அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

புது வீடு...

தி.நகரின் வெங்கட நாராயணா சாலை அருகே புதிய வீட்டில் குடியேறி இருக்கிறோம் நானும் என் நண்பரும். இரண்டாவது மாடியில் மூன்று அறைகள் கொண்ட சிறிய வீடு. குடி புகுந்து, பொருட்கள் பார்த்து வாங்கி அமைத்து ஒரு முழுமைக்கு கொண்டு வருவதற்க்குள் 20 நாட்கள் முடிந்து விட்டது. கேபிள் தொலைகாட்சியும், தமிழ் செய்திதாளும், காலை நேர நடை பயிற்சியும், 20 நிமிட உடல் பயிற்சியும், குளிக்கும் போது அருகே உள்ள பள்ளியில் இருந்து கேட்கும் நீராடும் கடலுடுத்த பாடலும், அலுவக காரில் பயணங்களும், வழக்கமான அலுவக வேலைகளும், வார இறுதி தூக்கமும், கொஞ்சம் கதையும் கவிதை வாசிப்பும், சில சுவரஸ்யமான சந்திப்புகளும் (பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்), கைதொலைபேசி நண்பர்களும், இரவு 2 மணி வரை உரையாடல்களும், வார இறுதி மாலை நேர கடை பாதை நேரத்தொலைப்பும், இரவு நேர கையேந்திபவன் உணவுகளும், காபி டே மாலை நேரமும், மழை கால பகல் தூக்கமுமாக கழிந்து கொண்டே இருக்கிறது இரவும் பகலும் நாட்களும் வாரங்களும்...

ஆலந்துறை நினைவுகள்

பேரூர் போகும் வழியில் ஆலந்துறை பேருந்து கொஞ்சம் பழைய நினைவுகளை கொண்டு வந்தது. என் கல்லூரி காலங்களில் கோவைபுதூர் முருகன் காம்லெக்ஸில் தங்கியிருந்தேன். என்னுடன் ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்த இருவர் தங்கியிருந்தனர். ஒருவர் தூத்துகுடிகாரர் - சங்கர் கனேஸ் - மற்றொருவர் ஈரோடு அருகே - காசிராஜன் அவர் பெயர். எனக்கும் காசிக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் நல்ல புரிதல் இருந்தது, எனவே எல்லா இடமும் சேர்ந்து சுத்துவோம். வார இறுதிகள் பெரும்பாலும் குனியமுத்தூர் அல்லது சுண்டக்காமுத்தூர் சாராயகடைகளில்தான் இருக்கும். கொஞ்சம் செட் சேர்ந்துவிட்டால் அப்புறம் கூத்தும் கும்மாளமும்தான் - அவரை மறுபடி ரூம் கூட்டிவர நிதானத்தில் இருக்கும் நான் ரொம்ப அவசியம் என்பதால் எல்லா கும்மாளங்களிலும் எனக்கும் இடம் உண்டு. ஒரு முறை ஆலந்துறையில் இருக்கும் அவரின் நண்பரை பார்க்க சென்றோம். அவர் ஸ்பிக் நிறுவனத்தின் சமையல் பகுதியில் வேலை செய்பவர். வயசாளி. அடிப்படையில் விவசாயி. நாங்கள் சென்ற நேரம் ஊரின் ஏதோ கோவிலில் கடா வெட்டு. ஒரே ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தது. வாய்கால் பாலம் அருகில் அவர் வீடு. அது கரும்பு சக்கையும் முட்டையும் போட்டு கட்டிய பாலமாம்.. மாலை மங்கும் நேரம் எல்லாம் கட்டெரும்புகள் நிறைந்து இருக்கும். வாய்க்கால் கரை ஓரமாய் ஜமுக்காளம் போட்டு 3 பாட்டில் நாட்டு சரக்கும் கோழியும் ஆடும் சப்பாத்தியும் சோறும் வைத்து ஒரே படையல்தான். 5 ரவுண்ட் முடிந்தவுடன் காசி பாட ஆரம்பித்து விடுவார் - பொதுவாக பழைய சிவாஜி பாடல்கள்தான். ராகமும், தட்டில் தாளமுமாய் பாட்டும் ஜீவன் அவர் - நம் ஆலந்துறை தோழர் எம்.ஜி.ஆர் ரசிகர் - மொத்தத்தில் அன்று ஒரே போட்டி பாடல்கள்தான்... அவர் பாட, அப்புறம் இவர் பாட... சண்டையில்லாமல் இருவரும் தூங்கும் வரை ஒரே இசை கச்சேரி... என் கவனம் சாப்பாட்டில் மட்டுமே இருந்தாலும், பாட்டின் சுவரஸ்யத்தில் சரக்கு அவர்களுக்கு அதிகமாகி இருந்தாலும் மற்றும் திரும்பி செல்ல பேருந்து வசதி இல்லாததாலும் - பாதை ஓரத்திலேயே படுத்து தூங்கும்படி ஆனது அன்று - அடுத்த நாள் விடுமுறை என்பதால் பிரச்சனை இல்லை. மறுநாள் விடிகாலை மறுபடி அரைதூக்க நிலையிலேயே அறை வந்து சேர்ந்தோம். இன்று நினைப்பினும் நல்ல சந்தோஷம் - எங்கு இருக்கிறார்களோ அந்த அறை நண்பர்கள் - சில காலங்களுக்கு பிறகு முற்றிலும் தொடர்பு இல்லை.

