அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, August 27, 2011

மழைக்கால மேகம் ஒன்று...

மழை இப்போது வந்துவிடும் போல மேகம் கட்டி நின்றுகொண்டிருக்கிறது. காற்று நன்றாக இருக்கிறது. எந்த நிமிடமும் மழையின் முதல் துளி விழுந்துவிடலாம். இந்த காற்று தூரத்தில் பெய்யும் மழையின் வாசத்தையும் சுமந்து கொண்டு அலைந்துகொண்டிருக்கிறது. தூரத்து மலை அருகே எல்லாம் மேகம் கருப்புகட்டி மலையை மறைத்து கொண்டு நிற்கிறது. மலை மேல் எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கும் - மெல்லிய ஒரு மழைத்திரை தூரத்தில் தெரிகிறது. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் தேநீர் சுவைக்கு நாக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறதுவானம் இன்னும் சிணுங்கி கொண்டுதான் இருக்கிறது. சிணுங்கும் வானம் குழந்தையை போல. தூக்கி இடுப்பில் வைத்து கொள்ள தூண்டும் அழகு அது..!!

Tuesday, August 23, 2011

வண்ணதாசன் - ஒரு மாயாவி


வண்ணதாசனை படிக்கும் போது மறுபடி ஒருமுறை வாழ்க்கையை முதலில் இருந்து வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. கல்யாண வீடுகளிலும், இழவு வீடுகளிலும் பார்க்கும் வயது மூத்த வயசாளிகளிடம் பத்து நிமிடமாவது அவர்களின் கையை பிடித்து கொண்டு நின்று விட வேண்டும் போல இருக்கிறது. மழை, வெயில், அணில், குருவி எல்லாம் நின்று நிதானமாக ரசிக்க வேண்டும் போல இருக்கிறது. எல்லாருக்குள்ளும் இருக்கும் சொல்லாத கதைகளை சொல்ல சொல்லி ராப்போது முழுக்க ஒரு நீண்ட பயணத்தில் கேட்க வேண்டும் போல இருக்கிறது. நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையாரையும் நாள் முழுக்க பார்த்து கொண்டு இருந்துவிட வேண்டும் போலவும் இருக்கிறது. அந்த மனிதர் அப்படி ஒரு பாடு படுத்திவிடுகிறார். சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வடிகிறது. சில நேரங்களில் நினைத்து நினைத்து வெடித்து சிரிப்பு வருகிறது. - மொத்ததில் எல்லாரையும் எல்லாவற்றையும் ரசிக்க வைத்து விடுகிறார். இப்படி ஒரு மனிதன் வாழும் காலத்தில் பதிவிடும் அனுபவங்கள் காலம் எல்லாம் கடந்து நிற்க்கும்.

Monday, August 22, 2011

மனசின் பயணம் ...

நான் துடியலூரில் இருக்கிறேன். வாரம் ஒருமுறையாவது இங்கே வந்து விடுவது வாடிக்கை. அது திங்கள்கிழமை எனில் ஒரு குதூகலம் உண்டு. காரணம் - துடியலூர் சந்தை. சின்ன சந்தைதான் எனினும் மதியம் 4 மணிக்கு மேல் 8 மணிவரை கூட்டதுக்கு குறைவிருக்காது. எல்லாம் கிடைக்கும் - சல்லீசான விலைதான், அளவும் ரொம்ப சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. சந்தைக்கு என்று ஒரு அலாதி வாசம் உண்டு. அந்த சந்தையின் வாசத்துக்காகவே அந்த வழியாக வர மனது துடிக்கும். மாம்பழமும், கருவாடும், மசாலா பொருட்களும், பலாப்பழமும் .. கலந்து வரும் வாசம் மனசை திங்களூருக்கு - 2 வகுப்பு காலத்துக்கு கூட்டி செல்வதை தடுக்க முடிவதில்லை. மனசின் பயணம் எதைத்தான் விட்டுவைக்கிறது.

Sunday, August 21, 2011

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது...

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறேன். இடையே கணக்கு இல்லாத அளவுக்கு காலம் உருண்டோடிவிட்டது. காலம் என்பது நாட்காட்டி மட்டுமல்லவே, எத்தனையோ வாழ்வனுபவங்களை தந்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல, மவுனமாக அதுவும் நம் கைபிடித்து வந்து கொண்டுதான் இருக்கிறது.


எதனையும் பகிர்ந்து கொள்வதற்க்கு யாரும் இல்லாத தனிமையில் புத்தகங்கள்தான் தோழனாகின்றன. இந்த முறை கோவையில் புத்தக கண்காட்சியில் சில புதிய புத்தக தோழர்களுடன் அறிமுகமானது.


  1. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு - விக்ரமாதித்யன் - கட்டுரைகள், நேர்காணல்கள் - சந்தியா பதிப்பகம்.
  2. அபிதா - லா.ச.ராமாமிருதம் - நாவல் - புதுமைபித்தன் பதிப்பகம்.
  3. பெயர் தெரியாமல் ஒரு பறவை - வண்ணதாசன் - சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம்.
  4. பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் - சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம்.
  5. சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா - சிறுகதைகள் - பாரதி புத்தகாலயம்.
  6. சுண்ணாம்பு கேட்ட இசக்கி - .கா.பெருமாள் - நாட்டுபுற கள ஆய்வு அனுபவங்கள் - யுனைடட் ரைட்டர்ஸ்
  7. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - சிறுகதைகள் - தமிழினி
  8. அனல்காற்று - ஜெயமோகன் - குறுநாவல் - தமிழினி


இந்த புத்தகங்களையும், இவை ஏற்படுத்தும் நினைவுகளையும் தொடர்ச்சியாக பதிவிட விருப்பம்.. காலம் கை பிடித்து காத்திருக்கிறது.

Wednesday, June 02, 2010

எங்கள் இசையின் பிரம்மா...

மீசை முளைக்க தொடங்கிய பதின்வயதுகளில் அறிமுகமானது பண்ணையபுரத்து கலைஞனின் இசை. எல்லோரையும் போல சினிமா பாடல்களில் தன்னையும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணையும் கொண்டு கனவு காணும் வயதுகளில், பிண்ணனி பாடல்கள் இசைஞானிதான். அந்த இசை பித்து இன்றுவரை தொடர்கிறது - இன்னும் மரணம் வரை இருக்கும்.

எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது - இசை பற்றியும், அவர் வாழ்க்கை பற்றியும். என்ன பேசினாலும், அவர் ஒரு மகா கலைஞன் என்பதில் மாற்று கருத்து பலருக்கும் கிடையாது.

ஒரு கட்டுரையில் படித்தது ...

” 900 படங்கள், ,4500 பாடல்கள், மொழிகள் கடந்த இசை என ராஜாவின் ராஜ்ஜியம் கற்பனையிலும் பிரமிக்க வைப்பது. வழக்கமான சினிமா இசையல்லாது, 40 தனி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அவற்றில் பெரும்பாலானவை விற்பனையில் பெரும் சாதனை படைத்தவை. கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவை. 35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந்த தமிழ் சமூகத்தையே கட்டிப்போட்ட ஒப்பற்ற இசைப் படைப்பாளி. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிதாய் பிறந்த உணர்வைத் தரும் இசைக்குச் சொந்தக்காரர். “

இளையராஜாவின் இசை வெறும் இசை மட்டுமல்ல - ஒரு அற்புதமான தியானம். உழைப்பும், கலை மேல் கொண்ட மரியாதையும் தெரியும் அவர் இசையில். பிரமிக்கதக்க இசை நுணுக்கங்கள் மற்றும் வாத்திய தேர்வு ஒரு சுகமான ஆனந்தம்.

