காந்தியும், சுபாஷும் மற்றும் பலரும் கஷ்டபட்டிருக்கவே தேவையில்லை 1947ல். சுதந்திரம் என்ன - அவன் தேசத்தையை பிடித்திருப்போம் நாம் - இன்னும் கொஞ்சம் காலம் அவன் நம் நாட்டில் இருந்திருந்து - நம் மக்களின் ஆங்கிலத்தை காதால் கேட்டால் - ஒன்று ஓடி போயிருப்பார்கள் அல்லது கூண்டோடு தற்கொலை. இது வரை சின்னதிரை தொகுப்பாளிகளை மட்டுமே மோசமான தமிழுக்கு உதாரணமாக கொண்டிருந்தோம் (தமிழன் தொலைகாட்சி தவிர). இனி மோசமான ஆங்கிலத்துக்கு நம் கணிப்பொறி வல்லுனர்களை சொல்லலாம் என்பது போல எனக்கு அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. என்னை இப்படி சொல்ல வைத்த விஷயங்கள் இவை -
1. இவர்கள் இவர்களின் தாய்மொழி போல ஆங்கிலத்தை பேசுகிறார்கள் - அவ்வளவு லாவகமாக இல்லை - அதே தொனியில். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் - தெலுங்கு அல்லது கன்னட அல்லது தமிழின் உச்சரிப்பின் தொனியில் ஆங்கிலம் இருந்தால்..!!
2. ஆங்கில எழுத்தும் குறுஞ்செய்தி பாணியில் இருக்கிறது - அடிப்படை இலக்கணமே இல்லை. அதுவும் அலுவல் சம்பந்தமான மின்னஞ்சல்களில் கூட.
3. தேவையில்லாத இடங்களில் ஆங்கிலம் பேசும் "வெட்டி" பந்தா.
4. மொழி புரிகிறதோ புரியவில்லையோ - எல்லாத்துக்கும் தலையாட்டி - வீண் பிரச்சனைகளுக்குள் சிக்கி கொள்வது.
5. ரொம்ப சத்தமாக - (அதுவும் ராகம் போட்டு) கைபேசியில் ஆங்கிலம் பேசுவது..
என்ன சொல்ல..!! இப்படிதான் இருக்கிறார்கள். எந்த மொழியையும் கொலை செய்யகூடாது என்பது என் கருத்து - கற்று கொள்ளலாம் அல்லது தெரியாத மொழியின் பிரயோகத்தை குறைத்து கொள்ளலாம். ரொம்ப தேவையெனில் முறையாக கற்று கொள்ளுதல் குற்றமில்லையே. அதை விட்டு - சுற்றி இருப்பவரை எல்லாம் வெறி ஏற்ற கூடாது. எல்லாரும் ஆங்கிலத்தில் மெத்த புலமையோடு இருப்பது கிடையாது - நம் கல்வி அமைப்பு அதற்கு வித்திடுதலும் கிடையாது. அத்தனை எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது. இருந்தும் மொழி என்பதனை சரியாக அறிந்து கொள்ளுதலில் என்ன பிரச்சனை இருந்து விட முடியும். எனக்கு வாய்ப்புகள் சரியாக இல்லை என சொல்லிவிட முடியாது - கணிப்பொறிதுறை ஆங்கில மொழி ஆளுமை அதிகம் - கற்று கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். இது வெறும் குற்றச்சாட்டு அல்ல - ஒரு ஆதங்கம். இவர்களுன் முன்னேற்றம் சரியாக அமையாமல் போய்விடும் என்ற ஆதங்கம். சுயநல அடிப்படையில் சொல்வதானால் - இவர்களை நம்பி வேலை கொடுத்து அது இவர்களின் பேச்சால் கெட்டுபோய்விடும் அபாயத்தை சொல்லலாம். என்னால் முடிந்தவரை என் குழுவினருக்கு சரியான முறையில் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் உதவி வருகிறேன். அலுவல் சார்ந்த தொலைபேசி பேச்சு வார்த்தைகளுக்கும் மின்னஞ்சல்களுக்குமாவது அது உதவுகிறது என்பது தெரிகிறது. மற்றபடி.. சகித்துதான் போக வேண்டியிருக்கிறது. இன்னும் சொன்னால் - நீயெல்லாம் ஒரு தமிழனா என்று கேள்வி வரும்..!! எதற்க்கு வம்பு.