வாழ்க்கை ஒரு புள்ளியில் இல்லை.

நம் வாழ்வில் பெரும்பாலரை - நல்லவர்கள் கெட்டவர்கள் அப்பாவிகள் மோசமானவர்கள் இன்னும் என்ன என்னவோ சொல்லி ஒரு அடைமொழியோடே மனதில் வைத்திருக்கிறோம். அடிப்படையில் பெரும்பாலரின் செயல்களே அவர்களை பற்றிய ஒரு மனத்தோற்றத்தை நம்முள் உருவாக்குகின்றன. அந்த செயல்களிக்கான அடிப்படைகள் யாராலும் கவனிக்கபடுவதில்லை. ஒருவரின் நடத்தை அல்லது ஒழுக்கம் முழுமையாக அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் - சில கற்பனை கோடுகளாலேயே நிர்ணயம் செய்யபடுகிறது. யாரும் அடிப்படையில் எந்த குணாதிசியமும் கொண்டவர்கள் இல்லை - ஒரே குணாதிசியம் கொண்டவர்களாக சமுதாயத்தில் எல்லாருடனும் இருந்து கொள்ள யாராலும் முடியாது - ஒழுக்கமும் அது போலதான். மாற வேண்டிய நேரத்தில் முகங்கள் மாறியே ஆகவேண்டும். யாரை பற்றியும் பொதுவான கருத்துகளை தவிர்க்கலாம் - எல்லாரையும் நேசிக்க முடியும். செயல்களை வைத்து ஆட்களை எடைபோடாமல் - செயலுக்கு பின்னால் உள்ள காரணிகளை கவனித்து பார்த்தால் நம் பார்வையின் பண்பாடு நமக்கே தெரியும். - நம்மை நாமே சுயநிர்ணயம் செய்து கொள்ளவும் முடியும். வாழ்க்கை ஒரு புள்ளியின் பார்வை அல்ல - புள்ளி ஒரு வடிவத்தின் காரணி. வடிவம் அறியாமல் அதை பற்றி சொல்லும் கருத்துகள் பயன் இல்லாதவை.

கல்யாணமாம் கல்யாணம்..