வைரமுத்து, வாலி மற்றும் பலரின் அற்புதமான கவிதைகளாகட்டும், எஸ்.பி.பி, யேசுதாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் குரலாகட்டும் - இளையராஜாவின் இசையன்றி இவ்வளவு பெயர் பெற்றிருக்க முடியாது. பலரின் சினிமா உலக வாழ்க்கையின் வெற்றிக்கு பின்னர் அவர் இருந்தார் - பல கதாநாயகர்களின் வெற்றிகள் உட்பட. மறந்து போன திரைப்படங்கள் கூட நினைவில் வருவது அவர் பாடல்களின் வழியாகதான். பாடல் மட்டுமன்றி பிண்ணனி இசையின் நாயகன் அவர்தான் இத்தனை வருடங்களாக.

புல்லாங்குழழும், வயலினும் அவர் பாடல்களில் கொஞ்சி விளையாடும் அழகே அழகு - அதற்க்கு 1000 பாடல்களை உதாரணம் காட்டலாம். எங்கள் யாருக்கும் உலக இசை தெரியாது - ஆனால் எங்கள் உலகத்தின் இசையை அறிமுகபடுத்தியவர் அவர்தான். உலக இசை பற்றிய அதீத ஞானம் உள்ளவர்களுக்கு அவர்மேல் கருத்துகள் இருக்கலாம் - எங்களை பொருத்தவரை இசை என்றால் முதலில் இளையராஜாதான்.

அவர் பிறந்த நாளான இன்று - அவர் இருக்கும் காலங்களில் வாழ்தல் குறித்த மகிழ்ச்சியுடன் ... இந்த பதிவு அவருக்காக.

Tuesday, June 01, 2010

சினிமா விமர்ச்சனங்கள் - ஒரு பார்வை

எந்த ஒரு விமர்ச்சனமும் தனி அளவில், ஒரு கருத்து என்ற அடிப்படையில்தான் நான் பார்க்கிறேன். கருத்து உருவாக ஒரு பின்புலம் வேண்டும் - அந்த பின்புலம் வாழ்வின் அந்த நிமிடம் வரை கடந்து வந்த தருணங்களையும் அனுபவங்களையும் கற்று கொண்டாதாக நம்பப்படுபவைகளையும் அடிப்படையாக கொண்டது. சினிமா விமர்ச்சனங்களும் அப்படித்தான். இப்போதெல்லாம் புதிய அல்லது பழைய, உலக, இந்திய சினிமா பற்றிய அதிபுத்திசாலி விமர்ச்சனங்கள் எழுதாவிட்டால் பதிவுலகத்துக்கே லாய்க்கியில்லை என்ற நிலை உருவாகிவிட்டது போல - அத்தனை விமர்ச்சனங்கள் - மொக்கை படங்களுக்கு கூட.

பெரும்பாலான இந்த விமர்ச்சனங்களுக்கு தோதாகத்தான் நம் தமிழ் படங்களும் இருக்கின்றன - தமிழ் மட்டுமல்ல, வேறு இந்திய மொழி படங்களுக்கு 100க்கு 80, அப்படித்தான் இருக்கின்றன. எனினும் அடிப்படையில் இந்த விமர்ச்சனங்களின் மேல் என் கருத்து ஒன்று உண்டு - இது என் கருத்து மட்டுமே - சில சினிமா விமர்ச்சனங்கள் போல முடிவான ஒன்று கிடையாது.

1. பல பதிவர்கள் சினிமா வெறும் கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போல - எல்லா படங்களுக்கும் உலக படங்களை ஒப்பீடு செய்கிறார்கள். உலக அளவில் சிலாகிக்கபடும் திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை - தேவையான காலத்தில் கொடுக்கவில்லை என்று ஒருமுறை சுஜாதா சொல்லியிருக்கிறார். சினிமா அடிப்படையில் ஒரு வியாபாரம். கடும் உழைப்பு. அது முடிவில் பணமாகவும் வருமானம் கொடுக்க வேண்டும்.

2. மொக்கை படங்களை ஓட்டும் பதிவுகள் சரிதான் - ஏனெனில், சினிமா ஒரு பெறும் உழைப்பு. அதன் வருமானம் வெறும் பணம் மட்டுமல்ல - பலரின் வாழ்க்கை. அந்த உழைப்பை அர்த்தமற்றதாக்கும் சினிமாக்கள் - வசூலில் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும், பலரின் வாழ்க்கையை ஒரு படத்தோடு முடித்து விடுகின்றன. முட்டாள்தனமான சினிமாக்களை சொல்லும் அதே தொனியில் தனக்கு புரியவில்லை என்பதற்க்காக எல்லா (ஓரளவுக்கு) உருப்படியான திரைப்படங்களையும் கலாய்ப்பது - ஒரு தனிமனித புத்திசாலித்தனத்தின் விளைவே. தனக்கு புரியாமல் போன காரணம் தெரிய யாரும் உழைப்பதில்லை. ஒரு கதைக்கு பின்னான கரு, அதன் புனைவு, திரைக்கதையாக்கத்தின் வியாபாரம் எதுவும் புரிவதில்லை. வெறுமனே - எனக்கு புரியவில்லை - எனவே யாருக்கும் புரியாது என்ற தொனி பலரின் விமர்ச்சனங்களில் உண்டு.

3. ஏனென தெரியாத குழப்பமான பார்ப்பனிய எதிர்ப்பு. பார்பானல்லாதவன் செய்தல் கலை - பார்பான் செய்வதெல்லாம் குற்றம் என்ற தொனி. இந்த குழப்பத்தை பற்றி எழுத வேண்டியதே இல்லை - பதிவுலகம் முழுக்க வினவபட்ட விஷயம்.

4. இத்தனை புத்திசாலித்தனமான (நினைத்து கொண்டு) விமர்ச்சனங்களை எழுதும் பதிவு நண்பர்கள் சினிமாவை வெறும் டி.வி.டி. தியேட்டர் அளவிலேயே அதிகம் தெரிந்து கொண்டு இருக்கிறார்கள். விதிவிலக்காக சிலர் உண்டு எனினும், விமர்ச்சனம் எழுதும் கோஷ்டி அதிகம் "பொட்டி" தட்டுபவர்கள்தான். எல்லார் விருப்பத்துக்கும் ஒரு திரைப்படம் நிச்சயம் இருக்க முடியாது - அப்படி விமர்ச்சனமே இல்லாத திரைப்படங்கள் கிடையாது. என் கருத்து, விமர்ச்சனம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான். எதனை எதனோடு ஒப்பீடு செய்யவேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல்தான் பெரும்பாலும் விமர்ச்சனங்கள் அமைகின்றன.

5. தன்னை புத்திசாலி என நினைத்து உழைப்பவர்கள் - சினிமா விமர்ச்சனம் தவிர, ஏதாவது உருப்படியாகவும் எழுதலாம். சினிமா விமர்ச்சனம் எழுத தினத்தந்தியும் வேறு குப்பைகளும் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை பற்றிய குறிப்பு போதும் - அதனை பார்ப்பதும் பார்க்காததும், புரிந்து கொள்ளுதலும் அவரவர் உரிமை. இப்படி ஒரு சினிமா இருக்கிறது - முயற்சி செய்யுங்கள் என்ற தொனியிலான குறிப்புகள் எந்த பதிவிலும் காண அரிதாகி விருகிறது.

