அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

காதல்

காதல் எப்போதெல்லாம் வருகிறது. பொதுவாக ஆண் பெண் நட்பில் எந்த நிமிடமும் காதல் உருவாகிறது. அது பெரும்பாலும் வெளிப்படுத்தபடுவதில்லை. சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் காரணமாகிறது. காதல் உருவாவதின் காரணங்களை போலவே, வெளிப்படுத்தபடாமல் இருப்பதற்கும் காரணம் பட்டம் கொள்கின்றன. என் அளவில், என் வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் காதல் இங்கனம் உள்நிலையில் தேங்கியிருக்கிறது. சில பெண்களிடம் நான் சொன்னதில்லை எனினும் என் நடவடிக்கைகளை கொண்டு அவள் புரிந்து கொண்டிருக்கலாம். முதல்காதல் போலல்ல தற்போதைய காதல் எல்லாம். முதல் காதலில் முழு ஈடுபாடு இருந்தாலும் காரண அடிப்படையில் இனகவர்ச்சி முன் நின்றது. அழகு என்பது முதன்மைபடுத்தபட்டது. வளர்தலின் சாட்சியாக, காதலில் மெல்ல மெல்ல அழகு தனிமைபட்டும், மனது முதன்மைபட்டும் நின்கிறது. எனினும் உடல்கவர்ச்சி இல்லாத காதல் விவாதம் கொள்ளப்படும் கருத்து. நட்பு காதலாய் உடையும் கணம் அற்புதமானது. ஒரு புன்னகையில், ஒரு தொலைபேசி விவாதத்தில், ஒரு மழைக்கால காலையில், ஒரு மாலைநேர நடத்தலில், ஒரு திரைப்பட காட்சியில், ஒரு சம்மதித்தலில், ஒரு பரிசில், ஒரு முத்ததிலும் கூட... சில நேரங்களில் பிரிவிலும். ஆண்கள் பெண்களாலும் பெண்கள் ஆண்களாலும் வையம் முழுவதும் ஈர்க்கபட்டுகொண்டே இருக்கிறார்கள். இதில் கணக்கு வைப்பது அநாகரீகம். காதல் இல்லாத ஒரு மையபுள்ளியில் வைக்கபடும் உறவுகளுக்குள் பெரும்பாலும் பிணைப்பு இருப்பதில்லை என்பது என் கருத்து. எனக்கு பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்குமாயின், அவளின் ஈர்ப்புகளின் என் கவனமும் இருக்குமாயின் நெருக்கத்தில் விளையும் நட்பு மெல்ல காதலாகி பின்னர் யாரும் சொல்லாமலேயே நினைவுகளாக வாழ்வின் எல்லாம் பக்கங்களிலும் எழுதபடுகிறது.

பிக் பிஷ் ...

