அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

வாசல்படிகள்...

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு கட்டுரையில் வாசல்படிகள் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அவை வெளிஉலகத்துக்கு முதல் படிகள் என்று அவர் கட்டுரை சொல்லியது. ஆம்.. எல்லா வீட்டு வாசல்படிகளும் நிறைய கதைகளை கொண்டு இருக்கின்றன. உலகம் மற்றும் மனிதர் அறிமுகங்களின் அரங்கேற்றும் தளமாக பெறும்பாலும் வாசலபடிகள் விளங்குகின்றன. இளம் வயதில் வாசம்படிகள் கதை சொல்லும் படிகளாக இருந்திருக்கின்றன. பாட்டி வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு எனக்கும் தெருபிள்ளைகளுக்கும் கதை சொல்லியிருக்கிறார்கள். நடைவண்டி தையல்காரன், காய்கறிக்கார அம்மாள், வயதான முடமான பிச்சைகாரர்கள், வயதானாளும் பெனாயில் பாட்டில் விற்கும் முதியவர்கள், வளையல்காரர்கள், துணியும் ஜமுக்காளமும் கொண்டுவரும் வியாபாரிகள், மீன்காரர், ஐஸ்வண்டிகாரர் மற்றும் பலர் என பலதரபட்ட மக்களையும் அறிமுகம் செய்து வைப்பது வாசல்படிகள்தான். நாங்கள் வசித்த வீட்டின் வாசல்படிகள் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அவற்றின் சம்பவங்கள் ஞாபகம் இருக்கின்றன. சறுக்கு மரமோடு கூடிய வாசல்படிகள், செங்கல் மட்டுமே கொண்ட படிகள், சிமெண்ட் படிகள், யானை இரண்டு பக்கமும் கொண்ட படிகள் என பலவகையான படிகள் கோலங்களால் பொதுவாக அலங்காரம் செய்யபடுவதுண்டு. சில வீட்டு வாசல்களின் பூந்தொட்டிகள் உண்டு. மர இலைகளால் வாசல்படிகள் நனைந்திருக்கும் காலங்களை நினைக்கிறேன். வாசல் படிகள் சில மரணங்களையும் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன. அவற்றின் பிறகு தனியாக வாசல்படிகளில் அமர்வதை தவிர்த்திருக்கிறேன். சில வீடுகளில் வாசல்படிகள் வெறும் செருப்பு அடுக்கும் படிகளாகவே இருக்கின்றன... வீட்டின் வாழ்க்கை படிகளில் தொடங்குகிறது...மனிதர்கள் போலவே ஞாபகங்கள் வாசல்களுக்கும் உண்டு. வாசல்களின் ஞாபகம் மனிதர்களுக்கும் வேண்டும்.

செக்ஸ் - சட்டத்துக்குள் வட்டங்கள்...

