. எவ்வளவு நேரம்தான் ஜீனியர் விகடனும், குங்குமமும் படிப்பது... ரயில் ஜன்னல் ஒரு அற்புதமான புத்தகம். நிறைய படிக்கலாம். எத்தனை மனிதர்கள்....இன்னும் வயலில் உழுது கொண்டு.... இன்னும் காட்டு வேலை செய்து கொண்டு... இன்னும் சுள்ளி பொறுக்கி கொண்டு... எத்தனை குழந்தைகள் இன்னும் ரயில் செல்பவர்களுக்கு டாடா காட்டிகொண்டு.. பாவம்..
அவர்களுக்கு திரும்ப யாரும் டாடா காண்பிப்பதில்லை.. ஆனாலும் அந்த குழந்தைகள் எல்லா ரயில்களுக்கும் இன்னும் டாடா காட்டிகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் விடியாத கிராமங்கள் எத்தனையோ.. ஆனாலும் இரவில் ஏறக்குறைய எல்லா கிராமங்களிலும் டிவி அவர்களுக்கு எட்டாத நிறைய கனவுகளை காட்டி ஏமாற்றி கொண்டுதான் இருக்கின்றது. டூரிங் டாக்கீஸ் சினிமாக்களில் தங்கள் ஏக்கங்களை தொலைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்... தருமபுரி ரயில் நிலைய பிளாட்பாரமில் வடியும் குழாய் தண்ணீரை மட்டுமே குடித்து வயிறு நிரப்பி கொண்டலையும் நாடோடி கும்பல்கள்... அவர்களின் குழந்தைகளுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்... என்னுடன் "Java Certification" எழுதுவதற்காக பயணம் செய்த ஒருவர்.. "இவர்களுக்கு நம்மை போல கவலைகள் இருக்கமுடியாது" என்றார்.. நமக்கு நிறைய தேவைகள்.. அதனால் கவலைகள்.. அவர்களின் தேவை தெளிவானது.. கொஞ்சம் உணவு.. அதற்க்கான உழைப்பு.. அப்புறம் குடும்பமும் குழந்தைகளும்.. ஜாவா, .னெட், லட்சங்களில் சம்பளம், அழகான மனைவி, கிரடிட்கார்ட் வாழ்க்கை, வெளினாட்டு கார், உயர்தர உணவகம், வெளினாடுகளில் வாரவிடுமுறை...எதுவும் அவர்களுக்கு கிடையாது.. எனவே.. கவலைகளுக்கும் அளவுண்டு.
பெங்களூர் ஆனந்தராவ் சர்க்கிளில் ஷீத்தல் விடுதியில் தங்கியிருந்தேன். போன வேலை முடிந்ததும்.. இரவு நேர பெங்களூர் இரு கரங்களுக்குள் என்னை அணைத்து கொண்டது. நிறைய பணம், நிறைய டெக்னாலஜி, நிறைய கவலை, நிறைய டென்ஷன், நிறைய பார்கள், நிறைய பெண்கள், நிறைய குறைபாடுகள்... அவர்களது உடையிலும் என்னுடய மனதிலும்.. இன்னும் அவ்வளவு பக்குவம் வரவில்லையோ என்று நினைப்பதுண்டு. என்ன செய்யலாம்...வயசு அப்படி...ஆனால் இன்னொரு பக்கம்... "ஆண்கள் இல்லாத உலகில் பெண்கள் இங்கனம் உடையணிவார்களோ.. ?" என்ற கேள்வி எழும்.. பெண் பார்க்க சாகசம் செய்யும் ஆணுக்கும்... ஆண் பார்க்க சாகசம் செய்யும் பெண்ணுக்கும் ... முறைகள் வேறுபட்டிருப்பினும்...காரணம்
ஒன்றுதானோ..?
