அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

சைக்கிள் ...

சைக்கிள் என் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. முதல் காதலை சொல்லி கொடுத்தது சைக்கிள்தான். அப்போதெல்லாம் சைக்கிள் வாடகைக்கு மட்டுமே கிடைக்கும். 1 ரூபாய் க்கு ஒரு மணி நேரம். ஆனால் 1 ரூபாய் பெரிய பணமானதால் எனக்கு கிடைப்பது நாலணாவும், எட்டணாவுமே. அப்போது எனக்கு சரியாக சைக்கிள் ஓட்ட வராது. என் வயது பயலெல்லாம் சைக்கிளில் வித்தை காண்பிக்க எனக்கு குரங்கு பெடல் கூட வராது. (இன்றைக்கும் அது எனக்கு பெரிய ஆச்சரியம் - எப்படி பேலண்ஸ் பண்ணுகிறார்கள்.) எனக்கு அப்போது ஒரு தோழி இருந்தாள். சங்கீதா. அது எங்கள் இருவருக்குமே காதல் செய்யும் வயது கிடையாது எனினும், ஒரு ஜெனிடிக் ஈர்ப்பு இருவருகுள்ளும் இருந்தது. கொஞ்சம் நெருக்கமான நட்பு. ஒரு வகையான பொஸிசிவ்னெஸ். ஊரெல்லாம் சேர்ந்து சுத்துவோம். இதனால் பசங்களுக்கு என்மேல் காண்டு இருந்தது வேறு விஷயம். அவளிடம் நான் நிறைய ரீல் விட்டிருந்தேன். அதில் ஒன்று எனக்கு பிரமாதமாக சைக்கிள் ஓட்ட தெரியும் என்பது. அவளும் ரொம்ப நாளாக அதனை நம்பியிருந்தாள். ஒருதடவை அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுதரும்படி என்னிடம் அவள் கேட்கும் வரைக்கும் எல்லாம் நன்றாகவே போனது. அவள் கேட்டதும் உலகமே நின்றது போல இருந்தது. எனக்கு தெரியாது என ஒத்து கொள்ள ஆம்பளை மனது கேட்கவில்லை. பசங்களிடம் போய் உதவி கேட்கவும் மனதில்லை (சுலபமாக டீல் விட்டுவிடுவார்களோ என்ற பயம்தான்.) எவ்வளவு தவிர்க்க பார்த்தும் ஒரு ஞாயிற்று கிழமை ஊருக்கெல்லாம் சுகமாகவும் , எனக்கு மட்டும் விவகாரமாகவும் விடிந்தது. ஒரு பெண்கள் சைக்கிள் போன்ற அமைப்புடைய சைக்கிளை அவளும் நானும் தள்ளி கொண்டே குளத்தோர மைதானத்துக்கு போனோம். அவளை ஏறி உட்கார சொன்னேன். இருவருக்குமே நடுக்கம். சைக்கிளில் சீட்டின் நேராக உட்காருவதே ஒரு கலை. அதற்க்குள் கிழே விழுந்து இருவருக்கும் சிராய்ப்பு. அப்புறம் பின்னால் பிடித்து கொண்டு, நேரா பாரு நேரா பாரு என்று கத்தி கொண்டே நாக்கு தள்ள ஓடி, ஒரு வழியாக நிறைய சிராய்ப்புகளுடனும், ஏகப்பட்ட வியர்வைகளுமாக அவள் சைக்கிளை ஓட்டினாள். நான் பின்னாலேயே ஓடினேன் - வேறு என்ன செய்ய முடியும். அப்போதுதான் கற்று கொண்டேன். சைக்கிள் ஓட்ட தெரியாவிட்டாலும் சைக்கிள் சொல்லி கொடுக்க முடியும் என்பதை. ஆனால் விதி வேறு விதமான சதி செய்திருந்தது. வீடு திரும்பும் போது அவளுக்கு காலில் ஏற்பட்டிருந்து சிராய்ப்புகளால் நடக்க முடியவில்லை. காலையில் வரும்போது