அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, November 14, 2006

30 வயது மாயை

சென்ற நவம்பர் 6 தேதியோடு 29 வயது முடிந்து விட்டது. என் முப்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். சொல்லபோனால் மனதளவில் என்னை நான் இதற்கு தயார் செய்து கொண்டுள்ளேன் என்றே சொல்லவேண்டும். பெரிய மாற்றங்கள் இயல்பில் ஏதும் நடந்து விட போவதில்லை என்றபோதிலும், வயது சார்ந்த ஒரு மாயையை என்னுள் ஏதோ சில சம்பவங்கள் ஏற்படுத்திவிட்டன என்பது உண்மை.

இந்த மாயை பெரும்பாலும் அனுபவங்களை சார்ந்தே வருகிறது. அரைகிழவன் என்று 30 வயது முடிந்தவர்களை விமர்ச்சிப்பவர்களை பார்த்திருக்கிறேன். திருமணம் ஆகாத 30 வயது இளைஞன் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கபடுவதை கவனித்து இருக்கிறேன். ஒரு வகையான செயற்கையான மனச்சோர்வை 30 வயது ஆண்மகனுக்கு சமூகம் தருவதை சில சம்பவங்கள் எனக்கு நினைவூட்டுகின்றன. பெண்களுக்கு 30 வயது என்பது ஒரு பெரிய மாறுதலை தருகிறது - குடும்ப அளவிலும் அவள் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்று சமுதாயம் விரும்புகிறது - அதன் பிரச்சனைகளும் இடர்களும் தெரியாமலேயே. பொதுவாக சமுதாய அமைப்பில் 30 வயது ஆண் அல்லது பெண்ணுக்கு சில குறியீடுகளை கொடுத்து விடுகிறார்கள், அவர்கள் அந்த குறியீடுகளில் தான் வாழ அறிவுறுத்தபடுகிறார்கள் - மீறினால் கேலி செய்ய படுகிறார்கள். வயது சார்ந்த மாயை ஆரம்பமாகும் தருணம் 30 வயதுதான்.
என்னை பொருத்தவரை இது அற்புதமான காலகட்டமாக உணர்கிறேன். நவம்பர் 5 இரவில் ஏதோ நினைவுகளுடன் என் பழைய புகைபடங்களை பார்த்து கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு மரணம் நிகழ்ந்த மனோநிலை அன்று எனக்கு இருந்ததை மறுக்க முடியாது. நான் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் எல்லாம் நினைவுக்கு வலுக்கட்டாயமாக கொண்டுவந்து இருந்தேன். சம்பந்தமே இல்லாமல் வீட்டுக்கு போன் செய்து பேசினேன். சில நெடுங்காலமாய் தொலைந்த நண்பர்களின் முகவரிகளை தேடினேன்... கிடைத்தவற்றை ஒழுங்குபடுத்தினேன்... கொஞ்சமாய் பிடித்த இசை... ஒரு கோப்பை தேநீர்... நான் நடந்து கொள்ளும் விதம் எனக்கே கேலியாக இருப்பினும் இதனை நிறுத்த முயலவில்லை. பிறகு நண்பர்களின் வாழ்த்துகளும், அம்மா அப்பாவுடன் பேசியதும் கொஞ்சம் கொஞ்சமாக மனசு சரியாகிவிட்டது. அலுவக நண்பர்கள் வாழ்த்துகளும் மனசை லேசாக்கி விட்டன. பிறகு மற்ற நாட்கள்... என்னை சராசரி வாழ்வில் தள்ளி விட்டன.. தலை சீவும் போது எட்டி பார்க்கும் ஒற்றை நரைமுடி தவிர, மற்ற எந்த அடையாளமும் என்னை மனதளவில் பாதிக்கவில்லை.

29 வயது வரை செய்த நல்ல விஷயங்களை பொறுக்கி பார்த்த போது, நண்பர்களும் நம்பிக்கையும் தவிர வேறு எதுவும் இல்லை. இன்னும் டிகிரி வாங்கவில்லை (வாங்க போவதும் இல்லை என்று நினைக்கிறேன்), பெரிய வங்கி கணக்குகள் இல்லை, வாகனங்கள் ஓட்ட தெரியாது, நீச்சல் தெரியாது, கணக்கு பாடம் இன்னும் புரியாத புதிர்தான். மிக புத்திசாலிதனமாக சிந்திக்க தெரியாது... சரி என்ன தெரியும் என்று பார்த்தால்.. கொஞ்சம் இசை, ஓவியம், கவிதை, பேச தெரியும், செய்யும் தொழிலில் யாருக்கும் கேடு விளையவில்லை, நிறைய நண்பர்கள் உண்டு... கொஞ்சம் பயணங்கள் இருந்திருக்கின்றன. படிக்கும் பழக்கம் இருக்கிறது. படித்ததை யோசிக்கும் திறமை இருக்கிறது. மேலாண்மையில் கொஞ்சம் திறமை இருக்கிறது. செய்யும் தொழில் சார்ந்த விஷயங்களில் கிரகிக்கும் திறனும் மறுபடி உபயோக படுத்தும் திறனும் இருக்கிறது. அப்புறம்... என்னை பற்றி எல்லாம் தெரிந்த பின்னும் என்னை நம்பும் நண்பர்கள் இருக்கிறார்கள்... அவர்களுக்கும் எனக்கும் நடுவில் எங்களை பற்றிய நம்பிக்கை இருக்கிறது. ஓடி கொண்டிருக்கும் நதி போல வாழ்க்கை எங்களுக்கு முன்னால் இருக்கிறது.

3 comments:

Arasu Balraj said...

ஒரு நல்ல
வெளிப்படையான,
தங்கு தடையற்ற எழுத்து...
soul searching...

Arasu Balraj said...

i have posted a comment.

Anonymous said...

Good self-analysis -Suchitra