6. சினிமாவுக்கு வெளியே புத்திசாலி என அறியபட்டவர்களை எல்லாம், சினிமா முட்டாளாக ஆக்கியிருக்கிறது. காரணம் - திரைப்படத்தின் வெற்றி / தோல்வி என்ற இரு நிலைகள். வெற்றி படங்கள், சமூக அக்கறையோடும், வாழ்வின் நிஜங்களை பற்றிய புனைவுகளோடும் இருக்குமானால் அது நிஜ வெற்றி. எனினும், திரைபடங்களுக்கான பகுத்தறிவு, அதனை என்ன வகையான திரைப்படம் என்று தீர்மானித்து விடுகிறது. அந்த அளவில், அந்த திரைப்படம் தன் தன்மையை கொண்டிருக்கவேண்டும். (உதாரணம்: Action, Adventure, Comedy, History, Fantasy, Drama, Musical, etc.) இதனை பற்றிய அறிவு, விமர்ச்சகர்களுக்கு அவசியம். இல்லாவிட்டால் எதிலோ எதனையோ தேடும் நிலைதான் வரும்.

7. சினிமாவுக்கு சமூக அக்கறை எப்படி தேவையோ, அதே அளவு சமூக அக்கறை விமர்ச்சகர்களுக்கும் வேண்டும். மோசமான முட்டாள்தனமான சினிமா சமூகத்தின் சில வேர்களை அழிப்பதை போல, மோசமான முட்டாள்தனமான விமர்ச்சனங்கள் சிலரின் வாழ்க்கையை அழித்து விடுகின்றன. இது சினிமாவுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல - பொதுவிலும் கூட.

8. தனி மனித புரிதல், தனி மனித அனுபவங்களிலும், பக்குவத்திலும் மட்டுமே சாத்தியமாகிறது. அது இல்லாத போல - எடுத்தேன் கவிழ்த்தேன் வகை கருத்துகளும், குழப்பமான கலாச்சார கருத்துகளும் வெளிவருகிறது. பல பதிவுகள் இந்த வகைதான்.

9. குழப்பான ஒப்பீடு ஒரு குற்றம் என்னை பொருத்த வரையில். பெரும்பாலும் ஒரு எதிர்மறை விமர்ச்சனம் அதிக புத்திசாலிதனத்தை காட்டும் என்ற தொனியில் ஏதாவது பேசவே சில பிரபல சினிமாக்களை பற்றி - அவை அரத பழசாக இருந்தாலும் கூட... அலசல் வகை கட்டுரைகள் பதிவிடபடுகின்றன. இது வெறும் புத்தக புத்திசாலிதனத்தை காட்டும் முயற்சி. இந்த வகை பதிவுகளை சம்பந்தபட்டவர்கள் படிக்கவே போவதில்லை.

10. சாப்பிட தெரியும் என்ற ஒரே காரணத்துகாக சமையல்காரர்களை விமர்ச்சிக்கலாம் என்ற போக்கிலிருந்து விலகி, உண்மையான அர்த்தமுள்ள விமர்ச்சனக்கள் எழுதபடுமானால் - அது சினிமா என்ற ஊடகம் என்ன நல்ல விளைவுகளை உருவாக்க விரும்புகிறோமே அதனை கொண்டு வரும். இல்லாவிட்டால், இந்த விமர்ச்சன குப்பைகளை நாளடைவில் யாரும் கண்டு கொள்ளாத நிலை வந்து விடும்.

Monday, May 31, 2010

புகையாய் கலையும் அரசியல்.

ஆரம்பத்திலிருந்தே புகை பிடித்தல் மேல் ஒரு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அப்பா கொஞ்சம் அதிகமாகவே ஊதுவதால் - அந்த வாசத்தின் மேல், ஒரு ஈர்ப்பு இருந்தது எனினும், பள்ளி இறுதியில் முயற்சி செய்து, ரொம்ப இருமியதால் ஆர்வம் முழுவதுமாக போய்விட்டது. புகைபிடித்தல் ஒரு வகையான ஆண்மையின் அடையாளமாகவே மாணவபருவத்தில் கருதியதுண்டு..!! பல நண்பர்கள் பள்ளி இறுதியில்தான் முதல் முறை புகை பழக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். அப்பா முன்பெல்லாம் வாரத்துக்கு 10 பெட்டி வாங்குவார். கல்லூரி காலங்களில்தான் பல ரகம் இருப்பதே தெரியும். உற்சாகபானம் பழகியும் புகை பழகாமல் இருப்பவர்கள் அதிகம். இன்று பெண்கள் கூட புகைக்கிறார்கள். தனி பிராண்ட் எல்லாம் இருக்கிறது.

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாம்..!! சிகரெட் விற்க போவதில்லை என போலி அரசியல் செய்தியில் கூட வந்தாகிவிட்டது. மருத்தவர் ஐயா எதிர்த்து எதிர்த்து இப்போதெல்லாம் ஒரு "எச்சரிக்கை" செய்தி போட்டுதான் புகை பிடிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வருகின்றன..!! இப்படி எல்லாம் விழிப்புணர்வு செய்து நிறுத்த கூட விஷயமில்லை இது - ஜனவரி 1 அல்லது பிறந்த நாட்களில் புகை விட்டு விடுவது பற்றி சத்தியம் செய்தவர்களை கணக்கு போட்டால், அது மக்கள் தொகையில் பாதியை தாண்டும்.

என்னமோ..!! எல்லாரும் சொல்வதால் நானும் சொல்கிறேன்..! புகைபிடிப்பதை விட்டு விடுங்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒரு ஞாயிற்றி கிழமை மதியம் - புகை பிடிப்பதால் உண்டாகும் உடல் நிலை கெடுதல் பற்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சி பாருங்கள்.. ஒருவேளை திங்கள்கிழமையில் இருந்து புகை விடுவதை நீங்கள் நிறுத்திவிடலாம்.

எல்லாம் சரி. விற்பனை கட்டுப்படுத்தாமல் உபயோகபடுத்துபவர்களை உசுப்புவது என்ன அரசியல் தந்திரமோ தெரியவில்லை.!! மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டால், புகையிலையால் கிடைக்கும் பொருளாதாரத்தை விட்டு கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.. என்ன செய்வது.. நமக்கு புரிவது அவ்வளவுதான்..