இன்றைக்கு எல்லாம் எதிர்பார்ப்புகள் நிறைய வளர்ந்து இருக்கிறது - 40% ஆண்களும் பெண்களும் நிறைய எதிர்பார்ப்புகளுடனே திருமண வாழ்வில் நுழைகிறார்கள். பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் போதே இதன் பிரச்சனைகளை பார்க்கிறார்கள். குறைந்தது 50 ஆயிரம் சம்பளமும், 2 முறையாவது வெளிநாட்டு அனுபவமும், இந்தியாவின் முதல்தர கம்பெனிகளில் வேலையும் கொண்டவர்களை மட்டுமே - அது பெண் வீடு ஆகட்டும், பிள்ளை வீடு ஆகட்டும் - விரும்புவதில் உள்ள லாஜிக் புரிவதில்லை எனக்கு. மனசு ஒத்துபோன திருமணம் என்பது கணிபொறி சார்ந்த தொழில் நுட்ப மனிதர்களின் (20 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் பெரும்பாலர் - எந்த தொழில் செய்தாலும்) வாழ்வில் பெரும்பாலருக்கு இருப்பதில்லை. ஏதோ ஒத்து போவதற்காக வாழ்கிறார்கள் - அல்லது சீக்கிரம் மண முறிவுக்கு வருகிறார்கள். குழப்பமான வாழ்வில் பணமும் அமெரிக்க அனுபவங்களும் எந்த மாற்றத்தையும் தருவதில்லை. அதிகபடியான வேலை நேரத்தில் குடும்பத்தில் இழக்கிறார்கள். உடல் நலமும் மன நலமும் இல்லாமல் குழந்தை வளர்ப்பும், செக்ஸ் வாழ்க்கையும், அமைதியான ஒரு நேர கூட்டு குடும்ப இரவு உணவும் கூட - அடிப்படை நலன்கூட இல்லாமல் - நிரம்பி வழியும் வங்கி கணக்கும், ஷெர் மார்கெட்டும், பாரின் டூர்களும், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையும் என்ன தர முடியும். பெரும்பாலான வீடுகளில் யாராவது ஒரு பையன் பார்க்க லட்சணமாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை கொஞ்சம் பணம் காண்பித்து நம்புவது போல பேசி அமெரிக்க மொழி பேசினால் - கூசாமல் பெண்ணை கூட்டி கொடுக்கிறார்கள் - லியாகத் அலிகான் வழக்கு ஒரு எடுத்துகாட்டு. லியாகத் முயற்சி மட்டும்தான் செய்தான் - முடித்து கொடுத்தது பெண் வீட்டிகாரர்கள்தான் - முடித்து கொடுக்க வைத்தது - இவர்கள் எதிர்பார்த்த அவன் காட்டிய தகுதிகள் - பணமும், அமெரிக்காவும் முதல்தர தொழில்படிப்பும். ஒரு வகையில் இது விபச்சாரம்தான். அதிகம் படிக்காதவர்கள், குறைந்த சம்பளம் உள்ளவர்கள், சிறிய அளவில் தொழில் வாழ்க்கை உள்ளவர்கள் - எனக்கு தெரிந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் - தகவல் தொழில் நுட்ப வாழ்வில் உள்ளவர்களை விட 100% மடங்கு மேல். திருமண வாழ்வுக்கு அடிப்படை தேவை என்ன என்பதை யாராவது பிள்ளை பெற்ற பெண் பெற்ற பெற்றோர்களுக்கு எடுத்து சொன்னால் பல தற்கால தலைமுறை வாழ்க்கை உருப்படும்.

Wednesday, September 05, 2007

இனி ஒரு விதி...


இன்று காலை அலுவகம் வரும் வழியில் சுவற்றில் அச்சிடபட்டிருந்த ஒரு விளம்பரம் "திருக்குறளை சட்டமாக்கு" என யாரையோ மிரட்டியது. அட... இதுவும் நல்லதுதான். சட்டம் போலவே திருக்குறள் பற்றிய அனுமானங்கள்தான் நிறைய பேருக்கு உண்டு - யாரும் முழுதாக படித்ததில்லை. ஆனாலும் சட்டமாக்க பட கூடிய விஷயங்கள் எல்லாம் திருக்குறளில் உண்டு - அரசியல் பொருளாதாரம் வாழ்க்கை தொழில் காமம் என கற்று கொள்ள ஆயிரம் உண்டு...

என்ன...! பலருக்கும் பிரச்சனை வரும்... வாழ்க்கைமுறையை மாற்ற வேண்டி இருக்கும் - நிறைய விஷயங்களை மறுபடியும் வேறு மொழியில் புரிந்து கொள்ளவேண்டி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஒழுக்கமான நல்ல வாழ்க்கை புளித்து போகும் - அப்புறம் திடீரென பழைய சட்டங்களே பரவாயில்லை என தோன்றும்.

திருக்குறள் வேண்டாம் என போராட்டம் நடத்துவார்கள் - அது தமிழே கிடையாது என்பார்கள்... திருக்குறளை குற்றம் சொல்லியும் - வள்ளுவரின் வாழ்க்கை பற்றிய விமர்சனங்களும் கூட தெருவுக்கு வரும். மறுபடியும் சக்கரம் சுற்றி எல்லாரும் அவரவர்களுக்கு வசதியான சட்டங்களை படைத்து கொள்வார்கள் - அதில்தான் நாம் மேதாவிகள் ஆயிற்றே...

திருக்குறள் நல்ல விஷயம்தான்... பாரதி சொன்னது போல - இனி ஒரு விதி செய்யும் பணி. ஆனால் யாருக்கு புரியும்... அரசியல் தெருவில் விளையாடும் நம் தேசத்தில்...??