ஒரு ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னவாக இருக்க முடியும். இந்த கேள்வியும் பதிலும் பல முறை நான் பலரிடம் விவாதித்த விஷயங்கள்தான். என் வாழ்விலும் முழுக்க தெரியாமலேயே கொஞ்சம் கடைபிடித்தும் கொண்டிருக்கிறேன்.. எனினும் இதே கருத்தை வாழ்க்கை பற்றிய பல்நோக்கு அனுபவம் கொண்டவரிடத்திலும் இருந்து படிக்க நேர்வது ஒரு நல்ல அனுபவம்...
கேள்வி: பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்.
பதில்: மதிக்கபடுவதை; தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கபடுவதை; நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கபடுவதை; தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை; தன் பலத்தை கொண்டாடும் குணத்தை; ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும்தான் என்னும் உயிரழுத்தும் ஸ்பரிசத்தை; சபையில் கொடுக்கும் கெளரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை; தாம்பத்யம் முடிந்த தருணங்களில் "குளியல் அறைக்கு முதலில் நீ போ" என்று வழங்கப்படும் முன்னுரிமையை;
அடிப்படையில் இது பெண் விரும்பும் விஷயங்கள் மட்டும் கிடையாது - ஆணும் கிட்டதட்ட இதே விஷயங்களை பெண்ணிடமிருந்து விரும்புகிறான் - ஒருவருக்கு ஒருவர் இதனை பரிமாறி கொண்டால் மட்டுமே உறவு சாத்தியபடுகிறது. இது வெறும் வார்த்தை கோர்வைகள் அல்ல - வாழ்க்கை. மனிதரை மனிதர் மதிக்கும் பாங்கு. உறவு பலப்பட உதவும் மந்திரம் - எனினும் இதனை புரிந்து கொள்ளும் மனங்களுடன் மட்டுமே எதுவும் சாத்தியபடுகிறது.
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Monday, November 05, 2007
மனசு இழுத்து செல்லும் பாதைகள்
ஜெயமோகன் தனது ஒரு பேட்டியில் 'ஒரு திரைப்படத்தின் ஏதேனும் ஒரு காட்சியில் மனசு எங்கியோ போய்விடுகிறது' என்கிறார். படித்து கொண்டிருக்கும் போதே, இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டதை யோசித்து பார்த்தேன். பல திரைப்படங்கள் மட்டுமல்ல, நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வாழ்வியல் அனுபவங்கள், விவாதங்கள் ஏன் மவுனங்களில் கூட மனது ஏதோ ஒரு புள்ளியில் லயித்து போகிறது. நமக்கும் அந்த புள்ளிக்குமான உறவு சட்டென வெளிச்சமாகிவிடுகிறது. அதன் மேல் ஒரு மையல் கொள்கிறது - ஆழ்ந்த காதல் அனுபவம் என்று கூட சொல்லலாம். என்னை பொருத்தவரை மிக அற்புதமான ஒரு உணர்வு அது. அந்த கனவு பாதைகளை தொடர்ந்து புள்ளி தொடும் தூரத்தில் ஒரு எண்ணம் கலத்தல் உண்டாகிறது. சொல்ல போனால் நிறைய சொல்லலாம் - எல்லாம் சொல்லிவிட்டால் மனசு என்ன தீர்ந்தா போய்விடுகிறது - நிரம்பி தழும்பும் தாமரை குளம் போல அது.
தமிழா..! தமிழா..?
"கற்றது தமிழ்" - முதலில் என் மனதில்பட்ட ஒரு விஷயம் - அழகான திரைப்படம். நல்ல இசை அமைப்பு, நல்ல வசனங்களும் பாடல்களும், நல்ல ஒளிப்பதிவு - எல்லாம் கொண்டு நல்ல ஒருங்கிணைப்பு. திரைப்படம் பற்றிய விமர்ச்சனங்களை பல இணைய தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் எல்லாரும் படித்திருக்கலாம் - பல பரிமாணக்களை கொண்ட கருத்துகளை கூட நான் கவனித்தேன். என்னை பொருத்தவரை ஒரு பின்நவீனத்துவ அடிப்படை உணர்வை நான் கதை சொல்லும் பாணியில் கவனித்தேன். மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் பயணம் செய்கின்றன - காதல், தேடல், தன்னுள் தொலைந்து போதல் என்னும் வேறு வேறு பரிமாணம் கொண்ட உணர்வுகள் பதிவு செய்யபட்டுள்ளன. ஒரு மனநோயாளின் பயணங்களை, நான் பார்த்த எந்த திரைப்படத்தையும் விட இக்கதை அருமையாக பின் தொடர்ந்து உள்ளது. தமிழ் சார்ந்த படிப்பு மட்டுமே கதாபாத்திரத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று வலியுறுத்தபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை - அவன் பொருளாதாரம் மற்றும் சுய ஒழுக்க குழப்பங்கள் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறது. காசு இருந்து தனிமையும் இருந்தால் - எந்த சாமியும் கொஞ்சம் சாராயமும் கறியும் பெண்ணும் கேட்கும்.