பிக் பிஷ் என்று ஒரு திரைப்படம். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் ஆழம் சொல்லும் திரைப்படம். தந்தை மகனுக்கு குழந்தைபருவத்தில் இருந்தே தன்னை பற்றி கற்பனைக்கு தாண்டிய கதைகளோடு வளர்க்கிறார். வாலிபத்தில் மகன் தந்தையின் கதைகளில் உள்ள கற்பனைகளை பற்றி தெரிந்து கொள்கிறான். தந்தையின் எல்லா அனுபவங்களுமே கற்பனைகதைகள் தான் என்ற மனோபாவம் உருவாகிறது. தந்தையின் இறுதிகாலத்தில் அவரின் கற்பனைகளுக்கு உண்மைசம்பவங்களுக்கும் உள்ள பிணைப்பு, மற்றும் அதன் உண்மைகளை உணர்கிறான். சம்பவங்களும் மனிதர்களும் மனதின் ஆழத்தில், கதைகளை மெல்ல மெல்ல உருவாக்குவதை கதை தெளிவுபடுத்துகிறது. இசையும் வசனங்களும் குறிப்பிட வேண்டியவை. திரைக்கதை தேவதை கதைகளின் சாராம்சத்தை கொண்டு இருந்தாலும் காட்சி வரிசை, அமைப்பு மிக இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதாபாத்திரங்கள் இன்னும் ரொம்ப நாளுக்கு மனதில் இருப்பார்கள். கொஞ்சம் யோசிப்பதில் இந்த கதை சொல்லும் மனிதர்கள் நமக்கும் பல சமயங்களில் அறிமுகமாகி இருக்கிறார்கள். பெரும்பாலும் பயணங்களில் - கிராமங்களில் கதைகள் எல்லோருடனும் தோழமையும் உலவுகின்றன. பெரும்பாலும் கதைகளில் கதை சொல்லி ஏதோ ஒருவிதத்தில் பார்வையாளனாக இருக்கிறார் - சில நேரங்களில் கதையின் மையமாக கூட. மனோதத்துவரீதியான விவாதத்தில் பொருந்தும் கருத்து இது. எல்லாருக்கும் கதைகள் இருக்கின்றன. அதில் உணர்வுகள், சம்பவங்கள், சில சமயங்களில் அற்புதமான பொய்கள் எல்லாம் இடம்பெறுகின்றன. மனிதர்களின் மறுபக்கங்கள் சொல்லபடுகின்றன. முற்றிலும் புதிய கதாபாத்திரங்கள் உருவாக்கபடுகிறார்கள் - அவர்கள் கதைசொல்லியின் எண்ண எதிர்பார்ப்புக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். இன்று கதை சொல்ல இயந்திரங்கள் இருக்கின்றன. மனிதமனதின் கதைகள் யாருக்கும் கிடைப்பதில்லை - கேட்பதற்க்கும் இன்னும் சில காலங்களில் யாரும் இருக்கமாட்டார்கள். கதைகள் நம்மை வேறோர் உலகத்துக்கு கொண்டு செல்லும் அற்புதம் பல நேரங்களில் யாராலும் உணர்ந்துகொள்ளபடுவதில்லை. கவிதைகள் வேறோர் உலகம் - கதைகள் வேறோர் உலகம் ஆயினும் மெல்ல விரியும் மனதின் பரிமாணங்களை உணர்தல் சுகம் - வாழும் கணிப்பொறி நரகம் தாண்டிய ஒரு தேவதை உலகம்... என்னை போலவே யாரும் இருந்தால் - பகிர்தலில் சுகம் உணரலாம்...

ஆதிமனிதனின் ...

செய்தி ஊடகங்களை பற்றி ஒரு விவாதம் எழுந்தது இன்று. பொதுவாக செய்தி ஊடகங்களில் நல்ல மங்களகரமான செய்திகளில் சதவிகிதம் 30%க்கும் குறைவாகவே இருக்கிறது. 70% அசந்தர்ப்பமான, வாழ்வின் நிகழ்வுகலில் குலைவுகள் நிகழ்ந்தாலே செய்தியாக்க படுகின்றன. மனிதர்களுக்கு இது மாதிரி ஒரு சுவை ஏதோ ஒரு மீடியத்தின் வழியாக தேவைபடுகிறது என்கிறார் சுஜாதா (கற்றதும் பெற்றதும்). எழுதுவதற்கு ஏதும் இல்லாமல் போகும் ஒரு நேரத்தில் சினிமா நடிகைகளில் வாழ்க்கை, பெண்களின் கற்பு,பெருநகரங்களின் முறையற்ற தனிமனித வாழ்க்கை,அரசியல் பேரங்கள், செக்ஸ் போன்றவை செய்திகளாக்கபடுகின்றன. இது ஜூனியர் விகடன், ரிப்போர்டர் மற்றும் இந்தியாடுடே மற்றும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வெகுஜன பத்திரிக்கைகளுக்கு பரவி வருகிறது. சுஜாதா சொல்வது போல, ஆதிமனிதனின் மன அடிஆழ எண்ணங்களில் சுவைபட இது தீவிரமாக வியாபாரமாக்கபடுகிறது.