எல்டன் ஜான் - சர்ச்சைக்குள்ளான ஒரு இசைகலைஞன். என்ன சர்ச்சை... என்று கேட்பவர்களுக்காக... இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்... அதிலென்ன சர்ச்சை..? அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு ஆணை. ஆம். அது ஒரு ஓரின சேர்க்கை திருமணம். இந்த வார The Week - Jan 22 2006" இதழை பாருங்கள். அதில் ஷோபாடே யின் கட்டுரை ஒன்று இந்த திருமணம் பற்றி பேசியுள்ளது. திருமணம் என்பது ஒரு வகையான பந்தம் என்ற நிலை மாறி ஒரு சொத்து சேர்க்கும் வழிமுறையாகவே உள்ளதாக கருதபடுகிறது. உணர்வுகளுக்கு ஆதரவு தரும் சில அமைப்புகள் இந்தியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கின்றன. லெஸ்பியன் மற்றும் கே உறவுகளுக்கு ஆதரவுதரும், அந்த உணர்வுள்ளவர்களுடைய சமூக பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் இந்தியாவில் சில அமைப்புகள் கடந்த 3 வருடங்களில் தொடங்க்கபட்டுள்ளன. இந்தியாடுடே, காமசூத்திரா ஆகிய அமைப்புகளின் கருத்துகணிப்புகளிலும் ஓரினசேர்க்கையாளர்கள் மெதுவாக தங்களை இருத்தலை காண்பிக்க தொடங்கியுள்ளார்கள். மூன்றாம் பாலின நண்பர்களும் மெல்ல தங்கள் சமூக இருத்தலை காண்பிக்கின்றார்கள். இந்திய அரசியலைமைப்பு மற்றும் சட்டம் தன் ஸரத்துகளில் உடலுறவு என்பது யோனியும் லிங்கமும் இணைவதே என்பதை திட்டவட்டமாகவும், மற்ற உறவுமுறைகள் இயற்க்கைக்கு ஒவ்வாததாகவுமே கருதுகிறது(எதிரொலிக்கும் கரவொலிகள் / அரவாணிகளும் மனிதர்களே எனும் புத்தகம்). பல மேலை நாடுகளுமே இவ்வாறு கருதுகின்றன. காமசூத்திரா நூல் தற்காலங்களில் கொஞ்சம் மாற்றபட்டு உள்ளதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள். காமசூத்திரா புத்தகம் இந்திய சட்டங்களுக்கு ஏற்ப வெட்டி மாற்றபட்டு உள்ளது. இதனை ஒரு நூலகர் என்னிடம் சொன்னார். அதுவும் தவிர கஜுராகோ சிற்பங்களில் சட்டம் சொல்லும் ஒவ்வாத உடலுறவுகள் புணையபட்டிருப்பதை உதாரணமாக்கினார். இந்தியாவின் கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் காமம் என்பதை பல்வேறு அர்த்தங்களில் பார்க்க முடிகிறது. ஓஷோ சொல்வது போல ஆன்மீகமாகவும், மெல்லிய இசை போன்ற உணர்வாகவும், மேலும் மேலோட்டமான உறவு சார் வழிமுறைகளாகவும் பார்க்க முடிகிறது. இதுதான் முறைபடுத்தபட்ட காமம் என்று எங்கனம் சொல்வார்கள்...? எதிரொலிக்கும் கரவொலிகள் / அரவாணிகளும் மனிதர்களே எனும் புத்தகம் கேட்கும் கேள்விகளில் மூன்றாம் பாலின மக்களின் செக்ஸ் உணர்வுகள் கேலிக்குறியதாக சமூகத்தில் சொல்லபடுவதை எடுத்துகாட்டுகின்றன. இங்கே இந்தியாவில் எல்லாம் உண்டு... எல்லா வகை ஆசாபாசங்களும் மக்களிடையே கையாளப்டுகின்றன. எனினும் தன்னைமட்டும் செக்ஸ் ஆசையில்லாத புனிதர்களாக வட்டங்களில் அமைத்து கொள்வதை எல்லாரும் விரும்புகிறார்கள். அடுத்தவரது வாழ்க்கை மட்டுமே விவாதிக்கபடுகிறது. சமீபத்தில் "Fire" என்னும் திரைப்படம் பற்றிய ஒரு சிறு விவாதத்தில் ஒரு நண்பர் சொன்னார்... "நான் இந்த உறவு முறையை ஏற்று கொள்ள போவதில்லை... இப்படி பெண்கள் பெண்களிடன் சுகம் காண தொடங்கிவிட்டால்.. அப்புறம்... ஆண்கள் எங்கே போவது... " ஆக... அடிப்படையில் உனக்கு உறவு கொள்ள பெண் இல்லாமல் போய்விடுவாள் என்ற பயமும், அது தொடர்பான கவலையுமே இத்தகைய எதிர்ப்பை கிளப்பிகிறது. இந்த கருத்து "Fire" திரைப்ப்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரும்பாலரிடம் இருந்ததான் இந்தியாடுடேயின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் சொன்னார். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு வெறும் உடல் இச்சை... ஓரின சேர்க்கையாளர்கள் உணர்வுகளின் ஒன்றுபடுதல் மூலமாகவே சேர்கிறார்கள்... மூன்றாம் பாலின மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளும் அப்படித்தான் என்று மின்னஞ்சல் மூலமான ஒரு இணைய குழுமத்தில் ஒருவர் எழுதியிருக்கிறார். ஆயினும் நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கிறது. இதனை பயன்படுத்தி "Black Mail" செய்வது... போலியான முகவரிகளில் ஆட்களை வரவைத்து கேவலப்படுத்துவது... போன்ற வேலைகளினால் யாருக்கும் எதிர்பாலினர்மேல் மேலும் வெறுப்பு வருமேயன்றி... நீங்கள் எதிர்பார்க்கும் சட்டத்துக்கு உட்பட்ட ஆர்வம் வராது.

கலாச்சாரம் - ஒரு குறைப்பார்வை

சென்ற மாதங்களில் சில தோழிகளின் அறிமுகங்கள் கிடைத்தன. நிச்சயம் இனிய சந்திப்புகள் இல்லை. கலாச்சாரம் பற்றிய என் கருத்துகளை பற்றிய கண்டனங்களுடன் என்னை தொடர்ப்பு கொண்டார்கள். அடிப்படையின் அவர்களுக்கு நன்றி. உங்களுடன் பேசிய பிறகு நாம் இருவருமே நம் இருவரது கருத்துகளை முழுமையாக ஒத்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொண்டோம். எனினும் இருவருக்குமே அடுத்தவரது எண்ணங்களில் அர்த்தம் புரிந்தது. தெளிவான கண்டனங்களும் விவாதங்களும் நம்மை, நம் கருத்துகளை முழுமையாக்குகின்றன. மேலும் சில என் கருத்துகளை இம்முறை எழுதுகிறேன்.

நான் கலாச்சாரம் என்று சொல்வது உடையலங்காரங்கள் அல்ல. பாலுணர்வு அல்ல, கற்பு அல்ல. நான் சொல்லும் கலாச்சாரம் தனி மனித மனம் சம்பந்தபட்டது. வாழ்வியல் பற்றியது. உயிர்களிடத்தில் பழகும் மனிதத்துவம் பற்றியது. அடிப்படை ஒழுக்கம் பற்றியது. சமுதாயத்தில் அல்லது சமுதாயம் என்று சொல்லபடும் அமைப்பில் உங்களின் இருத்தல் பற்றியது. காதலும் ஆன்மீகமும் போல ஒரு உணர்வு சாந்தது.

பெண்கவிஞர்கள் ஒரு கலாச்சார அல்லது சமூக மற்றும் தார்மீக அதிர்வுக்காக பாலுணர்வு விஷயங்களை கதைகளிலும் கவிதைகளிலும் கையாள்கிறார்கள். பொதுவாக இந்த விஷயங்கள் சுலபமாக கவனிக்கபடுபவை. அதிலும் பெண்கள் இதுகுறித்து பேசும் போது கவனித்தலின் கூர்மை அதிகமாகிறது. இது தவறு என்று வாதிடபோவதில்லை நான். ஆண்டாள் சொல்லாததை யாரும் சொல்ல போவதில்லை. மகடுஉ முன்னிலை / பெண்புலவர் களஞ்சியம் - புத்தகமும் நிறைய சொல்லியிருக்கிறது. பெண்கள் தங்கள் பார்வையில் அணுகும் விஷயங்களில் ஆண்களை விட உள்நோக்கு பார்வையும் வலியும் சுகமும் கலந்து இருக்கின்றன. வரவேற்றபட வேண்டிய விஷயம்...எனினும் சமுதாயம் எனப்படும் அமைப்பு தனது பார்வையை தெளிவுபடுத்தி கொள்ளவில்லை. "இவளுக்கு ரொம்பத்தான்...." எனப்படும் வசனங்களை சுலபமாக சொல்கிறது. இது மாறவேண்டும் என்றால் உங்கள் குரலில் மேலும் அதிர்வும், வேகமும் வேண்டும். அடிப்படையான ஒற்றுமை உணர்வு வெறும் சிறு போராட்டங்களுக்கு மட்டுமே பயன்படாமல் மேலும் சிறு கூட்டங்களையும், வாசிப்பு முயற்சிகளையும் மேம்படுத்த பயன்படவேண்டும். கருத்துகளை கொண்ட ஆனால் எழுத்துகளில் வெளிப்படுத்தாத பெண்கள் சமூகத்தில் இன்னும் நிறைய உண்டு. அவர்களை சந்தியுங்கள். அவர்களின் பார்வையில் உலகத்தை காணுங்கள். அவர்களை உங்கள் கூட்டங்களில் பங்கேற்ற வையுங்கள். இலக்கியம் என்பது வெறும் எழுத்து மாயாஜாலம் அல்ல... அது மனதில் குரல், மக்களின் குரல், சமூகத்தின் குரல், உணர்வுகள் குரல் என்பதை மற்ற அமைப்புகளுக்கு எடுத்துகாட்டுங்கள். குறுகிய வட்டத்துக்குள் நிற்க்காமல், மேலும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. உங்கள் பார்வைகள் அவற்றையும் கவனிக்கட்டும்.