தமிழ் வாத்தியார் வேலையும் அதன் குறைந்த பொருளாதாரமும் ஒரு பின்புலமாகவே நான் கொள்கிறேன். போலீஸ் பிரச்சனையில்தான் அவன் ஓட்டம் ஆரம்பிக்கிறது - அதற்கு காரணம் ஒரு போலிஸ் அதிகாரியின் பெண் வேட்கை - அந்த பிரச்சனையில் இருந்து அவன் வெளிவர முடியாமைக்கு அவன் பொருளாதாரம் என்ற லேசான பின்புலம் - அதற்கு பிறகு வருவதெல்லாம் நாடகம். மற்றொரு பரிணாமமாகிய - அவனுக்கும் அவளுக்கு உள்ள காதலும், அவனுக்கும் அவன் தமிழ் வாத்தியாருக்கும் உள்ள நட்பும், அவன் பயணங்களும் - மிக அற்புதமாக கவிதைகள். காதலை உள்கொண்ட ஆணும் பெண்ணுமாய் உயிர் அலைகிறது. கதை அமைப்பின் உறுத்தல்களாய் கொஞ்சம் ஒப்பனையும் உடையலங்காரங்களும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மரணங்களால் அறிமுகபடுத்தி கொள்ளும் பாத்திர நேர்த்தியும், குழந்தை வாழ்க்கைக்குள் தொலைந்து போகும் குணமும், சின்ன சின்ன சிறுகதை அமைப்புகளை போன்ற கதை அமைப்பும் - ஒரு நாவலை உணரும் அனுபவம் எழுகிறது. ஒரு நிமிடம் இந்த திரைப்படம் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து பதிவு செய்யபடும் அனுபத்தை யோசிக்கும் போது - மிக அற்புதமான கதை களம் விரிகிறது. தமிழ் ஆசிரியரின் பார்வையில் வேறு ஒரு கோணம். என் மற்ற பதிவுகளிலும் இந்த திரைப்படம் பற்றிய சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன். மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக ராமை நான் சிந்திக்கிறேன். இந்த திரைப்படம் நிறைய யோசிக்கவும் நிறைய பேசவும் வைக்கிறது - அது நிச்சயம் தமிழ் படித்த அவலம் பற்றி அல்ல. மனித வாழ்க்கை பற்றி - எதிர் கோண சிந்தனைகள் பற்றி, உறவுகள் பற்றி, உணர்வுகள் பற்றி - இன்னும் நிறைய. என்னை பொருத்தவரை - இன்னும் செய்திருக்கபட வேண்டிய நிறைவான திரைப்படம்.

காமம் என்பது பொதுவானது...
ஒரு சமீபத்திய பத்திரிக்கையில் அரவாணிகளின் வாழ்க்கை பற்றிய கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. மூன்றாம் பாலினமாகிய அவர்களை சினிமாவும் மற்ற ஊடகங்களும் எங்கனம் பதிவு செய்கின்றன என்பதை பற்றிய மாறுபட்ட சிந்தனைகளுக்கு நடுவே அவர்களின் காமம் சார்ந்த வாழ்வு பற்றி சில ஆங்கில இணையதளங்களில் படிக்க நேர்ந்தது. ஒரு மிக இயல்பான உடல் உணர்வை - அரவாணிகளை கொண்டு பெரும்பாலும் ஒரு அவமானத்துக்கு உரிய விஷயமாகவே உலகம் எங்கும் வெளிப்படுத்தபடுகிறது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனக்கு உள்ள உடல் வேட்கையை தீர்க்கும் வழிகள் ஆயிரம் புத்தகங்களிலும் ஆயிரம் விவாதங்களும் சொல்லி கொடுக்கபடுகிறது. அரவாணிகளின் உணர்வுகளை - உயிர் கொள்ளும் வலியை சொல்ல யாரும் கிடையாது. அரவாணிகளுடனான உடலுறவு ஒரு மிக அவமானத்துக்கு உரிய விஷயமாகவே உள்ளது. கேலிக்குரிய விஷயமாகவே ஊடகங்களில் வெளிப்படுகிறது. சக மனிதராக கூட அவர்களை மதிக்க முடியாத சமூகம் - "அது" என்ற அKறிணையில் விளிக்கும் போதும், கேலி பேசும் போதும் - நான் கூட மவுனியாகதான் இருக்கிறேன் - என்னை சுற்றிய சமூகத்தின் பார்வையில் நான் யார் என்ற கேள்வியும் கேலியும் எழும் என்பது அறியும்போது.
