அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, March 16, 2009

சென்னை சங்கமம் 2009

ஒரு நல்ல கிராமிய விழாவாகவே நடந்தது இந்த வருட "சென்னை சங்கமம்". நிறைய கூட்டம், நிறைய கலைஞர்கள் - நிறைய "கலைஞர்" துதிகள். ரேவதிக்கு அதிக ஆர்வமில்லை என கொள்ளமுடியாது - அவளுக்கு இது எல்லாம் புதியதாகபடவில்லை. கிராமத்தில் நிறைய இதுபோல பார்த்துள்ளதால் அதிக கவனம் இல்லை. நான் மட்டும் ஓடி ஓடி - அவளையும் இழுத்து கொண்டு ஓடி ஓடி - ஒளிப்படம் எடுத்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கவனிக்க முடிந்தது - மற்ற நாட்களில் அலுவலக நெருக்கடி. புதிய திண்பண்டங்கள் - பெரும்பாலும் கிராமத்து உணர்வை கொண்ட உணவுகளை விற்க்கும் கையேந்தி வண்டிகளை சுற்றியும், 5 நட்சத்திர 'கரண்டி 50ரூபாய்' உணவுக்குமே கூட்டம் இருந்தது. கமர்கட்டும், தேங்காய் பருப்பியும் வாங்கினோம். அப்புறம் ஜிகர்தண்டா. இஞ்சி மொரப்பா... ஆடும் கலைஞர்களை விடவும், அடிக்கும் தாளத்துக்கு ஆடும் நம் சென்னை இளவட்டங்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. வெங்கடநாராயணா சாலையை விட பெசன்ட்நகர் கடற்கரை பரவாயில்லை - கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொண்டார்கள். சில கூத்துகளில் இரட்டை அர்த்தம் - ஆர்பரிக்கும் கூட்டம் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கத்தினார்கள். கத்த கத்த இரட்டை அர்த்தம் அதிகமானது. அதிலும் கானா பாட்டு பாடிய அம்மணி குலுக்கிய குலுக்கலில் - கூட்டம் சும்மா அதிருதுல்ல.. உண்மையாகவே அற்புதமான கலைகள் காண கிடைத்தையும் மறுக்க முடியாது. பொள்ளாச்சியில் இருந்து ஒரு தாள குழுவினர், திருவண்ணாமலையில் இருந்து ஒரு கூத்து நாடக குழு, ஒரு பஞ்சாபி நடன குழு மற்றும் பலர் மிகவும் அழகாக செய்தார்கள். கிளி ஜோஸ்யம், குறி கேட்பவர்கள் எல்லாம் இருந்தார்கள். புது மனைவியை கூட்டி போய் கிளி ஜோஸ்யம் பார்க்க போனால் அங்கே சனி விளையாடியது - அவன் ஒரு கூண்டில் இருந்து எலியை வரவைத்தான். அது ஒரு முருகன் படத்தை எடுத்து கொடுத்தது. அவன் கூசாமல் - "உனக்கு ரெண்டு பொண்டாட்டி" என்று சொல்லி விட்டான். ரேவதியும் நானும் சிரித்து விட்டு போடா வெண்ணை என்று காசு கொடுக்காமல் வந்து விட்டோம்.

தெய்வத்தால் ஆகாதெனினும்...

மூன்று வருடத்துக்கு முன்னால் மாதம் கிட்டதட்ட நான்கு லட்சம் சம்பளம். பொறியியல் படிப்பு. டெட்ராய்ட் நகரில் மென்பொருள் வேலை. உங்களில் அடுத்த இலக்கு எதுவாக இருக்கும்... நீங்கள் யோசிக்கும் அதே வினாடியில் செந்தில்குமார் என்ற இந்த நபர் வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு வந்தார். கிராமம் கிராமமாக அலைந்தார். தேனூர் என்ற ஊரில் ஒரு சிறிய மருத்துவமனை, ஒரு கணிப்பொறி அமைப்பு, குழந்தைகளுக்காக ஒரு மரத்தடி பாடசாலை - இத்தனையும் கைகாசில். இது வரை நாற்பது லட்சம் செலவாகி இருக்கிறது. மலிவான குழைவான வேஷ்டி - சட்டை, கேரியர் சைக்கிள், சாப்பாட்டு தூக்கு பாத்திரம், மஞ்சம் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி, ஒழுங்குபடுத்தபடாத தாடி மீசை முகம் - இவர் ஒன்றும் பெரிய குடும்ப வாரிசு கிடையாது. சாதாரண குடும்ப பிண்ணனி. "உலக வரலாறு படிப்பதை விட உங்களை சுற்றியுள்ள கிராமங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கல்வி கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த கல்வியை சொல்வோம். இயற்கை வேளாண்மை செய்கிறோம். 3000 மரங்கள் நட்டுள்ளோம். அரசாங்க பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரி நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் இன்னும் நிறைய செய்யலாம்." என்கிறார். "நல்லா படிச்சுட்டு நல்ல வேலைல இருக்கும் போதே 'இப்படி ஆயிட்டாரே' - அவருக்கு பொண்ணு குடுத்து என்ன பண்றது' என சொந்தங்கள் சொல்வதாக அவர் அம்மா கவலைபடுகிறார்.

புத்தக கண்காட்சி 2009

எந்த வருடத்தையும் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சி சந்தோஷமாக அமைந்திருந்தது. மனைவி மற்றும் இரு தோழிகளுடன் வழி நெடுக்க பேசி கொண்டே நடந்தோம். கொஞ்சம் கால் வலி இருந்தும், இத்தனை புத்தகங்களை ஒரு சேர பார்க்கும் சந்தோஷம் அதையெல்லாம் மறக்கடித்து விடும். கவிதாவும் சில புத்தகங்களை இந்த முறை வாங்கியது கூடுதல் சந்தோஷம். அனு வழக்கம் போல கை நிறைய அள்ளி கொண்டிருந்தாள். நானும் கொஞ்சம் வாங்கியிருகிறேன். ரேவதியும் அவள் பங்குக்கு கொஞ்சம் வாங்கியிருந்தாள். மொத்தத்தில் புத்தகவாசம் இன்னும் சில மாதங்கள் இருக்கும் அளவுக்கு புதிய புத்தக பூக்கள் வீடு முழுவதும். மூத்த பத்திரிக்கையாளர் ஞானி, மற்றும் மனுஷ்யபுத்திரன், சாரு ஆகியோரை சந்திக்க நேர்ந்தது. மனுஷ் என்னைவிட அனுவுக்கு நல்ல தோழர். உயிர்மெயில் சாருவும், சுஜாதாவுமே நிறைய இருந்ததால் அதிகம் வாங்கவில்லை. கி.ரா வின் புத்தகங்கள் மூன்றும் (கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள், நண்பர்களுடன் நான்), திலகவதியின் கல்மரம், இந்திராகாந்தி வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு என என் புத்தக தேர்வு இந்த வருடம் கொஞ்சமாகவே இருந்தது. மற்றும் சில சுவரஸ்யமான சிறு புத்தகங்களும் உண்டு (காமத்து பாலில் உளவியல், ஆதிசங்கரரின் காம சாஸ்திரம்). கொஞ்சம் சமையல் புத்தகங்களும் இருந்தது (குடும்பஸ்தனய்யா.!). கடவுள் பற்றிய ஒரு உளவியல் ஆய்வு - ரேவதியின் புத்தகம். சுவரஸ்யமான தொகுப்பு. அனுவின் புத்தகங்களை அவர்களுடைய வலைபூவில் பார்க்கலாம். நெடுநாள் நண்பர் ஒருவரை சந்தித்தோம். திருமண பரிசு மற்றும் எங்கள் ஜமாவில் கலந்து கொண்டு எங்கள் நாட்களை மேலும் கலகலப்பாக்கினார். முள்ளும் மலரும் திரைப்படம் சனிக்கிழமை நள்ளிரவு வரை பார்த்தோம். ஞாயிற்று கிழமை கறி குழம்பு மறுபடி புத்தக கண்காட்சி உலாவுமாய் கழிந்தது - மூன்று பெண்களின் லூட்டி வாரத்து களைப்பை எல்லாம் ஓரம்கட்டி விட்டது. எல்லாரும் கிளம்பி போன ஞாயிற்றி கிழமை இரவு - வெறிச்சென்று இருந்தது. நானும் ரேவதியும் மட்டும் கொஞ்சம் டிவி பார்த்துவிட்டு தூங்கிவிட்டோம். மறுபடி ஒரு புத்தக கண்காட்சி வந்தாலும் இது போல இருக்காது என்று மட்டும் நிச்சயம்.

எம்.என். நம்பியார்

ஒரு வில்லன் நடிகராக மட்டுமே எம்.என். நம்பியார் என் இளம் வயதில் அறிமுகமானார். திரையில் உள்ள நடிகரை, குவித்த மணலில் அமர்ந்து டெண்ட் கொட்டாயில் படம் பார்க்கும் அனேகம் பேரும் திட்டுவது எனக்கு குதூகலமாக இருக்கும். அதிலும் என் பாட்டி படம் பாத்துவிட்டு வரும் வழியெல்லாம் திட்டுவார். பிற்பாடு கெட்டவர்கள் என்ற வர்க்கத்தின் அடையாளமே நம்பியாரின் முகமாய் ஆகி போனது. வெகு நாட்கள் பிறகு அவரின் வேறுபட்ட நடிப்பை பாக்கியராஜிம் மற்றவர்களும் எடுத்துகாட்டிய பிறகு மதிப்பு மென்மேலும் உயர்ந்து போனது. வித்தியாசமான குரல் அமைப்பு, வசன உச்சரிப்பு, கண் ஜாடை, குணசித்திர வேடங்களில் மற்றவர்க்கு இடம் கொடுத்து நடிக்கும் பாங்கு - என எந்த திலகத்துக்கும் கொஞ்சமும் குறைந்தவராக அவர் இல்லை. என்னை பொருத்தவரை - எம். ஆர். ராதாவும் நம்பியாரும் இல்லாமல் இருந்தால் திலகங்களின் நடிப்பு மட்டுமே நடிப்பு என பேசபட்டிருக்கும். எந்த வயதிலும் நல்ல உடல் பயிற்சி, ஐயப்ப பக்தி என மேன் மேலும் ஆச்சரியங்களை கொடுத்தவர். அவர் மறைவுக்கு பின்னாலாவது அவரை பற்றி நிறைய பேர் பேசுவது திருப்தி அளிக்கிறது. நாடகதன்மையும் - நாடக தன்மை இல்லாத நடிப்பும் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் கொடுத்தது - திலகங்கள் கூட செய்யாதது.

செய்தி மற்றும் குறும்படங்கள்...

பொதிகையில் ஒளிபரப்பப்படும் இன்னொரு நல்ல விஷயம் - செய்திப்படங்கள் மற்றும் குறும் படங்கள். பெரும்பாலும் இவை வட இந்தியா சார்ந்ததாகவே ஒரு காலத்தில் இருந்தன. தமிழில் "டப்" செய்து ஒளிபரப்புவார்கள். தற்போது தென் இந்தியா சார்ந்ததாகவும் இருக்கின்றன. நல்ல ஒலி ஒளி அமைப்பு மற்றும் கரு அமைப்பு கொண்டதாகவே இந்த குறும்படங்கள் மற்றும் செய்தி படங்கள் அமையும். இசை பெரும்பாலும் அற்புதமான இந்துஸ்தானி - சில அபூர்வமான நேரங்களில் இளையராஜா. சில நாட்கள் முன்பு கட்டிட கலை அமைப்பு பற்றிய ஒரு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. வாசல் படி அமைப்பது தமிழர் கட்டிட கலை என்றும் காம்பவுண்ட் சுவர் அமைப்பது ஆங்கிலேய மரபு என்றும் எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான பிரபஞ்சன் சொல்லி கொண்டிருந்தார். பிறகு திராவிட கட்டிட கலை பற்றியும், ஊர் அமைப்பு பற்றியும் படிக்க விக்கிபீடியா உதவியது. ஒரு முறை தூர்தர்ஷனில் எலிபண்டா குகைகள் பற்றி அற்புதமான காட்சிகளுடன் ஒரு செய்திபடம் காண்பிக்கபட்டது. வேறு சில அரசியல் மற்றும் முந்தய தலைமுறை தலைவர்களின் வாழ்க்கை சம்பந்த பட்டதாக இருக்கும். இந்த குறும்படங்கள் மற்றும் செய்திபடங்களில் சேதி சொல்லும் குரல் மிக கவனம் ஈர்பதாக இருக்கும். கரகரப்பான அந்த குரலுக்குரிய முகத்தை ஒருமுறை அவர்கள் திரையில் காட்டலாம். என்ன - எப்போது எந்த நிகழ்ச்சி இருக்கும் - அது எப்போது முடியும் என அவர்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.