பாரதி சொல்வது போல் - கற்பு என்பது இருப்பின் அதை ஆணுக்கும் பெண்ணும் பொதுவில் வைப்போம். கற்பு என்பது மனம் சார்ந்த உணர்வு என்பது என் கருத்து. உடல் சார்ந்த உறவில் கற்பு என்பது முன்னிலை படுத்தபடவில்லை. அதில் உணர்வு சார்ந்த ஒரு பந்தம் முன்னிலைபடுத்தபடுகிறது. இது நம் இருவருமே ஒத்து கொண்ட ஒரு கருத்து. எனினும் இது பற்றிய ஆண்களின் விவாதங்கள் பலவற்றிலும் பெண்களின் ஒழுக்கம் சார்ந்த விஷயமாக உடல் சார்ந்த விஷயமாக கற்பு கருதபடுகிறது. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் உறவு சாகசமாகவும், பெண் கொள்ளும் உறவு வேசித்தனமாகவும் சித்தரிக்கபடுகிறது. பெண் பற்றிய ஆணின் ரசனை உடல் அங்கங்களை கொண்டே அளவிடபடுகிறது. செக்ஸ் என்பது பொதுவில் பேசதகாத ஆனால், அனைவருக்கும் அடுத்தவரது படுக்கையறையில் எட்டிபார்க்கும் சுகம்தரும் விஷயமாகவே கருதப்படுகிறது. சமீபத்தில்படித்த சிக்மண்ட் பிராய்ட் கட்டுரைகளை தமிழ்படுத்தி பதிவு செய்ய உத்தேசித்து இருக்கிறேன்..

மேலும் இது பற்றி விவாதிக்கலாம்... உங்களின் கருத்துகளுடன்...

சென்னையின் புத்தக கண்காட்சி

சென்ற ஞாயிற்று கிழமையின் மாலை புத்தக கண்காட்சியில். நானும் நண்பர் லோகுவும். டைடல் பார்க்கில் ஒரு கணிப்பொறி தொடர்ப்பான குழும அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாலை 7:15க்கு புத்தக கண்காட்சியில் நுழைந்தோம். 8:30 வரைதான் கண்காட்சி என்று தோழி ஒருவர் SMS மூலமாக செய்தி சொல்லியிருந்ததால் கொஞ்சம் அவசரமாகவே பார்வையிடுதல் இருந்தது. எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரனும், அம்மா தாயாம்மாள் அறவாணனும் இந்த முறை சந்திக்க முடிந்த எழுத்தாளர்கள். வழக்கம் போலவே நிறைய கூட்டம். மக்களின் புத்தகம் வாங்கும் ஆர்வம் கணிப்பொறியும், இணையமும், தொலைகாட்சியும் தாண்டி பெருகியிருப்பதை காண முடிந்தது. தமிழ் புத்தங்கள் இந்தமுறை அதிகம். நிறைய பதிப்பகங்கள் கடைவிரித்து இருந்தன...ஆச்சரியமாக கொள்வாரும் இருந்தனர். பெண்ணியமும், இளைய எழுத்தாளர்களின் படைப்புகளும், சிறு கதைகளும், கவிதைகளும், பைண்ட் செய்யபட்ட சரித்திர காவியங்களும் அதிகம் இருந்தாலும் குமுதம் இதழ் தன் கணக்கெடுப்பில் சமையலும், சுய முன்னேற்ற புத்தகங்களும் அதிகம் விற்பனையானதாக சொல்லியிருந்தது. நான் இந்த முறை கலாச்சாரமும், வாழ்க்கைமுறையும், அரசியலும் கொண்ட புத்தகங்களை தேர்வு செய்து இருந்தேன்.