Wednesday, March 24, 2010

சாப்பாட்டுப் புராணம்

பொதுவாக நான் சாப்பாடு - அதுவும் நல்ல சாப்பாடு என்றால் கொஞ்சம் அலைந்து திரிந்தாவது சாப்பிட்டு விடுகின்ற சாதி. சாப்பாடு பற்றி பேசவும் ஒருத்தர் கிடைத்து விட்டால் அவருக்கு பசி எடுக்கும் வரைக்கும் அறுத்து தள்ளி விடுகிறேன் என்று சில சமயம் ரேவதி சொல்லியிருக்கிறாள். அது இருக்கட்டும். சாப்பிடுவது மட்டுமல்லாமல் சாப்பாடு பற்றி பேசுவதும் சமைப்பதும் என் ஆர்வம் என்பதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. இப்படிபட்ட எனக்கு சாப்பாடு பற்றி ஒரு புத்தகம் கிடைத்தால் சும்மா விடுவேனா..!! அது சமையல் புத்தகம் இல்லை - அது நிறைய இருக்கிறது - எல்லா வார, மாத இதழ்களின் இலவச இணைப்புகள் உட்பட. நான் சொல்ல வருவது ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற புத்தகம் பற்றி. சமஸ் அவர்கள் எழுதி தினமணியில் வந்த ‘ஈட்டிங் கார்னர்’ கட்டுரைகளின் தொகுப்பு. தமிழரின் உணவை கொண்டாடும் தமிழின் முதல் நூல் என்ற அடைமொழியோடு வெளிவந்து இருக்கிறது. சென்ற வாரம் வாங்கி - இரண்டு நாளில் முழுவதும் படித்துவிட்டேன்..படிக்க படிக்க பசி எடுக்க வைக்கும் புத்தகம். பொதுவாக தஞ்சையை உணவின் ராஜ்ஜியம் என்று சொல்லலாம். புத்தக ஆசிரியர் தஞ்சையும் அதனை சுற்றி உள்ள இடங்களையும் ரசித்து ருசித்து எழுதியிருக்கிறார். ஒரு கோப்பை தேநீரில் ஆரம்பித்து, தஞ்சாவூர் காபியில் பயணம் தொடங்கி, திருவையாறு அசோகா, நீடாமங்கலம் பால்திரட்டு, மன்னார்குடி அல்வா, ஸிரிரங்கம் இட்லி, பட்டணம் பக்கோடா, செட்டிநாடி கறி பிரட்டல், கும்பகோணம் பூரி பாசந்தி, மிலிட்டரி புரோட்டா, ஆட்டுகால் பாயா, திரிவானைக்கா நெய் தோசை, மொஹல் பிரியாணி, புத்தூர் அசைவ சாப்பாடு, சென்னை சாம்பார், மதுரை இட்லி இரவுகள், சிம்மக்கல் கறிதோசை, கோவை ரவா கிச்சடி, சிதம்பரம் கொத்சு, பாளையங்கோட்டை முறுக்கு என சைவமும் அசைவமும் சேர்ந்து மணக்க மணக்க அற்புதமான புத்தகம். உணவை பற்றிய அற்புதமான இலக்கியம் என்று நான் சர்வ சுத்தமாக சொல்வேன். ஊர் ஊராக சுற்றி, கடை கடையாக பார்த்து தேர்ந்தெடுத்து ருசித்து, வரலாறும் சேர்த்து, கொஞ்சமாய் செய்முறையும் சொல்லி ருசித்து இருக்கும் ஆசிரியர் கை கொடுத்து பாராட்ட தகுதியானவர். உணவகங்கள் பற்றியும், தங்கும் விடுதிகள் பற்றியும், விருந்தோம்பல் முறைகளும் சொல்லியிருக்கிறார். தான் பிரசுரம் 60 ரூபாயில் வெளியிட்டு இருக்கும் - சாப்பாடு பிரியர்களுக்கான புத்தகம். இந்த புத்தகம் படித்ததும் நானும் என் சாப்பாடு அனுபவங்களை எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது - பார்க்கலாம் - நேரமும் இருக்கிறது, எழுத மனமும் இருக்கிறது.. !! எவ்வளவு எழுதுகிறேன் என்று பார்க்கலாம்.

Friday, January 15, 2010

Flickr to Blog


Image039, originally uploaded by GV.Muthukumar.

புதிய முயற்சி... இந்த ஒளிப்படம் மொபைல் கேமராவில் எடுக்கபட்டது. மாலை நேர வானம் ஒரு அற்புதமான நிறக்கலவையை கொடுத்திருக்கிறது.

Monday, January 04, 2010

2010 - சுற்றுலா திட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் முழுக்க முழுக்க ஏதாவது ஒரு வேலையிலேயே போய்விடுகிறது. பெரும்பாலும் அலுவலகம் சார்ந்த வேலைகள் நம் நேரத்தை எடுத்து கொள்ளும் சதவிகிதம் மிக அதிகம். அயல்நாட்டினர் எந்த வேலை எப்படி இருப்பினும் - வருடம் ஒருமுறை ஏதாவது சுற்றுலா செல்ல தவறுவதில்லை. நம்மில் பலருக்கு அப்படி செய்ய வாய்ப்பிருப்பதில்லை எனினும், சூழ்நிலைகள் மாறிவரும் காலத்தில் நம்மில் பலரும் நல்ல முயற்சிகள் செய்கிறார்கள்.

இந்த 2010 வருடத்தில் நீங்கள் ஏதேனும் சுற்றுலா பயண திட்டங்கள் வைத்து இருக்கின்றீர்களா? அப்படி எனில் எங்கே? எவ்வளவு பயண செலவில் திட்டத்தை அமைத்திருக்கிறீர்கள்.

33வது சென்னை புத்தக கண்காட்சி

ஞாயிற்று கிழமை மதியத்துக்கு மேல் கண்காட்சிக்கு சென்றிருந்தோம். கூட்டம் அதிகமாக இல்லை. மாலை அரங்கில் பேசுவதற்காக நடிகர் கமல் வந்திருந்ததால் 
கொஞ்சம் கூட்டம் அங்கு குவிந்திருந்தது. நிதானமாக புத்தகங்களை பார்க்கவும் தேர்ந்தெடுக்கவும் முடிந்தது. இரவு 9 வரை காட்சி நேரம் நீட்டிக்கபட்டிருந்ததினால் எல்லா அரங்குகளையும் பார்க்க முடிந்தது. அறிமுகமான எழுத்தாளர்களையும் கொஞ்சம் சந்தித்தோம். மற்றபடி வாங்கிய புத்தகங்களில் அரசியல் மற்றும் கரிசல் இலக்கியம், கொஞ்சம் காமிக்ஸ் என கை நிறைய இருந்தது... அடுத்த வாரம் கடைசி நாட்கள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு - எனினும் செல்லும் திட்டம் இருக்கிறது..!! நிச்சயம் சென்று வாருங்கள் - புதிய புத்தகங்கள் உங்களுக்கு புதிய அனுபவங்களை தரும்.

Tuesday, December 15, 2009

ஓரம் போ..!!

சென்னையின் ஆட்டோகாரர்கள் மேல் ஒரு நெடுநாள் குற்றச்சாட்டு உண்டு - அதிகமாக காசு வாங்குவதாக.. அது முற்றிலும் உண்மையில்லை - மிக மிக அதிகமாக காசுவாங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள் எனினும் கீழ்காணும் காரணங்கள் பொதுவானவை.

1. மழை வருது/வெயில் அடிக்குது - [இதுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது]
2. நைட் டைம் சார் - [50% சார்ஜ் அதிகம் என்பதையும் தாண்டி]
3. சுத்தி போகணும் சார் - [பெரும்பாலும் எங்கே போக வேண்டி இருந்தாலும் இதே கதைதான்]

மோசமான பேச்சு வார்த்தைகள் - அதீதமான திமிர் - முரட்டு மனப்பான்மை என பெருவாரியாக இதே நிலைதான். கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் ஷேர் ஆட்டோக்கள் வந்த பின்னர் கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள் - எனினும் ரயில்வே ஸ்டேஷனிலும், கோயம்பேட்டிலும் இன்னும் அராஜகம்தான். மாநகர பேருந்துகள் நிறம்பி வழிதல் குறைவதில்லை - அதுவே இவர்களை இன்னும் தீனி போட்டு வளர்க்கிறது.

எந்த அரசாங்கமும் இவர்களை கட்டுபடுத்துவதில்லை - முக்கியமாக சென்னையில். கோவையிலும் கூட. மீட்டர் போட வேண்டும் என்ற சட்டம் சுத்தமாக மதிக்கபடுவதில்லை. இவர்களின் ஓட்டுக்காக கட்டுபாடுகளை தளர்த்தி இருப்பதாக கொண்டால் - இவர்களால் அவமதிக்கபடும் மக்களின் ஓட்டு - அதற்க்கு மதிப்பு உண்டா.?