தூரம் தெரியவில்லை - இப்போது களைத்திருந்ததால் தூரம் அதிகம் போல தெரிந்தது. அந்த கேள்வியை அவள் கடைசியில் கேட்டே விட்டாள் "என்னை வச்சு டபுல்ஸ் கூட்டிட்டு போடா.." - பெண் பிள்ளை கேட்டு மறுக்க முடியுமா..? எல்லாம் ஒரு நம்பிக்கைதான். அவளை கேரியரில் உட்காரவைத்து ஊரில் உள்ள சாமியெல்லாம் மனசில் நினைத்து கொண்டு ரெண்டு அழுத்து அழுத்துவதற்க்குள் பேலன்ஸ் தவறி, சைக்கிளோடு இருவருமே குளத்து சேத்தில் அமிழ்ந்திருந்தோம். எனக்கு நல்ல அடி. அழக்கூட முடியாது - பெண் பிள்ளை முன்னால் அழுவதா..? ஆனால் அவளுக்கு அந்த லஜ்ஜை எல்லாம் கிடையாது. ஓவென கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதனபடுத்துவதா, என் காயத்துக்கு எச்சில் தடவுவதா, பெண்டான சைக்கிள் வீலுக்காக பயப்படுவதா என தெரியாமல் கொஞ்சம் நேரம் பிரமை பிடித்து உட்கார்ந்து இருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழித்து கொண்டு, அவளையும் அழைத்து கொண்டு வீடு சேர்ந்தோம். சரியான திட்டு. எல்லாரிடமும். அவங்க வீடு, என் வீடு போதாகுறைக்கு சைக்கிள் கடைகாரன். கொஞ்ச நாள் அவள் என்னிடம் பேசவே இல்லை. அப்புறம் ஒரு நாள் டூரிங்டாக்கிஸில் இருந்து திரும்பும்போது அவள் ஏதோ பேச, நான் ஏதோ பேச கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு என சீக்கிரம் பழைய நட்பு பற்றி கொண்டது. இன்றும் அந்த பொய்யும், அதற்கு அவளால் கிடைத்த தண்டனையும் மறக்க முடிவதில்லை. பேசாமல் இருப்பது பெரிய தண்டனை - அதுவும் மனதுக்கு இனிய தோழி என்றால்... அப்புறம் பள்ளி இறுதியில் சைக்கிள் நன்றாக ஓட்ட தெரிந்த காலகட்டம் - சாயந்திரம் டைப்பிங் இன்ஸ்டியூட் வழியாக வேகமாக சைக்கிளில் போவது, வளைவில் ஸ்டெயிலாக திரும்புவது, கையை விட்டு விட்டு ஓட்டுவது, வேகமாக திரும்பும்போது தவறுதல் போல பேப்பர்களை தவறவிடுவது.. அதை எடுத்து தரவே அங்கே ஒரு பெண் இருந்தாள். அய்யர் பெண் - பெயர் கூட தெரியாது. ஒரு ரோஜா மட்டுமே அடையாளம். எனினும் இன்னும் யாராவது அய்யர் பெண் தாவணிகட்டி தாண்டி போனால் அவள் அடையாளத்தை மனது தேடுகிறது. வயதுகால பெண் நட்புகளை நெருக்கமாக்கி தந்தது எல்லாமே சைக்கிள்தான். சைக்கிள் பாரில் பெண் உட்கார்ந்து இருக்க அழுத்தி மேடு மிதிக்கும் போது, அவள் கூந்தல் முகத்தில் பரவ, பெயர் தெரியாத பூக்களின் வாசமெல்லாம் நெஞ்சில் நிறையும். திருவிளையாடல் பாண்டியனுக்கு வராத சந்தேகமெல்லாம் வரும். அதனால் தானோ என்னவோ இன்றும் சைக்கிள், சைக்கிளில் செல்லும் பெண்கள் எல்லாம் ஏதோ நினைவுகளை விதைத்தபடியே செல்கிறார்கள்.

தீபாவளி...

தீபாவளி விவகாரமாக விடிந்தது இந்த முறை. அலுவலகத்தில் மூன்று மாதத்துக்கு முன்பு ( நான் வேலைக்கு சேரும் முன்னர்) ஆரம்பித்த ஒரு தொல்லைக்கு யாரும் இல்லாத காரணத்தால் நான் பதில் சொல்ல ஆரம்பிக்க அது முடிவில் காலை சுற்றிய பாம்பாகிவிட்டது. நேரம் 12:40 மேல் ஆகிவிட்டதால் உணவு இல்லை - கிடைத்த ஆப்பத்தை சாப்பிட்டு விட்டு, வீடு தேடி வந்தால், வேலைக்கார அம்மாளின் கைங்கரியத்தில் கதவில் ஆட்டோலாக் சிக்கி கொண்டிருக்க நண்பர்கள் தெருவில் நின்றிருந்தார்கள். தெரிந்த நண்பர்கள் எல்லாரும் தீபாவளிக்கு ஊருக்கு போயிருந்ததால் உதவிக்கு ஆளில்லை. பாண்டிபசார் வரை நடந்தோம். ஓட்டல்களில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் - வெளியூர்காரகளுக்கு ஓட்டல் அறை இரவில் கிடைக்காதாம் - அப்புறம் எதற்கு ஓட்டல் என்று தெரியவில்லை. நேரம் ரொம்ப ஆகிவிட்டதும் ஒரு காரணம் என்றார்கள். அப்புறம் ஒரு சின்ன அறை கிடைத்தது. அத்தகைய அறையை நான் பார்த்தே இல்லை. 'ஏதேதோ' நடக்கும் இடம் போல. அதுக்கு ஆயிரம் கேள்விகள். அலுவக ஐடி கார்டு வாங்கி வைத்து கொண்டார்கள். மூன்று பேர். குப்பையான மெத்தைகள், அழுக்கான அறை. சத்தம் போடும் மின்விசிறி. கைகுட்டையை கண்ணில் கட்டிகொண்டு வலுகட்டாயமாக கண்களை மூடி கொண்டு தூங்க முயற்சி செய்ததிலேயே விடிந்து விட்டது. 8:45 க்கு ஒரு பூட்டு ரிப்பேர்காரனை அள்ளி கொண்டு வந்தால் அவன் ஒரு கம்பியில் 10 தேய்ப்பும், 4 தீக்குச்சிகளும் செலவு செய்து 20 நிமிடத்தில் கதையை முடித்து விட்டான். ஒரு தேனீர் குடித்து விட்டு, 9:30க்கு தலைக்கு எண்ணைவைத்து குளித்து, சென்ற முறை கோவை சென்றிருந்த போது எடுத்த புது துணியை அணிந்து கொண்டு நட்பு வட்டம் எல்லாம் கூப்பிட்டு, வாழ்த்து சொன்னேன். உணவு விடுதிகள் இல்லாததால் மதிய உணவும் சேர்த்து 1 - 1/2 நான் - காளான் மசாலாவில். இரவு - இருக்கவே இருக்கிறது மாகி நூடுல்ஸ். கொஞ்சம் டிவிடி திரைப்படங்கள், கொஞ்சம் தூக்கம், முடிந்தே விட்டது தீபாவளி. நாளைக்கு மறுபடியும் அலுவலகம்... இயந்திர வாழ்க்கை... தீபாவளி சாக்கிலாவது நட்பு வட்டங்களில் ஆழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. என்னதான் மின் அஞ்சலும், இணைய வழி வாழ்த்துக்களும் இருந்தாலும், நேரில் வாழ்த்து சொல்லும் சுகம் அலாதி.

பள்ளியின் கதவுகளில்...

கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் பழைய மாணவர் பேரவை 25 ஆண்டுகளுக்கு முந்திய மாணவர்களை மீண்டும் கலந்துரையாட செய்து அற்புதமான ஒரு முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இப்போதெல்லாம் மாதம் இருமுறை வைக்கிறார்கள் என நினைக்கிறேன். பழைய நண்பகளை அதுவும் நெடுநாட்களுக்கு பிறகு சந்திப்பது அற்புதமான விஷயம். நானும் என் பள்ளி நண்பர்களை அப்படி சந்தித்து இருக்கிறேன். 8ஆம் வகுப்பில் இருந்து ஒரு பழக்கமாக பள்ளி குழு புகைபடங்களின் பின்புறம் வரிசைவாரியாக பெயர்களை எழுதிவைப்பதை பழக்கமாக கொண்டதினால் இன்னும் புகைபடங்கள் பார்க்கையின் பெயர்கள் நினைவிருக்கிறது. இந்த பழக்கத்தை சொல்லிகொடுத்த தமிழ்அய்யாவுக்கு என்றும் நன்றி சொல்வேன். ஆயினும் சிலரை எங்காவது எத்தோசையாக பார்க்க நேரிடும் போது பெயர் தொண்டையில் சிக்கி கொள்கிறது. ஆரம்ப பள்ளி தோழர்களை சில முறை கிராமத்துக்கு போகும்போது சந்திப்பதுண்டு. முருகன் என்றொரு நண்பர் - அருணாச்சலம் மளிகை கடை வைத்திருக்கிறார். திங்களூர் - பெருந்துறை பகுதியில் ஒரு சின்ன ஊர் (இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது - கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருவதற்கு சான்றாக). எனக்கு வீடு தாண்டிய உலகத்தை அறிமுகம் செய்த ஊர். சோளக்காட்டுக்குள் பயமுறுத்தும் அய்யனார் கோவில், ஆரம்ப பள்ளி கூடத்தின் திண்ணைகள் கட்டிய வகுப்பறைகள், யாரோ ஒரு மாணவன் எழுதிய இன்றைய மாணவர் பதிவு மற்றும் யாரோ ஒரு ஆசிரியர் சொல்லி கொடுத்த பாடத்தின் அழிக்கபட்டாத மிச்சங்களுடன் கூடிய கரும்பலகை, கொடி ஏற்றும் மைதானம், சந்தை பகுதி, ஊருக்கு வெளியே வருடம் ஒரு முறைமட்டுமே கதவு திறக்கபடும் இருண்ட கோவிலுன் கல் மண்டபங்கள் எல்லாம் என்னுடன் வரும்போது அவர் ஆச்சரியமாக பார்ப்பார். இதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை என்பார். அவர் மனைவி அற்புதமான சமைப்பவர். ஊர் திரும்பும் வரை நாக்கினடியில் சுவைக்கும் கோழி குழம்பு. இரண்டு அற்புதமான குழந்தைகள் - அதே ஓட்டு பள்ளியில் படிக்கின்றன (அடுத்த வருஷம் பெருந்துறைல படிக்க வைக்கணும்...என்பார் அடிக்கடி). என்னோடு நான் பொருத்தி பார்க்கும் நண்பர்கள் குழாமில் முருகனின் வாழ்க்கை என்னை பொருத்தவரை அற்புதமான உலகம். அவனுக்கு என் உலகம்தான் அற்புதம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற சொல்வழக்கு போல. சில நண்பர்களை மறுபடியும் பார்க்கவே முடியவில்லை. ஆறுமுகம் என்றொரு நண்பன் - 3ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தோம். பள்ளி சுற்றுலாவில் மைசூர் போனோம். 3 நாட்களும் கைகளை கோர்த்து கொண்டே(தொலைந்து போகாமல் இருக்க...) சாப்பாடு, தூக்கம், பெரிய சர்ச், பிருந்தாவனம், ஏதேதோ இடங்கள்... இன்று நினைக்கையில் வாழ்க்கையின் முடிந்த பகுதியின் சந்தோஷங்கள் இனிக்கின்றன. வருத்தங்கள் ? - வழக்கம் போலவே....

ஆட்சி மாற்றம்...