கஜினி

சமீபத்தில் கஜினி திரைப்படம் பார்த்தேன். கமர்சியல் திரைப்படம். லாஜிக் எல்லாம் பேசினால் படம் பார்க்க முடியாது. நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் இல்லை - பத்திரிக்கைகள் இதனையே அற்புதமான நடிப்பு என புகழ்கின்றன. நடிப்பின் இலக்கணம் இப்போதெல்லாம் மாறிவருகிறது. உண்மையாக நடித்தெல்லாம் இப்போதைய பார்வையில் ஓவர் ஆக்டிங். இயல்பாக இருப்பது என்ற போர்வையில் நடிக்காமலேயே இருப்பதுதான் நடிப்பு. இயல்பு நடிப்பு பற்றி எல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. வங்கமும், கேரளமும் கமர்சியல் திரைப்படங்களில் கை நனைத்திருந்தாலும் நம்மைபோல முங்கி குளிப்பதில்லை. சொல்ல வருவதை தெளிவாக சொல்லும் பாங்கு இருக்கிறது. இப்போதெல்லாம், சண்டைகாட்சிகள், தெளிவான காமிரா, கொஞ்சம் பதைபதைக்கும் இசை, உள் ஆர்ந்த கவர்ச்சி, ஆணுக்கு நிகரான பெண்கள் (எதில் என்றெல்லாம் கேட்க கூடாது - சில நேரங்களில் ஆணைவிட அதிகமாக)காமெடி என்ற பெயரில் கூச்சலும் கும்மாளமும் என்பதெல்லாம் திரைப்படமாகிவிட்டது. பாலுமகேந்திராவும் விதிவிலக்கு அல்ல போல - புகைபடங்கள் வேறு மாதிரி பேசுகின்றன. கதை என்பது ஒரு வரி விஷயம். வசனம் என்பது அதிபுத்திசாலிதனமாக இருக்க வேண்டும் என்பதாலேயே குழப்பங்கள் கூடியது. எடிட்டிங் என்ற பெயரில் வேகமான புரிதலுக்கு முந்தய பட ஓட்டம். யாருக்காக திரைப்படம் என்பதே புரியவில்லை - எல்லாம் படித்த, உலக படங்கள் பார்க்கும், மேல்தட்டு சமூகத்துக்கு மட்டும் திரைப்படம் என்றால் அவர்கள் உலகபடங்களே பார்கலாமே- தமிழ் படங்களில் என்ன உண்டு விஷேசமாக - உச்சரிப்பு தங்கிலிசை தவிர...

பெசன்ட் நகர் கடற்கரைக்கு

சென்ற முறை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றிருந்த போது, ஒரு சிறுமியை பார்த்தேன். கையில் பட்டங்கள் - நிஜ பறக்கும் பட்டங்கள். வாயில் ஏதோ சினிமா பாடல். எல்லாரிடமும் பட்டம் வாங்க சொல்லி கெஞ்சி கொண்டு இருந்தாள். யாரும் அவளை பொருட்படுத்தவில்லை சிலரை தவிர. குழந்தைகளுக்காக பட்டம் வாங்கினார்கள், சில இளைஞ்சர்களும் வாங்கினார்கள்... அப்புறம் நான் மணலில் உட்கார்ந்து கொண்டேன். நண்பர்களில் கடலில் விளையாடிகொண்டு இருந்தார்கள். சில நிமிடங்களில் அந்த சிறுமி பட்டங்களை ஒரு கையிலும் இன்னொரு கையில் ஏதோ ஒரு பொருளுடனும் கடலில் விளையாடி கொண்டிருந்த இளைஞ்சர்களை கெஞ்சி கொண்டு இருந்ததை கவனித்தேன். அவள் கையில் ஏதோ கடல் விலங்கு - அரைகுரை உயிருடன். நீர்வேகத்தில் கரை ஒதுங்கிவிட்டது போலும்,. அதனை மீண்டும் கடலில் விட சொல்லி எல்லாரிடமும் கெஞ்சி கொண்டு இருந்தாள். இம்முறை சுத்தமாக யாரும் அவளை பொருட்படுத்தவில்லை. அப்புறம் பட்டங்களை மணலில் செருகினாள். உடையை மேலிழுத்து செருகி கொண்டு ஒரு கையில் அந்த மீனுடன் கடலில் இறங்கினாள். மார்பளவு தண்ணீரில் நின்று வேகமாக அதனை கடலினுள் வீசினாள். பட்டங்களை எடுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் - மீண்டும் அதே பாட்டை முனுமுனுத்து கொண்டு. என் வயதில் நான் இப்படி இருந்திருக்கிறேனா..? நிச்சயம் கிடையாது. ஒரு மீனுக்காக கவலைபடும் சிறுமி நிச்சயம் என்னிலும் உயர்ந்தவள். சொல்லபோனால் நம் படிப்பு, சமுதாய பழக்கங்கள் எல்லாம் நம் இயல்பு வாழ்க்கையை மெல்ல நம்மிடம் இருந்து எடுத்து கொண்டன. மிஞ்சி நிற்பது சொஞ்சம் சுயநலமும், நிறைய ஆசைகளும் கவலைகளுமே... மனிதாபிமானம், அன்பு, காதல், பரிதாப உணர்ச்சி, உதவி செய்யும் மனோபாவம் மற்றும் மனித உணர்வுகள் எல்லாம் இருந்தால் அற்புதமான ஒரு பெயர் உங்களுக்கு உண்டு நம் சமூகத்தில் -- இளிச்சவாயன்...