மழை இப்போது வந்துவிடும் போல மேகம் கட்டி நின்றுகொண்டிருக்கிறது. காற்று நன்றாக இருக்கிறது. எந்த நிமிடமும் மழையின் முதல் துளி விழுந்துவிடலாம். இந்த காற்று தூரத்தில் பெய்யும் மழையின் வாசத்தையும் சுமந்து கொண்டு அலைந்துகொண்டிருக்கிறது. தூரத்து மலை அருகே எல்லாம் மேகம் கருப்புகட்டி மலையை மறைத்து கொண்டு நிற்கிறது. மலை மேல் எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கும் - மெல்லிய ஒரு மழைத்திரை தூரத்தில் தெரிகிறது. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் தேநீர் சுவைக்கு நாக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறது… வானம் இன்னும் சிணுங்கி கொண்டுதான் இருக்கிறது. சிணுங்கும் வானம் குழந்தையை போல. தூக்கி இடுப்பில் வைத்து கொள்ள தூண்டும் அழகு அது..!!
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Saturday, August 27, 2011
Tuesday, August 23, 2011
வண்ணதாசன் - ஒரு மாயாவி
வண்ணதாசனை படிக்கும் போது மறுபடி ஒருமுறை வாழ்க்கையை முதலில் இருந்து வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. கல்யாண வீடுகளிலும், இழவு வீடுகளிலும் பார்க்கும் வயது மூத்த வயசாளிகளிடம் பத்து நிமிடமாவது அவர்களின் கையை பிடித்து கொண்டு நின்று விட வேண்டும் போல இருக்கிறது. மழை, வெயில், அணில், குருவி எல்லாம் நின்று நிதானமாக ரசிக்க வேண்டும் போல இருக்கிறது. எல்லாருக்குள்ளும் இருக்கும் சொல்லாத கதைகளை சொல்ல சொல்லி ராப்போது முழுக்க ஒரு நீண்ட பயணத்தில் கேட்க வேண்டும் போல இருக்கிறது. நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையாரையும் நாள் முழுக்க பார்த்து கொண்டு இருந்துவிட வேண்டும் போலவும் இருக்கிறது. அந்த மனிதர் அப்படி ஒரு பாடு படுத்திவிடுகிறார். சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வடிகிறது. சில நேரங்களில் நினைத்து நினைத்து வெடித்து சிரிப்பு வருகிறது. - மொத்ததில் எல்லாரையும் எல்லாவற்றையும் ரசிக்க வைத்து விடுகிறார். இப்படி ஒரு மனிதன் வாழும் காலத்தில் பதிவிடும் அனுபவங்கள் காலம் எல்லாம் கடந்து நிற்க்கும்.
Monday, August 22, 2011
மனசின் பயணம் ...
நான் துடியலூரில் இருக்கிறேன். வாரம் ஒருமுறையாவது இங்கே வந்து விடுவது வாடிக்கை. அது திங்கள்கிழமை எனில் ஒரு குதூகலம் உண்டு. காரணம் - துடியலூர் சந்தை. சின்ன சந்தைதான் எனினும் மதியம் 4 மணிக்கு மேல் 8 மணிவரை கூட்டதுக்கு குறைவிருக்காது. எல்லாம் கிடைக்கும் - சல்லீசான விலைதான், அளவும் ரொம்ப சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. சந்தைக்கு என்று ஒரு அலாதி வாசம் உண்டு. அந்த சந்தையின் வாசத்துக்காகவே அந்த வழியாக வர மனது துடிக்கும். மாம்பழமும், கருவாடும், மசாலா பொருட்களும், பலாப்பழமும் .. கலந்து வரும் வாசம் மனசை திங்களூருக்கு - 2 வகுப்பு காலத்துக்கு கூட்டி செல்வதை தடுக்க முடிவதில்லை. மனசின் பயணம் எதைத்தான் விட்டுவைக்கிறது.
Sunday, August 21, 2011
வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது...
நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறேன். இடையே கணக்கு இல்லாத அளவுக்கு காலம் உருண்டோடிவிட்டது. காலம் என்பது நாட்காட்டி மட்டுமல்லவே, எத்தனையோ வாழ்வனுபவங்களை தந்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல, மவுனமாக அதுவும் நம் கைபிடித்து வந்து கொண்டுதான் இருக்கிறது.
எதனையும் பகிர்ந்து கொள்வதற்க்கு யாரும் இல்லாத தனிமையில் புத்தகங்கள்தான் தோழனாகின்றன. இந்த முறை கோவையில் புத்தக கண்காட்சியில் சில புதிய புத்தக தோழர்களுடன் அறிமுகமானது.
- எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு - விக்ரமாதித்யன் - கட்டுரைகள், நேர்காணல்கள் - சந்தியா பதிப்பகம்.
- அபிதா - லா.ச.ராமாமிருதம் - நாவல் - புதுமைபித்தன் பதிப்பகம்.
- பெயர் தெரியாமல் ஒரு பறவை - வண்ணதாசன் - சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம்.
- பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் - சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம்.
- சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா - சிறுகதைகள் - பாரதி புத்தகாலயம்.
- சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள் - நாட்டுபுற கள ஆய்வு அனுபவங்கள் - யுனைடட் ரைட்டர்ஸ்
- சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - சிறுகதைகள் - தமிழினி
- அனல்காற்று - ஜெயமோகன் - குறுநாவல் - தமிழினி
இந்த புத்தகங்களையும், இவை ஏற்படுத்தும் நினைவுகளையும் தொடர்ச்சியாக பதிவிட விருப்பம்.. காலம் கை பிடித்து காத்திருக்கிறது.