அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, May 24, 2005

நல்ல சினிமா...

நல்ல சினிமா பற்றிய குழப்பங்கள் இன்னும் நிறைய பேருக்கு இருக்கின்றன. சினிமா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்க்கான காரணம் என்பது என் கருத்து. பலருக்கு சினிமா இன்னும் ஒரு கவர்ச்சியான பொழுதுபோக்கு. சிலருக்கு செய்திகளையும் கருத்துகளையும் சொல்லும் ஊடகம். சிலருக்கு கலை. சிலருக்கு கனவு... சிலருக்கு
தொழில். ஒரு சாதாரண ரசிகனின் நிலையிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பொதுவில் இன்று சினிமாவின் தொழிற்நுட்பம் சார்ந்த அறிவு மீடியாக்களின் புண்ணியத்தில் கொஞ்சம் பேருக்கு இருக்கிறது. லைட்டிங், எடிட்டிங், கேமரா, காஸ்டீயும், கவிதை சார்ந்த பாடல்கள், சண்டைகள் எடுக்கபடும் முறை என பேசவாவது தெரிகிறது. எனினும் நல்ல சினிமா எது..? இந்த கேள்வியின் பதில்...!!! பல நேரங்களில் குழப்பம்தான்.

ஒரு முறை நண்பர்களுடனான விவாதத்தில் நல்ல சினிமா பழைய படங்கள்தான் என்ற கருத்து வந்தது..சிவாஜியும், எம்ஜியாரும், ஜெமினிகணேசனும் மற்றும் கருப்பு வெள்ளை கால திரைபடங்கள் மட்டுமே நல்ல சினிமா என்றார்கள்.. நான் மகேந்திரனின் உதிரிப்பூக்களையும், மெட்டி, நண்டு போன்ற படங்களை குறிப்பிட்டேன். துரதஷ்டவசமாக யாரும்
அந்த திரைப்படங்களை அறிந்திருக்கவில்லை. பாலுமகேந்திராவின் ஓடாத படங்களையும் யாரும் அறிந்திருக்கவில்லை. வியாபாரரீதியாக ஓடும் திரைப்படங்கள் நல்ல திரைப்படங்களாக ஒத்து கொள்ளபடுவதில்லை. ஓடாத படங்களே நல்ல படங்களாம்... அந்திமந்தாரை, ஹேராம், ஆறிலிருந்து அறுபதுவரை, அன்பே சிவம்... என அவர்கள் வரிசைப்படுத்தினார்கள்... இக்காலங்களில் அழகியும், ஆட்டோகிராப்பும் நல்ல திரைப்படங்களாக
ஒத்துகொள்ளபடுபவை ஆனால் எப்படியோ வசூலும் கொஞ்சம் கொடுத்தவை. நான் நிழல்கள், 16 வயதினிலே, முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே, வானமே எல்லை, இது நம்ம ஆளு, சிந்துபைரவி, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், கேளடி கண்மணி போன்றவையும் நல்ல படங்கள் என்றேன். எல்லாவற்றிலும் கருத்தும் நல்ல திரைப்படமாக்கலும் உள்ளது. எனினும் வசூலும் கொடுத்தது. குமுதம் அரசு பதில்களில் ஒருமுறை "தேசம்"
திரைப்படம் பற்றிய ஒரு கேள்விக்கு.. " நல்ல கருத்துகளை சொல்வதற்று ஒரு திரைப்படம் தேவையில்லை என்று பதிலளிக்கபட்டிருந்தது.. " .. அப்புறம்.. மலையாளமும் பெங்காலியும் நல்ல படங்களை என்று பேச்சு திரும்பியது... ஏனோ தமிழ் படங்கள் பற்றி .... படம் பார்க்கும் முறை பற்றி தெளிவான எண்ணங்கள் எல்லை. பதேர்பாஞ்சாலி, செம்மீன் படங்களை யாரும் பார்க்காமலேயே கேள்வி ஞானத்திலேயே அவை நல்ல படங்கள் என
விளம்பரபடுத்துகிறார்கள். தமிழின் நல்ல திரைப்படங்கள் மிக சிலருக்கே தெரிந்துள்ளன. நண்பர்களுடன் ஒரு நாள் ஒரு விசிடி கடைக்கு போய் "Mr. & Mrs. Iyar" என்ற திரைப்படத்தின் விசிடி பற்றி விசாரிக்கையில்... "மலையாள செக்ஸ் சினிமா சிடி எல்லாம் கிடையாது சார்" என்றார் கடைக்காரர்.. தலையில் அடித்துகொண்டு திரும்பினோம்.
ராகுல் போஸையும், கொங்கனா சென்னையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த நான் தயாரில்லை. நான் விரும்பிய திரைப்படங்கள் பற்றி பேச நிறைய உள்ளது. பின்னர் ஒருநாள் பேசலாம்.

சரி உன் கருத்து என்ன என்று கேட்பவர்களுக்கு.. யதார்த்தமும்...வாழ்வின் அற்புதங்களையும் அனுபவங்களையும் சொல்லும் எந்த மொழி சினிமாவும் நல்ல சினிமாதான்.

அப்புறம் சமீபத்தில் படித்ததில் பிடித்தது.


ஒரு பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இயக்குனர் மகேந்திரன் " மனதில் எதிர்பார்ப்பும், அதற்கேற்ற வேகமும் இருக்கிறதா..? நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை அதற்கேற்ற போக்கில் செய்து கொண்டிருங்கள். அதன் விளைவு எப்படியாவது வந்துதான் தீரும். கால ஓட்டத்தில் சற்று பிந்தலாம். அவ்வளவுதான்... "

அப்புறம் சல்மாவின் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கவிதை

விபத்தில் இருந்து மீண்ட நாளின் உடை
நாம் சந்தித்து கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரண செய்தி
வந்து சேர்கையில்
என் கண்களை கவர்ந்த
சிவப்பு வண்ண கார்
வியப்பாகதானிருக்கிறது
பொருட்களின் மீது
காலம் பதிந்து நிலைபெறுமென்பது...

No comments: