அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, June 02, 2010

எங்கள் இசையின் பிரம்மா...

மீசை முளைக்க தொடங்கிய பதின்வயதுகளில் அறிமுகமானது பண்ணையபுரத்து கலைஞனின் இசை. எல்லோரையும் போல சினிமா பாடல்களில் தன்னையும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணையும் கொண்டு கனவு காணும் வயதுகளில், பிண்ணனி பாடல்கள் இசைஞானிதான். அந்த இசை பித்து இன்றுவரை தொடர்கிறது - இன்னும் மரணம் வரை இருக்கும்.

எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது - இசை பற்றியும், அவர் வாழ்க்கை பற்றியும். என்ன பேசினாலும், அவர் ஒரு மகா கலைஞன் என்பதில் மாற்று கருத்து பலருக்கும் கிடையாது.

ஒரு கட்டுரையில் படித்தது ...

” 900 படங்கள், ,4500 பாடல்கள், மொழிகள் கடந்த இசை என ராஜாவின் ராஜ்ஜியம் கற்பனையிலும் பிரமிக்க வைப்பது. வழக்கமான சினிமா இசையல்லாது, 40 தனி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அவற்றில் பெரும்பாலானவை விற்பனையில் பெரும் சாதனை படைத்தவை. கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவை. 35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந்த தமிழ் சமூகத்தையே கட்டிப்போட்ட ஒப்பற்ற இசைப் படைப்பாளி. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிதாய் பிறந்த உணர்வைத் தரும் இசைக்குச் சொந்தக்காரர். “

இளையராஜாவின் இசை வெறும் இசை மட்டுமல்ல - ஒரு அற்புதமான தியானம். உழைப்பும், கலை மேல் கொண்ட மரியாதையும் தெரியும் அவர் இசையில். பிரமிக்கதக்க இசை நுணுக்கங்கள் மற்றும் வாத்திய தேர்வு ஒரு சுகமான ஆனந்தம்.

வைரமுத்து, வாலி மற்றும் பலரின் அற்புதமான கவிதைகளாகட்டும், எஸ்.பி.பி, யேசுதாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் குரலாகட்டும் - இளையராஜாவின் இசையன்றி இவ்வளவு பெயர் பெற்றிருக்க முடியாது. பலரின் சினிமா உலக வாழ்க்கையின் வெற்றிக்கு பின்னர் அவர் இருந்தார் - பல கதாநாயகர்களின் வெற்றிகள் உட்பட. மறந்து போன திரைப்படங்கள் கூட நினைவில் வருவது அவர் பாடல்களின் வழியாகதான். பாடல் மட்டுமன்றி பிண்ணனி இசையின் நாயகன் அவர்தான் இத்தனை வருடங்களாக.

புல்லாங்குழழும், வயலினும் அவர் பாடல்களில் கொஞ்சி விளையாடும் அழகே அழகு - அதற்க்கு 1000 பாடல்களை உதாரணம் காட்டலாம். எங்கள் யாருக்கும் உலக இசை தெரியாது - ஆனால் எங்கள் உலகத்தின் இசையை அறிமுகபடுத்தியவர் அவர்தான். உலக இசை பற்றிய அதீத ஞானம் உள்ளவர்களுக்கு அவர்மேல் கருத்துகள் இருக்கலாம் - எங்களை பொருத்தவரை இசை என்றால் முதலில் இளையராஜாதான்.

அவர் பிறந்த நாளான இன்று - அவர் இருக்கும் காலங்களில் வாழ்தல் குறித்த மகிழ்ச்சியுடன் ... இந்த பதிவு அவருக்காக.

Tuesday, June 01, 2010

சினிமா விமர்ச்சனங்கள் - ஒரு பார்வை

எந்த ஒரு விமர்ச்சனமும் தனி அளவில், ஒரு கருத்து என்ற அடிப்படையில்தான் நான் பார்க்கிறேன். கருத்து உருவாக ஒரு பின்புலம் வேண்டும் - அந்த பின்புலம் வாழ்வின் அந்த நிமிடம் வரை கடந்து வந்த தருணங்களையும் அனுபவங்களையும் கற்று கொண்டாதாக நம்பப்படுபவைகளையும் அடிப்படையாக கொண்டது. சினிமா விமர்ச்சனங்களும் அப்படித்தான். இப்போதெல்லாம் புதிய அல்லது பழைய, உலக, இந்திய சினிமா பற்றிய அதிபுத்திசாலி விமர்ச்சனங்கள் எழுதாவிட்டால் பதிவுலகத்துக்கே லாய்க்கியில்லை என்ற நிலை உருவாகிவிட்டது போல - அத்தனை விமர்ச்சனங்கள் - மொக்கை படங்களுக்கு கூட.

பெரும்பாலான இந்த விமர்ச்சனங்களுக்கு தோதாகத்தான் நம் தமிழ் படங்களும் இருக்கின்றன - தமிழ் மட்டுமல்ல, வேறு இந்திய மொழி படங்களுக்கு 100க்கு 80, அப்படித்தான் இருக்கின்றன. எனினும் அடிப்படையில் இந்த விமர்ச்சனங்களின் மேல் என் கருத்து ஒன்று உண்டு - இது என் கருத்து மட்டுமே - சில சினிமா விமர்ச்சனங்கள் போல முடிவான ஒன்று கிடையாது.

1. பல பதிவர்கள் சினிமா வெறும் கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போல - எல்லா படங்களுக்கும் உலக படங்களை ஒப்பீடு செய்கிறார்கள். உலக அளவில் சிலாகிக்கபடும் திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை - தேவையான காலத்தில் கொடுக்கவில்லை என்று ஒருமுறை சுஜாதா சொல்லியிருக்கிறார். சினிமா அடிப்படையில் ஒரு வியாபாரம். கடும் உழைப்பு. அது முடிவில் பணமாகவும் வருமானம் கொடுக்க வேண்டும்.

2. மொக்கை படங்களை ஓட்டும் பதிவுகள் சரிதான் - ஏனெனில், சினிமா ஒரு பெறும் உழைப்பு. அதன் வருமானம் வெறும் பணம் மட்டுமல்ல - பலரின் வாழ்க்கை. அந்த உழைப்பை அர்த்தமற்றதாக்கும் சினிமாக்கள் - வசூலில் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும், பலரின் வாழ்க்கையை ஒரு படத்தோடு முடித்து விடுகின்றன. முட்டாள்தனமான சினிமாக்களை சொல்லும் அதே தொனியில் தனக்கு புரியவில்லை என்பதற்க்காக எல்லா (ஓரளவுக்கு) உருப்படியான திரைப்படங்களையும் கலாய்ப்பது - ஒரு தனிமனித புத்திசாலித்தனத்தின் விளைவே. தனக்கு புரியாமல் போன காரணம் தெரிய யாரும் உழைப்பதில்லை. ஒரு கதைக்கு பின்னான கரு, அதன் புனைவு, திரைக்கதையாக்கத்தின் வியாபாரம் எதுவும் புரிவதில்லை. வெறுமனே - எனக்கு புரியவில்லை - எனவே யாருக்கும் புரியாது என்ற தொனி பலரின் விமர்ச்சனங்களில் உண்டு.

3. ஏனென தெரியாத குழப்பமான பார்ப்பனிய எதிர்ப்பு. பார்பானல்லாதவன் செய்தல் கலை - பார்பான் செய்வதெல்லாம் குற்றம் என்ற தொனி. இந்த குழப்பத்தை பற்றி எழுத வேண்டியதே இல்லை - பதிவுலகம் முழுக்க வினவபட்ட விஷயம்.

4. இத்தனை புத்திசாலித்தனமான (நினைத்து கொண்டு) விமர்ச்சனங்களை எழுதும் பதிவு நண்பர்கள் சினிமாவை வெறும் டி.வி.டி. தியேட்டர் அளவிலேயே அதிகம் தெரிந்து கொண்டு இருக்கிறார்கள். விதிவிலக்காக சிலர் உண்டு எனினும், விமர்ச்சனம் எழுதும் கோஷ்டி அதிகம் "பொட்டி" தட்டுபவர்கள்தான். எல்லார் விருப்பத்துக்கும் ஒரு திரைப்படம் நிச்சயம் இருக்க முடியாது - அப்படி விமர்ச்சனமே இல்லாத திரைப்படங்கள் கிடையாது. என் கருத்து, விமர்ச்சனம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான். எதனை எதனோடு ஒப்பீடு செய்யவேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல்தான் பெரும்பாலும் விமர்ச்சனங்கள் அமைகின்றன.

5. தன்னை புத்திசாலி என நினைத்து உழைப்பவர்கள் - சினிமா விமர்ச்சனம் தவிர, ஏதாவது உருப்படியாகவும் எழுதலாம். சினிமா விமர்ச்சனம் எழுத தினத்தந்தியும் வேறு குப்பைகளும் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை பற்றிய குறிப்பு போதும் - அதனை பார்ப்பதும் பார்க்காததும், புரிந்து கொள்ளுதலும் அவரவர் உரிமை. இப்படி ஒரு சினிமா இருக்கிறது - முயற்சி செய்யுங்கள் என்ற தொனியிலான குறிப்புகள் எந்த பதிவிலும் காண அரிதாகி விருகிறது.

