அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, August 14, 2007

தனிமையும் இலக்கியமும்...

காலம் இயங்கி கொண்டு இருக்கிறது. பின்னிரவுகளில் தூக்கம் தொலைந்து விட... ஜன்னலுக்கு வெளியே யாருமற்ற வெளியை காரணமின்றி பார்த்தபடி அமர்ந்திருக்கும் தருணங்கள் அதிகமாகி விடுகின்றன. சில இரவுகளில் வாழ்தல் பற்றிய ஒரு கேள்வி ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட இருள் போல என்னுள் கவிகிறது. சில புத்தங்களை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவை கவிதைகளும் இலக்கியங்களும் இல்லை - அவைகளை நீங்கள் சுயமுன்னேற்ற புத்தகங்கள் எனவோ, கற்பனை கதைகள் எனவோ சொல்லலாம். ரசவாதி மற்றும் தன் பொக்கிஷத்தை விற்ற துறவி என்பவை அந்த புத்தகங்கள். இப்புத்தங்களும் மேலும் சில கவிதை மற்றும் இலக்கிய புத்தகங்களும் படித்து பின்னர் தனிமையில் அவற்றின் கருத்துகளை எனக்குள்ளெ பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம் எனக்கு சில கருத்துகள் தோன்றுவதுண்டு... என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும், பிறர் வாழ்வுகளை கவனித்த பின்னரும் - எல்லோர் வாழ்விலும் இலக்கியமும் கவிதையும் இருப்பதாகவே தோன்றுகிறது. இலக்கியமும் கவிதையும் வாழ்வை சொல்லும் மொழி எனப்படும் போது... எனக்கு தோன்றுகிறது... வாழ்தல் - இன்னும் சரியாக புரிந்து கொள்ளபடாத ஒரு கலை - நிறைய பேருக்கு அது புரியும் போது வாழ்வு முடிந்து விடுகிறது.

தொலையும் வாழ்க்கை...

நகரம்... தன்னுள் புதைந்த எல்லோரையும் தன்னுள்ளே கரைத்து கொண்டு ஓடும் திரவ வாழ்க்கையை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நானும் விதிவிலக்காக இல்லை. நான் என்னை தொலைத்து விட்டதை உணர்கிறேன். சிரிப்பும், பேச்சும், இலக்கியமும், கவிதையும், தோழமையும் இன்னும் பிற வாழ்க்கை சார்ந்த விஷயங்களும் நீங்கி... என்னை தொடரும் காகிதங்களை நானும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் - அதுவே வாழ்க்கை என எல்லாரும் சொல்லும் வழியில். தொழில் என்பது வாழ்வை வளமாக்கவே - வாழ்வை பறித்து கொண்டு ஓடும் தொழில் என்றும் இருக்கிறது... எனக்கு பிடித்த நான் வெளிப்படும் தொழிலுக்கு தைரியமில்லாமல், என்னை தொலைக்கும் தொழிலில் இயந்திரத்தனமாக இயங்கும் இந்த வாழ்க்கை ஒரு நாள் என்னை என்னிடமிருந்து கொள்ளை கொண்டு போக போகிறது. எல்லாம் பேசலாம் - காகிதங்களுக்காக வாழாமல் இருந்தால். ஒரு ஓவிய ஆசிரியராக ஏதோ ஒரு பள்ளியில் வேலை செய்ய பிரியபட்ட காலம் உண்டு. பின்னர், காகிதங்களின் தாக்கமும் தேவையும் எழ, இப்போது கொண்ட தொழில். இது மரம் அறுக்கும் தொழில். தொழிற்சாலையில் நிறைய மரங்கள் உள்ளன... எல்லாம் வெட்டபட்டவை. இவைகள் கதவாகலாம், கட்டிலாகலாம், மேசையும் நாற்காலியும் ஆகலாம். ஆயிரம் ஆண்டு வாழும் மலை மரங்களை இனி வாழ்வில் பார்ப்பது அரிது. எல்லா மரங்களும் போன பிறகு தொழிற்சாலைகள் தன்னை தானே அறுத்து கொள்ளும்... காலம் வழி சொன்னால் .. என் கவிதைகளும் ஓவியங்களும் கொண்ட உலகோடு மரணமாகிவிட வேண்டும். ரெளத்திரம் கொண்ட மனதோடு அலையுதல் ஒரு வகையான வேதனை... அதுவும் இல்லாவிட்டால் வாழ்க்கை வெறிச்சோடி போய்விடுமோ என்ற பயமும் உண்டு...

மீண்டும் ஒரு முறை...

நெடுநாட்களுக்கு பிறகு மறுபடியும் பதிவுகளை கொண்டுவந்திருக்கிறேன். இடைப்பட்ட காலங்களில் நிறைய அனுபவங்கள், சில தவறுகள், சில திருத்தங்கள், சில இழப்புகள், சில சேர்க்கைகள், பார்த்தவை, படித்தவை, உணர்ந்தவை என நிறைய உண்டு... தற்போது புதிய நிறுவனத்தில் இருக்கிறேன்...புதிய குழு... புதிய யுக்திகள் கொண்ட வேலை என மாறுபட்ட சூழ்நிலை.

பகிர்ந்து கொள்ள நிறைய இருந்தாலும் நேரம் இல்லாமை காரணமாக இழந்த விஷயங்களில் பட்டியலில் வாழ்க்கையும் சேர்ந்து கொண்டது எனலாம். பகிர்தல் இழக்கும் போதே வாழ்க்கையும் கொஞ்சம் செத்து போகிறது. புதிய எண்ணங்கள்.. புதிய அனுபவங்களுடன் உங்களை எல்லாம் மறுபடியும் சந்திக்கிறேன். இடைபட்ட காலங்களில் என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி.

