அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

Monday, March 16, 2009

சென்னை சங்கமம் 2009

ஒரு நல்ல கிராமிய விழாவாகவே நடந்தது இந்த வருட "சென்னை சங்கமம்". நிறைய கூட்டம், நிறைய கலைஞர்கள் - நிறைய "கலைஞர்" துதிகள். ரேவதிக்கு அதிக ஆர்வமில்லை என கொள்ளமுடியாது - அவளுக்கு இது எல்லாம் புதியதாகபடவில்லை. கிராமத்தில் நிறைய இதுபோல பார்த்துள்ளதால் அதிக கவனம் இல்லை. நான் மட்டும் ஓடி ஓடி - அவளையும் இழுத்து கொண்டு ஓடி ஓடி - ஒளிப்படம் எடுத்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கவனிக்க முடிந்தது - மற்ற நாட்களில் அலுவலக நெருக்கடி. புதிய திண்பண்டங்கள் - பெரும்பாலும் கிராமத்து உணர்வை கொண்ட உணவுகளை விற்க்கும் கையேந்தி வண்டிகளை சுற்றியும், 5 நட்சத்திர 'கரண்டி 50ரூபாய்' உணவுக்குமே கூட்டம் இருந்தது. கமர்கட்டும், தேங்காய் பருப்பியும் வாங்கினோம். அப்புறம் ஜிகர்தண்டா. இஞ்சி மொரப்பா... ஆடும் கலைஞர்களை விடவும், அடிக்கும் தாளத்துக்கு ஆடும் நம் சென்னை இளவட்டங்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. வெங்கடநாராயணா சாலையை விட பெசன்ட்நகர் கடற்கரை பரவாயில்லை - கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொண்டார்கள். சில கூத்துகளில் இரட்டை அர்த்தம் - ஆர்பரிக்கும் கூட்டம் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கத்தினார்கள். கத்த கத்த இரட்டை அர்த்தம் அதிகமானது. அதிலும் கானா பாட்டு பாடிய அம்மணி குலுக்கிய குலுக்கலில் - கூட்டம் சும்மா அதிருதுல்ல.. உண்மையாகவே அற்புதமான கலைகள் காண கிடைத்தையும் மறுக்க முடியாது. பொள்ளாச்சியில் இருந்து ஒரு தாள குழுவினர், திருவண்ணாமலையில் இருந்து ஒரு கூத்து நாடக குழு, ஒரு பஞ்சாபி நடன குழு மற்றும் பலர் மிகவும் அழகாக செய்தார்கள். கிளி ஜோஸ்யம், குறி கேட்பவர்கள் எல்லாம் இருந்தார்கள். புது மனைவியை கூட்டி போய் கிளி ஜோஸ்யம் பார்க்க போனால் அங்கே சனி விளையாடியது - அவன் ஒரு கூண்டில் இருந்து எலியை வரவைத்தான். அது ஒரு முருகன் படத்தை எடுத்து கொடுத்தது. அவன் கூசாமல் - "உனக்கு ரெண்டு பொண்டாட்டி" என்று சொல்லி விட்டான். ரேவதியும் நானும் சிரித்து விட்டு போடா வெண்ணை என்று காசு கொடுக்காமல் வந்து விட்டோம்.

புத்தக கண்காட்சி 2009

எந்த வருடத்தையும் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சி சந்தோஷமாக அமைந்திருந்தது. மனைவி மற்றும் இரு தோழிகளுடன் வழி நெடுக்க பேசி கொண்டே நடந்தோம். கொஞ்சம் கால் வலி இருந்தும், இத்தனை புத்தகங்களை ஒரு சேர பார்க்கும் சந்தோஷம் அதையெல்லாம் மறக்கடித்து விடும். கவிதாவும் சில புத்தகங்களை இந்த முறை வாங்கியது கூடுதல் சந்தோஷம். அனு வழக்கம் போல கை நிறைய அள்ளி கொண்டிருந்தாள். நானும் கொஞ்சம் வாங்கியிருகிறேன். ரேவதியும் அவள் பங்குக்கு கொஞ்சம் வாங்கியிருந்தாள். மொத்தத்தில் புத்தகவாசம் இன்னும் சில மாதங்கள் இருக்கும் அளவுக்கு புதிய புத்தக பூக்கள் வீடு முழுவதும். மூத்த பத்திரிக்கையாளர் ஞானி, மற்றும் மனுஷ்யபுத்திரன், சாரு ஆகியோரை சந்திக்க நேர்ந்தது. மனுஷ் என்னைவிட அனுவுக்கு நல்ல தோழர். உயிர்மெயில் சாருவும், சுஜாதாவுமே நிறைய இருந்ததால் அதிகம் வாங்கவில்லை. கி.ரா வின் புத்தகங்கள் மூன்றும் (கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள், நண்பர்களுடன் நான்), திலகவதியின் கல்மரம், இந்திராகாந்தி வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு என என் புத்தக தேர்வு இந்த வருடம் கொஞ்சமாகவே இருந்தது. மற்றும் சில சுவரஸ்யமான சிறு புத்தகங்களும் உண்டு (காமத்து பாலில் உளவியல், ஆதிசங்கரரின் காம சாஸ்திரம்). கொஞ்சம் சமையல் புத்தகங்களும் இருந்தது (குடும்பஸ்தனய்யா.!). கடவுள் பற்றிய ஒரு உளவியல் ஆய்வு - ரேவதியின் புத்தகம். சுவரஸ்யமான தொகுப்பு. அனுவின் புத்தகங்களை அவர்களுடைய வலைபூவில் பார்க்கலாம். நெடுநாள் நண்பர் ஒருவரை சந்தித்தோம். திருமண பரிசு மற்றும் எங்கள் ஜமாவில் கலந்து கொண்டு எங்கள் நாட்களை மேலும் கலகலப்பாக்கினார். முள்ளும் மலரும் திரைப்படம் சனிக்கிழமை நள்ளிரவு வரை பார்த்தோம். ஞாயிற்று கிழமை கறி குழம்பு மறுபடி புத்தக கண்காட்சி உலாவுமாய் கழிந்தது - மூன்று பெண்களின் லூட்டி வாரத்து களைப்பை எல்லாம் ஓரம்கட்டி விட்டது. எல்லாரும் கிளம்பி போன ஞாயிற்றி கிழமை இரவு - வெறிச்சென்று இருந்தது. நானும் ரேவதியும் மட்டும் கொஞ்சம் டிவி பார்த்துவிட்டு தூங்கிவிட்டோம். மறுபடி ஒரு புத்தக கண்காட்சி வந்தாலும் இது போல இருக்காது என்று மட்டும் நிச்சயம்.

Monday, April 28, 2008

கலர் பனியன் நினைவுகள்

சமீபத்தில் ஒருமுறை ஒரு சாலை சந்திப்பில் சில மாணவர்கள் பள்ளி பெயர் கொண்ட கலர் பனியன்களோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் என் பள்ளி நாட்களை நினைத்து பார்த்தேன். கலர் பனியன் கொடுத்து அணி பிரிக்கபட்டது மணி மேல்நிலைபள்ளியில் மட்டும்தான். அதற்க்கு முன்னெல்லாம் வெள்ளை சட்டை காக்கி டவுசரோடு புளுதி பறக்க விளையாட்டும் கொஞ்சம் மீறி போனால் சண்டையும் இருக்கும். ஆறாம் வகுப்பில் மணி மேல்நிலைபள்ளி. நான் கண்ணாடி அணிய ஆரம்பித்திருந்த காலம். சேர, சோழ, பாண்டிய, பல்லவ என 4 அணிகள் உண்டு - முறையே சிவப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை பனியன்கள் (போன முறை வீடு மாற்றும்போது ஒரு பனியன் திரும்ப கிடைத்தது). கொஞ்சம் நோஞ்சானாகவும் உயரமாகவும் கண்ணாடி அணிந்தவனாகவும் இருப்பதால் பல்லவா டீமில் ஒப்புக்கு சப்பாணியாக மட்டுமே வாழ்க்கை நகர்ந்தது. விளையாட போகாமல் இருந்ததால் மரத்தடியில் நின்று விளையாட்டு ஆசிரியர்கள் சொல்வதை கவனிக்கவும் நேரம் கிடைக்கும். கபடி, கோ-கோ, வாலிபால் மற்றும் பேஸ்பால் இருந்தது - சில விளையாட்டு நுணுக்கங்களை அவர்கள் சொல்வதில் இருந்து கவனித்து கொண்டு - ஏகலைவன் பாணியில் கற்று கொண்டது போல வட்டாரங்களில் எடுத்து விட உபயோகமாக இருந்தது. குறிப்பாக எதிர்பால் அணியிடம் இருந்து. அதிலும் சில கண்ணாடி தேவதைகள் உண்டு. முதலில் அதிகம் கவனிப்பு இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து நட்பு கொண்டு விட முடிந்தது. அப்புறம் அதன் கலர் விளைவுகள் எல்லாம் இருந்தன... எல்லாம் 2 வருஷம்தான். மறுபடி வேறு பள்ளி - வெள்ளை சட்டை (அழுக்காகும் என கருதினால் உள் பனியனோடு போராடலாம்) - காக்கிடிராயர் என வாழ்க்கை மாறிவிட்டது. அது எல்லாம் விளையாடுபவர்களுக்குதானே. நாம் தான் மரத்தடி சக்கரவர்த்தியாயிற்றே. ஆனால் என்ன - அது வெறும் ஆண்கள் பள்ளி. பின்னர் கல்பாக்கம் வந்த பிறகு - அது வேறுகதை. வேறு தோழர்கள், வேறு மரத்தடிகள் - வேறு வேறு அனுபவங்கள். இன்னும் கலர்பனியன்கள் எல்லாம் நினைவுகளையும் கொடுத்து கொண்டே இருக்கின்றன. நான் என் சிறு வயது பொம்மைகளுக்கு கூட பெயர் வைக்கும் பழக்கம் உள்ளவன். அவைகளுடன் எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு - அவைகளை வைத்து நான் நிறைய கதைகளை டைரக்ட் செய்து இருக்கிறேன். அந்த பொம்மைகள், இந்த கலர் பனியன்கள், வாழ்க்கை கல்வி வகுப்பறையில் செய்த ஜிகினா பந்து, பிலாஸ்டிக் சட்டத்தில் நெய்யபட்ட புறாக்கள் (முழுக்க முடிக்கவில்லை) - இவை எல்லாவற்றுடன் சில நோட்டு புத்தக காதிதங்கள் - சிலரின் கை எழுத்துகள் அதில் இருக்கும் (எல்லாம் அவள்கள்தான்..)... இன்று பார்க்கும் போது கொஞ்சம் நமுட்டு சிரிப்பு வந்தாலும் அவை எல்லாம் நந்தவனத்து நினைவுகள் இல்லையா.. பள்ளிகூட நினைவுகள் என்பது ஒரு சில மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ நினைத்து கொள்வது அல்ல - அது ஒரு காலத்தை நினைத்து பார்ப்பது...

Monday, November 05, 2007

மனசு இழுத்து செல்லும் பாதைகள்

ஜெயமோகன் தனது ஒரு பேட்டியில் 'ஒரு திரைப்படத்தின் ஏதேனும் ஒரு காட்சியில் மனசு எங்கியோ போய்விடுகிறது' என்கிறார். படித்து கொண்டிருக்கும் போதே, இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டதை யோசித்து பார்த்தேன். பல திரைப்படங்கள் மட்டுமல்ல, நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வாழ்வியல் அனுபவங்கள், விவாதங்கள் ஏன் மவுனங்களில் கூட மனது ஏதோ ஒரு புள்ளியில் லயித்து போகிறது. நமக்கும் அந்த புள்ளிக்குமான உறவு சட்டென வெளிச்சமாகிவிடுகிறது. அதன் மேல் ஒரு மையல் கொள்கிறது - ஆழ்ந்த காதல் அனுபவம் என்று கூட சொல்லலாம். என்னை பொருத்தவரை மிக அற்புதமான ஒரு உணர்வு அது. அந்த கனவு பாதைகளை தொடர்ந்து புள்ளி தொடும் தூரத்தில் ஒரு எண்ணம் கலத்தல் உண்டாகிறது. சொல்ல போனால் நிறைய சொல்லலாம் - எல்லாம் சொல்லிவிட்டால் மனசு என்ன தீர்ந்தா போய்விடுகிறது - நிரம்பி தழும்பும் தாமரை குளம் போல அது.

Sunday, October 08, 2006

தெருவிழாக்கள்...

சில வாரங்களுக்கு முன்பு நான் தங்கியுள்ள பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா. சென்னையில் கோவில் திருவிழா பாடல்கள் கூட கொஞ்சம் முரட்டுதனமாகவும் மரியாதையில்லாமலும்தான் இருக்கின்றன.. வருவியா..வரமாட்டியா என சாமியையே கொஞ்சம் மிரட்டுகிறார்கள். அப்புறம் மேடை போட்டு ஆட்டம். சினிமா பாடல்களுக்கு விடலை பசங்களின் குத்தாட்டம்.. கூட்டத்தில் நிற்க்கும் இளம்பெண்களை குறிவைத்த
சினிமாத்தனமான ஆட்டம். 50 ரூபாய் டிசர்ட்டும் 100 ரூபாய் ஜீன்ஸும் போட்ட சூர்யாக்களும், விக்ரம்களும், விஜய்களும்...கூட ஆடும் ஜோதிகாக்களும், சினேகாக்களும்.. இன்னும் பிற கதாநாயகிகளும். ஒரு குறிப்பிட்ட வயதில் தன்னை ஒரு பிரபலமான நடிகராகவோ, நடிகையாகவோ.. கொஞ்சம் அவர்களின் சாயலாகவோ நினைத்து கொள்ளும் போதையின் விளைவு இது... கோவில் திருவிழாக்கள் இதற்க்கு நிறைய வழிவகை
செய்கின்றன. முன்னரெல்லாம் ஆர்கெஸ்டிரா வைப்பார்கள்...எ.ஆர் ஈஸ்வரியின் போதை பாடல்கள் நிச்சயம் இருக்கும். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்.. கூத்து.. காணாமல் போய்விட்ட விஷயங்கள் நிறைய உண்டு திருவிழாக்களில். எங்கள் ஊரில் தேர் திருவிழா நேரத்தில் நாடகம் போடுவார்கள். கோழி சண்டை உண்டு... வழக்கமான கரகாட்டம் உண்டு. கரகாட்டம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் சிரிப்பை அடக்கி கொண்டு
ரகசியமாய் ரசிக்கும் காம வேடிக்கைகள்...பாட்டுகள்.. அதன் அர்த்தங்கள் சிலருக்கே புரியும்.. புரியாதவர்கள் விடலைகள்.. பல அர்த்தங்களை கொண்டு சிரித்து கொள்ள வேண்டியதுதான்.. சில வீடுகளில் வி.சி.ஆர் வைத்து படம் போடுவார்கள். ஊர் ஊராய் வரும் சினிமா வண்டி (கடலை காட்டுக்குள் திரை கட்டி படம் போடும் குழு) வந்தால் கூட்டம் அங்குதான் இருக்கும். பெறும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்... கொஞ்சம் வசதிபடைத்த விடலைகளுக்காக (மீசை நரைத்த பெரிசுகளுக்கும்தான்) ரெக்கார்டு டான்ஸ்... பெறும்பாலும் ஊருக்கு வெளியே... சில சமயம் அது வெட்டு குத்து அளவுக்கு போவதுண்டு.. ரெக்கார்டு டேன்ஸ் பெண்கள் ஆண்களுக்கு பெண் வேடம் போட்டது போல இருப்பார்கள். வெகு அரிதாக அழகான பெண்களும் வருவதுண்டு... ஆனாலும் மொத்த ஆட்டத்தில் சில நிமிடங்களே வரும் சுத்தி சுத்தி ஆடும் அழகுக்காக சாராயமும், வருத்த கறியும் காசும் கொண்டு பார்த்து விட்டு.. "போன தடவ மாதிரி இல்ல மாப்ள.. " என்று வருத்தபட்டு கொண்டு வரும் சமுதாயம்.. சில சமயங்களில் சைக்கிள் கட்டி கொண்டு திருட்டிதனமாக ரெக்கார்ட் டேன்ஸ் பார்த்ததுண்டு... கரகாட்ட தேவதைகளை தொடர்ந்து கொண்டு அடுத்த ஊர் வரைக்கும் போனதுண்டு... இன்றும் ஊர் பக்கம் போகும்போது அந்த கடலை காடும், காட்டு தேவதை கோவில் மண்டபங்களும் அன்று நடந்த ஜால்ரா சலங்கை சத்தங்களை நினைவூட்டுவதுண்டு...