பொதுவாக நான் சாப்பாடு - அதுவும் நல்ல சாப்பாடு என்றால் கொஞ்சம் அலைந்து திரிந்தாவது சாப்பிட்டு விடுகின்ற சாதி. சாப்பாடு பற்றி பேசவும் ஒருத்தர் கிடைத்து விட்டால் அவருக்கு பசி எடுக்கும் வரைக்கும் அறுத்து தள்ளி விடுகிறேன் என்று சில சமயம் ரேவதி சொல்லியிருக்கிறாள். அது இருக்கட்டும். சாப்பிடுவது மட்டுமல்லாமல் சாப்பாடு பற்றி பேசுவதும் சமைப்பதும் என் ஆர்வம் என்பதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. இப்படிபட்ட எனக்கு சாப்பாடு பற்றி ஒரு புத்தகம் கிடைத்தால் சும்மா விடுவேனா..!! அது சமையல் புத்தகம் இல்லை - அது நிறைய இருக்கிறது - எல்லா வார, மாத இதழ்களின் இலவச இணைப்புகள் உட்பட. நான் சொல்ல வருவது ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற புத்தகம் பற்றி. சமஸ் அவர்கள் எழுதி தினமணியில் வந்த ‘ஈட்டிங் கார்னர்’ கட்டுரைகளின் தொகுப்பு. தமிழரின் உணவை கொண்டாடும் தமிழின் முதல் நூல் என்ற அடைமொழியோடு வெளிவந்து இருக்கிறது. சென்ற வாரம் வாங்கி - இரண்டு நாளில் முழுவதும் படித்துவிட்டேன்..படிக்க படிக்க பசி எடுக்க வைக்கும் புத்தகம். பொதுவாக தஞ்சையை உணவின் ராஜ்ஜியம் என்று சொல்லலாம். புத்தக ஆசிரியர் தஞ்சையும் அதனை சுற்றி உள்ள இடங்களையும் ரசித்து ருசித்து எழுதியிருக்கிறார். ஒரு கோப்பை தேநீரில் ஆரம்பித்து, தஞ்சாவூர் காபியில் பயணம் தொடங்கி, திருவையாறு அசோகா, நீடாமங்கலம் பால்திரட்டு, மன்னார்குடி அல்வா, ஸிரிரங்கம் இட்லி, பட்டணம் பக்கோடா, செட்டிநாடி கறி பிரட்டல், கும்பகோணம் பூரி பாசந்தி, மிலிட்டரி புரோட்டா, ஆட்டுகால் பாயா, திரிவானைக்கா நெய் தோசை, மொஹல் பிரியாணி, புத்தூர் அசைவ சாப்பாடு, சென்னை சாம்பார், மதுரை இட்லி இரவுகள், சிம்மக்கல் கறிதோசை, கோவை ரவா கிச்சடி, சிதம்பரம் கொத்சு, பாளையங்கோட்டை முறுக்கு என சைவமும் அசைவமும் சேர்ந்து மணக்க மணக்க அற்புதமான புத்தகம். உணவை பற்றிய அற்புதமான இலக்கியம் என்று நான் சர்வ சுத்தமாக சொல்வேன். ஊர் ஊராக சுற்றி, கடை கடையாக பார்த்து தேர்ந்தெடுத்து ருசித்து, வரலாறும் சேர்த்து, கொஞ்சமாய் செய்முறையும் சொல்லி ருசித்து இருக்கும் ஆசிரியர் கை கொடுத்து பாராட்ட தகுதியானவர். உணவகங்கள் பற்றியும், தங்கும் விடுதிகள் பற்றியும், விருந்தோம்பல் முறைகளும் சொல்லியிருக்கிறார். தான் பிரசுரம் 60 ரூபாயில் வெளியிட்டு இருக்கும் - சாப்பாடு பிரியர்களுக்கான புத்தகம். இந்த புத்தகம் படித்ததும் நானும் என் சாப்பாடு அனுபவங்களை எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது - பார்க்கலாம் - நேரமும் இருக்கிறது, எழுத மனமும் இருக்கிறது.. !! எவ்வளவு எழுதுகிறேன் என்று பார்க்கலாம்.
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Wednesday, March 24, 2010
Subscribe to:
Posts (Atom)