6. சினிமாவுக்கு வெளியே புத்திசாலி என அறியபட்டவர்களை எல்லாம், சினிமா முட்டாளாக ஆக்கியிருக்கிறது. காரணம் - திரைப்படத்தின் வெற்றி / தோல்வி என்ற இரு நிலைகள். வெற்றி படங்கள், சமூக அக்கறையோடும், வாழ்வின் நிஜங்களை பற்றிய புனைவுகளோடும் இருக்குமானால் அது நிஜ வெற்றி. எனினும், திரைபடங்களுக்கான பகுத்தறிவு, அதனை என்ன வகையான திரைப்படம் என்று தீர்மானித்து விடுகிறது. அந்த அளவில், அந்த திரைப்படம் தன் தன்மையை கொண்டிருக்கவேண்டும். (உதாரணம்: Action, Adventure, Comedy, History, Fantasy, Drama, Musical, etc.) இதனை பற்றிய அறிவு, விமர்ச்சகர்களுக்கு அவசியம். இல்லாவிட்டால் எதிலோ எதனையோ தேடும் நிலைதான் வரும்.

7. சினிமாவுக்கு சமூக அக்கறை எப்படி தேவையோ, அதே அளவு சமூக அக்கறை விமர்ச்சகர்களுக்கும் வேண்டும். மோசமான முட்டாள்தனமான சினிமா சமூகத்தின் சில வேர்களை அழிப்பதை போல, மோசமான முட்டாள்தனமான விமர்ச்சனங்கள் சிலரின் வாழ்க்கையை அழித்து விடுகின்றன. இது சினிமாவுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல - பொதுவிலும் கூட.

8. தனி மனித புரிதல், தனி மனித அனுபவங்களிலும், பக்குவத்திலும் மட்டுமே சாத்தியமாகிறது. அது இல்லாத போல - எடுத்தேன் கவிழ்த்தேன் வகை கருத்துகளும், குழப்பமான கலாச்சார கருத்துகளும் வெளிவருகிறது. பல பதிவுகள் இந்த வகைதான்.

9. குழப்பான ஒப்பீடு ஒரு குற்றம் என்னை பொருத்த வரையில். பெரும்பாலும் ஒரு எதிர்மறை விமர்ச்சனம் அதிக புத்திசாலிதனத்தை காட்டும் என்ற தொனியில் ஏதாவது பேசவே சில பிரபல சினிமாக்களை பற்றி - அவை அரத பழசாக இருந்தாலும் கூட... அலசல் வகை கட்டுரைகள் பதிவிடபடுகின்றன. இது வெறும் புத்தக புத்திசாலிதனத்தை காட்டும் முயற்சி. இந்த வகை பதிவுகளை சம்பந்தபட்டவர்கள் படிக்கவே போவதில்லை.

10. சாப்பிட தெரியும் என்ற ஒரே காரணத்துகாக சமையல்காரர்களை விமர்ச்சிக்கலாம் என்ற போக்கிலிருந்து விலகி, உண்மையான அர்த்தமுள்ள விமர்ச்சனக்கள் எழுதபடுமானால் - அது சினிமா என்ற ஊடகம் என்ன நல்ல விளைவுகளை உருவாக்க விரும்புகிறோமே அதனை கொண்டு வரும். இல்லாவிட்டால், இந்த விமர்ச்சன குப்பைகளை நாளடைவில் யாரும் கண்டு கொள்ளாத நிலை வந்து விடும்.

Monday, May 31, 2010

புகையாய் கலையும் அரசியல்.

ஆரம்பத்திலிருந்தே புகை பிடித்தல் மேல் ஒரு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அப்பா கொஞ்சம் அதிகமாகவே ஊதுவதால் - அந்த வாசத்தின் மேல், ஒரு ஈர்ப்பு இருந்தது எனினும், பள்ளி இறுதியில் முயற்சி செய்து, ரொம்ப இருமியதால் ஆர்வம் முழுவதுமாக போய்விட்டது. புகைபிடித்தல் ஒரு வகையான ஆண்மையின் அடையாளமாகவே மாணவபருவத்தில் கருதியதுண்டு..!! பல நண்பர்கள் பள்ளி இறுதியில்தான் முதல் முறை புகை பழக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். அப்பா முன்பெல்லாம் வாரத்துக்கு 10 பெட்டி வாங்குவார். கல்லூரி காலங்களில்தான் பல ரகம் இருப்பதே தெரியும். உற்சாகபானம் பழகியும் புகை பழகாமல் இருப்பவர்கள் அதிகம். இன்று பெண்கள் கூட புகைக்கிறார்கள். தனி பிராண்ட் எல்லாம் இருக்கிறது.

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாம்..!! சிகரெட் விற்க போவதில்லை என போலி அரசியல் செய்தியில் கூட வந்தாகிவிட்டது. மருத்தவர் ஐயா எதிர்த்து எதிர்த்து இப்போதெல்லாம் ஒரு "எச்சரிக்கை" செய்தி போட்டுதான் புகை பிடிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வருகின்றன..!! இப்படி எல்லாம் விழிப்புணர்வு செய்து நிறுத்த கூட விஷயமில்லை இது - ஜனவரி 1 அல்லது பிறந்த நாட்களில் புகை விட்டு விடுவது பற்றி சத்தியம் செய்தவர்களை கணக்கு போட்டால், அது மக்கள் தொகையில் பாதியை தாண்டும்.

என்னமோ..!! எல்லாரும் சொல்வதால் நானும் சொல்கிறேன்..! புகைபிடிப்பதை விட்டு விடுங்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒரு ஞாயிற்றி கிழமை மதியம் - புகை பிடிப்பதால் உண்டாகும் உடல் நிலை கெடுதல் பற்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சி பாருங்கள்.. ஒருவேளை திங்கள்கிழமையில் இருந்து புகை விடுவதை நீங்கள் நிறுத்திவிடலாம்.

எல்லாம் சரி. விற்பனை கட்டுப்படுத்தாமல் உபயோகபடுத்துபவர்களை உசுப்புவது என்ன அரசியல் தந்திரமோ தெரியவில்லை.!! மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டால், புகையிலையால் கிடைக்கும் பொருளாதாரத்தை விட்டு கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.. என்ன செய்வது.. நமக்கு புரிவது அவ்வளவுதான்..

Wednesday, March 24, 2010

சாப்பாட்டுப் புராணம்

பொதுவாக நான் சாப்பாடு - அதுவும் நல்ல சாப்பாடு என்றால் கொஞ்சம் அலைந்து திரிந்தாவது சாப்பிட்டு விடுகின்ற சாதி. சாப்பாடு பற்றி பேசவும் ஒருத்தர் கிடைத்து விட்டால் அவருக்கு பசி எடுக்கும் வரைக்கும் அறுத்து தள்ளி விடுகிறேன் என்று சில சமயம் ரேவதி சொல்லியிருக்கிறாள். அது இருக்கட்டும். சாப்பிடுவது மட்டுமல்லாமல் சாப்பாடு பற்றி பேசுவதும் சமைப்பதும் என் ஆர்வம் என்பதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. இப்படிபட்ட எனக்கு சாப்பாடு பற்றி ஒரு புத்தகம் கிடைத்தால் சும்மா விடுவேனா..!! அது சமையல் புத்தகம் இல்லை - அது நிறைய இருக்கிறது - எல்லா வார, மாத இதழ்களின் இலவச இணைப்புகள் உட்பட. நான் சொல்ல வருவது ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற புத்தகம் பற்றி. சமஸ் அவர்கள் எழுதி தினமணியில் வந்த ‘ஈட்டிங் கார்னர்’ கட்டுரைகளின் தொகுப்பு. தமிழரின் உணவை கொண்டாடும் தமிழின் முதல் நூல் என்ற அடைமொழியோடு வெளிவந்து இருக்கிறது. சென்ற வாரம் வாங்கி - இரண்டு நாளில் முழுவதும் படித்துவிட்டேன்..படிக்க படிக்க பசி எடுக்க வைக்கும் புத்தகம். பொதுவாக தஞ்சையை உணவின் ராஜ்ஜியம் என்று சொல்லலாம். புத்தக ஆசிரியர் தஞ்சையும் அதனை சுற்றி உள்ள இடங்களையும் ரசித்து ருசித்து எழுதியிருக்கிறார். ஒரு கோப்பை தேநீரில் ஆரம்பித்து, தஞ்சாவூர் காபியில் பயணம் தொடங்கி, திருவையாறு அசோகா, நீடாமங்கலம் பால்திரட்டு, மன்னார்குடி அல்வா, ஸிரிரங்கம் இட்லி, பட்டணம் பக்கோடா, செட்டிநாடி கறி பிரட்டல், கும்பகோணம் பூரி பாசந்தி, மிலிட்டரி புரோட்டா, ஆட்டுகால் பாயா, திரிவானைக்கா நெய் தோசை, மொஹல் பிரியாணி, புத்தூர் அசைவ சாப்பாடு, சென்னை சாம்பார், மதுரை இட்லி இரவுகள், சிம்மக்கல் கறிதோசை, கோவை ரவா கிச்சடி, சிதம்பரம் கொத்சு, பாளையங்கோட்டை முறுக்கு என சைவமும் அசைவமும் சேர்ந்து மணக்க மணக்க அற்புதமான புத்தகம். உணவை பற்றிய அற்புதமான இலக்கியம் என்று நான் சர்வ சுத்தமாக சொல்வேன். ஊர் ஊராக சுற்றி, கடை கடையாக பார்த்து தேர்ந்தெடுத்து ருசித்து, வரலாறும் சேர்த்து, கொஞ்சமாய் செய்முறையும் சொல்லி ருசித்து இருக்கும் ஆசிரியர் கை கொடுத்து பாராட்ட தகுதியானவர். உணவகங்கள் பற்றியும், தங்கும் விடுதிகள் பற்றியும், விருந்தோம்பல் முறைகளும் சொல்லியிருக்கிறார். தான் பிரசுரம் 60 ரூபாயில் வெளியிட்டு இருக்கும் - சாப்பாடு பிரியர்களுக்கான புத்தகம். இந்த புத்தகம் படித்ததும் நானும் என் சாப்பாடு அனுபவங்களை எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது - பார்க்கலாம் - நேரமும் இருக்கிறது, எழுத மனமும் இருக்கிறது.. !! எவ்வளவு எழுதுகிறேன் என்று பார்க்கலாம்.

