அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, August 16, 2006

கண்ணும் கண்ணும்...

சில வருடங்களுக்கு முன்னர் நான் ஈரோட்டுக்கும் கோவைக்குமாய் வாரம் ஒருமுறையாவது அலைந்து கொண்டிருந்தேன் - ஒரு தொழில்முறை விஷயமாக. பெரும்பாலும் காலையில் போய் மாலையில்/இரவில் திரும்பும் பயணம் அது. அவினாசியில் மெயின் ரோடை ஒட்டிய ஒரு பள்ளியில் காலை பிராத்தனை நடைபெறும் - வரிசையில் நிற்கும் மாணவர்கள் - திருக்குறள் சொல்லும் மாணவன் அல்லது மாணவி - கொஞ்சம் என் கிராம வாழ்க்கையையும் பள்ளி வாழ்க்கையையும் நினைவுருத்தும் தருணங்களை அவை. பேருந்தின் சுகமான காற்றில் கண்கள் தாமாக மூடி கொள்ளும். கோவை-ஈரோடு பேருந்துகள் பெரும்பாலும் பாடல்களால் நிறைந்து இருக்கும். பெருந்துறை தாண்டிய பிறகு கண்விழித்தால் போதுமானது. ஒரு வெள்ளி கிழமை இப்படியான ஒரு பயணத்தில் நான் அவர்களை சந்தித்தேன். சந்தித்தேன் என்பது விட கவனித்தேன் என்பது பொருந்தும். அவர்கள் அனைவரும் பெண்கள் - பள்ளி மாணவிகள். பேருந்து நிலையத்திலேயே அவர்களின் கூச்சலும் சத்தமும்தான் பலமான கவனிப்பிற்க்கு உள்ளாகி இருந்தது. ஒரு பெண் அவர்களில் கொஞ்சம் என் கவனத்தை ஈர்க்கும் படி இருந்ததால் என் கவனிப்பு எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்தது. பின்னர் ஒரு கோவை செல்லும் பேருந்தில் அவர்கள் கூட்டமாக ஏறினார்கள். பேருந்தில் உட்கார இடம் இல்லை எனினும் - என் கொள்கைக்கு மாறாக நின்று கொண்டு செல்லவும் திட்டமிட்டு, நானும் அந்த பேருந்தில் ஏறினேன். அவர்களில் யாரும் என்னை கவனிக்கவில்லை என்பது எனக்கு தெரியும்... ஒரு வார தாடியும், கலைந்த தலையும், காலையில் இருந்து கணிப்பொறியில் விலகாத சோர்ந்த முகமும் கொண்டவனை யார் கவனிப்பார்கள்..! அவர்களின் ஒருவருக்கு ஒருவரான கேலியும் கிண்டலும், ஓடும் பாடலுக்கு ஏற்ற ஆட்டமுமாய் பேருந்து களை கட்டியிருக்க, யாரும் அவர்களை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை - பெரும்பாலும் ரசனைதான் இருந்தது. அவர்களின் பேச்சில் இருந்து அவர்கள் கோவையில் ஒரு கபடி போட்டிக்காக ஈரோட்டில் இருந்து வருகிறார்கள் என புரிந்து கொண்டேன். என் கவனத்தை ஈர்த்த அந்த பெண் நல்ல குறும்புக்காரி. நல்ல குரல் வளம். இளமையும் கூட. நான் நின்று கொண்டு வருவதாலும், கூட்டத்தினாலும், கொஞ்சம் சுய முயற்சியினாலும் அவள் பார்வைக்கு தெரியும்படி நின்று கொண்டிருந்தேன். மாலை நேரமாதலால் கோவை-ஈரோடு சாலை வாகனங்களால் நிறைந்து காணப்படும் எனவே பேருந்தின் வேகம் ரொம்பவும் இருக்காது. இரண்டு மணி பயண நேரத்தில் எப்படியாவது அவள் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு என்னிடம் இருந்தது. அது என்னிடம் கை-தொலைபேசி இல்லாத காலம். எனவே வேறு ஒன்றும் செய்ய முடியாது. பெருந்துறை தாண்டி, விஜயமங்கலம் வரும் நேரத்தில் அவள் என்னை கவனித்திருப்பதை அவள் நடவடிக்கைகளின் மாறுதல்களில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. சில வினாடிகளாவது நான் அவளை கண்ணோடு கண்ணாக பார்க்க முடிந்தது. அவள் புன்னகை இன்னமும் மறக்க முடியாதது. எனினும் அவள் தனது வழக்கமான குறும்புகளை நிறுத்தவில்லை - அதனோடு என்னை கவனிப்பதையும் / நான் கவனிப்பதையும் தடுக்கவில்லை. நான் ஒன்றும் அழகனல்ல... எனினும் கொஞ்சம் சுமாரானவன். அப்போது வயது வேறு இளவயது. பெண்களுக்கே உரிய மெல்லிய நாணம் அவளிடம் இருப்பினும் நான் திரும்ப கவனிக்க படுவதை உணர்ந்தவுடன் மனசு பறக்க ஆரம்பித்துவிட்டது. அப்புறம் என்ன.. பார்வைகள்தான்.. கொஞ்சமாய் புன்னகைகள்தான். எனினும் பேர் கேட்க தைரியம் வரவில்லை. இப்படியாக இந்த காவியம் கோவை பேருந்து நிலையம் வரை தொடர்ந்து முடிந்து விட்டது. அவர்கள் இறங்கி கூட்டமாய் பேசி கொண்டு போய்விட்டார்கள்..இதற்கெல்லாம் அசந்து போகின்ற ஆசாமியா நாம். அடுத்தநாள் காலையிலேயே கோவை நேரு விளையாட்டு அரங்கிற்க்கு வந்து விட்டேன். எதிர்பார்த்த்படி அங்கு கபடி போட்டிகள் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் விளையாடி கொண்டு இருந்தது எல்லாமே ஆண்கள். வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது. பெண்கள் போட்டி மதியம் என்றார்கள். 5 ரூபாய்க்கு புரோட்டா சாப்பிட்டு விட்டு மதியம் வரை காத்திருந்தேன். மதிய வேளையில் நிலவை பார்த்து இருக்கிறீர்களா... அவள் வந்த போது அப்படிதான் இருந்தது. விளையாட்டுக்கான உடையில் ஒரு நிலா. அவர்கள் அணி விளையாடும் போது - விளையாட்டு ஆர்வலர்களின் கூச்சலில் என் கூச்சலும் இருந்த்து. அவள் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்... மறுபடியும் சில புன்னகைகள்... விளையாடும் போதே பார்வைகள்... அப்புறம் என்ன...! அவர்கள் விளையாடுவதை முடியும் வரை பார்த்து கொண்டே இருந்து விட்டு...விளையாட்டு முடிந்ததும் .. சில மெல்லிய பார்வைகளுக்கு பிறகு.. சில ரகசியமாக கை அசைப்புகளுக்கு பிறகு.. அவர்கள் கிளம்பிபோய் விட்டார்கள். இரண்டு பேருக்கும் பேசி கொள்ள தைரியம் இல்லை. வேறு என்ன செய்ய முடியும்... எனக்கு இன்றும் இருப்பதை போன்றே அந்த பெண்ணுக்கும் நினைவுகள் இருக்குமா என்று தெரியவில்லை. அழகான பறவைகளுக்கு பெயர் தேவையில்லை என்பதை போல - அவள் நினைவுகளுக்கு பெயர் இல்லாத அவளே அடையாளம். ஆனால் அதற்கு பிறகு நான் கபடி போட்டிகளின் ரசிகன் ஆகிவிட்டேன்.

1 comment:

PKS said...

நல்லா எழுதறீங்க. இப்போதான் பார்த்தேன். தொடர்ந்து எழுதுங்க.

"கபடிக் காதல்" கட்டுரை, கிருஷ்ணரைப் பற்றிய கட்டுரை ஆகியன பிடித்திருந்தன. ரயில் காதலியைப் பற்றி இதே மாதிரி ஜெயகாந்தன் ஒரு கட்டுரை எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. "எல்லா நட்பிலும் கொஞ்சம் காதல் வேணும்" என்கிறீங்க. ·பிராய்டு மாதிரி பேசுகிறீர்கள். நட்பைக் கேவலப்படுத்துவதாக யாரும் போராட்டம் ஆரம்பிச்சுடப் போறாங்க. (இது ஜாலி கமெண்ட்டுதான்). பெரிய பத்திகளாக எழுதாமல் கொஞ்சம் பத்தி பிரித்து எழுதினால் படிக்கச் சுலபமாக இருக்கும். நான் திரை படித்ததில்லை. "நிழல்" படித்திருக்கிறீர்களா?

கோயமுத்தூர் அலுக்காத ஊர். அந்த ஊரின் பெண்களின் அழகும்தான். உப்பிலிபாளையம் ·ப்ளை-ஓவர் முன்னே மேடை போட்டு மாரியம்மன் திருவிழா ஆர்கெஸ்டிரா நடக்கும் அப்போதெல்லாம். இப்போதும் நடக்கிறதா. க.சீ. சிவகுமார் நல்ல எழுத்தாளர். ஏனோ நம்ம மக்கள் அவரைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். அவரும் அதைக் கண்டுகொள்வதாகக் காணோம். "ஆர்ய பட்டா வானத்தைக் கிழித்தது" வகைக் கவிதைகள் அந்தக் காலத்தில் நிறைய வந்திருக்கின்றனவே. கோபி கிருஷ்ணன்கூட, காந்தி வந்தார் வன்முறை ஒழிந்தது .... என்று ஆரம்பித்து, நானும் காத்திருக்கிறேன் யாரோ ஒருவரின் வருகைக்காக என்று ஒரு கவிதையை முடித்திருந்தாரே. எல்லாம் ஒரே ஸ்டைல்தானே. எனக்கு அப்போது இந்த ஸ்டைல் கவிதை பிடிக்கும். இப்போது பழகிவிட்ட பாவனை. பாட்டியின் புடவை கவிதை நன்றாக இருந்தது.

மீதியைப் படித்துவிட்டு எழுதுகிறேன். பயணங்களின் மீதும், புத்தகங்களின் மீதும் பிரேமையும், பிணைப்புகளின்றித் தனியாளாய்ச் சுற்றித் திரிவதன் சுகமும் உங்கள் எழுத்துகளில் தெரிகிறது. தொடர்ந்து படிப்பேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்