இன்று காலை டி.நகரில் இருந்து நுங்கம்பாக்கம் வரை 40 ரூபாய் கொடுத்ததுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் - சரியான சார்ஜ் இதுதான் சார் [அவர் 50 ரூபாய் கேட்டார்] - ரொம்ப நன்றி என்றார் - கிண்டலா? இல்லை நிஜமா என்று கூட தெரிவில்லை..!!

எந்த அரசாங்கமாவது தைரியமாக இந்த பூனைகளுக்கு மணிகட்டுமா..!!

எல்லோரும் சொல்லும் பாட்டு...

முப்பதாவது பிறந்த நாள், பின்னிரவின் தனிமையில் ஒற்றை தேநீர் கோப்பையுடன் கழிந்தது - பிறகு எந்த ஒரு பிறந்தநாளையும் சிறு வயதின் உற்சாகத்துடன் கொண்டாடுவதில் ஒரு தயக்கம் இருந்தது.

இந்த முறை - திருமணத்துக்கு பின்னான முதல் பிறந்தநாள் என்ற முத்திரையுடன் இருந்ததால் கொண்டாட்டம் இல்லாவிட்டாலும் வாழ்த்துகளுடன் விடிந்தது. சாயங்காலம் - மிகவும் சிரத்தையுடன், அற்புதமான அலங்காரங்களுடன், பலூன்களும் கேக்கும் பாடும் கத்தியும் ஜிகினா காகிதங்களுமாய் - வாழ்வில் முதல் முறையாக ஒரு பிறந்தநாள் வைபவம் - எல்லாம் ரேவதியின் வேலை - சும்மா சொல்ல கூடாது - நினைத்து பார்க்க முடியாத, இனியும் மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டாள்..! புதிய டிரைபாட் வைத்து கொஞ்சம் புகைப்படங்கள் கூட எடுத்தோம். கொட்டும் மழையில் நனைய நனைய இரவு உணவு..!! சந்தோஷமாகதான் இருக்கிறது..!!

வயது ஆக ஆக - பொறுப்பு கூடும் என்பார்கள் - என் கணக்கு எப்படியோ தெரியவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன என்பது மட்டும் உண்மை..

Wednesday, November 11, 2009

திஸ்ஸும் தேட்டும் பின்னர் ஆலும்…

காந்தியும், சுபாஷும் மற்றும் பலரும் கஷ்டபட்டிருக்கவே தேவையில்லை 1947ல். சுதந்திரம் என்ன - அவன் தேசத்தையை பிடித்திருப்போம் நாம் - இன்னும் கொஞ்சம் காலம் அவன் நம் நாட்டில் இருந்திருந்து - நம் மக்களின் ஆங்கிலத்தை காதால் கேட்டால் - ஒன்று ஓடி போயிருப்பார்கள் அல்லது கூண்டோடு தற்கொலை. இது வரை சின்னதிரை தொகுப்பாளிகளை மட்டுமே மோசமான தமிழுக்கு உதாரணமாக கொண்டிருந்தோம் (தமிழன் தொலைகாட்சி தவிர). இனி மோசமான ஆங்கிலத்துக்கு நம் கணிப்பொறி வல்லுனர்களை சொல்லலாம் என்பது போல எனக்கு அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. என்னை இப்படி சொல்ல வைத்த விஷயங்கள் இவை -

1. இவர்கள் இவர்களின் தாய்மொழி போல ஆங்கிலத்தை பேசுகிறார்கள் - அவ்வளவு லாவகமாக இல்லை - அதே தொனியில். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் - தெலுங்கு அல்லது கன்னட அல்லது தமிழின் உச்சரிப்பின் தொனியில் ஆங்கிலம் இருந்தால்..!!
2. ஆங்கில எழுத்தும் குறுஞ்செய்தி பாணியில் இருக்கிறது - அடிப்படை இலக்கணமே இல்லை. அதுவும் அலுவல் சம்பந்தமான மின்னஞ்சல்களில் கூட.
3. தேவையில்லாத இடங்களில் ஆங்கிலம் பேசும் "வெட்டி" பந்தா.
4. மொழி புரிகிறதோ புரியவில்லையோ - எல்லாத்துக்கும் தலையாட்டி - வீண் பிரச்சனைகளுக்குள் சிக்கி கொள்வது.
5. ரொம்ப சத்தமாக - (அதுவும் ராகம் போட்டு) கைபேசியில் ஆங்கிலம் பேசுவது..

என்ன சொல்ல..!! இப்படிதான் இருக்கிறார்கள். எந்த மொழியையும் கொலை செய்யகூடாது என்பது என் கருத்து - கற்று கொள்ளலாம் அல்லது தெரியாத மொழியின் பிரயோகத்தை குறைத்து கொள்ளலாம். ரொம்ப தேவையெனில் முறையாக கற்று கொள்ளுதல் குற்றமில்லையே. அதை விட்டு - சுற்றி இருப்பவரை எல்லாம் வெறி ஏற்ற கூடாது. எல்லாரும் ஆங்கிலத்தில் மெத்த புலமையோடு இருப்பது கிடையாது - நம் கல்வி அமைப்பு அதற்கு வித்திடுதலும் கிடையாது. அத்தனை எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது. இருந்தும் மொழி என்பதனை சரியாக அறிந்து கொள்ளுதலில் என்ன பிரச்சனை இருந்து விட முடியும். எனக்கு வாய்ப்புகள் சரியாக இல்லை என சொல்லிவிட முடியாது - கணிப்பொறிதுறை ஆங்கில மொழி ஆளுமை அதிகம் - கற்று கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். இது வெறும் குற்றச்சாட்டு அல்ல - ஒரு ஆதங்கம். இவர்களுன் முன்னேற்றம் சரியாக அமையாமல் போய்விடும் என்ற ஆதங்கம். சுயநல அடிப்படையில் சொல்வதானால் - இவர்களை நம்பி வேலை கொடுத்து அது இவர்களின் பேச்சால் கெட்டுபோய்விடும் அபாயத்தை சொல்லலாம். என்னால் முடிந்தவரை என் குழுவினருக்கு சரியான முறையில் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் உதவி வருகிறேன். அலுவல் சார்ந்த தொலைபேசி பேச்சு வார்த்தைகளுக்கும் மின்னஞ்சல்களுக்குமாவது அது உதவுகிறது என்பது தெரிகிறது. மற்றபடி.. சகித்துதான் போக வேண்டியிருக்கிறது. இன்னும் சொன்னால் - நீயெல்லாம் ஒரு தமிழனா என்று கேள்வி வரும்..!! எதற்க்கு வம்பு.

Tuesday, November 10, 2009

பிடிக்கும், பிடிக்கும்... எனக்கும் பிடிக்கும்...


வாழ்வின் எந்த ஒரு விஷயமும் பிடித்து போவதற்க்கும், பிடிக்காமல் போவதற்க்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசத்தில் இருக்கிறது. மனிதர்களும், சம்பவங்களும், பொருள்களும் கூட அப்படித்தான். "பிடித்தல்" என்பது சுயம் சார்ந்த வாழ்வின் அடிப்படையோடு உணர்வு ரீதியாக உறவு கொள்ளும் விஷயங்களையே குறிக்கிறது என்பது மனோதத்துவம். "பிடிக்காதது" என்பது எதிர்மறையல்ல - அது ஒரு "அவ்வளவாக இணக்கமில்லை" எனும் கருத்தேயாகும். வெறுப்பதற்கும் பிடிக்காமல் போவதற்க்கும் வேறுபாடுகள் உணர்வோமாயின் வாழ்வின் எல்லாம் விஷயங்களையும் கொஞ்சம் சுலபமான பார்வையோடு அணுக முடியும்...