NDTVல் நம் ராணுவவீரர்களோடு நட்புமுறை பயணமாக பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் வந்து உறவாடுவதை சென்ற முறை கோவை சென்றிருந்த போது காண முடிந்தது. நிறைய ராணுவவீரர்கள் நன்றாக பாடுகிறார்கள். தாய்பாஷையில் பற்றோடு இருக்கிறார்கள். பிடிவாதமாக அதிலேயே பேசுகிறார்கள். ஆட்டமும் உண்டு. தன் இனத்தின் பாரம்பரிய நடனத்தை அற்புதமாக (கொஞ்சம் வெட்கத்தோடு) ஆடுகிறார்கள். குடும்பம் என்ற ஏக்கம் பலருக்கும் இருப்பதை காண முடிகிறது. அவர்களின் வாழ்க்கை முறையோடு பொருத்தி பார்க்கையில் ஏதோ நாம் மாதம் ஒருமுறையாவது குடும்பத்தோடு உறவாடுகிறோம். பேசுகிறோம். உத்திரவாதமில்லாத வாழ்க்கையில் அவர்கள்... உத்திரவாதம் தரமுடியாத வலுக்காட்டாயமான வாழ்க்கைமுறையில் நாட்டுமக்கள்... ஒரு இந்திய ராணுவ கணக்கெடுப்பில் 68% வீரர்கள், ராணுவம் நாட்டை ஆளவேண்டும் என சொல்லியிருப்பதாக படித்தேன். கலாம் போன்ற குடியரசுதலைவரின் ஆட்சியில் ராணுவம் ஆட்சி பொறுப்பேற்குமாயின் ... மாற்றம் நிச்சயம் வரலாம்.

சென்னையில்...

சென்னைக்கு வந்து சென்ற Oct 21ஆம் தேதியோடு 1 மாதம் முடிந்துவிட்டது. இந்த ஒரு மாதம் ஓரளவில் சென்னையின் வாழ்க்கைமுறைக்கு என்னை பழக்கபடுத்தியுள்ளது. அலுவகம் ஆழ்வார்பேட்டையிலும், தங்கியுள்ள இடம் வடக்கு உஸ்மான் ரோட்டிலும் இருக்க பஸ்ஸும் ஆட்டோவும் கொஞ்சமாய் பழக்கமாகியுள்ளது. உணவு கடைகள், பத்திரிக்கைகள் கிடைக்கும் இடங்கள், Browsing Center, மருந்து கடைகள், ஞாயிறு பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவையும் கொஞ்சமாய் தெரிந்துள்ளன. எனினும் பெருநகரங்களின் வாழ்க்கைவேகம் இன்னும் பிடிபடவில்லை. கோவை மேலும் நெடுநாட்களுக்கு சொர்க்கமாகவே தோன்றும். நிறைய கூட்டம், நிறைய வெயில், மழை வந்தால் தெருவெல்லாம் மூழ்ங்கி போகும் அவலம், கொஞ்சமும் மரியாதை இல்லாமல் தெனாவெட்டாகவே பேசும் மக்கள் சமூகம், அர்த்தமில்லாத வண்டி ஓட்டும் லாவகம், பேஷன் என்ற சொல்லின் தப்பார்த்தமான உடையலங்காரங்கள், எங்கு போவதாக இருந்தாலும் ஆர்காடு நவாப் அளவுக்கு சொத்து இருந்தால்தான் போகமுடியும் என்பது போல சார்ஜ் கேட்கும் ஆட்டோகாரர்கள் என சென்னை இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதி மக்களும், பெருநகரத்தின் வாழ்க்கைமுறையில் தீப்பெட்டிகுள் அடைபட்ட பொன்வண்டு போல இருந்து கொண்டே இருக்கிறார்கள். சொந்த ஊரின் ஞாபங்களை, என்றேனும் ஒரு நாள் என் ஊருக்கே போய்விட போகிறேன் என்ற எண்ணங்களை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இனி தொடர்ச்சியாக எழுத முடியும் என நினைக்கிறேன். மத்திய அரசின் சுலபவிலை கணிப்பொறி திட்டம் மூலமாக 1 மாதத்தில் கணிப்பொறிக்கு குறிவைத்துள்ளேன். இணைய இணைப்பும் கிடைக்கும். Browsing Centerல் unicode அமைத்துள்ளேன். அது Windows 98. எனினும் சில இணைய நண்பர்களின் உதவியால் unicode அமைக்க முடிந்துள்ளது. எழுத நிறைய உள்ளது - காலை நேரங்களை உபயோகபடுத்தலாம். அலுவத்தில் நெருக்கல்கள் ஏற்படாதவரை.