நண்பர்களே..
மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி... நேற்று Unicode பற்றிய விளக்கங்கள் கொஞ்சம் பதித்துள்ளேன்.. உங்கள் கருத்துகள் அறிய ஆவலாய் இருக்கிறேன்.. இன்று வேறு எதாவது பேசலாம்.. கொஞ்சம் இலக்கியம்.. கொஞ்சம் கவிதைகள்.. இலக்கியம் பற்றிய விவாதங்களில் எல்லாம் தவறாமல் இடம் பெறும் ஒரு பெயர் புதுமைப்பித்தன்.. திருநெல்வேலிக்காரர். இயற்பெயர் விருத்தாச்சலம். மணிக்கொடி பத்திரிக்கையில் அறிமுகம்.. 14 ஆண்டுகள்.. சிறுகதை, கவிதை நாடகம், சினிமா, அரசியல், மொழிபெயர்ப்பு என பன்முகத் தன்மை கொண்ட கலைஞன். இலக்கியம் படிப்பவர்களுக்கு ஒரு நாடிதுடிப்பு போல புதுமைப்பித்தன்.. இயல்பான நகைச்சுவை.. வாழ்வின் வலி.. நிதர்ச்சனமற்ற வாழ்க்கை.. என தொட்டு செல்லும் எழுத்துகள்..
சமீபத்தில் வீ.அரசு என்பவர் தொகுத்த ஊழியன் மற்றும் பிற புதுமைப்பித்தன் கதைகளின் தொகுப்பு படிக்க நேர்ந்தது.. அவற்றில் ஒரு கதை.. "?" என்பதுதான் தலைப்பு.. கதை இயல்பானது.. இரண்டு முனிவர்கள் ஹிமாலய சிகர பிரதேசங்களில் நடந்து கொண்டிருக்கிறார்கள்... தூரத்தில் எட்டாத இலட்சியம் போல கைலாயம்..
குரு கண்களில் ஒளி மின்ன சொல்கிறார்.. " அதோ தெரிகிறது பார்த்தாயா .. உயர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக வானை கிழித்து கொண்டு.. கைலாயகிரி.. அதன் உச்சியில்.. வான் தகட்டில் .. சிகர திலகம் போல ஒரு நட்சத்திரம்.. பிரகாசமாக.. அது போலத்தான் இலட்சியம்.. "
பதிலளித்தான் சிஷ்யன்.. " பிரபோ.. நிமிர்ந்து நின்று என்ன பயன்.. ? உயிரற்று கிடக்கிறதே..! பிரகாசம் மட்டும் போதுமா.. ? ஒருவன் எட்டிபிடிப்பதற்க்காக அது இருந்தென்ன அல்லது கண்ணுக்கு தெரியாமல் போய் என்ன..?
குரு பதிலளித்தார்.. " ஒருவன் தொட்டால் உலகம் தொட்ட மாதிரி.. !"
"உலகம் அவனை இழந்து விடுவதனாலா..? " "இல்லை.., உலகத்தை அவன் இழப்பதனால்.... "
சில நிமிடங்கள் இருவரும் தலை நிமிர்ந்து சிகரத்தை பார்த்தபடி யோசனையிலாழ்கின்றனர்..
"இல்லை.. நான் சொன்னது பிசகு!.." என்று தலைகுனிகிறார் குரு..
கதை இவ்வளவுதான்.. எத்தனை ஆழமான கருத்து.. எது இலட்சியம்.. இலட்சியம் அடைவதன் பலன்.. என பல வகையான கருத்துகளை தூண்டும்.. கதை.. சுலபமான ஒரு பக்க கதை.. இத்தகைய ஆழமான கருத்துகள்.. இன்றைய அவசர உலகில்.. இத்தனை ஆழமான கருத்து எடுபடுமா.. என்னுடன்.. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்.. நண்பர்களே..
அப்புறம் சமீபத்தில் படித்த ஒரு கவிதை..
அது ஒரு கோடை, அல்லது
கோடை காலத்தின் முடிவு...
அப்போது நான் உன் காலடி ஓசைகளை கேட்டேன்,
கிழக்கிலிருந்து மேற்காக நீ சென்றபோது,
கடைசி தடவையாக..
இந்த உலகில் கைகுட்டைகள் தொலைந்தன..
மற்றும் புத்தகங்களும் மனிதர்களும்..
அது ஒரு கோடை, அல்லது
கோடை காலத்தின் முடிவு...
நடுப்பகல் நேரங்களில் நீ இருந்தாய்;
நீ முதல் முறையாக
உன் கோடித் துணியை அணிந்தாய்.
நீ சற்றும் கவனிக்கவில்லை..
ஏனெனில் அது மலர்களால் பின்னல் வேலை செய்யப்பட்டிருந்தது..
எஹீதா அமிக்ஹாய் கவிதைகளில் இருந்து....
மீண்டும் சந்திப்போம்..
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment