அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, March 05, 2008

கோடுகளின் ஆதி

ஆதிமூலம் அய்யாவின் ஓவியங்கள் எனக்கு அறிமுகமாகும் முன்னர் டிராஸ்கி மருதுவின் ஓவியங்கள் மட்டுமே கோட்டோவியங்கள் என அறிமுகம் ஆகியிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அய்யாவின் ஓவியங்களில் தீவிரமானேன். அது மருது அய்யாவின் மரியாதையை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. நவீன ஓவியங்களின் அறிமுகமாகவே இருவரது ஓவியங்களும் இருந்தது. இயல்பான விஷயங்களை அழுத்தமான கோடுகள் வேறு ஒரு புலனுடன் என்னுள் பதிக்க தொடங்கின. என் ஓவியங்கள் பெரும்பாலும் அப்ஸ்டிராக்ட் மற்றும் சர்ரியலிச சார்புடையவை - நான் திட்டம் போட்டு வரைவதில்லை - இஸங்கள் சூழ்நிலைக்கேற்ப்ப கடைபிடிக்கபடும். அய்யாவின் ஓவியங்களின் பாதிப்பு மெல்ல என்னுள் எழ ஆரம்பித்தது அவருடைய ஓவியங்களின் முகங்களை பார்த்துதான். திட பொருட்கள் பற்றிய ஓவியங்களும் ஒரு காரணமான போதிலும் - முகங்கள் காரணமானது அவை திறந்து விட்டு கொண்டிருந்த நினைவு ஜன்னல்கள்தான். எல்லா முகங்களும் எங்கோ எப்போதோ காலத்தின் அடுக்குகளில் பார்த்த முகங்களாகவே இருந்தது - இது ஒருவித அடையாள குழப்பமாகவும் இருக்கும் என நினைக்கிறேன் - எனினும் - பெயர் தெரியாத ஆனால் வாழ்வின் ஏதேனும் ஒரு புள்ளில் இவர்களை சந்தித்திருந்தோம் என்ற நினைவு மிகவும் ஆழமாகயிருக்கும். இதனை விந்தை எனவும் சொல்லலாம் - ஆனால் நான் அய்யாவின் ஓவியங்களில் உள்ள மனித முக உணர்வு வெளிப்பாடு எனவே கொள்கிறேன். ஆழமான கருப்பு வெள்ளை கோடுகள் மற்றும் அழுத்தமான கோடுகள் அவற்றை சார்ந்து மனம் போனபடி வரைந்ததோ என நினைக்கவைக்கும் சார்ப்பு கோடுகள் - வேறு ஒரு கோட்டோவிய காலத்தை எனக்குள் பதித்ததால் - கொஞ்சமாய் அவரை பின்பற்றவும் தொடங்கியிருக்கிறேன். அவருடைய மரணம் ஓவிய காலத்தின் ஒரு மாபெரும் இழப்பு.

அழகும் அறிவும்

குமுதம் பத்திரிக்கையின் ஒரு செய்தி தலைப்பு இந்த பதிவுக்கு ஒரு முக்கிய காரணம் - அழகான மனைவி இருக்கும் கணவர்கள் ஏன் அடுத்த பெண்களை தேடுகிறார்கள் என்றது பத்திரிக்கை செய்தி தலைப்பு. பொதுவில் அழகு என்பதனை வெறும் உடல் ரீதியான விஷயமாகவே சமுதாயம் கருதுகிறது - பத்திரிக்கைகள் சமுதாய கருத்துகளை பிரதிபலிக்கின்றன. அழகான (உடல் ரீதியாக) பெண்கள் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என கருதமுடியாது - என் பழைய கம்பெனி சி.இ.ஒ சொல்வார் - பார்க்க ஐஸ்வரியா ராய் போலவும் புத்திசாலிதனத்தில் இந்திரா காந்தியும் கிடைக்கமாட்டார்கள் என்று. அது சில நேரங்களில் உண்மைதான். பெரும்பாலான இன்றைய ஆண்களுக்கு நிறைய அலுவக சமுதாய பிரச்சனைகள் இருக்கின்றன - அவை பெரும்பாலும் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் கருத்தாக கொண்டவை. சிலருக்கு அது தொழில்முறை இல்லாத - கலை, இலக்கியம், ஓவியம், இசை, சினிமா, புத்தகங்கள் எனவும் இருக்கலாம் - இந்த கருத்துகளை பேசும் பெண்கள் மேல் பொதுவாகவே ஆண்களுக்கு ஒரு ஆளுமை ரீதியாக ஈர்ப்பு உண்டு. இன்றைய பெரும்பாலான பெண்கள் இன்னும் அந்த அளவு வளரவில்லை எனலாம் - அவர்கள் சம்பாதிக்கிறார்கள், செலவும் சேமிப்பும் செய்கிறார்கள் - ஓரளவு எல்லா உலகவிஷயங்களிலும் ஈடுபடுகிறார்கள் - ஆனால் பேச விரும்புவதில்லை. அவர்களின் உலகம் வேறாக இருக்கிறது - அது அவர்களின் தவறும் இல்லை, மிகவும் இயல்பான விஷயம் அது. எனவேதான் ஆளுமை ரீதியாகவோ நட்பு ரீதியாகவோ மற்றும் ஆறுதல் அல்லது யோசனைகளை கொடுக்கும் பெண்கள் ஆண்களை மிகவும் ஈர்க்கிறார்கள். அந்த பத்திரிக்கை செய்தி நடிகை ஷோபனா சம்பந்தபட்டது - அவரின் வயது, அனுபவம், பழகும் விதம் மற்றும் சமுதாய பொருதார சிந்தனைகள் (அவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நாட்டிய நாடகத்திலும் சினிமாவிலும் அனுபவம் கொண்டவர்) ஆகியவை ஒரு குறிபிட்ட ஆணை ஈர்த்து இருக்கலாம் - இந்த குணாதிசியங்கள் அவருடைய மனைவிடம் இல்லாமல் இருந்திருக்கலாம் - அது ஒரு நட்பு அல்லது உறவுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம். ஆனால் பத்திரிக்கை செய்தி "செக்ஸ்" என்ற ஒரு கோணத்திலேயே அமைந்து இருக்கிறது. என் தோழன் ஒருவன் உண்டு - அவனுக்கு ஒரு இளவயது காதலியும் உண்டு. எப்போதெல்லாம் அவன் தன் அலுவக மற்றும் வாழ்க்கை பற்றிய விஷயங்களை பற்றி பேசுகிறானோ அப்போதெல்லாம் அந்த பெண் அவன் ரொம்பவும் போர் அடிப்பதாக கோபித்து கொள்வதுண்டு - ஒரு ஆண் எல்லா நேரங்களிலும் பெண்ணுக்கு விருப்பமான விஷயங்களையே பேச முடியாது - அந்த பெண்ணை அடிப்படையாக கொண்டே அவன் உலகத்தை இயக்கி கொள்ள முடியாது - அவளுக்கு வேண்டும் போதெல்லாம் அருகில் நிற்க முடியாது - அவனுக்கும் வாழ்க்கை உண்டு - அவனுக்கும் அதே தேவைகள் உண்டு - பெண்களை போலவே ஆண்களுக்கும் அந்தரங்கக தனிமை தேவைபடுகிறது அல்லது அந்தரங்க விருப்பு வெறுப்புகள் உண்டு. இதனை பெரும்பாலான பெண்கள் புரிந்து கொள்வதில்லை - புரிந்து கொள்ளும் பெண்களை ஆண்களுக்கு பிடித்து போகிறது - அவன் இயல்பாக அப்படிபட்ட பெண்கள் மேல் ஈர்ப்பு கொள்கிறான் - இந்த விதி பெண்களுக்கும் பொருத்தமானது - இது திருமணம் அல்லது விதிக்கபட்ட காதலுக்கு பின் ஏற்படுமாயின் அதன் காரண வேரை முழுமையாக அறியாமல் வெறும் உடல் ஈர்ப்பென பார்ப்பது அநாகரீகம்.

Monday, March 03, 2008

குருவின் இழப்பு

எழுத்தாளர் சுஜாதா - இன்றைய எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மானசீகமான குரு. பெரும்பாலான வலைபூ எழுத்தாளர்களுக்கு ஒரு முழுமையான ஆசான். உரைநடை, எழுத்து அமைப்பு, கருத்து வெளிப்பாடு, மென்மையான நகைச்சுவை, எந்த துறையிலும் துல்லியமான விவரங்கள், படிக்கும்போதே விரியும் காட்சி அமைப்பு மற்றும் புத்திசாலிதனமான உரையாடல் என அவரின் ஆளுமை செல்லாத இடமே இல்லை. எல்லா துறைகளை பற்றி படிக்கும் பழக்கத்தையும், இன்றைய படிக்கும் மனிதர்களிடையே இருக்கும் மனோபாவத்துக்குரிய எழுத்து முறை மாற்றத்தையும் அவரை தவிர வேறு யாரும் அறிமுகபடுத்தவில்லை. பார்பன எண்ணங்களை விதிக்கிறார் என்ற குற்றசாட்டுகளையும் தாண்டி வெகுஜன மற்றும் குறும்பத்திரிக்கை, சினிமா, ஆன்மீகம், அறிவியல், மெல்லிய நகைச்சுவை, வாழ்க்கை பற்றிய நிதர்ச்சனங்கள் என எல்லா பிரிவுகளிலும் ஒரு சகஜமான நட்புணர்வு அவர் எழுத்துகளில் இருந்தது. அவர் மறைவு - தமிழ் எழுத்து உலகத்துக்கு ஒரு பெறும் இழப்பு - ஒரு குருவின் இழப்பு போல.

முயற்சி திருவினையாக்கும்

அம்மாவுக்கு வயது 56 ஆகிறது. என் இளம்பிராயத்தில் இருந்தே நிறைய சுலோகங்களை சொல்லி கொடுத்தது அம்மாதான். சமஸ்கிரதமாகினும் தமிழானாலும் ஸ்லோகங்கள் சாதாரண வார்த்தைகளை கூட சுத்தமாக உச்சரிக்க உதவுகின்றன என்பது என் அனுபவபூர்வமான எண்ணம். நான்கு மாதங்களுக்கு முன்னால் சிறு உடல்நல விஷயம் காரணமாக அம்மாவுக்கு ஒரு விசித்திரமான விளைவு ஏற்பட்டுவிட்டது. அவர்களால் சிந்திக்க முடிகிறது - வார்த்தைகளை கோர்வையாக சிந்திக்கவும் அவற்றை உச்சரிக்கவும் மிகவும் பிரயத்தனபட வேண்டியதாயிற்று. ஒரு வார இறுதியில் நான் அவர்களுடன் மருத்துவமனையில் இருந்தேன். எனக்கு நினைவு தெரிந்த சில சுலபமான சுலோகங்களை கூட நான் சொல்ல சொல்ல அவர்களால் திருப்பி சொல்ல முடியவில்லை. மெல்ல மெல்ல ஒரு ஸ்லோகம் மட்டுமே சொன்னார்கள் - நான் இன்னும் சில ஸ்லோகங்களை தினமும் உச்சரிக்க சொன்னேன். மெல்ல மெல்ல நினைவுகளில் இருந்து வார்த்தைகளை தேடி, தொடர்புபடுத்தி, உச்சரிக்க ஆரம்பித்தார்கள் - அதில் ஒரு குழந்தையின் பிராயத்தனம் தெரிந்தது. என்னுடனான தொலைபேசி அழைப்புகளில் எல்லாம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இந்த முறை வீட்டுக்கு வந்தபோது அந்த முயற்சியின் விளைவுகள் கண்கூடாக தெரிகிறது - அவர்களால் தெளிவாக பேச முடிகிறது - சிந்திக்க முடிகிறது - கொஞ்சம் தடுமாற்றங்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி - சில வினாடிகள் சிந்தித்து வார்த்தைகளை கோர்வைபடுத்தி - தன்னால் முடிகிறது எனும் குழந்தையின் வெற்றி புன்னகையோடு அவர்கள் பேச பேச - நிஜமாகவே நான் உணர்ச்சிவசப்படுகிறேன். முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும் எனும் சொல்லாக்கம் நிஜமாவதை காண்கிறேன். மேலும் சில மாதங்களுக்கு முன்னால் காது தெளிவாக கேட்கும் கருவி பொருத்திய பிறகு - கிட்டதட்ட 40 வருடங்களாக மெல்ல மெல்ல இழந்த கேட்கும் சக்தி திரும்பி - சைக்கிள் மணி, குழந்தை, வானொலி, பறவைகள் மற்றும் இசை என எல்லாவற்றையும் கிரகித்து கொள்கிறார்கள். அம்மாவின் பழக்கம் தனக்கு தெரிந்தவற்றை புரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுதல் - பொதுவாக என்னுடன் நிறைய பேசுவார்கள் - இப்போது எல்லாம் இன்னும் நிறைய பேசுகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் படிக்கிறார்கள் - தொலைகாட்சி பார்க்கிறார்கள் - என்னுடன் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன. வெகுநாள் காணாத தோழமையிடம் வருடத்து கதைகளை பகிர்ந்து கொள்ளும் பள்ளி குழந்தை மனதை காண்கிறேன். இயற்கை எனும் கடவுளை நான் நம்புகிறேன் - காலம் காயங்களை தோற்றுவிக்கும் வேகத்தோடு அவற்றை மறையவைக்கும் மருத்துகளையும் சம்பவங்களாக கொடுத்துகொண்டுதான் இருக்கிறது.

Monday, November 05, 2007

செக்ஸ் கல்வி

பெரும்பாலருக்கு செக்ஸ் கல்வி பற்றிய அறிவு என்பது புஜியம் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பேசும் பெற்றோரை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது. செக்ஸ் கல்வி என்பது எப்படி செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல - அதல்லாம் சொல்லி கொடுத்து வருவது இல்லை. முறையான செக்ஸ் என்ன, பாதுகாப்பு என்ன, சுயம் அறிதல் என்ன, சுகாதாரம் என்ன, உடல் உறுப்புகள் என்ன என்பதனையும் ஆணுக்கு பெண் பற்றியும், பெண் ஆண் பற்றியும் ஒரு அறிவும் கொடுப்பதுதான் செக்ஸ் கல்வி. கேட்டால் அதுதான் டிவியும் சினிமாவும் சொல்லி கொடுக்கிறதே என்கிறார்கள் - மார்பும் இடுப்பும் குலுக்கி ஆடும் ஆட்டமும், கட்டி பிடித்து உரசி கொள்வதும்தான் செக்ஸ் என்றால் - குழந்தை பிறப்பு என்பது கொக்கு கொண்டு வந்து போடும் விஷயம் என்ற அளவில்தான் செக்ஸ் அறிவு மக்களுக்கு இருக்கிறது என்று பொருள். 8ஆம் வகுப்பில் உடல்கூறு கல்வி என்று ஒரு விஷயம் அறிவியலில் இருக்கிறது - பல வாத்தியார்கள் அதனை கற்பிப்பதில்லை. செக்ஸ் பெரும்பாலருக்கு முறையற்ற வழியில்தான் அறிமுகம் ஆகிறது - தெளிவனா அறிவு இல்லாமலேயே , பல பெண்கள் ஆர்கஸம் என்றால் என்ன என்று தெரியாமலேயே, பெறும் பாலான ஆண்கள் தங்கள் திருப்தி அடைந்தவுடனே தூங்கி... குழந்தை பெற்றும் கொள்கிறார்கள் - அட ஏதாவது படித்தால்தானா ஏதாவது முழுசாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் - காம சூத்திரா புத்தகம் வாங்க வெட்கபடுகிறவர்கள், முக்குகடையில் சிவப்பு நாடாவும் மஞ்சள் நிலவும் வாங்குகிறார்கள். எது செக்ஸ் என்பதிலேயே குழப்பம் இருப்பதாக படுகிறது எனக்கு. செக்ஸ் உடம்பு கிடையாது - ஆரோக்கியமான மனதுதான் என்றால் யாருக்கும் புரிவதில்லை. உடல் உறுப்புகள் வெறும் எலும்பும் சதையும்தான் - மனசு ஆரோக்கியமான செக்ஸால் சூழப்படும்போதுதான் அது முழுமையான செக்ஸை கொண்டுவருகிறது. மனசு இல்லாத வெறும் கிளர்ச்சி என்பது ஒரு வகை வன்முறை. இந்த லட்சணத்தில் முறையான ஒரு அறிவு கொடுக்க தடை விதித்து சங்கம் வைக்கிறார்கள் - எதை அல்லது யாரை பாதுக்காகிறார்கள் என்றே தெரியவில்லை. கலாச்சார பாதுகாப்பு கடை விரித்து தெருவில் போகும் பெண் புடவை விலகினால் கூட வெறித்து பார்க்கும் அறிவு இல்லாத எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள். பெண்ணின் மாத பிரச்சனையை கூட செக்ஸாக கருதும் அளவுக்கு - ஒரு நாப்கின் வாங்க கூட ஆண்கள் அதிகம் இல்லாத மருந்து கடையை நாடும் அளவுக்கு குழப்பம் இருக்கிறது. வாய் கிழிய பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை - முதலில் செக்ஸ் கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் அதை பற்றிய கருத்துகள் வரட்டும். ஆரோக்கியமான உடல் நலமும் மன நலமும் வேண்டும் என்றால் எதுவும் முறையாக தெரிந்து கொள்ளட்டும். பத்திரிக்கைகளும் பிற ஊடகங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் - வெறும் வியாபாரத்துக்காக மோதவிடுதலில் யாருக்கும் நல்லது இல்லை.