இது தவிரவும் மேலும் சில குழுக்களில் எழுதலாம் என்று எண்ணம் உண்டு.. மேலும் நண்பர்கள் தேடும் காரணம் தான். வாழ்க்கை சில புள்ளிகளின் வழியே கிறுக்கி போல கோலம் போல இருந்தாலும்... அதனை வண்ணம் கொண்டு மெருகேற்றுவது நட்பு வட்டம் தானே...

Thursday, March 22, 2007

மொழி - ஒரு அடையாளம்


என் மொழி எது என்ற அடையாள குழப்பம் இன்னும் இருப்பதாகவே உணர்கிறேன். எழுத்தா ஓவியமா என்ற குழப்பம் இன்னும் என்னுள் இருக்கிறது. கவிதைகளோ கட்டுரைகளோ இன்னும் எந்த ஒரு வடிவையும் கொண்டவையாக மாறவில்லை - அவை இன்னும் என் முதல்வடிவ முறையிலேதான் இருக்கின்றது. ஓவியமும் எந்த குறிப்பிட்ட முறையையும் கொண்டிருக்கவில்லை. என் ஓவியங்கள் பெரும்பாலும் என் வழிமுறையிலேயே இருந்தாலும், அவை நான் பார்த்த ஓவியங்களின் முறைகளையும், எண்ணங்களையும் அடிப்படையாக கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. தேர்ந்த வடிவங்கள் சார்ந்த ஓவியங்களை படைக்கும் அளவுக்கும் எனக்கு அது கைவரவில்லை. என் ஓவியங்கள் விஷயம்
சொல்கிறது - ஆனால் மிக தெளிவாக சொன்னதில்லை - என் கவிதைகளை போலவே அது மிக சிலருக்கு மட்டும் அனுபவங்களால் உணரபடுகிறது.

கவிதைகளிலும் எழுத்துகளில் இதே அனுபவம் சார்த்த தாக்கம் இருக்கிறது. என்னுள் இறக்கும் அனுபவங்கள் மட்டுமே என்னில் இருந்து வெளிப்படுகின்றன. இந்த கருத்தை ஏன் என் கவிதைகள் சொல்வதில்லை, ஏன் என் ஓவியங்கள் சொல்லவில்லை என்ற கேள்விகள் என் பதில்களுக்கு அப்பாற்பட்டவை. பொதுவில் இத்தகைய பொது முறையற்ற - அல்லது என் முறைகொண்ட எழுத்துகளும் ஓவியங்களும் என் மொழியாக கொள்கிறேன். இசை என்னும் பொது மொழி எனக்கு புரிகிறது. இசையும் கவிதைகளும் ஓவியமும் கொண்ட என் மொழி - என் அனுபவ கலாச்சாரத்தில் இருந்து வெளிப்படும்போது - அதனை எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறதா என தெரியவில்லை. புரியாத மொழி உதவாது என கொண்டால் - புரிந்த மொழிகள் என்ன உதவியிருக்கிறன...?


மனிதர்களும் உணர்வுகளும்

நான் பொதுவாக இரவு உணவுக்கு ஒரு சிறிய உணவகம் செல்வதுண்டு. பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் இடம் அது. தினமும் முட்டை பரோட்டா சாப்பிடும் பழ வண்டிகாரர், எல்லா அரசையும் விமர்ச்சிக்கும் வயதான பெரியவர், சத்தமான எல்லா நேரமும் செல்போனில் பேசி கொண்டே சாப்பிடும் ஒருவர், கலாட்டா மாணவர்கள் என கலவையான இடம் அது. கடை வைத்திருப்பவர்கள் புதுக்கோட்டையில் இருந்து வந்தவர்கள். உணவின் ருசியும் தரமும் குற்றம் சொல்ல முடியாதவை. ஒரு பெரியவர் அங்கே வேலை செய்கிறார். எல்லாருக்கும் நல்ல கவனிப்பு. ஒரு சனிக்கிழமை மதிய நேரம் அவர் என்னிடம் பேசி கொண்டிருந்த போது அவர் மகன் ஒரு மனஸ்தாபம் காரணமாக விலகி சென்றுவிட்டதாகவும், தான் இங்கே வேலை செய்து ஊருக்கு பணம் அனுப்பி கொண்டிருப்பதாகவும் சொன்னார். சென்னையில் இப்படி நிறைய மனிதர்களை பார்க்கிறேன். பெருமாலும் உறவுசார்ந்த பிரச்சனைகள் எல்லாருக்கும் இருக்கிறது. சந்தோஷமான குடும்ப அமைப்பின் வாழ்க்கை நிறைய பேருக்கு வாய்ப்பதில்லை - காரணங்கள் எல்லாம் திசையுலும் இருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கு இயல்பிலேயே சில கருத்துகள் இருக்கின்றன - அவைகளை தோண்டி தனக்காக மாற்ற முயலும் போது எல்லா பிரச்சனைகளும் ஆரம்பிக்கின்றன. உணர்வுகளின் குவியலாகவே பெரும்பாலும் மனிதர்கள் இருக்கின்றனர். அவர்களை அவர்களாக வாழ விடுதல் என்பது மனித சுதந்திரத்தின் வெளிப்பாடு.
வழிமுறைப்படுத்தும் முயற்சிகள் கருத்துகளை காயமாக்காமல் இருந்தால் சந்தோஷமான குடும்பங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உண்டு. எல்லாம் பேசும் முறையிலும் பழகும் முறையிலும்தான் இருக்கிறது. அடிப்படை மனோதத்துவ அறிவு எல்லா இடங்களிலும் தேவைபடுகிறது.