ஆண் பெண் சுதந்திரம் தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது என்ற கருத்து சில நேரங்களில் புலப்படுகிறது. ஏறக்குறைய நிறைய பெண்கள் மதுபானங்களை சுவைக்கிறார்கள். ஆண் நண்பர்கள் இல்லாதது சமூககுறைபாடாக தெரிகிறது... மதுரையிலும் கோவையிலும் இருந்து புதியதான சமூகத்தில் அடியெடுத்து வைக்கும் நண்பர்கள் சுலபமாக வசப்படுகிறார்கள்.. மல்டிநேஷனல் நிறுவனங்கள் மனிதர்களை சுலபமாக பிழிந்து சாறு எடுக்கின்றன. காய்ந்த சறுகுகள் தங்களை மீண்டும் உய்வித்துகொள்ள இங்கனம் மாயவலையில் மிக சுலபமாக சிக்கி கொள்கிறார்கள். மிக சிலரே தரம் தெரிந்து தன்னை அறிந்து அடுத்த நிலைக்கு தங்களை உயர்த்தி கொள்ள ஆர்வமும் முயற்சியும் கொள்கிறார்கள். மற்றவர்களின் உடலும்
மனமும் பிழிந்து வீசப்பட்டு இருக்கிறது... அவர்களுக்கு மகிழ்ச்சி.. உயர்தல் என்பது வேறு சமூகம்...அப்பனுக்கும் பாட்டனுக்கும் கிடைக்காத சம்பளம்..தனக்கு கிடைத்தவுடன்..உலகம் காலுக்கடியில் இருக்கும் உணர்வு.. பாலகுமாரன் ஒருமுறை எழுதினார். ' பளபளக்கும் ராஜ உடைவாள்... பார்பதற்கு கம்பீரமும், கலவரம் கொடுக்கும்.. எல்லாம் கையில் எடுத்து பார்க்கும் வரைக்கும்.. கையில் எடுத்ததும் தலைக்கும் மேல் உயர்த்தி பார்க்க நினைக்கும் மனது... ' மனதின் வேகமும் தன்னிலை இழக்கும் திறனும் இதனைவிட அருமையாக யாரும் சொல்ல முடியாது. சில நேரங்களில் இது ஒரு புலம்பல் போலவும் உள்ளது... 'உனக்கு கிடைக்கல .. புலம்பற.. ' என்றும் கூட சொல்லலாம். விவாதங்களுக்கு வரவேற்ப்பு உண்டு. விமர்ச்சனங்களை எதிர்கொள்வதிலேயே தன்னையறிதல் சாத்தியப்படும்.
சாப்பிட புதியதாக ஒரு இடம் கண்டுபிடித்தாகிவிட்டது. ஒரு ஆந்திரா மெஸ்... நல்ல சுவை காரம்.. உடம்பை கெடுக்காத உணவு. NASA என்றொரு பப். புத்தம் புதிய பியர் கிடைக்கிறது.. ஆண்கள் பெண்கள்.. தண்ணீர் குடிப்பதுபோல குடிக்கிறார்கள்..பக்கத்தில் இருந்து பேசினால் கூட கேட்டாத அளவுக்கு மேற்கத்திய இசை.. வளைந்து வளைந்து ஆடும் பெண்கள்..இன்றுதான் கடைசி என்பதுபோல துடிக்கும் ஆண்களின் ஆட்டம்..2 மணி நேரம் கழித்து வெளியில் வந்து நின்றபோது...தருமபுரி ரயில் நிலைய நாடோடி கும்பல் நினைவுக்கு வந்தது... இவர்கள் அவர்களை போல வாழ முடியுமா..? அவர்கள்தான் இந்த வாழ்க்கையை நினைக்க முடியுமா..? அன்பே சிவம் திரைபடத்தில் மாதவன் கதாபாத்திரம் கிட்டதட்ட இந்த கேள்வியை
அடிப்படையாக கொண்டு அமைந்து போல தோன்றும். ஆர்வமுள்ளவர்கள் விவாதிக்கலாமே...
அப்புறம் வழக்கம் போல ஒரு கவிதை...சி.கே. ராஜாசந்திரசேகர் கவிதைகளில் இருந்து...
மழை
மழையாகவும் இருந்திருக்கிறது
கவிதையாகவும் இருந்திருக்கிறது
மனங்களுக்கு தக்கபடி...
குடைகள்
ரசிப்பதில்லை
மழையை...
ஒரு மழை நாளில்தான்
உன்னை பார்த்தேன்
அதிலிருந்து இன்னும்
தூரலாக விழுந்து கொண்டிருக்கிறாய்
மனதில்...
மழையின் முன்நேரங்கள் கூட
மழையை போலவே
ரசிக்கபட வேண்டியவை
மரங்களில்
சொட்டி கொண்டிருக்கிறது
மழையின் மழை...
நீ நடக்கிறாய்
மழை
நனைகிறது
மழை ஜன்னல்
சூடான தேநீர்
அசைபோட வைக்கும்
ஞாபகங்கள்
கணங்கள் இப்போது
கனிகளாய்...
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Interesting observations... quite true. I would call this as evolution :) However, i like balakumaran and Raaj Vaazh analogy...
Post a Comment