இந்த "தொடர் கருத்து" பதிவுகளுக்கு அழைத்தமைக்கு தோழிக்கு நன்றி. இந்த பதிவுக்கு சிந்திக்கும் போது - முதலில் தோன்றிய பெயர்களுக்கும், பின்னர் சிறு சிந்தனைக்கு பிறகு தோன்றிய பெயர்களுக்கும் வேறுபாடு இருந்தது உண்மை. எனினும் ரொம்ப பெரிய சிந்தனை எதுவும் இன்றி - எங்கள் (நானும் ரேவதியும்..) கருத்துகளை இணைக்கிறேன். விதிகளுக்கு உட்பட்டு மனிதர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன் - இயக்கங்கள் அல்லது குழுக்கள், மனிதர்கள் அல்லாத பெயர்கள் (திரைப்படங்கள், இடங்கள்) ஆகியன தவிர்க்கபட்டிருக்கின்றன. அதுபோலவே விமர்ச்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என சில பிரபலங்களையும் கத்தரித்து இருக்கிறோம்.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

இயக்குனர்

ராதாமோகன், கவுதம் வாசுதேவ மேனன், கமலஹாசன் - இவர்களின் பல திரைப்படங்கள் ஏற்படுத்திய +உணர்வுகளுக்காக.

ஹரி, டி.ராஜேந்தர், எஸ்.ஜே.சூர்யா - இவர்களின் பல திரைப்படங்கள் ஏற்படுத்திய -உணர்வுகளுக்காக.

ஆன்மீகம் மற்றும் தத்துவம்

ஜக்கி வாசுதேவ் - தத்துவமும் ஆன்மீகமும் இணைந்த சிந்தனைகள்

நித்யானந்தர் - அதீத தத்துவ பிரயோகங்கள், வீண் விளம்பரங்கள்

எழுத்தாளர்

கி.ராஜநாராயணன், ரமேஷ்-பிரேம், எஸ். ராமகிருஷணன் - மனிதர்களை வேறு பரிமாணத்தில் அறிமுகம் செய்தமைக்காக

சாருநிவேதிதா, ரமணி சந்திரன்  - ஸ்டீரியோ டைப் எழுத்துகள்

இசையமைப்பாளர்

யுவன் சங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் - புதிய இசை

தேவா, விஜய் ஆண்டனி - சத்தங்கள் மற்றும் "பழைய" இசை

பேச்சாளர்கள்-பட்டிமன்றம்

நெல்லை கண்ணன் - தமிழய்யாவின் பேச்சு மொழி

லியோனி - சினிமா பாடல்களிலேயே உலகம்

ஓவியர்

மணியம் செல்வன், மாருதி, மருது, மதன் - வர்ணங்களும் கோடுகளும் கலந்திருக்கும் விதம், நவீன ஓவியங்கள்

அரஸ், ஜெயராஜ் - ஒரே மாதிரி சித்திர அமைப்பும் - வேறுபாடில்லாத உருவங்களும்

சின்ன திரை நட்சத்திரங்கள்

கோபிநாத், ரமேஷ் பிரபா, அனு ஹாசன் - கொஞ்சம் புத்திசாலித்தனம், ஸ்டுடியோவுக்கு வெளியிலான உலகம் பற்றிய கோணம்

ரபிக் பெர்நாட், கொஞ்சும் கிளிகள்-/தொகுப்பாளினிகள் - எல்லாம் குழப்பம்தான்

கவிதைகள் எழுதுபவர்

அய்யப்ப மாதவன், லீனா மணிமேகலை, சுகிர்த்தராணி, மனுஷ்யபுத்திரன் - புதிய சிந்தனைகள், வாசிப்பு அனுபவங்களை உருவாக்குதல்

தபு சங்கர் - உருகி உருகி எழுதினாலும் - காதலை வட்டத்துக்குள் பூட்டுதல்

தயாரிப்பாளர்

சங்கர், பிரகாஷ்ராஜ் - கொடுத்த திரைப்படங்கள்

கலாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின் - கெடுத்த திரைப்படங்கள்

ஒளிப்பதிவாளர்

ஆர்.டி. ராஜசேகர் (காக்க காக்க, கஜினி, பீமா, சில்லுனு ஒரு காதல்...) - ஓவிய அமைப்பில் ஒளிபதிவு

மனோஜ் பரமாம்சா. (அரசாட்சி, பம்மல் க சம்பந்தம், மதுர, திருபாட்சி, திருப்பதி.. ) - வெளிச்சமும் இருட்டும் இன்னும் கைவரவில்லை

அவ்வளவுதான்..!!!

விவாதங்கள்கள் சுவரஸ்யமாக இருக்குமா - தெரியவில்லை.

நான் அழைக்கும் பதிவாளர்கள்- இவர்கள் எல்லாம் இந்த தொடர்பதிவில் பங்கேற்று விட்டார்களா தெரியவில்லை – எனக்கு தெரிந்து இல்லை. எனவே.

1. http://www.nilaraseeganonline.com/ - nilaraseegan@gmail.com

2. http://enninavinveliyilnan.blogspot.com/ - rajahparameswary@yahoo.co.in

3. http://maniyinpakkam.blogspot.com/ - pazamaipesi@gmail.com

Saturday, April 25, 2009

அலட்சியம்...

இந்த தேர்தல்ல எத்தனை பேர் ஓட்டு போட போறாங்க..!! அதுவும் முக்கிய வேலை நிமித்தமா வெளியூருல இருக்குற தோழர்கள் மற்றும் தோழமைகள்..!! 1 நாள் லீவு சரி.. ஆனா அந்த ஒரு நாள் சொந்த ஊருக்கு போய் - அல்லது ஓட்டு இருக்குற ஊருக்கு போய் ஓட்டு போட முடியுமா..!! எத்தனை வெளி இடங்களில் வேலை செய்யும் நண்பர்கள்.. எத்தனை மாணவ மாணவிகள்..!! அத்தனை பேரும் நிச்சயம் ஓட்டு போட போவதில்லை. சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற இடங்களில் வேலை செய்யும் கடை பசங்கள் முதல்கொண்டு இந்த முறையை தங்கள் ஜனநாயக கடமையை செய்ய போவதில்லை. இணையத்தில் தேடியதில் - தபால் ஓட்டு தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானாம்..!! மற்றபடி நமக்கு கிடையாது..!! நாம் தற்போது இருக்கும் இடத்துக்கு ஓட்டு உரிமையை மாற்றி கொள்ள வசதி இருக்கிறதாம் - இது இப்போதுதான் தெரியும்..!! இதனை பற்றி எந்த விளம்பரமும் செய்யபடிவில்லை - நான் பார்த்த பத்திரிக்கை மற்றும் டெலிவிஷன் சேனல்களில். ஓட்டு போட சொல்லி சில விளம்பரங்கள் பார்த்திருக்கிறேன்..!! கடந்த 10 வருடங்களில் இந்திய வேலை வாய்ப்பு என்பது எந்த இடத்துக்கும் இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்பது குழந்தை கூட அறிந்ததே.!! அப்படி இருக்க...இவர்களுக்கு இத்தகைய முக்கியமான விஷயத்தை பற்றி எந்தவித அறிவுறுத்தலும் எந்த முறையிலும் கொடுக்கபடாதது ஏன்..! அலட்சியம் எனவும் கொள்ளலாம் ..! நமக்கும் கேட்டு தெரிந்து கொள்ள தோன்றவில்லை - அரசாங்கமும் தனியாரும் கவனிக்கவில்லை.!! மொத்தத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இழப்பு மக்களாகிய நமக்குதான்..!!