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்...
1. இஸ்லாமும் ஜிகாத்தும் - ஏ.ஜி.நூரனி
2. தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் - க.முத்தய்யா
3. ரிக் வேதகால ஆரியர்கள் - ராகுல சங்கிருத்தியாயன்.
4. தமிழில் தலித் இலக்கியம் - முகில்
5. நாட்டுபுற சொல் கதைகள் - பாரததேவி
6. குடும்பமும் அரசியலும் - சுப.வீரபாண்டியன்
7. நாட்டுபுற பாலியல் கதைகள் - கி.ராஜநாராயணன். கழனியூரன்
8. கண்ணீரும் சிரிப்பும் - கலீல் ஜிப்ரான்
9. கடவுளுக்கு உண்மைகள் தெரியும் - லியோ டால்ஸ்டாய்
10. பொலிவிய நாட்குறிப்பு - சே குவாரா
11. காரல் மார்க்ஸ், புதுயுகத்தின் வழிகாட்டி - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
12. மார்க்சியத்தின் எதிர்காலம் - பிரபாத் பட்நாயக்
13. எனது போராட்டம்.மெயின்காம்ப் - ஹிட்லர்
14. லியோ டால்ஸ்டாய் கதைகள் - சுரா
15. நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்
16. அர்த்த சாஸ்திரம் - சாணக்கியர்
17. வயது வந்தவர்களுக்கு மட்டும் - ரா.கி.ரங்கராஜன்
18. மகடுஉ முன்னிலை / பெண்புலவர் களஞ்சியம் - தாயம்மாள் அறவாணன்
19. தந்திரா/ஆன்மீகமும் பாலுணர்வும் - ஓஷோ
20. திருவாசகம் - காந்தளகம்
21. எதிரொலிக்கும் கரவொலிகள் / அரவாணிகளும் மனிதர்களே - அ.மங்கை
22. கம்யூனிசம் - கற்க கசடற - வி.மீனாட்சி சுந்தரம்
23. அரசியல் எனக்கு பிடிக்கும் - ச.தமிழ்செல்வன்.

மேலும் புத்தகங்கள் வாங்கவேண்டிய பட்டியலில் இருந்தன... ஒட்டுமொத்தமாக வாங்குவதில் பயனில்லை. வாங்கிய புத்தகங்களை படித்தபின், அவற்றை பற்றி கொஞ்சம் விவாதித்த பின்னர் புதிய புத்தகங்களுக்கு செல்லலாம் என்ற முடிவில் வீட்டுக்கு வந்துவிட்டோம். படித்தலும், அவற்றை பற்றி விவாதித்தலும் இனிய செயல்கள்... தோழமைகள் தேடுகிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

புத்தாண்டுக்கு பிறகு முதன்முறையாக பதிவுகளுக்கு வந்துள்ளேன். சென்ற ஆண்டின் இறுதியில் எழுதிய பதிவுகள் எனக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. கைதொலைபேசியிலும், மின் அஞ்சலிலும் நட்பு முறையில் தொடர்பு கொண்டு எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல. மேலும் நண்பர்களை ஏற்படுத்திகொள்ளும் ஆர்வம் இதனால் அதிகமாகியுள்ளது. எனவே இன்னும் நிறைய எழுததலைப்படுகிறேன். நிறைய எழுத நிறைய படிக்கவேண்டும். பார்வையும் கவனித்தலும் கேட்தலும் புத்தியும் கூர்மையாக இருத்தல்வேண்டும். என் ஓவியங்கள் போலவே தன்னிச்சையாக ஆரம்பித்து பின்னர் வாழ்க்கையில் அங்கமாக என் எழுத்துகள் ஆகிவருகின்றன. என்னை தூண்டிய மனிதர்களுக்கும் சம்பவங்களுக்கும் நன்றி.