புளியமரத்தின் கதை
நான் முதல் முதலில் சு.ரா பற்றிய குறிப்புகளை மட்டுமே படித்திருந்தேன். அதுவும் அவர் மரணத்துக்கு பிறகுதான். அப்புறம் ஒரு நண்பர் மூலமாக "ஜெ.ஜெ. சில குறிப்புகளை" படித்தேன்.. ஒரு விதமான புது அனுபவமாகவே இருந்தது.. ஒரு மனிதரை - உணர்வு ரீதியாக விரும்பி கொஞ்சம் வெறுத்து, நிறைய கவனித்து நிறைய சுய ஆலோசனை செய்து, அவரை தொடர்ந்து சென்று ஆதர்சனம் செய்யும் ஒரு அனுபவம். இன்னும் சில முறையாவது படிக்க வேண்டிய நாவல் அது. சிறுகதைகளையும் மற்ற நாவல்களையும், சில கவிதைகளையும் இன்னும் முறையாக படித்ததில்லை. "புளிய மரத்தின் கதை" நாவல் வாங்கி கிட்டதட்ட 3 மாதங்கள் படிக்கவே இல்லை. பின்னர் ஒரு நான்கு நாட்கள் சேர்ந்தால் போல விடுமுறை (காந்தி ஜெயந்தி, ஆளும் கட்சி பந்த் மற்றும் வார விடுமுறை) வந்ததும் ஒரே மூச்சில் நாவலை இரண்டு முறை படித்து விட்டேன். நாவல் பற்றிய மாற்று விமர்ச்சனங்கள் முன்னமே படித்து இருந்ததால், நாவலின் நடை பற்றிய முன்னறிவு இருந்தது -எனினும் அது நாவலின் சுவையை குறைக்கவில்லை. ஒரு மரம் - ஒரு ஊரின் அடையாளம் - அது சார்ந்த மனிதர்கள் - அவர்களின் வாழ்க்கை - கொஞ்சம் அரசியல், கொஞ்சம் கால மாற்றங்கள் என நாவல் ஒரு ஒற்றையடிபாதையின் நடை சுமை தீர்க்கும் அனுபவம் போல இருந்தது. இந்நாவலின் தாக்கம் இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் - இதன் சுலபமான நடை ஒரு காரணம். ஒரு பூங்கா உருவாகும் விதமும், அதனை சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நல்ல சுவையான பார்வை - இனி ஒவ்வொரு பூங்காக்களையும் பார்க்கும்போதும் பார்வை முறை கொஞ்சம் இந்த நாவல் சார்ந்தே இருக்கும். மனிதர்களின் வாழ்க்கை எப்படி அடுத்தவர்களின் கவனத்துக்கு உட்பட்டே அமைகிறது என்பதை நாவல் அடிப்படையாக கொண்டுள்ளது - அப்படி கவனம் ஈர்க்கும் முயற்சிகளும் முறைகளும் ஓவ்வொருவரின் சுயலாப அடிப்படையிலேயே அமைகிறது. நாவல் பற்றியும் சு.ரா பற்றியும் இன்னும் அவரின் மற்ற சிறுகதை, கவிதை மற்றும் நாவல்கள் பற்றியும் மேலும் எழுதலாம் - அதனூடே சு.ரா / அவரின் படைப்புகள் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் ( ம.க.இ.க வின் படைப்புகள்) மிகவும் அருமையானவை - பகிர்தலுக்கும் விவாதங்களுக்கும் சுவையானவை... எதிர்கால பதிவுகளில் மேலும் பகிர்ந்து கொள்ளலாம்...
Subscribe to:
Posts (Atom)