Thursday, April 23, 2009

சும்ம்மா அதிருதில்லா..!!

அப்பாடா.. ஒரு வழியாக "தமிழின துரோகி" என்ற பட்டத்தை ஏற்று கொள்ளாமல் இருக்க ஒரு வேலை நிறுத்த நாடகத்தை நடத்தியாகிவிட்டது. சும்மா மிரட்டிடோமில்ல..!! இலங்கை அரசாங்கம் பயந்து போய் ராஜபக்சேவுக்கு வேப்பிலை அடிச்சுட்டு இருக்காங்கலாம்..!! நாம எல்லாம் சிங்கமுல்லா..!! இங்க வேலைக்கு போகாம உட்கார்ந்து - லேட்டா படுக்கைல இருந்து எந்திருச்சு (நேத்தி ராத்திரி தண்ணி மப்பு தெளிய வேணாமா..!! ) கலைஞர் டிவில போட்ட எல்லா சினிமாவும் பார்த்துட்டு.. வூட்டுல தூங்கி எந்திரிச்சு .. எத்தன பெரிய போராட்டம்.. சும்ம்மா அதிருதில்லா..!! அட .. இன்னும் சில பேரு.. அப்பிடியே மொட்ட மாடில நின்னு.. இலங்கை இருக்கிற திசை பார்த்து ஒரு கண்ணு சிவக்க முறைச்சதுல.. அங்க கடல் எல்லாம் அலையோ அலையாம்.. ஸ்வீடனும், நார்வேவும்.. இன்னும் பல நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்துன நடவடிக்கைகளை விட... நாம நடத்துன வேலை நிறுத்த போராட்டதோட விளைவு..!! (இதுல கலந்துக்க மாட்டோம்னு ஒரு அரசியல் கட்சியோட - அரசியல் நாடகம் வேற..!!) இலங்கைல போர் நிறுத்தம் அறிவிச்சுடாங்களாம்..!! அங்க புதிய வானம் புதிய பூமினு .. பூக்கள் பூக்குதாம்.. காயம் பட்டவங்க எல்லாம் முழு ஆரோக்கியத்தோட இருக்கிறாங்களாம்.. செத்தவங்க கூட எந்திரிச்சுடாங்கலாம்..!! அப்புறம் இலங்கை அரசாங்கம் நம்ம அரசியல் சிங்களோட தாக்குதல் தாங்க முடியாம மண்டி போட்டு..****** !! அட.. விடுங்கப்பூ..!! இன்னும் இருக்கு விளையாட்டு..!! நாமதான் ஓட்டு போடற ஆடுக..(நிஜம்மா ஆளுக கிடையாது.. ஆடுகதான்..!!) நாம பாக்காட்டி யாரு பாப்பா இந்த ஆட்டமெல்லாம்..!!

Sunday, April 19, 2009

விதிசெவி இரண்டும்...

6 மாதங்கள் முன்பு வரை நானும் மொபைல் போனில் அதிக நேரம் பேசி கொண்டுதான் இருந்தேன். யாரேனும் ஒருவர் ஏதாவது காரணத்துகாக கூப்பிடுவதுண்டு - நானும் பலரை அழைப்பதுண்டு. சில நேரம் அலுவலக பணிகள் - பல நேரம் நண்பர்கள்... அப்புறம் ஒருநாள் வந்தது அந்த காது வலி... முதலில் "LG 2500- ." ஒரு சிறிய வகை மொபைல் உபயோகபடுத்தும் போது அதிகம் காது வலி வந்ததில்லை. அதனை கிட்டதட்ட 2 வருடம் உபயோகபடுத்தினேன்.. பின்னர் ஒரு "Nokia 6233" .. சில நேரம் இயர்-போன் உபயோகபடுத்தினாலும் பல நேரம் நேரடியாக காதில் வைத்து பேசுவதுண்டு.. காது வலி என்பது காது, தொண்டை மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற வலி... பின்னர் இயர்-போன் போட்டு பாட்டு கேட்டாலும் வலிக்க ஆரம்பித்தது. பர்கிட் ரோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவரை சந்தித்தோம் நானும் நண்பரும். சில நிமிட பரிசோதனைகளுக்கு பிறகு அவர் சொன்ன ஒரே மருந்து - "மொபைல் போனில் பேசாதீர்கள் - அப்படி அவசியம் பேச வேண்டும் என்றால் ஸ்பீக்கர்போனில் பேசலாம் - நேரடியாக காதில் வைத்து பேச வேண்டிய விஷயம் என்றால் குறைந்த நேரத்தில் பேசி முடிப்பது நல்லது. மொபைல் போனில் பேசுவதை விட - வாய்ப்பு இருந்தால் டெலிபோனில் பேசுவது நல்லது... " - இவற்றை கடைபிடிக்க தவறினால் பின்னர் பிரச்சனைகள் பெரியதாகலாம் - காது முழுவதும் கேட்காமல் போகலாம் - அதீத தலைவலி வரலாம் - Etc, Etc... அவர் சொன்ன ஆலோசனைகளை கடைபிடிக்க ஆரம்பித்த பின்னர் காது வலி வருவதில்லை.. இன்றைய சூழ்நிலையில் நிறைய பேரை சாலையில் FBI ஏஜெண்ட் போல காதில் இயர் போனோடுதான் பார்க்கிறேன். நிறையபேர் பேசிகொண்டு போகிறார்கள்..(பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது - யார் பெற்ற பிள்ளையோ..!!) இன்னும் பலர் FM அல்லது MP3 பாட்டு (அப்படி என்ன இசை ஆர்வமோ தெரியவில்லை..!!) .. இன்றைய மொபைல் போன்கள் அவற்றின் அடிப்பவை பயன்பாடு தாண்டி நிறைய வசதிகளை வழங்குகின்றன.. ஆனால் தரம் இறங்கிவிட்டது. மொபைல் போனில் ஸ்பீக்கர் சத்தம் - எல்லா "Mode"களிலும் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று ஒரு கணக்கு விகிதம் உண்டு. ஆனால் எந்த மலிவு விலை (சைனா , கொரியா மொபைல் போன்கள் - மலிவு விலையில் பர்மா பஜாரிலும், சத்யா பஜாரிலும் விற்க்கபடுவதுண்டு) மொபைல்போனிலும் இவை கடைபிடிக்கபடுவதில்லை. "Nokia" "LG" "Samsung" போன்ற முண்ணனி நிறுவனங்கள் கூட ஸ்டைலுக்காக அறிமுகபடுத்தியுள்ள எந்த மொபைல் போனிலும் விதி மீறல் உள்ளதை மறுத்ததில்லை. நெடுநேரம் காதில் வைத்து பேசுவது, இயர்-போனில் பேசுவது, இயர்-போனில் பாட்டு கேட்பது, ஐ-பாடில் பாட்டு கேட்பது - எல்லாம் மெல்ல மெல்ல செவித்திறனை குறைத்து, காதில் வலி, தலை வலி ஆகியவற்றை கொண்டு வருகிறது. சின்ன சின்ன தினப்பேச்சுகளை முடிந்தவரை இண்டர்காமில் பேசலாம். அல்லது எழுந்து போய் பார்த்து பேசிவிட்டு வரலாம் (ஒரே கட்டிடத்தின் இரு வேறு பகுதிகள் என்றால்). நண்பர்களுடன் பேச நேரம் அமைத்து கொண்டு (அவர்களையும் வேலைக்கு மத்தியில் தொந்தரவு செய்யாமல் இருந்தது போல இருக்கும்) வீட்டில் உட்கார்ந்து ஸ்பீக்கர் போனில் நிம்மதியாக பேசலாம். வெகு அவசியமாக அழைப்புகளை குறைந்த நேரத்தில் பேசி முடிக்கலாம். பாட்டு கேட்க அமைதியான சூழ்நிலை வேண்டும்.. வீட்டில் ஸ்பீக்கர் போனிலோ அல்லது MP3 பிளேயரிலோ பாட்டு கேட்கலாம்.. முடிந்தவரை இயர் போன் உபயோகபடுத்துவதையும், காதில் போனை நேரடியாக வைத்து பேசுவதையும் தவிர்க்கலாம். உலகம் எல்லாம் ஒரு விழிப்புணர்வு பெருகிவருகிறது இந்த விஷயத்தில். விதிசெவி இரண்டும் வேலவர் காக்க - என்று சாமி கும்பிட்டு கொண்டு இருக்காமல் நாம் கொஞ்சம் புத்திசாலிதனமாக இருந்தால் - நமக்குதான் நல்லது.