Friday, January 15, 2010

Flickr to Blog


Image039, originally uploaded by GV.Muthukumar.

புதிய முயற்சி... இந்த ஒளிப்படம் மொபைல் கேமராவில் எடுக்கபட்டது. மாலை நேர வானம் ஒரு அற்புதமான நிறக்கலவையை கொடுத்திருக்கிறது.

Monday, January 04, 2010

2010 - சுற்றுலா திட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் முழுக்க முழுக்க ஏதாவது ஒரு வேலையிலேயே போய்விடுகிறது. பெரும்பாலும் அலுவலகம் சார்ந்த வேலைகள் நம் நேரத்தை எடுத்து கொள்ளும் சதவிகிதம் மிக அதிகம். அயல்நாட்டினர் எந்த வேலை எப்படி இருப்பினும் - வருடம் ஒருமுறை ஏதாவது சுற்றுலா செல்ல தவறுவதில்லை. நம்மில் பலருக்கு அப்படி செய்ய வாய்ப்பிருப்பதில்லை எனினும், சூழ்நிலைகள் மாறிவரும் காலத்தில் நம்மில் பலரும் நல்ல முயற்சிகள் செய்கிறார்கள்.

இந்த 2010 வருடத்தில் நீங்கள் ஏதேனும் சுற்றுலா பயண திட்டங்கள் வைத்து இருக்கின்றீர்களா? அப்படி எனில் எங்கே? எவ்வளவு பயண செலவில் திட்டத்தை அமைத்திருக்கிறீர்கள்.

33வது சென்னை புத்தக கண்காட்சி

ஞாயிற்று கிழமை மதியத்துக்கு மேல் கண்காட்சிக்கு சென்றிருந்தோம். கூட்டம் அதிகமாக இல்லை. மாலை அரங்கில் பேசுவதற்காக நடிகர் கமல் வந்திருந்ததால் 
கொஞ்சம் கூட்டம் அங்கு குவிந்திருந்தது. நிதானமாக புத்தகங்களை பார்க்கவும் தேர்ந்தெடுக்கவும் முடிந்தது. இரவு 9 வரை காட்சி நேரம் நீட்டிக்கபட்டிருந்ததினால் எல்லா அரங்குகளையும் பார்க்க முடிந்தது. அறிமுகமான எழுத்தாளர்களையும் கொஞ்சம் சந்தித்தோம். மற்றபடி வாங்கிய புத்தகங்களில் அரசியல் மற்றும் கரிசல் இலக்கியம், கொஞ்சம் காமிக்ஸ் என கை நிறைய இருந்தது... அடுத்த வாரம் கடைசி நாட்கள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு - எனினும் செல்லும் திட்டம் இருக்கிறது..!! நிச்சயம் சென்று வாருங்கள் - புதிய புத்தகங்கள் உங்களுக்கு புதிய அனுபவங்களை தரும்.