Wednesday, April 15, 2009

கடவுள் வழிபாடு எனும் குழப்பம்

சென்ற வார இறுதியில் சனிக்கிழமை வெங்கடநாராயணா சாலையில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. மாமனார், மாமியாருடன், ரேவதியும் நானும் சென்றோம். நல்ல கூட்டம் - வழக்கம் போல. கோவில்களில் உள்ள கூட்டத்தை பற்றியும் இந்து வழிபாடு முறை பற்றியும் ரேவதிக்கு காட்டமான கருத்துகள் நிறைய உண்டு. என் கருத்துகளை அவற்றில் கோபமும் கேள்விகளும் இருக்கும். "கடவுள் என்பது என்ன" போன்ற பொருள்முதல் வாத தத்துவ புத்தகங்களை படிக்கும் பெண்.. கேள்விகளும் அப்படித்தான் இருக்கும். அது என்ன - எந்த கடவுளுக்கும் இல்லாத கூட்டம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் ..!! "காசு வேண்டும்" என்ற மனம்தான் காரணம் என்றேன் நான்..!! மற்ற கடவுள் எல்லாம் - பொருளாதார அளவில் பெரிய அளவில் பிரபலபடுத்தபடவில்லையே - அங்கெல்லாம் - கல்வி, உடல் ஆரோக்கியம் மற்றும் பல விஷயங்கள்கள்தான் பிராத்தைனை விஷயங்கள் ஆகிறது போல. அதுவும் தவிர - இந்த மாதம் இந்த சாமி, அடுத்த மாதம் வேறு சாமி கும்பிடு என்று பிரபலபடுத்தும் ஆன்மீக புத்தகங்கள் வேறு.. !! ஒரு சாமியை விட அடுத்த சாமி பெரிது என்று ஒரு பிம்பம் காட்டுகிறார்கள் - ஆனால் கடவுள் ஒன்று என்றும் குழப்புகிறார்கள்.. !! யாரும் - "நல்ல மனம் வேண்டும்" என்று கும்பிடுவதாக தெரியவில்லை - பொதுவாக சொல்லவில்லை - நிறைய பேர் காசு மினுமினுக்கதான் கோவிலுக்கே வருகிறார்கள். ஒரு சட்டை, வேட்டி அல்லது பேண்ட், புடவை, சுடிதார் போதாதா கோவிலுக்கு வர - ஒரு பேசன் பேரேடே நடக்கிறது பல நேரங்களில்..!! சரி.. இது எல்லாம் அவரவர் சொந்த விஷயம் - தலையிட கூடாது.. கோவிலில் அதிகாரம் எதற்கு... தனி வரிசை எதற்கு ..!! காசு கொடுத்தால் பக்கத்தில் சாமி பார்க்கும் வசதி எதற்கு.. அப்படி நிற்பவருக்கு மட்டும் மாலை மரியாதை எதற்கு.. காசு கொடுக்காவிட்டால் சில கோவிலில் விபூதி கூட தூக்கித்தான் வீசுகிறார்கள் சில கோவிலில்.. தென் தமிழ் நாட்டின் சில கோவில்களில் கேட்டால் சில தலபுராணங்களையும், பாடல் பெற்ற விஷயங்களையும் சொல்கிறார்கள்.. அப்படி சொல்லும் கோவில்கள் எத்தனை இருக்கின்றன.. எத்தனை பேருக்கு விஷயம் தெரியும்.. கட்டின ராஜா யார் என்று கூட தெரியாது.. முகம் தெரியாத சிற்பிகளின் உழைப்பு தெரியாது..!! ஆன்மீக கலாச்சாரம் என்று ஒரு மாயை இருக்கிறது. கடவுள் மறுப்பு என்பது வேறு - கேள்வி கேட்பது என்பது வேறு..!! எதனையும் கொஞ்சம் கேள்வி கேட்டால்தான் எல்லாமே ஒரு வழிமுறைக்கு வரும் என்பது ஒத்துகொள்ளகூடிய கருத்து..!!

Tuesday, April 14, 2009

கலைவாணர் - ஒரு சகாப்தம்

இத்தனை நாளாக இருந்திருக்கிறது - நான் கவனித்ததே இல்லை. சும்மா யாரோ ஒருவரின் சிலை எனத்தான் நினைத்திருந்தேன். நேற்று ஒரு நடை அந்த பக்கம் நடந்த போதுதான், ஜி.என். செட்டி சாலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஒரு சிலை இருப்பதே தெரியும். நான் ஒன்றும் சென்னைகாரன் கிடையாது - ஜி.என். செட்டி சாலையும் அவ்வளவு பழக்கம் கிடையாது. எனவே கவனிக்காமல் இருந்ததில் பெரிய விஷயமும் இல்லை - எனினும் கண்டு கொண்டவுடன் நிஜமாகவே ஒரு நல்ல உணர்வு இருந்தது. கொஞ்சம் நேரம் சிலை முன்னால் இருந்து நானும் ரேவதியும் பேசி கொண்டு இருந்தோம். பேச்சு பெரும்பாலும் என்.எஸ்.கே வின் காலத்தை வென்ற நகைச்சுவை பற்றியே இருந்தது. நல்ல முற்போக்கு பார்வையும், யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையும், நையாண்டி என்று சொல்லபடும் பாணியிலான விமர்ச்சனங்களும், விஞ்ஞான நம்பிக்கையும், சுயமரியாதை தத்துவங்களும் கொண்ட அவர் - தன் காலத்து திரைப்படங்களில் சொன்ன கருத்துக்கள் நிச்சயம் வெகுவாரியான கண்டனங்களை எதிர்கொண்டிருக்கும். நிஜவாழ்வில் அவர் எப்படிபட்டவர் என்பது பற்றி இருவேறு கருத்துகளை நான் கேட்டிருக்கிறேன் - எனினும், திரைவாழ்வில் ஒரு சகாப்தமாகவே இருந்திருக்கிறார். இன்றைய நகைச்சுவை "பாத்திர" நடிகர்கள் கற்று கொள்ள நிறைய சொல்லியிருக்கிறார்- யாரும் கவனிப்பாரில்லை. கலைவாணரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. 12.4.2009ல் ஒரு விழா நடந்திருக்கிறது - கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் மூலமாக. "கலைவாணர் - ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் மூத்த வில்லுபாட்டு கலைஞர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆங்கில "Classic" நகைச்சுவை தொகுப்பு போல ஏதாவது கலைவாணருக்கு இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். நிச்சயம் வாங்கலாம்.